எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 06, 2017

எதிர்பார்ப்புகள், எண்ணங்கள், கருத்துகள், நினைவுகள்!

எங்கள் ப்ளாக் ஶ்ரீராம், பலரிடமும் கலை, இலக்கியம், அரசியல் போன்றவற்றில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். அதுக்காக எழுதினது இது. இவற்றில் பலவற்றை எடிட் செய்து விட்டேன். இங்கே என் பதிவில் மீண்டும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

கலை பற்றி அதிகம் சொல்லத் தெரியலை என்றாலும் மறைந்து கொண்டிருக்கும் பல கலைகளும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். முக்கியமாய் நாதஸ்வரம். தமிழ்நாட்டிலேயே இன்று நாதஸ்வரம் முக்கியத்துவம் பெறுவதில்லை. அதற்குப் பதிலாகச் செண்டை மேளம் போன்றவை இடம் பெறுகின்றன. இவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தான். ஆனால் தமிழ்நாட்டுக் கலைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் இருக்கணுமே! அதோடு அழிந்து கொண்டிருக்கும் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்க் குதிரை ஆட்டம், தெருக்கூத்து போன்றவைகளும் அழியாமல் பாதுகாக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யணும்.

அடுத்து இளைஞர்களிடம் சினிமா மோகம் குறையணும்.சினிமா நடிகர்களின் கட் அவுட்டுக்குப் பாலபிஷேஹம் செய்து வீணடிக்கும் பாலை ஏழைக்குழந்தைகள் குடிப்பதற்காக வாங்கித் தரலாம். சமீபத்தில் கல்லல் இளைஞர்கள் வடிகால்களைச் சுத்தப்படுத்துவதாக முகநூலில் பார்த்தேன். அது போல் சென்னையிலும் இளைஞர்கள் நீர் நிலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி நீர் செல்லும் வடிகால்கள், வாய்க்கால்களைச் சுத்தம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.  அதன் மூலமாவது தமிழ்நாட்டு அரசியலில் ஓர் மாற்றம் ஏற்படணும். மற்றபடி அரசு கொடுக்கும் இலவசங்களை எதிர்பார்க்காமல் மக்கள் சுயமாகச் சம்பாதித்து எதையும் வாங்கிக்கணும்னு முடிவு கட்டணும். டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூடணும்.

ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் டாஸ்மாக் கடைகளை மூடவும் போரடணும். சென்னை முழுவதும் குப்பைக்கூடையாக இருக்கிறது. அந்தக்குப்பைகளை ஒழிக்கணும். எல்லோரும் அவரவர் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொண்டு மற்றவர் வீட்டு வாசலில் குப்பையைக் கொட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் எனக்குச் சொந்த அனுபவமே உண்டு. அதே போல் திறந்த சாக்கடைகள்!  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்னமும் பாதாளச் சாக்கடைகள் போட்டு ஒவ்வொரு குடியிருப்பு, வீடுகள் ஆகியவற்றின் கழிவறையையும் கழிவு நீரையும் இணைக்க ஏற்பாடு செய்யப்பட வில்லை. கிட்டத்தட்ட 1986--87 ஆம் ஆண்டு வாக்கில் நாங்க வீடு கட்டி இருக்கும் அம்பத்தூரில் பாதாளச் சாக்கடை கட்டுவதற்காக வீட்டுச் சொந்தக்காரர்களை 6,000 ரூபாய் பணம் கனரா வங்கி மூலம் செலுத்தச் சொல்லி அனைவரும் செலுத்தி இருக்கிறோம்.

