எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 23, 2017

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?

பையர் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி வீணாகி விட்டது. நம்ம ஊரில் என்றால் எல்லாத்தையும் எடுத்து வெளியே வைச்சுட்டு வேறே வேலையைப் பார்த்துண்டு போயிடுவோம். ஆனால் இங்கே குளிர்சாதனப் பெட்டி இல்லையேல் வாழ்க்கையே நடத்த முடியாது. அவ்வளவு அத்தியாவசியத் தேவை குளிர்சாதனப் பெட்டி.  குறைந்த பட்சமாக ஒரு வாரத்துக்கான பால், தயிர் போன்றவைகள், காய்கள், பழங்கள், ஒரு சில உறைய வைக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவைகள் அதிலே வைப்பாங்க. பால் எல்லாம் குறைந்தது ஐந்து லிட்டர் வாங்கி வைச்சுக்கணும்! இல்லைனா இரண்டு அல்லது மூன்று லிட்டராவது வாங்கிக்கணும். நாம தேவைப்பட்டா அரை ஆழாக்குப் பால் கூட வாங்கிப்போம். ஆவின் பால் பாக்கெட் கூடக் கால் லிட்டரில் கிடைக்குமே! இங்கே அப்படி இல்லை. கடுகு வேணும்னாக் கூடக் குறைந்தது ஒன்றரைக் கிலோவாவது இருக்கும் பாக்கெட் தான்!  சாதாரணமாக ஒரு வீட்டிற்குத் தேவையான குளிர்சாதனப் பெட்டி நம்ம ஊர் ஆறரை அடி காட்ரெஜ் பீரோ அளவுக்கு இருக்கும்.  அநேகமாக முருங்கைக்காயில் இருந்து கொத்தவரை, அவரை, பட்டாணி, பாலக் கீரை போன்ற காய்கள், வித விதமான பச்சைக்காய்கள் எல்லாமும் உறைய வைக்கப்பட்ட நிலையில் கிடைப்பதால் அவற்றையும் வாங்குவார்கள். எப்போவானும் காய்களைப் புதிதாக வாங்க முடியாத பட்சத்தில் அவற்றைப் பயன்படுத்திப்பாங்க.


இதோடு  இல்லாமல் சப்பாத்தி வகைகளும், சமோசா, வடை, பாட்டீஸ் போன்றவைகளும் உறைய வைக்கப்பட்ட நிலையில் கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கி வைச்சுக்கறவங்க உண்டு.  மைக்ரோவேவில் வைத்து வடை, சமோசா, பாட்டீஸ் போன்றவற்றைச் சூடு செய்துக்கறாங்க. சப்பாத்தி வகைகளை தோசைக்கல்லில் போட்டு வெண்ணெய், அல்லது நெய் ஊற்றிப் போட்டு எடுத்துச் சாப்பிடறாங்க.  இன்னும் இட்லி, தோசை, அடை, உப்புமா வகைகள் உறைய வைக்கப்பட்டவற்றில்  இல்லைனு நினைக்கிறேன். :)


இதான் வீணாகிப் போன பழைய குளிர்சாதனப் பெட்டி.    முழு அளவையும் எடுக்க முடியலை. கொஞ்சம் தள்ளி நின்னு எடுக்கணும். அல்லது காமிராவில் எடுத்திருக்கணும்.  முழுசா வந்திருக்கும். :) ஏதோ ஒரு சாக்குனு யாருங்க அங்கே முணுமுணுக்கிறது? ஹிஹிஹி, செல்லில் எடுத்தால் இப்படித் தான்! ஆனால் சொல்ல வந்த விஷயம் படத்தில் இல்லை. சொல்ல வந்ததே வேறே!  நம்ம ஊரில் குளிர்சாதனப் பெட்டி வீணாச்சுன்னா மெகானிக்கைக் கூப்பிடுவோம். அவரும் வந்து பார்த்துட்டு வாரன்டி இருந்தா இலவச சேவையும், வாரன்டி இல்லைனா எஸ்டிமேட்டும் கொடுப்பார்.  அநேகமா வீணாகி இரண்டு, மூன்று நாளில் எல்லாம் பழைய நிலைமைக்கு வந்துடும்.  இங்கே குளிர்சாதனப் பெட்டி வீணானது தெரிஞ்சதும் அதைச் சரி செய்ய மெகானிக்கைக் கூப்பிட்டால் வரதுக்கு ஒரு வாரம் ஆகுமாம்.  பையர் அவசரம்னு சொல்லி உடனே வரச் சொல்லிக் கடைசியில் நேத்திக்கு வந்தார். 

