எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 21, 2017

இங்கேயும் ஒரு பேனா மஹாத்மியம்!

ம்ம்ம்ம், நான் படிக்கும்போதும் சிலேட்டும் குச்சியும் தான். பல்பம், அல்லது பலப்பம் சென்னைத் தமிழ்னு நினைக்கிறேன். நாங்கல்லாம் குச்சினு சொல்வோம். கலர் கலராகக் குச்சிகள் கிடைக்கும் அதில் செங்கல் குச்சி ஒண்ணு உண்டு. நல்லா எழுதும். பரிட்சைனால் கூட கேள்வியைச் சொல்வாங்க, விடையை ஸ்லேட்டில் எழுதணும். வாத்தியார் வந்து ஸ்லேட்டின் ஒரு ஓரத்தில் மதிப்பெண்கள் கொடுப்பார். ஆறாவதில் இருந்து தான் எனக்கும் பேனா. நான் படிச்சதும் ஃப்ர்ஸ்ட் ஃபார்ம் தான். நாங்க தான் ஃபார்முக்குக் கடைசி செட்டும் கூட! எனக்கப்புறமாப் படிச்சவங்க ஸ்டான்டர்ட் ஆயிட்டாங்க! அதே போல் சென்னைப் பல்கலைக் கழகம் மூலமா எஸ் எஸ் எல்சி தேர்வு எழுதினதும் நான் படிச்சப்போத் தான். அதுக்கப்புறமா மதுரைப்பல்கலைக் கழகம் வந்து விட்டது.

முதல் முதல் அப்பா எனக்கு வேறே வழியில்லாமல் தான் பேனா வாங்கிக் கொடுத்தார். அண்ணாவுக்கு எட்டாம் வகுப்பு வரை பேனா கிடையாது. பென்சில் தான். அண்ணா படிச்ச பள்ளியிலேயே அப்பாவும் வேலை பார்த்ததால் வகுப்பு ஆசிரியரிடம் அப்பா சொல்லிடுவார். ஆனால் எனக்கோ ஆறாம் வகுப்பிலேயே பேனா, நோட் புத்தகங்கள் போன்றவை. அதிலும் எனக்கு ஒரு பாடத்துக்கு மட்டும் நான்கு நோட்டுகள். வகுப்பில் செய்யும் கிளாஸ் வொர்க், தேர்வுக்காகத் தனி, கணக்கைப் போட்டுப் பார்க்கத் தனியாக ஒன்று, வீட்டுப் பாடம் செய்து வரத் தனி நோட்டு! ஆகக் கணக்குக்கு 4, ஆங்கிலத்திற்கு 4, தமிழுக்கு 4, சயின்ஸ் எனப்படும் அறிவியலுக்கு 4, சமூகப் பாடம் எனப்படும் சோஷியல் சயின்ஸுக்கு 4.

இதைத் தவிரவும் ட்ராயிங் நோட்! அது தனியாப் பெரிசா இருக்கும். குடிமைப் பயிற்சிக்குத் தனி நோட்டு! நீதி போதனை வகுப்புக்கு இரண்டு நோட்டுக்கள் மட்டுமே!(போனால் போறதுனு!)  ஆனால் ஒரு வசதி என்னன்னா வகுப்பிலேயே தனித் தனி டெஸ்க் இருந்ததால் வேண்டாத நோட்டுக்களை அதிலே வைச்சு வீட்டிலிருந்து பூட்டுக் கொண்டு போய்ப் பூட்டிக்கலாம். ஆனால் சமயத்தில் கிளாஸ் வொர்க் நோட்டில் சில முக்கியமானவை எழுதி இருப்போம். வீட்டில் வந்து வீட்டுப்பாடம் செய்யும்போது அது தேவைப்படும். சரினு டெஸ்ட் நோட்டை வகுப்பறையில் வைக்கலாம்னா டெஸ்ட் எழுதி முடிச்சதும் அதே டெஸ்டை மறுபடி தப்பில்லாமல் எழுதணும். இதே போல் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, மாதிரித் தேர்வு போன்ற தேர்வுகளின் கேள்வித் தாள்களையும் அந்த டெஸ்ட் நோட்டில் எழுதிட்டுப் போகணும். ஆக அதையும் வகுப்பில் வைக்க முடியாது.

