இந்த வருஷம் சொல்லக்கூடிய அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. ஏனெனில் திருச்சியில்/ஶ்ரீரங்கத்தில் இருக்கும் எங்களுக்கே மழைப் பொழிவு இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மழை/புயலால் பொது மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டது எனத் தொலைக்காட்சிகள், ஊடகங்கள், தினசரிச் செய்திகள் அலறுகின்றன. மழை பெய்யாவிட்டால்? என்ன செய்வோம்? இந்த வருஷம் தண்ணீர்க் கஷ்டம் வரப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்ததை வசதியாக எல்லோரும் மறந்தாச்சு. மழை பெய்து கெடுக்கிறது என்றே சொல்கின்றனர். தினமலர் தலைப்புச் செய்தியாகக் "கொடுத்துக் கெடுக்கும் மழை!" என்று வருகிறது. மழைத் தண்ணீர் வயல்களில் தேங்கி நிற்பதாகப் படங்கள் போடுகின்றனர். மழையில் ஊறிய நெற்பயிரைக் கைகளில் வைத்துக் கொண்டு விவசாயிகளும் தொலைக்காட்சி/செய்திப்பத்திரிகைகளுக்குச் செய்திகள் கொடுக்கின்றனர். அது சரி! மழை இப்போதெல்லாம் மட்டும் புதுசாகப் பெய்து கொண்டு இருக்கா? முன்னெல்லாம் மழையே கிடையாதா? புயலே வந்ததில்லையா? என்றால் வந்திருக்கு. மழை, புயல் எல்லாம் உண்டு. அறுபதுகளில் தனுஷ்கோடியே முழுகிப் போகும் அளவுக்கு மழை/புயல் இருந்திருக்கு. அப்போல்லாம் மட்டும் வயல்களே இல்லையா?பயிர்கள் தண்ணீரில் முழுகவில்லையா?
இருந்திருக்கு. என் கணவர் நேற்றுக் கூடச் சொல்லிக் கொண்டிருந்தார். மழை கொட்டும். ஐப்பசி, கார்த்திகை அடைமழை என்னும் வழக்குச் சொல்லை இப்போதெல்லாம் எல்லோருமே மறந்துட்டாங்க போல! வயலில் தண்ணீர் தேங்கும் ஒவ்வொருத்தர் வயலில் இருந்தும் வடிகாலுக்குப் போக ஒரு தனிப்பாதை உண்டு. அந்தப் பக்கத்து வரப்பை வெட்டி விட்டால் எல்லா நீரும் வடிகால் வழியாக ஆறுகளுக்குப் போய்விடும். கருவிலி, பரவாக்கரை இரண்டுக்கும் நடுவில் உள்ள முட்டையாறு எனப்படும் ஆறு அத்தகைய வடிகால் தான் என்றார். அந்தக் காலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கினால் நிவாரணம் என்ற பேச்சே இல்லை என்றும் சொன்னார். இன்று? அந்த முட்டையாற்றையே காணோம். நான் கல்யாணம் ஆகிப் போன புதுசிலே மழை நாளில் பரவாக்கரை மாரியம்மனைப் பார்க்கப் போகணும்னா முட்டையாற்றில் வண்டி போகாது. நாங்கள் வண்டியிலிருந்து கீழே இறங்கி நடந்து குறுகலான பாலம் வழி செல்வோம். வண்டியைச் சில சமயங்களில் அங்கேயே மாடுகளை அவிழ்த்து விட்டுக் கட்டி விடுவார்கள். நாங்கள் நடந்தே போய் விட்டு வந்து மறுபடி முட்டையாற்றங்கரையில் வண்டியில் ஏறிப்போம். சில சமயம் மாடுகள் நீரில் இறங்கி அக்கரை வரும். வண்டியை ஆட்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஆற்றில் இறக்கி நகர்த்தி அக்கரை கொண்டு மேலே சேர்ப்பார்கள். இப்போக் கல் பாலம் இருக்கு. ஆனால் ஆறு இல்லை, தண்ணீர் இல்லை. வயலில் தேங்கும் நீர் முட்டையாறு வரை வருவதில்லை. ஏன்? என்ன காரணம்! யோசியுங்கள். தப்பு யார் மேல் என உணர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் அப்போதெல்லாம் பரம்பரைப் பட்டாமணியம், கணக்குப் பிள்ளை, வெட்டியான்கள் உண்டு. அவர்களுக்கெல்லாம் யார் நிலத்திற்கு முதலில் நீர் வரும் எனவும் கடைசியில் யார் நிலம் மூழ்கும் அளவுக்குப் போகும் எனவும் தெரியும். எந்த வடிகாலுக்கு நீரை மாற்ற வேண்டும் என்பதும் அறிந்து வைத்திருப்பார்கள். ஊர்ப் பொதுவில் கூட இத்தகைய நிவாரண வேலைகள் அந்த அந்தக் கிராமத்துத் தலைவர்களின் கட்டளைகளின் பேரில் நடந்து வந்திருக்கின்றன. இன்று?