இப்போது 2017 ஆம் ஆண்டு. ஆனால் இன்னமும் அம்பத்தூரில் பாதாளச் சாக்கடை இணைப்பு இல்லை. குடிநீர் இணைப்பு இல்லை. இத்தனைக்கும் சென்னைக்குக் குடி நீர் கொடுக்கும் புழல் ஏரியிலிருந்து நீர் அம்பத்தூர் வழியாகத் தான் செல்கிறது. இம்மாதிரி அடிப்படைத் தேவைகளை அந்த அந்த மாநகராட்சி உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். ஒரு மாதிரியாகச் சாலைகளை மிகவும் நன்றாகப் போட்டிருக்கிறார்கள். குப்பைகளைக் கொட்டினால் அபராதம், சாக்கடை நீரை வெளியே விட்டால் அபராதம் என்று போடுகிறார்கள். இப்படிச் செய்தால் தான் நம் மக்கள் கொஞ்சமானும் மாறுவார்கள்.  இதற்கான மாற்றங்கள் அனைவர் மனதிலும் ஏற்பட வேண்டும். மக்கள் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றப் பாதையில் நாடு செல்ல மக்கள் ஒத்துழைக்கணும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலனே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களுக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

நாடு முழுவதும் பொதுவான கல்வித் திட்டமும், பள்ளிகள் திறக்கும் நாளும் நாடு முழுவதும் ஒன்று போல் இருக்க வேண்டும். மொழிப் பிரச்னை, சீதோஷ்ணப் பிரச்னை என்று இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக இது நடைமுறைக்குக் கொண்டு வரணும். ஆரம்பகால இடையூறுகள் நேரும்; நேரலாம். அதை எதிர்கொள்ள மனப்பக்குவம் மக்களுக்கு வரவேண்டும். நவோதயா பள்ளிகளைக் கிராமங்களில் வர விடுவதன் மூலம் பட்டி, தொட்டிகளில் இருக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கல்வி நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அதிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் எல்லா மாநிலங்களிலும் கட்டாயமாக்கப்  பட வேண்டும். கைத்தொழில், நலிந்த கலைகள், நெசவு, தச்சு வேலை, கொல்லு வேலை போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பள்ளியிலேயே அவற்றைக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவை எல்லாம் எண்பதுகள் வரை மதுரை சேதுபதி பள்ளியில் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது. நெசவுத் தொழில் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் பிராமணர்கள் என்பது இதில் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆகவே இதில் குலத் தொழில் என்ற ஒன்றைக் கொண்டு வர வேண்டியதே இல்லை!

 இதன் மூலம் இந்தத் தொழில் கற்றோருக்கு வேலை வாய்ப்புகள் பள்ளியிலேயே உருவாகும் என்பதோடு நசிந்து போன கைத் தொழில்களைப் போல் இவையும் நசியாமல் காப்பாற்றலாம். இது பார்க்கக் குலக்கல்வி போலத் தெரிந்தாலும் இது தான் நாடும், மக்களும் முன்னேற வழி. படிப்புக்குப்படிப்பும் ஆயிற்று. தொழிலும் கற்றுக் கொண்டால், அதில் காலத்துக்கேற்ற நுண்ணிய மாற்றங்களைச் செய்யவும் படிப்பு உதவும். தொழில் சார்ந்த படிப்பாக இருத்தல் நலம். யோகா, விளையாட்டு, நீதி போதனை அவரவருக்கு விருப்பமான மொழியைக் கற்றல் போன்றவையும் கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு மொழி பேதத்தைக் கற்பிக்கக் கூடாது! ஶ்ரீலங்காவின் வடகிழக்கு மாகாணங்களில் பள்ளிகளிலேயே தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் ஆகியன பாடமாகக் கற்பிக்கப்படுவது போல் நம் தமிழ்நாட்டிலும் வர வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கற்கலாமே! நாம் தமிழ், தமிழ்னு முழங்குகிறோம். தமிழில் எழுதப் படிக்க மட்டும் தானே நமக்குத் தெரியும். அதே இலங்கைத் தமிழர்கள் இம்மாதிரி சைவ, வைணவ இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டும் அளவுக்குத் திறமையானவர்கள்.

