எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 09, 2017

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

இப்போதெல்லாம் மாடுகளை வைத்து உழுவதை எங்கேயானும் பார்க்க முடிகிறதா? இன்றைய குழந்தைகள் தான் அதை நம்புவார்களா? எங்கள் பேத்தி அப்புவிடம் என் கணவர் பேசிக் கொண்டிருந்தப்போ அவங்க வீட்டில் மாடு, கன்றுகள் எல்லாம் இருந்ததைப் பற்றிக் கூறியதை அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். மாடெல்லாம் வீட்டில் வைச்சுக்க முடியுமா என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே போல் சென்ற வருஷம் நவராத்திரிக்கு எங்க வீட்டுக்கு வெற்றிலை, பாக்குக்கு வந்திருந்த ஓர் இளம்பெண், நாங்க சென்னை வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த அம்மி, குழவி, கல்லுரல், குழவியைப் பார்த்து ஆச்சரியத்துடன் இது என்னத்துக்கு என்றாள். சுமார் 25 வயதுக்குள் இருக்கும் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகி விட்டது. திருச்சி தான் ஊர் என்றாலும் கல்லுரல், அம்மி போன்றவற்றைப் பார்த்ததே இல்லையாம். அதே போல் தான் இப்போது உழவு மாடுகள், வண்டி மாடுகள் ஆகியனவும் காட்சிப் பொருளாக மாறி வருகின்றன.

வண்டி மாடுகள், உழவு மாடுகள் போன்றவை அடியோடு காணாமல் போக டிராக்டர்கள் மட்டும் காரணம்னு சொல்ல முடியாது. முன்பெல்லாம் அதாவது கிட்டத்தட்டப் பத்துப் பதினைந்து ஆண்டுகள் முன்னர் வரையும் கூட அறுவடைகளை மனிதர்களே செய்து வந்தார்கள். இப்போது அதற்கும் இயந்திரம் வந்தாச்சு. அது மனிதர்களைப் போலவா அறுத்து எடுக்கும்? முன்னர் முழுமையாகக் கிடைத்து வந்த வைக்கோல் இப்போது துண்டு துண்டாக எதற்கும் லாயக்கில்லாமல் போகிறது. முழுமையாகக் கிடைக்கும் வைக்கோலைச் சரியான முறையில் பதப்படுத்தி வைக்கோல் போர்களாக வைத்திருப்பார்கள். வருஷம் முழுவதும் கால்நடைக்கு உணவாக ஆகும். இடையிடையே பருப்பு போன்றவற்றின் காய்ந்த கொடிகள் போன்றவை, அவ்வப்போது மேய்ச்சலுக்கு அனுப்புவது என்பதும் நடக்கும். கதிர் அறுத்து அதை  போரடித்த பின்னர் நெல்லை அரிசியாக்கிப் பிரித்த பின் கிடைக்கும் தவிட்டையும் மாட்டுக்குப் போடலாம். ஆனால் நவீன முறையில் தவிடு பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் கிடைப்பதாகத் தெரியவில்லை! :( இப்போதெல்லாம் தவிட்டையோ உமியையோ பார்க்கவே முடியலை. முன்பெல்லாம் பல் தேய்க்கவே உமிக்கரிதான் பயன்பாட்டில் இருந்தது. இதைத் தவிரப் பருப்புக்கள் விளைந்த பின்னர் கிடைக்கும் பொட்டு என்னும் தவிட்டு உமி(?)யையும் மாடுகளுக்குப் போடுவார்கள். அதிலும் எருமை மாடுகள் பொட்டு வைத்தால் தான் பால் கறக்கும்.  எனக்குத் தெரிந்து எண்பதுகளின் கடைசி வரையிலும் மாடு வைத்திருப்பவர்கள் அக்கம்பக்கம் வீடுகளில் உள்ளவர்களிடம் இருந்து கழுநீர், காய்கறிக்கழிவுகள், மிச்சம் இருக்கும் சாதம் போன்றவற்றை வாங்கி வந்து மாடுகளுக்குப் போடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கழுநீர்ப்பானை ஒன்று கட்டாயம் இருக்கும். இப்போது மாடுகள் கழுநீர் குடிக்கின்றனவா என்பதே சந்தேகம்!

