எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 12, 2021

சில ஊறுகாய் வகைகள்!

 எலுமிச்சை இனிப்பு ஊறுகாய். இதை இரண்டு , மூன்று விதங்களில் போடலாம். பாரம்பரிய முறைப்படி சர்க்கரை சேர்த்தோ அல்லது வெல்லம் சேர்த்தோ போடலாம். முதலில் சர்க்கரை சேர்த்த எலுமிச்சை ஊறுகாய்.
பத்து எலுமிச்சம்பழங்கள் பெரிதாக நல்ல சாறுள்ளவை எடுத்துக்கொண்டு கழுவி விட்டுத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். ரொம்பச் சின்னத்துண்டங்களாக இல்லாமல் நிதானமாக இருக்கட்டும். இதற்குத் தேவையான உப்பையும் எடுத்துக்கொள்ளவும். கல் உப்பாக இருந்தால் நல்லது. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் சுமார் அரை லிட்டர் நீரை விட்டுக் கொதிக்கவிடவும். கல் உப்பைச் சேர்க்கவும். உப்புக் கரைந்து வந்ததும் துண்டங்களாக்கிய எலுமிச்சைகளைச் சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.  தண்ணீர் வற்றி எலுமிச்சைச்சாறும் நீரும் சேர்ந்து வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு நன்கு ஆற விடவும். இந்த அளவு எலுமிச்சம்பழத்துக்கு 200 கிராம் சர்க்கரை தேவையாக இருக்கும். ஒரு பாட்டிலில் அல்லது ஜாடியில் எலுமிச்சையைப் போட்டுக் கூடவே சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறவும். மூடி வைக்கவும். தினம் ஒரு தரம் கிளறி விடவேண்டும். புளிப்பும், உப்பும், இனிப்புமாகச் சப்பாத்தி போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ள (பிடித்தவர்களுக்கு) நன்றாக இருக்கும். சீக்கிரம் வீணாகாது.

எலுமிச்சையைத் துண்டங்களாக ஊறுகாய்க்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொண்டு அதில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்க்கவும்.இரண்டு நாட்கள் ஊற விடவும். வெல்லத்தூளை நீரில் கரைத்துக் கொண்டு வடிகட்டிப் பாகாக (ரொம்ப முற்றிய பதம் வேண்டாம்.) எடுத்துக்கொண்டு ஆற விடவும். ஊறிய எலுமிச்சையில் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்துவிட்டு ஆற வைத்த வெல்லப்பாகையும் சேர்த்துக் கிளறவும். தேவையானால் கொஞ்சமாக நல்லெண்ணெயில் கடுகு தாளிக்கவும். ஜீரகம், சோம்பு வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து இதில் சேர்க்கலாம். இதே போல் மாங்காயையும் போடலாம்.

இதில் வெல்லத்தைப் பாகாகச் சேர்க்காமல் தூளாகவே சேர்த்து வெயிலில் ஒரு வாரம் வைத்து எடுக்கலாம். எலுமிச்சைத்துண்டங்களோடு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஊற வைத்து வெறும் வாணலியில் கடுகு, வெந்தயம், மிளகு, ஜீரகம், சோம்பு, கருஞ்சீரகம் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து வறுத்துப் பொடித்துக் கொண்டு அந்தப் பொடியையும் போட்டு கூடவே மிளகாய்ப் பொடியும் சேர்த்துக் கொண்டு வெல்லத்தூளையும் சேர்க்கவும். இதற்குப் பச்சை நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் விடலாம். 


இந்த முறையில் பொடி மிக்சியில் பண்ணிக் கொண்டு பச்சை மஞ்சள், மாங்காய் இஞ்சி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நறுக்கிக் கொண்டு அதில்  எலுமிச்சைச் சாறை சுமார் நான்கு, ஐந்து பழங்களின் சாறைச் சேர்த்து இந்தப் பொடியைப் போட்டுக் கலந்து கொண்டு எண்ணெய் காய்ச்சி ஊற்றியும் பண்ணலாம். இப்போது ஊறுகாய்ப் பருவம் என்பதாலும் பச்சை மஞ்சள் நிறையக் கிடைப்பதாலும் பச்சை மஞ்சள் ஊறுகாய், பச்சை மஞ்சள் தொக்கு, பச்சை மஞ்சள்+ மாங்காய் இஞ்சி சேர்த்து வதக்கி அரைத்துத் தொக்கு எனப் பண்ணலாம். எங்க வீட்டில் பச்சை மஞ்சள் தொக்குப்போட்டு வைச்சிருக்கேன். பச்சை மஞ்சள் நறுக்கி ஊறுகாய் போடணும். இப்போச் செலவு ஆகாது என்பதால் போடவில்லை.

