எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 15, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 9

எட்டாம் நாளான இன்று பத்மக் கோலத்தில் மஹாலக்ஷ்மியாக அம்பிகையை உபாசிக்கவேண்டும். சிறு பெண் குழந்தையை மஹாலக்ஷ்மியாகவே பாவித்து வழிபடவேண்டும். சிலர் வீணை இல்லாத பிராஹ்மியாகவும் வழிபடுவார்கள். வெண்தாமரையில் வீற்றிருக்கச் செய்து அம்பிகையின் நெற்றிக்கண் தெரியும்படியாக அலங்கரித்துக் கையில் ஏடு மட்டுமே கொடுத்து ஞான முத்திரை காட்டிய வண்ணம் அலங்கரிக்கலாம். இன்று புளியோதரை நிவேதனம் செய்து மொச்சைச் சுண்டல் செய்யலாம்.

பெண்களுக்கும் அம்பிகையைத் தியானம் செய்வதன் மூலம் சாயுஜ்யம் கிட்டுமா என்ற பொருளில் ப்ரியா ஆர். கேட்டிருந்தார் அல்லவா?? தாராளமாய்ப் பெண்களும் இந்த ஸ்ரீவித்யா வழிபாட்டைச் ஸ்ரீ சக்ரத்தை வைத்து ஆராதிக்கலாம். முக்கியமாய் அம்பிகை காதில் அணிந்திருக்கும் தாடங்கம் என்று சொல்லப் படுவது ஸ்ரீசக்ரரூபமே. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் தாடங்க மஹிமை பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா? எந்த ஸுவாசினியும் கணவனுக்குப் பரிபூர்ண ஆயுளை வேண்டியும், தன் குடும்பத்தின் சுக க்ஷேமத்துக்காகவும் தக்க குரு மூலம் முதலில் தன் கணவரை ஸ்ரீவித்யா வழிபாட்டை ஏற்கும்படி பண்ணுவது நல்லது. பின்னர் கணவரையே குருவாய்க் கொண்டு பெண்களும் வழிபடத் துவங்கலாம். இந்தத் தாடங்கம் சக்தி பொருந்தியது என்பதாலேயே சுமங்கலிப் பெண்கள் காதில் தோடு இல்லாமல் இருப்பது சரியல்ல என்பார்கள். அம்பிகையை உபாசிக்கும் ஒருவரை சாக்ஷாத் அந்த சதாசிவனாகவே அனைவரும் கருதுவார்கள், அடிபணிவார்கள் என்று செளந்தர்ய லஹரியின் 30-வது ஸ்லோகம் கூறுகிறது. நம்முடைய மூலாதாரத்திலிருந்து மேலே ஏறி வரும் அம்பிகையானவள் ஆக்ஞாசக்ரத்தில் மின்னல் கொடி போல க்ஷண காலம் காட்சி அளித்து சஹஸ்ராராத்தில் நிலை பெறுவாள் என்றும் கூறுவார்கள். ஆக்ஞா சக்ரத்தில் அவளை க்ஷண செளதாமினி எனவும், சஹஸ்ராரத்தில் நிலை பெறுவதால் ‘ஸ்திர செளதாமினி” எனவும் அழைக்கப் படுவாள். அம்பிகையை உபாசிப்பவர்களுக்கு அந்த வழிபாடு சூரியன் எவ்வாறு இருளைப் போக்குகிறதோ அவ்வாறு வெளிச்சத்தைக் கொடுத்தும், சந்திரனைப் போல் தாபத்தை நீக்கிக் குளிர்ச்சியைத் தருவதாயும், அக்னியைப் போல் நம் மனத்தில் மாசுக்களை நீக்கிப் புண்ணிய கர்மாக்களை விரைவு படுத்தி அவற்றைப் பக்குவப் படுத்துவதாயும் ஆகின்றது. அபிராமி பட்டரோ,

“பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்றேத்துவனே!
என்கிறார். இனி ஸ்ரீலலிதையின் மஹத்துவம்.

“வானுலகத்துத் தேவாள் தாபத்தைத் தீர்த்திட
வந்து அலிதை அவதாரமாய்
பட்டுக்குடை கவியச் சித்திரப் பொன்ரதம்
பளிச் பளிச்சென்று ஒளி திகழ
ஸ்ரீசக்ரராஜ ரதத்தினில் தேவியும்
சிங்கார ரூபமாய்க்காந்தி மின்ன
ஆலவட்டம் வெண்சாமரம்போடச்சகிகளும்
அக்னிகுண்டத்தின் நடுவில் வந்தாள்.”சோபனம் சோபனம்

இதையே ஸ்ரீலலிதா சஹ்ஸ்ரநாமம், “ சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவ கார்ய-ஸமுத்யதா!!” என்று சொல்கிறது. அம்பிகை எப்படி வந்தாளாம்?? சம்பக மொட்டுப் போன்ற மூக்கையும், பவளம் போன்ற சிவந்த உதடுகளும், குருக்கத்திப் போன்ற பற்களும் கருநீலம் போன்ற விழிகள், தாழம்பூவின் மடல் போன்ற காதுகள், வில்லைப் போன்ற புருவங்கள், கண்ணாடி போல் பளபளக்கும் கன்னங்கள் என அம்பிகையைப் பார்க்கும்போதே தெய்வீகமான அழகு புலப்பட்டு அனைவர் மனதிலும் சாந்தி ஏற்பட்டதாம்.

