ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் -ஒரு நாளும்
என் நோவறியா இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது!
என்னவோ தெரியலை. ஒண்ணு மாத்தி ஒண்ணு பிரச்னையா வந்துட்டே இருக்கு. போன வாரம் கைவலி வந்து இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டேன். அதுக்கு மாத்திரை சாப்பிடும்போதே வயிறு கொஞ்சம் தகராறு செய்து கொண்டிருந்தது. மாத்திரையின் தாக்கம்னு நினைச்சுட்டு இருந்தேன். அதன் பிறகு இரண்டு நாட்களுக்கும் மேல் நான் தான் சமைச்சேன். இட்லி மாவெல்லாம் தயார் செய்து வைச்சேன். சனிக்கிழமையும் நான் தான் சமைச்சேன். மத்தியானம் சாப்பிடும்போதெல்லாம் ஒண்ணும் தெரியலை. சாப்பிட்டு முடிச்சதும் வயிறு ஒரு மாதிரியா இருந்தது. அதை அலட்சியம் செய்யலாம்னு செய்துட்டு நான் பாட்டுக்கு என் வேலைகளைப் பார்த்தேன். தெரிந்த மாமி ஒருத்தர் வீட்டில் செய்த காராசேவு வாங்கி வைச்சிருந்தார் நம்மவர். எனக்கூ அது ஆரம்பத்திலிருந்தே ஒத்துக்கலை. ஆகவே கிட்டேயே போகாமல் இருந்தேன். அன்னிக்குனு பார்த்து விதி அழைக்கவே அந்தக் காராசேவ் கொஞ்சமாகவும் இருந்ததால் அதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டுத் தேநீரையும் குடிச்சேன். அப்போக் கூட வயிறு முணுக் முணுக் என்றே சொல்லிக் கொண்டிருந்தது. அதன் பிறகு இரவுக்கு இட்லி வார்த்துச் சட்னி அரைச்சுச் சாப்பிட்டது தான்!
அதன் பிறகு நடந்தவை எல்லாம் எனக்கே ஒரு ஆச்சரியம். இட்லி சாப்பிட்டதில் இருந்தே வயிறு வலி அதிகம் ஆக வெந்நீரில் அஷ்ட சூரணம்போட்டுச் சாப்பிட்டேன். ஏலக்காய்களை வாயில் போட்டுப் பச்சைக்கற்பூரத்துடன் மென்றேன். வறுத்த சோம்பை வாயில் போட்டு மென்றேன். எதுக்கும் அசையாமல் குமட்ட அதிகம் ஆகவே சுமார் ஒன்பது மணி அளவில் வாந்தி தாங்க முடியாது என்ற நிலைமையில் வாந்தி எடுக்க ஆரம்பித்தால் மறுநாள் காலை நான்கு மணி வரைக்கும் இடைவிடாத வாந்தி. இதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் ஒன்பதரை மணிக்கே மருத்துவரிடம் போய்ச் சொல்லி (அவருக்கு அடிக்கடி எனக்கு இப்படி வருவதால் நல்ல பழக்கம்) மாத்திரைகளும் ஓஆர் எஸ் ரீஹைட்ரேஷன் சால்ட் டெட்ரா பாக்கும் வாங்கி வந்தார். அந்த மாத்திரைகளை வாயில் போட்டுத் தண்ணீரோடு உள்ளே இறக்க முடியலை. எல்லாம் வெளியே வந்து விட்டது. காலை நான்கு மணிக்கு வயிற்றில் ஏதும் இல்லைனதும் வாந்தி, குமட்டல் நின்றது. எழுந்திருக்கவே முடியலை. காஃபி குடிக்கவும் பிடிக்கலை. அவரே எழுந்து காஃபி போட்டுக் குடிச்சுட்டு எனக்கும் வைச்சிருந்தார். பிடிக்காமல் குடிச்சு வைச்சேன். மறுபடி படுத்துட்டேன்.