29 comments:

 1. ஊறுகாய் வகைகள், அதன் செய்முறைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  என் கணவர் ஊறுகாய் பிரியர்.
  நானும் ஊறுகாய்கள் போட்டு வைத்துஇருப்பேன்.
  பச்சைமஞ்சள் தொக்கு செய்து பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, ஒரு காலத்தில் நானும் ஊறுகாய்ப் பிரியராக இருந்தேன். இப்போல்லாம் ரொம்பவே குறைச்சாச்சு. இந்த ஊறுகாய்கள் எதுவுமே கெட்டுப் போகாது. மாங்காய்த் தொக்குப் போலவே மஞ்சள் தொக்கும். தோலைச் சீவிட்டுத் துருவிப் பண்ண வேண்டியது தான். புளிப்புக்கு இறக்கும் முன்னர் 2,3 எலுமிச்சைகளின் சாறைச் சேர்க்கணும்.

   Delete
 2. //இப்போ செலவு ஆகாது என்பதால்// - நான் வந்தாலும் செலவாகாது. பச்சை மஞ்சளில் ஊறுகாயா? அடக் கடவுளே என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் சாப்பிட்டுப் பார்க்காமல் இப்படிச் சொல்வதும் தவறுதான்.

  ReplyDelete
  Replies
  1. முதல் முதலாகப் பச்சை மஞ்சள் ஊறுகாயை ஹூஸ்டனில் தான் சாப்பிட்டோம். முதல் முதல் அம்பேரிக்கா போனப்போ! அப்போ இருந்து ரொம்பப் பிடித்தது. பொதுவாகக் காலை வேளையில் வெறும் வயிற்றில் பச்சை மஞ்சளைக் கடிச்சுச் சாப்பிடச் சொல்லுவாங்க. பிள்ளை பெற்ற உடனேயே பிரசவம் ஆன பெண்களுக்குப் பச்சை மஞ்சளைத் தோல் சீவி அம்மியில் அரைத்து ஒரு பெரிய உருண்டை சாப்பிடக் கொடுப்பார்கள். வயிற்றுப் புண்ணை ஆற்றும் என்பதால் அதன் பின்னரே சாப்பிடவோ/குடிக்கவோ கொடுப்பார்கள். இப்போல்லாம் இப்படி ஒரு வழக்கம் இருக்குன்னே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

   Delete
 3. இனிப்பு எலுமி ஊறுகாய் இதுவரை சாப்பிட்டதில்லை. அடுப்பில் அது இருக்கும்போதே அதில் ஜீனி விட்டு நன்கு கொதிக்க வைத்தால் ஜாம் மாதிரி வராதா? தனியாத்தான் ஜீனி சேர்க்கணுமா?

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத்தமிழரே, சூட்டில் சர்க்கரையைப் போட்டால் நீர்த்துக்கொள்ளாதா? இங்கே சேர்க்கச் சொல்லி இருப்பதே கொதித்த எலுமிச்சம்பழங்கள் நன்கு ஆறியதும் தான். கல்யாணங்களில் எலுமிச்சையைக் கொதிக்கும் வெந்நீரில் போட்டு நறுக்கி அவசர ஊறுகாய் போடுவார்களே? சாப்பிட்டதில்லை? அருமையா இருக்கும். நான் சில சமயம் அவசரத்திற்குக் குக்கரில் எலுமிச்சையை ஒரு விசில் கொடுத்து எடுத்து நறுக்கிப் போடுவேன். ஆனால் இந்த ஊறுகாயைத் தனியாகவே வைப்பேன். மற்றவற்றோடு சேர்த்து வைப்பதில்லை. இதைச் சீக்கிரமாயும் செலவு செய்துடுவேன். விரதநாட்களில் இந்த ஊறுகாய் இருந்தால் போட்டுக்கொள்ள மாட்டோம்.

   Delete
  2. எலுமி கார ஊறுகாய்... உடனே பண்ணினாலும், கசப்பு இல்லாமல் புளிப்பு இருக்கும்படிப் பண்ணினால் எனக்குப் பிடிக்கும், இருந்தாலும் மாங்காய் ஊறுகாய் மாதிரி வராது. இப்போ அங்க மாங்காய் வர ஆரம்பித்துவிட்டதா? கிலோ என்ன விலை?

   Delete
  3. எனக்கு இதிலும் சரி, கிடாரங்காயிலும் சரி கசப்பிருந்தால் பிடிக்கும்.  புளிப்பு இருந்தால் பிடிக்காது!