புத்தகங்களை மட்டும் வைக்க முடியுமா? அதுவும் முடியாது. ஆகவே மூட்டை தூக்கி முத்தக்காவாக எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிட்டுத் திரும்பத் தூக்கிட்டு வந்துனு! சரி, சரி, பேனாவில் ஆரம்பிச்சது எங்கேயோ போயிடுச்சே!  முதல் முதல் அப்பா வாங்கின பேனாவுக்குப் பெயர் ரைட்டர் பேனா! எனக்கு ஒரு மாதிரி பிஸ்கட் கலர், அண்ணாவுக்குக் கறுப்புக் கலர்.  எப்போவுமே மத்தவங்க வைச்சிருக்கிறது தானே நமக்குப் பிடிக்கும்! அதே மாதிரி அண்ணாவுக்கு என் பேனாவும் எனக்கு அண்ணாவின் பேனாவும் பிடிச்சது தான். ஆனால் ஒரு துரதிருஷ்டம் என் பேனா ஒருநாள் எழுதும்போது கீழே விழுந்து நிப் வளைந்து பட்டை அடிக்க ஆரம்பிச்சு விட்டது. துக்கம் தாங்கலைனாலும் அப்பா வேறே பேனா கிடையாது! இதை வைச்சே ஒப்பேத்துனு சொல்லிட்டார்.

பேனாக்கள் க்கான பட முடிவு

இங்குக்கு மாத்திரை எல்லாம் பார்த்தது இல்லை. இங்க் தான் அப்பா வாங்கி வருவார். ஃபில்லர் எல்லாம் கிடையாது. அப்படியே மெல்ல மெல்ல ஊத்திக்கணும். அப்போ ஒரு நாள் நான் சிறப்பு வகுப்பு முடிஞ்சு பள்ளியிலிருந்து தாமதமாக வந்து கொண்டிருக்கையில் கீழே ஒரு பேனா! நல்ல அரக்கு வண்ணப் பேனா! சுற்றும் முற்றும் பார்த்தால் அந்தச் சந்தில் யாரையுமே காணோம். அப்படியும் அந்தப் பேனாவை எடுத்துக் கொண்டு அக்கம்பக்கம் வீடுகளில் விசாரிச்சால் யாரும் எங்களோடது இல்லைனு சொல்லவே வீட்டுக்குக் கொண்டு வந்தேன். பேனா நன்றாக எழுதியது. அச்சுப் பொரிந்தாற்போல் என அப்போது சொல்லுவோம். அந்தப் பேனாவால் நான் எழுதிக் கொண்டிருக்கையில் எப்படியோ அப்பாவுக்குத் தெரிஞ்சு போச்சு. பேனாவை வாங்கிக் கொண்டு விட்டார். அதுக்கு எப்படி இங்க் போடுவதுனு புரியலை.

அப்புறமா அப்பாவே பேனாவைத் திறந்து பார்த்தார். உள்ளே இங்க் ஃபில்லருடன் கூடிய தங்க நிப்! அப்போது அதன் பெயர் பைலட் பேனா! விலை ஜாஸ்தியாக இருக்கும் என்றார் அப்பா. இதை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் போகக் கூடாதுனு சொல்லிட்டு அதை உள்ளே தன்னோட பெட்டியிலே வைத்து விட்டார். எனக்குப் புதுப் பேனாவும் கிடைக்கலை.  கண்டெடுத்த பேனாவும் கிடைக்கலை. இந்த ரைட்டர் பேனா கடைசியில் ஒழுக ஆரம்பித்து அப்படியும் புதுப் பேனா கிடைக்காமல் ஏங்கிக் கடைசியில் நான் எஸ் எஸ் எல்சி படிக்கும்போது நான் கீழே கண்டெடுத்த அரக்கு வண்ணப் பைலட் பேனாவை அப்பா எனக்குப் பரிட்சை எழுதக் கொடுத்தார்.

அந்தப் பேனா எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போய் அப்புறமாப் பல பரிட்சைகள் அந்தப் பேனாவால். முதல் முதல் வேலைக்குச் சேர்ந்ததும் வேலையில் சேரும் படிவத்தில் கையெழுத்துப் போட்டது அந்தப் பேனாவால் தான். அதுக்கப்புறமாச் சில வருடங்கள் என்னுடன் இருந்த அந்தப் பேனா கடைசியில் ஒரு நாள் என் பர்ஸை நான் பிக்பாக்கெட்டில் பறி கொடுத்தபோது அதோடு சேர்ந்து அதுவும் போய்விட்டது.  பல நாட்கள் துக்கமாக இருந்தது.  அதுக்கப்புறமா பால் பாயின்ட் பேனா வரவே கொஞ்சம் மனம் சமாதானம் ஆனது. ஆனால் முன்னெல்லாம் தேர்வுகள் எழுதவோ, வங்கிச் செக்கில் கையெழுத்துப் போடவோ பால் பாயின்ட் பேனாவைப் பயன்படுத்தக் கூடாது. அதே போல் வேலையில் சேரும்போதும் பால்பாயின்ட் பேனாவால் கையெழுத்துப் போடக் கூடாது!

வருடங்கள் செல்லச் செல்ல பால்பாயின்ட் பேனா இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றான பின்னர் அது அங்கீகாரம் பெற்றது. இப்போ எல்லாமே இணையம் மூலம்! பேனாவுக்கான அவசியமோ அவசரமோ இல்லை. ஒன்பது வயதாகும் எங்கள் அப்பு வீட்டுப்பாடத்தை ஐபாட் மூலம் செய்கிறாள். அவங்க பள்ளி ஆசிரியர் வீட்டுப்பாடம் பற்றிய குறிப்புக்களை மின் மடல் மூலம் அவங்க அம்மாவுக்கு அனுப்புகிறார். கையால் எழுத வேண்டிய பாடங்கள் மிகக் குறைவே! அதுவும் கையெழுத்துப் பழகணும் என்பதற்காகக் கொடுக்கிறார்கள்.  இன்னும் சில வருடங்கள் போனால் வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் கல்வி கற்றுத் தேர்வும் எழுதும் முறை வந்துவிடும்.

பி.கு. கடுகு  அவர்களின் "தாளிப்பில்" பேனா பற்றிய பதிவைப் படித்ததும் என் மனதிலும் பேனா குறித்த நினைவுகள்! அதன் பாதிப்பு! 

23 comments:

 1. பேனா நினைவுகள்.... எனக்குள்ளும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நீண்ட நாட்கள் கழித்து வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 2. ஒவ்வொருவர் மனதிலும் உள்ள நிலையை அழகாகப் படம் பிடித்துவிட்டீர்கள். எங்கள் நினைப்பும் அதுவே.

  ReplyDelete
  Replies
  1. வாங்க டாக்டர் ஐயா, கருத்துக்கு நன்றி.

   Delete
 3. ஓலைச்சுவடி காலத்தில் ஒரு சிலரே எழுத படிக்க தெரிந்தவர்களாக இருந்தார்களாம். படிக்க தெரிந்த எல்லோருக்கும் எழுதவும் தெரிந்திருக்காதாம். அதே நிலை மீண்டும் வரும் என்கிறார்கள். காரணம் கணினி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 4. கிட்டத்தட்ட ஒண்ணாம் க்ளாஸ் வரை கொண்டு சென்றுவிட்டீர்கள் எவ்வளவு நினைவுகள்!அருமை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஸ்வா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 5. இப்போதெல்லாம் இங்க் பேனா எங்கே பார்க்க முடிகிறது? எல்லாம் ரீபில் பேனாதான். இங்க் பேனாவால் எழுதினால் கையெழுத்தே வராது என்னுமளவு வழக்கொழிந்து போய்விட்டது. இன்னும் சொல்லப்போனால் இப்போதெல்லாம் ரீபில் பேனா கூட உபயோகிப்பதில்லை. எல்லாம் கீ போர்ட், விரல்கள்தான். பள்ளிப்பருவத்தில் பெரும்பாலும் நான் ஒழுகும் பேனாதான். ஆனால் கலர் கலராக, டிரான்ஸ்பாரெண்ட்டாக என்றெல்லாம் பேனாக்கள் வைத்திருந்தேன். குட்டி சைசில் பெரிய பேனா என்று ரகம் ரகமாக வைத்து வீண் செய்திருக்கிறேன்! என்ன பேனா இருந்தென்ன, என் கையெழுத்து கோழிக்கால் சீத்தல்தான்!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், ஆமாம், மசி ஊற்றி எழுதும் பேனாக்களைப் பார்க்கவே முடிவதில்லை. எங்க பொண்ணு படிக்கையில் பேனா மசியில் செல்பார்க் என்னும் ப்ரான்ட் மசி பிரபலமாக இருந்தது. நான் படிக்கையில் நீலம், நீலமும் கறுப்பும் சேர்ந்து, பச்சை, சிவப்பு நிறங்களில் மசி! :) பச்சையும் சிவப்பும் தவிர்த்து மற்ற இரண்டும் பயன்படுத்திக்கலாம் என்பார்கள். பச்சை அரசு அலுவலர்கள், சிவப்பு ஆசிரியர்களுக்கு என இருந்த நினைவு!

   Delete
 6. // அப்போது அதன் பெயர் பைலட் பேனா! //

  பைலட் பேனா என்று மறதியில் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஹீரோ பேனா தானே அரக்குக் கலரில் அப்படியிருக்கும்?..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜீவி சார்! ஹீரோனு ஒரு பேனா இருந்தது பற்றித் தெரியாது. இந்தப் பேனாவில் நிப்பிலும், பேனாவின் உடலிலும் மாட்டிக்கொள்ளும் தங்க நிறக் க்ளிப்பிலும் பைலட் எனப் பொறித்திருக்கும். மாட்டிக்கொள்ளும் க்ளிப்பில் எழுத்துக்கள் கையால் தொட்டால் நிரடும்! :) தொலைஞ்சது கிட்டத்தட்ட எண்பதுகளில் என்பதால் அந்தப் பேனா பற்றி நல்ல நினைவுகள் இன்னமும் இருக்கின்றன. :)

   Delete
  2. மசி ஊற்றப் பேனாவைக் கழற்றி உள்ளே நிப்போடு இருக்கும் ஃபில்லரை மசி பாட்டிலுக்குள் அழுத்தினால் போதும். அப்போல்லாம் அதுவே பெரிய ஆச்சரியம்!

   Delete
  3. ஹீரோ பேனா சைனா தயாரிப்பு. ஃடியூப் போன்ற பில்லரை மசி பாட்டிலுக்கும் நுழைத்து.. ஹீரோவும் அதே மாதிரி தான். டியூப்புக்குல் அடைந்திருக்கும் காற்றின் மூலம் மசி உரிஞ்சப்படுவதால மசி பாட்டிலுக்குள் பேனாவின் நிப் பகுதியை விட்டு ஒரு தடவை உறிஞ்சலில் கொஞ்சம் தான் மசி உள்ளே போகும். பேனாவை மறுபடியும் வெளியே எடுத்து (வெளிக்காற்று ட்யூபை நிறைக்க) மறுபடியும் மசி பாட்டிலுக்குள் உள்ளே விட்டு.. பேஜாரான வேலை. இதில் இன்னொரு சிரமமும் உண்டு. அரைகுறையாக ட்யூபில் நிறைந்திருக்கும் மசி, அடுத்த தடவை உறிஞ்சும் போது, திருப்பி மசி பாட்டிலுக்குள்ளேயே வெளியேறி விடும். இதனால் ஒரு தடவை உறிஞ்சிய பிறகு அந்த மசி வெளியேறாத வாறு சாய்த்துப் பிடித்தபடி மசி பாட்டிலுக்குள் விட்டு
   உரிஞ்ச வேண்டும். என்னதான் முயற்சித்தாலும் முக்கால் ட்யூப்புக்கு மேல் நிரம்பாது.

   ஹீரோ பேனா அந்தக் காலத்தில் பர்மா பஜார் போன்ற வெளிநாட்டுப் பொருள்கள் கிடைக்குமிடத்தில் மறைத்து மறைத்துத் தான் விற்பார்கள். இப்பொழுக்தெலாம் ஹீரோ பேனா வெளிமார்க்கெட்டுகளில் நிறையவே கிடைக்கிறது. இப்பொழுது கூட இரண்டு ஹீரோ பேனா கைவசம் உண்டு.

   அந்தக் காலத்தில் திருமண வைபவங்களில் இந்தப் பேனாவை நான் பரிசளிப்பதுண்டு. நா.பா.வுக்குக் கூட இந்தப் பேனா ஒன்றை முதல் சந்திப்பின் போது கொடுத்த நினைவு இருக்கிறது.

   Delete
  4. அப்போவே சீனத்தயாரிப்பு இந்தியாவில் கிடைத்தது என்பது ஆச்சரியமா இருக்கு. ஏனெனில் என் பேனா மஹாத்மியம் 60களின் நடுவில்! கிட்டத்தட்ட இந்திய சீனப் போர் சமயமோ?

   பேனாக்கள் பற்றி எனக்குத் தெரிந்தவை நான் முதல் முதல் எழுதிய ரைட்டர் பேனாவைத் தவிர, இந்தப் பைலட் பேனா, பார்க்கர் பேனா, ஃபவுன்டன் பேனா ஆகியவை தான். வேறு பேனாக்கள் இருந்திருந்தால் அவை பற்றி எனக்குத் தெரியாது. பர்மா பஜார் பற்றி எல்லாம் எனக்குக் கல்யாணம் ஆகி வந்து தான் தெரியும்.

   இங்க் பாட்டிலில் இருந்து பேனாவுக்கு இங்க் ஊற்ற மூடியில் ஊற்றிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டிருந்த எங்களுக்கு முதல் முதல் இங்க் ஃபில்லர் வாங்கிக் கொடுத்ததே ஏதோ நாகரிகத்தில்/ தொழில் நுட்பத்தில் (?) முன்னேற்றம் அடைந்த மாதிரி ஒரு நினைப்பு! :))))

   Delete
 7. எழுதுகோலும் பொத்தகமும்
  அறிவாளியின் இரு விழிகள்

  தங்கள் பேனா பற்றிய மீட்டல்
  இப்படி எழுத வைத்துவிட்டதே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி காசிராஜலிங்கம். உங்கள் கருத்துக்கு நன்றி.

   Delete
 8. சிலேட்டுக்குக் கிடைக்கும் குச்சி, கடலில் வாழும் உயிரினத்தின் கூடு. அதில் ஏகப்பட்ட குச்சிகள் இருக்கும். உங்களுக்கு அதன் படத்தை அனுப்புகிறேன். கலர் கலராக குச்சி நான் பார்த்ததில்லை. சாக்பீஸ்தான் பார்த்திருக்கிறேன். அதுவும் போர்டில் எழுத உபயோகப்படுத்துவது.

  எங்க அப்பா உபயோகப்படுத்தியது, ஒரு பக்கம் நீல மை, மற்றொரு பக்கம் கருப்பு மை உள்ள பெரிய பேனா. அப்புறம் அதை நான் உபயோகப்படுத்தினேன். எனக்கு பட்டையா எழுதினாத்தான் பிடிக்கும். அதுக்காக பேனா வாங்கிட்டு, அதன் நிப்பை மெதுவாகத் தேய்ப்பேன்.

  நீங்கள் படித்த காலத்தில், மேசையில் ஒவ்வொருவருக்கும் குழிவான பகுதியில் மசிக்கூடு வைத்திருப்பதற்கான இடமிருப்பதைப் பார்த்ததில்லையா? நான் அரசு மேல் நிலைப்பள்ளிகளில் பார்த்திருக்கிறேன் (அது என்னுடைய காலத்துக்கும் முந்தையது. அப்போது மசிக்கூடு மேசைமேல் வைத்து, தொட்டுத் தொட்டு எழுதுவார்கள். பேனாவில் மசி போடும் இடம் இருக்காது). நீங்கள் சொன்ன இங்க் பில்லருடன் கூடிய பேனா என்னிடமும் இருந்தது. 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே கதைதான்'.

  77ல்தான் முதல் முறையாக ஸ்கெட்ச் பேனா பார்த்தேன். 2 ரூபாய் கொடுத்து வாங்கினால், 2 கி.மீ தூரம் வரை எழுதும் என்ற அறிமுகத்தோடு.

  நான் 93 வரை கடிதம் எழுதும் வழக்கம் இருந்தது. அதுக்கு அப்புறம், கம்ப்யூட்டரில் எழுதி, ப்ரின்ட் எடுத்து, அதில் கையெழுத்திடும் வழக்கம் வந்தது.அப்புறம் எழுதுவதே அபூர்வமாகிப்போனது. நல்லவேளை, இந்தியாவில், படிக்கும்காலத்தில் எல்லா மாணவர்களும் தேர்வில் எழுதுவது கட்டாயம் என்று உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத் தமிழன், ஒரே குச்சியில் பல கலர்கள் உள்ள குச்சிகள் உண்டே! ஹிஹிஹி, சிலேட்டில் எழுதும்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு நிறத்தைப் பயன்படுத்தி எழுதுவேன். குச்சி இரவல்களும் தரப்படும், மறுக்கவும் படும். இதிலே கறுப்புக்குச்சி என்ற ஒன்று உண்டு. சிலேட்டில் எழுதும்போது வெள்ளையாக இருந்தாலும் நிறம் கறுப்பு. செங்கல் குச்சி செங்கல் நிறத்திலேயே இருக்கும். வெள்ளைக் குச்சியைப் பால்க் குச்சி என்போம்.

   Delete
 9. என் பள்ளி இறுதி படிப்பு வரை பேனாவை உபயோகப்படுத்தியது இல்லை இங்க் பாட்டிலில் இருந்து ஒற்றி எழுதும் பேனாதான் கூடவே ப்ளாட்டிங் பேப்பரும் முதல் பேனா பள்ளி இறுதி கடைசி பரிட்சையில்தான் என்னிடம் இருந்த பேனாவை ஒரு பொக்கிஷம் போல் வைத்திருந்தேன் எல்லாவற்றுக்கும் ஒரு ஆயுள் உண்டல்லவா

  ReplyDelete
  Replies
  1. ஒற்றி எழுதும் முறை குறித்து எனக்குத் தெரியலை. ஆனால் நான் படிக்கையில் ஆறாம் வகுப்பில் இருந்து பேனா, பென்சில்.

   Delete
 10. சிலேட்டுக் குச்சி, பென்சில் அப்புறம்தான் பேனா...எல்லா வகைப் பேனாவும் பயன்படுத்தியதுண்டு இப்போதும் பேனாதான் எனக்கு எழுத..என்ன...இங்க் பேனா அல்ல ரீஃபில் பேனாதான்..இப்போதும் பேப்பரில்தான் எழுதுகிறேன்...பழகிவிட்டது! ஆசிரியராக இருப்பதாலோ என்னவோ...

  கீதா: எங்கள் ஊரில் குச்சி நிறைய கிடைக்கும். வித விதமாகக் குச்சி. கடல் சார்ந்த ஊராச்சே!! சிலேட்டும் குச்சியும்....5 6 7 வகுப்புகளில் கூட கணக்கு போட்டுப் பார்க்க பெரிய சிலேட்டும் குச்சியும் தான் வீட்டில் பயபடுத்தச் சொல்லுவார்கள் பேப்பர் வாங்க முடியாது என்று.

  அப்புறம் பென்சில் ரப்பர். அப்புறம்தான் இங்க் பேனா...பள்ளியில் 4 ஆம் வகுப்பிலிருந்து பேனாதான்....இங்க் ஒழுகி வெள்ளைச் சட்டை யூனிஃபார்ம் எல்லாம் ஆகும்...கையில் ஒட்டிக் கொள்ளும்...திட்டு வாங்குவது வழக்கம். நோட் புக், புத்தகம் எல்லாம் மை ஆகிவிடும். எங்களூரில் மழை அதிகம் என்பதால் மழைக்காலத்தில் நோட்டுகள் நனைந்த்து வீட்டுப்பாடம் எல்லாம் அழிந்து டிசைன் ஆகியிருக்கும். வகுப்பில் திட்டு வாங்கி...அப்போதெல்லாம் ப்ளாஸ்டிக் பைகள் கவர்கள் அவ்வளவாகக் கிடையாதே. பேப்பர் பைகள் தான்..அதனால் தடிமனான ப்ளாஸ்டிக் ஷீட்டை வீட்டில் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி வைத்துக் கொண்டு அதால் னோட் புத்தகங்களைக் கவர் செய்து கொண்டு செல்வது வழக்கம். பெரிய குடும்பம் வேறு. அப்புறம் காலேஜ் போன பிறகும் கூட இந்தப் பார்க்கர் பேனா வைத்திருந்தால் பெருமைக்குரியது. யாராவது பார்க்கர் கிஃப்ட் கொடுத்தால் அது பெரிது....எல்லா வகைப் பேனாவும் ப்யன்படுத்தியதுண்டு. அப்புறம் ரீஃபில்...இப்போது ரீஃபில் தான் என்றாலும் அதை விட கீபோர்டும் விரல்களும்...

  பல நினைவுகளை மீட்டெடுத்த பதிவு குறிப்பாக நோட்புக்கில் எழுதியது எல்லம் மழையில் கோலங்களாக மாறியதும் திட்டல்களும்...

  ReplyDelete
  Replies
  1. இப்போதெல்லாம் பால் பாயின்ட் பேனா தானே! முன்னெல்லாம் பென் செட் பரிசாகக் கொடுப்பது வழக்கம். அதில் பல பேனாக்களில் நிப் தங்கத்தில் இருக்கும். வெள்ளிப் பேனா செட் ஒன்று கூட எங்கள் பையருக்குப் பரிசாகக் கிடைத்தது! பார்க்கர் பேனா கிஃப்டாகக் கிடைத்தது இல்லை.

   Delete