எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 15, 2014

திரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை? 2000-க்குப் பின்னரா? முன்னரா?

காதலர் தினம் வரதுக்குப் பத்து நாட்கள் முன்னரே மின் தமிழ்க்குழும நண்பர்களால் "காதல் ரதம்" என்னும் கவிதைத் தொடர் எழுதும் பதிவு ஆரம்பிக்கப் பட்டது.  அதிலே விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம் இன்றைய திரைப்படங்களின் காதல் பாடல்களுக்கும், பழைய காலப் படங்களின் பாடல்களுக்கும் உள்ள வேறுபாடுகள்.  யாரோ இதை ஒரு பட்டிமன்றமாக வைக்கலாம்னு சொல்ல உடனடியாக முடிவு செய்யப்பட்டு எங்கோ ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு காதல் ரதத்தை இழுப்பவங்களை வேடிக்கை பார்த்து ரசிச்சுட்டு இருந்த என்னை இந்தப் பட்டி மன்றத்தில் எழுதச் சொல்லிட்டு ஆசான்(ஜீவ்ஸ்) காணாமல் போயிட்டார்.  ஒரு நாளைக்கு மட்டும் அவர் எழுதினார். அதுக்கு பதிலும் வந்திருக்க மறுநாள் ஆசானும் எழுதலை; மத்தவங்களும் எழுதலை.  நடுவரும் நடுவிலே காணாமல் போயிட்டார்.  ஆனாலும் ஆசான் சொன்னதைத் தட்டாத மாணவியாக நான் மட்டுமே எழுதிட்டிருந்தேன்.  இன்னிக்கு முடிக்கணும்.  இன்னும்  முடிக்கலை! :) அதுக்குள்ளே அலுப்பு!  கீழே பழைய பாடல்களின் தொகுப்பைக் கூடியவரை படிக்கிறாப்போல் தொகுத்திருக்கேன்.


மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே,

கடைசி பெஞ்சில் நல்லா ஜாலியாக் குறட்டை விட்டுத் தூங்கிட்டிருந்த என்னை இங்கே இழுத்து வந்து பேச வைத்த ஆசானை வன்மையாகக் கண்டிக்கிறேன். சே, சே, ஆசானை வன்மையாகப் புகழ்கிறேன்.  இப்படியா என்னையும் இழுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பது என மனதுக்குள் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிக் கொண்டே) பெருமையுடன் இதை எழுதுகிறேன் என்பதைப் பெருமிதம் பொங்கச் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை நீஙக்ளெல்லாம் உணர்வீர்கள் என நான் அறிவேன் என்று சொல்லிக் கொள்கிறேன். (அப்பா, இப்போத் தான் பட்டிமன்றத்தில் கலந்துக்கிறாப்போல் ஒரு உணர்ச்சி)

எதிரணித் தலைவர், தலைவியரே!(எல்லாரையும் தலைவர், தலைவியர்னு சொல்லிட்டா பிரச்னையே இல்லை பாருங்க)

எங்க அணியில் யார் இருக்காங்கனே தெரியாமல்(என்னையும் ஆசானையும் மட்டும் தான் இங்கே பார்க்கிறேன்) இருக்கும் அனைவரையும் வணங்கிக்கறேன்.

ஒரு மாதிரியா ஆரம்பிச்சுட்டேன்!  இப்போ என்னோட வாதம் அந்தக்காலத் திரைப்படங்களின் காதல்பாடல்கள் உள்ளத்து உணர்வுகளை அப்படியே எடுத்துச் சொல்வதோடு அல்லாமல் நல்ல தமிழில் பொருள் புரிந்து பாடப்பட்டு(பின்னணி சப்தம் இல்லாமல்) கேட்பவர்கள் காதுகளுக்கும் இனிமையும், குளுமையுமாய் இருந்தன என்று சொல்லிக் கொண்டு கீழ்க்கண்ட வாதத்தை முன் வைக்கிறேன்.

இங்கே தன் காதலியை ஒரு ரோஜாமலராகக் கண்டு ஆனந்திக்கிறான் காதலன்.  அதுக்காக என்னவெல்லாம் சொல்கிறான் தெரியுமா?

ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக்கிளியே அழகிய ராணி

அப்படினு தன் காதலியை மலர், கிளினு எல்லாம் வர்ணித்த பின்னாடியே அவள் அருகில் வரட்டுமானு அநுமதி கேட்கிறான்.

அருகில் வரலாமா ஓய்ய்ய்

அப்படினு   நாசுக்காக் காதலி தன்னையும் காதலிக்கிறாள்னு தெரிஞ்சும் கேட்டு உறுதிப் படுத்திட்டு, காதல் உறுதியானதும் என்ன பாடறாங்கனு பார்க்கலாமா?

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்

னு சொல்லிட்டுப்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்,

எனச் சொல்கிறான் காதலன்.  கண்களாலேயே பேசிப் புரிய வைக்கிறாளாம் அந்தப் பெண்பாவை.  அதைத் தான் கடைசியிலே

"பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்!"

அப்படினு சொல்றார் போல. ஆனாலும் காதலிக்கு இன்னும் பயம் போகலையாம். சுத்தி முத்திப் பார்க்கறா போலிருக்கு.  அதைக் கண்ட காதலன் அவளிடம்

"அச்சமா நாணமா, இன்னும் வேண்டுமா?"

னு கேட்பதோடு இல்லாமல்,

"அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?"

 னு சொல்லி பயப்படாதேனு ஆறுதலும் தரார்.

ஆனால் அந்தக் காதலியோ இன்னமும் அக்கம்பக்கத்து பயம் போகாமல் காதலனிடம்

காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன் - உன்
மடி மீது தான் கண் மூடுவேன்

அப்படினு சொல்லிடறா. அதோட இல்லாமல் அவள் வளர்ந்தாலும் இன்னும் சிறு பிள்ளைதான் என்பதையும்,

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்

அப்படினு காதலனையே  எல்லாத்துக்கும் பொறுப்புனு சொல்லிடறா. காதலனைக் கண்டுவிட்டுத் திரும்பும் அவளை வழியில் தோழி பார்க்கிறாள். பயந்து கொண்டு சுத்தும் முத்தும் பார்த்தபடியே வரும் தன் சிநேகிதியிடம் தெரியும் மாறுதலைக் கண்டுவிட்டு அவள் திகைக்க சிநேகிதி அந்தப்பெண் தனக்குள்

"ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்?

னு முணுமுணுப்பதையும் கேட்கிறாள்.

அவள் தோழி  இவள்  அடியோடு மாறிப் போய் இருக்கிறதைப் பார்த்துட்டு

தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?


கேட்டுடறாளா.  இவளுக்கு என்ன சொல்றதுனு தெரியலை.

எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத்
தெரியாமலே நான் ஏன் மாறினேன்

அப்படினு தோழியையே கேட்டுடறாளா,

அவ உடனே
அடி போடி பைத்தியக்காரி நான் அறியாதவளா
சின்னஞ்சிறுசா

னு கேட்டுட்டு இவளுக்குக் காதல் நோய் பிடிச்சிருக்கிறதை உறுதியும் செய்துடறா. ஆனால் அந்தக் காதலிக்கோ

காதல் சிறகைக் காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா

என்றெல்லாம் ஆசை வரக் காதலனை நினைத்து ஏங்கிக் கொண்டே மறுபடியும் பாடுகிறாள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல,
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல

என்பதோடு

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

அப்படினு சொல்லித் தன் காதலனுக்குத் தன் காதலை உறுதியும் செய்து விடுகிறாள்.அப்புறம் என்ன ஆகிறது?


அப்புறமா என்ன ஆகிறதுனு அடுத்த பதிவிலே பார்க்கலாம்.  ஆனால் பாருங்க இந்தப் பாடல்கள் எல்லாம் எப்படித் தெள்ளத் தெளிவாகக் காதலன் நிலையை, காதலி நிலையை, தோழி செய்யும் உதவியைனு எடுத்துச் சொல்வதோடு எப்படிப் புரியுது எல்லாம்.  வார்த்தைகள் எல்லாம் அழுத்தம் திருத்தமாக வந்து விழுந்திருக்கின்றன பாருங்க. ஆகவே எதிரணித் தலைவர், தலைவியர், எங்க அணித் தலைவர், தலைவியர் எல்லாரும் ஒத்துக்கோங்க, பழைய திரைப்படக் காதல் பாடல்களே இனிய இசை, நல்ல தமிழ், நல்ல ராகங்கள், அழுத்தமான படப்பிடிப்புனு எல்லாமும் நிறைந்து இருக்கிறது எனச் சொல்லி முடிச்சுக்கறேன்.


பி.கு. நினைவிலே வந்த பாடல்களை மட்டும் பகிர்ந்திருக்கேன்.  இனி இதுக்குப் பொருத்தமா அடுத்தது போடணும்னா தேடிப் பார்க்கணும்.   ரெண்டு நாளைக்கு ஒளிஞ்சுக்கலாமானு நினைக்கிறேன்.  என்ன சொல்றீங்க?

9 comments:

 1. பாடல்களை நன்றாகத் தொகுத்திருக்கிறீர்கள். எனக்குப் பிடிக்காத பாடல்களும் லிஸ்ட்டில் இருக்கின்றன! ஹிஹி..

  ReplyDelete
 2. ஆகா...! அனைத்தும் அருமையான பாடல் அம்மா...

  நீங்கள் சொல்வது போல் எல்லாமே பழைய பாடலின் உள்ளது...! எதிரணியாக செயல்பட்டு புதுப்பாடல்களே என்று உங்களின் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடலாம் என்று உள்ளேன்...

  கவனம் : திண்டுக்கல் ஐ. லியோனி எங்க பக்கத்து வீடாக்கும்...! க்கும்... க்கும்... ஹிஹி...

  ReplyDelete
 3. கீதா மேடம்,
  நல்ல அருமையான பாடல்களின் தொகுப்பு. அதை வைத்து ஒரு அருமையான காதல் கதை பின்னுகிரீர்களே! தொடருங்கள்.....

  ReplyDelete
 4. எல்லாப்பாடல்களையும் கலந்து புதுக்கதை உருவாகிறது. களமும் காதலும் சரியாக இருந்தால் எத்தனையோ காதல் நிறைவேறும். வளமான பாடல்கள் பிறக்கும்.

  ReplyDelete
 5. எல்லாப் பாடல்களும் எனக்கும் பிடித்தது இல்லை ஶ்ரீராம். சும்மா பட்டிமன்றத்துக்காகத்தொகுத்தவையே! :))))

  ReplyDelete
 6. வாங்க டிடி, அங்கே குழுமத்திலும் எதிரணிக்காரங்க புதிய பாடல்களைத் திருக்குறளோடும், சங்கப்பாடல்களோடும் ஒப்பிட்டு எழுதிட்டு இருக்காங்க. இருந்தாங்க. :))))

  ReplyDelete
 7. வாங்க ராஜலக்ஷ்மி, சும்மா கதையெல்லாம் பின்னவில்லை. நம்ம தமிழ்த் தொலைக்காட்சி சானல்களின் நெடுந்தொடர் மாதிரி இஷ்டத்துக்கு இழுத்திருக்கேன். பாடல்களுக்கு ஏதோ ஒரு காரிய, காரணம் காட்டணுமே! :))))

  ReplyDelete
 8. வாங்க வல்லி, இன்றைய பதிவையும் படிச்சுட்டுச் சொல்லுங்க. :)

  ReplyDelete
 9. அட..... ஒரு பட்டிமன்றமே நடக்குதா...... தொடர்ந்து படிக்கிறேன்.....

  சொல்லி இருந்த பாடல்களில் சில பிடித்தவை! ரசித்தவை:)

  ReplyDelete