எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 28, 2020

மதுரையும் மார்கழி மாசமும்!

பத்து நாட்களுக்கும் மேல் தொடர்ந்து பதிவுகள் வரலைனதும் சிலர் என்ன ஆச்சு என்று கேட்டனர். முக்கியமாய் ரேவதி பயந்தே விட்டார். தொலைபேசி அழைத்துக் கேட்டார். கண்கள் தான் முக்கியக் காரணம் என்றாலும் நான் எழுத நினைப்பதை எல்லாம் எழுத முடியாது என்பதும் ஒரு காரணம். கண்கள் வேறே சோர்ந்து விடும் விரைவில். அதன் பின்னர் கண்களை மூடிக் கொண்டாலே தேவலை எனத் தோன்றும். ஆகவே அதிகம் கணினியில் உட்காரலை. ஆனாலும் புத்தகங்கள் படித்தேன். திரு கௌதமன் அனுப்பி இருந்த அனுத்தமாவின் இரண்டு நாவல்கள், ஸ்ரீராம் அனுப்பியது "நைந்த உள்ளம்" (லக்ஷத்துப் பத்தாயிரமாவது தரம்) "பிரேம கீதம்" முதல் முறை படித்து முடித்தேன். புத்தகங்கள் வெளியீடு செய்யத் தொகுக்கும் வேலையை நிறுத்தி வைச்சிருக்கேன். அதையும் தொடரணும். இப்படிப் பல வேலைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்றன. வீட்டில் சுத்தம் செய்யும் வேலைக்கு ஆளைக் கூப்பிட முடியாத காரணத்தால் நாங்களே செய்துக்க வேண்டி இருக்கிறது. காலைப் பொழுதின் பெரும்பாகம் அதில் போய்விடும். அதோடு கொஞ்ச நாட்கள் எழுதாமல் இருப்போமே என்னும் எண்ணமும் தான். கீழே கொடுத்திருக்கும் பதிவு 2008 ஆம் வருடம் டிசம்பர் 29 ஆம் தேதியில் "மதுரை மாநகரம்" வலைப்பக்கம் பகிர்ந்தது. இங்கே மீள் பதிவாய்க் கொடுத்திருக்கேன்.

திருப்பாவை, திருவெம்பாவை எழுதியாச்சு என்பதால் அதை மீள் பதிவாய்ப் போட வேண்டாம்னு போடலை. "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்" என்னும் பெயரில் திருப்பாவைப் பதிவுகள் மின்னூலாக வெளிவந்துள்ளது.

மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் இங்கே காணலாம். ஆகவே திரும்பத் திருப்பாவை, திருவெம்பாவை பத்தியெல்லாம் எழுதாமல் சின்ன வயசில் மதுரையில் கழித்த நாட்களின் நினைவுகளைக் கீழுள்ள பதிவில் மறுபடியும் பகிர்ந்துள்ளேன்.  பதிவுகள் 3,000 த்தை நெருங்கிக் கொண்டிருப்பதாலும் நிறுத்தி வைத்துள்ளேன். 

**********************************************************************************

மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தைப் சில வருடங்கள் முன்னர் டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது. உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார். சனிக்கிழமைகளில் பெரியப்பா வீட்டில் ஏதாவது ஒரு சனிக்கிழமை பஜனை கோஷ்டியை அழைத்துச் சூடான பால், காலை ஆகாரம் முதலியன கொடுத்து கௌரவிப்பார்கள். அதில் எல்லாம் கலந்து கொண்டு பள்ளிக்கும் போயிருக்கேன். 

மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.

எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம். நம்ம ரங்க்ஸுக்கு இந்த கோஷ்டி என்றால் என்னனே தெரியாது. அவங்க பெற்றோருக்கும் தெரிஞ்சிருக்கலை. பின்னர் தான் தெரிந்து கொண்டார்கள். கோஷ்டி பார்க்க ரங்க்ஸுக்கு ஆசை இருக்கவே இங்கே ஶ்ரீரங்கம் வந்த பின்னர் உள் ஆண்டாள் சந்நிதியில் நடைபெறும் கோஷ்டியில் 2,3 முறை கலந்து கொண்டிருக்கோம். 

சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதிலும் அந்தத் தயிர் சாதம்! அதன் சுவையே தனி. வடக்குக் கிருஷ்ணன் கோயிலும்  ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! ஆனால் அப்போவே அதில் தூண்களின் சிற்ப விசித்திரங்களைப் பார்த்து ஆச்சரியமா இருக்கும்.   கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். அப்பாவெல்லாம் காலை நான்கரை மணிக்குக் கிளம்பினா எல்லாக் கோயில்களுக்கும் போயிட்டு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வருவார். என்ன ஒண்ணு பிடிக்காதுன்னா எல்லாக் கோயில்ப் பிரசாதங்களையும் ஒண்ணாய்ப் போட்டுக் கொண்டு வருவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த அந்தக் கோயில் பிரசாதத்தின் தனிச் சுவையே தெரியாமல் போயிடும்.  காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((

37 comments:

 1. என்னமோ உடனேயே எல்லோரும் கூட்டமாக் கூடிக் கருத்துச் சொல்லிடறாப்போல் எல்லாம் இல்லை. :)))))) மெதுவாத்தான் வருவாங்க எல்லோரும்.

  ReplyDelete
 2. இனிய நினைவுகள்...

  என்ன தான் இருந்தாலும் உடல் நலம் தான் முதலில்...

  மற்றவை அப்புறம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு தனபாலன் அவர்களே!

   Delete
 3. நான் படித்து ரசித்தேன். என் 5-6ம் வயதில் திருவாடானையில் கோவிலுக்குப் போய் திருப்பாவை/திருவெம்பாவை சமயம், பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்தது நினைவுக்கு வருகிறது.

  பகல்பத்து/ராப்பத்து - சில நாட்கள் முன்பு கல்யாண வெங்கடேச்வரர் கோவிலுக்குச் சென்று திவ்யப்ப்ரபந்தம் சேவாகாலம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை. அப்போதெல்லாம் இந்தப் பகல் பத்து/இராப்பத்து உற்சவங்களில் கலந்து கொண்டிருந்தாலும் அதன் தாத்பரியமே பின்னாட்களில் தான் புரிந்தது. புரிந்து பார்த்திருக்கலாமே என்னும் வருத்தம் இப்போவும் உண்டு. ஆனால் உற்சாகக்குறைவு இருந்ததே இல்லை.

   Delete
 4. கோலம் - ம்ம்ம்ம் நான் சென்றது கிராமம். நானும் சில பல கோலங்கள் படங்கள் போட்டோ எடுத்தேன். அதையாவது அனுப்பியிருப்பேன். நீங்க போட்டிருக்கும் கூகிள் கோலங்கள் பரவாயில்லை ரகம்தான்.

  ReplyDelete
  Replies
  1. நான் போட்டிருக்குக் கோலப் படங்கள் தான் நன்றாக இருப்பதாகச் சொல்லவே இல்லையே! இங்கே எங்கள் குடியிருப்பில் இதைவிட அழகாய்க் கோலங்கள் போடுகின்றனர். நாங்கல்லாம் அப்போது போட்டி போட்டுக்கொண்டு காலை சீக்கிரமே எழுந்து கோலம் போடுவோம். இப்போதெல்லாம் முதல் நாள் இரவே போட்டு வைப்பது போல் எல்லாம் போட்டதில்லை. ஒருத்தர் போடும் கோலம் இன்னொருவருக்கு என்னனு தெரியக் கூடாது ரகசியமா வேறே வைச்சுப்போம்.

   Delete
 5. நீங்க ஏகப்பட்ட பிரசாத லிஸ்ட் போட்டிருக்கீங்க...

  அங்க கோவில்ல காலைல வெண்பொங்கல்தான் தளிகை (பெருமாளுக்கு). வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும், கேசரி, அரிசி உப்புமா.