அதே காரணம் தான் சென்னை வாசிகளுக்கும். அம்பத்தூரில் பேருந்து நிலையத்திலிருந்து வரும் மழை நீரெல்லாம் ஓட்டமாக ஓடிப் பள்ளமான பிருதிவிபாக்கம் வழியாக வந்து அங்கே உள்ள வாய்க்கால் வழியாகக் கொரட்டூர் ஏரிக்குப் போய்ச் சேரும். அழகாக வழியமைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில். வாய்க்கால் சுமார் 20 அடிக்கும் மேல் அகலம், நீளம் கொரட்டூர் ஏரி வரை. நடுவே உள்ள சின்னச் சின்னக் குளங்களுக்கும் அதிலிருந்து நீர் போகும். குளங்கள் நிரம்பும். அண்டையில் உள்ள வீடுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தண்ணீர்ப் பிரச்னை யாருக்கும் வராது. ஆனால் இப்போது கொரட்டூர் ஏரி எங்கே? அதுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால் எங்கே? வாய்க்கால் அதை ஒட்டி வீடு கட்டி இருப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இப்போது வாய்க்கால் இந்த வழியில் இருந்தது என்று சொன்னால் நம்புபவர்கள் இல்லை. கொரட்டூர் ஏரியோ ப்ளாட் போட்டுக்கூறு கட்டி விற்றுக் கொண்டிருக்கின்றனர். பெரிய பில்டர் ஒருத்தர் அங்கே அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டுவதாகச் சொல்கின்றனர். சாலைகளிலும், தெருக்களிலும், வீதிகளிலும் தண்ணீர் தேங்கத் தான் செய்யும். வீடுகளுக்குள் நீர் புகத்தான் செய்யும். அதன் இடத்தை நாம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டோம். அது வழக்கமான வழியில் வந்து எங்கே என் இடம் எனத் தேடுகிறது. இப்படித்தானே காட்டு மிருகங்களை எல்லாம் ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்கோம். அது மாதிரித் தான் நீர் நிலைகளும். மனிதர்கள் கைகளில் பட்டுப் படாத பாடு படுகின்றன. அதன் இடங்களை நாம் ஆக்கிரமித்திருப்பதால் எங்கே போக என வழி தெரியாமல் விழிக்கின்றன. மழையைப் பழிப்பதற்கு முன்னர் இதை உணர வேண்டும்.
***********************************************************************************
ஊட்டி மலை ரயில் செப்பனிடப்பட்டுப் புதுசாக மீண்டும் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. இது குறித்துத் தொலைக்காட்சிகளில் காட்டினார்கள். காட்டும்போது பயணச்சீட்டு விபரங்களோ, அதன் உள் கட்டமைப்புப் பற்றியோ, வசதிகள் பற்றியோ குறிப்பிடும்படி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் இது தொலைதூரப் பயணம் இல்லை. மேட்டுப் பாளையத்தில் ஏறினால் 2,3 மணி நேரத்தில் ஊட்டிக்குப் போய்விடலாம். முன்னால் எல்லாம் கழிப்பறை வசதி கூட இருந்ததில்லை. இப்போது வசதி ஏற்படுத்தி இருக்கலாம். அது பற்றித் தெரியவில்லை. தொலைக்காட்சிகளும் இதை ஓர் செய்தியாக மட்டும் சொல்லிவிட்டு விட்டு விட்டன. ஆனால் நம் சிநேகிதர்கள் பலரும் இந்த வண்டியை வழித்தடத்தைத் தனியார் ரயில்வேக்கு மத்திய அரசு தாரை வார்த்து விட்டதாகவும், இதில் சாப்பாடு, காஃபி, தண்ணீர் போன்ற வசதிகளைப் புதிதாக ஏற்படுத்தி இருப்பதாகவும், விமானத்தில் பயணிப்பதைப் போன்ற வசதிகள் இருப்பதாகவும் பணிப்பெண்களும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அனைவரும் காவி உடையுடன் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டு பலத்த கண்டனங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேல் அந்தக் குறைந்த தூரத்துக்கான சுமார் 60 கிலோ மீட்டருக்குள் இருக்கும். இதற்கான கட்டணம் குறைந்த பட்சமாக 3000 ரூபாயும், அதிக பட்சமாக 12,000 ரூபாயும் என்று சொல்லிக் கொண்டு பதிவுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் தெற்கு ரயில்வேயின் தொடர் வண்டிச் செய்திகள் பற்றிய முகநூல் பதிவில் அதிகாரிகள் தரப்பில் 15 ரூபாயாக இருந்த சாதாரண கட்டணம், 75 ரூபாயாகவும், முதல் வகுப்பு கட்டணம் 470 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 145 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்கள் என்று செய்தி வந்துள்ளது. மேலும் தனியாருக்கு எல்லாம் தாரை வார்க்கவில்லை. அது அத்தனை எளிதும் அல்ல. அரசின் நடைமுறைகளோ அந்த ரயிலின் செயல்பாடுகள் குறித்தோ அறியாதவர்கள் தங்கள் இஷ்டப்படி பேத்துகின்றனர். ஆனாலும் இப்போது உயர்த்தி இருக்கும் கட்டணம் நிச்சயம் அதிகம் தான். இல்லைனு சொல்ல முடியாது. அதற்காகப் போராடலாம். எதிர்ப்புத் தெரிவிக்கலாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம்,
மழை - வடிகால்களை ஆக்கிரமித்துக்கொண்டு, மழை பெய்வதைக் குறைசொல்கிறவர்களை என்ன சொல்வது?
ReplyDeleteஇரயில் கட்டணம் அதிகமானால் அதில் என்ன தவறு?
எப்படியோ... சண்டை போட ஒரு பதிவு போட்டுட்டீங்க.
இங்கே தான் எல்லாத்துக்கும் போராடுவாங்களே! ஆனால் ஆச்சரியம் என்னவெனில் இந்த 3,000 ரூபாய் முதல் பனிரன்டாயிரம் வரை பயணச் சீட்டு விலைக்கு எந்தத் தொலைக்காட்சி சானல்களும் விவாதங்கள் நடத்தவே இல்லை. எதிர்க்கட்சிகள் போராடவில்லை. மத்திய அரசைக் குறை சொல்லவில்லை.
Deleteஆமாம். நாங்கள் கூட இப்போது ஏரியில்தான் அதாவது ஏறி இருந்த இடத்தில்தான் வீடு வாங்கி இருக்கிறோம். மழைக்காலத்தில் எங்கள் ஏரியாவில் அவ்வளவு தண்ணீர் தேங்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும். அதோடு அடையாறு தூர் வரப்பட்டு, ஆக்கிரமிப்புகள் பெருமளவு அகற்றப்பட்டு, சுற்றுச் சுவர்கள் சற்றே உயரமாக அமைக்கப்பட்டு, ஒன்றரை மாதங்களுக்கு முன்னாலேயே சாலையில் உள்ள கழிவு நீர் வழிகள் சுத்தம் செய்யப்பட்டு என்று முன்னேற்பாடுகள் நன்றாய் இருந்தன. மழைபெய்து சாலையில் தண்ணீர் தேங்கினாலும் இரண்டு மூன்று மணி நேரங்களில் வந்திந் சாதாரணமாகி காட்சி அளித்ததை பார்த்தேன். வடியாத இடங்களில் மோட்டார் வைத்து லாரிகளில் ஏற்றுக் கொண்டு சென்றார்கள்.
