எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 19, 2013

மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக, மாப்பிள்ளை ஆக!

உபநயனத்தின் போது இடுப்பில்கட்டும் முளஞ்சிக்கயிறு அல்லது முஞ்சிப்புல்லை இப்போத்தான் அவிழ்க்கணும். அதையும் சும்மாவானும் அவிழ்த்து எறிய முடியாது.  மந்திரங்கள் சொல்லி மந்திரோக்தமாகவே அவிழ்க்கணும்.  ஆனால் இப்போ யார் இடுப்பிலும் மொளஞ்சிக்கயிறு இருக்காது.  அப்படின்னா என்னனு கேட்பாங்க. :))) அதன் பிறகு வபனம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஸ்நானம் முடித்து ஆசாரியர் ஆசீர்வதித்துக் கொடுக்கும் வேஷ்டியைப் பஞ்சகச்சமாகக் கட்டிக் கொள்ள வேண்டும்.  அதற்கு முன்னர் புதியதாகப் பூணூலை மாற்ற வேண்டும்.  பிரமசாரிக்கு ஒரே பூணூல் தான்.  இப்போது அவன் திருமணம் செய்து கொள்ளப் போவதால் இரண்டு உபவீதங்களை அணிவான். அதே போல் இது வரை ஒற்றை வேஷ்டி தான்.  இப்போது இரட்டை வேஷ்டி கட்டிக் கொண்டு அதையும் பஞ்சகச்சமாகக் கட்டிக் கொண்டு மேல் உத்தரீயம் அணிவிக்கப் படுவான். இப்போது அவன் வாசனாதி திரவியங்களையும் பயன்படுத்தத் தடை இல்லை.  அதனால் தான் கண்ணுக்கை மை, நெற்றியில் பொட்டு, சந்தனம், குங்குமம் என்றெல்லாம் வைக்கின்றனர். அதோடு இல்லாமல் அவன் கல்வி கற்றவன் என்பதைக் குறிக்கும் வகையில் கையில் சுவடிகளை முன்பு வைத்திருந்தது போக இப்போது ஏதேனும் ஒரு புத்தகம் கொடுக்கப்படுகிறது.  அநேகமாக ராமாயணம், அல்லது பகவத் கீதை புத்தகமே கொடுப்பார்கள். சமுதாயத்தில் அவனுக்கும் இந்தத் திருமணத்தின் மூலம் ஏற்படப் போகும் அந்தஸ்தைச் சுட்டிக் காட்டும் வகையில் கையில் ஒரு தடி, விசிறி, குடை, செருப்பு போன்றவற்றையும் அணிவான்.  இவை எல்லாம் பெண் வீட்டுக்காரர்களாலேயே கொடுக்கப்படுகிறது.   இப்போது காடரிங்காரர்களின் பொறுப்பில் இவையும் ஒன்று.  இது கல்யாணத்தன்று காசி யாத்திரைக் கோலத்தில் நடப்பது. என்றாலும் விஷயத்தின் தன்மையைக் குறித்து இன்றே சொல்லி விட்டேன்.



அடுத்த முக்கியமான ஒரு விஷயம் ஸமிதா தானம்.  பிரமசாரிகள் தினம் தினம் ஸமிதா தானம் செய்யவேண்டும். இப்போது பிரமசாரி கிருஹஸ்தனாக ஆகப் போவதால் அந்திம ஸமிதாதானம் செய்ய வேண்டும்.  இது அனைத்து வேதக்காரர்களுக்கும் கிடையாது.  ஸாமவேதிகளுக்கு மட்டுமே உண்டு.  இதை முடித்ததும், அந்த அக்னியைப்பாதுகாத்து ஆயுள் பரியந்தம் தினம் தினம் ஒளபாஸனம் செய்ய வேண்டும். (என் மாமனார் எவ்வளவோ இதற்கு முயன்றார்.  ஆனால் என் கணவரின் பணி நிமித்தமாக, பல ஊர்களுக்கு ஏற்படும் மாற்றல் காரணமாக இதை ஏற்க முடியவில்லை.) அடுத்து நாந்தி ஸ்ராத்தம்.

