நண்பர், பிரியமான சகோதரர் கிட்டத்தட்டக் குடும்ப உறவினர் போன்ற திரு அஷ்வின் ஜி காலமாகி விட்டதாக எனக்கு சிபி(நாமக்கல் சிபி என்னும் ஜகன்மோகன் செய்தி அனுப்பி இருந்தார். ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலை. ஏதோ தப்பான செய்தி என்றே நினைத்தேன். உடனடியாக முகநூலிலும் போய்த் தேடினால் யாருமே எங்குமே இரங்கல் செய்தி தெரிவிக்கலை. குழப்பமாகவே இருந்தது. பின்னர் வீட்டில் அடுத்தடுத்து நேற்று இருந்த வேலைகளில் கவனம் சென்றாலும் அடி மனதில் இதன் எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. பின்னர் தற்செயலாக எங்கள் ப்ளாக் வாட்சப் பார்த்தால் அதில் கார்த்திக் (எல்கே) செய்தி கொடுத்திருந்தார். அப்போவும் செய்தி உண்மையா என்றே அவரைக் கேட்டேன். பின்னர் கார்த்திக் அதை உறுதி செய்தார். மேலும் "சஞ்சிகை" பத்திரிகையில் அஷ்வின் ஜி தன்னார்வலராக இருந்தமையில் அங்கே இரங்கல் கூட்டம் நடத்தப் போவதாயும் சொல்லி இருந்தார். நான் அதை எல்லாம் போய்ப் பார்க்கவில்லை. அதிர்ச்சி என்றால் அவ்வளவு அதிர்ச்சி.
அஷ்வின் ஜி இந்தச் சுட்டியில் சஞ்சிகை பத்திரிகையில் இரங்கல் செய்தியைப் பார்க்கலாம்.
சர்க்கரை நோயை உணவு மூலம் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் திரு அஷ்வின் ஜி. எனக்குச் சுமார் 13 வருடங்களாகத் தெரியும். அம்பத்தூரில் எங்க வீட்டுக்கு இரு முறை வந்திருக்கார். இங்கே திருச்சி ரயில்வேக்கு மாற்றப்பட்டபோது இங்கிருந்து மறுபடி சென்னை மாற்றலாகிக் கிளம்பும் முன்னர் இங்கே ஶ்ரீரங்கம் வீட்டிற்கும் வந்திருக்கார். அவங்க குடும்ப உறுப்பினர்களைப் பழக்கம் இல்லை. என்றாலும் இரண்டு மகன்கள் என்பதும், மனைவி குடும்பத் தலைவி என்பதும், மூத்த மகன் யு.எஸ். ஸில் வேலை செய்பவர் (ஐந்து வருஷங்கள் முன்னர் தான் யு.எஸ். சென்றார்.) என்பதும் தெரியும் பணி ஓய்வு பெற்றுத் திருவள்ளூரில் சொந்த வீடு கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்னும் ஆசை இருந்தாலும் மகன்களின் வசதிக்காக ரயில்வே குடியிருப்பில் இருந்து கொளத்தூருக்குக் குடியேறினார்.
நான்கைந்து வருஷங்கள் முன்னர் இதயத்தில் ஏற்பட்ட கோளாறினால் மிகவும் துர்ப்பலமாக ரயில்வே மருத்துவமனையில் டாக்டர் செரியனின் மேற்பார்வையில் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். முடியாமல் இருந்த அந்த நிலையிலும் பிள்ளையிடமிருந்து அலைபேசியை வாங்கி என்னைத் தொடர்பு கொண்டு பேசமுடியாமல் பேசினார். அவரைக் காணோமே என நினைத்துக் கொண்டிருந்த எங்கள் குழும உறுப்பினர்களுக்கு நான் தான் செய்தியைச் சொன்னேன். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். யோகாசனப் பயிற்சியையும், மூச்சுப் பயிற்சியையும் விடாமல் செய்வார். இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம்களில் பங்கேற்றிருக்கிறார். அமர்நாத் குகை, வைஷ்ணவி கோயில், கேதார் நாத் போன்ற கடினமான மலைப்பிரதேசங்களுக்கெல்லாம் பயணம் செய்திருக்கிறார். அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மீண்டும் அமர்நாத் செல்லவேண்டும் என்னும் ஆவலுடன் இருந்தார்.
கயிலை யாத்திரைக்கும் தயார் செய்து கொண்டிருந்த சமயத்தில் போக முடியவில்லை. என்னை விட வயதில் சிறியவர் என்பதால் நான் அவரும் ஒரு தம்பி என்றே சொல்லி, எனக்குப் பட்டுப்புடைவை வேண்டும், நவரத்னமாலை வேண்டும் என்றெல்லாம் சொல்லி வம்பு பண்ணிக் கொண்டிருப்பேன். என் பிறந்த நாள், மண நாளுக்கு அன்றைய தினம் இல்லாமல் அவரிடமிருந்து மறுநாளே வாழ்த்துகள் வரும். ஏனெனில் ட்ராஃபிக் ஜாமாக இருந்தது எனக் கிண்டல் செய்வார். ஏதேனும் வம்பு வளர்ப்பது எனில் அவருக்கு என் நினைவு தான் முதலில் வரும். நான் அசரவில்லை எனில் தி.வா.விடம் போய்ச் சொல்லித் தூண்டி விடுவார். சொந்த அக்கா, தம்பி போல் சண்டையெல்லாம் போட்டிருக்கோம். இப்போது நினைவுகளில் மட்டும் அவர் என்பதை என்னால் சிறிதும் நம்பவே முடியலை.
மே மாதம் 13 ஆம் தேதி வரை முகநூலில் இருந்திருக்கிறார். கடைசியாக சித்த மருத்துவர் வீரபாகுவைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் நான் அதைப் பார்க்கவில்லை. ஆகவே அவர் கொரோனாவால் தாக்கப்பட்டிருப்பது தெரியவில்லை. தெரிந்தால் மட்டும் என்னால் என்ன செய்திருக்க முடியும்? ஆனால் வீரபாகுவைப் பார்த்தாரா, பார்க்கவில்லையா என்பது தெரியவில்லை. மே 15 ஆம் தேதி விடியற்காலை மூன்றரை மணி அளவில் இறந்திருக்கிறார். அவரை முகநூலில் காணோமே என யோசித்த நண்பர்களில் சிலர் வீட்டு நம்பருக்குத் தொலைபேசிய போது இளைய மகன் தகவலைச் சொல்லி இருக்கிறார். ஆகவே அனைவருக்கும் அவர் இறந்து 2,3 நாட்கள் கழித்தே தெரிந்திருக்கிறது. அப்போவும் உண்மையா/பொய்யா என்னும் சந்தேகம் தான். நமக்கு நெருங்கியவர்கள் எனில் மனம் லேசில் சமாதானம் அடைவதில்லை. நல்ல மனிதர். அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம். அஷ்வின் ஜியின் இயற்பெயர் ஹரிஹரன். ஆனால் அஷ்வின் ஜி என்னும் பெயராலே அறியப்பட்டார்.
அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும்.
ReplyDeleteமறுபடியும் கொரோனாவால் ஒரு மரணம்! அன்பிற்கினிய உறவுகள் ஒவ்வொருத்தராய் மறைவது மிகவும் கொடுமையாக இருக்கிறது. வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஅன்னாரது ஆன்மா இறை நிழலில் சாந்தியடைவதாக....
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் கீதாக்கா. பிரார்த்திப்போம்.
ReplyDeleteஎன்னவோ போங்க கீதாக்கா ஒரே வருத்தமான செய்தியா வந்துகொண்டே இருக்கிறது. எப்போது இந்த மாயாவி இவ்வுலவை விட்டு நீங்கி எல்லாரும் இயல்பாக இருக்கப் போகிறோமோ?! இனியேனும் கெட்ட செய்திகள் வராமல் இருந்தால் நல்லது..
உங்களுக்குக் கண்டிப்பாக மனம் ஆறாது. புரிகிறது. நம்புவதும் கடினமாகத்தான் இருக்கும்..
கீதா
Blog நாட்களில் இருந்தே தொடர்ந்து என் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவார் அஸ்வின் ஜி. எனக்கு பர்சனல் பழக்கம் இல்லை என்றாலும், நல்ல நட்புணர்வும் ஹாஸ்யமும் கொண்ட மனிதர் என்பதை அறிவேன். அவரின் மறைவு நம்பவே முடியவில்லை. இன்னும் எத்தனை பேரை இந்த தொற்றுக்கு காவு கொடுக்க போகிறோமோ தெரியவில்லை. ஓம் ஷாந்தி அஸ்வின் ஜி 🙏
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஓம் ஷாந்தி.
நல்ல மனிதர்.
ReplyDeleteமுக நூலில் அவ்வப்போது பார்த்ததுதான்.
இப்போது அங்கேயும் செல்வதைக் குறைத்துக் கொண்டு விட்டேன்.
அதனால் தெரியவில்லை. எ பி அரட்டையால் தெரிய வந்தது. :(
கார்த்திக் குக்கு நன்றி.
உங்கள் வீட்டில் பார்த்திருக்கிறேனோ கீதாமா.
எத்தனை நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்
நாம்!!!
இந்த காலம் போல சிரமங்களைக் கண்டதில்லை
இது வரை.
எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.
அஷ்வின் ஜி.
ஆழ்ந்த இரங்கல்கள் .
ReplyDeleteஇவரின் இயற்கை உணவுகள் குறித்து விழிப்புணர்வு கட்டுரை படித்த நினைவு இருக்கிறது. வலைச்சரத்தில் அவர் தளத்தை பகிர்ந்து இருக்கிறேன்.
அவர்கள் குடும்பத்தினர்களுக்கு இறைவன் மன ஆறுதலை தர பிரார்த்திக்கிறேன்.
பேஸ்புக்கில் நண்பர். உங்கள் பேஸ்புக் பதிவுகளில் அவர் பெயர் அடிக்கடி பார்த்திருக்கிறேன். செய்தி கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. பேஸ்புக்கிலும் இல்கேதான் போட்டிருந்தார். அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்தனைகள்.
ReplyDeleteஇரங்கல் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஆழ்ந்த அனுதாபம்.
ReplyDelete