எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 01, 2020

கணினியிலிருந்து தமிழ் வரை!

இரண்டு மடிக்கணினி இருக்குனு சொல்லி இருக்கேன் இல்லையா? அதில் பழசில் பாட்டரி தீர்ந்து போய் ஆறு மாசமாக மாத்திடு, மாத்திடுனு கதறிக் கொண்டிருந்தது. நான் அதை சார்ஜில் போட்டுக் கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தேன். வழியில் வயர் நீளமாக நீட்டிக் கொண்டிருக்கும். நம்மவருக்கு அதைத் தாண்டுவது ஏதோ வித்தை போல! கஷ்டப்பட்டுப் போவதாய்க் காட்டிப்பார். ஆனாலும் இன்னிக்கு வேண்டாம், இன்னும் கொஞ்ச நாட்கள் ஓட்டலாம்னு இருந்தேன். ஆனால் பாருங்க, இன்னிக்கு "வேல் மாறல்" பாராயணம் பண்ணும்போது தொலைபேசி அழைப்பில் இன்னிக்கு ஒரு முக்கியமான மெயில் மைத்துனர் அனுப்பி இருப்பதாய்க் கூறவே அதைப் பார்க்க வேண்டி மெயிலைத் திறந்துவிட்டு நம்ம ரங்க்ஸிடம் காட்டினேன். அவர் தன்னோட டீபாயின் மேல் வைக்கச் சொல்ல அவசரமாக அதில் கனெக்டிங் வயர் இருப்பதை மறந்துட்டு அப்படியே இழுத்துட்டேன். அம்புடுதேன். போயே போச்! போயிந்தி! ஒண்ணுமே வரலை! ஒரே கறுப்புத் திரை. மறுபடி வயரைச் சொருகிப் ப்ளகில் சேர்த்து ப்ளகையும் "ஆன்" செய்துட்டுக் கணினியைத் திறந்தால் Option "Start windows normally"  வந்தது, சரினு தட்டிட்டு உட்கார்ந்தால் வின்டோஸ் திறக்கவே இல்லை.

மறுபடி ஜகதலப்ரதாபன் போல சில, பல வேலைகளைச் செய்து மறுபடி ஸ்டார்ட் கொடுத்தால் உடனே கணினி ரிப்பேருக்குப்போய் விட்டது. இது முடிய சில, பல நிமிடங்கள் ஆகும்னு சொல்லிட்டது. ஆகவே இன்னொரு மடிக்கணினியில் நம்மவருக்கு வேண்டியதை எடுத்துத் திறந்து கொடுத்தேன். இது ரிப்பேர் ஆகி வின்டோஸ் சரியாகத் திறந்து டெஸ்க் டாப் திறக்கவும் பார்த்தால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பல ஐகான்கள் இல்லை. முக்கியமாய் இணைய இணைப்பே இல்லை. காணாமல் போய்விட்டது. க்ரோம் எங்கேனே தெரியலை. ஆன்டி வைரஸ் எனக்கும் இந்தக் கணினிக்கும் சம்பந்தமே இல்லைனு சொல்லுது. எப்படியானும் இணைய இணைப்பைக் கொண்டு வந்துடலாம்னு முயன்றால் ம்ஹூம்! அசையவே இல்லை. சரி, இணைய இணைப்புக் கொடுப்பவரைக் கூப்பிடலாமானு நினைச்சுட்டு அடுத்த நிமிஷமே அந்த யோசனையைப் புறம் தள்ளிவிட்டுக் கணினி மருத்துவரையே கூப்பிட்டேன். மத்தியானம் வருவதாகச் சொன்னார்.

மத்தியானம் வந்து பார்த்துட்டு நான் செய்த மாதிரியே செய்தார். இணைய இணைப்பு வந்துவிட்டது. துரோகி! ஆனால் க்ரோம் எல்லாம் வரலை. ஆன்டி வைரஸும் வரலை. அப்புறமாய்ப் பார்த்துட்டு ஆன்டி வைரஸ் முடிஞ்சிருக்கிறதைக் கண்டு பிடித்துச் சொன்னார். அதுக்கப்புறமா இனிமேல் தாங்காது, பாட்டரி வாங்கியே தீரணும்னு சொல்லி அவரை பாட்டரியும் வாங்கிப் போடச் சொல்லிட்டு ஆன்டி வைரஸையும் புதுப்பிச்சாச்சு. இத்தனை நேரம் அதான் வேலை. இப்போக் கணினியில் அந்த ஜாவா ஸ்க்ரிப்ட் எரர் வந்தது கூட வரலை என்பதோடு ஜிமெயில் கனெக்ட் செய்யும் போது "cannot sync" என்று வருமே அதுவும் வரவில்லை. ஏதோ புதுக்கணினியில் வேலை செய்யறாப்போல் ஒரு எண்ணம்.
********************************************************************************

