எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 20, 2012

உபநயனம் என்றால் என்ன! 2


முதலில் ஆண் குழந்தைகளுக்குச் செய்யப்படும் செளளம் என்னும் குடுமிக் கல்யாணம் பற்றி.  இது பொதுவாக  பிறந்த முதல் வருஷமே அன்னப்பிராசனத்திற்குப் பின்னர் செய்யப்படும்.  இதற்கும் நல்ல நாள், நக்ஷத்திரம் எல்லாமும் பார்த்துக் குழந்தையைத் தாய் மாமன் மடியில் அமர்த்திக் கொள்வார்.  குழந்தையை உட்கார்த்திக் கொண்டு மாமன் அமரும் இடம் கோலம் போட்டுச் செம்மண் பூசி இருக்கும்.  ஒரு சுளகில் அல்லது முறத்தில் காளைமாட்டின் சாணத்தோடு நெல்லையும் சேர்த்துத் தயாராக வைத்திருப்பார்கள்.  அதைக் குழந்தையின் தாய் அல்லது திருமணம் ஆகாத பிரமசாரிப் பிள்ளையோ கையில் வைத்திருக்க வேண்டும்.  குழந்தையைக் கிழக்குப் பார்த்து வைத்த வண்ணம் மாமா அமர, தலைமுடியை நீக்குவார்கள்.  இதற்கும் ஹோமம் எல்லாம் உண்டு .  அந்த ஹோமாக்னிக்கு எதிரேயே கிழக்குப் பார்த்து உட்கார வைத்துத் தலையை வெந்நீரால் நனைத்துக் கொண்டு மந்திரங்கள் சொன்ன வண்ணம் மூன்று மூன்று தர்பைகளை இடையில் வைத்து நான்கு மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒவ்வொரு திசையில் முடியை வெட்டுவார்கள்.  இதைத் தான் கீழே விழாமல் தாயோ அல்லது பிரமசாரிப்பிள்ளையோ வாங்கிக் கொள்வார்கள்.  காளைமாட்டின் சாணத்தோடு நெல் கலந்து தயாராக இருக்கும் மடக்கு, அல்லது சுளகு, அல்லது முறத்தில் வாங்கிக் கொண்டு அத்திமரம் கிடைத்தால் அதனடியிலோ அல்லது நதிக்கரை, குளக்கரைகளில் நாணல் புதர்களிலோ  வைப்பார்கள்.  இதன் பின்னர் குழந்தைக்குக் குடுமி தான் இருக்கும்.  இப்போதெல்லாம் முடியை நீளமாக ஃபாஷனுக்காக வளர்த்துக்கொள்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவிதமான மந்திரோபதேசமும் கிடையாது.

முடியை வளர்த்துக் குடுமியாக்கியதும் அதை நீக்குவது கூடாது என்பார்கள்.  ஆத்மசக்தி விரயம் ஆகாமல் மனோபலத்தை அதிகரித்துக் கட்டிப் போடுவதால் குடுமியைக் கட்டாயமாக அந்த நாட்களில் அனைவரும் வைத்துக்கொண்டார்கள்.  மஹாபாரதப் போரில் பாண்டவர்களின் வாரிசுகளை அடியோடு அழித்த அஸ்வத்தாமாவைப் பழிவாங்க நினைத்த அர்ஜுனன் குரு புத்திரனைக் கொல்வது எப்படி எனத் திகைத்துப் பின்னர் சிகையை அடியோடு வெட்டியதாகப் படித்திருக்கிறோம் அல்லவா!  அது அவன் ஆத்மபலத்தை அடியோடு அழித்துவிடவில்லையா?  அது போல் தான்.  பெண்களுக்கு இந்தக் குடுமிக் கல்யாணம் இல்லை என்றாலும் தலைமுடியை அவர்களும் வாரிப் பின்னித் தூக்கிக் கட்டிக்கொள்ள வேண்டும், நுனி வெளியே தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.  தூக்கிக் கட்டினால் நுனி மேல் நோக்கி இருக்கலாம் என்றும் கூறுவார்கள்.  ஆனால் இந்தக் காலத்தில் அது நடப்பதில்லை.  எல்லாருமே தலையை விரித்துத் தான் போட்டுக் கொள்கின்றனர்.  வட மாநிலங்களில் மத்ரா அருகே கோகுலத்தில் பிரிஜ்பாசி பிராமணர்களில் இப்போதும் இந்தக் குடுமிக் கல்யாணம் கட்டாயமாக நடைபெற்று வருவதைக் காண முடியும்.

இதற்குப் பின்னர் வருவதே உபநயனம் ஆகும்.  உபநயனம் என்றால் குருவிடம் அழைத்துச் செல்வது என்று பார்த்தோம்.  குரு வந்து கையைப் பிடித்துக்கொண்டு கூட்டிச் செல்வது என்ற பொருளில் அல்ல.  உபநயனத்தின் போது தந்தையானவர் மகனுக்கு குருவைக் காட்டி, “இனி இவர் தான் சில காலங்களுக்கு உனக்குத் தந்தை.” என்று காட்டுவார்.  குரு மூலமே காயத்ரி மந்திர உபதேசமும் நடக்கும்.  அதன் பின்னர் குறைந்தது பனிரண்டு வருஷங்கள் குருவிடம் மாணவனாக குருகுலத்தில் இருக்க வேண்டும்.  பொதுவாக இதற்கு வயசும் உண்டு.  எட்டு வயதில் உபநயனம் செய்ய வேண்டும் என்பார்கள்.  நாமெல்லாம் பிறந்த தேதியை வைத்து வருடத்தைக் கணக்கிட்டாலும் சாஸ்திர, சம்பிரதாயங்கள் கர்ப்ப காலத்தையும் சேர்த்துக்கொள்ளும்.  ஆகவே கர்ப்ப காலத்தையும் சேர்த்தெ எட்டு வயசு ஆக வேண்டும்.  பிறந்து ஏழு வயதும் இரண்டு அல்லது மூன்று மாதமும் ஆகி இருந்தால் சரியாக இருக்கும்.  ஏனெனில் இந்த வயதில் குழந்தை குழந்தையாகவே இருப்பான்.  மனதில் விகார எண்ணங்கள் இராது.  தவிர்க்க முடியாமல் போனால் தான் பதினாறு வயதுக்குள்ளாக உபநயனம் செய்விக்கலாம்.  இது பிராமணருக்கானது.

க்ஷத்திரியர்களுக்கான காலகட்டம் பதினொரு வயதில் இருந்து 22 வயது வரைக்கும்.  வைசியர்களுக்கான கால கட்டம் 12 வயதில் இருந்து 24 வயதுக்குள்ளாக.  அதற்குள்ளாக உபநயனம் செய்துவிட வேண்டும்.  இந்த உபநயனம் செய்விப்பதன் மூல காரணமே அந்தக் குழந்தை ஜபிக்கும் காயத்ரி மந்திரத்தின் ஆன்மீக அதிர்வலைகள் அவனுக்கு மட்டுமின்றிச் சுற்றி உள்ளவர்களுக்கும் ஏற்படுத்தும் நன்மையைக் கருத்தில் கொண்டே செய்யப்படுகிறது.  குழந்தையின் மனதில் காமம் புகுந்து கொள்ளுமுன்னர் உபநயனம் செய்விக்க வேண்டும்.  மனதை ஒருநிலைப்படுத்த காயத்ரி மந்திரம் துணை நிற்கும்.  ப்ரம்ஹ தேஜஸை உபநயனம் செய்வித்த பிள்ளை சம்பாதித்துக்கொண்டு மற்றவர்களுக்கும் அதன் மூலம் நன்மையை ஏற்படுத்த முடியும்.


பதிவுக்கான தகவல்கள் உதவி: தி.வா.ஜி. மற்றும் தெய்வத்தின் குரல்

8 comments:

  1. //செளளம் என்னும் குடுமிக் கல்யாணம் //

    அது 'வபனம்' இல்லையோ?

    இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு முதல் நாள்தான் பூணூல் சம்பிரதாயத்துக்காக 'மாட்ட'ப் படுகிறது!அதுவும் கூட விட்டு விடும் காலம் இது!!

    ஒவ்வொன்றுக்கும் ஹோமம் பண்டிகை என்று வைத்து கொண்டாடியது ஒரு காலம்!

    ReplyDelete
  2. முடியை வளர்த்துக் குடுமியாக்கியதும் அதை நீக்குவது கூடாது என்பார்கள். ஆத்மசக்தி விரயம் ஆகாமல் மனோபலத்தை அதிகரித்துக் கட்டிப் போடுவதால் குடுமியைக் கட்டாயமாக அந்த நாட்களில் அனைவரும் வைத்துக்கொண்டார்கள்.

    அருமையான தாத்பர்யம்..

    ReplyDelete
  3. ஹலோ பாட்டீ கதையை முடிக்காம இது என்ன திடீர்னு வேற மரத்துக்கு தாவறது.. செல்லாது செல்லாது!!

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், செளளம் என்பது ஒரு வயதிலிருந்து மூன்று வயதுக்குள்ளாகச் செய்வது. நீங்க சொல்றாப்போல் உபநயனத்தின் போது செய்வது வபனம். அதன் பின்னரும் தலையை நாவிதர் மூலம் ஒழுங்கு செய்து கொள்வதை வபனம் என்றே சொல்வார்கள். பால்மணம் மாறாச் சின்ன வயசில் செய்யும் முதல் மொட்டை அல்லது முதல் குடுமிக் கல்யாணத்திற்கு "செளளம்" என்றே பெயர்.

    ReplyDelete
  5. வாங்க ராஜராஜேஸ்வரி, சிகையில் ஆன்மபலம் மட்டுமின்றி உடல் பலமும் உண்டு என்பதைப் பல முறை கண்டிருக்கிறேன். மொட்டை அடிச்சாலே இளைத்துப் போனாப்போல் காணப்படுவார்கள் இல்லையா?

    ReplyDelete
  6. ஹெலொ, தங்கச்சிக்கா, ஜூலை 24 எங்க ஆவணி அவிட்டம். ஆகஸ்ட் 1,2 யஜுர், ரிக் ஆவணி அவிட்டம். ஆகையால் அதுக்காகப் போடப்படும் இந்தப் பதிவுகள் முடிஞ்சதும் தான் கதை எல்லாம். அது வரைக்கும் சமத்தா பொம்மைகளோட விளையாடிட்டு அழாமல் இருங்க. :P:P:P:P:P

    ReplyDelete
  7. ஆமா ஆமா ஆகஸ்ட் 1 எங்க பெரனுக்கு தலை ஆவணி அவிட்டம் ஸமித்து போட்டு 1008 காயத்ரி சொல்லனுமெ

    ReplyDelete
  8. யஞ்யோபவீதத்துல இருக்கும் ஒன்பது இழைக்கும் 9 தேவதையை உபாசிச்சு போட்டுக்கறதா
    ஞாபகம் . அதுல நாகம், அனந்தன் ஒண்ணு இல்லை? சூர்யன் சந்திரன் வாயு அக்னி பித்ரு, மத்தது ஓம் நு நினைக்கிறேன. லாஸ்ட் என்னனு மறந்துபோச்சு:( நாளைக்கா நாக சதுர்த்தி?

    ReplyDelete