எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 31, 2011

அதீதம் இதழில் புத்தாண்டுத் தலையங்கம்!

அதீதம்

அதீதம் வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டிலே நம்முடைய கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவோம் எனத் தீர்மானித்துக்கொள்வோம். கடமை என்பது இங்கே நாம் ஒவ்வொருவரும் நம் நாட்டுக்குச் செய்ய வேண்டியது! சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பக்கத்தில் “நாடென்ன செய்தது?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதிலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பதில் சொல்லி இருந்தார்கள். என்றாலும் பொதுவாக அனைவருமே ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். வேரோடிப் போன ஊழலை எப்படி ஒழிப்பது? நாம் திரும்பத் திரும்ப ஊழல் செய்பவர்களைத் தானே தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. யார் குறைந்த அளவுக்கு ஊழல் செய்திருக்காங்கனு தான் பார்க்கவேண்டி இருக்கே தவிர யார் ஊழலே செய்யலைனு பார்க்க முடியலை. இதுக்கு அடிப்படைக்காரணமே யாருக்குமே மனதில் நேர்மையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று தோன்றாததும், நேர்மையாக இருந்து கடமையை ஆற்றுவதில் தான் நாம் நம் நாட்டுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவைகளில் ஒன்றாக இருக்கும் என்பதும் எவருக்கும் புரியவில்லை.

அந்தப் பதிவிலேயே ஒருவர் கேட்டிருந்தார். சிவிக் சென்ஸ் பத்தி மாஞ்சு மாஞ்சு எழுதறீங்களேனு. எழுதத் தான் வேண்டி இருக்கிறது. ஏனெனில் இப்போதைய குடிமக்களுக்கெனத் தனியாகக் கடமைகள் இருப்பதே யாருக்கும் தெரியவே இல்லை.. எல்லாருமே மெத்தனமாக நமக்கு என்ன வந்ததுனு இருந்தால் எப்படி? நம்மால் சிறுமை கண்டு பொங்கற அளவுக்கு எல்லாராலும் முடியறதில்லை. இந்த நிலைமைக்குக் கொண்டு வந்ததும் மோசமானஅரசியலே காரணம். நன்மைகள் செய்தால் அவங்களுக்குத் தொல்லைகளே அதிகமாக இருக்கிற ஒரு காலகட்டத்திலே யார் துணிந்து நன்மையையே செய்ய நினைப்பார்கள்? நமக்கென்ன வந்ததுனு தான் போகமுடியும். அரசு இங்கே தான் தன் வலுவான கரத்தை நீட்டித் தீமைகளை அழிக்க முற்படவேண்டும். நல்லவர்களை நல்ல குடிமகன்களைக் காக்க முன்வரவேண்டும். அரசு இதை நமக்குச் செய்தால் நாம் அரசுக்குப் பலமடங்கு திரும்பச் செய்யலாமே.

கடமையாற்றுவதில் நேர்மைதேவை. எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் நம் வேலையை, நம் கடமையை நாம் செய்து முடிக்கவேண்டும். அந்த சிவிக் சென்ஸ் என்பதே நம் மக்களுக்குச் சுத்தமாக இல்லை. ஏனெனில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேல் நாம் இவை அனைத்தையும் மறக்கடிக்கப்பட்டோம். நம் கடமைகளைச் செய்ய நமக்கு யாரும் இன்று ஒரு பெரிய அளவில் முன்னோடியாக இல்லை. எனினும் இப்படித் தான் கடமைகளைத் தவறாமல் செய்யணும் என்ற எண்ணமே நம்மிடம் ஆழப் பதியவில்லை.

குடிமைப் பயிற்சி என்ற பெயரில் நானெல்லாம் பள்ளி மாணவியாய் இருக்கையிலே வாரம் இருநாட்கள் ஒரு வகுப்பு எடுப்பாங்க. அதிலே தெருவிலே நடந்து செல்வதில் இருந்து, வாசலில் குப்பையைப் போடுவதில் இருந்து எல்லாமும் சொல்லிக் கொடுக்கப்பட்டு நாடகமாய் நடித்தும் காட்டி இருக்கோம். ஆசிரியர்களே போலீஸ் வேஷம் போட்டுட்டு வருவாங்க. நாங்க மாணவிகள் சைகிளில், நடந்து, கார் ஓட்டிக்கொண்டு என நடித்துக்கொண்டு வந்து தவறான பாதையில் தவறான முறையில் சாலையைக் கடப்பதாயும், நில் எனும் குறிப்புக் காட்டியபின்னரும் அதைக் கவனிக்காமல் செல்வது போலவும், சிலர் ஒழுங்காய்ச் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது போலும் நடிப்போம். அப்போ எங்களுக்குச் சொல்லிக் கொடுப்பாங்க, இது தவறு; இது சரி என. தவறான முறையில் சாலையைக் கடந்தவர்களுக்கு அபராதம் என்றும் சொல்லுவாங்க. அந்த அபராதமும் சீட்டு வாங்கிக் கொண்டு செலுத்த வேண்டியது என்பதைப் புரிய வைப்பாங்க. சாலைகளில் இருக்கும் குடிநீர்க் குழாய்களில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது இதெல்லாம் கூடாதுனு சொல்வாங்க. அவ்வளவு ஏன்? அந்தக் காலங்களில் நான் மதுரையில் பள்ளிமாணவியாய் இருக்கையில் காலை பதினொரு மணியில் இருந்து மதியம் ஒரு மணிக்குள் ஒவ்வொரு வார்ட் கவுன்சிலரும் அவங்க தொகுதியைச் சுற்றி வந்து யார் வீட்டு வாசல்லே குப்பை குவிகிறது? யார் தண்ணீர்க்குழாயை வெட்டி வேலைகளுக்குப் பயன்படுத்தறாங்கனு பார்ப்பாங்க. அபராதமும் விதிப்பாங்க. நகராட்சியின் ரசீது கொடுப்பாங்க. இது நடந்தது இந்தியாவில். அதுவும் பெரிய கிராமம் எனப்படும் மதுரையில். அதே மதுரை இன்று இருக்கும் நிலைமை குறித்துச் சொல்லவேண்டியதில்லை

இம்மாதிரி இருந்த நிர்வாகம் இப்போது சீர் கெட்டதற்கு நமக்குக்குடிமைப் பயிற்சி அளிக்காததும், மாரல் சைன்ஸ் எனப்படும் ஆன்மிகப் பாடங்கள் கற்றுத் தராததும் முக்கியக் காரணம். முன்பெல்லாம் வாரம் ஒரு நாள் இந்த அடிப்படை தார்மீகங்கள் பற்றிய வகுப்பு எடுப்பார்கள். உலகளாவிய அளவில் உள்ள பெரிய தலைவர்கள்,மதத்தலைவர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், விவேகானந்தர், ராமகிருஷ்ணர் ஆகியோரின் அமுத மொழிகள் போன்றவை கற்பிக்கப்படும். ஆனால் இப்போது இவை எல்லாம் மதச் சார்பின்மைக்கு ஒத்துவராது என்று தள்ளிவிட்டனர். இதுவா மதச் சார்பின்மை? உண்மையான மதச் சார்பின்மை என்பது எந்த மதத்தையும் ஒதுக்காமல் அவற்றிலுள்ள நல்ல விஷயங்களை மட்டுமே பார்ப்பது ஆகும். நம் சொந்த மதத்தை ஒதுக்கிக் கொண்டு அதில் குறை கூறிக்கொண்டு இருந்தோமானால் மற்ற மதங்களை அவற்றைப் பின்பற்றும் நண்பர்களை எப்படி மதிப்போம்! ஆனால் இந்த நிலையை மாற்றவேண்டும் என உறுதி எடுப்போம்.. இதை ஆரம்பிக்கவேண்டியது இளைஞர்களிடம் இருந்தும், பள்ளி மாணவர்களிடம் இருந்தும் தான்.

நம்மால் இயன்றது நாம் குடியிருக்கும் பகுதி இளம் சிறார்களுக்குச் சாலைவிதிகள், சாலைப்பராமரிப்பு, தெருக்களைச் சுத்தமாய் வைத்திருத்தல், குடிநீரை வீணாக்காமல் கண்காணித்தல், சுகாதார மேம்பாடு, போன்ற அடிப்படை விதிகளோடு, இறை உணர்வையும் ஊட்டி வரவேண்டும். இதற்கெனப் பிரசாரம் செய்வது எனப் பொருள் இல்லை. அவரவரின் சொந்த மதக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே ஒரு தார்மிக உணர்வைத் தோற்றுவிக்கவேண்டும். இது என் நாடு; என் மாநிலம்;என் நகரம்; என் தெரு; என் மக்கள் என்ற உணர்வைத் தோற்றுவிக்க வேண்டும். இன்றைய அடிப்படைத் தேவை இந்த உணர்வே. தானே ஊழலற்ற ஒரு சமுதாயம் உருவாகும். எல்லோரும் இன்புற்று வாழ்வதுவேயன்றி வேறொன்றறியேன் பராபரமே!

இதற்காக நாம் பாடுபடுவோம் என்ற உறுதியை எடுப்போம்.

வந்தே மாதரம்!

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். அதீதம் மின்னிதழுக்காக எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறேன். மேல் விபரங்களுக்கு மேலுள்ள அதீதம் சுட்டிக்குச் செல்லவும். சில நாட்கள் தொடர்ந்து அதீதத்துக்கு எழுதியவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

9 comments:

  1. போல்ட் எழுத்துக்களில் சிவப்புக் கலரில் கொடுத்த கடைசிப் பத்தி ஏன் அப்படி வரலைனு புரியலையே?? :((((( தொ..நு. கோ.?????????

    ReplyDelete
  2. மாரல் கிளாஸ் மூலம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டியது மிக முக்கியம். இன்று நடைபெறத் தவறிவிட்ட விஷயம் இது. அழகாக நல்ல விஷயங்களை எடுத்தியம்பிய புத்தாண்டுக் கட்டுரை நன்று. உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தலைவிக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-)

    நல்ல பதிவு தலைவி ;-)

    ReplyDelete
  4. தலைவிக்கும், அவரது தலைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மதுரையை பெரிய கிராமம் என்று கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறேன் 

    ReplyDelete
  5. வாங்க கணேஷ், இப்போ இந்த வகுப்பே இல்லை. சுத்தமா எடுத்துட்டாங்க. எதுவுமே சின்ன வயசிலே இருந்து பழக்கப் படுத்தினாத் தான் வரும்.

    ReplyDelete
  6. வாங்க கோபி, ஜி+ ல பார்த்தேன், பகிர்ந்ததை. நன்றிப்பா.

    ReplyDelete
  7. வாங்க மதுரையம்பதி, நினைவு வைத்துக்கொண்டு வந்ததுக்கும், புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    மதுரை நான் இருக்கிறவரைக்கும் கிராமம் தான். அழகான ஒரு கிராமம். அப்புறம் தான் இருக்க லாயக்கில்லாமல் போய்விட்டது. :((((((

    ReplyDelete
  8. ஹிஹிஹி, நான் இருந்தவரைக்கும்னு படிச்சுக்குங்க. ஏதோ கவனம்! :))))

    ReplyDelete
  9. நன்றி எல்கே, பதிவுக்கு வந்தமைக்கு நன்றி.

    ReplyDelete