எப்போ எழுந்தேன்னு தெரியாது. ஒரே மயக்க நிலை. ஒண்ணும் சாப்பிடத் தோணலை. சாப்பாடு வாங்கி வைச்சிருந்தார். ஆனால் நான் சாப்பிடலை. நல்லவேளையாக முதல் நாள் கரைச்சு வைச்சிருந்த மோர் நிறையவே இருந்ததால் அதைப் போகவரக் குடிச்சு வயிற்றை நிரப்பிக் கொண்டேன். மறுபடி மாலை நான்கு மணிக்குப் படுத்தால் ஆறு மணிக்கு விளக்கு வைக்கையில் தான் விழித்தேன். இரவுக்கு ஒரே ஒரு தோசையைக் கஷ்டப்பட்டு விழுங்கி விட்டுப் படுத்தது தான் தெரியும். காலை இரண்டரைக்குத் தான் விழிச்சேன். அப்புறமாச் சரியாத் தூக்கம் வரலை. ஆறரை மணிக்கு எழுந்து வெந்நீர் போட்டுவிட்டுக் காஃபி என்னும் திரவத்தை வேண்டாவெறுப்பாய் விழுங்கிட்டுக் குளித்துப் படுக்கை எல்லாம் சுத்தம் செய்து போர்வை, தலையணை உறைஆகியவற்றைத் தோய்க்கப் போட்டுவிட்டுக் கஞ்சியைக் கஷ்டப்பட்டுக் குடிச்சேன்.கஞ்சி போட்டு வைச்சிருந்தார். கஞ்சி குடிச்சதும் மறுபடி ஒரு மயக்கம். படபடப்பு. போய்ப் படுத்துட்டேன். ஒன்பது மணிக்குக் குஞ்சுலு வந்ததும் தான் எழுந்து வந்தேன். இப்போக் கூட இணையத்துக்கு வரலாமா வேண்டாமானு சீட்டுப் போட்டுப் பார்த்துட்டு (நல்லவேளையா யாரும் தேடலை)
அது என்னமோ என் வயிறு இப்படித் தான் அடிக்கடி திடீரெனத் தொந்திரவு செய்யும் என்பதால் உணவு விஷயத்தில் ஏகக்கட்டுப்பாடுகள். ஆனால் எல்லோருக்கும் இது புரிவதில்லை. நான் சும்மாவானும் உபசாரம் பண்ணிக்கிறேன்னு நினைப்பாங்க/நினைக்கிறாங்க! என்ன செய்ய முடியும்! நம்ம வயிறு தான். ஆனால் நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றாற்போல் எங்கே இருக்கு! வெளியே எங்காவது போனால் கூட ஆயிரம் ஜாக்கிரதை. கூடியவரை பயணங்களில் சாப்பிடாமல் பழச்சாறு, லஸ்ஸி எனப் பொழுதைக் கழிப்பேன். அப்படியே சாப்பிட்டாலும் ஏதானும் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துப்பேன். இப்போக் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் வயிற்றில் முணுக் முணுக் இன்னும் குறையலை. சாப்பாடு பிடிக்கலை. மெல்ல மெல்லச் சரியாகும். பிள்ளையார் துணை!
அடடா..... உடலின் முக்கிய உறுப்பு கொஞ்சம் ரிப்பேர் ஆகிவிட்டதா? உங்களுக்கே தெரியும் எதைச் சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிடும்னு.
ReplyDeleteவிரைவில் சரியாகட்டும்.
நன்றி நெல்லையாரே. ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்று ஒத்துக்கொள்வதில்லை.
Deleteஅந்த மதுரை கேடரர் இந்த மாதிரி சமயத்துல உதவ மாட்டாரா? அங்கிருந்து உணவு தருவிக்கலாமே. எதற்கு மாமாவுக்கு சிரமம் கொடுக்கணும்?
ReplyDeleteயார் மாமாவுக்கு சிரமம் கொடுத்தார்கள்? நேற்று மட்டும் கஞ்சி போட்டார். முதல்நாள் அவர் வெளியே போய்க் காலை ஆகாரம் சாப்பிட்டு விட்டு வந்தார். வெளியே போய்ச் சாப்பிடுவதால் எனக்குத் தான் பயம். அந்த மதுரை காடரர் கண்டிப்பாக முடியாதுனு சொன்னப்புறமும் அவங்களிடம் கேட்கவா முடியும்?
