எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 02, 2013

கொத்தோடு வாழைமரம் கொண்டு வந்து கட்டி, கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி!

ஆச்சு, கல்யாண வேலைகள் ஒவ்வொன்றாகச் செய்து வருகிறோம்.  துணிமணிகள் வேலை, நகைகள், பாத்திரங்கள் வாங்குவது முடிஞ்சாச்சு.  வற்றல், வடகம், அப்பளம் போட்டாச்சு.  பக்ஷணங்கள் செய்தாச்சு. இனி திரட்டுப்பால் பாக்கி.  அதைக் கடைசியில் தான் செய்யணும்.  முன்னாடியே செய்ய வேண்டாம்.  பாலை வேணா வாங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ச்சிக் குறுக்கிச்  சேர்த்துக் கொண்டு வருவோம்.  இப்போ அடுத்த வேலைகள், பந்தக்கால் முஹூர்த்தம், வீடுகளில் செய்ய வேண்டிய சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை வகையறாக்கள்.  அதுக்கும் முன்னாடி பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை போட்டுடணும்.  அப்புறமாக் குலதெய்வத்துக்கு ஆராதனைகள் செய்துடணும்.  துணிமணிகள் வாங்கறச்சேயே வாங்கி வைச்சிருக்கும் பிள்ளையார் வேஷ்டி, குலதெய்வத்திற்கான துணிகள் எல்லாத்தையும் நேரில் சென்று கொடுத்து அபிஷேஹ ஆராதனைகளை முடிச்சுப் பத்திரிகைகளையும் கோயிலில் சாமி காலடியில் வைச்சு வாங்கிட்டு வந்துடணும்.  முதல் பத்திரிகை எப்போவுமே நம்ம நண்பருக்குத் தான்.  அதுக்கப்புறமா குலதெய்வங்களுக்குப் பத்திரிகை ஒதுக்கியதும், அவரவர் குடும்ப வழக்கப்படியான ஆசாரியர்களுக்கு அனுப்பி வைக்கணும்.  இது ரொம்ப முக்கியம்.  ஏனெனில் அவங்க கிட்டே இருந்து பிரசாதம் வரும்.  இந்தப் பிரசாதங்களை ஓதி விட்டுக் கொடுத்து ஆசார்ய சம்பாவனையும் முடிஞ்சப்புறமாத் தான் கல்யாணத்திலே மொய்யே  கொடுக்க ஆரம்பிக்கணும். அதிலும் முதல் மொய் இரண்டுபேருடைய  தாய் மாமன்களுடையதாகவே இருக்கும்.

மாமாவுக்கு எனத் தனியாப் பஞ்சாதியே இருக்கு.  அதைச் சொல்லி மாமன் சீரைக் கொடுத்ததும் அத்தை சீர் கொடுக்கணும்.  இது இரண்டுக்கும் பின்னரே முன்னெல்லாம் வந்திருக்கிறவங்க கொடுப்பாங்க.  இப்போல்லாம் தாலி கட்டியானதுமே கல்யாணமே முடிஞ்சுட்டாப்போல் வாழ்த்துகள், கைகுலுக்கல்கள், பரிசுகள் கொடுப்பது என நடக்கிறது.  இதை எல்லாம் விரிவாய்ப் பார்ப்போம்.  இப்போ அடுத்து நாம் செய்ய வேண்டியது பந்தக்கால் முஹூர்த்தம். முஹூர்த்தக்கால் நடுவது என்றும் சொல்லுவார்கள். பெண்ணின் நக்ஷத்திரத்துக்கு ஏற்ற திருமண முஹூர்த்தம் பார்ப்பது போலவே இங்கேயும் பெண்ணின் நக்ஷத்திரத்துக்கு ஏற்றாற்போல் முஹூர்த்தக்கால் நடவும் நாள் பார்ப்பார்கள்.  அதிகாலையில் சூரிய உதயத்துக்குச் சற்று முன்னர் நடக்கும். அக்கம்பக்கம், சுற்றத்தாரை அழைத்து காவிப் பட்டை, சுண்ணாம்பு அடித்த மூங்கில் காலில் உச்சியில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் வைத்த மஞ்சள் நனைத்த துணியைக் கட்டி மாவிலைக் கொத்து செருகி, ஈசானிய மூலையில் குழி தோண்டுவார்கள்.

அதில் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் சுமங்கலிகளைக் கொண்டு பால் விடச் செய்து தானியங்களைப் போட்டு, காசுகளையும் போடுவார்கள். இதைத் தான் அரசாணிக்கால் நடுவது என்று சொல்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் அது திருமண தினத்தின் போது நடக்கும் எனத் தெரிய வருகிறது.  ஆகவே வேறாகவும் இருக்கலாம்.  பந்தக்கால் முஹூர்த்தத்துக்கும் புரோகிதர் வருவார்.  முன்பெல்லாம் குடும்ப புரோகிதர்கள் இருந்து வந்ததால் அவர்களே நாளைப் பார்த்துச் சொல்லிச் சரியான நேரத்துக்கு வந்து எல்லாரையும் ஒன்று சேர்த்து நடத்திக் கொடுப்பார்.  இப்போதெல்லாம் புரோகிதர்களுக்கு மிகவும் கிராக்கியாக ஆகிவிட்டது.  இம்மாதிரிச் சின்ன நிகழ்ச்சிகளுக்கெல்லாம் குடும்ப புரோகிதர் வர மாட்டார்.  தன்னுடைய உதவியாளர்களை அனுப்பி வைத்தால் அதிர்ஷ்டம்.  இல்லை எனில் நாமே பார்த்துக்கணும். ஒரு சில வீடுகளில் இந்த விஷயம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்கள் தலைமை ஏற்றுக் கொண்டு நடத்திக் கொடுப்பார்கள்.  பந்தல்காலை அனைவருமாகப் பிடித்துக் கொண்டு குழிக்குள்ளே இறக்குவார்கள். பின்னர் தேங்காய் உடைத்துக் கற்பூர ஆரத்தி எடுக்கப்படும்.

வந்திருக்கும் விருந்தினர்களுக்கு இனிப்பு, இட்லி, வடையாகக் காலை ஆகாரம் கொடுத்து அனுப்புவார்கள்.  அல்லது வடை, பாயசத்துடன் சாப்பாடு போட்டு அனுப்புவார்கள்.  இப்போதெல்லாம் சத்திரங்களிலேயே கல்யாணங்கள் நடப்பதால் இதைக் குறித்து யாருக்கும் எதுவும் தெரியறதில்லை. இதுக்கப்புறமா அந்தக் காலை அஸ்திவாரமா வைத்துக் கொண்டு மற்றக் கால்களை நட்டுப் பந்தலைப் போடுவார்கள்.  பந்தலின் மேற்கூரை விதானத்தில் வெள்ளை சில்க் துணியால் மூடி காகிதப் பூக்களாலும் மற்ற அலங்காரப் பொருட்களாலும் அலங்காரங்கள் செய்வார்கள்.  பந்தலின் நாற்புறமும் காற்று வர விட்டிருக்கும் இடைவெளிகளில் பனங்குருத்து, தென்னங்குருத்துக்களால் தோரணங்கள் கட்டித் தொங்க விடுவார்கள்.  வசதி உள்ளவர்கள் சீரியல் வண்ண விளக்குகளாலும் அலங்கரிப்பார்கள்.  இப்போது கல்யாண மண்டபங்களில் இவை எல்லாம் நிரந்தரமாய்ச் செய்யப்பட்டிருக்கிறது.  ஆனாலும் ஒவ்வொரு கல்யாணத்திலும் இவற்றை நாம் பயன்படுத்துவதற்காகத் தனியாகக் கணிசமானதொரு தொகை மண்டப உரிமையாளர்களால் வசூலிக்கப்படுகிறது.  அடுத்து சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை போன்றவற்றைப் பார்த்துட்டு உடனே சத்திரத்துக்குச் செல்லத் தயாராகுங்கள் எல்லோரும். 

28 comments:

  1. கொத்தோடு வாழைமரம் கொண்டு வந்து கட்டி, கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி!..........

    அழகான ஆனந்தமான பாடல் தலைப்புடன் அற்புதமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பந்தக்கால் நட்டாச்சு....விவரங்களுக்கு நன்றி..

    அடுத்தது சுமங்கலி பிரார்த்தனையா?...
    ரெடி.

    ReplyDelete
  3. சத்திரத்தில், ஸாரி.. இப்போ சத்திரம் என்று கூடச் சொல்லுவதில்லை! மண்டபத்தில் நடந்தாலும் பந்தக்கால் கொண்டுவந்து நடும் திருமணம் ஒன்றுக்குச் சமீபத்தில் கூடச் சென்றிருந்தேன். திரட்டுப்பாலா.... ஸ்....ஸ்....