வந்துட்டு எஸ்டிமேட் கொடுத்ததில் அவருக்கு சர்வீஸ் சார்ஜ் மட்டும் 350 டாலர்! நேத்திக்கு வந்து பார்த்துட்டு என்ன பிரச்னைனு சொன்னதுக்குத் தனியாக் காசு. அது சுமார் இருபது டாலருக்குள் இருக்கும் போல! குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரெசர் வீணாகிவிட்டதாகச் சொல்லி அதை மாத்தணும்னு சொன்னார். ஆகவே ஏற்கெனவே சொன்ன தொகையைத்   தவிர கம்ப்ரெஸர் மாத்தறதுக்கு 900 டாலர். எல்லாம் சேர்த்து 1,300 டாலர்கள் ஆகும். இந்தக் குளிர்சாதனப்   பெட்டி வாங்கி ஆறு அல்லது ஏழு வருடங்கள் தான் ஆகின்றன என்றார்கள் பையரும் மாட்டுப்பெண்ணும். பொதுவாக இங்கெல்லாம் ஐந்து வருடங்கள் தான் வாரன்டி என்றும் ஐந்து வருடத்துக்கு மேல் ஒரு மின்னணு சாதனம் பயன்பாட்டில் இருந்தால் அது ஆச்சரியம் என்றும் சொல்கிறார்கள். நல்ல வேளையா நம்ம நாட்டில் பத்து வருஷம் வாரன்டி கொடுக்கிறாங்களோ, பிழைச்சோமோ! வாடகைக்கு வீடு எடுத்தால்  இங்கே குளிர்சாதனப் பெட்டி குடியிருப்புக்களில் வாடகைக்கு வீடு எடுக்கும்போது அதோடு சேர்ந்தே வந்துடும். குளிர்சாதனப் பெட்டி, எரிவாயு அல்லது மின் அடுப்பு நான்கு பர்னர்களுடன், மைக்ரோவேவ் அவன், பேக்கிங் அவன், டிஷ் வாஷர், வாஷிங் மெஷின் எல்லாம் சேர்ந்தே தான் வாடகைக்கு வீடு எடுக்கையில் கிடைக்கும். வீணானால் நம் செலவில் புதுப்பிக்கணும். இதில் தரையில் விரித்திருக்கும் கார்ப்பெட்டில் இருந்து சுவற்றில் நாம் போடும் ஓட்டைகளிலிருந்து எல்லாமும் சரி செய்யணும். 

குளியலறை, கழிப்பறை, சமையலறைனு எல்லா இடமும் சுத்தமாகப் பராமரிக்கணும் என்பதோடு காலி செய்து கொண்டு போனால் வீடு வாடகைக்கு எடுக்கையில் எப்படி இருந்ததோ அப்படியே கொடுக்கணும். சொந்தமா வீடு என்றால் வாஷிங் மெஷினில் இருந்து எல்லாமும் புதுசா வாங்கிக்கணுமே! வாஷிங் மெஷின் துவைக்க ஒரு மிஷினும், துணி காய வைக்க ஒன்றுமாக இரண்டு இருக்கும். அது வேறு ஒரு பத்துக்குப் பனிரண்டு அறையில் வைக்குமாறு பெரிசா இருக்கும்.  அநேகமான வீடுகளில் கார் ஷெட்டுக்குப் பக்கத்தில் உள்ள அறையில் வாஷிங் மெஷின் இருக்கும்.  அது வழியாவே உள்ளே நுழைவாங்க. வீட்டின் முக்கிய நுழைவாயிலை யாரும் பயன்படுத்தறதே இல்லை. வெளி ஆட்கள் வந்தால் தான்! சொந்த வீட்டையும் சரியாப் பராமரிக்கலைனா உடனே  நோட்டீஸ் வரும்.  அப்படியும் தாமதம் ஆனால் அபராதம் போடுவாங்க. வாசல், தோட்டம் ஆகிய இடங்களில் வளரும் செடிகள், புற்கள் ஆகியவை சரியான அளவில் வளரணும். இல்லைனா உடனே நோட்டீஸ் வந்துடும். அடிக்கடி அதுக்கும் கவனிப்புக் கொடுக்கணும். லானில் வளரும் புற்களுக்கும் ட்ரீட்மென்ட் உண்டு. அதுக்குனு தனி ஆள் இருப்பாங்க. வருஷத்துக்கு இவ்வளவு டாலர்னு சம்பளம் பேசிட்டு இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வந்து லானுக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க!