Deleteநன்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் மாமி.விரைவில் சரியாயிடும். பொதுவாக பிரயாணங்களிலும், டெல்லியில் இருந்தவரை கோடையிலும் தான் இந்த டேஷ் பிரச்சனை (துளசி டீச்சர் பாஷையில்) எனக்கு வரும்..பட்டினி கிடப்பேன்..:)
ReplyDeleteவாங்க ஆதி, எழுதும்போது உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். நானும் முழுப் பட்டினி தான். நாம் வழக்கமாய்ச் சாப்பிடும் உணவே ஒத்துக்காமல் போகிறது என்பதை நீங்கள் கட்டாயமாய்ப் புரிந்து கொண்டிருப்பீர்கள். :))))))
Deleteஆமாம் மாமி, அது என்னவோ வாஸ்தவம் தான்...:) வழக்கத்திற்கு மாறாக எதுவும் சாப்பிடவில்லை எனினும் சமயங்களில் ஒத்துக் கொள்வதில்லை.. இரவு நேரங்களில் இந்த பிரச்சனை வந்தால் மிகவும் கடினம். ஒருநாள் நடுநிசியில் இந்த தொல்லை..பாத்ரூம் அருகேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன்...:)
Deleteமீள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி. எனக்கும் இரவு வேளைகளில் தான் தொல்லை ஆரம்பிக்கிறது. இப்போதும் அப்படித்தான். இரவு ஒன்பது மணியில் இருந்து காலை நாலு மணி வரைக்கும் வாந்தி! :( அதுக்கூ அப்புறமாக் கொஞ்சம் தூங்கினேன்.
Deleteகவனமாக இருங்கள். விரைவில் குணமடைய வாழ்த்துகள் - பிரார்த்தனைகளும்.
ReplyDeleteவாங்க வெங்கட்
Deleteவயிறு விஷயத்தில் நீங்கள் மிகவும் அலட்சியமாக இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. முறையாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது தானே நல்லது? நீண்ட நாட்களாக இந்த பிரச்சினை இருப்பதால் விரைவில் தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரைக்கு எடுத்துக்கொள்பவர்களில் நிறைய பேருக்கு இந்த வயிற்று பிரச்சினை அதிகமாக இருக்கும். எனக்கும் பல வருடங்களாக நிறைய இருந்தது. இப்போது நான் உபயோகிப்பதில்லை. வயிறும் சொன்னதை கேட்கிறது.
ReplyDeleteவாங்க மனோ! அலட்சியம் எல்லாம் இல்லை. எனக்கு hiatus hernia சின்ன வயசில் இருந்தே இருந்திருக்கோனு நினைக்கிறேன். எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக நேரம் எடுக்கும். சாப்பாடு மேலே வந்துடும். டாக்டர் ரங்கபாஷ்யம் அவர்களிடம் கூடப் போய்க் காட்டிட்டு வந்திருக்கோம். வழக்கமான சாப்பாடே சில சமயம் ஒத்துக்கொள்வதில்லை. சர்க்கரைக்கு நீங்க சொல்லும்படியான வீரியமான மாத்திரைகள் எல்லாம் எனக்குக் கொடுப்பதில்லை. அதோடு இது எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து தொடர்ந்து இருந்து வருகிற ஒன்று, திடீர்னு எந்தக்காரணமும் இல்லாமல் வரும்.பொதுவாக எனக்குச் சுட்ட எண்ணெய், புளிப்புச் சேர்ந்த உணவு வகைகள் பிடிக்காது, ஒத்துக்கொள்ளாது. அவற்றைச் சாப்பிடுவதே இல்லை. சுட்ட எண்ணெயை வேலை செய்யும் பெண் தான் வாங்கிச் செல்வார். அப்பளம் கூடப் பொரிப்பதில்லை.
Deleteஎது சாப்பிட்டால் அலர்ஜி ஆகிறது என்று நம் மனதுக்கே தெரியுமே... அவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது. இப்போது முற்றிலும் குணமாகி விட்டீர்களா?
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், என்ன சொல்றதுனு தெரியலை வழக்கமான சாப்பாடு தான் அன்னிக்கும். சேனைக்கிழங்கு வேக வைத்த கறி, சேனையே போட்டுக் குழம்பு, கொட்டு ரசம். குழம்பு, ரசம் நான் அதிகம் சாப்பிட மாட்டேன். மோர் தான்! இரவு இட்லி, தேங்காய்ச் சட்னி! :)))) இது ஒத்துக்கலைனா என்ன பண்ண முடியும்?
Deleteவீட்டோடு வைத்துக் கொள்வது போல உதவிக்கோ, சமையலுக்கோ ஒரு ஆள் வைத்துக்கொள்ள முடியாதா? சமயங்களில் உறவிலேயே கிடைப்பார்கள்.
ReplyDeleteவீட்டோடு வைத்துக்கொள்வதெல்லாம் பிரச்னை ஶ்ரீராம். நமக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சமையலுகு ஆள் வைத்துக்கொள்வதுக்குக் கொடுக்கும் பணத்தில் காடரிங்கில் வாங்கிச் சாப்பிடுவது தான் மலிவும் கூட. நல்ல காடரராக அமையணும். வீட்டில் வந்து சமைக்க ஒரு மாதத்துக்குக் குறைந்த பட்சம் 5,000 ரூபாய். அதுவும் ஒரே வேளையில் எல்லாமும் செய்துட்டுப் போயிடுவாங்க. மாலை திரும்ப வரமாட்டாங்க. அப்படி வரணும்னா 7,000 ரூபாய்!
Deleteஆறாயிரம் ஆகிவிட்டதாம் ஶ்ரீராம் இப்போது. இரண்டு வேளை எனில் எட்டாயிரம்! நான் மளிகை சாமான்கள், பால், எண்ணெய் உட்பட ஐந்தாயிரத்துக்குள் தான் வாங்கறேன். சமையலுக்கு ஆள் வைச்சுக் கட்டுப்படி ஆகாது. அதோடு அடுப்புச் சுத்தம் செய்யும் வேலை. அது அவங்க செய்வதற்கும் நாம் செய்வதற்கும் எத்தனையோ வித்தியாசம். நான் இரண்டு நாளுக்கு ஒரு முறை பர்னர், தட்டுக்கள் எல்லாம் தேய்ப்பேன். அவங்க அதெல்லாம் செய்ய மாட்டாங்க. அடுப்பைத் தினம் சோப் போட்டுக் கழுவி எடுப்பேன். மேடையில் அடுப்பின் கீழே எல்லாம் சமையலுக்கு வரவங்க துடைப்பது இல்லை. எத்தனையோ முறை அவங்க துடைக்கும்போது நான் கூடவே போய் அடுப்பைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு கீழே வழிந்திருப்பன, மற்றும் தெறித்து விழுந்திருப்பன எல்லாவற்றையும் சுத்தம் செய்வேன். அவங்க என்னை விசித்திரமாப் பார்ப்பாங்க! நாம தான் தனீஈஈஈஈஈஈஈஈஈஈஈப் பிறவியாச்சே! :(
Deleteநான் சொல்ல வந்தது வீட்டோடேயே இருந்து உதவும் உறவு. தனியாகவோ, பொருளாதார நிலையாலோ உதவி தேவைப்படும் உறவுகள் இருந்தால் (அப்படி இருந்தால்தான் இது சாத்தியம்) அவர்கள் நம்மோடேயே இருந்து விடுவார்கள். நம் வீட்டுப் பழக்கங்களுடன் ஒத்துவந்து விடுவார்கள். நான் சில இடங்களில் அப்படி இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். வந்து சமைத்து விட்டுப்போவது எல்லாம் வேலைக்கு ஆகாது.
