தாத்தாவின் கல்யாணம் பற்றி அவரே எழுதியது!
காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம்பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம், வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே பகற்போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்யவேண்டிய பூஜை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லோரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப்போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலை போடச்செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே அக்காலத்துப் பக்ஷியங்கள்.
கல்யாணம் நடைபெறும் நான்கு நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் போஜனத்திற்கு ஊரிலுள்ள எல்லோரையும் அழைப்பார்கள். யாவரும் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள்.
நலங்கு முதலியன
காலை, மாலை நடக்கும் ஊஞ்சலிலும் பிற்பகலில் நடைபெறும் நலங்கு முதலிய விளையாட்டுக்களிலும் பெண்மணிகள் குதூகலத்துடன் ஈடுபடுவார்கள். முதிர்ந்த பிராயமுடையவர்கள் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்துக் களிப்பார்கள். பெண் கட்சியிற் பாடுபவர்களும் பிள்ளையின் கட்சியிற் பாடுபவர்களும் வழக்கமாகப் பாடிவரும் கிராமப் பாட்டுக்களைப் பாடுவார்கள். பெரும்பான்மையான பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பன்னாங்குப் பல்லக்கில் (வளைவுப் பல்லக்கில்) ஊர்வலம் நடைபெறும். கடைசிநாள் ஊர்வலத்தில் மத்தாப்பும் சீறுவாணமும் விடுவார்கள். சிறுபிள்ளைகளே அவற்றை விடுவார்கள். ஊர்வலத்தின்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தாம்பூலம் அளிப்பார்கள். ஒரு வீட்டிலுள்ள குடித்தனத்திற்கு ஏற்றபடி கொட்டைப் பாக்கைக் கணக்குப் பண்ணிப் போடுவார்கள். அதற்குத் திண்ணைப் பாக்கு என்று பெயர். அதனை வழங்காவிட்டால் வீட்டுக்காரருக்குக் கோபம் வந்துவிடும். முகூர்த்த காலத்தில் பழமும் வெற்றிலைபாக்கும் தருவார்கள். மரியாதைக்கு ஒரு மஞ்சள் பூசிய தேங்காயைத் தாம்பாளத்தில் வைத்திருப்பார்கள். தாம்பூலத்தைப் பஞ்சாதி சொல்லிக் கொடுப்பார்கள். கொடுக்கும்போது மஞ்சள் தேங்காயைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள். தேங்காயை எடுத்துக்கொள்ளும் வழக்கமில்லை. உபநயனத்தில்தான் ஒவ்வொருவருக்கும் தேங்காய் வழங்குவது பெரும்பான்மையான வழக்கம். சிறுபையன்கள் கொட்டைப்பாக்குகளை ஒருவரும் அறியாமல் திருடிக்கொண்டுபோய் மாம்பழக்காரியிடம் கொடுத்து மாம்பழம் வாங்கித் தின்பார்கள். இந்தக் கொட்டைப்பாக்கு வியாபாரத்தை எதிர்பார்த்தே சில மாம்பழக்கூடைக்காரிகள் கல்யாண வீட்டுக்கு அருகில் வந்து காத்திருப்பார்கள்.
நான்காம் நாள் இரவில் நடைபெறும் ஆசீர்வாதத்திற்குப் பந்துக்களிலும் ஊரினரிலும் அனைவரும் வரவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால் பெரிய மனஸ்தாபங்கள் நேரும். அதனால் சிலர் வரவை எதிர்பார்த்து ஆசீர்வாதத்தைத் தாமதப்படுத்துவார்கள்.
விநோத நிகழ்ச்சிதான்
எனக்கு அப்போது பதினான்காம் பிராயம் நடந்து வந்தது. கல்யாணப் பெண்ணின் பிராயம் எட்டு. கல்யாணப் பெண்ணைக் கல்யாணத்திற்கு முன்பு பிள்ளை பார்ப்பதென்ற வழக்கம் அக்காலத்தில் பெரும்பாலும் இல்லை. எல்லாம் பெரியவர்களே பார்த்துத் தீர்மானம் செய்வார்கள். நான் கல்யாணப்பெண்ணை அதற்குமுன் சாதாரணமாகப் பார்த்திருந்தேனேயன்றிப் பழகியதில்லை; பேசியதுமில்லை. எங்கள் இருவருக்கும் கல்யாணம் ஒரு விநோத நிகழ்ச்சியாகத்தான் தோன்றியது. எங்களுக்கு உண்டான சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எங்களை ஆட்டிவைத்து வேடிக்கை பார்த்த விருந்தினர்களுக்கு உண்டாயிற்று.
எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணத்திற்குமுன் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு நிறைபணி நடைபெற்றது. விநாயக மூர்த்தியின் திருவுருவம் முழுவதையும் சந்தனத்தால் மறைத்துவிடுவார்கள். அதற்காக ஊரினர் யாவரும் வந்து சந்தனம் அரைப்பார்கள். ஊரில் பொதுவாக ஒரு பெரிய சந்தனக்கல் இதற்காகவே இருக்கும். அதைக்கொணர்ந்து வைத்து அருகில் இரண்டு கவுளி வெற்றிலையும் சீவலும் வைத்துவிடுவார்கள். பொடிமட்டையும் வைப்பதுண்டு. சந்தனம் அரைக்க வருபவர்கள் அவற்றை அடிக்கடி உபயோகப்படுத்திக்கொண்டு தங்கள் கைங்கரியத்தைச் செய்வார்கள்.
அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு நிவேதனமான பழங்களும் சுண்டல், வடைப்பருப்பு, மோதகம் முதலியவைகளும் விநியோகம் செய்யப்படும். மோதகம் ஒரு மாம்பழ அளவு இருக்கும். ஒவ்வொரு பொருளையும் இன்னார் இன்னாரே விநியோகிக்க வேண்டுமென்ற வரையறை உண்டு. அவர்கள் ஊரிலிருக்கும் காலங்களில் அந்த விநியோகத்தைத் தவறாமற் செய்து வருவார்கள். இந்த நிறைபணியோடு எங்கள் வீட்டிலும் பெண் வீட்டிலும் குலதெய்வ சமாராதனைகளும் நடைபெற்றன.
என் கல்யாணம் அக்காலத்திற்கேற்ப விமரிசையாகவே நடை பெற்றது.
குளங்களிலும் வாய்க்கால்களிலும் நிறைய ஜலம் இருந்தது. ஆதலின் விருந்தினர்களது ஸ்நானம் முதலிய சௌகரியங்களுக்குக் குறைவு நேரவில்லை.
நலங்கு நடைபெற்றபொழுது நானே பத்தியங்கள் சொன்னேன். அவற்றை என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் எனக்குச் சொல்லித் தந்தார். எங்கள் குலகுருவாகிய ஐயா வாத்தியாரென்பவர் எல்லா வைதிக காரியங்களையும் முறைப்படி நடத்தி வைத்தார்.
மிகவும் சுவாரஸ்யமான விவரங்கள். அவர் பிறந்த நாளில் இவற்றை நினைவு கூர்ந்திருப்பது சிறப்பு.
ReplyDeleteதாத்தாவின் கல்யாண பற்றி தெரிந்து கொண்டேன். பகிர்வு அருமை.
ReplyDeleteபகிர்வு அருமை. கல்யாணபெண்ணின் வயது எட்டு ! மாப்பிள்ளைக்கு 14 விநோத நிகழ்ச்சிதான்.
என் அப்பாவின் அம்மாவிற்கு 12 வயதில் திருமணம் என்பார்கள் .
வாங்க கோமதி. என் பாட்டிக்கு (அம்மாவின் அம்மா) ஐந்து வயதில் பதினெட்டு வயது மாப்பிள்ளையோடு திருமணம் என்பார்கள். விரல் போட்டுப்பாங்களாம். ஆரம்ப காலங்களில் முன்னர் வந்த பதிவுகளில் இதைப்பற்றிச் சொல்லி இருப்பேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. இன்றைய தினம் உங்கள் பதிவை எதிர்பார்த்திருந்தேன். தமிழ் தாத்தாவின் பகிர்வுகளை உங்கள் பதிவில் வாசிக்கும் போது மகிழ்வாக உள்ளது.
இன்றைய பதிவும் நன்றாக உள்ளது. அவர் காலத்தின் திருமண நிகழ்ச்சிகளை பற்றி தெரிந்து கொண்டேன். படிக்க,படிக்க சுவாரஸ்யமாக இருந்தது எங்கள் அப்பாவுக்கும் பால்ய திருமணம்தான். எங்கள் அம்மா நான்கு நாட்கள் நடைபெறும் அந்த கால திருமணங்கள் பற்றி சொல்லி கேள்விபட்டுள்ளேன்.
கொட்டைப் பாக்கிற்கு அந்த காலத்தில் எவ்வளவு மதிப்பிருந்திருக்கிறது. ஆச்சரியமான விஷயங்கள். அப்புறம் வெட்டுப் பாக்கு, சீவல் என தாம்பூலத்தில் வைத்து தந்தார்கள். பாக்கெட் பாக்கெல்லாம் அப்புறந்தானே பிரபலம் ஆயிற்று. என்னவோ அந்த காலங்களைப் பற்றி, பெரியவர்கள் கூறி நாம் அறிந்தவைகளை இப்படி பேசிக் கொண்டால்தான் உண்டு. இப்போது கேட்பதற்கு கூட யாருக்கும் நேரமில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உங்கள் எதிர்பார்ப்புக்கும் அது பூர்த்தியானதுக்கும் இறைவனுக்கு நன்றி, என் அம்மாவுக்குப் பதின்மூன்று வயதில் திருமணம். அப்பாவுக்கு 25 வயதோ அல்லது 26 வயதோ! அப்போ ரேஷன் காலம் என்பதால் கல்யாணச் சாப்பாட்டில் சிக்கனம் என்பார்கள். கொட்டைப்பாக்கிற்கு இப்போதும் மதிப்பு உண்டே! ரசித்துப் படித்ததுக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteஎன் சரித்திரம் புத்தகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து வருகிறேன்.
தாத்தா பிறந்த நாளுக்கு
இவ்வளவு அழகாகப் பதிவிட்டு மீண்டும் படிக்கும் பாக்கியம் கிடைக்கிறது.
எத்தனை அருமையாக உணவு வழக்கங்களைச் சொல்கிறார்.
ஒன்றாக உண்ணும் பெருமையும், ஆற்றில் தண்ணீர் ஓடிய நாட்களும் அருமை.
நன்றி கீதாமா.
வாங்க வல்லி. நான் நினைவு மஞ்சரியிலிருந்தே பகிர நினைத்தேன். புத்தகம் எங்கேயோ மாட்டிக் கொண்டு விட்டது. மின் தமிழ்க் குழுமத்தின் மரபு விக்கிக்குள் நுழையவே முடியலை. கடைசியில் விக்கி மூலம் என் சரித்திரத்தின் இந்தப் பாகத்தை மட்டும் எடுத்துக் கொண்டேன். மோர், தயிர் ஆகியவற்றைப் பாதுகாக்கும் முறை பற்றியும் சொல்லி இருப்பார். கல்யாணத்துக்குத் தேவையான மோருக்குப் பாலை வாங்கி உறை ஊற்றிப் பானைகளில் விட்டுக் கட்டிப் பின்னர் நீருள்ள குளத்துக்குள் அந்தப் பானைகளைப் போட்டு விடுவார்களாம். பின்னர் தேவைப்படும்போது எடுத்துக் கொண்டு மோர் தயாரிப்பார்களாம். அந்தக் காலக் குளிர்சாதனப் பெட்டி. ஆனால் இது இயற்கையானது என்பதால் மோரோ, தயிரோ எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.
Deleteஅவருடைய எழுத்தைப் படிக்க எப்போதும் நன்றாக இருக்கும். நல்லவேளை, எஸ் எஸ் வாசன் அவர்கள், விகடனில் அவரது வரலாறை எழுதச் சொன்னார்.
ReplyDelete1. அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுவோம் என்று சொன்னது தினப்படி வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிதானே. பெண்கள் எப்போதுமே தனியாகத்தானே உண்பது வழக்கம்?
2. அந்தக் காலக் கல்யாணம், 'கூடி இருந்து குளிர்ந்து' என்பதுபோல எல்லோருடைய பங்களிப்பும் இருந்தது. என்னவோ..இந்தக் காலத்தில் அது முழுக்க முழுக்க பெண்ணைப் பெற்றவர்கள், கொஞ்ச வேலை பிள்ளையைப் பெற்றவர்கள் என்று செய்கிறார்கள்.
வாங்க நெல்லை. விகடன் பைன்டிங்கில் தான் சித்தப்பா வீட்டில் இருந்து படிச்சிருக்கேன். பெண்கள் அல்லாத மற்றவர்கள் உண்பதைப் பற்றிச் சொல்லி இருக்கலாம். இப்போல்லாம் கல்யாணங்களில் பெண்ணைப் பெற்றவர்களும் எங்கே வேலை செய்கிறார்கள்?
Deleteதகவல்கள் சொன்னவிதம் சுவாரஸ்யமாக இருந்தது.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி.
Deleteஸ்வாரஸ்யமான விவரங்கள்.
ReplyDeleteஉங்கள் பதிவு வழி தெரிந்து கொண்டேன். நன்றி.
நன்றி வெங்கட்!
Deleteஅன்புள்ள கீதாம்மா, சுவாரஸ்யமான பதிவு! தமிழ்த் தாத்தாவைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅந்த காலத்து திருமணங்கள் இப்போது போல ஆடம்பரம் இல்லாமல், அனைவரும் கூடி தெய்வங்களை ஆராதித்து, மகிழ்ச்சியாக கொண்டாடியது போல தோன்றுகிறது! முன்பெல்லாம் வீட்டில் தான் திருமணம் நடைபெறுமாம்.அனைவரும் உதவியும் புரிவார்களாம்!
எனக்கு இறைவன் முன் கோவில்களில் நடைபெறும் எளிமையான திருமணம் மிகவும் பிடிக்கும்!
வானம்பாடி, என் திருமணமும் என் மாமா வீட்டில் தான் நடைபெற்றது. திருமணம் மாமா வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நடுவே பந்தல் போட்டு அங்கே மணலைப் பரப்பிப் பந்தல் போட்டு நடந்தது, பக்கத்து வீடுகளில் மாப்பிள்ளை வீட்டாரைத் தங்க வைச்சிருந்தார்கள். என் திருமணம் பற்றி நான் எழுதியவற்றை மின்னூலாக வெளியிட்டிருக்கேன். சுட்டி தரேன், போய்ப் படிச்சுப் பாருங்க.
Deletehttps://freetamilebooks.com/ebooks/geetha_kalyaname_vaibogame/ இது இலவசமாகவே தரவிறக்கிப் படிக்கலாம். அமேசான் வெளியீடு இல்லை.
Deleteபடிக்கப் படிக்கப் சுவாரஷ்யம், ஆனாலும் எட்டு வயசும் 14 வயசும்... இக்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மனம் துடிக்குதே...
ReplyDeleteவாங்க அரண்மனைக்கிளி! சே அன்னக்கிளி. எனக்கும் மாமாவுக்கும் சுமார் எட்டு வயது (ஏழரை) வித்தியாசம். எங்க பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அப்படியே! இஃகி,இஃகி,இஃகி!
Deleteஅக்கால நிகழ்வுகள் பற்றி வாசிப்பது என்றால் எனக்கு அல்வா சாப்பிடுவது போல தான். உங்கள் கல்யாண கதையை முன்பே ரசித்து வாசித்து இருக்கிறேன். தமிழ் தாத்தா திருமணம் பற்றி அவர் எழுதிய விஷயங்கள் வாசிப்பது சுவாரஸ்யம். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவாங்க ஏடிஎம், என் கல்யாணக்கதை வாசிச்சிருக்கீங்களா? நன்னியோ நன்னி ஹை! இணையத்திலேயே தாத்தா எழுதின "என் சரித்திரம்" உட்படக் கிடைக்குதே! வாசிச்சுப் பாருங்க.
Deleteஸ்ரீராமிற்கு இன்று தமிழ்த்தாத்தா நினைவாக சில படங்கள் அனுப்பியிருந்தேன். அனுப்பும் பொழுதே உங்கள் நினைவு தான் வந்தது.
ReplyDeleteஎன்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ஜீவி சார்.
Deleteநேற்று தமிழ்த்தாத்தாவின் பிறந்த நாளுக்கு, அவரது சிலைக்கு மந்திரிகள் மாலை போட்டு மரியாதை செய்ததை தொலைகாட்சியில் பார்த்த பொழுது உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன்.
ReplyDeleteவாங்க பானுமதி. நினைவு கூர்ந்ததுக்கு நன்றி.
Deleteஉ.வே.சா.வின் திருமணத்தகவல்கள் சுவாரஸ்யம். simple living, great thinking என்று வாழ்ந்திருக்கிறார்கள் அந்தக்கால பெரியவர்கள்.
ReplyDeleteகல்யாணத்தில் வைதிகம் தானே முக்கியம். என் கல்யாணம் வரையிலும் கூட அப்படித்தான் இருந்தது. பின்னர் மாறி விட்டது.
Delete