ஹிஹி! குளிர்சாதனப் பெட்டியை விட்டுட்டேனே! குளிர்சாதனப் பெட்டி பையருக்குத் தேவையான அளவான ஆறரை அடிக்கு உள்ளது 1,500 டாலரில் இருந்து 2,000/-க்குள் ஆகுமாம். இங்கே பழைய குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரெசர் செலவு 900 டாலர் என்றதும் பையர் புதுசாக்குளிர்சாதனப் பெட்டியே வாங்கிடலாம்ம்னு முடிவு பண்ணிட்டார். ஆனால் அதற்கான தேர்வுகளை எல்லாம் செய்துட்டு ஆர்டர் கொடுத்தால் வந்து சேரப் பத்து நாட்களாவது ஆகுமாம். அதுவரை என்ன செய்யறதுனு யோசிச்சுட்டுப் பையர் ஒரு சின்னக் குளிர்சாதனப் பெட்டியை நேற்றிரவு போய் வாங்கி வந்தார். நூறு டாலருக்குள் இருக்கும் போல! ப்ரான்ட் பெயர் எல்லாம் பழக்கமானவை அல்ல. ஏதோ புதுசு! குட்டின்னா ரொம்பக் குட்டி! முக்கியமாய்ப் பால், தயிர், வெண்ணெய் போன்றவை மட்டும் வைக்கத் தான்! 

இதிலே வேடிக்கை என்னன்னா, புதுசு வழக்கமான பெரிய அளவில் வந்ததும் இதைத் திருப்பிக் கொடுத்துடலாமாம். இங்கே எல்லாம் அப்படி ஒரு வசதி இருக்கு! பயன்படுத்திப் பார்த்தோம். திருப்தி இல்லைனு சொல்லிட்டுத் திருப்பலாம் என்று சொல்கிறார்கள். ஆக்ஷேபம் தெரிவிப்பதில்லை. இது துணியிலிருந்து எல்லாத்துக்கும் பொருந்துகிறது. காய்கள், பழங்கள், பால், தயிர், வெண்ணெய் போன்றவை தவிர்த்து! அதனாலேயே எனக்கு இங்கெல்லாம் துணி வாங்கினால் போட்டுக்கொள்ள யோசனையா இருக்கும். நம்ம ஊரிலேயே பிரபலமான ரெடிமேட் கடைகளில் உடை வாங்கவோ போட்டுப் பார்க்கவோ பிடிக்காது. யாரானும் போட்டிருப்பாங்களேனு யோசனையா இருக்கும்.  இருந்தாலும் சில நம்பிக்கையான கடைகளில் நாம் கேட்டால் உள்ளே இருந்தோ அல்லது அடியிலிருந்தோ எடுத்துத் தருவாங்க. இங்கே எல்லாம் அப்படிக் கிடையாது. என்ன இருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வருமா! 

