எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 15, 2020

கொஞ்சம் தீவிரம்! கொஞ்சம் ஜாலி! கொஞ்சம் திப்பிசம்!

குஞ்சுலு ஊருக்குப் போய்ப் பழைய ஆளாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு ஜெட்லாக்! மத்தியானம் 2 மணிக்குத் தூங்கிட்டு ராத்திரி பனிரண்டு மணிக்கு முழிச்சுக்கறது. மறுபடி காலம்பர நாலு மணிக்குத் தூங்கிட்டுக் காலை எட்டு மணிக்கு எழுந்துக்கறது. இன்னமும் கொஞ்ச நாட்கள் ஆகும். ஆனால் எங்களைப் பார்க்கையில் இப்போதெல்லாம் கோபம் இல்லை. சிரிப்பு வருகிறது என்பதோடு "பை" சொல்லிக் கையாட்டிவிட்டு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து விட்டுச் சிரிக்கிறது. சாப்பாடு தான் இன்னமும் சரியாகவில்லை. பாலில் தான் உயிர் வாழ்கிறது! :( எப்போ சாப்பிட ஆரம்பிப்பாளோ  என்பதும் புரியலை.  பிரார்த்திப்போம்/
*********************************************************************************
தொலைக்காட்சியில் கொரோனா செய்திகளை விடாமல் அதிகம் பார்த்த ஒரு பெண் பயத்தினால் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்! என்னத்தைச் சொல்வது? ஏற்கெனவே சின்னத்திரை ஆட்களும், திரைப்படத்துறை ஆட்களும் ஆணும், பெண்ணுமாக இளவயதிலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து போகின்றனர். இவர்களுக்கெல்லாம் மன அழுத்தம் காரணம் எனப்படுகிறது. இம்மாதிரி விஷயங்களைக் கூட எதிர்கொள்ள முடியாமல் கோழைகளாக வளர்க்கப் பட்டிருக்கின்றனர். தேர்வுகளில் தோற்றால் தற்கொலை, காதல் தோல்வியால் தற்கொலை, கணவன் துன்புறுத்தலால் தற்கொலை, மனைவி படுத்தல் தாங்காமல் தற்கொலை என எதுக்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வது சமீப காலங்களில் அதிகம் ஆகி இருக்கின்றது. இது நல்லதற்கல்ல. பெற்றோர் குழந்தைகளைச் சரியாக வளர்க்காதது தான் முக்கியக் காரணம். மேலும் சின்ன வயதில் இருந்தே ஆன்மிக பலமும் கொடுக்கப்பட வேண்டும். அதுவும் இப்போதெல்லாம் இல்லை. எந்தவிதமான நீதி போதனைகளும் இல்லாமல் தொலைக்காட்சி, ஊடகங்கள், திரைப்படங்கள் எல்லாவற்றிலும் வெட்டு, குத்து, சண்டை என்றே பார்த்தால் மனசு பாதிக்கத் தான் செய்யும். அதோடு இப்போதெல்லாம் ஒரே குழந்தை வேறே! இன்னொன்று பெற்றுக்கொள்வதில்லை. இதை விடப் பெரிய தப்பு வேறே எதுவும் இல்லை. இன்னொரு குழந்தை இருந்தால் தான் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை, பங்கிட்டு உண்பது என்றெல்லாம் தெரியவரும். அக்கம்பக்கக் குழந்தைகளோடப் பழகவாவது விட வேண்டும். அதுவும் அதிகம் இல்லை. அடுக்கு மாடிக்குடியிருப்புக்களில் குழந்தைகள் விளையாடினால் பெரும்பாலும் பெரியவர்கள் கண்டித்து இழுத்து வருகிறார்கள். பின்னர் அந்தக் குழந்தை என்னதான் செய்யும்?
*********************************************************************************

கந்த சஷ்டி கவசம் பற்றி இப்போது சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இதைக் கேலி செய்து திரைப்படப் பாடல்கள் எல்லாம் வந்து விட்டன. இனி இன்னும் என்ன மிச்சம் இருக்கப் போகிறது? ஆனால் கேலி செய்தவர்களுக்குக் கந்த சஷ்டி கவசம் இருப்பது தமிழ் மொழியில் என்பதே தெரியவில்லையாம்! அவ்வளவு அழகாய்த் தமிழ் படித்திருக்கிறார்கள் போலும். ஒரு பிள்ளையாரை உடைத்து ஊரெங்கும் பிள்ளையாராக ஆனதைப் போல, ராமரைக் கேலி செய்து உலகெங்கும் ராமர் கொண்டாடப்பட்டதைப் போல் இப்போது சஷ்டி கவசமும் அனைவராலும் பாடப் பெறும். மொத்தம் ஆறு கவசங்கள். ஆறுபடை வீட்டிற்கும். அதில் திருச்செந்தூருக்கான கவசமான "சஷ்டியை நோக்கச் சரஹண பவனார்" தான் அனைவராலும் பெரும்பாலும் பாடப்படுகிறது. பாராயணமாகவும் செய்யப் படுகிறது. நான் நினைவு தெரிந்ததில் இருந்தே தமிழ் படிக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் சொல்லி வருகிறேன். கல்யாணம் ஆகிக் கொஞ்ச காலம் வரை மாமியார் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். கந்த சஷ்டி கவசமும் சொல்ல முடியாது; துளசி பூஜையும் பண்ண முடியாது! பின்னர் மாமியாரே இரண்டும் செய்ய/சொல்ல ஆரம்பித்தார். நான் அப்போதெல்லாம் மனசுக்குள்ளே "காக்க, காக்க, கனகவேல் காக்க!" என்று சொல்லிக் கொள்வேன்.

முதல் முதல் மும்பை சென்று வீடு தெரியாமல், வழி தெரியாமல் தவித்திருந்தபோது பால்கரில் இருந்து போரிவிலிக்குக் கூட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர் எங்கள் கண்களுக்கு முருகனாகவே தெரிந்தான். வழியெல்லாம் சஷ்டி கவசத்தை உரக்கச் சொல்லிக் கொண்டே வந்தேன். காட்டு வழி! மழை நாள்! அந்தக் கவசம் தான் காப்பாற்றியது. இன்னமும் காத்து வருகிறது. சத்ரு சங்கார வேலவன் நம் அனைவரையும் இதே போல் காத்து ரக்ஷிப்பான். நாளைக் கார்த்திகை விரதம்/ஆடிப்பண்டிகை எல்லாம் சேர்ந்து வருகிறது. வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா சொல்லிக் கந்த சஷ்டி கவசம் படிப்போம்.
********************************************************************************

இப்போ கொஞ்சம் ஜாலிக்கு: ஒரு திப்பிச வேலை. டோக்ளா என்னும் குஜராத்தி சிற்றுண்டி பற்றிப் பலரும் அறிந்திருக்கலாம். கடலை மாவில் அதைப் பண்ணுவார்கள். மிருதுவாக ஸ்பாஞ்ச் போல் வரும். 

டோக்ளா செய்முறை இங்கே  இஃகி,இஃகி, இப்படி எல்லாம் நாம செய்துடுவோமா என்ன? நம்ம வழி தனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ வழியாச்சே. ரவாதோசை மாவு கொஞ்சம் மிச்சம். இரண்டு தோசை வார்க்கலாமோ என்னமோ! அதையே கொஞ்சம் ஈனோவோ பேகிங்க் பவுடரோ சேர்த்து ரவா டோக்ளாவாகப் பண்ணலாமானு யோசிச்சேன். ஆனால் நம்ம கை, வாய் ரெண்டும் சும்மா இருந்தாலும் மனசு/மூளை சும்மா இருக்காதே! அது யோசித்தது. கொஞ்சம் கடலை மாவில் உப்புக்காரம் சேர்த்து பஜ்ஜி மாவு மாதிரிக் கரைத்துக் கொண்டு இந்த ரவா தோசை மாவையும் சேர்த்துக் கலந்து வைத்தேன். பெருங்காய்ப் பொடி, சர்க்கரை ஒரு டீஸ்பூன், கொஞ்சம் எண்ணெய் விட்டுக் கலந்த மாவில் எலுமிச்சம்பழம் அரை மூடியை இரண்டாக நறுக்கிப் பிழிந்து வைத்துக் கொண்டேன்.  டோக்ளா செய்வதற்கு அரை மணி முன்னதாக அரை டீஸ்பூன் பேகிங் பவுடரைப் போட்டுக் கலந்து வைத்தேன். பின்னர் ஓர் அலுமினியம் சட்டியில் அடியில் தண்ணீர் விட்டு மேலே ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் ஒரு தட்டில் எண்ணெய்/நெய் தடவிவிட்டுக் கலந்து வைத்த மாவை விட்டேன். அரை மணி நேரம் வெந்தது. கத்தியால் கீறிப் பார்த்ததில் ஒட்டவில்லை. பக்கத்தில் இன்னொரு அலுமினியம் சட்டியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, ஜீரகம், பெருங்காயப்பொடி போட்டுத் தாளித்துக் கொண்டு ஒரு குழுக்கரண்டி ஜலத்தையும் விட்டு அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துச் சர்க்கரை கரைந்ததும் எலுமிச்சம்பழம் இன்னொரு மூடி இருந்ததைப் பிழிந்து கொண்டேன். இந்தக் கலவையை அடுப்பில் இருந்து எடுத்த டோக்ளா மேல் ஊற்றிக் கொண்டு பச்சைக் கொத்துமல்லி தூவினேன். தேங்காய்த் துருவலும் சேர்க்கலாம். தேங்காய் துருவவில்லை. இதற்குத் தொட்டுக்கப் பச்சைச் சட்னியும், புளிச்சட்னியும் தான். அதுக்காகப்பேரிச்சம்பழங்களைத் தயாராக வைத்திருந்தேன். ஆனால் பண்ணும்படியான மனநிலை வரலை. சரினு அப்படியே அவருக்கும் கொடுத்துட்டு நானும் சாப்பிட்டேன்.

சாப்பிட ஆரம்பிக்கையில் தான் படம் எடுத்துப் போடலாமே, திப்பிசம் பண்ணி ரொம்ப நாளாச்சே எனத் தோன்றியது. டோக்ளா தட்டில் இருந்தவற்றைப் படம் எடுத்துக் கொண்டேன். வேறே என்ன செய்யறது? பாத்திரங்களை எல்லாம் ஒழித்துப் போட்டுவிட்டேன். அவர் சாப்பிட்டு விட்டார்! ஆகவே நான் சாப்பிட வைத்திருந்த்தைப் படம் எடுத்திருக்கேன். கிடைக்காதவங்க கொஞ்சம் பொறுத்துக்குங்க. இன்னொரு நாள் முறையாப் பண்ணி எல்லோருக்கும் கொடுக்கிறாப்போல் செய்து காட்டிட்டாப் போச்சு! பஜ்ஜி மாவு மிஞ்சினால் கூடப் பண்ணலாம். என்ன ஒண்ணு, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் ரவை சேர்த்துக்கணும். இந்த மாதிரித் தான் டோக்ளாவே பண்ணிட்டு இருக்கேன். முறையாப் பண்ணும்போது பார்த்துக்கலாம். இதுவே நல்லாத் தானே இருக்கு!



தட்டில் இருப்பது தான் டோக்ளா. இது குஜராத்தில், மஹாராஷ்ட்ராவில் ரொம்பவே பிரபலம். இம்மாதிரித் திடீர்த் தயாரிப்பு டோக்ளா "கமன் டோக்ளா" என்பார்கள். பொதுவாக கடலைப்பருப்பு+அரிசி அரைத்துப் புளிக்க வைத்துத் தான் பண்ணுவார்கள். அந்த ருசியே வேறே! இது திடீர்த் தயாரிப்பு. 


இது என்னனு தெரியுதா? இதை இளங்கொட்டை என்போம். பிஞ்சுப் பறங்கிக்காய். பறங்கிக் கொட்டை என்றும் சொல்வார்கள். முன்னெல்லாம் மதுரையில் நிறையக் கிடைக்கும். இன்னமும் சின்னதாகவும் இருக்கும்.  இங்கே நாங்க வந்த புதுசில் நிறையக் கிடைத்தது. நடுவில் சில ஆண்டுகள் கிடைக்கலை. இப்போ மறுபடி ரொம்ப நாட்கள் கழிச்சு வாங்கிட்டு வந்தார். இதில் வெல்லம் போட்டுப் பால்க்கூட்டுப் பண்ணுவார்கள். சர்க்கரை போட்டும் பண்ணுவார்கள். ஆனால் வெல்லம் போட்டப் பால் கூட்டுத் தான் ருசி. எங்க மாமனார் வீட்டில் வயலில் வரப்போரம் போட்டிருப்பார்கள். அல்லது எதிர்க் கொல்லையில் போட்டிருக்கும். சில சமயங்களில் "தப்பு முதல்" ஆகவும் வரும். அப்போது தினம் தினம் வீட்டில் இதான் சமையல்! இதை அப்படியே பெரிய துண்டங்களாக நறுக்கிப் போட்டு சாம்பார் வைப்பார்கள். அறுவடை சமயம் ஆட்களுக்காக வீட்டில் தயார் ஆகும் சாப்பாட்டில் இந்தப்பறங்கிக்கொட்டையே முக்கிய ஆதிக்கம் வகிக்கும். கறியாகவும் பண்ணுவார்கள். துவையலும் அரைக்கலாம். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். தோசைக்குத் தொட்டுக்கலாம்.  இதில் உள்ள குடல் பகுதியை வெட்டி எறியக் கூடாது. அதோடு தான் சாப்பிடணும். இதைத் தவிரவும் எங்க மாமியார் வீட்டில் அடைக்கு இதைப்  பொடிப் பொடியாக நறுக்கி அடை மாவில் சேர்த்து அடையாக வார்ப்பார்கள். தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறிப் போட்டது போல் ருசிக்கும். 

 இரண்டாக நறுக்கி உள்ளே  எப்படி இருக்கும் என்பதைக் காட்டி இருக்கேன்.


முன்னர் ஒரு தரம் பறங்கிக் கொட்டை அடை போட்டிருக்கேன். ஆனால் அது காய். பச்சை நிறம் வந்துவிட்ட காய். இது அப்படி இல்லை. குழந்தை! ஆனால் பார்த்துக்கொண்டே இருக்கையில் பெரிசாகிடும். நாங்க பரவாக்கரை மாரியம்மன் கோயிலுக்கு ஒரு முறை போயிருக்கையில் அங்கே பறங்கிக் கொட்டைக் கொடியில் இருந்ததைப் பார்த்துத் தேர்வு செய்து விட்டுக் கோயிலில் எல்லாவேலைகளும் முடிந்ததும் பறிக்கப் போனால் அந்த 2 மணி நேரத்தில் நாங்கள் பார்த்த கொட்டை வளர்ந்து விட்டது. இதே போல் பீர்க்கையும் நிமிஷமாக வளரும்.  பெண் குழந்தைகள் வளர்வதைப் பற்றிச் சொல்கையில், "பெண் வளர்த்தியோ, பீர்க்கை வளர்த்தியோ!" என்பார்கள். அம்மாதிரி இந்தப் பறங்கி, பீர்க்கை எல்லாம் கண்ணெதிரே வளர்ந்து முற்றி விடும்.

54 comments:

  1. இன்னொருநாள் முறையாகப் பண்ணி - அந்த நாளும் வந்திடாதோ என்று பாடவேண்டியதுதான். இப்போதைக்கு இங்க போட்ட செய்முறை எல்லாமே திப்பிசம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, சீக்கிரமா முறையாகப் பண்ணிப் படமும் எடுக்கணும்! பார்க்கலாம், உங்க அதிர்ஷ்டம் எப்படி இருக்கோ!

      Delete
  2. பறங்கிக்கொட்டையைப் பார்த்த உடனேயே புரிந்துகொண்டுவிட்டேன். இது, செளசெள எல்லாம் ஒரே ருசியாக இருக்கும் இல்லையா? தேங்காய் சீரகம் அரைத்துப்போட்டு கூட்டு செய்தால் நன்றாக இருக்கும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கஷ்டம், கஷ்டம், எதோட எதை ஒப்பிடுவது? பறங்கிக்கொட்டை ருசி எங்கே! சௌசௌ ருசி எங்கே! சௌசௌ கொஞ்சம் புளிப்பு ருசி! அதோடு அது சுரைக்காய்க் குடும்பம்! பறங்கிக் கொட்டை அப்படியா? பார்த்தே இருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன். தேங்காய், சீரகம் போட்டுக் கூட்டெல்லாம் விட ஓலன், பால் கூட்டு, சாம்பார், துவையல், அடைக்குப் போடுதல் ஆகியவை நன்றாக இருக்கும்.பூஷணிக்காயில் அல்லது சௌசௌவில் தான் தேங்காய், சீரகம் போட்டுப் பண்ணலாம்.

      Delete
  3. கமன் டோக்ளாவைவிட எங்களுக்கு ரவா டோக்ளா ரொம்பவே பிடிக்கும்.

    பஹ்ரைன்ல, ரவா டோக்ளா கிலோ கிட்டத்தட்ட 400 ரூபாய்னு சொல்லுவான். எனக்கு, ரவை விலையே கிலோ 40 ரூபாய்தான், இவ்வளவு அதிகமாகச் சொல்றானே என்று தோன்றும். கமன் டோக்ளாவும் அதே விலைதான் என்றாலும் கடலைமாவு கிலோ 100-120 ரூபாயாக இருக்கும்போது ஓகேன்னு தோணும்.

    இனி எப்போ ரவை டோக்ளா சாப்பிட வாய்ப்பு கிடைக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. இங்கே மாமாவுக்கு டோக்ளாவே பிடிக்காது. நான் தான் பொழுது போகாமல் ஏதேனும் பண்ணிண்டு இருக்கேன். அவருக்குத் தவலை வடை, போண்டா, உ.கி. போண்டா, பஜ்ஜி, பஜியா, பகோடா, மசால்வடை, உளுந்து வடை போன்ற பாரம்பரிய சமாசாரங்கள் தான் பிடிக்கும். இன்னும் சொல்லப் போனால் எனக்குத் தயிர் வடை, சாம்பார் வடை, ரச வடை ஆகியன பிடிக்கும். ஆனால் அவர் தயிர் வடையானும் எப்போவானும் சாப்பிடுவார். மற்றவை கிட்டேக்கூட வரக்கூடாது. ரசவடை நான் எனக்கு மட்டும் எப்போவானும் பண்ணிப்பேன். இதிலே ரவை டோக்ளா, கமன் டோக்ளா, பாரம்பரிய டோக்ளானு எங்கே பண்ணறது? எப்போவானும் பஜ்ஜி மாவு மீந்து போனால் நினைத்துக்கொண்டு பண்ணுவேன். இல்லைனா அதையே பஜியாவாகவோ வேர்க்கடலையைப் போட்டு மசாலா கடலையாகவோ பண்ணிடுவேன். சாப்பிட நினைத்தால் சாப்பிடலாம்! வழியா இல்லை உலகத்திலே!

      Delete
  4. //இந்த மாதிரி விஷயங்களைக்கூட எதிர்கொள்ள முடியாமல் கோழைகளாக// - அப்படி இல்லை கீசா மேடம். இந்த கொரோனா, டெஸ்ட், தனிமைப்படுத்துதல், அந்த மாதிரி கிளினிக்குகளின் நிலைமை, எவ்வளவு சார்ஜ் பண்ணறாங்க என்ற பல நியூஸும் மனதுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும்.

    ஆனானப்பட்ட இருட்டுக்கடை அல்வா அதிபரே, கொரோனா என்றதும் தற்கொலை செய்துகொண்டார்.

    The way the affected people are treated also leads to pressures to others.

    ReplyDelete
    Replies
    1. என்னவோ எத்தனையோ சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டாச்சு! இந்தக் கொரோனா சோதனையைக் கூட எதிர்கொள்ள முடியாமல் இருக்காங்க! ஏனெனில் நீங்க சொல்லும் காரணங்களே! இது அனைவரையும் ஓர் புரட்டுப் புரட்டி விட்டது!

      Delete
  5. குஞ்சுலு நலமுடன் அம்பேரிக்கா சென்றமை அறிந்து மகிழ்ச்சி.

    கவசத்தின் காணொளி தற்பொழுது பரவி வருகிறது இதெல்லாம் தேவையா ? இவர்களைப் போன்றவர்களால்தான் அவசியமில்லாத மதப் பிரச்சனைகள் வருகிறது.

    எல்லோரும் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வது எவ்வளவு விபரீதங்களை கொண்டு வருகிறது. இதை நாம் இன்னும் உணரவில்லை.

    தனது சந்ததியை தொடர்வதற்குதான் வாரிசுகளை பெற்கிறோம். அதேநேரம் பிறந்த அந்த ஒரே வாரிசு இருபது வயதில் ஏதோவொரு வகையில் மரணித்து விட்டால் ???

    சந்ததி தழைப்பது எப்படி ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! குஞ்சுலு ஊர் போய்ச் சேர்ந்ததை முன்னரே எழுதி இருந்தேன். கவசத்தின் காணொளி நல்லவேளையா எனக்கெல்லாம் வரலை! இப்போ அதை எடுத்துவிட்டார்களாம். முக்கியமானவர்கள் தப்பித் தலைமறைவாயும் இருக்காங்களாம்.

      ஆம், ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்வதைப் போன்ற அபத்தம்/அசட்டுத்தனம் வேறே எதுவும் இல்லை. நானும் பலரிடமும் சொல்லி விட்டேன். எல்லோரும் கேலியாகப் பார்த்துச் சிரிக்கிறார்கள். இதன் ஆழமான தாக்கத்தை யாரும் புரிந்து கொள்ளவே இல்லை.

      Delete
  6. ஹலோ கீதாக்கா நலமா ..
    குஞ்சுலு பால் மட்டும் சாப்பிடறாளா ? என்னாச்சுக்கா ? .பயணத்தால் உணவு பிரச்சினையா ?  சீக்கிரம் குணமாக பிரார்த்தனைகள் .
    தற்கொலை எண்ணங்கள் வராமல் தடுக்க பெற்றோர் வழிநடத்தல் மிக அவசியம் .பிள்ளைங்க என்ன செய்றாங்கன்னே பலருக்கு தெரியலை :( 
    ஆன்மீகமே வேணாம்னுல்லியா இப்போ பலர் கிளம்பியிருக்காங்க :) எதுவா இருந்தாலும் நல்லதை கெட்டியா பிடிச்சுக்கோன்னுதான் எங்க மகளுக்கு சொல்லிகொடுத்திருக்கோம் .நான் ஸ்கூலில் படிச்சப்போ மாரல் இன்ஸ்ட்ரக்சனுடன்தான் அந்நாள் ஆரம்பிக்கும் . ஹ்ம்ம் என்ன சொல்ல ..கடவுள்தான் காப்பாற்றணும் .
    டோக்ளா ஆஅ நானா கடலை மாவு யூஸ் பண்றதில்லை :))))))))
    அந்த குட்டி பரங்கி லைம் அளவு  இல்லைன்னா டென்னிஸ் பந்து அளவு தானே இருக்கும் ?? இங்கே கடையில் பார்த்து இருக்கேன் வாங்கியதில்லை  என்னாது 2 மணி நேரத்தில் வளருமா ??? ஆச்சர்யம் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல்! உடல் நலமா? வேலைப்பளு குறைந்துவிட்டதா? கணவர், மகள் நலமா? உங்கள் ஊரில் லாக் டவுன் இப்போது எப்படி இருக்கிறது?

      குட்டிக்குஞ்சுலுவுக்கு என்னமோ தெரியலை சாப்பாடே சாப்பிடப் பிடிக்கலை! மெதுவாச் சாப்பிட ஆரம்பிப்பானு நினைக்கிறோம்.
      ஆன்மிகம் வேணாம்னு நினைக்கிறாங்களா? புதுசா இருக்கே! எங்களுக்குப் பள்ளியில் தினம் ஒரு வகுப்பு நீதி போதனைகள்.

      கடலை மாவு பயன்படுத்துவதில்லைனா வேண்டாம். அரிசி டோக்ளாவே இருக்கு.

      குட்டிப் பறங்கி நெல்லிக்காய் அளவிலே ஆரம்பிச்சு இன்னும் பெரிசாக ஆகிவிடும். ஆமாம், சீக்கிரத்தில் வளர்ந்து விடும். செடியிலிருந்து பறிச்சால் வளர்த்தி நின்று விடும். செடி/கொடியிலேயே விட்டு வைச்சால் காலம்பரப் பார்த்தது மத்தியானம் இரட்டிப்பாகி விடும்.

      Delete
  7. குஞ்சுலு அப்டேட் பிரமாதம்.
    சமத்து. நன்றாக இருக்க வேண்டும்.

    எனக்கு அந்த ஸ்வீட் மிகப் பிடிக்கும். டோக்ளாவில்
    எள்ளு தாளிப்பாள் மகள்.

    தற்கொலை, கொல, திருட்டு எல்லாம் அதிகமாவதற்கு
    கொரோனா காரணம் என்கிறார்கள்.
    இன்று கூட தினமலரில் ஒரு ஒன்பது
    வயதுச் சிறுமியின் அழிவைப் படித்தேன்.

    அரக்கர்களை அழிக்க எல்லா தெய்வங்களும் அவதாரம் எடுக்க வேண்டியது
    தான்.

    பறங்கி இல்லாத நாளே பாரிஜாதத்தில் கிடையாது.
    வித விதமாக பாட்டி சொல்லி சமையல்காரர்
    செய்வார்.
    பழைய வீட்டில் பூசணி, பறங்கி, கீரை, வாழை சுற்றி வரும்.
    மொச்சையும் தான்:)
    நீங்கள் சொல்லி இருப்பது போலக் கிடைத்தால்
    செய்து பார்க்கிறேன்.
    திப்பிசம் சூப்பர்.:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி. எந்த ஸ்வீட்? டோக்ளாவில் சேர்க்கும் சர்க்கரை? எள்ளுச் சேர்க்கணும் தான். ஆனால் என்னிடம் வெள்ளை எள் இல்லை. அதோடு இது திடீர்த் தயாரிப்பு.

      தினம் தினம் எட்டு, ஏழு வயதுப் பெண்களை பலாத்காரம் செய்து கொன்றுவிடுவதாகச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இது எப்போ நிற்குமோ? 14 வயதுச் சிறுமியை உயிரோடு எரித்தும் கொன்றிருக்கின்றனர். என்ன மனிதர்களோ!

      பறங்கிக் கொட்டை எனக்குத் தெரிந்து அம்பேரிக்காவில் கிடைக்கவில்லை. நல்ல மஞ்சள் பழமாகத் தான் கிடைக்கிறது. நாங்களும் ராஜஸ்தான் , குஜராத்தில் இருந்தப்போப் பறங்கி , பூஷணி, கீரை, மொச்சை, அவரை, பட்டாணினு எல்லாமும் போட்டிருந்தோம்.

      Delete
  8. KK அப்டேட்ஸ் சுவாரஸ்யம்.  ஏன் சாப்பிட மாட்டேன் என்கிறது குழந்தை?  இயல்பு நிலைக்கு குழந்தை திரும்பி வருவது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம், கொஞ்ச நாட்கள் ஆனாச் சரியாகும் என நம்புகிறோம். ஆனால் குழந்தை முகத்தில் ஒரு தெளிவு தெரிகிறது.

      Delete
  9. இரண்டாவது செய்தி பற்றி என்ன சொல்ல...   ம்ம்ம்ம்...   பேச விரும்பாத சப்ஜெக்ட்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆனாலும் இப்படி எல்லாம் மனிதர்கள் சிந்திப்பார்களா?

      Delete
  10. என் அபிமானக் கடவுள் முருகன்.  எங்கும் எப்போதும் எதற்கும் சட்டென முருகா தான்...    சிறுவயதில் ஏதோ அல்ப வேண்டுதலுக்கு வேண்டிக்கொண்டு அதன் காரணமாக இன்னமும் ததோற்கிறது தினமும் கந்தர்சஷ்டி கவசம் சொல்வது.  சில வரிகளை விட்டு விடுகிறேன் என்று அப்புறம் தெரிந்தது.  மறுபடி கொஞ்சம் பார்த்துப் படித்துப் பழக வேண்டும்.  கொஞ்ச வருடங்களாக சரவணபவனார் என்றே சொல்லி வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், சரஹணபவனார் என்றே சொல்ல வேண்டும். இந்த சஷ்டி கவசம் யோக முறையில் எழுதப்பட்டது. இதன் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து கொள்வதும் கொஞ்சம் கஷ்டம். நம்மால் முடிந்தது அதன் உச்சரிப்பை மாற்றாமல் சொல்லுவதே!

      Delete
    2. உண்மை. இனி கவனமாக இருக்கிறேன்.

      Delete
  11. சமீபத்தில் என்று நினைக்கிறேன் திருமதி சௌம்யா எல்கே டோக்ளி என்று ஒன்று பண்ணியிருந்தார் என்று நினைவு.  நான் இது செய்ததுமில்லை, சாப்பிட்டதுமில்லை.  அப்புறம்தானே திப்பிசம் எல்லாம்!

    ReplyDelete
    Replies
    1. டோக்ளி? தேடிப் பார்க்கிறேன். எல்கே மனைவி சௌம்யா தானே! பதிவுப் பக்கம் போய்ப் பார்த்தால் ஆச்சு! ஹாஹாஹா, திப்பிசம் செய்யவும் நேரம், அதற்கேற்ற சாமான் எல்லாம் வேணுமே!

      Delete
    2. யூ ட்யூப் சேனலில் இருக்கும்.

      Delete
  12. பரங்கிக்காய் பால் கூட்டு - வெல்லம் போட்டுதான் - என் அம்மா அடிக்கடி செய்வார்.  நாங்கள் தஞ்சாவூராக்கும்.  ஆனால் சென்னை வந்தபின் ஒரே முறைதான் செய்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நாங்க மதுரையாக்கும்! அங்கேயும் பால் கூட்டு உண்டாக்கும். வெல்லம் போட்டுத் தான். அதான் ருசியே! இப்போக் கூட மாமா கேட்டார். ஆனால் பண்ண யோசனை!

      Delete
  13. பறங்கிக்கொட்டை அடை?  ஊ... ஹூம்...  எங்கள் வீட்டில் வித்தியாசமாக எல்லாம் எதுவும் செய்வதே இல்லை இப்போதெல்லாம்.

    ReplyDelete
    Replies
    1. இப்போதான் எல்லோருக்கும் ஏகப்பட்ட நேரம் இருக்கும். இப்போ வித விதமாச் செய்துபார்க்காமல் பிறகு எப்போ நேரம் கிடைக்கும் ஸ்ரீராம்?

      Delete
    2. என் பெண் செய்த நிறைய ஐட்டங்களை நான் எபிக்கு எழுத ஆரம்பிக்கலைன்னு அவளுக்கு குறை. ஃபிலாஃபில், சப்பாத்திக்கான இரண்டு சைட் டிஷ்கள் அப்புறம் என்ன என்னவோ ஐட்டம்கள்

      Delete
    3. பறங்கிக் கொட்டை கிடைத்தால் பண்ணிடலாமே ஸ்ரீராம். அடை பண்ணாமலா இருக்கப் போறாங்க உங்க பாஸ்? அடைக்கு அரைத்துக் கருகப்பிலை, கொத்துமல்லி போடும்போது பறங்கிக்கொட்டையையும் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்க வேண்டியது தான். ஜிம்பிள்!

      Delete
    4. கொண்டைக்கடலையில் ஃபலாஃபல் நானும் ஒரு முறை பண்ணினேன். ஒரு முறை கொண்டைக்கடலையை அரைத்து நம்ம ஊர் வடை மாதிரியும் பண்ணினேன். இதோ சுட்டி! http://sivamgss.blogspot.com/2015/04/blog-post_25.html இது வடைக்கான சுட்டி. ஃபலாஃபல் செய்தது படம் போடலை. எழுதவும் இல்லை. அதுக்கு எல்லாமே பொடி வகைகளாகச் சேர்த்துப் பண்ணினேன்.

      Delete
    5. அடை கொஞ்சம் இருந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும்!

      Delete
    6. ?????????????????? புரியலையே?

      Delete
    7. அலுத்து விட்டது என்று சொல்ல வந்தேன். டைப்பிங்கோ கீதா அக்கா..்். நிறைய தப்பு வருது்.

      Delete
  14. வணக்கம் சகோதரி

    தங்கள் பேத்தி நலமுடன் அமேரிக்கா சென்று, இயல்பு நிலைக்கு திரும்புவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைதான்.. சில சமயம் சாப்பிடுவாள், சில நேரம் பிடிக்காது. அவளுக்கு எந்த வகை உணவு பிடிக்கிறதோ அதை கொடுத்து கொஞ்சம் பழக்கப்படுத்தலாமே..! இங்கு என் பேத்தியும் (மகள் வயிற்று) இன்னமும், (நாலு வயது நிரம்பி விட்டது.) சரியாகவே சாப்பிட மாட்டாள். பசியாத வரம் வாங்கி வந்து விட்டாள் என நாங்கள் சொல்வோம். தங்கள் பேத்தியும், பசித்து, ருசித்து விரைவில் சாப்பிட ஆரம்பிக்க வேண்டுமென நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    டோக்ளா விபரங்கள் தந்திருப்பது அறிந்து கொண்டேன். தாங்கள் செய்த திப்பிச டோக்ளாவும் நன்றாக உள்ளது. அதன் விபரங்களும் மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    நானும் சஷ்டி கவசம் குரு, ஷண்முக கவசங்கள் சொல்வேன். அனைவருக்கும் ஷண்முகன் நல்ல வாழ்க்கையை தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
    கொஞ்சம் நேரம் கழித்து கடமைகளை முடித்து விட்டு மீண்டும் வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உங்கள் பிரார்த்தனைகளுக்கும் கனிவான விசாரிப்புக்கும் ரொம்ப நன்றி. டோக்ளா நிறையச் சாப்பிட்டிருந்தாலும் முறைப்படி பண்ணியது ரொம்பக் கொஞ்சமாகவே! இம்மாதிரி பஜ்ஜி மாவில், ரவாதோசை மாவில் என்று பண்ணுவேன். அந்த மாவும் செலவாகணுமே. இட்லி மாவு இருந்தால் கூடக் கடலை மாவும் அதோடு தேவையான உப்புக்காரமும் போட்டுப் பண்ணலாம். நன்றாகவே வரும். உங்கள் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு மெதுவாகவே வாருங்கள். அவசரமே இல்லை.

      Delete
  15. சுவையான கதம்பம். திப்பிச டோக்ளா - :) இங்கே விதம் விதமாக டோக்ளா கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் வெளியிலிருந்து எதையும் வாங்கி உண்பதில்லை - கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக வெளியே எதுவுமே சாப்பிடவில்லை.

    தற்கொலை - என்ன சொல்ல! பிரச்சனைகளைத் தாங்கிக் கொள்ளும் மனோ நிலை இன்றைக்கு பலரிடம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இங்கேயும் வெளியே இருந்து எதையும் வாங்குவது இல்லை. லாக்டவுன் முடிந்து ஜூன் மாதம் காடரர் சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தாலும் நாங்கள் இன்னமும் வாங்க ஆரம்பிக்கவில்லை. பயமாகத் தான் இருக்கு வாங்க! அங்கே டோக்ளா மட்டும் என்ன? பராந்தாவும் விதம் விதமாகக் கிடைக்குமே!

      Delete
  16. Replies
    1. நன்றி திரு தனபாலன்.

      Delete
  17. என்றைக்கு கூட்டுக் குடும்ப முறை சிதறியதோ அன்றைக்கே கலாச்சார அழிவு ஆரம்பமாகி விட்டது...

    போதாக்குறைக்கு மாற்று மத பள்ளி நிர்வாகங்களில் பொட்டு வைக்காதே.. பூ வைக்காதே.. மஞ்சள் பூசாதே.. காப்புக் கயிறு கட்டாதே.. மருதாணி தீட்டாதே.. தீபாவளி கொண்டாடாதே... என்றெல்லாம் எதிர்மறை ஆக்கி விட்டார்கள்..

    அப்படியானவர்களுக்குத் தான் ஆலவட்டம் காட்டுகிறார்கள்..

    பள்ளிகளில் நீதிநெறி வகுப்புகளே கிடையாது..

    கொன்றை வேந்தன், ஆத்திச் சூடி போன்றவை கற்பிக்கப்படுவதே இல்லை..

    ஆங்கிலக் கல்வி முறையைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் பெற்றோர்களால் பிள்ளைகளிடத்தில் நல்ல பல சொல் வழக்குகளைச் சொல்ல முடிவதில்லை...

    குடும்ப நலம் என்ற போர்வையில் சிறு குடும்பம் சீரான வாழ்வு என நம்மவர்கள் கருவறுக்கப்பட்டனர்...

    கலாசாரத்துடன் சற்றும் தொடர்பில்லாத பலரும் தமிழர்கள் என்றாகி விட்டனர்..

    பைத்தியம் பிடித்த குரங்கு
    கள்ளைக் குடித்து வைக்க
    அதைத் தேளும் கொட்டி வைத்ததாம்...

    அந்த நிலைமையே இன்றைய
    தமிழ் ஹிந்துக்களுக்கு!..

    அன்று வாழ்வில் உயர்ந்தவர்கள் இளைய தலைமுறையினர்க்கு எடுத்துக்காட்டாக விளங்கினர்..

    இன்றைக்கு அப்படி இல்லை என்பது உண்மை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, இப்போதிருக்கும் சுதந்திர உணர்வில் கூட்டுக்குடும்பம் என்பது தாய், தந்தையோடு மகன், மருமகள் குழந்தைகளுடன் இருந்தாலே பெரிய விஷயம். அந்தக் காலக் கூட்டுக் குடும்பமெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. குழந்தைகள் பெற்றுக்கொள்வதையும் தடுத்து விடுகின்றனர். காலம் தான் இதை எல்லாம் புரிய வைக்க வேண்டும். பள்ளிகளிலும் உரிய போதனைகள் இல்லை. ஆசிரியர்களுக்கு மரியாதையும் இல்லை. ஆசிரியர்கள் நடத்தையும் சொல்லும்படி இல்லை.

      Delete
  18. குழந்தை நன்றாக விளையாடுவது மனதுக்கு மகிழ்ச்சி. சில குழந்தைகள் பால் மட்டும் தான் சாப்பிடும். என் மகனும் சிறு வயதில் அப்படித்தான் பால் மட்டும் போதும் அவனுக்கு, அப்புறம் அக்கம் பக்கத்து குழந்தைகள் எங்கள் வீட்டில் வந்து சாப்பிடும் அதைப் பார்த்து அவனும் சாப்பிட கற்றுக் கொண்டான். குழந்தைகளுடன் சாப்பிட விட்டால் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். கொரோனா காலத்தில் யாரும் வீட்டுக்கு வர மாட்டார்கள்.

    கேட்கும் செய்திகள் மனதை வருத்தப்பட வைக்கிறது. மனோபலம் இல்லை.
    குழந்தைகள் காணமல் போகிறார்கள், சிறு குழந்தைகள் பெரிய பெண்கள் எல்லாம்.

    கொரோனா காலத்தை இறைவன் அருளால் கடக்க வேண்டும்.

    டோக்ளா , பறங்கி பிஞ்சு சமையல் குறிப்புகள் நன்றாக இருக்கிறது. பறங்கி பிஞ்சு சுரைக்காய் இரண்டிலும் அடை செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, அம்பத்தூரில் நாங்க இருந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த பையர் பாலைத் தவிர்த்துக் கஞ்சி மட்டுமே சாப்பிடுவார். பள்ளிக்குக் கூடக் கஞ்சி தான் எடுத்துச் செல்வார். எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியும் பலன் இல்லை. பின்னாட்களில் அம்பேரிக்கா போயும் கஞ்சி மாவுதான் கூடவே சென்றது. கல்யாணம் ஆனதும் கொஞ்சம் கொஞ்சம் சப்பாத்தி ஒன்று, இட்லி ஒன்று, தோசை ஒன்று என எடுத்துக்கொண்டார். அதுவும் சாப்பிட மணிக்கணக்காகும். இன்னமும் இப்போதும் அப்படித் தான். 45 வயது ஆகிறது. அரிசிச் சாதம் என்பதே கிடையாது. அதான் பயம்.

      Delete
  19. கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசியவர் போலீசில்  சரணடைந்துள்ளார். 
    டோக்ளா, பரங்கிக்கொட்டை மகாத்மியம் எல்லாமே சூப்பர். 
    இன்றைய தலைமுறை கொதி தாங்கா நொய் அரிசியாக  இருக்கிறது. 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, வழக்கம்போல் சுருக்கமான வாக்கியங்களால் எல்லாவற்றையுமே விமரிசித்து விட்டீர்கள். நன்றி. :)))))

      Delete
  20. வணக்கம் சகோதரி

    தற்கொலை செய்து கொள்பவர்களுக்கும் உறுதியான ஒரு மனதிடம் இருக்க வேண்டுமென எண்ணத் தோன்றுகிறது. ஒரு சூழ்நிலையை எதிர்த்து போராடவோ, இல்லை, அதன் போக்கில் போக விட்டு அதனால் வரும் இன்ப துன்பங்களை சரி சமமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவமோ இல்லாதவர்கள்தான் இந்த முடிவுக்கு மனம் ஒப்பி செயல்படுகிறார்கள். இதனால் தன்னை சார்ந்த பிறருக்கு மனக் கஸ்டங்கள் வருமேயென அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. தாங்கள் எடுக்கும் இந்த சுயமுடிவில் தங்களின் சுயநலன்கள் நிறைந்திருப்பதை அவர்கள் உணருவதேயில்லை. வேறு என்ன சொல்ல..!

    தாங்கள் பூசணி அடை செய்யும் விபரத்தை பற்றி தெளிவாக கூறியிருப்பதை தெரிந்து கொண்டேன். இந்த மாதிரி இளங்கொட்டை பூசணியை நாங்கள் வாங்கியதேயில்லை. தவிரவும் அடைக்கு இதுவரை பூசணி சேர்த்ததுவும் இல்லை. இனி இப்படி கிடைத்தால் செய்கிறேன். இந்த பறங்கி கொட்டைகள் பார்க்கும் போதே வளருவது அந்த பழமொழிக்கு வெகுவாகவே ஒத்துப் போகிறது. படங்கள் நன்றாக வந்துள்ளது அனைத்துப் பகிர்வுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, தற்கொலை செய்து கொள்பவர்களும் மனதிடம் வாய்ந்தவர்கள் எனில் தற்கொலை எண்ணமே வராதே. என்ன செய்ய முடியும்? இது தான் ஒரு தீர்வு என நினைக்கின்றனர். இதன் மூலம் உயிருடன் இருப்பவர்கள் அனுபவிக்கப் போகும் துன்பத்தை நினைத்துப் பார்ப்பதில்லை.

      பறங்கிக்கொட்டை இளசு அங்கே கிடைத்தால் வாங்கிச் செய்து பாருங்கள். இளசு இல்லைனாலும், பச்சைப் பறங்கினா ஓரளவுக்குப் பரவாயில்லை. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  21. பக்கத்து வீட்டுக்காரனுக்கு கொரோனா வந்தால் அவனை பாவம் செய்தவனா பார்க்கிறோம். அதுவே செலிபிரிட்டிக்கு வந்தால் பரிதாபப்படுகிறோம்.

    பரங்கிக்காயில் அடை.. அடடே! டோக்ளா இதுவரை செய்ததில்லை..

    அவரவர் நம்பிக்கை அவரவருக்கு... அடுத்தவர் நம்பிக்கையை எதற்கு கேலி செய்யனும்?! அதில் என்ன திருப்தி கிடைக்கும்ன்னு புரில!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி, செலிப்ரிட்டிக்குக் கொரோனா வரக்கூடாதா என்ன? அவங்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். பறங்கிக்காயில் அடை செய்து சாப்பிட்டுப் பாருங்க. நல்லா இருக்கும்.

      Delete
  22. டோக்ளா படம் ஒழுங்கா வரலியோ ?? இந்த பிரச்சனைக்கும் வளர்ப்பே காரணம். சிறு வயதில் தினமும் கந்த சஷ்டி படிப்பேன். இப்ப ஸ்கந்த குரு கவசமும் உண்டு. சில நாட்களில் வேல் மாறல் உண்டு

    ReplyDelete
    Replies
    1. வாங்க எல்கே, நினைச்சுண்டு படம் எடுத்தால் இப்படித்தான். மத்தியான வெயிலில் எதிர் ஃப்ளாட்டில் இருந்து வரும் ஒளிப் பிரதிபலிப்பு இங்கே! அதனால் சரியா இல்லை. சமையலறையிலேயே எடுத்திருக்கணும்.

      வேல் மாறல் படிக்கும் விதம் பற்றி செங்கோட்டை ஸ்ரீராம்போட்டிருந்தார். ஆனாலும் எனக்குள் கொஞ்சம் பயம் இருக்கும். தப்பாயிடுமோனு!

      Delete
  23. திப்பிச வேலை...ரசித்தேன்.

    ReplyDelete