எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 16, 2018

பரவாக்கரையில் ஒரு புதிய சிவன் கோயில்!

மாரியம்மன் கோயிலிலும் எங்கள் தாயாதி செய்து வைத்த அபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டு அங்கேயும் பஞ்சாமிர்தம் பிரசாதம் பெற்றுக் கொண்டு கிளம்பினோம். அப்போது எங்கள் தாயாதியான ஸ்ரீமத்யார்ஜுன ஐயர் அவர்களால் கடும் முயற்சியுடன் எழுப்பப்பட்டு வரும் சிவன் கோயிலைப் பார்க்க வருமாறு அழைத்தார். அது மாரியம்மன் கோயிலில் இருந்து கிழக்கே இருக்கும் ஐயனார் கோயிலுக்கு அருகே கட்டப்பட்டு வருகிறது. இந்தச் சிவன் கோயிலைக் கண்டு பிடித்துக் கட்டுவதற்கான முயற்சிகளைச் செய்தவர் எங்கள் உறவினர் ஆன திரு சௌந்திரராஜன் அவர்கள். 








திரு சௌந்திரராஜன் அவர்களைப் பற்றி மேற்கண்ட சுட்டியில் படிக்கலாம். ஊருக்குள் நுழையும் இடத்தில் பொல்லாப் பிள்ளையாருக்கு அடுத்து இருப்பவர் தான் மரகத மாணிக்கேஸ்வரர். இவர் மேற்கே இருக்கிறார். அதன் பின்னர் ஊருக்குள் நுழைந்ததும் அக்ரகாரத்தின் ஆரம்பத்தில் பெருமாள் இருக்கிறார். அக்ரகாரத்திலேயே நேரே சென்று  இடப்பக்கம் திரும்பும் தெருவில் மாரியம்மன் குடி கொண்டிருக்கிறாள். அங்கிருந்து கிழக்கே சென்றால் வயல்வெளிகளுக்கு நடுவில் ஐயனார் கோயில் காணப்படும். அங்கே பல ஆண்டுகளாக ஒரு லிங்கம் கேட்பாரற்றுக் கிடந்திருக்கிறார். திரு சௌந்திரராஜன் மரகத மாணிக்கேஸ்வரர் கோயிலுக்கு வந்தபோது இந்த லிங்கத்தைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தற்செயலாகப் போய்ப் பார்க்க இது மிகப் பழங்காலத்து லிங்கம் என்று தெரிய வந்திருக்கிறது. அவர் மேலும் ஆய்வுகள் செய்து இந்த லிங்கத்தோடு தேவியும் இருந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார். பண்டைக்காலங்களில் கோயில்களில் குடி கொண்டிருக்கும் ஜ்யேஷ்டா தேவியும் இந்த லிங்கத்தோடு சேர்ந்தே கிடைத்திருக்கிறாள். எல்லாரையும் ஏற்கெனவே படம் எடுத்துப் போட்டேன். ஆனால் தேடினால் கிடைக்கவில்லை.

அந்தப் பழமை வாய்ந்த கோயிலைப் பற்றியும் லிங்கத்தைப் பற்றியும் ஆய்வுகள் செய்த திரு சௌந்திரராஜன் அந்தக் கோயில் இருந்த இடத்தில் இப்போது வயல்கள் வந்திருப்பதையும் அங்கே தோண்டிப் பார்க்கவேண்டும் என்றும் சொல்லவே கோயிலின் சில சிதைவுகள் கிடைத்திருக்கின்றன. லிங்கம் இருந்த் ஐடம் லிங்கத்தடி என்று அழைக்கப்பட்டு வருகிறது. பின்னர் கோயில் இருந்த இடத்தைக் கண்டு அறிந்ததும் அந்த நிலத்தை வைத்திருப்பவாரிடம் இருந்து நிலத்தை வாங்கி அங்கே மீண்டும் அந்த லிங்கனாருக்குக் கோயில் எழுப்பத் திரு சௌந்திரராஜன் முயற்சிகள் செய்து அம்பிகையையும் காஞ்சீபுரத்து ஸ்தபதிகள் மூலம் வடித்து வைந்திருந்தார். ஆனால் அவர் காலத்தில் அந்தக் கோயிலை எழுப்ப முடியாமலே போய் விட்டது. இப்போது திரு மத்யார்ஜுன ஐயர் அவர்கள் கடும் முயற்சி எடுத்து அந்தக் கோயிலைக் கட்டி வருகிறார்.


அந்தக் கோயில் பற்றித் திரு சௌந்திரராஜன் கண்டறிந்த குறிப்புக்கள் அடங்கிய சின்னஞ்சிறு புத்தகத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே இந்தப் பதிவும் கொஞ்சம் தாமதம். எனினும் நினைவில் இருந்தவற்றை எழுதி உள்ளேன். இப்போது அந்தக் கோயில் விமானம் கட்டி முடித்து கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய ஸ்வாமிகளுக்கான சந்நிதியை எழுப்பிக் கொண்டு இருக்கின்றனர். அங்கே தான் நாங்கள் சென்றோம். மேலே ஏற முடியாததால் நான் மேலே ஏறிப் போகலை. லிங்கத்தின் அருகேயே இருந்துவிட்டேன். லிங்கனாருக்கு இப்போ வழிபாடுகள் செய்வதாக அவர் மேலே சார்த்தி இருக்கும் பூக்களில் இருந்து தெரிந்தது. அங்கிருந்து மறுபடி திரும்பும்போது வயலில் ஓர் வாழை மரம். தார் போட்டிருந்தது. மிக அழகாகக் காட்சி அளிக்கவே அதையும் படம் எடுத்துக் கொண்டேன். பின்னர் அங்கிருந்து கிளம்பி வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போனோம். மாயவரம் வழியாகச் சென்றதால் வழியில் மாயவரத்தில் நிறுத்தி மயூரா லாட்ஜில் ரங்க்ஸ் மட்டும் சாப்பாடு சாப்பிட்டார். நான் எதுவும் வேண்டாம்னு இருந்துட்டேன். பின்னர் அங்கிருந்து வைத்தீஸ்வரன் கோயில் போனால் எல்லா லாட்ஜ்களும் ஒரே கூட்டம், கும்பல். கல்யாணப் பார்ட்டிகள் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருந்தார்கள். கடைசியில் ஒரு லாட்ஜில் இடம் கிடைத்தது. ஏசினு பேரே தவிர ஏசி வேலை செய்யவில்லை. 


வழியில் காவிரி


சிதம்பரம் செல்லும் வழியில் கொள்ளிடம். படங்கள் நிறைய எடுத்தேன். தவறுதலாக டெலீட் ஆகிவிட்டது. :( செல்ஃபோனில் படங்கள் இருக்கானு பார்த்துட்டு மறுபடி அப்லோட் பண்ண முயற்சிக்கணும். 




சிதம்பரத்தில் கிழக்கு வாசல் கோபுரம் படமும் டெலீட் ஆகி இருக்கு. இந்தப் படம் உள்ளே பிரகாரத்தில் கோவிந்தராஜர் சந்நிதியில் இருக்கும் கோபுரம். இதற்கு இடப்பக்கம் இருக்கும் வாசல் தான் நந்தனார் வந்த வழி என்றும் அதை தீக்ஷிதர்கள் அடைத்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் கோவிந்தராஜருக்கு இந்த சந்நிதி கட்டப்படும்போது சாமான்கள் வருவதற்காக அந்த மதிலை இடித்ததாயும் பின்னர் கட்டி முடித்த பின்னர் அதை மூடிவிட்டதாகவும் கோயில் குறிப்புகள் சொல்கின்றன. இந்தக் கோவிந்தராஜர் கோயில் கோபுர மதில் சுவர் மீத்து நந்தியெம்பெருமான் உட்கார்ந்திருப்பதில் இருந்து இது பழைய மதில் சுவர் என்பதை அறியலாம். கோவிந்தராஜர் கோயில் பின்னால் கட்டப்பட்டது. அதைக் குறித்து என்னோட சிதம்பர ரகசியம் நூலில் படிக்கலாம்.  இங்கே நேரே கோவிந்தராஜர் நடராஜரைப் பார்க்கும் வண்ணம் கிடந்த கோலத்தில் காணப்படுவார். இருவருக்கும் எதிரே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால் ஒரே சமயம் நடராஜாவையும், கோவிந்தராஜாவையும் பார்க்கலாம். 

