எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 27, 2012

பாக்யாத லக்ஷ்மி பாரம்மா!

வரலக்ஷ்மி விரதம் பண்டிகை ரொம்பவே அழகான பண்டிகை.  அதைக் கொண்டாடுவதில் எனக்கு எப்போவுமே ஆர்வம் உண்டு.  அதுக்காகப்பள்ளிக்கு தாமதமாய் எல்லாம் போயிருக்கேன்.  ஆசிரியர், சிநேகிதிகளின் கேலிக்கும் ஆளாகி இருக்கேன்.  கொழுக்கட்டை சாப்பிட்டு வந்தாச்சானு கேட்பாங்க. :)))) ஆனால் பண்டிகை முதல் நாளில் இருந்தே களை கட்டும்;  ஒரு ட்ரங்க் பெட்டியில் வெள்ளிச் சாமான்கள் மட்டுமே வைத்திருக்கும் பெட்டியில் வரலக்ஷ்மி அம்மன் முகத்தை வைத்திருப்பார்கள்.  இதெல்லாம் அப்பாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.  அம்மா முதல்நாள் காலம்பரலே இருந்து தவிச்சுட்டு இருப்பாள்.  அன்றே விரதம் ஆரம்பிக்கும்.  அதற்காக அம்மனைத் தயார் செய்து வைக்கணுமே!  ஆனால் அப்பாவோ கண்டிப்பாகத் தான் வந்து அம்மனை எடுத்துத் தருவதாகச் சொல்லிடுவார்.  அவரை மீறி எதுவும் செய்ய முடியாது.  சாயந்திரம் வந்ததும் எல்லாம் எடுத்துட மாட்டார்.

அதுக்கு முன்னாடி அப்பாவின் நண்பரான ட்ராயிங் மாஸ்டர் சுப்பராமனை வரவழைத்து விடுவார் அப்பா.  அதற்குள்ளாக அம்மாவோ, அண்ணாவோ அம்மன் வைக்க வேண்டிய இடத்தின் சுவரைச் சுண்ணாம்பு அடித்து வெள்ளையாக்கி வைத்திருப்பார்கள்.  அந்த இடத்திலே சுப்பராம வாத்தியார் வந்து அம்மன் படத்தை வரைவார்.  கலர் பென்சில்கள் தான்.  வாட்டர் கலரெல்லாம் அப்போ அவ்வளவாத் தெரியாது.  பெயின்டும் இல்லை.  முதலில் பென்சிலால் நாலைந்து கோடுகள் தான் போட்டிருப்பார்.  கலர் பென்சிலால் கலர் தீட்டத் தீட்ட சிவப்புப் புடவையும், மஞ்சள் ரவிக்கையும் அணிந்த வண்ணம் கழுத்தில் பச்சைக்கலர் நெக்லஸோடும், கருகமணியோடும், காதில் சிவப்புத் தோடோடும், நெற்றியில் நீண்ட திலகத்தோடும் வரலக்ஷ்மி பிரசன்னம் ஆகி விடுவாள்.  ஆச்சு;  இது முடிந்தது.

இனிமேல் மண்டபம் அமைக்கும் வேலை.  இப்போல்லாம் மண்டபம் விலைக்கு வாங்கி ஸ்வாமி அலமாரியில் வைச்சுக்கறாங்க.  எங்க வீட்டிலேயும் எங்க நாத்தனார் இரண்டு வருஷம் முன்னாடி வாங்கி வந்து கொடுத்தது இருந்தது.  சென்னையை விட்டு வரச்சே தானம் செய்த பொருட்களில் அந்த மண்டபமும் ஒண்ணு.  அந்தக் காலத்தில் மண்டபம் எல்லாம் கிடையாது.  நாலு கால்கள் உள்ள ஓர் ஸ்டூல் தேர்ந்தெடுக்கப் பட்டு மேலே அப்பாவோட வெண்பட்டுத் துணியால் போர்த்தப்படும்.  ஸ்டூலில் கால்களில் வாழைமரம் விலைக்கு வாங்கியது கட்டப்படும்.  சுற்றிலும் மாவிலைக் கொத்துக் கட்டுவோம் நானும், தம்பியும்.  எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வேலை அது தான்.  இதைத் தவிர நான் அரிசியை அம்மியில் அரைத்து மாக்கோலம் பெரிதாகப் போடுவேன்.  கோலம் போடுவதிலும் செம்மண் பூசுவதிலும் ரொம்பவே ஆசையாக இருக்கும்.  மண்டபம் வைக்கும் இடத்தில் கோலம் போட்டு முடிச்சதும் செம்மண் பூசிக் காய்ந்ததும் ஸ்டூல் அங்கே வைக்கப் படும்.

அதுக்குள்ளாக அப்பா அம்மனை வெளியே எடுப்பார்.  அம்மனைக் கலசத்திலே தான் வைக்கணும்.  அதுக்காக வெள்ளிச் செம்பு இல்லாததால் அம்மாவின் வெள்ளி கூஜாவிலேயே உள்ளே அரிசி, காசுகள்போட்டு, மாவிலை வைத்துத் தேங்காயும் வைத்து அம்மனை அதில் வைப்பார்கள்.  அம்மனின் பின்னால் மாட்டுவதற்கென வெள்ளிக்கம்பியில் கொக்கி போல இருக்கும்.  தேங்காய்க் குடுமியில் அதை மாட்டி விட்டுப் பின்னர் ஏற்கெனவே தைத்திருக்கும் பட்டுப் பாவாடையைக் கட்டுவார்கள்.  பின்னர் கைகளால் கோர்க்கப்பட்ட கருகமணி, பிச்சோலை கட்டுவார்கள்.  காதுகளில் ஜிமிக்கியும் தோடும் அம்மன் வாங்குகையிலேயே போட்டிருக்கிறாப் போல் இருந்தது.  எல்லாம் வைக்கும் முன்னர் ஒரு பலகையில் கோலத்தைப் போட்டு அம்மனை அதில் வைத்திருப்பார்கள்.

பின்னர் இரு மாமிகள் அம்மனை அழைக்க வேண்டும் என அழைப்பார்கள்.  ஒரு சிலர் வீடுகளில் மறு நாள் காலை அழைப்பதும் உண்டு.  அன்று பொங்கல் நிவேதனம் செய்து அதை மட்டும் உண்பார்கள்.  மறுநாள் காலை அம்மனை அழைத்து மண்டபத்தினுள்ளே வைத்து இருப்பார்கள்.  பின்னர் ஒரு சிலர் காலை நேரமே பூஜை செய்வார்கள்.  ஒரு சிலர் மாலை நேரம், பசுமாடுகள் மேய்ச்சலுக்குப் பின்னர் திரும்பும் நேரம் ஆரம்பித்துச் செய்வார்கள்.  இதுதான் சரியானது என அம்மா சொல்லிக் கேட்டிருக்கேன்.  இந்த பூஜை செய்ய வேண்டும் என ரொம்பவே ஆசை.  ஆனால் கல்யாணம் ஆகி வந்ததும் மாமியார் வீட்டில் வழக்கம் இல்லாததால் செய்ய முடியவில்லை.  அம்மா வீட்டு நோன்பு எடுத்துக்கலாம்னு ஒரு சிலர் சொல்லியும் எங்க மாமியார் அனுமதி கொடுக்காததால் எடுக்க முடியலை.  நோன்பன்னிக்கு எல்லா வீடுகளிலும் கொழுக்கட்டை செய்யறாப் போல நானும் செய்வேன்.  அதோட சரி.  இப்போதெல்லாம் சாப்பிட ஆளில்லாததால் அதுவும் இல்லை.  முதல் வாரமே பிள்ளையாருக்குக் கண்ணிலே காட்டறதோடு சரியாப் போச்சு.  இதுதான் எங்க வரலக்ஷ்மி நோன்பு கதை.

ஸ்ரீராம், வ.வி. பத்தி எழுதிட்டேன்.  பாருங்க.


படம் உதவி:  திரு நடராஜன் கல்பட்டு அவர்கள் வீட்டில் இன்று நடந்த வரலக்ஷ்மி விரத பூஜைப் படம்.  நன்றி திரு நடராஜன் கல்பட்டு அவர்கள். 

13 comments:

  1. //ஸ்ரீராம், வ.வி. பத்தி எழுதிட்டேன். பாருங்க.//

    நன்றி! இங்கும் செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! பாஸும் குழுவினரும் பாடி அம்மனை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

    ReplyDelete
  2. ஹிஹிஹி, எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :))))கொழுக்கட்டை கிடைச்சுதா? தேங்காய்க் கொழுக்கட்டை? நம்ம ரங்க்ஸுக்கு ரொம்பப் பிடிக்கும்; ஆனால் இப்போல்லாம் உளுந்துக் கொழுக்கட்டையோடு நிறுத்திக்க வேண்டியதாப் போச்சு! :( சாம்பிளுக்கு ஒண்ணோ, ரெண்டோ கொடுப்பேன். மத்தது விநியோகம் தான். :)))))

    ReplyDelete
  3. வரலஷ்மி மலரும் நினைவுகள் சுவாரசியம்

    ReplyDelete
  4. கிடைத்ததுதான். ஆனால் ஆளை வைத்துச் செய்தது. நான் ஒரு கொ.க ரசிகன். ஆனால் பாஸுக்கு கிண்ணம் செய்ய வராது. மாவு பதம் சரியாக வராது! நான் இறங்க வேண்டும் களத்தில். பொறுமையில்லை. எனவே அலங்காரம் மட்டும் நான்! கொ.க. 'மடியாக'ச் செய்யுமிடத்திலிருந்து ஒன்று நாலு ரூபாய் என்ற விலையில் வாங்கி சாப்பிட்டாகி விட்டது. :)))

    ReplyDelete
  5. வரலட்சுமி விரத மலரும் நினைவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

    நேற்று பக்கத்து வீட்டில் இருந்து லடசுமி பிரசாதம் கொழுக்கட்டை, வடை, அப்பம், கிடைத்தது.

    ReplyDelete
  6. ரொம்ப உற்சாகமா, கவித்துவமா இருக்கே நோன்பு..

    தாயார் எப்ப மறுபடியும் ட்ரங்க் பெட்டிக்குள்ளே போவா?

    மண்டபத்தைக் கலைக்கும் முறை [அவரோஹணம் ? ] என்ன?

    ReplyDelete
  7. வரலக்ஷ்மி வந்தாங்களா? சரி .இப்பத்தான் மத்த பதிவுகளையும் படிக்க ஆரம்பிச்சேன்.
    இது நண்பர்களுக்கு:- காக்கா மைனா கிளி , கருடன் இங்கேயும் வந்தா தேவலாம். நாம தான் மிமிக் பண்ணனும் போல!

    ReplyDelete
  8. வாங்க லக்ஷ்மி, வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  9. ஆஹா, ஸ்ரீராம், ஒரு கொ.க. நாலு ரூபாயா?? ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ, தெரியாமப் போச்சே, நான் கோடீஸ்வரி ஆகி இருப்பேனே! சரி, போகட்டும், நீங்க எப்போவானும் ஸ்ரீரங்கம் வரச்சே உங்களுக்குக் கொ.க. செய்து தரேன்; சாப்பிடுங்க. ஆனால் கண்டிப்பாக உளுந்துக் கொ.க. தான். நோ தே. கொ.க.

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, சென்னையில் இருந்தால் எனக்கும் கொ.க. வரவு உண்டு. இந்த வருஷம் இல்லை. :)))))

    ReplyDelete
  11. வாங்க திருமால், அதிசயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு உங்க வரவு. :))) எங்க வீட்டிலே நோன்புக்கு மறுநாளே அம்மனை வைச்சுப் பாடிச் சுண்டல் விநியோகங்கள் நடந்து ஆரத்தி எடுத்து அன்றிரவு அரிசிப் பானைக்குள் வைப்பாங்க. அதன் பின்னர் ட்ரங்கிற்குப் போயிடுவா.

    ஆனால் வட ஆற்காடு மாவட்டத்திலே பிள்ளையார் சதுர்த்தி வரைக்கும் அம்மன் இருப்பாள். பிள்ளையாரோடு தான் வரலக்ஷ்மி விரதப் பூர்த்தியும் ஆகும். இப்போல்லாம் எப்படினு தெரியலை. :))))

    ReplyDelete
  12. வாங்க ஜெயஸ்ரீ, நியூசி குளிருக்கு எங்கேருந்து பறவைங்க வரும்? குளிர் முடிஞ்சால் கொஞ்சம் வருமா இருக்கும். மெதுவாப் படிச்சுட்டு வாங்க. ரொம்ப நாளாச்சு நீங்க வந்து. :))))

    ReplyDelete
  13. வரலக்ஷ்மி வந்தாச்சா?

    அம்மா சொம்பிலேயே வரலக்ஷ்மி முகம் வரைவார்கள். அதன் மேலே வெள்ளி முகம் வேறு வைத்துவிடுவார்கள். அலங்காரம் எல்லாம் தடபுடலா செய்வோம்.

    கல்யாணத்திற்கு பிறகு அலங்காரத்தில் என் பங்கும் உண்டு!

    ReplyDelete