எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 10, 2018

அடுத்துச் சென்றது பரவாக்கரை!

பரவாக்கரை!   இந்தச் சுட்டியில் க்ளிக் செய்து பரவாக்கரை பற்றிய தகவல்களைப் படித்துக் கொள்ளலாம்.

கருவிலி கோயிலில் குருக்களிடம் ஏற்கெனவே நாங்க தயிர்சாதம் பிரசாதம் வேணும்னு சொல்லி இருந்ததால் அதை நாங்க கொண்டு போன டப்பாவில் போட்டுக் கொண்டோம். வீட்டிலிருந்தே ஊறுகாய் எடுத்துச் சென்றிருந்தோம். சாதாரணமாகப் பிரசாதமாகச் சாப்பிடுகையில் ஊறுகாய் எல்லாம் போட்டுக் கொண்டு சாப்பிடக் கூடாது! அது தெரியும். ஆனால் நாங்க மதிய உணவாகவே அதை எடுத்துக்க நினைச்சதால் ஊறுகாய் கையோடு கொண்டு போயிட்டோம். :( ப்ரவாக்கரைக்குக் கருவிலி வழியாகச் சென்றால் முட்டையாறு அல்லது முட்டாறூ என்னும் ஆற்றைத் தாண்டித் தான் போகணும். முன்னே எல்லாம் மாட்டு வண்டியில் கருவிலியில் மாமனார் வீட்டிலிருந்து போவோம். அப்போ முட்டையாறு வந்தால் ஆற்றில் வண்டி இறங்கிப் பின் எதிர்க்கரையில் மேலே ஏறும். ஆகவே நாங்க வண்டியில் இருந்து இறங்கி ஆற்றுக்குள் நடந்து போய்த் தான் கரை ஏறணும். தண்ணீர் வந்துட்டாக் கேட்கவே வேண்டாம். ஒரே ஒரு சின்ன மதகு! அதன் வழியாகப் போவதற்குள் போதும் போதும்னு ஆயிடும். என்றாலும் அப்படியும் போயிருக்கோம். கருவிலியில் வீட்டிலேயே மாவிளக்குக்கு மாவு இடித்துக் கொண்டு கலந்து வைத்துக் கொள்வோம். பின்னர் அபிஷேக சாமான்கள், மாவிளக்கு, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், பூ எனத் தூக்கிக் கொண்டு வண்டியில் வைத்துவிட்டு மாமியார், நான், கடைசி நாத்தனார், கடைசி மைத்துனர், எங்க குழந்தைங்க ஏறுவோம். காலை மடித்துக் கொண்டு வண்டியில் உட்காருவது ஒரு வித்தை! என்றாலும் வெயிலில் ஒன்றரை மைல் நடப்பதற்கு அது தேவலை எனத் தோன்றும். முட்டையாறு வரும்போது குழந்தைகளை மட்டும் வண்டியில் விட்டு விட்டு நாங்க கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தா ரெண்டும், அம்மா பாசம் அதிகம் ஆகிக் கத்த ஆரம்பிக்கும். வண்டியோடயே போவேன். :) வண்டியை ஆட்கள் வந்து கரையில் மேலே ஏத்துவாங்க. இப்போதெல்லாம் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இதெல்லாம் இல்லை. :)

நடு நடுவில் நம்ம கதை வந்துடுது. சொல்ல வேண்டாம்னாலும் இப்போதைய மக்களுக்கு இப்படியெல்லாம் நடந்திருக்குனு தெரிவிக்கணும்னும் நினைச்சுச் சொல்லிடறேன். அடுத்துப் போனது பரவாக்கரைப் பெருமாள். இப்போதைய படத்தில் உற்சவர் அர்த்த மண்டபத்தினுள் ஓர் கூண்டுக்குள் இருக்கார். முன்னர் இருந்த கோலம் பழைய படம் கீழே போட்டிருக்கேன்.பெருமாள்  இந்தச் சுட்டிக்குப் போனால் பெருமாள் பற்றிய முழுத் தகவல்களும் அறியலாம். அங்கேயே 2,3 சுட்டி இருக்கின்றது. அவற்றைக்  க்ளிக் செய்து விரும்பியவர்கள் படிக்கலாம்.
வலக்கைச் சக்கரத்தோடு உடைந்த நிலையில் பெருமாள். இவர் திரும்பக் கிடைத்த தகவல் தெரிந்ததும் போய்ப் பார்த்தப்போ எடுத்த படம்! பெருமாளைத் தூக்கிட்டுப் போய் ஒளிச்சு வைக்கும்போது கையில் உடைந்திருக்கிறது. இதைச் சரி செய்யப் போராடிக் கொண்டிருக்கோம். சரி செய்து விட்டுப் பெருமாளுக்கு கருடசேவை நடத்திப் பார்க்க ஆசை! எப்போ நிறைவேறும் எனத் தெரியவில்லை. கருடன் தயாராக இருக்கிறார்.நாச்சியார்கள்
இதில் இருந்து புதிதாய் எடுத்த படங்கள்.பெருமாள் மட்டும் தெரிகிறார். நாச்சியார்கள் தெரியலை. உள்ளே போக முடியலை! :)

மாரியம்மன் கோயில் குளம்


இம்முறை நாங்க அபிஷேகம் எனச் சொல்லவில்லை. ஆனாலும் எங்க தாயாதி தனக்குப் பேத்தி பிறந்திருப்பதால் அபிஷேகத்துக்குக் கொடுத்திருந்தார். அது நடந்து கொண்டிருந்தது. சரியாக சந்தன அபிஷேகத்தின்போது போய் விட்டோம். பின்னர் அர்ச்சனைகள் முடிந்து தீப ஆராதனைகள் முடிந்து சர்க்கரைப் பொங்கல் சுடச் சுடக் கிடைத்தது. இரண்டாம் முறையும், (பக்கினு நினைச்சிருப்பாரோ? நினைச்சுக்கட்டும்) கேட்டு வாங்கிக் கொண்டு சாப்பிட்டேன். பின்னர் அங்கிருந்து எங்க குலதெய்வம் ஆன மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம். மாரியம்மனுக்கும் எங்க தாயாதியே அபிஷேகம் அன்று செய்வித்ததால் அவர் குடும்பமும் எங்களுடன் வந்தனர். எல்லோரும் அபிஷேகத்தைப் பார்த்து அம்மன் அலங்காரம் முடிந்து அர்ச்சனை செய்து கொண்டு பஞ்சாமிர்தப் பிரசாதம் வாங்கிக் கொண்டோம். பூசாரியிடம் கேட்டு அர்த்த மண்டபத்துக்குள் போகாமல் வெளியே இருந்தே அம்மனைப் படம் எடுத்தேன். மாரியம்மன் கோயில் குளத்தில் தண்ணீர் நிறையவே வந்து விட்டது. அதையும் எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து நாங்க சென்ற இடம் பரவாக்கரையிலேயே மாரியம்மன் கோயிலுக்குக் கிழக்கே! 


செல்லும் வழியில் பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் வயல் காட்சி அளிக்க அதைப் படம் எடுத்துக் கொண்டேன். சில வயல்கள் முதல் போகம் முடிந்து அடுத்த போகத்துக்குக் காத்திருந்தன. அவற்றையும் நாங்க சென்ற சாலையையும் படம் எடுத்தேன். அங்கெல்லாம் சாலை சரியாக இல்லை. இரு பக்கமும் வயல்கள் . ஆகவே வயலுக்கு வேலைக்குச் செல்வோருக்காகப் போடப்பட்ட மண் சாலை தான். அதிகம் அகலம் எல்லாம் இல்லை. வண்டி செல்லக் கஷ்டமாகவே இருந்தது. ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு மேலே நடந்து சென்றோம். எங்கள் தாயாதியான ஸ்ரீமத்யார்ஜுன ஐயரும் கூட வந்தார். 


நாளை எங்க ஆவணி அவிட்டம் என்பதால் காலை வர முடியாது. நாளைக்கு எங்கள் ப்ளாகில்   அதிரடியோட கதை வெளிவருது போல. :) மத்தியானம் தான் வர முடியும். 

17 comments:

 1. அந்தக் காலத்து நினைவுகள் சுகமானதுதான். மாட்டு வண்டிப்பயணம் நானும் செய்திருக்கேனே... கூண்டு வண்டியிலும் சென்றிருக்கிறேன்! பாதி ஆறு செல்லும்போது தண்ணீர் வந்துவிட்டால் என்ன செய்வது!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், காவிரியில் அப்படி எல்லாம் வந்துடாது. காட்டாறுகளில் தான் வரும்!

   Delete
 2. பெருமாள் கை உடைந்தது பற்றி ஏற்கெனவே படித்த நினைவு இருக்கிறதோ! புதிதாய் எடுத்த படங்கள் நன்றாய் இருக்கின்றன. நாளை ஆவணி அவிட்டமா? ஓகே ஓகே...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பெருமாள் திரும்பக் கிடைத்ததும் போய்ப் பார்த்தப்போத் தெரிஞ்சது. அப்போ எடுத்த படங்கள் தான் இங்கே பகிர்ந்திருக்கேன். இப்போக் கூண்டு செய்து அதுக்குள்ளே பெருமாளை வைச்சிருக்காங்க! :( எப்போ விடுதலையோ!

   Delete
 3. பரவாக்கரை நிகழ்வுகள் பரவாயில்லை ரசிக்கும்படி இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, விரைவில் நிறைவேறணும். நாங்களும் 2,3 வருஷமா முயல்கிறோம். அறநிலையத் துறைக்கு நேரம் கிடைக்கலை! :(

   Delete
 5. பரவாக்கரை பெருமாள் தரிசனம் அருமை.
  உங்கள் ஆசை விரைவில் நிறைவேற பெருமாள் அருள் புரிவார்.
  பச்சைபசேல் வயல், நிறைந்து இருக்கும்மாரியம்மன் குளம் எல்லாம் கண்ணுக்கு நிறைவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, பொதுவாகவே அந்தப் பக்கம் எல்லாம் பசுமை அழியவில்லை. ஓரளவுக்குக் காப்பாற்றப்பட்டு வருகிறது. நாச்சியார் கோயிலில் இருந்து கும்பகோணம் வரும் வழியில் துக்காச்சியில் தான் பசுமை அழிந்து விட்டது/அழிக்கப்பட்டு விட்டது! :(

   Delete
 6. வணக்கம் சகோதரி

  பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வது இனிமை. தாங்கள் சொல்லும் போது எனக்கும் பழைய நினைவுகள் வருகின்றன. ஆனால் தங்களை மாதிரி அழகாக நினைவு வைத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் சொல்வதென்பது கடினம். என் அம்மா இப்படித்தான் பழைய நினைவுகளை மறக்காமல்,அப்போது நடந்த மாதிரி விவரித்து கூறுவார்கள். அது ஒரு கலை. அதிக நினைவாற்றல் ஒரு வரம்.

  பெருமாள் தரிசனமும் அழகாய் கிடைத்தது. தங்கள் எண்ணங்கள் ஈடேறி கூடிய விரைவில் கருட சேவை நடைபெற அந்த பெருமாள் மனது வைக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். அவன் நினைத்தால் எதுவுமே சட்டென கை கூடாதா? நடத்தி வைப்பவன் அவனல்லவா... இதிலும் படங்கள் அழகு வயல் பச்சைப்பசேல் என்று மிகவும் அழகாக உள்ளது. இங்கெல்லாம் ஒரு முறை வந்து தரிசிக்க வேண்டும். எத்தனையோ கனவுகள்.. அதில் இதுவும் ஒன்று.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கமலா. மதுரையில் பிறந்து வளர்ந்த எனக்கு இதெல்லாம் அப்போ ரொம்பப் புதுமையா இருந்தது. இதுக்காகவே எங்க பெண் எங்க முதல் பேத்தி பிறந்தப்போ வைத்தீஸ்வரன் கோயிலில் அவளுக்கு மொட்டை அடிக்கக் கூட்டிச் செல்லும்போது மாட்டு வண்டியில் தான் போவேன்னு பிடிவாதம் பிடிச்சுக் குழந்தையைத் தூக்கிச் சென்றாள். இப்போல்லாம் மாட்டு வண்டிகளே காண முடியலை! பொதுவாகவே அந்தப் பக்கங்கள் நல்ல விளைச்சல் இருக்கும். இந்த வருஷமும் குறையாமல் இருக்கப் பிரார்த்தித்துக்கொண்டோம்.

   Delete
 7. பரவாக்கரை பெருமாள்
  பாரெல்லாம் காக்கட்டும்...

  நாராயணம் வாழ்க..
  நானிலமும் வாழ்க!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, பழைய பதிவுகளில் அவரைக்குறித்துப் படிக்க முடியும். கோயில் திருப்பணி முடித்துக் கும்பாபிஷேஹம் 2011 ஆம் வருடம் நடத்தினோம். அதுக்குள் இப்போக் கொஞ்சம் ஆங்காங்கே விரிசல்கள். பனிரண்டு வருஷம் ஆனால் தான் மறுபடி செய்யலாம் என்கின்றனர். பார்ப்போம்.

   Delete
 8. அருமையான நினைவுகள் அக்கா..

  நானும் குதிரை வண்டி மாட்டு வண்டி எல்லாத்திலயும் போயிருக்கேன் குதிரை வண்டி குடை சாய்ந்து விழுந்த அனுபவமும் உண்டு....

  முதல்படம் மற்றும் இயற்கைக் காட்சிகள் படம் எல்லாம் செமையா இருக்கு. முதல் படம் அப்புறம் மாரியம்மன் கோயில் குளம் செமையா வந்திருக்கு

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மதுரையிலே பெரியப்பா வீட்டிலே சொந்தக் குதிரை வண்டியே இருந்தது. பெரியப்பா கோர்ட்டுக்குப் போய் இறங்கிக் கொண்டு வீட்டில் உள்ளவங்களுக்காகத் திரும்ப அனுப்பி வைப்பார். சினிமாவுக்கெல்லாம் அதில் தான் பெரியப்பா வீட்டினர் போவார்கள்! எங்களுக்கும் எப்போதேனும் சவாரி கிடைக்கும். குதிரை வண்டியை விட மாட்டு வண்டிப் பயணம் கஷ்டமாக எனக்குத் தெரியும்.

   Delete
 9. அம்மாவின் ஊரான ஒறையூரில் [பன்ரூட்டி அருகே] இப்படி மாட்டுவண்டிப் பயணம் செய்ததுண்டு. அம்மா வீட்டிலேயே மாட்டு வண்டிகள் இருந்ததால் அடிக்கடி பயணம் செய்திருக்கிறார். நாங்கள் எப்போதோ ஒன்றிரண்டு முறை சென்றிருக்கிறோம்.

  இனிய நினைவுகள். பரவாக்கரை கிராமம் - அழகாய் இருக்கிறது. இப்படி ஒரு கிராமத்தில் தங்க வேண்டும் - ஒரு நாளாவது.

  ReplyDelete