45 comments:

  1. மரகத மாணிக்கேஸ்வரர் இருக்கும் இடம் அழகாய் இருக்கிரது. தென்னையும், வாழையும் அழகு.
    கோவில் வானம் எல்லாம் அழகு.
    சிதம்பரத்தில் நீங்கள் எடுத்து இருக்கும் படம் தாயார் சன்னதி கோபுரம் போல் இருக்கிறது.
    கொள்ளிடத்தில் நீர் நிறைய இருக்கிறது போல காட்சி அளிக்கிறதே! மாலை நேரமோ ? சூரிய கதிர்கள் மறைவு போல் தெரிகிறது.
    மாயவரம் நினைவுகளை கொண்டு வந்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மரகத மாணிக்கேஸ்வரர் இருக்கும் இடம் இது இல்லை கோமதி! இந்த லிங்கனாருக்கு இன்னும் பெயரே வைக்கவில்லை. ஏற்கெனவே எப்படி அழைக்கப்பட்டிருப்பார் என்பதற்கான குறிப்புக்களைத் தான் தேடுகிறேன். கிடைகவில்லை. இந்தக் கோயில் இப்போத் தான் கட்டி வருகிறார்கள். மரகத மாணிக்கேஸ்வரர் கோயிலுக்குத் தான் சுமார் 20 ஆண்டுகள் முன்னர் கும்பாபிஷேகம் ஆனது. அந்தக் கோயிலும் பாழடைந்து கிடந்தது தான்!

      Delete
    2. சிதம்பரத்தில் கோவிந்தராஜருக்குத் தாயார் உள்ளேயே இருக்கிறாள் கோமதி. இந்தக் கோயிலின் ஒவ்வொரு இடமும் நன்கு அறிவேன். தீக்ஷிதர்கள் நன்றாகவே சுற்றிக் காட்டி விளக்கி இருக்கார்கள். இங்கே ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படிச் சுத்தவும் முடியலை. சொல்வதற்கும் ஆள் இல்லை! இது தாயார் சந்நிதி இல்லை. கோவிந்தராஜர் சந்நிதி தான் நேரே காணப்படும். இந்தப் பிராகாரத்தில் இந்த சந்நிதிக்கு எதிரே தான் எங்கள் கட்டளை தீக்ஷிதர்கள் காலம் காலமாக உட்கார்ந்து இருந்து வருகின்றனர். இங்கிருந்து வலப்பக்கம் போயும் நடராஜரைக் காணப் போகலாம். நேரே கோவிந்தராஜரைப் பார்க்கப் போயும் அப்படியே நடராஜரைத் தரிசிக்கலாம். இடப்பக்கம் தெற்கே போயும் நடராஜர் தரிசனம் செல்லலாம். மேற்கு மற்றும் வடக்கு வாசல்கள் செல்லக் கொஞ்சம் நடக்கணும். சிவகாம சுந்தரி தனிக் கோயிலில் குடி கொண்டிருக்கிறாள். வெயிலாக இருந்ததால் கல் தரை சூடு என்பதால் நடக்க முடியவில்லை. அதனால் அங்கே போகவில்லை. சிவகங்கைக் குளமும் அங்கே தான் உள்ளது.

      Delete
  2. //கிடைத்திருக்கிறால்.// //ந்த் ஐடம் லிஙத்தடி // வைத்திருப்பவாரிடம் ஐருந்து// - அபூர்வ தட்டச்சுப் பிழை.

    மாயவரத்தில் ஒரு ஃபேமஸ் ஹோட்டல் உண்டே... அங்கு செல்லவில்லையா?