ஒரு வாரமாகக் கண்ணில் வலப்பக்கம் கீழ் இமை வீங்கிக் கொண்டிருந்தது. ஏதோ கண்ணில் தான் பிரச்னையாக்கும்னு நினைச்சுட்டுக் கணினிப் பயன்பாட்டையும் குறைத்திருந்தேன். வலி வேறே இருந்தது. கடைசியில் அது ஏதோ எறும்போ, கொசுவோ, வண்டோ கடித்ததால் வந்ததுனு தெரிய வந்தது. ஆனாலும் கண்கள் சிவந்து வீங்கிப் பார்க்கவே கவலை அளிக்கும்படி இருந்தது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு!
*********************************************************************************

ஊரடங்கை முழுக்கத் தளர்த்தி இருக்காங்க என்றே சொல்லலாம். மக்கள் ஊரடங்கிலேயே சொன்னதைக் கேட்காமல் கூட்டம் கூட்டமாகக் கூடினார்கள். இனிமேல் கேட்கவே வேண்டாம். பேருந்து சேவையையும் ஆரம்பித்து விட்டதாகத் தெரிய வருகிறது. ஆனால் இங்கே திருச்சியில் தனியார் பேருந்து சேவை இப்போது துவக்கப் போவதில்லையாம். நல்லதாய்ப் போச்சு! கோயில்கள் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டாலும் எங்களைப் போன்றவர்கள் போக முடியாது. பத்து வயதுக்குக் கீழுள்ளவர்களும், அறுபது/அறுபத்தைந்து வயதுக்கு மேல் ஆனவர்களும் போகக் கூடாதாம்! என்னத்தைச் சொல்வது!
*********************************************************************************

நாட்டு நடப்பு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. சின்னச் சின்னக் காரணங்களுக்கெல்லாம் சண்டை, வெட்டு, குத்து. பசுமாடு மேய்ந்தது என்பதற்காக ஒருத்தர் மாட்டை வெட்டி விட்டார். பாவம், வாயில்லாப் பிராணி. இன்னொரு கூட்டத்தில் நண்பர்கள் தங்கள் நண்பன் பிறந்த நாளில் அவருக்குச் சாணி அபிஷேஹம், சாம்பல் அபிஷேஹம் என்றெல்லாம் செய்து கிட்டத்தட்ட அரைக் கொலை பண்ணி இருக்கிறார்கள். இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தியைத் தூக்குவதோ அரிவாளைத் தூக்குவதோ அதிகம் ஆகிவிட்டது. மக்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டுக் கொந்தளிக்கின்றனர்.
*********************************************************************************
தமிழர்களுக்கு அரசாங்க வேலை முக்கியமாய் மத்திய அரசு வேலை கொடுப்பதில்லை/ஓர வஞ்சகம் என்றொரு விமரிசனம் எழுந்துள்ளது. முதலில் இப்படி வேலைக்கு ஆட்கள் எடுப்பதை நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறார்கள்? அறிந்து வைத்திருந்தாலும் எத்தனை பேர் அதற்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் மனோநிலையில் இருக்கிறார்கள்? இங்கே தான் தேர்வு முறைகளையே எதிர்க்கும் சூழ்நிலை. எட்டாம்வகுப்புப் பொதுத் தேர்வு ஆங்கிலேய ஆட்சி முறையிலேயே இருந்தது தான். அந்தக் காலங்களில் பலரும் எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஈஎஸ் எல் சி என்பார்கள். அதில் தேர்ச்சி பெற்றதும் ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியர்களாக ஆகி இருக்கின்றனர். எங்க வீட்டிலேயே அம்மாதிரி நாலைந்து பேர் ஆசிரியர்களாக ஆகி இருக்கின்றனர். தேர்வு வைத்தால் தான் தகுதி தெரியவரும். தேர்வினால் மாணாக்கர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாக இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்தால் மன அழுத்தம் போய்விடுமா?

அப்போது பத்தாம் வகுப்பு, பனிரண்டாம் வகுப்பில் மன அழுத்தம் அதிகம் ஆகாதா? அப்போது மட்டும் மாணவர்களுக்கு மன தைரியம் வந்துவிடுமா? ஏற்கெனவே மோசமான பாடத்திட்டம். அள்ளிப் போடப்படும் மதிப்பெண்கள்/ எல்லாவற்றையும் மனப்பாடம் பண்ணி எழுதும் மாணாக்கர்கள். இவர்கள் மேல் வகுப்புகளுக்கு அதாவது கல்லூரிகளில் பொறி இயல்,  மருத்துவம் படிக்கையில் திணறிப் போகின்றனர். பலராலும் எதிர்கொள்ள முடியாமல் போகிறது. இந்த அழகில் தேர்வே வேண்டாம் என்று சொல்லுவது அநியாயம். முதலில் பாடத்திட்டத்தை மனப்பாடம் செய்யாமல் புரிந்து கொண்டு படிக்கும்படி மாற்றி ஆக வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கும் பாடத்தில் விருப்பம் வரும். எத்தனை பேருக்கு அரசு வேலைக்கு +2 படித்தால் போதும் என்பது தெரியும்? அதற்கான தகுதித் தேர்வுக்கு எப்படித் தயார் செய்து கொள்வது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதை எல்லாம் சொல்லிக் கொடுக்கும்படி இங்கே யாரும் இல்லை. இங்கே உள்ள அரசியல்வாதிகளுக்கோ, படிப்புச் சொல்லிக் கொடுப்பவர்களுக்கோ அதில் எல்லாம் ஆர்வமும் இல்லை; அதை எல்லாம் தெரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.

இதை எல்லாம் மாநில அரசு தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஐஏ எஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் ஒரு காலத்தில் தமிழகம் தான் கோலோச்சியது. இப்போது தமிழகத்தைப் பொறுத்தவரை அதில் தேர்ச்சி பெறுபவர்கள் சிபிஎஸ்சி, ஐசிஎஸ் ஈ போன்ற தனியார் பள்ளிகள் அல்லது கேந்திரிய வித்யாலயாவில் படித்தவர்களாகவே இருப்பார்கள். இந்தப் பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக இவற்றில் படிக்கும் அளவுக்கு வசதி படைத்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால் அரசுப்பள்ளிகளில் படித்தவர்களால் இவற்றை எதிர்கொள்ள முடியாது. பாடத் திட்டம் மட்டுமின்றி  அந்த அளவுக்கு மாணவர்களைக் கோழையாக்கி வைத்திருக்கிறார்கள். ஆகவே இப்போது "நீட்" "ஜேஈஈ" மற்றத் தேர்வுகளுக்கு அரசு சார்பில் பயிற்சிப் பள்ளிகள் இருப்பதைப் போல் இம்மாதிரி மத்திய, மாநில அரசுத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள், ரயில்வேதேர்வுகள் ஆகியவற்றை எதிர்கொள்ளவும் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் தமிழக மக்களும் மத்திய , மாநில அரசுப்பணிகள், வங்கிப் பணிகள், ரயில்வே போன்றவற்றில் வேலை வாய்ப்புக்குப் போட்டியிட முடியும். இப்போது பொறி இயல் படித்துவிட்டுக் கூட ஐஏ எஸ், ஐபிஎஸ் தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெறுகிறார்கள் எனில் அந்தத் தேர்வுகள் எவ்வளவு கடினமானவையாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்குக் கிடைக்கும்/கிடைத்திருக்கும்/கிடைக்கப் போகும் பெரும் சொத்து கல்வி ஒன்று மட்டுமே. அதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் கஷ்டப்பட்டு உழைத்துப் படித்தால் சமூகத்தில் நன்றாக முன்னுக்கு வரலாம். படிக்கும் காலம் படிப்பு ஒன்றைமட்டுமே நினைத்துப் படிக்க வேண்டும்.  தேர்வுகளை எதிர்கொள்ளும் மனோ தைரியம் வேண்டும். தமிழ்நாட்டில் தமிழில் படிப்பவர்களால் கூடத் தமிழை ஒழுங்காக எழுதவோ, பேசவோ முடியவில்லை. "சொல்ல மாட்டேன் என்கிறார்கள்" என்பதைச் "சொல்ல மாட்ராங்க" என்கிறார்கள். நமது முதல் மந்திரியாக இருக்கும் எனச் சொல்ல வேண்டியதை, "முதல் மந்திரியாக இருக்கக் கூடிய" என்கின்றனர். இருக்கக் கூடிய என்பது ஏதோ சந்தேகமாகச் சொல்லும்போது பயன்படுத்த வேண்டியது அல்லவோ?  அதே போல் திருமணம் பண்ணிக் கொள்வேன், என்பதை "கல்யாணம் பண்ணுவேன்" என்கின்றனர். இது இவங்க யாருக்கோ கல்யாணம் பண்ணி வைப்பதைத் தான் குறிக்கும். "நீடூழி வாழ்க" என்பது இப்போது "நீடுடி வாழ்க" என்றாகி அதுவே நிரந்தரமாகவும் ஆகி விட்டது. இப்படிப் பல சொற்கள் அர்த்தமே மாறிப் பேச்சுக்களில் எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்னத்தைச் சொல்றது! இந்த அழகிலே வேறு மொழி வந்துவிட்டால் தமிழ் அழிந்து விடுமாம்.

தொல்காப்பியர் காலத்திலிருந்து மணிப்ரவாள நடை, க்ரந்தம், எனப் பலவற்றையும் பார்த்திருக்கும் தமிழ்மொழி, தெலுங்கு, கன்னட, துளு, மராட்டி அரசர்கள் ஆட்சியின்போதெல்லாம் அழியாத தமிழ்மொழி, கிட்டத்தட்ட 40 ஆண்டு கால சுல்தான்கள் மதுரையில் ஆட்சி புரிந்தபோது அழியாத தமிழ்மொழி இப்போது ஹிந்தி வந்துவிட்டதாலோ, அல்லதுவேறே மொழி வந்துவிட்டதாலோ அழிந்துவிடுமா? மொழி என்றைக்கும் அழியாதது. அதைப் பேசும் கடைசி மனிதன் இருக்கும்வரை அழியாது. தமிழ்நாட்டில் இத்தனை கோடி மக்கள் இருக்கையில்சென்னைத் தமிழ், நெல்லைத் தமிழ், குமரித் தமிழ், மதுரைத் தமிழ், மலையாளத் தமிழ் என்றெல்லாம் தமிழ் இருக்கையில் தமிழ் அழிந்தெல்லாம் போகாது. என்றென்றும் வாழும், நாம் மனம் வைத்தால்!

37 comments:

  1. கதம்பம் நன்று.

    சில விஷயங்கள் என்றைக்கும் மாறுவதில்லை! சிலர் பேசும் தமிழைப் பார்த்தால் கவலை தான் வருகிறது!

    அரசுத் துறை வேலைகளுக்கு குறிப்பாக மத்திய அரசு வேலைக்கான தேர்வுகள் எழுதுபவர்கள் குறைவு தான் - ஏனோ நம் ஊரில் பலருக்கும் பிடிப்பதில்லை! நானே சிலரிடம் தேர்வு எழுதுச் சொன்னபோது “அதெல்லாம் வேலைக்காகாது” என்று சொல்லி விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், முன்னால் எல்லாம் அதாவது 40,50 வருடங்கள் முன் வரை மத்திய அரசுப்பணிக்கு இளைஞர்கள் போட்டி இட்டார்கள். அப்போதெல்லாம் காம்பெடிஷன் சக்சஸ் என்னும் புத்தகம் இதற்கான பயிற்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.மத்திய அரசுப் பணி, வங்கிப் பணி, எல் ஐசி போன்றவற்றிற்குப் பட்டப்படிப்போடு மாநில மொழியும் கட்டாயமாய்த் தெரிந்திருக்கணும். இதை யாருமே அறியவில்லை. குஜராத்தில் நாங்க இருக்கும்போது எங்க பெண் எல் ஐசி எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்குப் போனப்போ குஜராத்தி மொழி தெரியாது என்பதால் தேர்வாகவில்லை. அப்போத் தான் எங்களுக்கு மத்திய அரசுப் பணிக்குப் போட்டி இடும் இளைஞர்களுக்குத் தாங்கள் வசிக்கும் மாநில மொழிப் பயிற்சியை அவசியம் என்றாக்கி இருப்பதே தெரியவந்தது. இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு ஏதோ ஹிந்தியைத் திணிப்பதாகச் சொல்லிக் கொண்டு தேர்வுகளைப் புறக்கணிக்கிறார்கள், நமக்குத் தான் நஷ்டம் என்பதே தெரியவில்லை.

      Delete
  2. மடிக்கணிணி பேட்டரிக்கு எவ்வளவு ஆச்சு? என் மடிக்கணிணி இந்த (சென்னை மற்றும் இங்க) ஊர் பவர் ஃப்ளக்சுவேஷன்னால லாக்டவுனில் அனேகமா போயிடுச்சு (என்னிடம் ஒரு எலெக்டிரானிக் பொருள் இரண்டு வருடத்தில் பழுதுபடுவது இதுவே முதல் முறை. நான் பொருளை பத்திரமா வச்சுப்பேன்.) இப்போ இரண்டு வாரமா சுத்தமா போயிடுச்சு. நான் பவர்லதான் உபயோகிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லையாரே! இந்த மடிக்கணினிக்குப் பத்து வயதாகி விட்டது. 2018 ஆம் ஆண்டு வரை அதனுடைய ஒரிஜினல் பாட்டரியிலேயே வேலை செய்தது. அப்போத் தான் பாட்டரி தீர்ந்து போய் முதலில் ஒருத்தர் டூப்ளிகேட்டைப் போட்டுட்டு அது வேலை செய்யாமல் சார்ஜிலேயே போட்டு வேலை செய்து கொண்டிருந்தேன். பின்னர் வந்த இவர் தான் அப்போ ஒரிஜினல் வாங்கிப் போட்டார். முழுசாக இரண்டரை வருடங்கள் வந்திருக்கு அது. இப்போப் புதுசு மாத்தி இருக்கு. அவரோட பில், பாட்டரி, ஆன்டி வைரஸ் எல்லாமும் சேர்ந்து சுமார் 5,000/-க்குக் கொஞ்சம் கீழே! இதுக்கும் வாரன்டி இருக்கு. இரண்டு வருடம் வரும்னு நம்பறேன். அதுக்குள்ளே பார்த்துக்கலாம்!

      Delete
  3. மடிக்கணிணிக்கு வயரைத் தட்டிவிட்டு ஆபத்தை உண்டாக்கியவரிடம் உண்டான கோபம், இன்றைக்கு உங்க இடுகைல தெரியுது.

    கண் பிரச்சனை தீர்ந்தது நிச்சயம் நிம்மதியான விஷயம். நான் உங்கள்ட கேட்கணும்னு நினைத்துக்கொண்டிருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நெல்லையாரே, அப்படி முட்டாள் தனமாகச் செய்தது நான் தான். நம்மவர் இல்லை. அவர் இதுக்கெல்லாம் வரவே மாட்டார். அவர் ஐபாட், நான் கணினி என்று இருவரும் பாகம் பிரித்துக் கொண்டாச்சு. ஆகவே கணினியில் பார்க்கணும்னா நான் போட்டுக் கொடுத்தால் தான் உண்டு. இல்லைனா அவருக்குத் திறக்கவே தெரியாது! :) பாஸ்வேர்ட் இருந்தால் கேட்கவே வேண்டாம்! ஒரு வாரமாகக் கண் பிரச்னையோடு அவதி. முந்தாநாளில் இருந்து வீக்கம் வடிய ஆரம்பிச்சிருக்கு. இன்னிக்குப் பரவாயில்லை. வலி இல்லை.

      Delete
  4. //மத்திய அரசு வேலை கிடைப்பதில்லை// - இதுவும் மருத்துவப் படிப்புக்கும், நிறைய ஃப்ராடு நடக்குது. கேரளாவிலிருந்து நிறையப்பேர் நம்ம ஊர்ல தேர்வு எழுதி பாஸ் பண்ணறாங்க. தமிழர்களுக்கு-தாய் மொழி தமிழ் இருக்கறவங்களுக்கு தமிழகத்தில் மத்திய அரசு வேலையில் 85 சதவிகிதம் கொடுக்கணும். இதுல நாம காம்ப்ரமைஸ் பண்ணவே கூடாது. வேற தாய்மொழி இருக்கறவங்களுக்கு அவங்க அவங்க மாநிலத்தில்தான் மத்திய அரசு வேலை கொடுக்கணும். இதுல இங்கயே இருக்கும் தெலுங்கு, உருது தாய்மொழியா இருக்கறவங்களை மட்டும் சேர்த்துக்கணும் - எப்படி என்று தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. நெல்லையாரே, மருத்துவப் படிப்புப் பற்றி எழுதினால் நாலைந்து பதிவுகள் போட்டால் கூடப் போதாது. நம்ம அதிரடி அவங்க பெரிய பையருக்கு எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, என்னவெல்லாம் தேர்வுகளை எதிர்கொண்டு அவங்களும் பல்வேறு விதமான சோதனைகளுக்கு உட்படுத்திப் பின்னர் மருத்துவத்திற்குத் தேர்வு ஆனார் என்பதை விபரமாக எழுதி இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்த மாதிரி இங்கே பண்ணினால் அவ்வளவு தான்! அரசியல் வியாதிகள் போராட்டத்தில் இறங்குவாங்க! :( தகுதியை விட அவங்களுக்கு இதில் நடக்கும் வியாபாரத்தில் தான் நாட்டம் அதிகம். கேரளத்திலிருந்து இங்கே வந்து தேர்வு எழுதறாங்களா? இது எனக்குப் புது விஷயம்! லாலு ரயில்வே மந்திரியா இருக்கும்போது நிறைய பிஹாரிகளைத் தமிழ்நாட்டுக்கு இலவசமாகப் பயணம் செய்து இங்கே வந்து தேர்வு எழுதும்படி செய்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாசலிலேயே அவங்க எல்லோரும் குடும்பமே நடத்தினாங்க! இது விஷயம் தெரியாது. ஆனால் நம்மவர்களுக்கு டாஸ்மாக் இருந்தால் போதுமே! ரேஷனில் இலவச அரிசி கிடைச்சுடும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணம் கிடைக்கும். அரசு கொடுக்கும் மானியம் வேறே ஜன் தன் வங்கிக் கணக்கில் சேரும். இவங்களுக்கு இந்த ரேஷன் பொருட்கள் மத்திய அரசால் கொடுக்கப்படுவதே தெரியாது. மாநில அரசு தான் ஏதோ இவங்களுக்காகச் செய்யறாப்போல் நினைச்சுட்டு இருக்காங்க. அதுவே அரிசி கேட்டது முழுசும் வரலைனா அப்போ மாநில அரசு மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது. தமிழர்களை வஞ்சிக்கிறதுனு சொல்லும். 108 ஆம்புலன்ஸும் மத்திய அரசின் நிதி உதவியினால் தான் ஓடுது! அதுவும் பலருக்கும் தெரியறதில்லை. இவை எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தே நடந்து வரும் ஒன்று. இவங்களும் தொடர்கிறார்கள்.

      Delete
  5. ஊரடங்கை முழுவதுமா தளர்த்திட்டாங்க. ஆனால் நீங்க இருவரும் இன்னும் ஒரு மாதமாவது முடிந்த அளவு வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. குழந்தைகளும் (அதான் நீங்க) 70+ம் (அதான் மாமா) ரொம்ப ஜாக்கிரதையா இருக்கவேண்டிய தருணம்.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. நாங்க இப்போ எங்கே போகப் போறோம்? எங்கேயும் போவதில்லை. மார்க்கெட் முழுசும் சாத்தாரத் தெருவில் வந்துட்டால் மாமா காய், வாங்கறேன், பூ வாங்கறேன்னு கிளம்புவாரேனு பயமா இருக்கு. அதுக்காகவே மஹாலயம் முடிந்ததும் காடரிங் சாப்பாடு சொல்லிடலாமானு யோசனை.

      Delete
  6. ஆஹா ராகு கேது மாற்றம் கீசாக்காவுக்குத்தான் எழுப்பம் போலும்:)... புது பற்றி போட்டதுக்கே புதுக் கணணிபோலாகிவிட்டதே:)...
    புரியாமல் இருந்த கண் பிரச்சனைக்கும் முடிவு வந்திருக்கே:)...
    இந்த ராகு கேது மாற்றம் கீசாக்காவுக்கு வெள்ளி துலாவில:)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, எனக்குத் துலாவே இல்லை. நீங்க மட்டும் ஃபேஸ்புக்கில் இருந்திருந்தால் நான் என்ன ராசி, நக்ஷத்திரம் முதற்கொண்டு தெரிஞ்சிருக்கும். ஆனால் இப்போ என் ராசிக்கு நல்லாத்தான் சொல்றாங்க. ஏழரை தான் படுத்தி எடுத்து விட்டதே! அதுவும் 2016 ஆம் ஆண்டு! ஒரு புரட்டுப் புரட்டி விட்டது. :(

      Delete
  7. இந்தியாவில்தான் இப்போ கொரொனாவின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே போகிறதாமே.. அரசாங்கம்தான் என்ன செய்யும், நெடுகவும் ஊரடங்கைப் போட்டால் நாடு இன்னும் பொருளாதார வீழ்ச்சிக்கு போய் விடுமே....
    ஏதோ முடிஞ்சவரை கவனமாக இருப்போம்... அதையும் தாண்டி வருவதெல்லாம் விதி தவிர வேறென்ன...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பிஞ்சு. இந்தியா விரைவில் அம்பேரிக்காவைத் தள்ளிட்டு முன்னேறிடும் போல இந்த விஷயத்தில். நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும். என்ன ஆகுமோ தெரியலை!

      Delete
  8. மக்களுக்கு ஸ்ரெஸ் அதிகமாகிக்கொண்டு வருகிறது அதனால் கோபம், துவேசம், பழிவாங்கும் எண்ணங்கள் கூடி வருகின்றன.

    தமிழ் அழியாதுதான் இருப்பினும், இப்போ படிப்பது பேசிவதெல்லாம் எங்கும் ஆங்கிலமயமாகிக்கொண்டே வருகிறதே... இதே போல தொடர்ந்தால் தமிழ் அழியாது ஆனால் மறைந்து விடும்:(

    ReplyDelete
    Replies
    1. பிஞ்சு, என்ன ஸ்ட்ரெஸ்? அவங்களாப் பண்ணிக்கிறது தானே! நீங்க சொல்வது போல் எல்லாம் ஆங்கிலமயமாகத் தான் ஆகுது! என்ன ஆகுமோ தெரியாமல் போயிட்டு இருக்கு! மக்களாய்த் திருந்தினால் தான் உண்டு.

      Delete
  9. ரொம்ப நாட்கள் கணினி பிரச்சினை இல்லாமல் இருந்தது இல்லையா.எப்படியொ நல்ல படியாக பிரச்சினை தீர்ந்தது..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, கணினி பிரச்னை இருந்து கொண்டு தான் இருந்தது. அதிகம் பாராட்டவில்லை. அதோடு கணினியில் உட்காருவதும் குறைச்சலாகி விட்டது! ஆகவே பெரிசா எடுத்துக்கலை. நேத்திக்கு மாதிரி விபத்து முன்னேயே நடந்திருந்தால் எப்போவோ சரியாகி இருந்திருக்கும்.

      Delete
  10. ஶ்ரீரங்கம் கோவில் திறந்தும் வயதானவர்களுக்குப் பயனில்லை என்பது வருத்தம் தான்.

    ReplyDelete
    Replies
    1. அரங்கனைப் பார்த்தே ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிறது, போன செப்டெம்பரில் அம்பேரிக்கா போகும் முன்னர் போயிட்டு வந்தோம்.

      Delete
  11. கதம்பம் மாதிரி பல்சுவைப் பதிவு...

    கணினி தப்பிப் பிழைத்தது அருமை..
    கண்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். சாணியைக் கரைத்து ஊற்றிக் கொள்ளும் அளவுக்கு நட்புறவு...

    நல்லவேளை கல்யாணத்தில் இந்த் மாதிரி செய்து வைக்காமல் போனார்கள்!...

    ReplyDelete
    Replies
    1. திருமணத்தில் தாலி கட்டும் பொழுது நண்பர்கள் ஸ்ஃபிரே அடித்து பெண்ணின் மூக்கினுள் நுழைந்து மயங்கி மருத்துவமனைக்கு தூக்கிப்போய் திருமணம் நின்று இருக்கிறது.

      சாப்பாடு எல்லாம் வீணாகி இலவு வீடு போலானது நண்பர்கள் உபயத்தால்...

      Chivas Regal சிவசம்போ-
      இவர்களை சவுக்கால் அடித்தால் என்ன ?

      Delete
    2. வாங்க துரை, கண்களைக் கவனித்துக் கொண்டு விடுவேன் உடனடியாக. முக்கியமான தேவை ஆயிற்றே. கல்யாணத்திலும் இப்போதெல்லாம் வெடி வெடிக்கிறேன் என்றுஎன்னென்னமோ செய்கின்றனர். கீழே கில்லர்ஜியும் சொல்லி இருக்கார். அதையும் கேள்விப் பட்டிருக்கேன்.

      Delete
  12. //மொழி என்றைக்கும் அழியாதது. அதைப் பேசும் கடைசி மனிதன் இருக்கும்வரை அழியாது//

    சரியான வார்த்தை ஆனால் இன்று தமிழ் பேசும் தமிழன் குறைந்து கொண்டே.... வருகிறான் இது உண்மைதானே....?

    ஒரு மொழியை அரசால் அழிக்க முடியாது மக்கள் நினைத்தால் அழியும் அதாவது பேசுவதை, எழுதுவதை குறைத்தால் நாளடைவில் அழிந்து விடும்.

    இதுதான் இன்றைய உண்மை நிலை

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நீங்க சொல்வது உண்மைதான். தமிழ் பேசும் தமிழன் இப்போது தேடிக்கண்டுபிடிக்கணும். மக்கள் தான் மனம் மாறணும். அதோடு பாடத்திட்டங்களிலும் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்பிக்கணும்.

      Delete
  13. கணினி போராட்டம் பெரிதாக இருக்கும் போல...

    மற்ற நாட்டு நடப்புகளை என்னவென்று சொல்ல தெரியவில்லை...

    ஊரடங்கு, தளர்வுகள் செய்யப்பட்டாலும், இனிமேல் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க திரு தனபாலன், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. ஆம், அனைவரும் கவனமாகவே இருக்க வேண்டும்., நீங்களும் கவனமாக இருக்கவும்.

      Delete

  14. கண் பிரச்சனை இல்லாமல் வீங்கிய கண் சரியாகி விட்டது மகிழ்ச்சி.
    கணினி சரியானதும் மகிழ்ச்சி.

    ஊரடங்கு தளர்வுகள் , இயல்பு வாழ்க்கை திரும்பியது என்று சொன்னாலும் கவனமாக இருப்பது நல்லது. வயதானவர்களை வெளியே விடாமல் பார்த்து கொள்ளச் சொல்லி பிள்ளைகளிடம் கேட்டுக் கொள்கிறார்கள் . பிள்ளைகள் வெளி நாட்டில் என்றால் உறவுகள் இறப்பு, திருமணம் அது இது என்று பெரியவர்கள்தான் ( உறவுகளை இழக்க கூடாது என்று) கலந்து கொள்ளும் நிகழ்வு நடக்கிறது பெரும்பாலும்.


    முன்பு பெரியவர்கள் சார்பில் அவர்கள் பிள்ளைகள்தான் போய் வருவார்கள்.(கொரோனா காலம் முன்பே)

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, ஊரடங்குத் தளர்வுகள் அறிவிப்பு வந்ததும் இங்கே அம்மாமண்டபம் திறந்தாச்சு. மக்கள் கூட்டமும் வந்தாச்சு. பேருந்துகளில் படிகளில் பயணம் செய்யும் அளவுக்கு நெரிசல் எனச் சொன்னார்கள். நாம் தான் கவனமாக இருக்கணும். மற்றபடி நாங்க எங்கேயும் போவதில்லை என்றாலும் இந்தக் கூட்டத்தை நினைச்சால் கவலையாக இருக்கு! :(

      Delete
  15. வணக்கம் சகோதரி

    நலமா? தங்கள் வலக்கண் பிரச்சனை தருகிறது என பதிவுகளில் படித்தேன். இதில் விபரம் அறிந்தேன். இருப்பினும் வலி வரும் போது நமக்கு கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கும். இப்போது பூரண குணமாகி விட்டதா?

    பதிவு அருமை. கணினி பிரச்சனை எப்படி உள்ளது. இப்போது நன்றாக செயல்பட ஆரம்பித்து விட்டதா? நீங்கள் தலைப்புக்கு வைத்த பெயர் சுவாரஸ்யமாக உள்ளது.

    ஊரடங்கு பற்றி என்ன சொல்ல..? தளர்த்துவது போல் எல்லாமுமே நார்மலாகி விட்டது. இது கொரானாவுக்கு சரியான மருந்து கண்டுபிடித்து அது பயனாகி வந்த பின் என்றால் பரவாயில்லை. அனைவரையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

    தமிழ் வளர்ச்சியுற வேண்டும். அதற்கும் அனைவருமே பாடுபட வேண்டும். ஆனால் வாழ்க்கைக்கு பணம் ஒன்றே பிரதானம் என்ற சுயநலமென்பது மொழிகளைப்பற்றி கவலைப்படாதது. நாமாவது தமிழ் மறக்காமல் இருக்க இறைவன் அருள் புரியட்டும். அனைத்துப் பகிர்வுக்கும் நன்றிகள்.