“அர்த்தசந்திராகார நெற்றியில் சிந்தூரம்
அதி சிவப்பாம் மூன்றாங்கண்ணதுபோல்
அர்த்தசந்திரக்கலையும் சுட்டி ராக்கோடியும்
அழகு நீளமான கேசத்தின் மேல்
சிந்தாமணி ரத்தினத்தாலே கிரீடம்
சிரஸிலே தரித்துக்கொண்டிருக்காளம்மன்
சந்தனம் கஸ்தூரி புனுகு பூமாலையும்
தரித்து மாதா வந்தாள் –சோபனம் சோபனம்

தேவர்கள் அனைவரும் அம்பிகையைத் துதித்துப் போற்றி வணங்க அவர்களின் அங்க ஹீனங்களைக் கண்டு வருந்திய அம்பிகை தன் கண்களின் பார்வையின் சக்தியினால் அவற்றைப் போக்குகிறாள்.

மண்டலபால அரக்கன்போலம்மன் வர்ணமும்
வளமுள்ள சந்திரகாந்தி சீதளமும்
கண்டவுடன் தேவியைக் கைகூப்பித் தேவர்கள்
கனகத்தடிபோல் விழுந்து பணிந்தார்கள்
தேவர்களுடைய தேஹரணத்தைக் கண்டு
ஸ்ரீலலிதை மெத்த இரக்கத்துடன்
அவ்வளவு பேரையும் அம்ருதக் கண்னால் பார்த்து
அங்கக்குறைகள் தீர்த்தாள்- சோபனம் சோபனம்

அம்பிகை தேவர்களின் குறையைக் கேட்டுவிட்டு அவர்களைத் தேற்றுகிறாள்.

“ஸ்துதியாலே மெத்தமனங்குளிர்ந்தீஸ்வரி
சொல்லுவாள் திரும்பவும் கீர்வாணர்க்கு
இன்றுமுதல் பயத்தைத் தூரவிட்டு விடுங்கள்
இந்தப் பண்டாஸுரன் நமக்குப் பஞ்சு
அரை நிமிஷத்தில் பண்டாஸுரப் புழுவை
அக்கினி எரித்தாற்போல் வதைத்திடுவோம்
ஒருவாக்கிற்கு மறுசொல்லில்லை நமக்கு
உங்கட்கே மங்களம்-சோபனம் சோபனம்

நாளை ஸ்ரீலலிதைக்கும், ஸ்ரீகாமேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம்.


பி.கு. இணைய இணைப்பு எப்போ வரும், எப்போப் போகும்னு சொல்ல முடியலை. ஆகவே நாளைய பதிவையும் போட்டாலும் போட்டுடுவேன். உங்க அதிர்ஷ்டம் எப்படியோ? :))))))) மின்சாரமும் தான். நேத்திக்குப் பூராவும் ஆற்காட்டார் காட்டிலே மழை! :P

7 comments:

  1. thanks for sharing. good post recording nava raththiri.

    ReplyDelete
  2. மிக்க நன்றி கீதாம்மா
    இவ்வளோ வேலைகளுக்கு இடையே எனது கேள்விக்கும் விடை அளித்ததற்கு
    உங்களை பாராட்டி எனது நன்றியை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்
    நல்ல பகிர்வு கீதாம்மா
    தங்களுக்கு எனது ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete
  3. பயங்கரமான மூப்பு மரணங்களை விலக்குகிற அமிர்தததைச் சாப்பிட்டுங்க்கூட இந்திரன் முதலிய எல்லா தேவர்களும் பிரளயகாலத்தில் அழிவுறுகிறார்கள்.கொடிய விஷத்தைச் சாப்பிட்ட சிவனுக்குக் காலத்தின் முடிவு இல்லை என்றால் அதன் காரணம் உன் காதிலுள்ள தாடங்க மகிமைதான்.
    ஸெளந்தர்யலஹ்ரீ


    எனக்கு தொடர்ந்து 10 நாட்கள் நெட் வேலை செய்யவில்லை. உங்களை தொடர்ந்து வரமுடியவில்லை.நேற்றுத்தான் சரியானது.

    தாடங்க மகிமையைப் பற்றி சொன்னவுடன் ஸெளந்தர்யலஹரீ படித்த வரிகளை எழுதிவிட்டேன்.

    உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    நன்றி.

    ReplyDelete
  4. வாங்க மதுரை சரவணன், நன்றி

    ப்ரியா வாங்க, நிதானமாப் படிங்க, பப்ளிகேஷன்ஸ் கேட்டிருந்தீங்க இல்லை??கிரி ட்ரேடிங்காரங்களே எல்லா ரைட்ஸும் வச்சிருக்கிறதாப் போட்டிருக்கு.

    ReplyDelete
  5. வாங்க கோமதி அரசு, செளந்தர்ய லஹரியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இங்கேயும் நெட் தொந்திரவு, மின் தடைனு பிரச்னைகள் இருந்துட்டுத் தான் இருக்கு! :))))))))

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி கீதாம்மா
    திருப்பூரில் இல்லையாம் ;கோவையில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்
    //இங்கேயும் நெட் தொந்திரவு, மின் தடைனு பிரச்னைகள் இருந்துட்டுத் தான் இருக்கு! :))))))))//

    நெட் கார்டும் லேப்டாப்பும் வாங்கிக்கோங்க என்று சொல்ல மாட்டேனே !! :) :)

    ReplyDelete