பருத்திக்கொட்டையை ஊற வைத்து அரைத்து மாட்டுக்குப் போடுவார்கள். எண்ணெய் எடுத்த பின்னர் கிடைக்கும் கடலை, எள்ப் பிண்ணாக்கும் போடுவது உண்டு. எள்ளுப் பிண்ணாக்குச் சாப்பிட்டால் எருமைப்பால் தனியான வாசத்துடன் கிடைக்கும் என என் மாமனார் வீட்டில் சொல்வார்கள். அந்தப் பாலின் ருசியே தனி என்பார்கள்.  ஆனால் இப்போது எண்ணெய் ஆட்டுவதும் இயந்திரங்கள் மூலம்! ஆகவே முன்போல் பிண்ணாக்கு போன்றவை இப்போது மாடுகளுக்கு உணவாகக் கிடைப்பதில்லை. நகரங்களில் வளர்க்கப்படும் கால்நடைகள் பலவும் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள், ப்ளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்றவற்றை உணவாக உண்ணும் அவலம்! அதோடு இல்லாமல் பல்லாண்டுகளுக்கு முன்னரே மாடுகளைச் சினைக்கு விடும்போது இயற்கை முறையில் கருத்தரிக்க விடாமல் ஊசி மூலம் கருத்தரிக்க வைக்க ஆரம்பித்தாகி விட்டது. இதில் நாட்டு மாடுகளின் கன்றுகள் எப்படி வரும்?  அப்படியே காளைக்கன்றுகள் பிறந்தாலும் அவை மாட்டிடம் பால் குடிக்க அனுமதிப்பது மிகக் குறைவு! எத்தனை இடங்களில் வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டிகளை வைத்துக் காட்டி மாடுகளை ஏமாற்றிப் பால் கறப்பது நடக்கிறது! பசு மாட்டிற்குக் கன்று இல்லை எனில் அந்த மாட்டுப் பாலை முன்னெல்லாம் குடிக்க மாட்டார்கள். கோயில் அபிஷேஹம் போன்றவற்றிற்கும் கொடுப்பதில்லை. இப்போதெல்லாம் அவ்வளவு பார்ப்பதில்லை என்றாலும் கவர் பால் கொடுக்கவும் ஆரம்பித்து விட்டதாலும் மாடுனு ஒண்ணு இருக்கு, நமக்குப் பால் அதன் மூலம் தான் வருதுனு எண்ணமே நமக்குத் தோன்றுவதில்லை.

அப்படியே காளைக்கன்று உயிர் பிழைத்தால் கூட அதற்குச் சரியாகத் தீனி போட்டு வளர்த்துப் பொலிகாளையாக வைக்க இப்போதைய நிலையில் சாதாரணக் குடும்பத்தால் இயலாத காரியமாகவும் ஆகி விட்டது. பெரிய பெரிய மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களால் தான் முடியும் என்றாகி விட்டது. முன்னெல்லாம் மாட்டைக் கிடைக்கு விடுவது என்றொரு பழக்கம் உண்டு. ஊரில் உள்ள மாடுகளை எல்லாம் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிரண்டு குடும்பங்களின் மேற்பார்வையில் பொது நிலத்தில் மேய்ச்சலுக்கு விடுவார்கள். அவரவர் சொந்த வயலிலும் மேயும். இதன் மூலம் வயல்களுக்கு இயற்கை உரம் கிடைப்பதோடு அல்லாமல் மாடுகளும் இயற்கையான முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டு.  இப்போதெல்லாம் மாடுகளை மேய்க்க அனுப்பினாலும் அவை எதைச் சாப்பிடுகின்றன என்பதைக் கண்காணிப்பது சிரமம் என்னும்படிக்குக் கழிவுகள் எங்கே பார்த்தாலும் கிடக்கின்றன.