    சிதம்பரத்தில் கோவிந்தராஜரை சேவிக்கும் ப்ராப்தம் கிடைக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. திருத்திட்டேன் நெ.த. பூத்தொடுத்த கையோடு கணினியில் உட்கார்ந்தால் எல்லாம் இரட்டையாகத் தெரிகின்றன. அதனால் தட்டச்சும்போதே தெரியலை. பின்னால் சரி பார்க்கும் வழக்கம் என்னமோ எனக்கு வரதில்லை. :( விரைவில் கோவிந்தராஜரை நடராஜரோடு சேர்த்துப் பார்க்க உங்களுக்குச் சந்தர்ப்பம் அமையப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
    2. நெல்லைத் தமிழரே, இப்போக் காளியாகுடி ஓட்டல் அதன் பூர்விக சொந்தக்காரர்களால் நடத்தப்படவில்லை. எழுபதுகள் வரை அவங்க தான் நடத்தினாங்க. பின்னர் பிரிஞ்சாச்சு. குடும்பத்தில் பலரும் வெளிநாடு போயிட்டதாக் கேள்வி. சென்னை மடிப்பாக்கம் கூட்டு ரோடில் அவங்க கடையிலிருந்து வந்தவர் ஒருத்தர் அந்தப் பெயருக்குக் கேட்டு அனுமதி பெற்று நடத்தி வந்தார். சுமாராக இருக்கும். இப்போ இருக்கானு தெரியாது. இங்கே இருக்கும் காளியாகுடி ஓட்டல் முன்னால் லீஸுக்கு எடுத்து நடத்தி வந்தார்கள். இப்போக் கைமாறியாச்சுனு கேள்வி. இந்த மயூரா லாட்ஜில் ஓரிஉமுறை சாப்பிட்டு இருப்பதால் அங்கே போனோம். நான் சாப்பாடெல்லாம் வெளியே போனாலே தவிர்த்துடுவேன். கல்யாணங்களில் கூடப் பெரும்பாலும் மதியச் சாப்பாடு சாப்பிடுவதில்லை. என்ன் பெண், பையர் கல்யாணங்கள் உள்பட!

      Delete
  3. நல்ல தகவல்கள்! கீதாக்கா....பழங்காலத்து லிங்கத்தைக் கண்டு இப்போது கோயில் எழுப்பிக் கொண்டிருப்பது எல்லாம் நல்ல தகவல்கள். காவிரி அழகா இருக்கு. படங்களும் அழகு.

    சிதம்பரம் பற்றிய தகவல்....ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் இரண்டு ராஜாக்களையும் பார்க்கலாம் என்பது அட! என்று சொல்ல வைத்தது...அடுத்த முறை செல்லும் போது பார்க்க வேண்டும்.

    வைத்தீஸ்வரன் கோயிலும் போயிருக்கிறோம் மிக மிக மிகப் பழைய கோயில்! ஆனால் பராமரிப்பு வெகு குறைவு நாங்கள் போயிருந்தபோது. மெயின் வாசல் அந்த வழி சென்றால் பெரிய பிராகாரம் போல அவ்வளவு அழகா இருக்கும் ஆனா இருட்டு..பல சன்னதிகள் பகலிலும் கூட இருட்டாகவே இருந்தது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, சிதம்பரமும், வைத்தீஸ்வரன் கோயிலும் எத்தனை முறை போயிருக்கேன் என்பதற்குக் கணக்கே இல்லை. எங்க குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் அங்கே மொட்டை, மாவிளக்கு உண்டு. எங்க பொண்ணு வீட்டுக்குக் குலதெய்வமே வைத்தீஸ்வரன் தான் என்பதால் அவள் வரும்போதும் அவளோடு போவோம். எங்க பையர் வரச்சேயும் போவோம். நாங்களாவும் போவோம். வைத்தீஸ்வரன் கோயில் அதே அழுக்கோடு பராமரிப்பு இல்லாமல் அசிங்கமாய்த் தான் இருக்கு!

      Delete
    2. வைத்தீஸ்வரன் கோவில் , சிதம்பரம், சீர்காழி மூன்றும் அடிக்கடி போகும் கோவில்கள் .ஓவ்வொரு கார்த்திகைக்கும் வைத்தீஸ்வரன் கோவில் தரிசனம் உண்டு.
      சிதம்பரம், சீர்காழி வரும் உறவினர்களை அழைத்து கொண்டு அடிக்கடி போவோம், சிதம்பரத்திற்கு ஆனி திருமஞ்சனத்திற்கு போவதும் உண்டு முன்பு பேரனுக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் மொட்டை அடித்து இருக்கிறோம்.
      மாயவரம் இருந்த வரை கோவில்கள் போய் கொண்டே இருந்தோம். உங்கள் பதிவை படித்தவுடன் மாயவரம் நினைவுகள் வருகிறது என்றேன்.

      என் மாமனார், மாமியார் வந்தால் சிதம்பரம் போகமால் இருக்க மாட்டார்கள்.

      Delete
    3. வாங்க கோமதி, நீங்க மாயவரத்தில் இருந்தப்போவே உங்க வீட்டுக்கு வரணும்னு பலமுறை நினைச்சு அவசரப் பயணமாக வந்ததால் சொல்லிக்காமல் வந்துட்டுப் போயிட்டோம். அதிலும் நீங்க ஒருமுறை போளி செய்து எடுத்து வந்ததாக ஜிஎம்பி சார் சொல்லி இருந்தார். அதுக்காகவே வரணும்னு நினைச்சுப்பேன். ஆனால் இப்போ போளி சாப்பிடறதை நம்ம ரங்க்ஸ் நிறுத்திட்டார். :)

      Delete
  4. அழகான கிராமம். எத்தனை கோவில்கள் இப்படி பாழடைந்த நிலையில் உள்ளன என நினைத்தால் கஷ்டம் தான். படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வெங்கட், நாங்க செல்லும் வழியிலேயே பல கோயில்களைக் கருவறை விமானத்தோடு பாழடைந்து கிடப்பதைக் கண்டிருக்கோம்.

      Delete
  5. ஓ வயல் காணியில் கோயில் எழும்புகிறதோ சூப்பர்ர்... வயல்களுக்கு நடுவில் கோயில் அமைந்திருந்தால் மனதுக்கு மிக இதமாக இருக்கும்.

    அது சரி கீசாக்கா இப்போ அம்மா மண்டபம் எப்படி இருக்குது? காவிரி ஆறு அமைதியாகி ஓடுதோ? வெள்ளம் ஏதும் இல்லையே?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அதிரடி, அங்கே ஐயனாரும் வயலுக்குள் தான் குடி இருக்கார். அடுத்தமுறை போகும்போது இந்தக் கோயில் முழுதும் எழும்பி இருக்கும். அப்போக் கொஞ்சம் நிதானமாப் போய் ஐயனாரையும் எடுத்துக் கொண்டு வரணும். எப்போ ஊர்ப்பக்கம் போனாலும் அவசரம் தான். இம்முறை தான் கொஞ்சம் நிதானமாக தரிசனங்கள் நடந்தன.

      Delete
    2. சென்ற வாரம் காவிரியில் தண்ணீர் குறைஞ்சிருந்தது அதிரடி, மணல் திட்டுக்கள் தெரிய ஆரம்பித்திருந்தன. மாடிக்கோ அம்மாமண்டபம் போயோப் படங்கள் எடுக்க நினைச்சு வேலை மும்முரத்தில் முடியவே இல்லை. இப்போ நாலு நாட்களாக மறுபடி தண்ணீர் வருவதால் மணல் திட்டுக்கள் மூடிக் கொண்டிருக்கின்றன. மற்றபடி அதிகமான வெள்ளம் எல்லாம் இல்லை.

      Delete
  6. படங்கள் சிறப்பாக வந்து இருக்கிறது.
    ஒருவர் தொடங்கும் கோவில் வேலைகள் முடிவுக்கு வருவது நமது கையில் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நீங்கள் சொல்வது சரிதான்.

      Delete
  7. முதல் இரண்டு படங்களும் அருமை. ரொம்ப லாங் ஷாட்டில் எடுத்திருக்கிறீர்கள். சற்றே அருகில் இன்னொரு படம் இதே போல எடுத்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தில் போய் எடுத்தால் கருவறை விமானம் தெரியலை ஸ்ரீராம், அதனால் கொஞ்சம் பின்னால் தள்ளியே எடுக்க வேண்டி இருந்தது. காமிராவில் ஜூம் செய்யராப்போல அலைபேசியிலும் ஜூம் செய்ய எனக்குத் தெரியலை! அதனால் லாங் ஷாட்! :)

      Delete
    2. Just pinch the item to be captured and expand the pinch.

      Delete
  8. சௌந்திரராஜன் என்று பெயர் இருந்தாலே கோவில் காட்டுவார்கள் போலும்...! கல்யாணமாகாதேவியில் முதலில் பெருமாள் கோவிலும், அப்புறம் இப்போது சிவன் கோவிலும் கட்டி இருப்பவர் பெயரும் சௌந்திரராஜன்தான். சொல்லி இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஸ்ரீராம், எனக்கு நினைவில் இல்லை! :) இவர் இந்தக் கோயில் ஆரம்பிக்கையிலேயே அவருக்கு சதாபிஷேகம் முடிஞ்சுடுச்சுனு நம்ம ரங்க்ஸ் சொன்னார். ஆனாலும் ஆர்வமாகக் கோயிலை ஆரம்பிச்சு வைச்சார். இத்தனைக்கும் இவர் பெண் வயிற்றுப் பேரர்! ரொம்பவே பரவாக்கரை மேலே ஈடுபாடு. சின்னவயசில் இங்கே தான் வளர்ந்தாராம்.

      Delete
  9. காவிரிப் படங்கள் ரொம்ப நல்லா இருக்கு. சூரியக் கதிர்கள்... தளும்பும் தண்ணீர்... தண்ணீர் நிறைந்திருந்தால் தான் ஆறுக்கு அழகு!

    ReplyDelete
    Replies
    1. படங்களை அப்லோட் செய்யும்போது டெலீட் ஆகிவிட்டன. இல்லைனா இன்னும் நிறையப் படங்கள் இருந்தன! :(

      Delete
  10. அந்த சிதம்பரம் மூடிய கதவு பற்றி முகநூலில் படம் போட்டு ஒருமுறை கேட்டிருந்தேன்.. நீங்களும் பதில் சொல்லி இருந்தீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஸ்ரீராம், நினைவில் இருக்கு. நான் சிதம்பர ரகசியம் எழுதினப்போ எல்லோரும் என்னவோ நான் தான் நந்தனாரை உள்ளே விடாதது போல் என்னோடு வாத, விவாதங்களில் ஈடுபட்டார்கள். அதே போல் கோவிந்தராஜர் சந்நிதிக்கும்! :)))) இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது!

      Delete
  11. புதிய கோவில்... கண்டுபிடித்து சென்று வந்து விட்டீர்கள்... உதவியவர்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இல்லை டிடி. இந்தக் கோயில் புதுசு எல்லாம் இல்லை. ஏற்கெனவே இருந்திருக்கு. பல படையெடுப்புக்களில் கோயில் சிதிலமடைந்து லிங்கம் மட்டும் மண்ணில் புதையுண்டு இருந்திருக்கு. பின்னர் அந்த இடத்தை வாங்கி வயலாக்கியவர் லிங்கத்தை எடுத்து வரப்பின் மேல் வைத்து விட்டு வயலில் பயிர் செய்து வந்திருக்கிறார். தற்செயலாக மரகத மாணிக்கேஸ்வரர் கோயிலுக்கு வந்த திரு சௌந்திரராஜன் கண்களில் இது படவே லிங்கத்தின் தன்மையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ஆய்வுகள் செய்து இங்கே கோயில் இருந்திருப்பதைக் கண்டு பிடித்திருக்கார். மீண்டும் கோயில் கட்ட முயற்சிகள் 2007 இல் இருந்து செய்யப்பட்டு கைகூடவில்லை. இப்போத் தன் கூடி வந்திருக்கு.

      Delete
  12. காலையில் இனிய தரிசனம்...

    நல்லன செய்வோரெல்லாம் நலங்கொண்டு வாழவேண்டும் - நானிலத்தில்!..

    தில்லையில்
    தில்லைக் காளியையும் நடராஜப் பெருமானையும் கோவிந்தராஜப் பெருமாளையும் ஏக தினத்தில் தரிசனம் செய்திருக்கிறேன்..

    அதுவும் ஆயிற்று பல வருடங்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, சிதம்பரத்தில் தங்கும்போதெல்லாம் தில்லைக்காளியையும் சிவகாமசுந்தரியையும் பார்த்துடுவோம். இப்போச் சில முறைகள் போனப்போ எல்லாம் உடனே திரும்பும்படி போனதால் சிவகாமசுந்தரியைக் கூடப் பார்க்காமலேயே திரும்பறோம். :) நீங்க சிதம்பரம் போனாச் சொல்லுங்க! எங்க கட்டளை தீக்ஷிதரின் தொலைபேசி எண், விலாசம் தரேன். அருமையா தரிசனம் செய்து வைப்பாங்க! ஆனால் இப்போ ரகசியம் பார்க்கக் குறிப்பிட்ட நேரம் நிர்ணயிச்சுட்டாங்க. முன்பெல்லாம் தீக்ஷிதர்களில் அன்றைய முறை யாரோ அவரை விட்டுக் காட்டச் சொல்லுவாங்க. இப்போ அது மாறி இருக்கு.

      Delete
    2. நீங்கள் இப்படிச் சொன்னதற்கே மனம் நெகிழ்ந்து விட்டது...
      அம்பலத்தில் நின்று ஐயனைத் தரிசித்த மகிழ்வு...

      மிக்க நன்றி...

      Delete
    3. இது ஒரு பெரிய விஷயமே இல்லை துரை. பல நண்பர்களும் என்னிடம் கேட்டுக் கொண்டு தீக்ஷிதரைத் தொடர்பு கொண்டு தரிசனம் செய்து வந்திருக்கின்றனர். அங்கே 2,3 தீக்ஷிதர்கள் தெரிஞ்சவங்க என்றாலும் நான் பெரும்பாலும் கட்டளை தீக்ஷிதரையே கேட்டுக் கொள்வேன். இணையத்தில் "பாபா" என அனைவராலும் அழைக்கப்படும் "பாலபாரதி"யும் அவர் மனைவி லக்ஷ்மியும் கூட என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆகவே நீங்க எப்போப் போனாலும் சொல்லுங்க! அதே இங்கே ஶ்ரீரங்கத்தில் முடியவே முடியாது! :))))))

      Delete
  13. சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் வைத்தீஸ்வரன்கோவில்சிதம்பரம் சென்று வந்துள்ளோம் ஆனால் 2014க்குப் பின் போகவில்லை

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, எங்களுக்கும் இன்னும் எத்தனை நாள் போகமுடியுமோ தெரியலை! :)

      Delete
  14. முதல் பின்னூட்டம் நான்தான் போட்டிருந்தேன். எங்கே காணோம்? அதில் உங்களுடைய சிதம்பர ரகசியத்திற்கு சுட்டி கேட்டிருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கிடைக்கலை பானுமதி, ஸ்பாமில் கூடாத் தேடிட்டேன். சிதம்பர ரகசியம் தொடராக ஆன்மிகப் பயணம் வலைப்பதில் போட்டுக் கொண்டிருந்தேன். பின்னர் மின்னூலாக வந்தது. சுட்டி அனுப்பறேன். ஆர்வத்துக்கு நன்றி.

      Delete
    2. https://tinyurl.com/y8ehwzb7 சிதம்பர ரகசியம் மின்னூல் சுட்டி!

      Delete
  15. கோமதி அரசு அவர்கள் பதிவில் தக்ஷிணாயன வாசல், உத்தராயண வாசல் என்பது பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த மாதிரி அமைப்பு கும்பகோணம் சாரங்கபாணி கோவிலிலும், திருச்சிக்கு அருகில் உள்ள திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள் கோவிலிலும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அநேகமா எல்லாப் பெருமாள் கோயில்களிலும் பார்க்கலாம். கும்பகோணத்தில் சார்ங்கபாணி, சக்ரபாணி இருவர் கோயில்களிலும் உண்டு. திருவெள்ளறை போயிட்டு வந்து பதிவும் போட்டிருக்கேன். படித்திருக்க மாட்டீர்கள். :) அப்புறமாச் சுட்டி தேடித் தரேன். :)

      Delete
  16. ஒரே நாளில் எத்தனை கோவில்கள் கீதாமா. உங்கள் புண்ணியத்தில் நானும் பங்கு கொள்கிறேன். வயல் நடுவே வீற்றிருக்கும் சிவபெருமன் கம்பீரமாக இருக்கிறார்.
    எடுத்துக் கட்ட முயற்சித்தவருக்கும் இறைவன் நல் வழி காட்டுவார்.

    ஒரு கார்த்திகை மாதம் சிதம்பரம் கோவில் போயிருக்கிறோம்., அனைவரும் இரு தெய்வங்களையும் தரிசித்த நினைவு பசுமையாக இருக்கிறது.
    உங்கள் முயற்சியும் அதைப் பதிவு செய்வதும் மிகமிகப் பெருமை கொடுக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரேவதி. சில சமயம் அப்படி நேர்ந்து விடும்.நவகிரகக் கோயில்கள் சென்றப்போ ஒரே நாளில் 4,5 கோயில்கள் எனப் பார்த்திருக்கோம்.

      Delete
  17. வணக்கம் சகோதரி

    அருமையான கோவில் தரிசனங்களை காண வைக்கிறீர்கள். நிறைய கோவில்களைப் பற்றியும்,அதன் விபரங்களையும் நன்கு சேகரித்து தெரிந்து கொள்வது மட்டுமின்றி பதிவாகவும் இட்டு, அனைவரும் விரிவாக புரிந்து கொள்ளவும் ஏதுவாக இருந்திருக்கிறீர்கள். அது போக தில்லையம்பதியை இலகுவாக தரிசனம் செய்து கொள்ள உதவி செய்கிறேன் எனவும் கூறியுள்ளீர்கள். தங்களுடைய இறை எண்ணங்கள், இறையைக் காண பிறருக்கு உதவி செய்யும் மனோபாவங்கள் கண்டு எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஒருவேளை.. நான் இப்போதுதான் தங்கள் தளத்துடன் இணைந்து வருகிறேன். அதனாலும் இருக்கலாம். எனினும் தங்களின் பரோபகார சிந்தனைகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்.

    சிதம்பரம் ஒருதடவை நாங்கள் சென்னையில் இருக்கும் சமயம் சென்றிருக்கிறோம். அவசர பயணந்தான். நிதானமாக பார்த்து ரசிக்க முடியவில்லை. தங்கள் பதிவை பார்த்ததும் மீண்டும் ஒரு முறை செல்ல அவா வருகிறது. பார்க்கலாம்.. "அவன்" அருள் இருந்தால். என் ஆசைகள் பூர்த்தியாகும். எதையும் நடத்துபவன் "அவன்" தான் என்ற எண்ணம் எனக்கு அதிகம். வழியில் தாங்கள் எடுத்த படங்கள் மிகவும் நன்றாக உள்ளது.


    தாங்கள் கூறிய கோவில் நன்றாக உள்ளது. விரைவில் கும்பாபிஷேகம் முடிவுற்று, புத்தம் புது கோவிலாக மாறி, தாங்களும் அதில் கலந்து கொண்டு, படங்களுடன் பதிவுமாக எழுதி, எங்களையும் தரிசிக்கும் படியாக செய்ய உதவ வேண்டுமாய், அந்த மரகத மாணிக்கேஸ்வரரை மனமாற பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஈஸ்வரரின் படமும் கோவில் கட்டுமான இடங்களும் மிகவும் அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா ஹரிஹரன். உங்கள் பாராட்டுகள் நன்றி. எனினும் நான் சாதாரணமானவள் தான்! கோப, தாபங்கள் எதுவும் குறையவே இல்லை! இறை எண்ணங்கள் மட்டும் இருந்தால் போதுமா? மனதை அடக்கி ஆள இன்னும் கைவரவில்லை. உங்களுக்கும் தில்லையம்பதி செல்ல நேர்ந்தால் என்னிடம் சொல்லுங்கள்! தரிசனம் செய்ய வேண்டிய உதவிகளை எங்கள் தீக்ஷிதர் மூலம் செய்து தருவோம். நன்றி.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் பதிவுக்கு வரும் கருத்துகளுக்கு தாங்கள் அளிக்கும் பதில்களிலேயே தங்களுடைய பொறுமையான நல்ல குணம் தெரிகிறது. மற்றும் சில சமயங்களில் ஏற்படும் கோப தாபங்கள் மனித உடல் எடுத்த அனைவருக்கும் இருக்கும் இயல்பான ஒரு குணமல்லவா? நல்ல நல்ல விஷயங்களைப் பேசி, நல்லதையே நினைக்கும் தங்கள் நல்ல மனதுக்கு முன் இயல்பாக சில நேரங்களில் வரும் கோபமெனும் குணம் காற்றாக பறந்து விடும். இதை நான் தங்களை புகழ வேண்டுமென்பதற்காக கூறவில்லை. என் மனதில் சரியென பட்டதைக் கூறுகிறேன்.

      நாங்கள் தில்லையம்பதியை தரிசிக்க விரும்புகிறோம். எப்போது சமயம் கிடைக்கும் என்றுதான் தெரியவில்லை.. ஈஸ்வரனும் அவ்வாறே மனது வைத்தால். கண்டிப்பாக தங்களுக்கு தெரிவிக்கிறேன். எனக்காக சுலபமாக, தரிசனம் கிடைக்க உதவிகள் செய்கிறேனென்று கூறியமைக்கு மிக மிக நன்றிகள் சகோதரி. எனக்கு ஒரு சகோதரி என்னுடன் பிறக்கவில்லையே என்ற குறையை தீர்த்து வைத்த அந்த சர்வேஷ்வரனுக்கும் மிக்க நன்றி.( எனக்கு ஒரே அண்ணாதான். எங்கள் அன்பான பெற்றோருக்கு நாங்கள் இருவரும்தான்.) உங்கள் உதவும் குணம் கண்டு உள்ளம் நெகிழ்கிறது.. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete