எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 25, 2020

நள வீம பாக சாஸ்திரத்தில் இருந்து சில குறிப்புகள்!

வாழைக்காய் பொறிக்கறி

பத்து வாழைக்காய்களை எடுத்துக் காம்புகளை யறுத்து மேற்புறணியைச் சீவி ஒரு அங்குலப் பிரமாணம் துண்டு துண்டாக அறுத்து ஒரு சட்டியில் சலம் விட்டு அதில் அஞ்சு நிமிஷம் வரைக்கும் வைத்திருந்து பின்பு ஒரு மண் பாத்திரத்திலாவது வெண்கலப் பாத்திரத்திலாவது கொட்டி அதில் வடிகட்டிய நல்ல சலம் போதுமான மட்டில் விட்டு சிறிய கரண்டியளவு உப்பும் போட்டு அடுப்பின் மேல் வைத்து மெதுவாகிற பரியந்தம் வேகவிட்டுச் சலத்தை நிறுத்திவிட்டு ஒரு தட்டிற்கொட்டிக் கொண்டு  ஒரு சட்டியை அல்லது வாயகலமுள்ள பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்துக் காற்பலம் நெய் விட்டுப் பத்து முளகாய் கிள்ளிப் போட்டு ஒரு சிறிய கரண்டியளவு உளுத்தம்பருப்புச் சேர்த்து வாசனையுண்டாகின்ற வரைக்கும் வறுத்து வுடனே வெந்த காய்களை அதிர்ச்சேர்த்து ஒரு கரண்டிப் பொரிமாவும் ஒரு கரண்டி உப்பும் பெய்து வொரு இரும்புக்கரண்டியால் எல்லாவற்றையும் வொன்றாகக் கலந்து விட்டு இரண்டு நாழி பரியந்தம் அடுப்பின் மேல் வைத்துப் பின்பு இரக்கி வேண்டியமட்டும் சுடுகையோடு சாப்பிட வேண்டும்.

வாழைக்காய் வறல்
வாழைக்காயின் மேற்புரணியைச் சீவி பில்லை பில்லையாக அறுத்து அரைமுளகாயும் உப்பும் கலந்து காயுடன் பிசரி அதை ஒரு பாத்திரத்தை அடுப்பேற்றி நெய் விட்டுக் காயும்போது பெய்து வருத்தெடுத்துக் கொள்ளவும். இது பித்த வாயு.

கடுகு சேர்ந்த வாழைக்காய்க் கறி

பத்து வாழைக்காயை பில்லை பில்லையாக அரிந்து வேகவைத்திறக்கி சலத்தை யிருத்துவிட்டுப் பின்பு, 1/4அரிக்கால் பலம் கடுகு எடுத்துச் சலம் விட்டு நெகிழ அரைத்து வெந்த காயிலே கலந்து காலே அரிக்கால் பலம் புளி ரசம் வார்த்துப் போதுமான உப்புச்  சேர்த்து காலே அரிக்கால் பலம் வெந்தயப்பொடியுஞ்சேர்த்துக் கலந்து கொதிக்க வைத்துப் பின்பு கிள்ளிய முளகாய், வெந்தயம், கடுகு, சீரகம், கறிவேப்பிளை ஆகிய இவைகளை நெய்யிலே தாளித்து அதிற் கொட்ட வேண்டும். வாயு, பித்தமாம்.

வறுத்த வாழைக்காய்க் குழம்பு

பத்து வாழைக்காயெடுத்து மேற்புறணியைச் சீவி பில்லை பில்லையாக அறுத்துப் போதுமான நெய்யில் வறுத்து இருபது முளகாய், கால் பலம் கொத்துமல்லி விதை, தனித்தனி நெய்யில் வருத்துத் தண்ணீர் விட்டு அரைத்தெடுத்து அதனோடு தகுந்த புளியும் உப்புஞ்சேர்த்துக் கரைத்து தோல் போக்கிய பத்து பலம் வெண்காயம்,  21/2 பலம் வெள்ளைப்பூண்டு இவைகளை ஒரு பாத்திரத்தை அடுப்பேற்றி நெய் விட்டு அதிற் பெய்து சிவக்க வறுத்து அதில் மேற்படி வறுத்த வாழைக்காயையும் மேற்படி கரைத்து வைத்த குழம்பையும் விட்டு திரண்டு குழம்பூ ஆகிய பக்குவத்தில் இறக்கி விடவும்

மேலே சொன்ன மாதிரி செய்முறைகள் அந்தக்காலத்துப்புத்தகம் ஒன்றில்  புத்தகம் மிகப் பழையது என் சேமிப்பில்  மின்னூலாகக் கிடைத்தது. பொழுது போகாமல் எடுத்துப் படித்துக் கொண்டிருக்கேன். இதற்கு முன்னாலும் சில அத்தியாயங்கள் உள்ளன. அதில் சமையலறை எப்படி இருக்க வேண்டும் என்பதில் இருந்து அதில் இருக்க வேண்டிய சாமான்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றின் பட்டியல் அவற்றின் பயன்பாடு, அவை உடலுக்குச் செய்யும் நன்மை, தீமைகள் என எல்லாமும் பட்டியலிட்டுள்ளன. அந்தக் காலத்துச் சமையல் முறை மேலே சொன்னது. இன்னமும் இருக்கு. வாழைக்காயில் ஆரம்பம். பிரியாணி செய்முறை கூட இருக்கு. அதுவும் "தம்" கட்டிச் செய்யும் முறை. பிரியாணிக்கான சட்னியும் இருக்கு. 

23 comments:

  1. தகவல்கள் நன்று பாக்கியையும் படித்து சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வரவேற்பு எப்படி இருக்குமோனு நினைச்சேன் கில்லர்ஜி. நன்றி.

      Delete
  2. இப்படியெல்லாம் இருந்த சமையல் வழிமுறைகள் எப்படியெல்லாமோ மாறிப் போய் விட்டன...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, நீங்க சொல்வது உண்மை. அப்போது அடுப்பு எந்தத் திக்கில் இருக்கணும் என்பதைக் கூடச் சொல்லி இருக்காங்க. இப்போது பார்த்தால் அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

      Delete
  3. அன்பு கீதாமா,
    எத்தனை அழகாய்ச் சொல்லி இருக்கிறது.
    பித்தம் வாயு போயிடும் சொல்றாரா.
    இல்லை வாழைக்காய் வாயு என்கிறாரா.

    அம்மா அந்தப் புளியிட்ட கரமது பண்ணி இருக்கிறார்.
    அம்மாவின் பக்கம் இருந்து கற்றுக் கொள்ளவில்லையே
    என்று வருத்தமாக இருக்கிறது.
    மகள் நேற்று வாழைக்காய் வரவழைத்திருக்கிறாள்.
    செய்து பார்க்கிறேன்,
    நானும் மாப்பிள்ளையும் தான் சாப்பிடணும்.
    மற்றவர்களுக்கு ஆகாது.

    நெய்யிலயே செய்யச் சொல்கிறாரே.
    அப்பாடி. செழிப்பாக இருந்த காலம் போலிருக்கு. அதாவது உடல் ஆரோக்கியத்தைச் சொல்கிறேன்.
    மிக மிக நன்றி கீதாமா. குறித்துக் கொள்கிறேன்.
    நீங்கள் இதைத் தொடர்ந்து பதிவிட வேண்டும்.
    மனதுக்கு ஒரு மாற்றம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, வாழைக்காய் வாயு என்று தான் சொல்வதாக நினைக்கிறேன். ஆமாம், எண்ணெய் எல்லாம் பட்டியலில் இருந்தாலும் தாளிப்பில் எல்லாம் நெய்யே இடம் பெற்றிருக்கிறது. இதற்கு வரவேற்புக் கொடுத்திருப்பதற்கு நன்றி.

      Delete
  4. காலையிலேயே படித்தேன். கருத்திட நேரமில்லை.

    உங்கள்ட கேட்டாலே ஒவ்வொரு செய்முறைக்கும் பல வேரியேஷன்ஸ் சொல்லுவீங்க.

    நீங்க இன்னும் பழைய காலத்துக்குப் போய், வீசை, பலம் என்ற கண்க்கெல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டீங்களே

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நெல்லையாரே, என் மாமியார் கடைசி வரைக்கும் வீசை, பலம், சேர் என்றே அளவு சொல்வார். ஒரு சேர் என்பார். ஆழாக்கு என்பதைக் கடைசிவரை புரிஞ்சுக்கலை. ஆழாக்குப்படியை நடு ஆழாக்கு என்பார். அதில் பாதி உள்ள சின்னதை சின்ன ஆழாக்கு என்பார். இரண்டாழாக்குப் படியை (கால்படி) பெரிய ஆழாக்கு என்பார். குழப்பும்! திருச்சி, தஞ்சைப்பக்கம் அரைப்படியை ஒரு படி என்பார்கள். எங்க பக்கம் எல்லாம் பக்காப்படி தான் ஒரு படி. கல்யாணம் ஆனப்போ இதனால் ரொம்பப் பிரச்னை வந்திருக்கு. கடைசியில் நான் புரிந்து கொண்டேன். அவங்க புரிஞ்சுக்கலை.

      Delete
    2. எனக்கும் ரொம்ப வருஷமாவே பக்காப்படிதான் ஒரு படி என்ற புரிதல். ஆனால் ஒரு படி என்று அளக்கிறவங்க எல்லாம் (பிற்காலத்தில்) சின்னதா ஒரு சேர் அளவை உபயோகிப்பாங்க. இப்போவும் பெங்களூரில் நிலக்கடலை விற்கும் தள்ளுவண்டிகள் ஒரு ஆழாக்கு என்று கால் படி பெறுமானமுள்ளதையும் ஒரு சேர் என்று அரைப்படி பெறுமானத்தையும் உபயோகிக்கறாங்க.

      Delete
  5. இது திருமணத்துக்குச் செய்யும் அளவுமுறையா இல்லை பழைய கூட்டுக்குடும்பத்துக்குச் செய்யும் அளவு முறையா? 2 வாழைக்காய்களுக்குமேல் யார் திருத்துவார்கள்? அவரானா செய்முறைல 10 வாழைக்காய்களைத் திருத்தணும்னு சொல்றார்.

    ஒரு வேளை, எ.பி. வாசகர் வட்டம் திருவரங்கத்தில் நிகழ்ந்தால், உங்கள் வீட்டில்தான் எல்லோருக்கும் சாப்பாடு என்று ஸ்ரீராம் சொல்லியிருக்கிறாரோ? அதற்கேற்றபடி சமையல் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்திருக்கிறீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. நெல்லை, கல்யாணத்துக்கெல்லாம் 10 வாழைக்காய்கள் போதுமா என்ன? கூட்டுக் குடும்பத்துக்காகத் தான் இருக்கும். வாங்க, வாங்க எ.பி.வாசகர் வட்டம் திருவரங்கத்தில் எங்க வீட்டிலேயே நடக்கட்டும். நானே சமைச்சுப் போடறேன். அப்போத் தெம்பு வந்துடும்.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    பழையகால எழுத்து முறைகளை படிக்கும் போது அந்த காலத்திற்கே சென்ற விட்ட மாதிரியிருந்தது. பத்து வாழைக்காய் செய்முறைகள் என்பது பெரிய கூட்டுக்குடும்பம் இருக்கும் போது யாரோ எழுதினதாக இருக்கும் போலும். அத்தனை முறைகளும் நன்றாக உள்ளது. அதன் ருசிகளை நாவில் உணர்கிறேன். மீதி நளபாகங்களையும் படித்து அடுத்ததில் பகிருங்கள். ஸ்வாரஸ்யமான பதிவுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கூட்டுக் குடும்பத்துக்கானது தான் கமலா. ருசிகளை உணர்வது குறித்து சந்தோஷம். மீதியும் முடிஞ்சப்போப் போடறேன். முக்கியமாய் பிரியாணி!

      Delete
  7. நள வீம பாக சமயல் குறிப்புகள் படிக்க நன்றாக இருக்கிறது.
    உணவுக்குறிப்புகள், உடலுக்கு நன்மை, தீமைகள் ஏற்படுத்து உணவுகள் எல்லாம் அவசியமானதுதான்.
    எந்த வருட புத்தகம்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, புத்தகத்தில் வருஷம் போட்டிருக்கானு கவனிக்கலை, பார்க்கிறேன்.

      Delete
  8. மின்னூலாகவா இருக்கிறது? குறிப்புகள் ஸ்வாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வெங்கட், எங்க மின் தமிழ்க் குழுமத்தில் பழைய புத்தகங்கள் வைத்திருப்போரிடமிருந்து புத்தகங்களை வாங்கி மின்னூலாக்கி அந்த நூலகத்தில் சேர்த்துவிட்டுப் புத்தகங்களைத் திரும்பக் கொடுப்போம். என்னுடைய புத்தகங்களைக் கூட அப்படி மின்னூலாக்கி இருக்காங்க. அங்கே இருந்து தரவிறக்கிய புத்தகம் இது.

      Delete
  9. பித்தம், வாயு என வீட்டில் இதைப் பற்றி சொல்வதுண்டு...

    ReplyDelete
    Replies
    1. வாங்க திரு தனபாலன், நன்றி.

      Delete
  10. இப்படி எல்லாம் இருந்திருக்கிறதே. நன்றி.தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, நன்றி. தொடர்ந்து போடணும்னு நினைச்சால் கூட ஏதேனும் பிரச்னைகளால் தொடர முடிவதில்லை! :(

      Delete
  11. ரொம்பவே சுவாரசியமாக இருக்கு கீதாக்கா. அதாவது தமிழ்ச்சொற்கள்! அந்தக்காலத்து அளவு முறை பெரிய குடும்பம் போல! அளவெல்லாம் அப்படி இருக்கு/...

    அது சரி பிரியாணி முறை எங்கே!!!??

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதான் தேடினேன் தி/கீதா, எங்கேனு தெரியலை. புத்தகம் தேடி எடுத்து மறுபடி பகிர்கிறேன். ஒரு பதிவு ஆயிடுமே!

      Delete