Deleteஅந்த நிலைமையில் யாரும் இல்லை என்பதோடு அதனால் வரும் பல பிரச்னைகள் சமாளிக்கக் கஷ்டம் ஶ்ரீராம். பொருளாதாரத்தில் கஷ்டப்படுபவர்களுக்குத் தனியாக உதவுகிறோம். அவ்வளவே. அவர்களிடம் திரும்ப எதுவும் எதிர்பார்ப்பதில்லை. என் அப்பா வீட்டில் வீட்டோடு வந்து இருந்த உறவால் பல சிரமங்கள் ஏற்பட்டன. நானே என் பையரைப் பிரசவிக்கையில் படாத பாடு பட்டுள்ளேன்.
Deleteமன்னிக்கவும். சர்க்கரை நோய்க்கு மெட்ஃபோர்மின்' என்ற மருந்தை எடுத்துக்கொள்பவர்கள்' என்று எழுதுவதற்கு பதிலாக, மருந்தை குறிப்பிடாமல் எழுதி விட்டேன்.
ReplyDeleteநான் புரிந்து கொண்டேன் மனோ!
Deleteஎன் மாமியாருக்கும் இந்த மெட்ஃபார்மின் ஒத்துக் கொள்ளாது.
Deleteவாங்க ஆதி, இந்த மருந்தெல்லாம் நானோ/அவரோ சாப்பிடுவதே இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியாது/புரியாது. எனக்குப் பிறவிக்கோளாறு வயிற்றில்! இந்த விஷயங்களெல்லாம் வருவதற்கு முன்பிருந்தே இந்தத் தொந்திரவு உண்டு. ஜிஆர்டி சிஸ்ட், அமீபயாசிஸ் எல்லாமும் உண்டு.
Deleteஉடல் நலம் பேணுக... நலம் பெற வேண்டுகிறேன்.
ReplyDeleteஎன்ன சொல்வது என்று தெரியவில்லை பிரச்னைகளுக்கு நானும் முடிவில்லாது எல்லாவற்றையும் விட்டு விட்டு அதிகம் கவனம் தேவை சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன் அன்புடன்
ReplyDeleteவாங்க அம்மா. என்னதான் கவனமாய் இருந்தாலும் சில சமயங்கள் இப்படி ஆகின்றன. இப்போது கொஞ்சம் பரவாயில்லை.
Deleteஉடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteநன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு வேலைகளை செய்யலாம்.
விரைவில் சரியாகிவிடும். பிரார்த்தனை செய்து கொள்கிறேன் உங்கள் உடல் நலத்திற்கு.
விரைவில் எல்லாம் சரியாக பிரார்த்தனைகள்
ReplyDeleteநன்றி மதுரைத்தமிழரே!
Deleteஹா ஹா ஹா கீசாக்கா, தலைப்புப் பார்த்ததும் காதலன் காதலிக்கோ இல்லை, சுந்தர மூர்த்தி நாயனார் கடவுளைப் பார்த்துச் சொல்றாரோ என நினைச்சு வந்தால், கீசாக்காவின் சுய புராணம்...:)
ReplyDeleteகவனம், கீசாக்கா சில சமயம் ஏதும் ஒன்று குழம்பிட்டால் முழு உடம்பும் ஆட்டம் கண்டுவிடும், நம் உடல் என்பது ஒரு கொம்பியூட்டர் சிஸ்டம் போலத்தானே..
எனக்கென்னமோ, செமிக்கவில்லை என நினைச்சு நீங்கள் சாப்பிட்ட மருந்துகளாலதான், குழம்பி சத்தி வந்திருக்குது என நினைக்கிறேன்.. சிலருக்கு ஏலக்காயும் பிரட்டிச் சத்தியை வரவைக்கும்...
செமிபாட்டுக் குறைபாடெனத் தெரிஞ்சதும், இஞ்சி போட்ட வெறும் பிளேன் ரீ அடிக்கடி குடிப்பது நல்லது.
ஹாஹாஹா, ஏமாந்தீங்களா! நீங்க சொல்லுவது என்னமோ ஒரு வகையில் சரி. ஏலக்காய் கூட அன்னிக்குக் கேட்கவில்லை. இஞ்சி அதிகம் சேர்த்தால் வயிற்றில் எரிச்சல் வருது என்பதால் சேர்ப்பதில்லை. :)))) இப்போப் பரவாயில்லை.
Deleteவயிறு உபாதை இருக்குன்னு லேசா அறிகுறி தெரிஞ்சதும் புளித்த உணவுவகைகள் தவிருங்கக்கா .சில நேரங்களில் உளுந்து ஓவரா புளித்து வேலைகாட்டிடும்.யார் நனைச்சா இல்லை தவைச்சா என்ன நம் வயிறு பற்றி நமக்குத்தான் தெரியும் .அவதிப்படுவதும் நாம்தானே .ரஸ்க் ஒத்துக்கும்ன்னா வாங்கி சாப்பிடுங்க உப்பு போட்டது தான நல்லது .மில்க் ரஸ்க் வேண்டாம்
ReplyDeleteவாங்க ஏஞ்சல், புளிப்பே பிடிக்காது. குழம்பு, ரசத்துக்குக் கூட நீர்க்கத்தான் புளி கரைப்பேன். உளுந்தெல்லாம் அடிக்கடி சேர்ப்பதில்லை. இட்லி, தோசையிலே போடுவது தான். உண்மையில் நான் ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை ஒதுக்குவதைப் பார்த்து வீட்டில்/முக்கியமாப் புக்ககத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் ஜாடை காட்டிக் கொண்டு சிரிப்பார்கள். நான் சும்மாவானும் fuss பண்ணுகிறேன், உபசாரம் பண்ணணும் என்று நினைக்கிறேன் என்று பேசிப்பாங்க. ஆனால் என்னோட வயிறு எனக்குத் தானே தெரியும். சொல்லப் போனால் ஆப்பிள் பழம் ரொம்பப் பிடிக்கும். ஆனால் ஒரு துண்டை நறுக்கி வாயில் போட்டுக்கொண்டால் எங்கிருந்தோ ஒரு இருமல் வரும் பாருங்க. அப்புறமா அதை நிறுத்த முடியாது. இதுக்காகவே ஆப்பிள் சாப்பிடுவதே இல்லை. வீட்டுக்கு வரவங்க வாங்கி வந்தால் தர்மசங்கடமாய் இருக்கும். நம்ம மனிதர்கள் தானேனு சொல்லவும் முடியாது; மெல்லவும் முடியாது. எனக்கு ஒத்துக்கும் பழங்கள் பப்பாளி, கொய்யா, அன்னாசி, மாதுளை, ஆரஞ்சு. வாழைப்பழம் கூட எல்லாம் ஒத்துக்காது. ரஸ்தாளி, பூவன் வாழைப்பழங்கள் சாப்பிடவே மாட்டேன். மலைப்பழம், கற்பூரப்பழம், ஏலக்கி, செவ்வாழை போன்றவை தான்! இப்படி செலக்டிவா இருப்பது பலருக்கும் பிடிக்காத ஒன்று. ஆனால் சாப்பிட்டால் வரும் தொந்திரவுக்கு என்ன செய்யறது?
Deleteஆப்பிள் துண்டு தோலோடு சாப்பிட்டால் இருமல் வரும். தோல் சீவிவிட்டு சாப்பிட்டால் இருமல் வராது!
Deleteஎப்படிச் சாப்பிட்டாலும் ஶ்ரீராம். ஆப்பிளே ஒத்துக்கிறதில்லை. :(
Deleteகவனமாக இருங்கள்... மனம் கவலையற்று இருக்கட்டும்...
ReplyDeleteசரிதான் திரு தனபாலன். இந்தக் கவலையற்று இருப்பது தான் கடினம்! உங்கள் கூற்றும் ஒருவகையில் சரியே! நன்றி.
Deleteஅடடா! விரைவில் குணமாக ப்ரார்த்திக்கிறேன்.
ReplyDeleteநன்றி.
Deleteஎன்னவோ போங்கள்... ஒவ்வொருவருடைய பிரச்னைகளையும் பதிவுகளில் படித்து விட்டு அதைப் பற்றி சிந்திக்கும்போது மனம் மிகவும் ரணமாகின்றது...பதிவின் வழியாக துயரச் செய்தி ஒன்றினை அறிந்து மனம் குலுங்கியதற்குப் பிறகு ஏதொன்றும் எழுதுவதற்குத் தோன்றவில்லை... பதிவுகள் வெளியிட்டுப் பல நாட்கள் ஆகின்றன...
ReplyDelete//.பதிவின் வழியாக துயரச் செய்தி ஒன்றினை அறிந்து //
Deleteஎன்ன அது துரை செல்வராஜூ ஸார்?
ஆமாம் துரை, பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை தான். எனக்கும் இப்படித்தான் போன வாரம் ஒருத்தரின் வாழ்க்கை நிலைமை மனதை ரணப்படுத்தி விட்டது. எதுவும் செய்ய முடியாமல் கையாலாகாமல் யோசனையில் இருந்தேன். அந்த மனத்தாக்கத்திலேயே இப்படி வந்ததோ என்றும் நினைத்துக் கொண்டேன். துயரச் செய்தி? என்ன? சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்!
Deleteபதிவின் வழி என்றால் -
Deleteமதிப்புக்குரிய ஸ்ரீமதி கோமதிஅரசு அவர்களுக்கு நேர்ந்த சோகம் தான்..
அந்தத் தம்பதியர் தேவாரத் திருத்தலங்கள் பலவற்றையும் தரிசித்த புண்ணியர்கள்..
அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்ற விருப்பம் கூடாமல் போனதே... என்பதுதான்..
நல்ல எண்ணங்களின் அதிர்வுகளை உடைய இந்தத் தம்பதியரை - எப்போதோ - எந்தக் கோயிலிலோ நான் கடந்திருக்கின்றேன் - என்று உள்மனம் சொல்கின்றது...
எல்லாம் இறைவன் சித்தம்..
ஆமாம், கோமதி அவர்களுக்கு நேர்ந்த துன்பம் அனைவர் மனதையும் அதிகமாகவே பாதித்து விட்டது.
Deleteமற்ற படிக்கு தங்களது உடன் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்..
ReplyDeleteதங்களது உணவு வேளையில் அன்ன திருஷ்டி ஏற்பட்டிருக்கலாம்.. நிவர்த்தி ஒன்று சொல்வேன்.. செய்ய இயலுமா!?...
சொல்லுங்கள் தம்பி. இயன்றால் செய்துவிடுவேன். எங்க வீட்டிலும் இதை அன்ன துவேஷம் என்பார்கள். முன்னெல்லாம் சமைத்த அன்னத்தை எடுத்துச் சென்று மசூதி, மாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில் பூசாரிகளிடம் கொடுத்து மந்திரித்து வாங்கி வருவோம். இப்போல்லாம் சிரிப்பாங்க. :)
Deleteநான் சொல்ல வந்ததைத் தான் முன்னர் செய்திருக்கின்றீர்கள்... எண்ணங்களைக் குவிக்க வல்லவர்களுக்கே இப்படியெல்லாம் சித்திக்கும்...
Deleteஎல்லாவற்றுக்கும் உகந்தது எலுமிச்சம் பழம்.. ஒரு எலுமிச்சம் பழத்தை மாரியம்மனின் பாதத்தில் வைத்து எடுத்து வந்து அதன் சாற்றை உணவில் எப்படியும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..
மூன்று வாரம் இப்படிச் செய்யுங்கள்..
நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்..
ஓம் சக்தி ஓம்...
அட? அவ்வளவு தானா? ஏமாற்றம் தானா? இஃகி,இஃகி,இஃகி!
Deleteஎலுமிச்சையை மோரில் விட்டுப் பயன்படுத்தி வருகிறோம். வீட்டிலேயே குலதெய்வம் மாரியம்மனின் படமும் இருக்கே. _/\_
Deleteஉங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கிறது... அது உங்களுக்குத் தெரிந்திருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது.. உங்களுக்கும் எனக்கும் இடைவெளி சில ஆயிரம் மைல்கள்.. இப்படியான சூழலில் நீங்கள் அறிந்திருக்கும் செய்தியே உங்களுக்கானதாக வரும்போது - அது வலியுறுத்திச் சொல்லப்படுவதாக இருக்கலாம்...
Deleteஅனைத்திற்கும் அன்னையே துணை..
வயிறு படுத்தும் பாடு. இந்த வயிறு வகையாகப் பலரை மாட்டிவிட்டுவிடுகிறது. பலருடைய அஜீரணப் பிரச்னைகளுக்கு அவர்களேதான் காரணம். வகைவகையாக, நேரங்காலம் தெரியாமல் உள்ளே தள்ளிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள். நீங்கள் பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டும், அல்லது சாப்பிடாதிருந்தும், இப்படியா?
ReplyDeleteஎனக்கும் delicate stomach-தான். (Cancerians are supposed to have delicate digestive system!) ஆனால் உங்கள் கதை ஹார்ரர் கதை! இப்படி ஒரு சிக்கல் ஏன் தொடர்கிறது? துரைசார் சொல்வதுபோல் அன்ன திருஷ்டி ஏற்பட்டிருக்கலாம். சொல்வதை செய்துபாருங்களேன்...
வாங்க ஏகாந்தன், என்னோட வயிறு உங்களையும் இழுத்துக்கொண்டு ஓடோடி வந்திருக்கே. எனக்குச் சின்ன வயசில் இருந்தே ஜீரண சக்தி குறைவு. அதனால் இப்படி இருக்கோ என்னமோ! அதோடு பற்பல வயிற்றுச் சங்கடங்கள்! அமீபயாசிஸ், ஜீஆர்டி சிஸ்ட்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்கள் உடல்நிலை தற்சமயம் எவ்வாறு உள்ளது? பூரண குணமடைந்து விட்டதா? சில சமயம் ஒத்து வரும் சில உணவுகள் சில சமயங்களில் நமக்கு ஒத்துக் கொள்ளாமல் போய் விடுகிறது. காரணம் நம் வயிறா? இல்லை, நாம் அன்றைய தினம் அவதிப்பட வேண்டுமென்ற விதியா எனத் தெரியவில்லை. உடம்பை பார்த்து கொள்ளுங்கள். நான் தாமதமாக வந்து நலம் விசாரித்தமைக்கு மன்னிக்கவும்.
நானும் உங்களைப் போன்ற ஒரு அவதியை போன வாரம் பட்டு வந்துள்ளேன். அதனால் தாமதமாகி விட்டது. இப்போது பரவாயில்லை. உங்கள் உடல் நலம் நல்லபடியாக இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். கவனமாக இருங்கள். தங்களின் கண் அறுவை சிகிச்சை எப்போது? அதற்கும் தகுந்த மன பலத்தை இறைவன் தர மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உங்கள் உடல் நலம் இப்போது பரவாயில்லையா? தாமதம் ஆனால் என்ன? உடல் நலமாக இருந்தால் தானே இதெல்லாம் பண்ண முடியும். கண் அறுவை சிகிச்சை ஏப்ரலுக்குப் பின்னர் தான் என நினைக்கிறேன். இப்போதைய நிலைமையில் என் உடல்நிலையை நானே கவனமாய்ப் பார்த்துக்கொண்டால் தான் வீட்டில் எல்லா வேலைகளும் நடக்கும். நான் படுத்தால் வீடும் படுத்துக் கொள்ளும்! :(
DeleteTake care of you Geethamma. sometimes, without any reason our stomuch gets upset and all of a sudden make us feel uneasy. Try natural remidies ma...Get well soon.
ReplyDeleteவாங்க வானம்பாடி, கவனமாக இருந்தாலும் இம்மாதிரி ஆறு மாசத்துக்கு ஒருதரம் நேரிட்டு விடுகிறது. இத்தனைக்கும் நான் விளக்கெண்ணெயெல்லாம் சாப்பிட்டு வயிற்றைச் சுத்தம் செய்து கொள்ளும் ரகம். :(
Deleteஅடடா... இப்ப பரவாயில்லயா மாமி? நெருங்கிய உறவில் ஒரு திருமணம், இந்த பக்கம் அதிகம் வரலை, இப்ப தான் இதை பாத்தேன். பத்திரமா இருங்க. Take care. Why don't you get a full check up done once, with a proper specialist? Think about it Mami
ReplyDelete