ReplyDeleteசென்னையின் பெரும்பாலான பகுதிகள் ஏரிகள் இருந்த இடமே. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், தி.நகர், மாம்பலம் என எல்லாப் பகுதிகளும் ஏரிகளைக் கூறு போட்டுக் கட்டினவையே! ஆனால் நீங்கள் சொன்னாப்போல் முன்னேற்பாடுகள் இருந்திருந்தால் உண்மையில் பாராட்ட வேண்டும்.
Deleteஊட்டி றையில் பற்றித் தெரியவில்லை. வதந்திகளுக்குப் பஞ்சம் ஏது? சமீபத்தில் வாட்ஸாப்பில் ஒரு வதந்தி பரவி வந்தது. ஜனவரி 18 வரை அடுத்தடுத்து ஆறேழு புயல்கள் தமிழகத்தைத் தாக்கப்போவதாக... பெயர் எல்லாம் குறிப்பிட்டிருந்தார்கள். தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக்கில் அதை மறுத்திருந்தார்.
ReplyDeleteஇப்போத் தான் சற்று முன்னர் சென்னை வானிலை நிலையத்தின் செய்திகளைக் கேட்டோம். புதுசாகப் புயல்னு எல்லாம் ஏதும் சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை சென்னை வானிலை நிலையத்தின் செய்தியை மட்டுமே கேட்டுப்பேன்.
Deleteமழையை பத்தி நீங்க சொன்ன விஷயம் 200% correct. அந்த காலத்துல வீடுகள்ல கூட தொட்டி கட்டி வீடு அமைப்பில், மழை நீர் சேகரிச்சதா எங்க பாட்டி சொல்ல கேட்டிருக்கேன். இந்த மழை, வெள்ளம், மக்களின் பொறுப்பு என இதை கருப்பொருளா வெச்சு "நெஞ்சுக்குள் பெய்த்திடும் மாமழை" நாவலை எழுதினேன். உங்க பதிவாய் படிச்சதும் பாட்டியின் நினைவும்,அந்த நாவலின் நினைவும் வந்துவிட்டது
ReplyDeleteஇப்போவும் மழை நீர் சேகரிக்கலாம். தனி வீடுகளில் பிரச்னை இல்லை ஏடிஎம். அடுக்குமாடிக் குடியிருப்பு எனில் எல்லோரும் ஒத்துப் போகணும். பிரபலமான ஒரு குடியிருப்பில் மழை நீர் சேமிப்பை ஆரம்பித்து நடத்தும்போதே வேறு சிலர் அவங்க கார் பார்க்கிங் செய்யக் கஷ்டமாக இருப்பதாகச் சொல்லி மூட வைத்திருக்கின்றனர். என்ன செய்ய முடியும்?
Deleteமழையை பத்தி நீங்க சொன்ன விஷயம் 200% correct. அந்த காலத்துல வீடுகள்ல கூட தொட்டி கட்டி வீடு அமைப்பில், மழை நீர் சேகரிச்சதா எங்க பாட்டி சொல்ல கேட்டிருக்கேன். இந்த மழை, வெள்ளம், மக்களின் பொறுப்பு என இதை கருப்பொருளா வெச்சு "நெஞ்சுக்குள் பெய்த்திடும் மாமழை" நாவலை எழுதினேன். உங்க பதிவாய் படிச்சதும் பாட்டியின் நினைவும்,அந்த நாவலின் நினைவும் வந்துவிட்டது
ReplyDeleteஹாஹாஹா, நான் ஒரு தரம் சொன்னா!
Deleteஅன்பு கீதாமா.
ReplyDeleteஉண்மையே. அவரவர் இடத்தில் அவரவர் இருக்க வேண்டும்.
நீரின் நிலத்தைப் பிடுங்கிக் கொண்டால்
அது நிலத்திலிருக்கும் வீட்டிற்கு வருகிறது.மக்கல் நலம் பற்றி யோசிக்காமல்
செயல்படும் பணமுதலைகள் பண்ணை வீட்டில் இருக்கும்.
அவர்கள் கட்டிக் கொடுத்த வீட்டில் நீர் வந்துவிடும்.
ஊட்டி ரயில் ஓடுகிறதா. அழகாக இருக்கும்.
செய்தி ஊடகங்களை முழுவதும் நம்ப முடியவில்லை.
வாங்க வல்லி. நீருக்குப் போக வழி தெரியலை. அதனால் வீடுகளைச் சூழ்ந்து கொள்கிறது. மழையைத் திட்டுவதைப் பார்த்தால் மனம் வேதனையாக உள்ளது. உண்மையில் ஏரி, குளங்கள் இருந்தால் தமிழ்நாட்டில் பொழியும் மழைக்குச் சேமித்து வைத்துக் கொண்டால் பாசனங்களும் சரி, குடி நீரும் சரி குறைவில்லாமல் கிடைக்கும்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு நன்றாக எழுதியுள்ளீர்கள். நிறைய விஷயங்களை ஊகிக்க வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். அந்த காலத்தில் எப்போதுமே ஐப்பசி கார்த்திகை அடை மழையாகத்தான் கொட்டுமென பெரியவர்கள் சொல்லி நாமும் ஒரளவு பார்த்திருக்கிறோம். "கார்த்திகைக்கு அப்புறம் மழையும் இல்லை.." என்ற சொல் வழக்கு வேறு உண்டே.. ஆமாம்.. நீங்கள் சொல்வது உண்மைதான்.. நாம்தான் தவறு செய்து விட்டு இயற்கையை குற்றம் சொல்கிறோம். பருவ மழை தவறி, அவ்வளவாக இல்லாவிட்டாலும், அதற்கும் அதைத்தான் குறை சொல்லுவோம். இந்த வருடம் மழைப் பொழிவு ஒரளவு அத்தனை இடங்களையும் பாரபட்சமின்றி எட்டிப் பார்த்திருப்பது இந்த கொரானாவால்தான். காற்று மாசுபடுத்தும் வாகனங்கள் அதன் முதல் மிரட்டலுக்கு பயந்து கட்டுப்பாடுடன் இருந்தது. அதற்கு வருண பகவானின் நன்றிதான் இந்த வருட மழைப் பொழிவு.
ஊட்டி ரயில் விபரங்கள் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். நான் செய்திகளில் ஏதும் பார்க்கவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. இதற்கு முன்னால் இதை விட மழை அதிகமாகப் பொழிந்து வெள்ளம் எல்லாம் வந்திருக்கின்றது. ஆனால் அப்போதெல்லாம் வடிகால்கள் ஆக்கிரமிப்பு என்பதே இல்லை. ஆகவே அதிகப்படி வெள்ள நீர் வடிகால்கள் மூலம் ஆறுகள், குளங்களுக்குச் சென்று விடும்; பயிர்ச்சேதம் இருக்காது. ஊரிலேயே குடி மராமத்தில் இதை எல்லாம் செய்து கொடுத்து விடுவார்கள். இப்போத் தான் குடி மராமத்துக்கு அர்த்தமே தெரியவில்லை. அதோடு இப்போ எல்லாவற்றையும் அரசாங்கம் கவனித்து இலவசமாகச் செய்து கொடுக்க வேண்டும். பயிர்களுக்குக் காப்பீடு செய்து கொள்ளச் சொல்லி அரசு புயல்கள் வரும் முன்னரே எச்சரித்தும் யாரும் காப்பீடு செய்துக்கவே இல்லையாம். காப்பீட்டுப் பணம் கிடைத்தால் அரசு நிவாரணம் அளிக்காது என்னும் எண்ணம் போல! என்னவோ, ஒண்ணும் சரியில்லை.
Deleteஊட்டி ரயிலை 3 நாட்களுக்குத் தனியார் வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். இது மாதிரிக் கொடுப்பது உண்டு. சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களும் இப்படித் தனி ரயிலை வாடகைக்கு எடுத்துச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லுவது உண்டு. இப்போ ஏதோ விழாவுக்காகத் தனியார் வாடகைக்கு டிசம்பர் 4,5,5 ஆகிய தேதிகளில் எடுத்திருக்காங்க. அவங்க கொடுத்த உடையை அந்தப் பெண்கள்/ஊழியர்கள் போட்டிருக்காங்க. உடனே வதந்தி கிளம்பிவிட்டது. ஊட்டி ரயிலையே தனியார் மயமாக்கிவிட்டதாயும் காவி உடையில் ஊழியர்கள் இருப்பதாகவும்செய்தி, வாட்சப்பில் பகிர்வுகள். காவியாய் இருந்தால் என்ன? நம் நாட்டில் துறவிகள் காவி உடை தான் அணிவார்கள். ஆன்மிகத்தின் குறியீடு காவி உடை! இந்த அரசு வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே காவி உடை ஆன்மிகத்தில் முக்கிய அங்கம் வகித்துக் கொண்டு இருந்திருக்கிறது. இப்போ இவங்க புதுசா காவியை அறிமுகம் செய்யலை.
ReplyDeleteகொரட்டூர் ஏரி மட்டுமா...? பல ஏரிகள் மனைகள் ஆகி விட்டன...
ReplyDeleteஊட்டி நடைமுறையில் இருந்த பயணத்தை தொடங்கும் போது உண்மை தெரியும்...
நன்றி திரு தனபாலன்.
Deleteஇந்த மழையைப் பற்றியும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்பது பற்றியும் நமது வாட்ஸப் குழுவில் வந்த கருத்துக்கு எதிர் கருத்தை நான் எழுதியிருந்த போது - எருதின் நோவறியா காக்கை என்று என்னை ஒருவர் குறிப்பிட்டிருந்தார்...
ReplyDeleteஅதிலிருந்து அங்கே வந்தால் ஒன்றும் செல்வதில்லை... பேசாமல் கடந்து விடுகிறேன்...
ஆஹா! அது உங்களைச் சொன்னதா? நான் என்னைச் சொன்னதாக நினைத்துக் கொண்டு இந்தப் பதிவைப் போட்டேன்! :))))) நானும் ஏதேனும் முக்கியமாய் இருந்தால் தான் பகிர்வேன். இல்லை எனில் எதிலும் கலந்து கொள்ளுவது இல்லை.
Deleteஇம்முறை மட்டும் என்ன கீசாக்கா இப்போ ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஒழுங்கா வெள்ளம் அங்கு புரண்டோடுகிறதுதானே.. போனவருடமும் இப்படி ஓவராக மழை பெய்ததெல்லோ.
ReplyDeleteஎங்கட யாழ்ப்பாணத்தில் எப்பவும் வெள்ளம் தங்காது.. ஓடிப்போய்க் கடலில் குளத்தில் குதித்துவிடும், ஆனா இப்போ புதுசா ஹைவே ரோட் போடுகிறேன் எனச் சொல்லி, கண்டநிண்டபடி ட்ரெயினேஜ்களை கவனிக்காமல் தண்ணி ஓடும் பாதைகளில் ரோட்டைப் போட்டு, இம்முறை ஒரே வெள்ளம் தேங்கி, வீடுகளுக்குள்ளும் போனதாம்.... நாகரீக வளர்ச்சிதான் அனைத்துக்கும் காரணம் கர்ர்ர்ர்ர்:)).
மிகவும் சமூக பொறுப்போடும், அக்கறையோடும் எழுதப்பட்டிருக்கும் பதிவு. நான் அன்றே படித்து விட்டேன், கமெண்ட் போடவில்லை. பரம்பரை பட்டாமணியம் பற்றி நீங்க எழுதியிருப்பது மிகவும் சரி. நல்ல பதிவு.
ReplyDeleteஏரிகள் ஆக்ரமிப்பு வேதனையான விஷயம். புரிந்து கொள்ளும் நிலையில் நம்மில் பலரும் இல்லை என்பதே வேதனை.
ReplyDelete