நாந்தீ என்றாலே மகிழ்ச்சி என்றே பொருள் வரும்.  சுப சடங்குகள் செய்கையில் அதன் தொடக்கத்தில் செய்யப்படும் ஒரு பிரார்த்தனை இது. பித்ருக்களுக்குச் செய்தாலும் இதுவும் தேவர்களுக்குச் செய்யப்படும் வழிபாடுகளைப் போலவே மங்களமான ஒன்றே.  என்றாலும் பலரும் இதை அச்சானியம் எனக் கருதிச் செய்வதில்லை. நம் மீது உள்ள பிரியத்தாலும் அன்பாலும் பித்ருக்கள் நாம் அழைக்காமலேயே நம் சந்ததிகளை ஆசீர்வதிக்க வருவதாக ஐதீகம்.  ஆகையால் அப்போது வேத அத்யயனம் செய்த பிராமணர்களுக்கு திரவியங்கள் கொடுத்து, சாப்பாடு போட்டு தக்ஷணை கொடுப்பார்கள்.  வஸ்திரமும் கொடுக்கலாம்.




ஆனால் இந்த நாந்தி ஸ்ராத்தம் செய்யும் வீடுகளில் கோத்திரக்காரர்கள் மட்டுமே சாப்பாடு சாப்பிடலாம் என்றொரு விதி இருப்பதால் பலரும் இதைச் சாப்பாடு போட்டுப் பண்ணாமல் ஹிரண்ய ரூபமாக அரிசி வாழைக்காய், தக்ஷணை, வஸ்திரம் கொடுத்துச் செய்கின்றனர்.  மேலும் கல்யாணச் சத்திரங்களிலேயே கல்யாணம் நடப்பதால் நாந்தி ச்ராத்தம் செய்தவர்களுக்கு எனத் தனிச் சாப்பாடு இப்போதெல்லாம் பண்ணுவதில்லை.  எங்க கல்யாணத்தில் தனியாக மடிச் சமையல் என்றிருந்தது.  ஆகையால் நாங்க ஒரு ஐம்பது பேர் அந்தச்  சாப்பிட்டோம். எங்க பெண், பிள்ளை கல்யாணங்களிலும் தனிச் சமையல் ஏற்பாடு செய்திருந்தோம். ஆகவே பிரச்னை இல்லை. ஆனாலும் அரிசி, வாழைக்காய் தான் கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர் கல்யாணப் பிள்ளை கூஷ்மாண்ட ஹோமம் செய்வார். பொதுவாய்க் கூஷ்மாண்டம் என்றால்  பூஷணிக்காய் என்றாலும் இங்கே குறிப்பிடுவது அதுவல்ல.  இது விவாஹம் ஆகும் முன்னரே செய்யவேண்டும்.  இந்த ஹோமம் பெண் வயதுக்கு வந்த பின்னர் திருமணம் செய்து கொள்வதற்குப் பிராயச்சித்தமாகச் செய்யப்படுவது.  இதனால் தோஷங்கள் ஏற்படாது என்கிறார்கள். மேலும் ருதுவான பெண் எத்தனை முறை ருதுவாகி இருக்கிறாளோ அத்தனை முறையும் கோதானம் செய்ய வேண்டும் என்று விதி.  ஆனால் இப்போது எல்லாமும் தக்ஷணை தான் என்பதோடு இந்த கூஷ்மாண்ட ஹோமத்தை விபரம் தெரிந்த வெகு சிலரே செய்கின்றனர்.  கல்யாணப் பெண்ணும் உபவாசம் இருந்து வயதுக்கு வராத கன்னிக் குழந்தைப் பெண்ணுக்கு ஏதேனும் பொருளை அல்லது ஆபரணத்தைத் தானமாகத் தருவாள். இந்தக் கூஷ்மாண்ட ஹோமம் ப்ராயச்சித்த ஹோமம் என்பதால் வருடா வருடம் செய்யும்  ச்ராத்தத்திற்கு முதல்நாள் கூடச் செய்பவர்கள் உண்டு. விவாஹத்திற்கு முதல்நாள் இதைக் கட்டாயமாய்ச் செய்யவேண்டும் என்பது விதி. அதோடு அக்னி ஹோத்ர அக்னியில் செய்யாமல் ஒளபாசன அக்னியிலேயே செய்ய வேண்டும்.  ஒளபாசன அக்னியில் செய்யும் கர்மாக்களையே ஹோமங்கள் என அழைக்கிறோம்.  இப்போதெல்லாம் யார் வீட்டிலும் ஒளபாசன அக்னி இல்லாததால் அவ்வப்போது மூட்டும் லெளகீக அக்னியிலும் செய்யலாம். அக்னி ஹோத்ர அக்னியில் செய்வதெல்லாம் யாகங்கள். இவை ஸ்ரெளத கர்மாக்கள் எனவும், மேலே சொன்ன ஹோமங்கள் ஸ்மார்த்த கர்மாக்கள் எனவும் அழைக்கப்படும்.

18 comments:

  1. எத்தனை சம்பிராதயங்கள்...! மலைக்க வைக்கிறது... நன்றி...

    ReplyDelete
  2. நிறைய்ய தகவல்கள் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete

  3. யார் சொன்னது சம்பிரதாயங்கள் என்று. ?கீதாம்மா ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

    ReplyDelete
  4. ஒவ்வொருவரின் சம்ப்ரதாயங்களைப் பற்றியும் அருமையாக பொறுமையாக எழுதி அசத்தியுள்ளீர்க்ள். மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. எங்கு தொடங்கியது திருமணம் பற்றி எழுத வேண்டிய காரணம்? இவ்வளவு விவரங்கள்... நீங்கள் இதை சிறு புத்தகமாக வெளியிடலாம். மிக உபயோகமாக இருக்கும். நானே நிறைய காபிகள் வாங்கிக் கொள்வேன்! திருமண வைபவங்களில் தேங்காய்ப் பையோடு வைத்துக் கொடுத்து விடலாம்.

    ReplyDelete
  6. இப்படியெல்லாம் ஆசார அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டும். இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது...

    தகவல்கள் தெரிந்து கொண்டேன் மாமி.

    ReplyDelete
  7. வாங்க டிடி, ஒரு வகையில் இவை சம்பிரதாயங்களே, எனினும் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டியவை.

    ReplyDelete
  8. வாங்க புதுகை, வரவுக்கும், கருத்துக்கும் படிப்பதற்கும் நன்றி.

    ReplyDelete
  9. வாங்க ஜிஎம்பி சார், நீங்க சொல்வது உண்மையே. இவை வெறும் நோக்கமோ பயனோ தெரியாத மரபு சார் செயல் முறைகள் அல்ல. இவற்றின் நோக்கமும் செய்யவேண்டியதன் அவசியமும் கூடவே சொல்லி இருப்பதால் இவற்றை வெறும் சம்பிரதாயம் எனத் தள்ள முடியாது. விளக்கம் கொடுக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி. :)))))))

    ReplyDelete
  10. வாங்க வைகோ சார், மூன்று வேதக்காரங்களைக் குறித்து எழுதி இருப்பதைச் சொல்றீங்கனு நினைக்கிறேன். அதர்வ வேதம் தனி. இந்த மூணு வேதத்துக்கும் சேர்த்து ஒரே காயத்ரி என்றால் அதர்வ வேத காயத்ரி தனி.ஆகவே அதர்வ வேதம் அத்யயனம் செய்யணும்னால் திரும்பவும் புநர் உபநயனம் செய்துக்கணுமாம். புநர் உபநயனம் செய்து கொண்டு அதர்வ வேத காயத்ரி உபதேசம் பெற்ற பின்னரே அதர்வ வேதம் அத்யயனம் செய்யலாமாம். ஒரிசாவிலும், குஜராத்திலும் மட்டும் ஒரு சில அதர்வ வேதக்காரங்க இருப்பதாய்க் கேள்விப் பட்டேன். ஆகையால் அது குறித்து எதுவும் தெரியலை. :))))))))

    ReplyDelete
  11. வாங்க ஶ்ரீராம், மின் தமிழ்க் குழுமத்தில் தமிழர் வாழ்வின் சடங்கு, சம்பிரதாயங்களைக் குறித்து அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். அப்போது ஒரு சில சமயம் கூறிய என் கருத்துக்களை வைத்து குழுமத்தின் நிறுவனர் சுபாஷிணி அவர்கள் இந்தச் சடங்குகள், சம்பிரதாயங்களைக் குறித்துத் தெரிந்தவற்றை எழுதி வரச் சொன்னார்கள். அப்படி ஆரம்பித்ததே முதலில் உபநயனம். இப்போது கல்யாணம்.:)))) இது சுபாஷிணியின் ஒப்புதல் பெற்று அநேகமாக மரபு விக்கியில் சேர்க்கப்படும். கடைசியிலே எல்லாத்தையும் தொகுத்து பிடிஎப் போட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நன்றி.:)))))

    ReplyDelete
  12. வாங்க கோவை2தில்லி, திருமணமும், அதன் நோக்கங்களும் எத்தனை அர்த்தமுள்ளவை என்பதைச் சொல்வதற்காகவே இவ்வளவு விஸ்தாரமாக எழுத வேண்டி இருக்கு. நன்றிம்மா. :))))

    ReplyDelete
  13. நாந்தி உண்டு. சிலசம்ப்ராதயங்களில். சிலபேர் ஒத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் எழுதவே இவ்வளவு ஆகிறதே. அத்தனையும் கடைப் பிடித்தால்….மலைப்பாக இருக்கிறது கீதா.

    ReplyDelete
  14. எழுதறச்சே மலைப்பாத் தான் இருக்கும் வல்லி. ஆனால் செய்யறவங்க ஈடுபாட்டோடு செய்யறச்சே எல்லாம் சரியாப்போயிடும். மேலும் இதுக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சு, இதுக்காகத் தான் செய்யறோம்னு தெரிஞ்சு, தன் வாழ்க்கைக்கு மட்டுமில்லாமல் உலக க்ஷேமத்துக்காகவும் பிரார்த்திக்கிறோம்ங்கறதும் புரிஞ்சால் எல்லாரும் கட்டாயமாய்ப் பண்ணுவாங்க.

    ReplyDelete
  15. உலக க்ஷேமத்துக்காகவும் பிரார்த்திக்கிறோம்ங்கறதும் புரிஞ்சால் எல்லாரும் கட்டாயமாய்ப் பண்ணுவாங்க.//
    எவ்வளவு சடங்குகள்! நீங்கள் சொல்வது போல் சடங்குகளின் காரண காரியங்களை அறிந்து கொண்டு காலத்திற்கு ஏற்றவைகளை கடைபிடித்தால் உலகம் நலமாய், அதில் வாழும் மக்களும் நலமாக இருப்பார்கள்.

    ReplyDelete
  16. வாங்க கோமதி அரசு, சடங்குகளின் முக்கியத்துவமும் அதன் உள்ளார்ந்த பொருளும் தெரியாததாலேயே பிரச்னைகள் வருகின்றன. எடுத்துச் சொல்லப் பெரியவங்களும் இல்லை. நடுவில் ஒரு தலைமுறைக்கு இதைக் குறித்த விரிவான ஞானமே இல்லாமலும் போய்விட்டது. :(((

    ReplyDelete
  17. இவ்வளவு சடங்குகள் இருக்கின்றனவே. அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  18. வாங்க மாதேவி நன்றி.

    ReplyDelete