அதோடு இல்லாமல் நாட்டு மாடுகள் மூலம் அதிகபட்சமாக ஐந்து லிட்டர் வரை பால் கறக்கலாம். ஒரு சில அதிகம் கொடுக்கலாம். அதே கலப்பினப் பசுக்கள் குறிப்பாக ஜெர்சி வகைப் பசுக்கள் பால் அதிகம் கொடுக்கும். நீண்ட நாட்களும் கொடுக்கும்.  ஆகவே பெரும்பாலான மாட்டு ஆர்வலர்கள் அதிக லாபத்தை நோக்கிப் படை எடுக்க நேர்ந்தது. மாட்டைப் பராமரிக்கப் பணமும் தேவை அல்லவா? அதோடு மாட்டை நம்பிப் பிழைப்பு நடத்துபவர்கள் அதன் மூலம் லாபம் தானே எதிர்பார்ப்பார்கள்? அவர்களின் வாரிசுகள் அதே மாதிரி மாட்டைப் பராமரித்துக் கொண்டு இருக்கவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள் அல்லவா? வீட்டில் ஒரு செல்ல நாய் வளர்த்தாலே வீட்டுக்குடையவர்கள் வெளியே செல்வது அரிது. அப்படி இருக்கையில் மாடுகளைப் பராமரிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது மாட்டை வளர்த்துப் பார்த்தால் தான் புரியும்.

காலை, மாலை இருவேளை மாட்டைப் பால் கறப்பதோடு வேலை முடியவில்லை. தொழுவத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். தினம் தொழுவத்தில் மாடுகள் போடும் சாணியை அகற்றி அவற்றை முறைப்படிப் பதப்படுத்தி, மாடுகளுக்குத் தீனியை அளவாகப் போட்டு, கழுநீர் போன்ற குடிக்கும் திரவங்கள் வைக்கும் தொட்டியை நிரப்பி, தண்ணீர்த் தொட்டியை நிரப்பி அவற்றுக்குச் சரியான நேரத்தில் தண்ணீர் காட்டி, உடலில் தோன்றும் காயங்களுக்கு மருந்திட்டு, மாட்டு உண்ணியை எடுத்து மாடுகளைச் சுத்தம் செய்து குளிப்பாட்டி, ஊரில் கால்நடைகளுக்குத் தொற்று நோய் வரும்போது அவற்றைப் பாதுகாத்து, அடிக்கடி கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டி, சரியானபடி மருந்துகளைக் கொடுத்து என ஒரு மாட்டுக்கே இவ்வளவு பாடு! மாட்டுச் சொந்தக்காரர் எங்கேயானும் பக்கத்து ஊருக்குப் போவதானால் கூட மாட்டைப் பார்த்துக்க ஓர் ஆளை நியமிக்காமல் போக முடியாது. ஆனால்   ஒரு விஷயம் ஒத்துக்கத்தான் வேணும். இந்தத் தொற்று நோய்க்குக் கலப்பின மாடுகள் எளிதில் பலியாகும். நாட்டு மாடுகள் தாக்குப் பிடிக்கும்!  அதோடு ஜெர்சி மாடுகளை இயற்கை முறையிலோ, செயற்கை முறையிலோ சினைப் பிடிக்க வைப்பதும் கடினம். நாட்டு மாடுகள் அந்த விஷயத்தில் இரண்டையும் ஏற்றுக்கொள்ளும்.

அதையும் மீறி மாடுகளை வளர்த்துப் பராமரிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனாலும் நவீன தொழில் நுட்பம், மாடு வளர்ப்பவர்களின் பிள்ளைகள், பெண்கள் படித்து வெளியூர்களில் வேலை பார்க்கச் சென்று விடுதல், அப்படியே ஊரோடு இருந்தாலும் அவர்கள் தாங்களும் மாடுகளோடு போராட விரும்புவதில்லை என்பதும் உண்மை. கௌரவம் பார்க்கும் மனிதர்களும் உண்டு.  ஆக மொத்தம் நாட்டுமாடுகள் அழிந்ததற்கோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாய் அழிவதற்கோ நாமே தான் காரணமே அன்றி ஜல்லிக்கட்டோ,ஏறு தழுவதலோ, ரேக்ளா ரேஸ் தடையோ காரணமே அல்ல! இன்னிக்குத் தான் என் கணவர் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். அதில் நீலகண்ட தீக்ஷிதர் கலிகாலத்தில் எப்படி எல்லாம் மாற்றங்கள் வரும் என்பதைப் பட்டியல் இட்டிருக்கிறாராம். ஆகவே கலிகாலம் இது என்பதை நம் மனதில் கொண்டு நடக்கும் எல்லாவற்றுக்கும் நாமே காரணம் என்பதைப்புரிந்து கொண்டால் பிரச்னையே இல்லை.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

18 comments:

 1. விஞ்ஞான வளர்ச்சியில் ஒவ்வொன்றுக்கும் மெஷினைக் கண்டுபிடித்து வேலையை எளிதாக்கிக் கொள்வதாய் நினைத்து மனித வாழ்வின் மேன்மைகளை இழந்துகொண்டு வருகிறோம். கும்பகோணம் அருகே பண்ணை வைத்து விவசாயத்திலும் ஈடுபட்டிருக்கும் என் நண்பர் ஒருவர் "முன்னெல்லாம் தஞ்சையை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்போம். அதுவும் போச்சு. சோழநாடு சோறுடைத்து என்று படித்தோம். அதுவும் பழங்கதையாய் ஆச்சு.. சாலைகளில் எல்லாம் கதிரறுத்துக் கொட்டி வைத்திருப்பார்கள். பாதி வயல்களையே காணோம்.... மீதி காய்ந்து கிடக்கிறது.." என்று வேதனையுடன் கூறினார்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நவீன தொழில் நுட்பம், மாறி வரும் கலாசாரம் போன்றவை தான் இவற்றுக்கெல்லாம் முக்கியக் காரணம். :( வயல்கள் எல்லாம் கட்டிடங்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும், ஹோட்டல்களாகவும் மாறி வருகின்றன. இப்போது தான் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதால் கொஞ்சம் குறைந்து வருகிறது.

   Delete
 2. Replies
  1. வாங்க டிடி, ஆமாம், கலி தான்! :)

   Delete
 3. மிகச்சரியாக அலசி இருக்கின்றீர்கள்
  எங்கள் வீட்டுக்கு எனது அம்மா வைக்கும் கழுநீருக்காக தினம் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த மாடு வருகிறது இன்றுவரை...

  ReplyDelete
  Replies
  1. சென்னை அம்பத்தூர் வீட்டிற்கும் இரண்டு மாடுகள் விடாமல் வரும். ஆனால் அன்புத் தொல்லை அதிகம் ஆகிவிட்டது! என்னைத் தெருவிலே பார்த்தாலே இரண்டும் ஓடோடி வந்து செல்ல முட்டு முட்டிக் கீழே தள்ளும்.

   Delete


 4. "தீதும் நன்றும் பிறர் தர வாரா! "--( what you sow , so will you reap )..என்பதில் அசையாத நம்பிக்கை உடையவன் ...என்று பெருமைப்படுகிறேன் ...( என்னுடைய ' theosophy '
  connection -ஆல் ஏற்பட்ட கொள்முதல் ..)...இதை வெறும் ' நம்பிக்கை' என்று குறிப்பிடுவது கூட தவறு ..
  இதில் அடங்கியிருக்கும் ஆன்மிகக் கருத்தை நன்கு 'உள்வாங்கி கொண்டு ' என் சிந்தனை முழுதுமே இந்தக் கருத்திற்கேற்ப அமைகிறாற்போல் தான் மனத்தளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ( வெளியுலகிற்குத் தெரியாது .. !)
  இந்தக் கொள்கையின் corollary தான் .." என் கையில் எதுவுமில்லை ..எல்லாம் நீ விட்ட வழி "என்ற பிரபத்தி கொள்கை .. 'பிரபத்தி ' செய்தவன் தான் வைஷ்ணவன் எனப் படுகிறான் ..அந்த விதத்தில் நான் பரம வைஷ்ணவனே !

  மாலி .

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார், உங்க வரவு அபூர்வமா இருப்பதைப் போல் கருத்துகளும் அமைந்து விடுகின்றன. நானும் பல சமயங்களிலும் இப்படித் தான் இருக்கணும்னு நினைக்கிறேன். என்னையும் மீறி மனம் கடினப்பட்டு விடுகிறது. ஆனால் பின்னர் நினைத்து வருந்துகிறேன். :)))) பெ.பு. பி. பு. தானே! :) உண்மையான பொருள் வேறாக இருந்தாலும்! :))))

   Delete
 5. பிரச்சனையின் மூலத்தைக் கோடி காண்பித்துவிட்டீர்கள். அந்தக் காலத்தில் பயணம் என்பதே அபூர்வம். இப்போ அப்படியா? அதுவும்தவிர எத்தனை எத்தனை பொழுதுபோக்குகள் வந்துவிட்டன (தொலைக்காட்சி, சினிமா, வெளியூர் கோவிலுக்குப்போவது, சுற்றுலா....). வீட்டு மாடுகளுடன் அத்தனை நேரம் செலவழிக்க மனசோ நேரமோ இருக்குமா?

  'சோழ வளனாடு சோறுடைத்து' என்பதெல்லாம் அந்தக் கால நிலையல்லவா? இப்போ எல்லோரும் சாப்பிடுவது வேறு வேறு நாடுகளில் விளைந்தவையல்லவா (பாகிஸ்தான் பாஸ்மதி, ஆஸ்ரேலியா ஓட்ஸ், கேரட், சைனா/நேபாள நூடுல்ஸ்..... இதைப் பற்றியே பெரிய இடுகை நீங்கள் எழுதலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இந்த விஷயத்தில் இன்னும் எழுத நிறைய இருக்கு! இங்கே தமிழ்நாட்டில் அநேகமாக எல்லோரும் கர்நாடகா சில்க் பொன்னி தான் சாப்பிடறாங்கனு நினைக்கிறேன். இதைக் குறித்து நிறைய எழுதலாம் தான். ஆனால் அரிசி குறித்து ஓர் பதிவு ஏற்கெனவே போட்டிருக்கேன். :)

   Delete
 6. ஒருமுறைகாரில் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தோம்வழியில் ஓரிடத்தில் நெற்கதிர்களை அடித்து நெல்லை சாலையில் காயப்போட்டிருந்தார்கள். நாங்கள் காரை நிறுத்தி அவர்களிடமொரு நெற்கதிரை வாங்கி என் பேரக்குழந்தைகளுக்கு நெல் மற்றும் சாகுபடி பற்றி விளக்கினோம் நெற்கதிரையே பார்த்திராத என் பேரக் குழந்தைகள் அங்கிருப்பவர்களுக்கு ஆச்சரியமாய்க் காட்சி அளித்தார்கள் அதுவும் ஒரு அனுபவம்

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளையா எங்க குழந்தைங்களுக்கு அந்த நிலைமை ஏற்படாமல் கிராம வாழ்க்கையும் பார்த்திருக்காங்க. எங்களுக்கும் எங்களோட பேரக் குழந்தைகளுக்குத் தான் எதுவும் தெரியாது. :)

   Delete
 7. உங்கள் பதிவைப் படித்ததும், எங்கள் அம்மாச்சி கிராமத்தில் பள்ளி கோடை விடுமுறை நாட்களைக் கழித்த நினைவுகள் வந்தன. இன்னும் கூடவே பழைய விகடன்களில் வந்த மெட்ராஸ் பால்காரர் ஜோக்குகளும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார், மெட்ராஸ் பால்காரர் ஜோக் உண்மை என்பதை அறுபதுகளில் பார்த்தப்போ அதிர்ந்து தான் போனேன்! :)

