எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 24, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? -- 9

அலுவலகம் செல்லும் முன்னர் மருத்துவரைப் பார்க்கச் சென்றான்.  அங்கே மருத்துவரிடம் தன் கவலையைச் சொல்லித் தன்னை சோதனை செய்யவும் சொன்னான்.  அவன் கவலையைப் பார்த்துச் சிரித்தார் மருத்துவர்.  குடும்ப நண்பர் என்பதால் அவனைத் தவறாக நினைக்கவில்லை.  எல்லாப் பரிசோதனையும் பண்ணிவிட்டு மாலை வரச் சொன்னார்.  அலுவலகம் சென்றவனுக்கு வேலையே ஓடவில்லை. இதே நினைவாக இருந்தான்.  மாலை வீடு திரும்புகையில்  மருத்துவரிடம் சென்று தன் சோதனைகளுக்கான முடிவைத் தெரிந்து கொண்டு மனம் அமைதி அடைந்தான்.  பின் வீட்டுக்குச் சென்று இன்றாவது கதவை நன்கு தாளிட்டுத் தூங்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.  ஆனால்........

அவன் சாப்பிட அமர்ந்தான்.  சாந்தி அன்று அவனுக்குப் பிடித்த உணவைச் சமைத்து வைத்திருந்தாள்.  வீடே அமைதியாக இருந்தது.  குழந்தைகள் சப்தத்தைக் கூடக் காணோம்.  அங்குமிங்குமாய் வாரி இறைந்து கொண்டிருந்த விளையாட்டுச் சாமான்கள் எவையும் இல்லை.  என்ன ஆயிற்று? சமையலறையில் வேலைகளில் மும்முரமாக இருந்த சாந்தியைப் பார்த்தான்.
சப்தமிடாமல் பின்னால் சென்று அவளை அணைத்தான்.  அப்படியே திரும்பிப் பார்த்துச் சிரித்தாள் சாந்தி.

"குழந்தைகள் எங்கே?"

"ஒரு கார்ட்டூன் சினிமாவுக்குப் பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு சென்றிருக்கிறார்கள்."  என்றாள் சாந்தி.

"அது? உன் செல்லப் பிசாசு?"

"ஆஹா, அதைக் குறித்தும் கவலையா?  தூங்குகிறாள்.  இன்னும் ஒரு மணி நேரமாவது தூங்குவாள்.  குழந்தைகளும் அப்புறம் தான் வருவார்கள்.  அதற்குள்ளாக நீங்க சாப்பிடுங்க. " என்றாள்.

"வேண்டாம்.  என் குழந்தைங்க இல்லாமல் நான் சாப்பிட மாட்டேன்." என்றான் ரவி.  முகத்தை வலித்துக் கொண்டு போலியாகப் பழித்துக் காட்டினாள் சாந்தி.

"என்ன, இன்னிக்கு செம குஷி போலிருக்கு?" என்றான் ரவி.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. " என்ற சாந்திக்குச் சட்டெனக் கண்களில் நீர் கட்டியது.  "நம்ம இரு குழந்தைகளும் போனப்புறமா இன்னிக்குத் தான் ஏனோ மனம் கொஞ்சம் அமைதியா இருக்கு!" என்றாள்.

"அப்போ, ராத்திரிக்கு?" என்று ரவி கண்களைச் சிமிட்ட, திட்டவட்டமாக மறுத்தாள் சாந்தி.  "சின்னதுக்கு உடம்பு சரியாகட்டும். இன்னிக்குத் தானே 2 ஆவது நாள்.  ஐந்து நாளாவது ஆகும்னு டாக்டர் சொன்னார்." என்றாள்.

கொஞ்சம் ஏமாற்றம் தான் ரவிக்கு.  இருந்தாலும் சரியெனத் தலையை ஆட்டிவிட்டு அறைக்குச் சென்று உடைமாற்றினான்.  உடைமாற்றுகையில் அவன் கால்களைப் பிஞ்சுக்கைகள் கட்டிக் கொண்டன.  கீழே குனிந்து பார்த்தால் அந்த நாடோடியின் குழந்தை.  அவன் கால்களைக் கட்டிக் கொண்டு தூக்கச் சொல்லிக் கொஞ்சியது.  பற்களைக் கடித்துக் கொண்டே அதைத் தன் கால்களிலிருந்து நீக்கவேண்டிக் குனிந்தான் ரவி.  அவ்வளவு தான்! எப்படியோ அவன் தோள்களில் ஏறிவிட்டது. அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டது.  தன்னிருகால்களாலும் அவனை இறுக்கிக் கொண்டு விட்டது.

ரவி அதிர்ந்தே போனான்.  இது என்ன, குழந்தையா இல்லை பிசாசா?  இப்படி வலுவாக ஒரு குழந்தையால் கட்டிக்கொள்ள முடியுமா?  மெதுவாகவே அதைப் பிரிக்க முயன்றான் ரவி.  உடனே அது பெருங்குரலில் அழ ஆரம்பிக்க, சமையலறையில் இருந்து ஓடோடி வந்தாள் சாந்தி.  அவனைப் பார்த்துக் கோபமாக, "அடிச்சீங்களா, குழந்தையை?" என்று கேட்க, ரவிக்கு அவள் மேல் கோபம் வந்தது.

"முதல்லே இந்தப் பிசாசை என்னிடமிருந்து பிரிச்சு எடு!" என்றான் கோபமாக.

சாந்தி எவ்வளவோ முயன்றும் அந்தக் குழந்தை ஷோபா அவனை விடவே இல்லை.  இறுக்கிக் கட்டிக் கொண்டு சாந்திக்கு முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டது.  "சதிவேலை!  சதிவேலை!" என்று கத்தினான் ரவி.

"என்ன சொல்றீங்க? எட்டு மாசக் குழந்தை சதியா பண்ணும்?"  என்றபடி குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு அவனிடமிருந்து வாங்க முயன்றாள்.  ம்ஹூம்!  அதை மடியில் வைத்துக் கொண்டே ரவி சாப்பிட்டு முடிக்கும்வரை அது அவனை விடவே இல்லை.  ரவியின் மனம் கலக்கத்தில் ஆழ்ந்தது.  மெளனமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டுத் தன் அறைக்குச் சென்று கதவுகளைத் தாளிட்டுவிட்டுப் படுத்தான்.  தூக்கம் என்னமோ சரியாக வரவில்லை.  என்ன என்னமோ கனவுகள்!  காலை எழுந்திருக்கும்போதே லேசான தலைவலி இருந்தது.  ஜூரமும் இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது.

தன் பிரமை என அந்த எண்ணத்தை உதறிவிட்டு ரவி வழக்கம்போல் குளித்து அலுவலகம் சென்றான்.  அவனால் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. தொண்டை முழுங்கும்போது சிரமம் தெரிந்தது.  தோள்பட்டை தூக்க முடியவில்லை. முகம் எல்லாம் ஜிவு ஜிவு எனச் சிவந்திருந்தது.  அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு மருத்துவரைச் சென்று பார்த்தான் ரவி. அவன் சந்தேகத்தை அவரும் உறுதி செய்தார்.  ரவிக்கும் பொன்னுக்கு வீங்கி வந்துவிட்டது.  அவன் முகத்தில் தெரிந்த கவலையைப் பார்த்த மருத்துவர், "நல்லதே நினைப்போம்!" என்றார்.  

12 comments:

 1. ரவிக்கு என்ன ஆஆஆகப் போகுதோ...............?

  ReplyDelete
 2. குழந்தை திட்டமிட்டே சதி செய்கிறதோ? ரொம்பவே மிரட்டுது!

  ReplyDelete
 3. அந்தக் குட்டிப் பொண்ணு ரவியை வீங்க வைத்து விட்டாள்! அடுத்து ஏங்க வைத்து விடுவாளோ!

  ReplyDelete
 4. இரு பதிவுகள் விட்டுப் படிக்கிறேன். மூலக்கதையின் போக்குப் படியே செல்ல வேண்டும் என்றில்லை. கதையின் கருவை உள் வாங்கிக க்ற்பனை போகும் பாதையில் எழுதுங்கள். எழுதியதைப் படித்துப் பாருங்கள் தொய்வில்லாமல் போகிறதென்றால் தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. பெண்ணுக்கு வீங்கினான். பொன்னுக்குவீங்கி வந்து விட்டது.
  இது ஆண்டவன் கட்டளை !

  ReplyDelete
 6. வாங்க டிடி, வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 7. வாங்க சுரேஷ், மூலத்தில் இன்னும் பயங்கரமாக வர்ணனைகள் இருந்த நினைவு. பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே! கதைச் சுருக்கத்தை வைத்து நானாக விரிவு செய்கிறேன். :))))

  ReplyDelete
 8. வாங்க ஶ்ரீராம், போகப் போகப் பார்க்கலாம்.

  ReplyDelete
 9. வாங்க ஜிஎம்பி சார், அப்படித் தான் நடக்கிறது. கதைதான் என்னை நடத்துகிறது. அதன் போக்கிலே போய் எழுத வேண்டி இருக்கு.

  ReplyDelete
 10. அட!! "இ" சார், நீங்க இங்கே இந்தக் கதையைப் படிக்கிறீங்க?? ரொம்பவே நன்றி.

  ReplyDelete
 11. ஆஹா பரவி விட்டதா.... ம்ம்ம்... அடுத்து என்ன நடக்கப் போகிறது... தொடர்கிறேன்.

  ReplyDelete
 12. ரவிக்கும் வந்து விட்டதா?

  ReplyDelete