  ReplyDelete
  Replies
  1. நெல்லையாரே, எனக்குத் தெரிஞ்சு பெருமாள் கோயில்களிலே ஏகாதசி அன்று பெருமாள் தீர்த்தம் தான் பிரசாதமாகக் கொடுப்பார்கள். அதுவும் வைகுண்ட ஏகாதசி அன்று! நிச்சயம் துளசி தீர்த்தம் தான். இப்படி எல்லாம் வகை, வகையாகக் கொடுத்துப் பார்த்ததே இல்லை.

   Delete
 6. உங்களின் சின்ன வயது அனுபவங்களைப்படிக்கப் படிக்க மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது. எனக்கேற்பட்ட மிகப்பெரிய ஆச்சரியம் உங்களின் ஞாபக சக்தி தான்! நிறைய பேருக்கு இந்த வரம் கிடைப்பதில்லை! என் கணவரின் ஞாபக சக்தியை விட என் ஞாபக சக்தி குறைவு தான்!

  அதென்ன நேரு பிள்ளையார்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ, வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. என்னோட பலவீனமே இந்த ஞாபக சக்தி தான் என எனக்குத் தோன்றும். :)))) மதுரையில் மேலமாசி வீதி/வடக்கு மாசி வீதி முனையில் ஒரு பிள்ளையார் கோயில் இன்னமும் இருக்கிறது. நேரு மதுரை வந்தப்போ அந்தக் கோயில் கும்பாபிஷேஹம் நடந்திருந்தது என நினைவு.அதிலிருந்து வெறும் ஆலால சுந்தர விநாயகராய் இருந்தவர் நேரு ஆலால சுந்தர விநாயகராய் மாறிட்டார். எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அந்தக் கோயிலுக்குப் போய் வருவேன். இப்போவும் மதுரை போனால் அங்கே போகாமல் வந்ததில்லை. ரொம்பவே நெருங்கிய நண்பர் அந்தப் பிள்ளையார்.

   Delete
 7. வணக்கம் சகோதரி

  நல்ல அனுபவங்கள். நான் காலையில் கீழே வைத்த கைப்பேசியை இப்போதுதான் கையில் எடுத்து கொண்டு பதிவுலகத்தில் வந்து குதிக்கிறேன். (இனி இரவு பிரச்சனை (சாப்பாடுதான்) ஆரம்பிக்கும் முன் சிறிது உலா வரலாம் என்ற ஆசையோடுதான்.) இளமை கால (அதாவது பிறந்த வீடு) அனுபவங்கள் எப்போதுமே நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. சிலது நன்றாக நினைவில் தங்கி விடும்.பலதும் அதன் பின் வந்த அனுபவங்களில்,அடிபட்டு, மிதிபட்டு மறந்தும் போய் விடுகிறது. தங்கள் அனுபவங்கள் படிக்க மிகவும் நன்றாக இருந்தது. எனக்கும் பாட்டு கற்றுக் கொள்ள ஆசைதான். அதற்கு சமயம் என்ற ஒன்று வாய்க்கவில்லை.

  காலை நான்கு மணிக்கு எழுந்திருப்பது நல்ல பழக்கம்தான். எனக்கும் அம்மா வீட்டிலிருக்கும் போதே அந்த பழக்கந்தான். நானும் முன்பெல்லாம் புகுந்த வீடு வந்த பின்பும் தினமும் மூன்று, நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். தொடர்ந்து வந்த அந்த பழக்கம் என் குழந்தைகள் இங்கு வந்த பின் ஷிப்ட் முறையில் (ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுது) வேலைக்குச் சென்றதில் கொஞ்சம் பழக்கம் மாறி விட்டது. மகளும், மகனும் முக்கால்வாசி மாலை நைட் ஷிப்டில்தான் வேலை இரவு 2,3 க்குள் வருவார்கள். இப்படியாக நேரம் கிடைத்த நேரத்தில் உறங்கி, விழித்து எழுந்து வாழ்க்கை ஓடிக் கொண்டுள்ளது.இப்போது எங்கள் வீட்டு சின்ன குழந்தைகளும் இரவு 11மேல்தான் உறங்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் உறங்கி வீடு அமைதியான பின்தான் 12 மணிக்கு மேல்தான் எனக்கும் உறக்கம் வருகிறது. ஆனால் காலை 5,6 க் குள் எழுந்து விடுவேன்.

  மதுரை மாநகர் முழுவதும் உங்கள் பதிவுக்குள் வந்துள்ளது. நீங்கள் பிறந்து வளர்ந்ததால் உங்கள் நினைவுகள் நல்ல பசுமையாக உள்ளன. பதிவில் தாங்கள் கூறிய எல்லா இடத்தின் பெயர்களும் எங்கள் அம்மா கூறி ஒரளவு அறிந்ததுதான். அவர்கள் வழி உறவுகள் அங்கு இருந்ததாக கூறுவார்கள். ஆனால் திருமங்கலத்தில் நாங்கள் பத்து வருடங்களுக்கு மேலாக இருந்தும் இங்கெல்லாம் அவ்வளவாக சென்றதில்லை.மீனாட்சி கோவிலுக்கு ஒத்தைப்படை எண்ணிக்கையில்தான் சென்றிருக்கிறேன். எப்போதும் வீட்டின் சேவைகள், வரும் உறவுகளுக்கு உபசாரங்கள் இப்படியே வாழ்க்கை ஓடி விட்டது. ஓடியும் கொண்டுள்ளது. இப்போது இந்த மாதிரி பதிவுகளின் மூலமாய் மனதிற்கு ஆறுதலாக சில,பல விஷயங்களை நடுநடுவே தெரிந்து கொள்ளும் போது மனதிற்கு மகிழ்வாக உள்ளது. தங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, உங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு நேரம் கிடைக்கையில் வருவதே போதும். இப்போ நாங்க இரண்டு பேர் மட்டும் இருப்பதால் எனக்கு நேரம் கிடைக்கிறது. நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் வீட்டு வேலைகளிலேயே மூழ்கி இருப்பேன். இப்போதெல்லாம் குறைந்துவிட்டாலும் வீட்டில் வேலைகள் இருந்தால் அதுக்குத் தானே முக்கியத்துவம் தரணும். மதுரைமாநகர் முழுவதும் பதிவில் வந்திருப்பது குறித்துச் சொன்னதுக்கு சந்தோஷம். ஆனால் இப்போதைய மதுரை நான் பார்த்த அந்தப் பழைய மதுரை அல்ல! அது தான் மனதில் வலி தரும் விஷயம். நாங்க குடி இருந்த வீட்டினர் அனைவரும் எல்லா இடங்களுக்கும் சேர்ந்து சென்று சேர்ந்து வருவோம். அப்போதைய அந்தப் பழக்கங்கள், நெருங்கிய நட்பு எல்லாம் இப்போது காணக் கிடைப்பதில்லை.

   Delete
 8. வணக்கம் சகோதரி

  /காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான்./

  இதைக்குறிப்பிட மறந்து விட்டேன். வருடங்கள் போகப் போக வளரும் மாற்றங்களில் ஒவ்வொரு இடத்தின் பாரம்பரியங்களும் அதன் பழக்க வழக்கங்களும் மாறிப் போய் விடுகிறது. பதிவு நன்றாக இருந்தது. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. மதுரையில் இருந்தப்போக் காலம்பரக் கோடி அர்ச்சனையில் ஆரம்பித்து இரவு பள்ளியறை வரை போய்ப் பார்த்துட்டு வருவோம். தெருத் திரும்பினால் மேல கோபுர வாசல்! ஒரு நாளைக்கு நாலு தரமாவது (குறைந்தது) கோயிலுக்குப் போயிடுவோம். இப்போது மீனாக்ஷி வியாபாரப் பொருளாகிவிட்டாள். அதான் வருத்தம்.

   Delete
 9. படித்து விட்டேன்.  வீட்டில் உள்வேலைகளில் பயங்கர பிஸி!  பின்னர் வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மெதுவா வாங்க ஸ்ரீராம். அவசரமே இல்லை.

   Delete
 10. நைந்த உள்ளம் யார் அனுப்பியதுன்னு போடலை நீங்க!  யாராக்கும் அனுப்பினா?  ஆனாலும் எனக்கு கணினியில் மொபைலில் புத்தகம் படிக்கவே ஓடமாட்டேன் என்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, திருத்திட்டேனே! பாருங்க இப்போ! மொபைலில் எல்லாம் நானும் படிப்பதே இல்லை.படிக்கவும் கஷ்டமாக இருக்கும். தரவிறக்கிக் கொண்டு ஆஃப்லைனில் தான் படிப்பேன், எழுத்துக்களை எனக்கேற்ற வகையில் வைத்துக் கொண்டு.

   Delete
  2. அடடே...  என்ன கீதா அக்கா...  இதெல்லாம் சொல்லிக்கிட்டு...  எனக்கு விளம்பரமே பிடிக்காது...  ஹிஹிஹிஹி...

   Delete
  3. ஹாஹாஹா! நம்பிட்டோமுல்ல!

   Delete
 11. காலையில் எழுந்து கொள்ளும் பழக்கத்துக்கு என் மகன்களை இப்படிப் பழக்க நான் முயன்றேன்.  பாஸ் ஒத்துழைக்கவில்லை.  அவர் எழுப்பி விடும் பணி செய்ததால் இன்றுவரை மகன்கள் யாராவது எழுப்பினால்தான் எழுகிறார்கள் - அதுவும் அரைமனதோடு!

  ReplyDelete
  Replies
  1. என் பிறந்த வீட்டில் காலையில் எங்களை எல்லாம் எழுப்பி விடும் பழக்கமே இல்லை. உனக்குப் படிக்கணும்னா நீ தான் எழுந்துக்கணும்னு அப்பா/அம்மா சொல்லிடுவாங்க. ஆகவே நாங்களாகவே மனதில் அலாரம் வைத்துக்கொண்டு (அப்போல்லாம் கடிகாரமே கிடையாது) எழுந்துப்போம். அதுவே பழகி விட்டதால் தினமும் சரியாய் நான்கு மணிக்குத் தன்னால் விழிப்பு வந்துடும்.

   Delete
 12. இந்த பஜனை, பக்தி விவரங்களோடு நாங்களும் வளரவில்லை, நானும் மகன்களை வளர்க்கவில்லை.  வருத்தமாகத்தான் இருக்கிறது.  என்னிடமே சரியாய் இல்லாத பழக்கம் மகன்களிடம் எப்படி இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. நான் பிறந்த வீட்டில் இருந்தப்போத் தான் இந்த பஜனை, பக்தி எல்லாம். அதுக்கப்புறமா அங்கே போனால் உண்டு. ஹரிதாஸ் பஜனைகளையே நான் கல்யாணம் ஆவதற்கு முன்னால் கேட்டது தான். அதன் பின்னர் அகில இந்திய வானொலி மூலமா ரேடியோவில் சில முறைகள் கேட்டிருக்கேன். பின்னர் கேட்கவே முடியாமல் இருந்தது இப்போத் தான் யூ ட்யூப் மூலமா நிறையக்கேட்கிறேன்.

   Delete
  2. அன்பு கீதாமா,
   மிக அருமையான மதுரைப் பதிவுகள். 3000 ஆவது பதிவை நெருங்குவதற்கு வாழ்த்துகள்.
   அந்தக் காலத்து மதுரை சுகமே தனி. மல்லிகை வாடையும், காலேஜ் ஹௌஸ் காஃபியும் மறக்குமா.
   இல்லை எல்லா ஆவணி மாசி வீதிகளில் காலார நடந்துதான் மறக்குமா.

   மதுரையை அனுபவித்தவர்களுக்குத் தான் அந்த நினைவுகள்
   மறப்பதில்லை.
   சிறுமியாக ரசித்தவை திருப்பாவை வகுப்புகள்.
   திருமணமான பிறகு பிறந்தகமாக ரசித்த நினைவுகள்
   அருமை.
   எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்!!!!!!

   எனக்கும் மறப்பது சிரமம். என் மகளும் கேட்பாள்
   யானையாமா நீ என்று.... என்ன செய்வது நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை மறக்க வேண்டியதுதான்.

   Delete
  3. வாங்க வல்லி. இப்போவும் என் குழந்தைகள் மதுரை பத்திப் பேச்சு வந்தால் "அம்மா, உன் தாய்நாடு" எனக் கேலி செய்வார்கள். ஆனால் அந்த மதுரையை இழந்து எத்தனையோ காலம் ஆகி விட்டது.

   Delete
 13. உங்களைப் பதிவுகளில் காணாமல்
  கவலை வந்தது, என்ன செய்வது பழகிவிட்டோமே.
  எல்லோரும் நலமாக இருந்தால் தான் நிம்மதி.
  மார்கழி பஜனைகள் பற்றிய விவரங்கள்
  சிறப்பு. அந்த நாட்களில் வீதிகளே விசாலமாக
  இருந்ததோ. இல்லை நம் நினைவுகள்தான் விரிந்ததோ.

  ReplyDelete
  Replies
  1. கண்கள் சோர்வு அடைவதால் தான் குறைத்துக் கொண்டேன். அடுத்த மாதம் சிராத்தம் முடிந்து அதன் பின்னர் 25,26 தேதிகளில் அண்ணா, தம்பி வருகை முடிந்து பின்னர் பெப்ரவரியில் தான் அறுவை சிகிச்சை செய்துக்கணும். அதுவும் ஒரு கண்ணுக்கு மட்டும் முதலில்.

   Delete
 14. என் வீட்டில் நான் ஒருத்திதான் பஜனைகளுக்குக் காலையில் எழுந்து செல்வேன். பெரிய தம்பி படிப்பான். சின்னத்தம்பி தூங்குவான்.
  இதெல்லாம் திருமங்கலத்தில் இருந்த வரை.
  திண்டுக்கல் வந்த பிறகு அனுமதி இல்லை.

  சென்னையில் எங்கள் தெருவழியே எப்போதாவது
  மாட வீதியின் பஜனைக் குழு போனால் வாசல் அருகே நின்று பார்ப்பேன்.
  அந்த இளமைக்கால மதுரை அனுபவங்கள்

  இனி வருமா என்ன. ஒரே ஊரில் இருந்து அங்கேயே வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நாங்க குடும்பமே போவோம். அதுவும் பெரியப்பா வீட்டில் பஜனை வைக்கும்போது நல்ல கூட்டம் வரும்.

   Delete
 15. எங்கள் வீட்டிலும் எழுப்பவது எல்லாம் கிடையாது.

  மனதில் தீர்மானம் இருந்தால் உடம்பு எழுந்துவிடும் என்று அப்பா சொல்வார்.
  வளமான மதுரையைத் தரிசித்தது ஒரு சுகம். மிக நன்றி கீதாமா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், உள் மனது என்னும் அலாரம் தான் எனக்கும்.

   Delete
 16. அனுபவ நினைவுகள் சுவாரஸ்யம்.

  உடல்நலம் முக்கியம் பதிவுகள் இரண்டாவதே...

  வாழ்க நலம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 17. கீதாம்மா, தங்கள் பதிவுகளை காணவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். அருமையான மீள் பதிவு! கண்களை கண் போல (வேறு என்ன சொல்ல) பார்த்துக்கொள்ளவும் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க வானம்பாடி, கவனமாகவே இருக்கேன். நன்றி அம்மா.

   Delete