    நேற்று இங்கு வேலைகள் அதிகமென்பதினால் இரவு படுக்கப் போகும் போதுதான் கைப்பேசியை கையில் எடுக்க முடிந்தது. அப்புறம் என்னால் கருத்துரை தர முடியவில்லை. தூக்கம் வந்து விட்டது. காலை எழுந்தவுடன் வந்து விட்டேன். ஆனாலும் என் தாமதமான வருகைக்கு தயவு செய்து மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உங்கள் வசதிப்படி வந்து படித்துக் கருத்துச் சொல்லுங்கள்! போதும். நானும் இப்போதெல்லாம் காலை வேளையில் அதிகம் உட்காருவதில்லை என்பதோடு வீட்டு வேலைகள் ரொம்ப தாமதம் ஆகின்றன. ஆகவே கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டுப் பின்னர் வேலைகளைத் தொடங்கி விடுவேன்.ஊரடங்கு தளர்த்தியது தேவையாக இருந்தாலும் பயமாகவும் இருக்கிறது. தமிழ் வளர்ச்சியில் தான் இருக்கிறது. தமிழ் ஆர்வலர்கள் தான் வளர விடுவதில்லை. பக்கங்கள் நிறைந்திருக்கின்றன என யார் எழுதுகிறார்கள் இப்போதெல்லாம்? பக்கங்கள் நிறைந்திருக்கிறது என எழுதுகிறார்கள். ஒருமை, பன்மை, ஒற்றெழுத்துப் போட வேண்டிய இடம்னு எதுவுமே இப்போதெல்லாம் தெரியறதில்லை.

      Delete
  16. எங்கள் வீட்டில் மூன்று மடிக் கணினிகள் இருக்கின்றன. ஒன்றில் பாட்டரி காலி, ஆர்டர் செய்திருக்கிறேன், இன்னும் வரவில்லை.  ப்ளக் பண்ணி ஓட்டுகிறேன். இன்னொன்றை போர்மட் பண்ண வேண்டுமாம். அதிலிருக்கும் முக்கியமான கோப்புகளை சமித்துக் கொண்டு கொண்டு வாருங்கள் என்றார். இன்னொன்று சர்வீஸ் பண்ண வேண்டும். இவை  எல்லாமே பத்து வருடங்களுக்கு மேலே ஆகி விட்டன. கொடுத்து விட்டு வேறு வாங்கலாம் என்றால் அந்த சர்வீஸ் ஆசாமி, இதையெல்லாம் கொடுத்து விடாதீர்கள். ரொம்ப ஸ்டராங், இப்போது வருபவை இப்படி இல்லை என்கிறார். 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, பையர் இப்போவும் புதுசு வாங்கித்தரதாச் சொன்னார். அவங்களுக்கு நவம்பரில் Thanks giving day அன்னிக்கு விலை குறைச்சலாகக் கிடைக்கும். என்னோட இரண்டு மடிக்கணினிகளுமே அப்படி வாங்கியவையே. 2016 ஆம் வருடம் வாங்கிய "டெல்" ஐ விட இது நல்லா இருக்கும். இது தோஷிபா! மத்தியானம் முழுவதும் இதில் தான் வேலை செய்வேன். சீக்கிரமா முடியும். அதில் கொஞ்சம்பிரச்னை தான். அலுவலக வேலைகளுக்கு அதைப் பயன்படுத்திக்கிறேன்.

      Delete
  17. தேர்வுகளை பற்றி நீங்கள் எழுதியிருப்பவை அனைத்தும் உண்மை. ஆனால் உண்மையைச் சொன்னால் ஓட்டு வாங்க முடியுமா? அட்சர லட்சம் பெரும் முத்தாய்ப்பு!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தேர்வு வேண்டாம், எல்லோரும் பாஸ், அரியர்ஸ் இருந்தாலும் பரவாயில்லைனு அரசு சொன்னதை நீதிமன்றம் ஏற்க மறுத்திருக்கிறது. இப்படி எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் மறுத்தால் தான் வேலை நடக்கும் போல! ஏற்கெனவே இங்குள்ள படிப்பு சந்தி சிரிக்கிறது! :( ஒரு நாள் முகநூலில் ஒரு ஆங்கில ஆசிரியை தன் மாணவர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். DANGER என்பதை "டங்கர்" என உச்சரிக்கச் சொல்லிக் கொடுக்கிறார். குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அப்படியே திரும்பச் சொல்கின்றனர். :(

      Delete
  18. பல் சுவை. பல சுவையாக இருந்தது. தமிழ் மொழியின் சிறப்பே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக பேசப்படுவதுதான். இலக்கணம் இன்றி பேசும்போதும், இலக்கணத்தோடு பேசும்போதும் ஒவ்வொரு நிலையிலும் அதன் அழகே தனிதான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா, நன்றி. என் மாமா ஒருத்தர் எப்போதுமே இலக்கணத்தமிழில் பேசுவார். இப்போதும் யாரானும் அப்படிப் பேசினால் எனக்கு அவர் நினைவு வரும். நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete