எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 16, 2014

மூன்றாம் முறையாக 2 ஆம் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்!

குழந்தை வரம் வேண்டித் தவிக்கும் ஒரு பெண்.  அதே சமயம் இன்னொருவரின் குழந்தைகளின் விஷமத்தை வெறுக்கவும் வெறுக்கிறாள்.  குழந்தைகளோடு அதிகம் பழகாதவளோ கதாநாயகி என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது இந்தக்கதை. இரண்டும் கெட்டான் குழந்தைகள் என்று சொல்லி விட்டுப் பின் அந்தக் குழந்தைகளின் விஷமங்களைப் பொறுக்க மனமில்லை எனில் எப்படி? இது கொஞ்சம் ஆச்சரியத்தை அளித்தாலும் பொதுவாக எல்லார் வீடுகளிலுமே அவரவர் வீட்டுக் குழந்தைகளின் விஷமம் என்றால் பொறுத்துக் கொள்வார்கள். அதுவே அடுத்தவர்கள் வீட்டுக் குழந்தைகள் எனில் கொஞ்சம் பொறுத்துக் கொள்வது சிரமம் தான்.  இங்கே கதாநாயகி வாய்விட்டு ஏதும் சொல்ல முடியாமல் தவிக்கிறாள்.

 இருதலைக்கொள்ளி எறும்பு போல் தவிக்கிறாள் ஏனெனில் இந்தக் குழந்தைகள் அவள் சிநேகிதியின் நாத்தனார் குழந்தைகளாகப் போய்விடுகின்றன. பிறந்தது முதல் பார்த்து வருகிறாள் என்பதோடு தங்களுக்கெல்லாம் ஒரு குழந்தையே பிறக்காத போது ரேவதியின் நாத்தனாருக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் என்பது உள்ளூர ஒரு பிரமிப்பாகவும் இருக்கிறது.  குழந்தைகள் வரும் சமயம் அவர்களுக்கு ஆகாரம் முதற்கொண்டு தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.  அதோடு இவளுக்குக் கல்யாணம் ஆனதே அந்த சிநேகிதியால் தான் என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது என்பதால் நம் கதாநாயகிக்கு இப்படி நடந்து கொள்வது அதற்கான நன்றிக்கடனோ எனவும் நினைக்க வைக்கிறது.

அந்த சிநேகிதி குழந்தைகளோடு வெகு நேரம் இங்கே கழிக்கிறாள். குழந்தைகள் பொருட்களை உடைப்பதும், புத்தகங்களைக் கிழிப்பதுமாக இருப்பதால் வந்து போன பின்னர் வீட்டைச் சுத்தம் செய்வதும் கஷ்டமாக ஆகிவிடுகிறது.  தனக்குக் குழந்தை பிறக்கவில்லையே என நினைத்தாலும் வேறோரு குழந்தை இப்படி எல்லாம் வந்து விஷமம் பண்ணுவதைப்பொறுக்கவும் முடியவில்லை.  அது தன் சிநேகிதியின் நாத்தனார் குழந்தைகள் என்பதால் வாயைத் திறக்கவும் முடியவில்லை.  ஒரு குழந்தைக்கே தவமிருக்கும் தங்களுக்கு (ஆம், அந்த சிநேகிதிக்கும் குழந்தை பிறக்கவில்லை.) இரட்டைக் குழந்தைகள் பிறந்த அந்த நாத்தனாரைப் பார்த்து உள்ளூர ஒரு விதப்பொறாமை என்று சொல்லலாமோ? மேலும் அக்கம்பக்கம் எல்லாம் இவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதால் அவரவருக்குத் தெரிந்த வைத்தியம், பிரார்த்தனைகள், பரிகாரங்கள் என்று சொல்லி மனதை நோகடிக்கின்றனர்..


அதிலும் கல்யாணம் ஆகி ஒரு வருடத்துக்கும் மேல் என்று ஆகிவிட்டால் கேட்கவே வேண்டாம்.  அந்தப்பெண் பரிகாரங்கள், பூஜைகள், கோயில்கள் விஜயம் என அனைவராலும் கட்டாயப்படுத்தப் படுவதோடு வளைகாப்புப் பெண்ணோடு மறுமணை என்ற பெயரில் வளை அடுக்கிக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுவாள். கல்லைக் குழந்தையாகப் பாவித்து அதற்குக் குளிப்பாட்டி, மையிட்டுப் பொட்டெழுதி, பாலூட்டிச் சீராட்டி இந்தக் கல்லைப் போல் என் வயிறும் இருக்கே, கடவுளே நீயும் கல்லைப் போல் இருக்கியே, எனக்காக மனமிரங்க மாட்டாயா? என்று மனதுக்குள் வேண்டிக்கொள்ள வேண்டும்.  குழந்தை பிறக்காத பெண்கள் தங்களுக்குள்ளாக மெளனமாக அழுவது மட்டும் வெளியே கேட்டால் உலகமே அதிரும்!  அத்தகைய பெரிய ஓசையாக இருக்கும்.


இதிலே ஒவ்வொரு முறையும் இந்தப்பரிகாரங்களுக்கு உட்படுவது என்னமோ பெண் தான்.  அந்தக் காலங்களில் வேண்டுமானால் ஆண்களில் மலட்டுத் தன்மை குறைவாக இருந்திருக்கலாம்.  ஆனால் தற்காலங்களில் உணவு முறை, சூழ்நிலை, பழக்கவழக்கங்கள், உடைகள் போன்றவற்றின் காரணமாக ஆண்களிலும் மலட்டுத் தன்மை அதிகரிக்கிறது.  என்ன உடைனு சொல்றேன்னு பார்க்கிறீங்களா?  இந்த உடை விஷயம் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது.  இறுக்கமான உடை அணியும் ஆண்களும், பெண்களும் இத்தகைய உடல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர் என்பது மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மை.  அதிலும் பெண்கள் இப்போது "லெகீஸ்" எனப்படும் ஒரு வகை இறுக்கமான உடையை அணிகின்றனர்.  அதைக் குறித்துப் பல மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துவிட்டார்கள்.  என்றாலும் நம் மக்கள் கேட்பதாக இல்லை. இதை எல்லாம் மீறி ஒருத்தருக்கு ஒரு வருஷத்துக்குள்ளோ, இரண்டு வருஷத்துக்குள்ளோ குழந்தை பிறந்தால் ஆச்சரியம் தான்.


ஆனால் இங்கே தோழிகள் இருவருக்குமே குழந்தைகள் இல்லை.  அதில் நம் கதாநாயகிக்குக் கொஞ்சம் ஆறுதல் தான். தனக்கு மட்டுமில்லாமல் தோழிக்கும் குழந்தை பிறக்கவில்லையே என ஒரு சின்ன ஆறுதல்.  ஆனால் அதிலும்  கொஞ்சம் மனம் சங்கடப்படும்படி ஒரு விஷயம்.  நம் கதாநாயகியின் கணவருக்கு  தான் திருமணம் செய்து கொள்வதாக இருந்த  இந்த ரேவதியைக் கண்டால் இப்போதும் ஒரு புல்லரிப்பு, பரவசம் ஏற்படுகிறது.  அதற்கு மேல் எதுவும் இல்லை தான்.  ஆனால் ஒரு பெண் எதையும் நுணுக்கமாகக் கவனிப்பாள்.  அதிலும் தன் கணவன் தன்னைத் தவிர மற்றொரு பெண்ணைப் பார்க்கையில் எம்மாதிரி மனநிலையில் பார்க்கிறான் என்பதை அவளால் சரியாகக் கணிக்க முடியும்.  அப்படியே இங்கேயும் கணிக்கிறாள். ஆனாலும் அவளால் எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை.  தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்னும் தாழ்வு மனப்பான்மை அவளை அடங்கிப் போகச் செய்கிறதோ!

அவள் சிநேகிதியிடமும் இந்தக் குழந்தைகளைக் கூட்டி வராதே, என்னால் அப்புறம் அதுங்க செய்யும் விஷமக் காரியங்களின் விளைவுகளைச் சரி செய்ய முடியவில்லை என்று சொல்ல முடியவில்லை. அது தான் ஏன்? தோழியிடம் மனம் விட்டுப் பேசத் தனிமை தான் வேண்டும். அது இல்லாமல் தோழி குழந்தைகளோடு வரட்டும் என அனுமதிப்பது ஏன்?  கொஞ்ச நாட்கள் தான் என்பதாலோ? இருக்கலாம். ரேவதியின் நாத்தனார் நிரந்தரமாக இங்கே இருக்கப் போகிறவள் இல்லை;  அதனால் கடுமையான வார்த்தைப் பிரயோகம் வேண்டாம்னு இருக்கலாம். அதே சமயம் தோழியோடு மனம் விட்டுப் பேசியும் ஆகணும். ஆகவே தனக்குப் பிடித்த நெடுந்தொடர் முடிந்ததும் வரச் சொல்லுகிறாள்.

அப்படித் தோழி ஒரு நாள் வருகையில் ஒரு குழந்தை வீட்டிலேயே தூங்க இன்னொன்றை மட்டும் அழைத்துவர, அதுவும் இந்த வீட்டில் தூங்கி விடுகிறது.  சரினு நிம்மதியாப் பேசிக் கொண்டிருந்த தோழிகளுக்கு அதிர்ச்சியாக அந்தக் குழந்தை அறுபதாயிரம் ரூபாய் மடிக்கணினியைக் கீழே தள்ளிவிடுகிறது. சின்னக் குழந்தைக்கு என்ன தெரியும்!  அது பாட்டுக்குச் சிரிக்கிறது எவ்விதக் கல்மிஷமும் இல்லாமல். ஆனால் குழந்தையை அழைத்து வந்த ரேவதியும் தனக்குப் பொறுப்பே இல்லை என்பது போல் உடனே கிளம்பி விடுகிறாள்.  கணினி வேலை செய்யுமோ, செய்யாதோ, கணவர் வந்தால் என்ன பதில் சொல்வது! நம்மைக் கூட இதில் எதுவும் செய்ய விடமாட்டாரே என்றெல்லாம் கலங்கிப் போய் இருக்கும் கதாநாயகி  கணவர் வந்ததும் மெல்ல மெல்ல விஷயத்தைச் சொல்கிறாள்.

ஏற்கெனவே அந்தக் குழந்தைகள் செய்த விஷமங்களை எல்லாம் அடுக்கி, இன்றைய புதிய விஷமத்தைச் சொல்வதற்குள்ளாக அவள் மேல் நெருப்பு வந்து விழுகிறது.  ஆம், அவள் கணவரே அவளைப் பார்த்துப் பொருட்களைக் குறித்துக் கவலைப்படும் உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லை என்று சொல்லி விடுகிறார்.  இது முழுக்க ஆணாதிக்கம் சார்ந்தது; சுயநலம் சார்ந்தது.  குழந்தை பிறப்பது என்பதற்குப் பெண்கள் மட்டுமே பொறுப்பு என்பது போலவும், தன் மேல் எவ்விதத் தவறும் இல்லை என்பது போலவும் சொல்லி விடுகிறார்.  என்னதான் பின்னால் தப்பை உணர்ந்து தலையை அடித்துக் கொண்டாலும் கீழே கொட்டிய பொருட்களை அள்ளலாமே தவிர, வார்த்தைகளை அள்ள முடியுமா?  திரும்ப வாங்க முடியுமா? சொன்னது சொன்னது தானே! அது என்னமோ ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறக்கவில்லை என்றால் ஒட்டுமொத்தமாகப் பெண்ணினத்தை மட்டுமே குறை சொல்வது வழக்கமாகி வருகிறது.  வழக்கமாக இருக்கிறது. ஆணின் மேலும் தப்பு இருக்கலாம் என்றே அந்த ஆண்களுக்குக் கூடத் தோன்றுவது இல்லை. அதே போல் கதாநாயகியின் புகுந்த வீட்டுக்காரர்கள் ஒரு கத்தரிக்காயை வைத்துக் கொண்டு அதில் கூடப் புழு, பூச்சி இருப்பதாகவும், இவள் வயிற்றில் ஒன்றுமே வரவில்லை என்றும் ஏளனம் செய்வதைக் கண்டிருக்கிறார். இது அவருக்கும் தெரிந்தது தான். மனைவிக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவர் மனைவியைப் புண் படுத்துகிறார்.  சொல்லக் கூடாத வார்த்தைகளைச் சொல்கிறார்.

பின்னர் ஏதுமே நடக்காதது போல் கணினியை எடுத்து வைத்துக் கொண்டு அதைப் பரிசோதனை செய்துவிட்டு கணினி சரியாக இருக்கு என்று இவ்வளவு நேரம் கவலைப்பட்ட மனைவியிடம் சொல்லாமல் நேரே அந்த ரேவதிக்குத் தொலைபேசிச் சொல்லி மகிழ்கிறார். இப்போதும் மனைவியையோ அவள் கவலையையோ ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.  தான் மணக்க இருந்து ஜாதகக் கோளாறினால் மணக்க இயலாத ரேவதியிடம் பேசுவதில் தான் அவர் மனம் லயிக்கிறது. அதில் ஒரு அல்ப சந்தோஷம்.  குத்துவிளக்கை ஒத்த மனைவி வீட்டில் தவமாய்த் தவமிருக்க, அவளை விட்டு இன்னொருத்தியிடம் பேசி மன மகிழ்ச்சி கொள்ளும் அவலம்.  ஆண்களுக்கே உரிய அலட்சியம் என்று சொல்லலாமா?

மனைவி எப்படி ஆனாலும் தனக்கு உட்பட்டவள், தான் என்ன சொன்னாலும், செய்தாலும் கேட்கக் கடமைப்பட்டவள் என்னும் எண்ணம் எனலாமா? முழு ஆணாதிக்கம் எனலாமா? இத்தனை நேரம் தவியாய்த் தவித்த மனைவியிடம் கணினி சரியாக இருக்கிறது என்பதைச் சொல்லக் கூட முடியாமல் மற்றொருத்தியிடம் பேசிச் சிரிக்கும் மனதை என்ன என்பது! இங்கே நம் கதாநாயகி சுக்குச் சுக்காக உடைந்து நொறுங்கிப் போகிறாள். விசாரிக்க வரும் மனைவியின் மனநிலைமை புரியாமல் மடிக்கணினிக்கு எவ்விதக் கீறலும் இல்லை என்றும் சொல்கிறார். ஆனால் இங்கே மனைவியின் மனமோ கீறல்களும், காயங்களுமாக ரணமாகிக் கிடக்கிறதே!  அது எப்போ சரியாகும்? இந்தக் கேள்விக்கு பதிலை நம்மையே ஊகிக்கும்படி விட்டு விட்டார் ஆசிரியர்.

இந்த நிலையைச் சகித்துக் கொண்டு வாழப் பழகுவாள் அந்தக் கதாநாயகி. அவளுக்குத் தான் எதையும் தாங்கும் இதயம் ஆயிற்றே!தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் திரு வைகோ அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. விமரிசனம் அனுப்பக் கொஞ்சம் தாமதம் ஆனாலும் உடனே நினைவூட்டுவார். அவருடைய தொடர்ந்த சலிக்காத ஊக்குவிப்பு இல்லை எனில் நான் இதில் பங்கேற்றிருப்பேனா என்பது சந்தேகமே! :))))

17 comments:

 1. வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 2. தங்களின் தகவலுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/All-is-well.html

  ReplyDelete
 3. பரிசுகள் பெற்றதற்கு இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. மகிழ்ச்சிப் பகிர்வுக்கு நன்றிகள். மேலும் மேலும் பல்வேறு வெற்றிகளும் பரிசுகளும் பெற்றிட வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் கீதா மேடம்.

  ReplyDelete
 6. நெஞ்சைத் தொடும் விமரிசனம்!... பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அம்மா!

  ReplyDelete
 7. எந்தக் கதைக்கான விமரிசனமோ அந்தக் கதையின் சுட்டியும் கொடுத்திருக்கலாமோ?.. அப்போத் தானே வாசிப்பவர்களுக்கும் விமரிசனத்தின் அருமை தெரியும்?..

  ReplyDelete
 8. இந்த நிலையைச் சகித்துக் கொண்டு வாழப் பழகுவாள் அந்தக் கதாநாயகி. அவளுக்குத் தான் எதையும் தாங்கும் இதயம் ஆயிற்றே! இதுதான் யதார்த்தம்.நல்ல விமர்சனம் கீதா. வாழ்த்துகள் மா.

  ReplyDelete
 9. வாங்க டிடி நன்றிப்பா. உங்க சுட்டியைக் கட்டாயமா வந்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 10. நன்றி ராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 11. நன்றி வைகோ சார்.

  ReplyDelete
 12. நன்றி ராஜலக்ஷ்மி.

  ReplyDelete
 13. நன்றி பார்வதி. நெஞ்சை எல்லாம் தொடலை. கொஞ்சம் ஓவரா இருக்கோ? :)))))))))) (உள உளாக்கட்டிக்குச் சொல்லலை, நிஜம்மாவே ஓவரா இருக்காப்போல் ஒரு எண்ணம்) :))))))

  ReplyDelete
 14. நன்றி ஜீவி சார், அநேகமா எல்லாருமே வைகோ சாருக்குத் தெரிஞ்சவங்க. அங்கே படிக்கிறாங்க. நான் சும்மா ஒரு நன்றி உணர்விலும், சுய தம்பட்டம் அடிச்சுக்கவும் தானே பதிவு போடறேன். அவரோட உழைப்புக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. :))))

  ReplyDelete
 15. ஆமாம் வல்லி, பெரும்பாலான பெண்கள் இப்படித் தான் ஊமையாக அழுது கொண்டு வெளிக்குச் சிரித்து வாழ்கிறார்கள். அது தெரிஞ்சு தான் எழுதினேன். :(

  ReplyDelete
 16. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.... அவர் தளத்திலேயே படித்து விட்டேன்.....

  ReplyDelete
 17. வாங்க வெங்கட், எல்லாருமே படிச்சிருப்பாங்க தான். :))))

  ReplyDelete