தமிழ்நாட்டின்  தலையாய பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னை தீர வேண்டும். முக்கியமாய்க் காவிரிப் பிரச்னை! முல்லைப் பெரியாறுப் பிரச்னை! வடமாநிலங்களின் ஜீவ நதிகளைத் தென்னக நதிகளுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மஹாநதியின் தண்ணீர், பிரம்மபுத்ராவின் தண்ணீர் போன்றவை ஒவ்வொரு வருடமும் கடலில் வீணாகக்கலக்கிறது. பார்க்கப் போனால் நதி நீர் கடலில் கலப்பது விஞ்ஞான ரீதியாக நல்லதே என்றாலும் அதிக அளவு நீர் கடலில் கலக்காமல் பார்த்துக் கொள்வது இன்னும் சிறப்பு. நம் நாட்டில் இல்லாத நீர் வளமோ, நில வளமோ இல்லை. அவற்றுக்கு என்றும் குறைவு இல்லை. முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு ஏற்று நடத்தும் தொழில்கள் சிறந்தனவா, தனியாரால் நடத்தப்படுவது சிறந்ததா என்று கேட்டால் சிலவற்றில் தனியாரின் பங்கு தேவை. ஆனால் அரசு சார்ந்த படிப்பு, தொழில், இணையச் சேவை, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், சுற்றுலா போன்றவற்றில் அரசின் பங்கே அதிகமாக இருத்தல் வேண்டும். இதற்கான காரணங்களை இப்போது பட்டியலிட்டால் பெரிதாகி விடும். எல்லாத் தொழிலதிபர்களின் தொழிலிலும் அரசின் பங்கு குறிப்பிட்ட அளவு இருந்தால் நல்லது. அரசின் நேரடிக் கண்காணிப்பு அப்போது கிடைக்கும். லாப, நஷ்டக் கணக்குகளைச் சரியாகக் காட்டலாம். ஆனால் இதிலும் ஊழல் புகுந்து கொள்ள வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

அடுத்துத் தண்ணீர்ப் பிரச்னை. சுகாதாரம், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், சாலை மேம்பாடு, கால்நடைப்பராமரிப்பு. இவற்றை அந்த அந்தக் கிராம மக்களே ஊர்ப் பஞ்சாயத்தின் மூலமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும். முன்னெல்லாம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பொதுக்குளத்தில் குடிக்கும் நீர் மட்டுமே கொண்டு செல்லலாம். மீறித் துணி துவைத்தாலோ அல்லது குளித்தாலோ ஊர்க்கட்டுப்பாட்டின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. குளக்கரையில் காவலுக்கு ஆள் போட்டிருப்பார்கள். துணி துவைக்க, குளிக்க, மாடு, கன்றுகளைக் குளிப்பாட்ட ஊருக்கு வெளியே ஓர் குளமோ, பொதுக்கிணறோ இருக்கும். அங்கே தான் அவற்றைச் செய்ய வேண்டும். சாலைகளும் அந்த அந்த ஊர்ப் பஞ்சாயத்தின் மூலம் கட்டும் வரியின் வருமானத்தில் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அவரவர் ஊர்ச்சாலையைப் போட்டுக் கொள்வதோடு இணைப்புச் சாலைகளையும் பக்கத்து ஊர்க்காரர்களோடு கலந்து பேசிப்போட்டுக்கொள்ள வேண்டும்.


ஊருக்கு வெளியே செல்லும் பொதுச்சாலையை மட்டும் அரசு போட்டுக் கொடுக்கலாம். தண்ணீர்க் கால்வாய்கள், வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள் போன்றவற்றை ஊர் மக்களே முறை போட்டுக் கொண்டு தூர் வாரிச் சுத்தப்படுத்தினால் போதும். ஆற்றில் நீர் இல்லை என்றாலும் மணல் எடுக்கக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்க வேண்டும். கல்விக்கும் இதேபோல் ஊர்க்காரர்கள் சேர்ந்து பள்ளியை நிர்வகித்தால் போதும். தங்கள் குழந்தைகள் எந்த மொழி படித்தால் நல்லது என்பதைப் பெற்றோரும், பிள்ளைகளும் மட்டும் முடிவு செய்யணும். அரசு அளிக்கும் மருத்துவ உதவியை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு சுகாதார நிலையத்தைத் துப்புரவாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். இது எல்லாம் அரசை எதிர்பார்க்காமல் நாமே செய்து கொண்டால், கிராமங்களைத் தொடர்ந்து நகரங்களும் சுத்தமாகும்.

கால்நடைகளைப் பராமரிப்பது என்பது இப்போது பெரிய விஷயமாக ஆகி விட்டது. எங்கள் மாமனாரிடமே வண்டி மாடுகள், உழவு மாடுகள், எருமை மாடுகள், பசுமாடுகள் என்று தொழுவம் நிறைய மாடுகள் இருந்தன. பசு மாடுகள், எருமை மாடுகள் கூட ஏர் உழுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அதிலும் கடலை போன்ற புஞ்சைப் பயிர் செய்பவர்கள் பசுமாட்டை உழுவதற்கு விடுவார்கள். ஏனெனில் உழவு மாடுகளைப்போல் பசு மாடுகள் விரைவாகச் செல்லாது என்பதால் கடலை விதைப்பவர்களுக்கு இது வசதி! ஆனால் இதிலும் நவீனம் புகுந்தது இல்லையா? டிராக்டர் என்னும் இயந்திரம் வந்த பின்னர் உழவு மாடுகளுக்குத் தேவை குறைந்து விட்டது.  ஆகவே காளை மாடுகளைச் சும்மாவானும் பராமரிக்க யாரும் தயாராக இல்லை. எங்கள் மாமனாரே இந்த மாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக எண்பதுகளிலேயே விற்று விட்டார். ஏனெனில் அவருக்குப் பின் மாட்டைப் பராமரிக்க கிராமத்தில் யாரும் இல்லை.

என் கணவரும் அவருக்கு அடுத்த தம்பியும் முறையே ராஜஸ்தான், மும்பை என்று வாசம். கடைசி மைத்துனர் அப்போது ரொம்பச் சின்னப் பையர். அவரும் படித்துவிட்டுக் கிராமத்தை விட்டு வெளியே வரத் தான் துடித்துக் கொண்டிருந்தார். இப்படி அனைவரும் கிராமங்களை விட்டு வெளியேற வெளியேற வயதான பெரியோர்கள் மாடுகளைப் பராமரிக்க முடியாமல் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இது இன்னும் தொடரும்!

13 comments:

 1. நிறைய ஆலோசனைகள் சொல் லியுள்ளீர்கள்.. நீங்கள் சொல்லியபடி "நமக்கு நாமே" என்று ஒவ்வொரு ஊரும் அதன் தேவைகளை நிறைவேற்ற முயல்வதுதான் சாத்தியமானது. அதிலும் நீர் நிலைகளைப் பாதுகாப்பது.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் ஏற்கெனவே சொல்லி வந்தது தான். இங்கே அவற்றைத் தொகுத்தேன். நீர் நிலைகளைக் கட்டாயமாக அந்த அந்தக் கிராமத்து மக்களே பாதுகாக்க வேண்டும். இனியாவது ஆரம்பித்தால் நல்லது.

   Delete
 2. படித்தேன் ஆஜர்

  ReplyDelete
 3. நிறைய விஷயங்களை மேலோட்டமாகப் பார்த்திருக்கிறீர்கள். ஒன்றிற்கொன்றூ ஒத்து வராத நிலைபாடுகள் வேறு. சிறு சிறு பின்னூட்டங்களாக நாம் பேச ஆரம்பித்து நீங்களும் ஒரு புரிதலின் அடிப்படையில் ஒத்துழைதால் உங்கள் எண்ணங்களில் உங்களுக்கே ஒரு தெர்ளிவு வரும். சரியா?..

  ReplyDelete
  Replies
  1. நன்றி. ஶ்ரீராம் கேட்டிருந்த தலைப்புக்களை இட்டு எழுதவில்லை. மனதில் தோன்றியவற்றை அப்படியே எழுதினதால் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் வந்திருப்பது போல் தெரியும். அதோடு காப்பி, பேஸ்ட் செய்கையில் பத்திகள் இடம் மாறி விட்டன. அதைச் சரி செய்யவில்லை. சில பத்திகள் விடுபட்டிருக்கின்றன. அதையும் கவனிக்கவில்லை. :)

   Delete
  2. மனத்தில் தோன்றியயதை அப்படியே எழுதுவதால் தான் நானும் இந்தக் காலத்திற்கு ஒத்து வராத சில செய்திகளைச் சொல்லத் துணிந்தேன்.

   உதாரணத்திற்கு--

   //தண்ணீர்க் கால்வாய்கள், வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள் போன்றவற்றை ஊர் மக்களே முறை போட்டுக் கொண்டு தூர் வாரிச் சுத்தப்படுத்தினால் போதும்.// .....

   அப்படி என்றால் அதற்காக ஒதுக்கப்படும் நிதி என்னாவாகும் என்ற கேள்வி எழுகிறது.

   //அரசை எதிர்பார்க்காமல் நாமே செய்து கொண்டால், கிராமங்களைத் தொடர்ந்து நகரங்களும் சுத்தமாகும்.//

   ஒரு அரசோ அல்லது அரசு சார்ந்த நிர்வாகமோ செய்ய வேண்டிய பணிகளை நாம் செய்யக் கூடாது என்பது அடிப்படையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஸ்ரீராம் கூட வாராவாரம் பாராட்ட வேண்டியவர்கள் சிலர் செய்ய அற்புதமான சமூக நலன் சார்ந்த விஷயங்களைப் பட்டியலிடுவார். அப்பொழுது கூட நான் நினைத்துக் கொள்வது இது.

   கீழிருந்து மேல் மட்டம் வரை எல்லாம் அரசியலான காலம் இது. ஆட்சியில் உள்ளோரின் இயலாமை ஆட்சியில் இல்லாதவர்களுக்கு சாதகமான அம்சம். ரோடில் குவிந்திருக்கும் குப்பை மலையிலிருந்து இதில் அடக்கம்.

   அரசு சார்ந்த எல்லாப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு உண்டு. ஒரு வேலைக்காக நியமிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து நீங்கள் அந்த வேலையில் ஈடுபட்டால் சட்டப்படி குற்றம். 'உங்களை யார் அதைச் செய்யச் சொன்னது?" என்ற கேள்வி எழும். மின்பெட்டி திறந்து கிடந்தால் அதை மூட முயற்சிக்கக்கூடாது. முடிந்தால் மின்சார வாரியத்திற்கு தொலைபேசி தெரிவித்தால் போதும். இப்படி நிறைய.

   இப்பொழுதெல்லாம் மக்கள் தேவைகளிப் பூர்த்தி செய்து சமூகத்திற்கு நல்லன செய்த அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. மக்களும் அதையெல்லாம் பார்த்து ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பதில்லை. அந்தக் காலம் எல்லாம் சென்ற காலம்.

   Delete
  3. //அப்படி என்றால் அதற்காக ஒதுக்கப்படும் நிதி என்னாவாகும் என்ற கேள்வி எழுகிறது.//

   அந்த அந்தப் பஞ்சாயத்துக்கள், தாலுகாக்கள், நகராட்சிகள் மாநகராட்சிகள் ஆகியவை இதற்காக அரசிடமிருந்து பெறும் நிதி தான் இதற்குச் செலவாகும். என் கருத்தை நான் சரியாகச் சொல்லவில்லை. இப்போக் கும்பகோணம் அருகிலுள்ள கூந்தலூர் அருகிலுள்ள எங்க புக்கககத்துக் கிராமம் கருவிலியை எடுத்துக்கோங்க. அதற்கான சாலைப்பராமரிப்பு அந்தக் கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்தது தானே! சாலைப் பராமரிப்புப் பணிக்கு வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டு வராமல் கிராமத்து ஜனங்களையே முனைந்து செயல்பட வைக்க வேண்டும். ஒரு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அதைக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் முன்னின்று நடத்த வேண்டும். இப்படித் தான் நீர் நிலைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.

   முன்னால் எல்லாம் கணக்குப் பிள்ளைகள், நாட்டாமை, வெட்டியான் என்று இருந்தார்கள். இதிலே கிராமக் கணக்குப்பிள்ளைக்கு மனப்பாடமாக அந்தக் கிராமத்தின் நிலங்கள் யார் யாருக்கு எவ்வளவு, என்ன என்னும் விபரமும் புறம்போக்கு நிலம் குறித்த அறிவும் கட்டாயமாய் இருக்கும். மாடுகளுக்கான மேய்ச்சல் மைதானம் என்னும் பொது நிலமும் ஓவ்வொரு கிராமத்திலும் முன்னால் இருந்து வந்தது. இப்போது கிராமத்து விஏஓ என்னும் கிராமத்து நிர்வாகிக்கு இந்த விபரங்கள் எல்லாம் புரிந்து கொள்ளவே இரண்டு வருடங்கள் ஆகிடும். அதற்குள்ளாக அவர் அந்த ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாறுவார் அல்லது மாற்றப்படுவார். :( இதைக் குறித்து எழுதுவது எனில் என்னுடைய மறுமொழியே ஒரு பதிவாக ஆகிவிடும்.

   Delete
  4. 'முன்னால் எல்லாம்' என்ற நிலை இப்பொழுது இல்லை என்பதே இன்றைய நிலை. இன்றைய நிலையில் என்ன சாத்தியப்படும் என்று யோசிக்கவில்லை என்றால் எல்லாம் 'உடோபியா'வாகப் போய்விடும்.

   Delete
 4. எங்களுக்குக் கம்மியாய் எழுதி விட்டு, இங்கு நிறைய கருத்துகள் சொல்லியிருக்கிறீர்களே..!!! ஓரளவு அங்கு பின்னூட்டங்களிலும் அலசப்பட்ட கருத்துகள். நல்லது நடந்தால் சரி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், இங்கேயும் சில விடுபட்டுப் போயிருக்கின்றன. சில அங்கே சொல்லப்பட்டவை. :)

   Delete
 5. அங்கும் படித்திருந்தேன் அருமையாக அலசி இருக்கிநன்றீர்கள்

  ReplyDelete
 6. அரசு ஏற்று நடத்தும் தொழில்கள் சிறந்தனவா, தனியாரால் நடத்தப்படுவது சிறந்ததா என்று கேட்டால் சிலவற்றில் தனியாரின் பங்கு தேவை. ஆனால் அரசு சார்ந்த படிப்பு, தொழில், இணையச் சேவை, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், சுற்றுலா போன்றவற்றில் அரசின் பங்கே அதிகமாக இருத்தல் வேண்டும். இதற்கான காரணங்களை இப்போது பட்டியலிட்டால் பெரிதாகி விடும். எல்லாத் தொழிலதிபர்களின் தொழிலிலும் அரசின் பங்கு குறிப்பிட்ட அளவு இருந்தால் நல்லது. அரசின் நேரடிக் கண்காணிப்பு அப்போது கிடைக்கும். லாப, நஷ்டக் கணக்குகளைச் சரியாகக் காட்டலாம். ஆனால் இதிலும் ஊழல் புகுந்து கொள்ள வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது. // மிகவும் சரியே!! இறுதி வரி மறுக்க முடியாது!!!

  அங்கு சொல்லியிருந்ததுடன் எக்ஸ்ற்றா உள்ளது...அங்கும் டிஸ்கஷன் போச்சுத்தான்...சுயசார்பு வந்தால் நல்லது!!! அட்லீஸ்ட் குறிப்பிட்ட அடிப்படைத் துறைகளில் தற்சார்பு பொருளாதாரம் நிச்சயமாகத் தேவை

  ReplyDelete