எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 02, 2017

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

வடகிழக்குப் பருவ மழைக்காலம் இப்போத் தான் ஆரம்பம்! நான்கைந்து நாட்களுக்குள் தான் ஆகிறது. சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இரண்டு நாட்களோ என்னமோ மழை பெய்திருக்கு போல! ஏனெனில் இங்கே திருச்சி/ஶ்ரீரங்கத்தில் அவ்வளவு மழை இல்லை! அதுவும் ஶ்ரீரங்கத்தில் தூறினாலே பெரிய விஷயம்! இங்கே வந்த இந்த ஐந்து வருஷங்களில் நல்ல மழை ஒரு இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் பெய்து பார்க்கவே இல்லை! இந்த வருஷம் இங்கேயும் தண்ணீருக்குக் கஷ்டம் தான் என்று திருச்சி வாழ் மக்கள் சொன்னார்கள். இங்கே எங்களுக்குக் காவிரிக்கரையோரம் என்பதால் அதிகம் பிரச்னை இல்லை. போரில் வேலை செய்தாலோ, அல்லது தண்ணீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்தாலோ அன்று தண்ணீர் வராது. முன்கூட்டியே சொல்லி விட்டால் பிடிச்சு வைச்சுடலாம். பெரிய அளவில் பிரச்னை இல்லை. மழை இல்லாமல் இங்கே காய்கறிகள் விலை எல்லாம் தாறுமாறாக ஏறிக் கிடக்கின்றன.


சென்னைக்குப் பல இடங்களில் இருந்தும் காய்கள் வரும்! அப்படியும் அங்கும் விலை ஏற்றம் தான். ஏனெனில் மக்கள் பெருக்கம். காய்களுக்கு உள்ள தேவை! சுற்று வட்டாரங்களில் மழை பொழிந்து காய்கறிகள் பயிரிடுவோர் தண்ணீர்க் கஷ்டம் இல்லாமல் இருந்தால் தான் காய்கள் விலை குறைய வாய்ப்பு! 2015 ஆம் வருஷத்தில் பெய்த மழையினாலும் வெள்ளத்தினாலும் சென்னை வாசிகள் மழை என்றாலே பயப்படுகிறார்கள். இது ஓர் உளவியல் பிரச்னையாகவே இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. ஏனெனில்
 சென்னையில் தண்ணீர்ப் பிரச்னை தீராத பிரச்னை! அங்குள்ள ஏரிகள் எல்லாம் கூறுபோடப் பட்டு வீடுகளாகவும், குடியிருப்புகளாகவும் மாறி எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன. அம்பத்தூரில் இருந்து கொரட்டூர் ஏரிக்குச் செல்லும் மழைநீர் வாய்க்காலை எல்லாம் ஆக்கிரமித்தாயிற்று. இப்போ மழைநீர் சாலைகளில் தான் தேங்கும்! அது போகும் வழியெல்லாம் மூடி எந்தக் காலமோ ஆகிறது. இப்படி இருக்கும்போது தண்ணீர் சாலைகளில் தேங்குகிறது என அரசைச்  சாடுவது எந்த விதத்தில் நியாயம்?

மின் வாரியம் மின்சாரத்தைத் துண்டித்தால் மின் வாரியத்தைத்திட்டும் நாமே மின்சாரத்தின் மூலம் இறப்போரைக் குறித்தும் அதே மின் வாரியத்தைச் சாடுகிறோமே! தண்ணீர் சாலைகளில் அதிகம் தேங்கி இருந்து மின்சாரக் கம்பங்கள் அருகே, மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்கள் அருகே எல்லாம் நீர்த் தேக்கம் இருந்தால் மின் வாரியம் மின்சாரத்தைத் துண்டிக்கத் தான் செய்யும். அப்படி எல்லாம் கவனமாக இருந்தும் இரு சிறு பிஞ்சுக்குழந்தைகள் உயிர் இழந்திருக்கின்றன. இதற்குக் காரணமானவர்கள் என்று சிலரைத் தாற்காலிகமாக வேலை நீக்கம் செய்திருக்கிறார்கள். ஆகவே முன்கூட்டியே மின்சாரத்தை எச்சரிக்கை உணர்வோடு துண்டித்தால் பொதுமக்களாகிய நாம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இருக்கும் கொஞ்ச, நஞ்ச ஏரிகளையும் தூர் வாரி மழைநீர் சேமிக்கும்படி பண்ண வேண்டும், அதை விடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கொள்கிறது.  சாலைகளில் வெள்ளம் என்று சென்னையை மட்டுமே தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். அரசைக் குற்றமும் சொல்கிறார்கள். ஆனால் முகநூலில் இன்று ஒரு நண்பர் எழுதி இருந்ததில் அவர் கொளத்தூரில் இருந்து மயிலாப்பூர் வரை சென்று திரும்பியதில் சாலைகளில் நீர்த்தேக்கத்தைக் காண முடியவில்லை என்றும், ஆங்காங்கே குப்பைகளைத் துப்புரவுப் பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றி வந்தார்கள் எனவும் சொல்கிறார். இத்தனைக்கும் அவர் ஷேர் ஆட்டோவில் கொளத்தூரில் இருந்து அண்ணாநகர் திருமங்கலம் வரையும், அங்கிருந்து மயிலாப்பூர், மந்தவெளிக்குப் பேருந்திலும் தான் சென்றிருக்கிறார். அதுவும் பகல் நேரம்! பீக் அவர்ஸ் எனப்படும் போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரம். எல்லோரும் நம்மைப் போன்ற மனிதர்கள் தாமே! அவர்களுக்கும் குடும்பம், வீடு, பிள்ளைகள் இருக்கின்றனர் அல்லவா? அவற்றை எல்லாம் மறந்து தான் நம்போன்றவர்க்கு சேவை செய்ய வருகின்றனர்.


அதோடு இல்லாமல் 2015--2016 மழை, வெள்ளத்தின்போது கொடுத்த செய்திகளை இப்போது புதிய செய்தி போல் வாட்ஸப், முகநூல் மூலம் பரப்பி வருகின்றனர். அந்தச் செய்தியில் கொஞ்சமும் உண்மை இல்லை. அதை நம்பி யாருக்கும் அனுப்பாதீர்கள்! தேவை எனில் அதில் உள்ள தொலைபேசி எண்களுக்குத் தொலைபேசி உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் செய்தியை மற்றவர்க்கு அனுப்புங்கள்.

ஆகவே தொடர்ந்து நேர்மையான முறையில் செய்திகளைப் பொதிகை போல் தரும் செய்தி சானல்களை மட்டுமே பாருங்கள்! சென்னையில் மழை  நின்றால் போதும் என நினைக்காதீர்கள். மழை வேண்டும். அதிலும் சென்னை வாழ் மக்களுக்கு மழை கட்டாயம் தேவை. இல்லை எனில் இன்னும் இரண்டு மாதம் சென்றால் மார்ச்--ஏப்ரலில் இருந்தே குடிநீருக்குத் தட்டுப்பாடு வந்து விடும். மழை நன்றாகப் பொழிந்து புழல், போரூர், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் மட்டுமில்லாமல் இங்கே தமிழ்நாட்டின் உள் பாகங்களிலும் மழை நன்கு பொழிந்தால் தான் சென்னை வாசிகளுக்கு வீராணம் ஏரி நிரம்பிக் குடி தண்ணீர்த் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும். இங்குள்ள விவசாயிகளுக்கு வயல்களில் பயிரிட ஏதுவாக இருக்கும். காய்கறிகள் நன்கு விளையும். காய்கறிகள் விளைச்சல் அதிகமானால் தான் உங்களுக்கு வாங்கும் விலையில் கட்டுப்படி ஆகும்படி காய்கள் விற்க முடியும்!

உணவு தானியங்கள் என எல்லாவற்றிற்கும் மழை நீர் தேவை! மழையை யாரும் வேண்டாமென்று சொல்லாதீர்கள்! அவரவர் வீட்டுச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும் சுத்தமாகவும் மழை நீர் வடியும்படியும் வைத்துக் கொண்டாலே போதும். மழை நீர் தேங்காமல் ஓடி விடும்! அதை விடுத்துத் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டிகள் கொடுத்து மழையை விரட்டி அடிக்காதீங்க! மழையையே நம்பி இருக்கும் மாவட்டங்கள் பல இருக்கின்றன தமிழ்நாட்டில்! அவங்களுக்காகவாவது மழை நன்றாகப் பொழிய வேண்டும்.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! 

24 comments:

 1. சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
  வீண் புரளியை கிளப்பி விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  மழை வேண்டும் மழையின்றி மனிதன் வாழ முடியாது.

  ReplyDelete
  Replies
  1. இன்றைய முகநூல் நண்பர்கள் பதிவுகளில் மாம்பலம், ஓ.எம்.ஆர். சாலை, குரோம்பேட்டை, மற்றும் சில இடங்களில் சாலைகள் சுத்தமாகவும் தண்ணீர் தேங்காமலும் காணப்பட்டன. ஆனால் சானல்களில் காட்டுவதோ எங்கே பள்ளமான இடங்களோ அங்கே தேங்கி இருக்கும் தண்ணீரைக் காட்டுகின்றனர். சில படங்கள் 2015--16 படங்கள் என ஆதாரத்துடன் சொல்லியும் இருக்கின்றனர். ஜனங்களைப் பீதி கிளப்புவதில் சானல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

   Delete
 2. ஸ்ரீரங்கத்தில் இருந்தாலும் இன்னும் உங்கள் மனது சென்னையில்தான். உங்களது சென்னை வீட்டைப் பற்றிய பதிவுக்கு நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா, அப்படி எல்லாம் இல்லை! என்னைச் சென்னையில் இருந்தப்போ பார்த்த உறவினர்கள் எல்லாம் இங்கே திருச்சி வந்ததும் தான் உன் முகம் பார்க்கும்படி இருக்குனு சொல்றாங்க! :) சென்னை எனக்கு உள்ளூரப் பிடிக்காத ஊர் தான்! என்றாலும் சொந்தங்கள் இருக்கின்றனர்! வீடும் இருக்கிறது! விற்க முயற்சி செய்கிறோம். சரியான ஆளாக யாரும் வரவில்லை!

   Delete
 3. அங்கே மழை இல்லாமல் காய்கறி விலைகள் எகிறிக் கிடக்கின்றன. இங்கு மழையினால் போக்குவரத்துத் தடைப்பட்டதால்! என்ன கொடுமை! சின்ன வெங்காயம் கிலோ 130 ரூபாய், கொத்துமல்லி கட்டு 30 ரூபாய், மீடியம் சைஸ் தேங்காய் 30 ரூபாய்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், காய்கறிகள் எகிறிக் கிடந்தாலும் இன்னமும் பத்து ரூபாய்க்குக் கீரைக்கட்டு கிடைக்கிறது, எங்களுக்கு இரண்டு நாட்களுக்கு வரும்! முந்தாநாள் எல்லாத்தையும் பண்ணிட்டு அப்புறமா மிச்சம் கீரை மசியலை ராத்திரி சப்பாத்திக்குத் திப்பிச வேலை செய்து சாப்பிட்டோம்! :) தேங்காய் இங்கே 15 ரூக்குக் கிடைக்கிறது. பூசணிக்காய் பத்து ரூபாய்க்குக் கிடைக்கும். வாழைத்தண்டு பத்து ரூபாய்! வாழைக்காய் பத்து ரூபாய்க்கு சுமாராக 4 காய்கள். முன்னால் இதைவிட விலை குறைஞ்சிருந்தது. இப்போ ஜாஸ்தி! அவரைக்காய், பீன்ஸ், கொத்தவரை போன்றவை கிலோ 80 ரூபாய், கத்திரிக்காய் 60 ரூபாயிலிருந்து 80 வரை!

   Delete
 4. சென்னைவாசிகளுக்கு மழை என்றால் பயம்தான்! அதுவும் கேரளா பாபு இந்த வருடம் மிக பயங்கரமானதொரு சுனாமி வரும் என்று வேறு சொல்லி பயமுறுத்தி இருக்கிறார். தினமலரில் பார்த்திருப்பீர்கள். இந்த மழைக்கே சாலைகள் வெள்ளக்காடு. இன்று வெயில் காலை முதல் மதியம் வரை இருந்தது. 5 மணிமுதல் தொடர் மழை. கொஞ்சம் மழை பெய்தாலே மின்சாரம் வேறு போய்விடும்! சென்ற வருடம் அவ்வளவு மழை இல்லை. மழை இல்லாக் காலங்களில் தூர் வாரி, அடைப்பு எடுத்து செய்திருக்கலாம். அப்படி ஒன்றும் சிறப்பாக செய்ததாகத் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், இப்போத் தான் அந்த சுநாமி பற்றிய செய்தி படித்தேன். தைரியமாக இருங்கள். போன வருஷமும் சொன்னார்கள் தான்! ஒண்ணும் நடக்கலை! தினமலர் பேப்பர் வாங்குவதில்லை! ஐபாடில் ரங்க்ஸ் பார்த்திருக்கலாம். ஓரளவுக்குத் தூர் வாரி, அடைப்பு எடுத்திருப்பதாகவே எல்லோரும் சொல்கின்றனர்.

   Delete
 5. தொலைகாட்சி பார்ப்பதில்லை. நண்பர்கள் ஏரியாக்கள் மூலம் அறியும் தகவல்கள் மட்டுமே. நிலைமை மோசம்தான் இந்த மழைக்கே...... மழையை யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆட்சியாளர்களோ, மக்களோ தங்கள் கடமை உணர்ந்து நடப்பதில்லை. மக்கள் இஷ்ட்டத்துக்கு பிளாஸ்டிக் குப்பைகளை சாலைகளில் போட்டு தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டால் இதுதான் கதி.. எல்லாவற்றுக்கும் கார்பரேஷனும், பஞ்சாயத்துகளும், அரசாங்கமும் வந்து செய்ய வேண்டும், தமக்கு இதில் பொறுப்பு இல்லை என்று நினைக்கிறார்கள்.

  உங்கள் ஊரிலும் சீக்கிரம் மழை பொழியட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், எங்க ஊரில் மழையா! ம்ஹூம்! சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா மோடம் போட்டுக் கொண்டு பயம் காட்டும்! ஒரு இரண்டு நிமிஷம் வேகமாய்த் தூறல் போடும்! அப்புறம் பார்த்தா பளிச்! வெயில்! :))))) இந்தக் குப்பை போடும் விஷயத்தில் நம் மக்களை யாராலும் மிஞ்ச முடியாது! அடுத்த வீட்டு வாசலில் கூசாமல் குப்பை கொட்டுவார்கள். எனக்கு அந்த அனுபவம் நிறைய உண்டு!

   Delete
 6. உண்மைதான் சிஸ் இரண்டு மாதம் முன்பு தண்ணீர் வேண்டும் மழை வேண்டும் என்று வேண்டிவிட்டு இப்பொது வேண்டாமென்று சொல்வது கொஞ்சம் சரியில்லை தான் நானே தினமும் மழை வேண்டி பதிகம் சொன்னேன் அவ்வ்ளவு தண்ணீர் கஷ்டம் ஆனால் சென்னைக்கு கொஞ்சம் நல்ல மழை விட்டு விட்டு பெய்தால் நன்றாக இருக்குமோ என்று நினைக்கிறேன்
  அதே போல் அரசை திட்டுவது ஏனென்றால் ஏரி என்று தெரிந்த இடத்திற்க்கு ஏன் கட்டுவதற்க்கு பிளான் சங்கஷன் பண்ணனும் எல்லாவசதியையும் கொடுப்பது அரசுதானே கட்டக்கூடாது இடத்தில்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நீங்க மழை வேண்டிப் பதிகம் சொன்னீங்க! நான் எங்க குழந்தைங்க இருக்கும் ஹூஸ்டனில் மழை நிற்க வேண்டிப் பதிகம் சொன்னேன்! ஏரி என்று தெரிந்த இடத்திற்கு அரசு பிளான் சாங்ஷன் செய்வது உண்மை தான்! ஆனால் அந்த நிலத்தைக் கூறு போட்டவர்கள் பெரிய இடமாக இருந்திருக்கலாம் இல்லையா!

   Delete
 7. மழையை வேண்டாம் என்று சொல்லக்கூடாதுதான்.
  மழை அவசியம் சுற்றுப்புறதூய்மையும் அவசியம்.
  நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு! நன்றி.

   Delete
 8. இப்போ மழைநீர் சாலைகளில் தான் தேங்கும்! அது போகும் வழியெல்லாம் மூடி எந்தக் காலமோ ஆகிறது. இப்படி இருக்கும்போது தண்ணீர் சாலைகளில் தேங்குகிறது என அரசைச் சாடுவது எந்த விதத்தில் நியாயம்?//

  கீதாக்கா இப்படிக் கட்டுவதற்கு யார் அனுமதி கொடுக்கிறார்கள்? அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதால் என்று சொல்லலாமா? அப்போ அரசு இப்படியானக் கட்டுமானங்களுக்குத் தடை விதிக்கணும் அல்லது அப்படிக் கட்டப்பட்டால் உடனே ஆக்ஷன் எடுக்கணும் இல்லையோ...ஆட்சியில் இருப்பவர்களே இப்படி பினாமியில் கட்டி எத்தனையோ காம்ப்ளெஸ்கள் இருக்குதே...வாய்க்கால்கள், நீர்ப்ப்போக்குவரத்துகள் எல்லாம் இப்போது கட்டிடங்களாக வந்ததற்கு அனுமதி வழங்கப்பட்டதால்தானே க்கா இப்படி ட்ரெய்னேஜ் சரியில்லாமல்....கட்டும் போது உள்ள விதிகள் மீறப்பட்டதாலும்..இது அரசின் பக்கம் என்றால்....

  பொதுமக்கள் குப்பைகளை அப்படியே வீதியில் கடாசுவது என்பது மிகப் பெரியக் குற்றம். சுய சிந்தனை இல்லை. ஊழியர்கள் வந்து குப்பைகளை எடுத்துச் செல்லுகின்றனர் தான். ஆனால் சமீபத்தில் மழை வரும் முன்னரேயே எங்கள் பகுதி குப்பை எடுப்போர் வரவில்லை. ஒரு வாரத்திற்கும் மேல். எங்கள் பகுதியில் குப்பைத் தொட்டிகளும் இல்லை. கொஞ்சம் நடந்து சென்று கேட்டரிங்க் கல்வி வளாகம் பக்கம் இருக்கும் குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். பலருக்கும் சோம்பேறித்தனம். ஆனால் கேட்டரிங்க் கல்லூரி குப்பைகள் அங்கு அதிகம் சேர்ந்து குப்பைத் தொட்டி இருப்பதோ மூன்று எப்படிப் போறும்? அங்கு வீணாகும் உணவுப்பொருட்கள், காய் குப்பைகள், அசைவக் குப்பைகள் அனைத்தும் குவிந்து கிடக்கிறது. என்னைப் போன்ர சிலர் அங்குதான் குப்பைத் தொட்டியில் கொட்டிக் கொண்டிருந்தோம். எங்கள் தெருவில் குப்பை பெறுபவர் வராததால்... இப்போது மழையில் தண்ணீர் அந்தச் சாலை முழுவதும் தேங்கி இருக்கிறது. குப்பைகள் மிதந்து கொண்டிருக்கிறது. மழை இப்போது வலுத்திருக்கிறதால்.

  உங்கள் கருத்தை முழுவதும் ஏற்கிறேன்...வாட்சப் பற்றியும் இறுதிவரையுமான கருத்த்துகளை....அதுவும் சென்னைக்கு மழை தேவை தேவை..மழை வேண்டாம் என்று சொல்வது மிகவும் தவறு அப்புறம் தண்ணீருக்கு எங்கு செல்ல?

  நல்ல பதிவு அக்கா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. 2015 மழைக்குப் பின்னர் பல இடங்களில் சரி செய்திருப்பதாகக் கூறுகின்றனர். ஆனாலும் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கத் தான் செய்யும்! வேறே வழியே இல்லை! குப்பைகளைக் கொட்டாமல் நாம தானே சுத்தமாக வைத்திருக்கணும்! அந்தப் பொறுப்புக் கூட நமக்கு இல்லை! வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அரசு ஊழியர்கள் மட்டும் ஊழல் செய்யவில்லை! அரசியல்வாதிகளும் அதற்கு உடந்தை தானே! யாரைச் சொல்லி என்ன செய்ய முடியும்! நேர்மையான அரசியல்வாதிகளைத் தேடித் தான் கண்டு பிடிக்கணும்.

   Delete
 9. சென்னைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே மழை வேண்டுமே அக்கா...மழை வேண்டும் நீங்கள் சொல்லுவது போல் மழையை எதிர்கொள்ள நாம் தயாரான நிலையில் இருந்தால், இந்த மழைக்கெல்லாம் நாம் பயப்படத் தேவையே இல்லை.

  சென்னையில் தாழ்வான பகுதியில் தான் மழை நீர் தேங்குகிறது. அதுவும் ட்ரெய்னேஜ் சிஸ்டம், மழை நீர் வடிகால் சரியாக இல்லாததால்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா, மழை நன்றாகப் பொழிய ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே சானல்களும் மக்களும் அலறுகின்றனர்! அதான் வருத்தம்!

   Delete
 10. மழை வேண்டுமா வேண்டாமா என்பது கேள்வி அல்ல. ஏதோ தவறு எங்கோ நடந்திருக்கிறது காரணங்கள் பற்றி 2015 லேயே பேசி ஆயிற்று அவரவர் வீட்டில் நீர் புகுந்தால் ஆற்றாமையால் பேசத்தான் செய்வார்கள் வேல்ஃஐக்கு போக முடியாமல் போக்குவரத்தே ஸ்தம்பித்து இருக்கிறதாம் இந்த நிலையில் அமெரிக்காவை விட இங்கிலாந்தை விட நீர் வடிய எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம் என்று மர் தட்டுவது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் இல்லையா

  ReplyDelete
  Replies
  1. //Shriram Tkl
   3 hrs ·
   ஆச்சரியமாக இருக்கிறது. குரோம்பேட்டையில் இருந்து பைபாஸ் துரைப்பாக்கம்.. திருவான்மியூர், இந்திரா நகர், அடையார், ராஜ்பவன், சைதை, தி நகர் வழியே லிபர்டி, வடபழனி.... ஒரு தண்ணீர் தேக்கம் இல்லை... உஸ்மாந் ரோட்டில் சிறிது.. அவ்வளவே. அதுவும் கேளம்பாக்கம் பைபாஸில் கிரேன், ஜே சி பி சகிதம், ஏரியை விரிவுபடுத்தி, வடிகால் மூலம் நீர் அழகாக ப்ரவாகமாக நூல் பிடித்தது போல் செல்கிறது. எதற்கு எடுத்தாலும் குற்றம் சொல்வதை விடுத்து சென்னை கார்ப்பரேஷன் மற்றும் அதிமுக அரசு, இருவரையும் பாராட்டுவோம். சபாஷ்.//

   இது சிறிது நேரத்துக்கு முன்னர் முகநூலில் நண்பர் ஒருவர் கொடுத்த செய்தி! அவரும் அலுவலகம் தான் சென்றிருக்கிறார். வேலைக்குப் போக முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து இருப்பதெல்லாம் பொய்யான செய்திகள்! உண்மை நிலையை எந்தச் சானலும் எடுத்துச் சொல்லவில்லை!

   Delete
  2. காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கள் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே ஒன்றுமே செய்ய வில்லை என்று சொல்வதை விட இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோ என்றே தோன்று கிறது மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு தன்னைக் கிள்ளி வலி தெரியவேணும் என்பது பொருள்

   Delete
  3. ஐயா, இரு மாதங்கள் முன்னர் பெங்களூரே மழை வெள்ளத்தில் தத்தளித்தது மறந்திருக்காது என நினைக்கிறேன். அப்போது அங்கே காங்கிரஸ் அரசு என்ன செய்ததோ அதே போல் தான் இங்கும் நடக்கிறது என்று எடுத்துக் கொள்ளுங்கள்! :)))))) அங்கு போக்குவரத்து நெரிசல் என்பதே இருந்திருக்காது அல்லவா? :)))))))

   Delete
 11. கணினி பக்கம் வர முடியாததால் முன்பே கருத்து பதிவிட முடியலை. மழை சென்னையில் பலமாய்த் தான் இருக்கிறது. இடியும் மின்னலும் பயத்தைத் தருகின்றன. ஆனால் மீடியாவில் போடுவது போல் இல்லை. நீங்கள் சொல்வது போல் பள்ளமான இடத்தில் தண்ணீர் சேர்வது இயல்பு தானே!
  மழையைப் போற்றுதும்!

  ReplyDelete
  Replies
  1. சென்னை நண்பர்கள், உறவினர்கள் நீங்க சொல்றாப்போல் தான் சொல்கிறார்கள். எனினும் ஊடகங்கள் திகிலை அதிகப்படுத்துகின்றன. வெளிமாநில, வெளி நாட்டு வாழ் மக்கள் அதைத் தான் உண்மை நிலவரம் என்று நம்புவார்கள். ஆங்கில சானல்களுமே மாறி மாறிக் காட்டிக் கொண்டிருக்கின்றன. திடீரென சென்னைக்கு இவ்வளவு முக்கியத்துவம்! எல்லோருடைய எதிர்பார்ப்பும் 2015 மழை மாதிரிப் பெய்து வெள்ளம் வரணும்! தங்களுக்குச் செய்திக்குத் தீனி கிடைக்கணும் என்ற எண்ணம் இருக்குமோ எனத் தோன்றுகிறது! நல்லதைச் சொல்வதே இல்லை! :(

   Delete