    ReplyDelete
  4. //திவாஜி
    2:40 PM (32 minutes ago)

    to thamizhvaasal
    அதெல்லாம் ஒண்ணுமில்லை. வைதீகர்கள் எப்பவோ ஆரம்பிச்ச தமாஷ் இது. சில
    சப்தங்களுக்கும் கொடுக்கிற நபருக்கும் ஒரு சம்பந்தத்தை காட்டி தன்
    வித்வத்தை காட்ட ஆரம்பித்து இப்ப ஈ அடிச்சான் காப்பி ஆயிடுத்து என்று
    நினைக்கிறேன். மாமன் சீர் கொடுக்கச்சொல்லும் மாமா மாமா பஞ்சாதியின்
    அர்த்தத்துக்கும் சீர் கொடுப்பதற்கும் சம்பந்தமே கிடையாது. உண்மையில்
    ஏறுமாறாக இருக்கிறது. மா = வேண்டாம்!//

    மாமாக்களுக்குப் பஞ்சாதி சொல்லும் வழக்கம் எல்லாம் இல்லை என்றும் ஒரு சிலர் திடீரென ஏற்படுத்தியது வழக்கமாக மாறிவிட்டது என்றும் தம்பி திவா(திருமூர்த்தி வாசுதேவன்) சொல்கிறார். அவர் சொல்வது சரியாகத் தான் இருக்கும்.

    ReplyDelete
  5. அப்பாடா... கால் வாசி வேலை (பந்தக்கால் வரை) முடிந்து விட்டது... இப்பவே கண்ணை கட்டுதே...

    ReplyDelete
  6. சுத்தமாக அறியாத விஷயங்கள் நிறைய. பஞ்சாதி - என்ன பொருள்? ஒற்றைப்படை சுமங்கலிக் கணக்கு ஏன்?

    ஆமா.. அழகான ஆனந்தமான பாடல்னு சொல்றாரே வைகோ.. 'இம்மா நீள தலைப்பாக் கீதே கீதே?'னு* பார்த்தேன். இது சினிமாப் பாட்டா? நாட்டுப்பாடலா? விவரம் சொல்லுங்களேன்?

    *ஹிஹி.. என் தங்கை பெயர் கீதா. அவளைத் தேடி எங்க வீட்டுக்கு வந்த ஒரு பெண் "கீது கீதா?" என்று கேட்டார். அன்றிலிருந்துப் பிடித்துக்கொண்டோம்.

    ReplyDelete
  7. பந்தக்கால் நட்டச்சா? இப்போதெல்லாம் கல்யாண மனடபத்திலேயே இதையும் செய்து விடுகிறார்கள்.

    சம்பிரதாயங்களை விடாமல் செய்தால் சரி.

    நீங்கள் சொல்வதுபோல முதலில் மாமா, அப்புறம் அத்தை பிறகுதான் எல்லோருடைய ஆசீர்வாதமும் ஏற்றுக்கொள்ளப் படும். இப்போது எல்லோருக்கும் அவசரம்!

    ReplyDelete
  8. ஆஹா பந்தக்கால் நட்டாச்சு... இனிமே கல்யாணம் களைகட்டிடும்!

    ReplyDelete
  9. உண்மைதான். எல்லாம் விளம்பரம்.
    வீடியோவுக்கு வேலை.
    லக்ஷ்ம கட்டி வராகன் ஞாபகத்துக்கு வரது. ரொம்ப இனிமையா இருக்கு. கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுங்கோ. ஆடி வரதே.

    ReplyDelete
  10. வாங்க வைகோ, இந்தப் பாட்டெல்லாம் பாட இப்போ ஆட்களே இல்லை. நன்றி.

    ReplyDelete
  11. வாங்க கோவை2தில்லி, ரொம்ப நாளாச்சு பார்த்து! தயிர் எப்படி இருக்கு? :))))) சுமங்கலிப் பிரார்த்தனைக்குக் கட்டித் தயிரா வேணுமாக்கும். :)))

    ReplyDelete
  12. வாங்க ஸ்ரீராம், ஆமாம் சத்திரம்னு சொல்லுவது மதுரைப் பக்கத்து வழக்கமாக இருந்தது. அங்கே இப்போதெல்லாம் ஹால் என்று சொல்கின்றனர். சென்னையில் மண்டபம் தான். :)))) மண்டபத்திலும் பந்தக்கால் நட்டார்கள் என்றால் அவர்களை நமஸ்கரிக்கணும். ஆமாம், திரட்டுப்பால் வீட்டிலேயே செய்துடலாம்னு. இப்போ மாதிரி ஆவின் திரட்டுப் பால் இல்லை.:)))))

    ReplyDelete
  13. திவாஜி கூறிய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  14. வாங்க டிடி என்ன லேட்?? பந்தக்கால் முஹூர்த்தச் சாப்பாடு பலமா? :))))

    ReplyDelete
  15. அப்பாதுரை, ஒண்ணொண்ணாக விளக்குகிறேன், வரும் நாட்களில். பொதுவாக ஒற்றைப் படை தான் நல்லது என்பார்கள். ஏன் நல்லது என்பதற்குக் காரணம் சரியாகத் தீர்மானமாகத் தெரிந்து கொண்டு சொல்கிறேன். :))))

    ReplyDelete
  16. அப்பாதுரை, இந்தத் திருமணப்பதிவுகளிலேயே தென்னிந்தியத் திருமணப்பாடல்களிலே இந்தப் பாடல் இடம் பெற்றிருக்கிறதே. மறந்துட்டீங்க போல,

    "கெளரி கல்யாணமே வைபோகமே!" பாடலின் வரிகள் தான் இவை. இந்தப் பதிவுக்கு இவ்வரிகள் பொருத்தமாக இருந்ததால் இதைத் தேர்ந்தெடுத்தேன். முன்னெல்லாம் நீளத் தலைப்பை ப்ளாகர் ஏத்துக்காது. நிறையச் சிரமப் பட்டிருக்கேன். இப்போ கூகிளும், ப்ளாகரும் ஒண்ணானதும் ஏத்துக்குது. :)))))

    ReplyDelete
  17. வாங்க ரஞ்சனி, உங்களையும் பார்த்து நாளாச்சு. ஆமாம், பந்தக்கால் நட்டாச்சு. இனி ஒவ்வொண்ணா சூடு பிடிச்சுடும். :))))

    ReplyDelete
  18. வாங்க வெங்கட், கல்யாணத்திற்கு லீவு போட்டுட்டு வரீங்க தானே! :))))))

    ReplyDelete
  19. வாங்க வல்லி, ஆடி மாதம் கடந்து ஆவணியிலே தான் கல்யாணத்தை வைச்சுக்கணும். :))) ஆனிக்குள் முடியாது போலிருக்கே! :))))))

    ReplyDelete
  20. கௌரி கல்யாணம் வைபோகமே - அவ்ளோ தான் பாடலேனு நினைச்சுட்டிருந்தேன் இத்தனை நாளா!

    ReplyDelete
  21. சத்திரத்தில் கல்யாணம் நடந்தாலும் முகூர்த்தக்கால் நடும் பழக்கம் உண்டு.பெண் வீட்டில் பந்தக்கால் நடும் விழா அன்று மாப்பிள்ளை வீட்டில் தாலிக்கு பொன் உருக்குதல் விழா நடைபெறும்.பெண் வீட்டிலிருந்து ஒருவரோ அல்லது இருவரோ அன்று மாப்பிள்ளை வீட்டுக்கு போய் அந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
    அது போல் பந்தக்கால் நடும் விழாவிற்கு பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை விட்டிலிருந்து இருவர் கலந்து கொள்வார்கள்.
    தாலிகட்டும் அன்று காலை அரசாணிக்கால் நடும் விழா உண்டு.

    ReplyDelete
  22. அப்பாதுரை, முழுப்பாடலும் போட்டிருக்கேன் பாருங்க. :)))

    ReplyDelete
  23. வாங்க கோமதி அரசு, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டான தகவல்கள். மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  24. பந்தக்கால் எல்லாம் இப்பொழுதுதான் ஞாபகத்துக்கே வருகிறது.:) ஊரில் முன்பெல்லாம் செய்வார்கள்.

    ReplyDelete
  25. வாங்க மாதேவி நன்றிங்க.

    ReplyDelete
  26. அருமையான பகிர்வைப் பகிர்ந்திருக்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. அடுத்தது சுமங்கலி பிரார்த்தனையா?...சுவையான பகிர்வு!

    ReplyDelete
  28. இப்படிப்பட்ட விஷயங்களைஆண் பதிவர்கள் யாராலும் இவ்வளவு விபரமாய் எழுத முடியாது !பாராட்டுக்கள் !

    குடிகாரக் கணவனின் மனைவிகளுக்காக என் பதிவு ......http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
    பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்

    ReplyDelete