   Delete
  4. கிடாரங்காயை நறுக்கி ஊறுகாய் போடுவதை விடவும் அதை முழுசாக வதக்கி ஊறுகாய் போட்டால் உடனே தொட்டுக்கலாம். சுவையும் அலாதி. எனக்கு இந்த எலுமிச்சை, நாரத்தைக் குடும்பங்களில் கிடாரங்காய் வதக்கிப் போடும் ஊறுகாய் ரொம்பப் பிடிக்கும்.

   Delete
 4. நல்ல எலுமிச்சை கார ஊறுகாய் கொடுத்தால் (அதில் தேவையில்லாத பூண்டு மற்ற பிஸினெஸ்லாம் இருக்கக்கூடாது), சப்பாத்திக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். அதைவிட ரவாப்பொங்கலுக்கும், வெண் பொங்கலுக்கும் சூப்பர் காம்பினேஷன்...

  ReplyDelete
  Replies
  1. எனக்குத் துண்டம் மாங்காய் ஊறுகாய் தவிர்த்து மற்றவை பிடிப்பதில்லை .முன்னெல்லாம் எலுமிச்சை உப்பு மட்டும் போட்டு இஞ்சி, பச்சைமிளகாய் நறுக்கிச் சேர்த்துத் தாளித்த உப்பு ஊறுகாய் வத்தக்குழம்புக்குத் தொட்டுக்கப்பிடிக்கும். இப்போல்லாம் அந்த ஊறுகாய் போடுவதே இல்லை.

   Delete
 5. ஏனோ இந்த ஊறுகாய் போடும் ஆற்வம் வரவில்லை!  காலைஆர்வமாக இருந்தது!  செலவாகாது என்று தோன்றுகிறது!  அதுசரி, தண்ணீரில் கொதிக்க வைத்தா ஊறுகாய் போடவேண்டும்?  நான் காய்கறி ஊறுகாய் அப்படியே பச்சையாகப் போட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், காய்கறி ஊறுகாய் போடும் விதமே வேறு. இந்தச் சர்க்கரை ஊறுகாய் போடும் விதமே வேறு. இது எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றில் மட்டும் பண்ணுவார்கள். மாங்காயோடு வெல்லம்/பாகு வைத்துச் சேர்த்துப் பண்ணுவது உண்டு. சப்பாத்திக்கு முக்கியமாய் மேத்தி(வெந்தயக்கீரை) தேப்லாவுக்கு அது நன்றாக இருக்கும். பழக்கம் தான் காரணம். நாங்க வடக்கே அதிக காலம் இருந்ததால் இதெல்லாம் பழகிட்டோம்.

   Delete
 6. பயனுள்ள பதிவு நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 7. எலுமிச்சங்காய் இனிப்பு ஊறுகாய்.
  கேட்கவே இனிமை.
  வெல்லம் போட்டு செய்வது இங்கே செய்து பார்க்கிறேன்.
  விஸேஷத்துக்குச் செய்த எள்ளுப் பொடி இன்னும் சாப்பிட்டுக் கொண்டீருக்கிறார்கள்.


  இங்கே இருக்கும் குளிருக்கு எதுவும் கெடாது.உப்பு, காரம்
  பெருங்காயம் எல்லாம் சேர்த்தால் இன்னும் சுவாரஸ்யம்.
  மிக நன்றி கீதாமா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, வெல்லமும் சேர்க்கலாம். சர்க்கரையும் சேர்க்கலாம். ஒரு காலத்தில் வெல்லத்தையே நாமெல்லாம் சர்க்கரை என்றே சொல்லுவோம் இல்லையா? இந்த அஸ்காச் சர்க்கரை புழக்கத்தில் வந்ததும் எல்லாமே மாறி விட்டது. முடிஞ்சப்போப் போட்டுப் பாருங்க.

   Delete
 8. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. எலுமிச்சை இனிப்பு ஊறுகாய் இதுவரை சாப்பிட்டதில்லை. எலுமிச்சையுடன் வெறும் பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்த நீர் எலுமி ஊறுகாய், எப்போதும் போல் காரப் பொடி போட்டு ஊற வைத்த எலுமிச்சை ஊறுகாய் என செய்திருக்கிறேன். இப்போது கூட வீட்டில் அதுதான் உள்ளது. ஆனால் இந்த இனிப்பு ஊறுகாய் எனக்குப் புதிது.

  பச்சை மஞ்சள் ஊறுகாயும் செய்ததில்லை. வெறும் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பண்ணியிருக்கிறேன்.தாங்கள் செய்திருக்கும் இந்த பச்சை மஞ்சள் தொக்கும் அருமையாக உள்ளது. வெல்லம், சர்க்கரை சேர்த்த ஊறுகாய்கள் குழந்தைகள் கூட பிடித்து சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன். செய்து பார்க்கிறேன்.

  நீங்கள் சொல்வது போல் எனக்கு குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் அரைத்து எங்கள் பாட்டி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டுமென கொடுத்திருக்கிறார்கள். நானும் சாப்பிட்டிருக்கிறேன். மஞ்சள் வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தி உள்ளதால் அந்த காலத்தில் அப்படி தந்தார்கள். உங்கள் அருமையான பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா. பச்சை மஞ்சள் அரைத்துக் கொடுப்பது குறித்து நீங்களும் தெரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது தென் மாவட்டங்களில் மட்டுமே உண்டோனு நினைக்கிறேன். ஏனெனில் என் மாமியாரெல்லாம் இதைக் கேட்டுச் சிரிச்சாங்க! வெல்லம், சர்க்கரை சேர்த்தாலும் அளவோடு இருக்கணும் இல்லையா? இந்தச் சர்க்கரை சேர்த்த எலுமிச்சை ஊறுகாய் ஊற ஊற நன்றாகவே இருக்கும். சுமார் ஐந்தாறு பழங்களில் செய்து பாருங்கள், ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரை/அல்லது ஒரு குழிக்கரண்டி சர்க்கரை அதுக்குப் போதும்.

   Delete
 9. ரெண்டு நிமிஷம் முன்னாடி தான் அம்மா போன்ல "மாங்காய் காய்ச்சது, ஊறுகா போட்டிருக்கேன்,அடுத்த வாரம் வரும் போது எடுத்துட்டு போ"அப்படினு சொன்னாங்க. இந்த வந்தா ஊறுகா போஸ்ட், what a coincidence 😋

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, ஏடிஎம், வாங்க வாங்க, ஊறுகாய் சாப்பிட வாங்க. இன்னும் நிறையக் கைவசம் இருக்கு. சிலது போட்டிருக்கேன். சிலது போடணும்.

   Delete
 10. குறிப்புகள் நன்று. இங்கேயும் கட்டா மீட்டா ஊறுகாய் வகைகள் உண்டு. எனக்கும் அவை பிடிக்கும்!

  ReplyDelete
 11. அருமை.. நல்ல குறிப்புகள்...
  நாந்தான் தாமதமாக வந்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, எப்போ வந்தால் என்ன? முடிஞ்சப்போ வாங்க. நன்றி.

   Delete
 12. எனக்கு விருப்பமான காரியங்களில் ஊறுகாய் போடுவதும் ஒன்று எலுமிச்சை இனிப்பு தொக்கு மிகவும் நன்றாக இருக்கும் நான் பசு மஞ்சளில் ஊறுகாய் போட்டது இல்லை ஆனால் மற்ற ஊறுகாய் வண்டல் களில் பசு மஞ்சளின் துண்டுகளை போட்டு ஊறவைத்தால் நன்றாக இருக்கும் உங்களின் ஊறுகாய்கள் மிகவும் அருமையாக இருக்கிறது அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்மா, நமஸ்காரங்கள். எலுமிச்சைச் சாறை எடுத்ததும் அதன் தோல்களைக் குக்கரில் வேக வைத்துத் தொக்குப் பண்ணி இருக்கேன். சிறு கசப்பு இருக்கும். முழு எலுமிச்சைத் தொக்கும் பிடிக்கும். உங்களுக்குத் தெரியாத ஊறுகாயா? பச்சை மஞ்சள் ஊறுகாய் முதல் முதலாக அம்பேரிக்காப் போனப்போ பிள்ளை வாங்கி வைச்சிருந்ததைச் சாப்பிட்டுப் பார்த்ததும் பிடித்து விட்டது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் மஞ்சள் பருவத்தில் கொஞ்சமானும் போட்டு வைப்பேன். மாவடுவுக்கும் பச்சை மஞ்சளே கடுகு, மிளகாய் வற்றலோடு சேர்த்து நன்கு அரைத்து விடுவேன்.

   Delete
 13. அன்புள்ள கீதாம்மா, ஊருகாய் வகைகள் அருமை! மஞ்சளிலும் ஊறுகாய் செய்யலாம் என்று எனக்குத் தெரியாது. நான் தயிர்சாதம் சாப்பிட மாட்டேன். மோர் மட்டுமே குடிப்பேன். ஊறுகாயை கஞ்சிக்கும், vegetable பிரியாணிக்கும் தொட்டுக் கொள்வேன். தொக்கு ஊருகாய் எனக்கு மிகவும் பிடிக்கும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வானம்பாடி, ஊறுகாய் மோர் சாதத்துக்குத் தான் எனக்குப் பிடிக்கும். சப்பாத்தி, பராத்தா, ஃபுல்கா ரொட்டி, மேதி பராத்தா போன்றவற்றுக்கும் பிடிக்கும்.

   Delete