இங்கே வேலைக்குப் பேட்டி கொடுக்கப் போறவங்க நல்ல உடை இல்லைனா கவலைப்படாமல் வால்மார்ட் போன்ற கடைகளில் உடையைத் தேர்வு செய்து போட்டுக் கொண்டு போயிட்டு பேட்டி முடிஞ்சதும் அந்த உடையைத் திரும்பக் கொடுத்துப் பணத்தை வாங்கிக்கறதும் உண்டு என்கிறார்கள். நம்ம ஊரில் வாடகைக்குக் கொடுப்பாங்கனு கேள்விப் பட்டிருக்கேன். எவ்வளவு தூரம் உண்மைனு தெரியாது. ஆனால் நினைத்த மாத்திரத்தில் நம்ம ஊரில் எதையும் வாங்கறாப்போலயோ அல்லது ரிப்பேருக்குக் கொடுத்து வாங்கறாப்போலயோ இங்கே முடியாது!  எல்லாத்துக்கும் நேரம், காலம், நாள் ஆகும். மருத்துவரைப் பார்க்கறதும் சேர்த்துத் தான்!  ரொம்ப முடியலைனா எமர்ஜென்சிக்குப் போகலாம். நம்ம ஊரிலே மருத்துவரைப் பார்க்கிறாப்போல் எல்லாம் இங்கே பார்த்துட முடியாது. அதுக்கே எனக்கு டென்ஷன் எகிறும். ஆனால் இங்கே என்னமோ டென்ஷன் ஃப்ரீயாத் தான் இருக்காங்க. ஆனாலும்  இதை எல்லாம் பார்த்தால்

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?


28 comments:

 1. /இன்னும் இட்லி, தோசை, அடை, உப்புமா வகைகள் உறைய வைக்கப்பட்டவற்றில் இல்லைனு நினைக்கிறேன். :)/ இட்லி தோசை வடை இருக்கு. அடை உப்புமா இன்னும் பார்க்கலை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க இ.கொ. நீங்களும் நான் எழுதுவதை எல்லாம் படிக்கிறீங்க? சீக்கிரத்திலேயே அடை, உப்புமாவும் வந்துடும்! எஞ்சாய்! :) இட்லி, தோசை இருப்பது தெரியாது! :) பார்க்கலை.

   Delete
  2. தொடர்ந்து படிச்சுக்கிட்டேதான் இருக்கேன். :)

   Delete
  3. அப்படீங்கறீங்க? நம்பிட்டோமுல்ல! :P :P :P :P

   Delete
 2. வாடகை சோபா இருபது ரூபாய்.. விலைக்கு வாங்கினால் முப்பதே ரூபாய் என்கிற பா.வி பாடல் நினைவுக்கு வருகிறது. ஆனாலும் அவங்க டென்சன் ஃப்ரீயா இருக்க என்ன காரணம்? பழகிடறாங்களா!

  ReplyDelete
  Replies
  1. தெரியலை ஶ்ரீராம். பொதுவாகத் தமிழ்நாட்டைத் தாண்டினாலே மக்கள் டென்ஷன் ஃப்ரீயாகத் தான் இருக்காங்க. அதிலும் குஜராத், ராஜஸ்தானில் கேட்கவே வேண்டாம்! எதுக்கும் கவலைப்பட மாட்டாங்க!

   Delete
 3. ஆகும் செலவைப் பார்த்தால் மயக்கமே வருகிறது...

  ReplyDelete
  Replies
  1. உண்மை. ஆனால் இங்கே எல்லாவற்றையும் ரூபாயில் மாற்றிப் பார்க்கும் பழக்கம் இல்லை என்பதால் அவங்களுக்குப் பழகிடுச்சுனு நினைக்கிறேன்.

   Delete
 4. நம்ம ஊரைத் தவிர எல்லா இடத்திலும் ரிப்பேர் பண்ணறதைவிட புதுசு வாங்குவது பெட்டரா இருக்கும். நம்ம ஊர்ல, ரிப்பேர் பண்ணுவது பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தைத் தருகிறது.

  ஆமாம... ரிப்பேர் ஆன ஃப்ரிட்ஜை எப்படி டிஸ்போஸ் செய்வார்கள்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத் தமிழன், என்ன இருந்தாலும் நம்ம ஊரில் நீண்ட நாட்கள் பயனாகும் முறையில் தான் தயாரிக்கப்படுகின்றன என்பதை நாம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். எங்க வீட்டு டிவி ஃபிலிப்ஸ் கம்பெனித் தயாரிப்பு. 2000 ஆம் வருஷம் நம்ம ரங்க்ஸ் ஊட்டிக்கு மாற்றலாகிப் போகும்போது வாங்கினது. இன்னமும் அதைத் தான் வைச்சிருக்கோம். இங்கே வரும் முன்னர் ஒரு நாள் திடீர்னு டிவி எடுக்கலைனதும் என்னனு பார்த்தால் ஐசி போயிருந்தது. வந்து பார்த்த மெகானிக் ஐசி மாத்திக் கொடுத்துட்டு டிவி நல்ல நிலைமையில் இருப்பதைச் சொல்லிட்டு இப்போ வரது எல்லாம் மூன்று வருஷம் கூட வராது, ஆகவே முடிந்தவரை இந்த டிவியையே நல்லாப் பராமரிச்சு வைச்சுக்குங்க என ஆலோசனையும் கொடுத்தார். அந்த டிவி வாங்கினதிலிருந்து இன்று வரை இதோடு இரண்டே முறை ஐசி மாத்தி இருக்கோம். சென்னை அம்பத்தூரில் இருக்கும்போது ஒரு முறையும், இப்போ நான்கு மாதம் முன்னால் ஶ்ரீரங்கத்தில் ஒரு முறையும்! படங்கள் ஓலி, ஒளி, நிறச் சேர்க்கை எல்லாம் மிகத் தரமாக இருக்கும்.

   Delete
  2. ரிப்பேர் ஆன ஃப்ரிட்ஜை டிஸ்போஸ் செய்வதா? அதை ஏன் கேட்கறீங்க? வெளியிலே குப்பை எடுக்கும் இடத்தருகே வைச்சால் இம்மாதிரி மின்னணு சாதனங்களை வாரம் ஒரு நாள் வந்து எடுத்துட்டுப் போறாங்க! அவங்க வந்து எடுத்துட்டுப் போவாங்க. நாங்க இங்கே வந்ததுமே பையர் பழைய டிவி (நல்ல கண்டிஷனில் இருக்கு), லாப்டாப், டிவிடி ப்ளேயர் போன்றவற்றை இம்மாதிரி வாசலில் தூக்கி வைத்தார். வந்து எடுத்துட்டுப் போயிட்டாங்க. ஏதேனும் ஆசிரமங்களுக்கு இலவசமாக் கொடுக்கலாமேனு சொன்னதுக்கு அங்கெல்லாம் புத்தம்புதியதாகத் தான் கொடுக்கச் சொல்லுவாங்களாம். இம்மாதிரி ஏற்கெனவே உபயோகப் படுத்தினதை வாங்க மாட்டாங்களாம். :)

   Delete
  3. நியாயம்தானே கீதா மேடம். ஆசிரமத்துக்கு மட்டும் பழைய பொருட்களா? (சில வருடங்களுக்கு முன் கொஞ்சம் பழைய டிரெஸ்களை வாங்கிக்கொண்டார்கள் அடையாறில். அதுல அர்த்தம் இருக்கு. இந்த ஊருலகூட உபயோகப்படுத்திய உடைகளை charity வாங்கிக்கொள்கின்றன)

   Delete
  4. ம்ம்ம்ம்ம் நம்ம ஊரிலே பழைய சாமான்கள் எதுவாக இருந்தாலும் வாங்கிப்பாங்க. எங்களோட முதல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி பிபிஎல். அதை 2000 ஆம் ஆண்டு ஊட்டிக்கு மாற்றலாகிப் போறச்சே ரங்க்ஸ் எடுத்துட்டுப் போனார். சென்னை வீட்டுக்கு ஒண்ணு வேண்டும்னு இப்போ இருக்கும் ஃபிலிப்ஸ் அப்போ வாங்கினது தான்! இன்னும் ஓடிட்டிருக்கு. அந்த பிபிஎல் தொலைக்காட்சிப் பெட்டியை ஊட்டியிலேயே வித்தாச்சு. அதே போல் முதல் குளிர்சாதனப் பெட்டியான கெல்வினேட்டரையும் இப்படித் தான் வித்தோம். 90 களின் ஆரம்பத்தில் வாங்கினது. 2005 ஆம் ஆண்டில் கொடுத்தோம். அப்புறமா எலக்ட்ரோலக்ஸ் (கெல்வினேட்டர் தான் இந்தப் பெயரில் வருதுனு சொன்னாங்க) வாங்கினோம். அதையும் நல்லா ஓடிட்டிருக்கும்போதே பையர் 2014 ஆம் ஆண்டில் கொடுக்கச் சொல்லிட்டார். எல்ஜி வாங்கி இருக்கோம்.

   Delete
  5. இன்னிக்குப் புதுக் குளிர்சாதனப் பெட்ட்டி வந்துடுச்சு! அதே சாம்சங், அதே நிறம், மணம், குணம், அளவு எல்லாமும்! பழசை எடுத்துட்டுப் போயிட்டாங்க. அதுக்கு விலை ஒண்ணும் இல்லை. புதுசு டெலிவரி செய்ததுக்குக் காசு வாங்கலை! அதான் ஒரே கன்செஷன்! :) பழசைக் கம்ப்ரெசர் மாத்திட்டுப் புதுசு போலப் பண்ணி வித்துடுவாங்களாம்! :)

   Delete
  6. அடப்பாவி. கம்ப்ரெஷர் மாத்தி புதுசுபோல வித்துடுவாங்களா? என்னைக்கேட்டா, 7-8 முக்கியமான பொருட்களை (அவன், குளிர்சாதனப்பெட்டி, துணிதுவைக்கும் மிஷின், 2 ஏசி, கேஸ் அடுப்பு போன்றவை), மாதம் இவ்வளவு என்று வாடகைக்கு கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டா ரொம்ப சுலபம். ஊர் மாத்தும்போதும் கவலைப்பட வேண்டாம். போகும் ஊரில் இதுபோல் திரும்ப வாடகைக்கு வாங்கிக்கொள்ளலாம். நமக்கும் புதிய பொருட்களாகக் கிடைக்கும் (provided minimum 1 year என்று வாடகைக்கு வாங்கினால்).

   இங்கெல்லாம் furnished appt என்று வாடகைக்குக் கிடைக்கும். ஆனாலும், நாமே பொருட்களை வாங்கிக்கொள்வதுதான் லாபம்.

   Delete
 5. ஏன் அங்கே costco பக்கத்தில் இல்லையா? உடனே வாங்கிக்கொண்டு வந்திருக்கலாமே. அல்லது அமேசானில் ஆர்டர் பண்ணிட்டீங்களா?
  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. costco membership இருக்கணும்னு நினைக்கிறேன். அதோடு இந்த விஷயங்களில் எல்லாம் தலையிடுவதும், ஆலோசனைகள் கொடுப்பதும் இல்லை! அமேசானோ, எதுவோ அதுவும் தெரியாது. இங்கே உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாங்க அவங்களுக்குத் தானே தெரியும். அதெல்லாம் பையரும், மருமகளும் பார்த்துக்குவாங்க.

   Delete
 6. சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?....உண்மை..உண்மை...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பாருக்குள்ளே நல்ல நாடு! :)

   Delete
 7. என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தாங்க!

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஸ்வா, நீங்க சொல்வது சரியே! நமக்கெல்லாம் இந்தியா தான் சரிப்பட்டு வரும்! :)

   Delete
 8. உண்மைதான். நம்மூரைப் போல வராது.

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊர் எனில் ரிப்பேர் ஆன மறுநாளே அநேகமாச் சரி பண்ணிடுவோமே! :) இங்கே எல்லாத்துக்கும் நேரம் எடுக்கும்! :)

   Delete
 9. எனக்கு அமெரிக்கா ரொம்பவே பிடிக்கிறது:)

  ReplyDelete
  Replies
  1. எனக்குச் சென்னையே பிடிக்காது! அம்பேரிக்கா எங்கேருந்து பிடிக்கும்! :)

   Delete
 10. இக்கரைக்கு அக்கரை பச்சை இல்லியோ

  ReplyDelete
  Replies
  1. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இங்கே இருந்தாலும் எங்கே இருந்தாலும் நம்ம ஊர், நம்ம வீட்டில் இருக்கும் சுகம் வராது! :)

   Delete
 11. வணக்கம்
  அம்மா

  நம்ம பிறந்த ஊர் போல வருமா.... உண்மைதான்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete