எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 18, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? ---6

இங்கே

மேற்கண்ட சுட்டியில் கடைசியாக எழுதினதைப் படிக்கலாம்.  இனி தொடர்ச்சி!

அக்கம்பக்கம் எல்லாம் கசமுசவென்ற பேச்சு.  அடுத்தடுத்து இரு குழந்தைகள், அதுவும் ஆரோக்கியமாகவே இருந்த குழந்தைகள் இறந்திருக்கின்றன.  யார் காரணம்? அவங்களுக்குள் ஏதோ சண்டையாமே?  அதனால் ஒருவர் மேல் இன்னொருவர் கொண்டிருக்கும் ஆத்திரத்தைக் குழந்தைகளிடம் காட்டியதில் இப்படி ஆயிடுச்சோ? இல்லைனா அந்த வீட்டில் ஏதோ  காத்து, கருப்பு நடமாட்டம் இருக்குமோ?  நம்ம குழந்தைகளை அங்கே அனுப்பக் கூடாது.  துக்கம் விசாரிக்க வந்தவங்க அவங்களுக்குள்ளே பேசிக் கொண்டது இருவருக்குமே புரிந்தது.  ஆனால் இது தற்செயல் தான் என எப்படிச் சொல்வது?  பாலு தொட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டான்.  இவன் ஏதோ மாத்திரையை மாத்திச் சாப்பிட்டிருக்கான்.  கிட்ட இருந்து கொடுக்காதது என் தப்பு.  சாந்தி நினைத்துக் கொண்டாள்.  அவளுக்கும் மனம் சமாதானம் ஆகலை என்றாலும் மற்றக் குழந்தைகள் இருக்கே.  அதுவும் புதிதாய் ஒரு பெண் குழந்தை வேறே.  சின்னக் குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகலை. அம்மாக்காரி வேறே விட்டுட்டுப் போயிட்டா!  நாம் தானே பார்த்துக்கணும்!

ரவிக்கோ நெஞ்சு கொதித்தது.  எங்கிருந்த வந்த ஒரு பிசாசுக் குழந்தைக்காக என் குழந்தைகள் ஒவ்வொன்றாக பலி ஆகின்றன.  இந்த சாந்தி ஏன் புரிந்து கொள்ளவே இல்லை? அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது!  ரவிக்குத் தலையே சுற்றியது.  அதற்குள்ளாக ஒருத்தர் வீட்டிலே மந்திர ஜபம் செய்தால் கெட்ட ஆவிகளோ, துர் தேவதைகள் நடமாட்டமோ இருந்தால் சரியாகும் என்று சொன்னார்.  அவர் நம்ம நல்லதுக்குத் தான் சொல்கிறார் என ரவிக்குப் புரிந்தது.  ஆனால் அந்தக் கெட்ட ஆவி, துர்தேவதை எல்லாமும் இப்போப் புதுசா வந்திருக்கும் ஷோபா தானே!  சாந்தி மட்டும் அவளை அநாதை விடுதியில் சேர்க்கட்டும்.  இந்த இரு குழந்தைகளையாவது ஒழுங்காக வளர்க்கலாம்.  இவங்களுக்காவது ஆபத்து வராமல் இருக்கணும்.  ரவிக்கு அப்போது இருந்த மனநிலையில் அவன் அந்த நண்பர் சொன்னதைக் கேட்டுக் கொண்டான்.  சாந்தியிடமும் கலந்து ஆலோசித்துக் கொண்டு வீட்டில் மந்திர ஜபம் செய்ய ஏற்பாடுகள் ஆயிற்று.

வந்திருந்தவர் மஹாப் பெரிய மந்திர சித்தி உள்ள பெரியவர் என அனைவருமே ஒருமனதாகச் சொன்னார்கள்.  அவர் ஜபம் முடித்ததும் ரவி அவரிடம் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்லிப் பேசினான்.  வீட்டில் நடந்த விஷயங்களை விவரித்தான்.  புதிதாக வந்த குழந்தையைப் பற்றியும், அதன் பார்வையையும், அந்தக் குழந்தையால் தான் இந்த விபத்துக்கள் என்றும் தன் கடைசிக் குழந்தையைத் தொட்டிலில் இருந்து அந்தக் குழந்தைதான் தள்ளி விட்டிருக்க வேண்டும் என்றும், பெரிய பையனை மாத்திரையை மாற்றி எடுக்க வைத்ததும் அந்தப் பெண்ணின் அந்தப் பார்வையால் தான் எனவும் எடுத்துச் சொன்னான்.  பெரியவர் அனைத்தையும் சிரித்த வண்ணம் கேட்டார்.  குழந்தையைப் பார்க்க வேண்டும் என்றார்.  ரவிக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது.  சாந்தியிடம் பெரியவர் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று சொல்வதைச் சொல்லிக் குழந்தையை எடுத்துவரச் சொன்னான்.  அவள் அசந்து தூங்குவதாகவும், தன்னால் இப்போது குழந்தையைத் தொந்திரவு செய்ய முடியாது என்றும் சாந்தி சொல்ல, ரவி கோபமாக அவளை முறைத்துவிட்டு, தானே பெரியவரைத் தொட்டிலருகே அழைத்துச் சென்றான்.  குழந்தை நன்கு தூங்கிக் கொண்டிருந்தது.

தான் தூக்கினால் அந்தக் குழந்தைக்குப் பிடிக்காது எனச் சொல்லியவண்ணம் ரவி அதைத் தூக்கப் போனான்.  குழந்தை தொட்டதும் கண் திறந்து பார்த்து மோகனமாய்ச் சிரித்தது.  அதன் கண்கள் சாதாரணமாகவே இருந்தன.  ரவி எப்போதும் பார்க்கும் சிவந்த கல்லைப் போன்ற மணிகளையோ, கோபத்தின் கொடூரமோ கண்களில் சிறிதும் தெரியவில்லை.  அதற்குள்ளாக சாந்தி அங்கே வந்து, பாருங்க, இந்தக் குழந்தையைப் பாருங்க, என் கண்ணின் மணியைப் பாருங்க.  இந்தக் குழந்தை வந்ததில் இருந்து நான் மாறிடுவேன்னு ரவிக்கு உள்ளூரப் பொறாமை.  அதனால் இப்படி எல்லாம் இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்கிறார்." என்று சொல்லிய வண்ணம் குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டாள்.  சற்று நேரம் பெரியவருடன் ரவி நின்று பார்த்தும் குழந்தையிடம் எவ்வித மாறுதலும் இல்லை.  ரவி குழந்தையை அதன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தான்.  சாந்தியும் குழந்தையை அவன் பக்கம் திருப்பினாள்.  ஒரு கணத்துக்கும் குறைவான நேரம் அந்தக் குழந்தை ரவியைப் பார்த்தபோது அவன் நெஞ்சில் என்னிடமா மோதுகிறாய்? என அந்தக் குழந்தை கேட்பது போல் தெரிந்தது. பெரியவரைப் பிடித்து உலுக்கினான்.  "பாருங்கள், இப்போது, அது என்னைப் பார்க்கும் பார்வையைப் பாருங்கள்." என்று உலுக்கினவனுக்கு அதிர்ச்சி.  குழந்தை அவனையும் பார்த்து மோகனச் சிரிப்புச் சிரித்தது.  தன்னைத் தூக்கிக் கொள்ளச் சொல்லிக் கை, கால்களை உதைத்துக் கொண்டு சிரித்தது. செல்லமாய்ச் சிணுங்கியது.

அந்தக் கண்கள்!  அவை கண்களா இல்லை பளிங்குக் கற்களா? ஒரு நேரம் உணர்ச்சி மிகுந்த பார்வை, இன்னொரு நேரம் ஆணையிடும் பார்வை, இன்னொரு நேரம் கொடூரப் பார்வை, இன்னொரு நேரம் குழந்தைப் பார்வை. இப்படி எல்லாம் வித்தியாசமாகப் பார்க்கிறதே!  ரவிக்கு எப்படியானும் அந்தக் குழந்தையை யாரிடமாவது கொடுத்தால் போதும்.  இருக்கும் ஒரு மகனையும், ஒரு மகளையுமாவது கவனமாகக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் தலை தூக்கியது.  சாந்தியைப் பார்த்துச் சொல்லத் தொடங்குகையில் குழந்தை களுக்கெனச் சிரிக்க அதை அருவருப்புடன் பார்த்தான்.  அப்போது அது அவனைப் பார்த்த பார்வை.  அவன் என்ன நினைக்கிறான் என்பதை அந்தக் குழந்தை புரிந்து கொண்டு விட்டது.  அது புரிந்து கொண்டிருக்கிறது என்பதை ரவியும் புரிந்து கொண்டான்.  இருவருக்கும் மட்டுமே தெரிந்த இந்த விஷயத்தை சாந்தியிடம் எப்படியாவது சொல்ல வேண்டும்  என ரவி துடித்தான்.

ஆனால் சாந்தியோ அவனைக் கோபத்தோடு பார்த்தாள். ஒரு பச்சைக் குழந்தையை இப்படிக் குற்றம் சொல்கிறாரே.  நம் குழந்தைகள் இறந்துவிட்டனதான்.  இல்லை எனவில்லை.  அதற்காக அந்தப் பழியை இந்தக் குழந்தையின் தலை மீதா போடுவது! சாந்தி கோபத்துடன் குழந்தையை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.  ரவி செயலற்று நின்றான்.  பெரியவர் அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு இந்த மந்திர ஜபத்தின் மூலம் நல்லதே நடக்கப் பிரார்த்திக்க்றேன் எனப் பொதுவாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

ரவிக்கு அந்தக் குழந்தையின் பார்வையே அவனைச் சுற்றிச் சுற்றி வருவது போல் இருந்தது.  எவ்வளவு அர்த்தங்கள் அந்தப் பார்வையிலே!  இரு குழந்தைகளையும் எப்படிக் காப்பாற்றுவது?  ரவி தலையைப் பிய்த்துக் கொண்டு யோசித்தான். 

12 comments:

 1. அப்போ அடுத்தது ரவிதான்!

  ReplyDelete
 2. இது எப்போதிலிருந்து...நீங்களும் நீலன் கதை எழுதறீங்களா.பயங்கரமாக இருக்கிறதே.

  ReplyDelete
 3. "ஏன் இப்படி நடக்கிறது...?" என்று நாங்களும் தலையைப் பிய்த்துக் கொண்டு....

  ReplyDelete

 4. தொடர்கிறேன்

  ReplyDelete
 5. ஶ்ரீராம், அப்படிங்கறீங்க???????

  ReplyDelete
 6. நீங்க வேறே வல்லி, இது ஏற்கெனவே எழுதி நீங்க படிச்சுப் பின்னூட்டமும் போட்டது தான். கொஞ்சம் விவரிச்சு எழுதறேன். :))))

  ReplyDelete
 7. வாங்க டிடி, ஆமா இல்ல?

  ReplyDelete
 8. வாங்க ஜிஎம்பி சார், நன்றி.

  ReplyDelete
 9. திக் திக் உணர்வுடன் தொடர்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 10. நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 11. அடுத்தது என்ன நடக்கப்போகிறதோ என்ற எண்ணங்களோடு.... தொடர்கிறேன்.

  ReplyDelete
 12. வாங்க வெங்கட், தொடருங்கள்.

  ReplyDelete