   Delete
 8. எங்கள் சொந்த ஊரில் எங்கள் வீட்டில் பசு மாடுகள் இரண்டு, எருமை மாடுகள் நான்கு, இதைத் தவிர, காளை மாடுகள் ஆக மொத்தம் நாற்பது மாடுகளுக்கு மேல் உண்டு. மூன்று மாட்டு கொட்டில்களில் மாடுகள் கட்டப் பட்டிருக்கும். கழு நீர் தொட்டியே மிகப் பெரியது. நீங்கள் எழுதி இருப்பது போல வீட்டில் பணி செய்யும் பெண்மணி முதலில் மாட்டுக் கொட்டில்களை சுத்தம் செய்து விட்டுதான் வீட்டு வேலையை ஆரம்பிப்பார்.

  நாங்கள் ஸ்ரீரெங்கத்தில் கூட 1981 வரை மாடு வைத்திருந்தோம். அப்போதெல்லாம் ஸ்ரீரெங்கத்தில் பெரும்பான்மையான வீடுகளில் மாடு வைத்திருப்பார்கள். திருமஞ்சன காவேரி எனப்படும் வாய்க்காலில்தான் தினசரி மாடுகளை குளிப்பாட்டுவோம்.(அதற்கு தனி ஆள்), கொட்டில் கூட்டி சுத்தம் செய்ய தனி ஆள், பால் கறக்க கோனார், என பராமரிப்பது கஷ்டமாக போனதால், மாடு வைத்துக் கொள்வதை கை விட்டோம்.

  உங்கள் பதிவு பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டது. பை தி வே, நீங்கள் கூறியிருப்பது உண்மைதான். ஆனால் திரும்பி வர முடியாத தூரத்திற்கு சென்று விட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி! உண்மையில் நாம் எங்கேயோ போயிட்டோம். இனிமேல் பழைய மாதிரி வாழ நம்மாலேயே முடியாது என்பது தான் கசக்கும் உண்மை! :( எங்க மாமனார் வீட்டில் மாடுகளை மாமனாரும், மாமியாருமே கறப்பார்கள். என் கணவர் ஊரில் இருந்தவரை அவர் மாடுகளை முக்கியமாய் எருமை மாடுகளைக் கறப்பதுண்டு என்று சொல்வார். ஆளெல்லாம் வைத்ததில்லை. பண்ணையில் வேலை செய்யும் ஆளும், அவர் மனைவியும் தான் மாட்டுக்கொட்டிலைக் கவனித்துக் கொள்வார்கள்.

   Delete
 9. அப்படியே என் மன எண்ணங்களின் பிரதிபலிப்பு கீதாக்கா!!!

  டிட்டோ...விவசாயம் அழிந்துவருவதைப் பார்க்கும் போது என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. நானும் விவசாயப் படிப்பு படித்து குறிப்பாக விவசாயமும், நீர்மேலாண்மையும் என்பதில் ஆராய்ச்சி செய்து விவசாயத்தில் செல்ல வெண்டும் என நினைத்து முடியாமல், மகனும் அதில் ஆசை கொண்டு கால்நடை மருத்துவன் என்பதால் அவன் மாட்டு ஸ்பெஷலிஸ்ட் ஆக நினைத்து அப்படியேனும் விவசாயத்தில் இறங்காலாம் என்று நினைத்து ...னைத்து....த்து..து....இப்போது மகன் பெட் அனிமல்ஸ் பக்கம் போயிருந்தாலும் அவனுக்கு இன்னும் மாடு எண்ணம் தீரவில்லை. அதில் எப்படியேனும் இறங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பார்ப்போம் எதிர்காலம் என்ன வைத்திருக்கிறதோ. ஆனால் நம்பிக்கை இருக்கிறது. அதற்குள் நிலம் எல்லாம் இல்லாமல் ஆகிவிடக் கூடாது!!!

  இறுதி பாரா உண்மையே!

  எனக்கு என் கிராமத்து நினைவுகள்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மிச்சம் இருக்கும் நிலங்களாவது காப்பாற்றப்பட வேண்டும். அதே போல் சொட்டு நீர்ப்பாசனத்தையும் அறிமுகம் செய்தால் நன்று.

   Delete