எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 19, 2015

பயணங்கள் முடிவதில்லை! 14

கோவிலுக்கு நாங்கள் சென்றதைப் பற்றிச் சொல்லும் முன்னர் கோயிலைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.  முக்கியமாக இந்தக் கோயிலின் அறநிலையத் துறை ஊழியர் மிகவும் உதவிகரமாக இருந்தார். தேவையான தகவல்களை அளித்ததோடு கூடியவரையும் அதிகப் பணம் செலவு செய்யாமல் இருக்கும்படியான தங்குமிடங்கள், கோயிலின் வழிபாட்டு நியதிகள் ஆகியவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறினார். முதலில் அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம். இப்போது கோயிலின் வரலாறும் மற்றத் தகவல்களும் பின்வருமாறு::

108 திவ்ய தேசங்களில் இது 96 வது திவ்யதேசம் என்கின்றனர். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். பல நூற்றாண்டுகளாகப் பெருமாள் இங்கே ஆதி ஜகந்நாதர் வடிவில் காட்சி அளிக்கிறார் என்றும் தசரதச் சக்கரவர்த்தி இந்தப் பெருமாளைத் தரிசித்துப் பின்னரே புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பாயசம் கிடைக்கப் பெற்று ஶ்ரீராமரும், லக்ஷ்மண, பரத, சத்ருக்கனர்கள் பிறந்தார்கள் என்றும் சொல்கின்றனர்.  ஆகவே இந்தக் கோயிலில் தினமும் பாயசம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அறநிலையத் துறை அலுவலகத்தில் பாயசப் பிரசாதத்துக்கு 50 ரூ கட்ட வேண்டுமோ என நினைத்தோம்.  ஆனால் அறநிலையத் துறை ஊழியர் மடைப்பள்ளியில் பணத்தை நேரிலே கொடுத்து பாயசம் வேண்டும் என முன்பதிவு செய்யச் சொன்னார். மற்றபடி குங்கும அர்ச்சனை செய்கின்றனர். அதற்கு அர்ச்சனை டிக்கெட் வாங்கிக் கொண்டு செய்து கொள்ளலாம்.


இப்போது தலபுராணம்: ஆதியில் படைப்புத் தொழிலைப் பரம்பொருளே செய்து வந்ததாகவும் பின்னரே பிரம்மாவை சிருஷ்டித்ததாகவும் ஐதீகம். அதன்படி பிரம்மா நவபிரஜாபதிகள், இந்திரன் ஆகியோர் பரம்பொருளால் தோற்றுவிக்கப்பட்டனர். பிரம்மனிடம் சிருஷ்டித் தொழில் ஒப்படைக்கப்பட, அதற்காகத்  தெற்கு நோக்கி வந்த பிரம்மாவுக்கு ஜோதி ஒன்று தோன்றி மறைந்தது.  ஜோதி மறைந்த இடத்துக்கு வந்து ஜோதியின் ரகசியம் என்ன என்று விசாரித்து அறிந்தார் பிரம்மா. அதுவே போத ஸ்வரூபமான போதிமரம் எனப்படும் அரசமரத்தடியில் தங்கிய ஆதிஜகந்நாதன் ஆகும்.

72 சதுர் யுகங்களுக்கு முன்னர் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் இங்கே தவம் செய்ய வந்தபோது இது தர்ப்பாரண்யம் என அழைக்கப்பட்டிருக்கிறது.  தர்ப்பைப் புற்கள் நிரம்பிய திருப்புல்லாணிக் காட்டில் ஆதிப் பரம்பொருளை வேண்டி கடும் தவம் இருந்தனர் முனிவர்கள்.  பெருமான் அவர்களுக்கு அரசமர ரூபத்தில் காட்சி அளித்தார். அதைக் கண்டு மகிழ்ந்தாலும் பெருமாளின் சுயரூபத்தையும் தரிசிக்க ஆசைப்பட்ட ரிஷிகளுக்கு ஆதிஜகந்நாதராகப் பெருமாள் காட்சி அளித்தார். ஆரம்பத்தில் மூலவர் மட்டுமே ஆதிஜகந்நாதராக இருந்த இந்தக் கோயிலில் பின்னாட்களிலேயே தாயாருக்கு சந்நிதி ஏற்பட்டது.  பத்மாசனித் தாயார் என்னும் பெயரில் தாயார் காட்சி அளிக்கிறாள். தசரதன் இங்கே தான் பெருமாளின் அனுகிரஹத்தால் புத்திர பாக்கிய மூல மந்திர உபதேசம் பெற்று ஶ்ரீராமர் உட்பட நான்கு மகன்களைப் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.

விமானம் கல்யாண விமானம். உற்சவர் ஶ்ரீகல்யாண ஜகந்நாதர், தாயார் கல்யாணவல்லி. இதைத் தவிரவும் இந்த ஊர் பெருமை பெற்றதன் காரணம் ஶ்ரீராமன் சீதையைத் தேடிக் கொண்டு தெற்கே வந்தபோது இலங்கையை அடைய வேண்டி சமுத்திரத்தைத் தாண்ட வேண்டும்.  அதன் பொருட்டுக் கடலரசனை இங்கே தான் ஶ்ரீராமர் வேண்டினார். அவர் தர்ப்பைப்புற்களால் ஆன படுக்கையில் படுத்து தர்ப்பசயனம் மேற்கொண்டு மூன்று நாட்கள் கடலரசனின் உத்தரவுக்குக் காத்திருந்தார். இலங்கை செல்லப் பாலம் இங்கிருந்தே அமைத்ததால் இந்தத் தலம் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலம். இங்குள்ள சேது பாலம் குறித்து ஆண்டாள், திருமழிசையாழ்வார் மற்றும் குலசேகராழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஒரிசாவிலுள்ள புரி ஜகந்நாதர் பாதி அளவே காட்சி தருவாராம்.  ஆனால் இங்கேயோ ஆதி ஜகந்நாதர் முழுமையாகக் காட்சி தருவதால் இதை தக்ஷிண ஜகந்நாதம் என்றும் அழைக்கின்றனர். இங்கே ஆதி ஜகந்நாதர் அமர்ந்த கோலத்திலும்,  தர்ப்ப சயன ராமர் கிடந்த கோலத்திலும், பட்டாபி ராமர் நின்ற கோலத்திலும்.காட்சி தருவதோடு தொன்மையான அரசமரப்பெருமாளும் காட்சி அளிக்கிறார். இங்குள்ள நாகலிங்கத்தை தசரதன் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லுகின்றனர். குழந்தைப் பேறு வேண்டி வரும் தம்பதியர் இந்த நாகராஜாவுக்கு வழிபாடுகள் செய்கின்றனர்.  சேதுவில் நீராடிய பின்னர் இங்கு வந்து நாகர் சிலைக்கு வழிபாடு செய்து உபவாசம் இருந்து கோயிலில் ஓர் இரவு தங்கி மறுநாள் மீண்டும் சேதுவில் குளித்து நாகப் பிரதிஷ்டை, மற்றும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து அதன் பிரசாதமாகப் பால் பாயசம் அருந்த வேண்டும் என்பது நியதி.

ஆனால் இப்போதெல்லாம் கோயிலில் யாரும் தங்குவதை அனுமதிப்பதில்லை என எண்ணுகிறேன். காலையிலேயே மூலஸ்தானத்தில் சந்தான கிருஷ்ணனுக்குக் குங்கும அர்ச்சனை செய்து கொடுக்கின்றனர். அதன் பின்னர் சுமார் பத்தே கால் பத்தரை மணி அளவில் மடைப்பள்ளியில் அளிக்கப்படும் பிரசாதமான பால் பாயசத்தை யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.  குழுவாக எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் கொடுக்கும் பிரசாதத்தின் விலை 50 ரூபாய் தான்.  அதை ஒருவரே வேண்டுமானாலும் குடிக்கலாம். அல்லது பகிர்ந்தும் உண்ணலாம். 

8 comments:

  1. தர்ப சயன ராமர்..ஸ்தல புராணம் அருமை..

    ReplyDelete
  2. படித்தேன். அறிந்தேன்.

    ReplyDelete
  3. தர்பசயன ராமரை இன்னும் தரிசிக்கவில்லை, ஒருமுறை போக வேண்டும்.
    கோவில் வரலாறு விபரங்கள் அருமை.

    ReplyDelete
  4. அழகாக ஆதி ஜகன்னாதப் பெருமாளை விவரித்திருக்கிறீர்கள்.
    நாங்கள் போனபோது அஙே இருந்த பட்டாச்சாரியார் தன் இல்லத்திலிருந்து பொங்கல் செய்து கொடுத்தார்.
    தர்ப்பாரண்ய க்ஷேத்திரம் இரண்டு அவதாரங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
    தர்பபையில் சயனித்திருக்கும் ஸ்ரீராமர் தான் எத்தனை அழகு. அந்தத் தர்ப்பைக்காடு எங்கே போனதோ இப்போது.
    லிங்க் கொடுத்ததற்கு மிக நன்றி கீதா.இன்று மிகவும் குளிர் அதிகம்.டைப் அடிக்கும் விரல்களே டைப் அடிக்கின்றன நடுக்கத்தில்

    ReplyDelete
  5. எனக்கு இந்தக் கதைகளை எல்லாம் கேட்கும்போது என்ன கூறுவதென்றே தெரிவதில்லை. நான் வந்து பதிவைப் படித்தேன் என்பதற்கே இப்பின்னூட்டம்

    ReplyDelete
  6. வணக்கம்
    அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. கண்ணவர் - கண்வ மகரிஷி இல்லையோ? கண்வர் என்று வரணும்னு நினைக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. அது கண்ணவரா, கண்வரா எனச் சரியாகத் தெரியலை நெ.த. நான் கிடைத்ததை அப்படியே போட்டிருக்கேன். :))))

      Delete