ஒரு வாரமாகக் கடுமையான கால் வலி. கால் வலி எனில் இடுப்புக் கீழ் கால் ஆரம்பத்தில் இருந்து பாதத்தின் விரல் நுனிகள் வரை வலி. உட்கார முடியலை. படுக்க முடியலை. உட்கார்ந்தால் பாதம் வீங்கிக் கொள்கிறது. பின்னர் காலை ஊன்றவே சிரமம் ஆகி விடுகிறது. இரவு படுத்தால் நடு இரவில் கழிவறை செல்லக் கூடப் பிரச்னை! கழிவறையில் உட்கார்ந்து எழுந்திருப்பது பிரச்னை! எப்படியோ பொழுது நகர்வது போல் நானும் இந்தக் கால்களை வைத்துக் கொண்டு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டு இருக்கிறேன். நடுவில் வேண்டாம்/சாப்பிட்ட வரை போதும் என நிறுத்தி இருந்த வலி நிவாரணச் சூர்ணத்தை ரொம்ப வலி தாங்காமல் நேற்றிரவு நடு இரவு தாண்டி எழுந்து போய் எடுத்து வந்து சாப்பிட்டேன். அது எழுந்து போய் எடுத்துவந்து சாப்பிட்டுப் படுக்க அரை மணி ஆகிவிட்டது. அப்படி அங்குலம் அங்குலமாக நகர்ந்து நகர்ந்து போக வேண்டி இருந்தது. அந்தச் சூரணம் சாப்பிட்டதும் கொஞ்சம் வலி பொறுக்கும்படி ஆனது. ஆனாலும் முற்றிலும் சரியாகவில்லை. மருத்துவரோ படுத்தே இரு என்கிறார். குளிக்கவும் கழிவறை செல்லவும் மட்டுமே எழுந்திரு என்கிறார். நடக்கும் காரியமா? நமக்கு அப்போத் தான் வேலை செய்யும் பெண்மணியும் வராமல் எல்லா வேலைகளும் நாமே செய்யும்படி ஆகிறது. ஏற்கெனவே துர்க்குணி; அதிலும் இப்போ கர்ப்பிணி என்பார்கள். அதைப் போல் சும்மாவே கால் தகராறு தான் பல வருஷங்களாக. காலில் வலி இல்லாத இடமே இல்லை. விரல்களில் இருந்து கால்கள் முழுவதுமே வீக்கமும், வலியும் கொண்டு பாடாய்ப் படுத்தி விடுகிறது.
யாரும் ஒரு காலத்தில் நான் ஓட்டமாக ஓடிக் கொண்டிருந்தேன் எனில் நம்ப மாட்டார்கள். ஏனெனில் இப்போதைய நிலைமை அப்படி! மாமனார் என்னை "போட் மெயில்" என்பார். அவ்வளவு வேகமாம். இப்போ கூட்ஸின் வேகம் கூட இல்லை. ஒரே புலம்பலாக ஆயிடுத்தோ! இதற்கு என உள்ள ஆங்கில மருந்து ஒன்றை எப்போவானும் போட்டுக்கச் சொல்லி மருத்துவர் சொன்னதை வாங்கி அனுப்பும்படி தம்பிக்கு வாட்சப்பில் செய்தி அனுப்பி இருக்கேன். அது வந்தால் ஓர் ஐந்து நாட்கள் அந்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டால் ஓரளவு நடமாடலாம். இப்போ இரண்டு நாட்களாகக் காடரர் மூலம் குழம்பு, ரசம், கறி, கூட்டு வாங்கிக்கறோம். சாதம் மட்டும் சுவாமிக்கு நிவேதனம் பண்ணணும் என்பதால் வீட்டில் வைச்சுடறேன். சும்மாவே இப்போல்லாம் அடிக்கடி எதுவும் எழுதுவது இல்லை. அதிலும் கடந்த ஒரு வருஷமாகக் கண்கள் பிரச்னை கொடுக்க ஆரம்பித்ததும் மெல்ல மெல்லக் குறைந்தே விட்டது. இப்போ என்னடாவென்றால் என்னிக்கோ நான் அதிசயமா உட்கார்ந்தால் அன்னிக்கு மின்சாரம் இருப்பதில்லை; இல்லைனா இணையம் வர மாட்டேன் என்கிறது. செர்வர் இருக்கும் பகுதியின் மின்சாரத் தடையினால் இணையம் வேலை செய்வதில்லை! என்னத்தைச் சொல்றது! கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்னும் கதை தான்.
இப்போதெல்லாம் வாரத்தில் 2,3 நாட்கள் மின் தடை ஏற்படுகிறது. என்னென்னவோ காரணம் சொல்கின்றனர். முந்தைய அரசு இருந்தப்போவும் பராமரிப்புப் பணிக்காக மாதம் ஒரு நாள் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் நிறுத்தி இருப்பாங்க. ஆனால் இப்போவோ முந்தைய அரசு பராமரிப்புக்களே செய்யாததால் மின்சாரம் வருவதில்லை என்கிறார்கள். சிலர் அணில் வந்து கடிச்சுட்டுப் போயிடுது வயரை. அதனால் மின்சாரத் தடை என்கின்றனர். என்னவோ போங்க. அணிலோ/ஆனையோ எல்லாமும் பிழைக்கத்தானே செய்யணும். இதோ இன்னிக்கு மத்தியானம் 2 மணிக்கு மின்சாரம் போயிட்டு மூன்று மணிக்கு வந்திருக்கு. நேற்றும் மின் தடை. முந்தாநாளும் மின் தடை. முந்தாநாள் ஐந்தாறு மணி நேரங்களுக்கும் மேல் எனில் நேற்றும் இன்று 2 அல்லது 3 மணி நேரங்கள். மத்தியானத்தில். அப்போத் தான் நான் கணினிக்கே வருவேன். இப்போ முடியறதில்லை. சாயங்காலம் ரொம்ப நேரமெல்லாம் உட்கார முடியாது. எப்படியோ இந்த மின்சாரப் பிரச்னை விரைவில் தீர்ந்தால் சரி.
கீதாமா,
ReplyDeleteசீக்கிரம் மாத்திரைகள் வந்து உடம்பு குணமடையட்டும்.
சோதனை மேல சோதனையாக இருக்கே.
மாமாவிடம் உதவி கேட்டு எடுத்துத் தரச் சொல்லக் கூடாதோ.
இப்படி வலியில் கஷ்டப் படுகிறீர்களே.
ரொம்ப வருத்தமாக இருக்கு மா.
இதுல மின் வெட்டும் இருந்தால்
என்ன தான் செய்ய முடியும்.
உங்களுக்கு இருக்கும் மனோதைரியத்தால்
இவ்வளவு நடக்கிறது.
உடம்பு சரியாகிவ்ட்டது என்ற பதிவை எதிர்பார்க்கிறேன்.
வாங்க வல்லி. விசாரித்தமைக்கு நன்றி. மாத்திரைகள் நாளை தான் வருகின்றன. அப்புறம் ஓரிரு மாதங்கள் இத்தனை தொந்திரவு இருக்காது. :(
Deleteநேற்றே திருச்சியை அடைந்த மாத்திரைகள் இன்னிக்குத் தான் கைக்கு வந்து சேர்ந்தன. போட்டுக்க ஆரம்பிச்சாச்சு. ஐந்து நாட்கள் தொடர்ந்து போட்டுக்கொண்டு பின்னர் நிறுத்திடணும். உம்மாச்சி காப்பாத்துவார்!
Deleteஏன் திடீரென்று கால்கள் இப்படி ஒத்துழையாமை இயக்கம் நடத்துகின்றன? தகுந்த சோதனைகள் செய்து பார்த்தீர்களா? கால்களில் வீக்கம் இருக்கிறதா?
ReplyDeleteம்ம்ம்ம் என்ன சொல்லுவது? 2002 ஆம் ஆண்டில் ஆரம்பித்த பிரச்னை! சரியாகிச் சரியாகி மீண்டும் மீண்டும் வந்து தொந்திரவு கொடுக்கும். இம்முறை சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் கொஞ்சம் கடுமையாகவே இருக்கு!
Deleteஉங்கள் ஏரியாவில் அணில்களின் நடமாட்டம் அதிகம் என்று தெரிகிறது. கட்டுப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா என்று பாருங்கள். சீக்கிரமே அதற்கு ஒரு குழு அமைத்து விடுவார்கள். நோபல் பரிசு பெற்ற ஒருவரையும் குழுவில் இணைத்து விடுவார்கள். ப்புறம் மின்சாரபிரச்னை சரியாகிவிடும். கவலை வேண்டாம்.
ReplyDeleteஹாஹாஹா ஶ்ரீராம், தண்ணீர் வந்தால் தடுக்கத் தெர்மாகோலும் மின்சாரப் பிரச்னையைச் சரி செய்ய அணில்களை விரட்டும் வழியும் தெரியுமே! :)))))
Deleteஅவசரத்துக்கு ஆங்கில மருந்துகள்தான் உதவும். அதன்மூலம் முதல்கட்டத்தை சரி செய்துகொண்டு பின்னர் ஆயுர்வேதமோ நாட்டுமருந்தோ தொடரலாம்.
ReplyDeleteஆமாம், அந்த மாத்திரைகளுக்குத் தான் காத்திருக்கேன். :) நேற்று மாமா உடனே கரூருக்கு என்னோட ஆயுர்வேத வைத்தியரின் மருத்துவசாலைக்குப் போயிடலாம் என்றார். அவ்வளவு மோசமாக இருந்தது கால்கள். நான் தான் இந்த மாத்திரைகள் வரட்டும். அப்புறமா ஆயுர்வேத மருந்தைத் தொடர்ந்துவிட்டுப் பார்த்துக்கலாம் என்றிருக்கிறேன்.
Deleteஆங்கில மருத்துவ மாத்திரை எடுத்துக் கொண்டாச்சு.
Deleteவிரைவில் நலம் அடைய வேண்டுகிறேன். ஓய்வாக இருங்கள்.வலியுடன் வேலைகள் செய்யவேண்டாம்.
ReplyDeleteவாங்க மாதேவி. அன்றாட வேலைகள் சிலவற்றைச் செய்தே ஆகணுமே! மற்றபடி ஓய்வு தான்.
Deleteகால் வலி இப்ப தேவலயா மாமி? பெயின் கில்லர் எடுப்பது நல்லதில்லை தான், ஆனா முடியலைன்னா எடுத்து தானே ஆகணும். டேக் கேர், கெட் வெல் சூன்
ReplyDeleteவாங்க ஏடிஎம், வேறே வழியில்லாமல் தான் வலி குறைக்க மாத்திரைகள் எடுத்துக்கப் போறேன். சரியாயிடும்னு நம்பிக்கையும் இருக்கு. பார்க்கலாம்.
Deleteஎனக்கும் கால்வலி, இடுப்புவலி இருக்கிறது. இடுப்பில் பெல்ட் போட்டு கொள்வேன், வெகு நேரம் நிற்க வேண்டுமென்றால் நிறைய வேலை செய்யும் போதும், நடக்கும் போதும் போட்டு கொண்டால் வலி இல்லாமல் இருக்கலாம் இல்லையென்றால் வலிதான். கடுகு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் இரண்டு பல் பூண்டு தட்டிப்போட்டு காய்ச்சி தேய்த்து விட்டு வெந்நீரில் குளிக்கிறேன் அப்போது வலி குறைகிறது. வெந்நீர் ஓத்தடம் அதுதான் நல்லது வலி மாத்திரைகள் வாயிற்றை பாதிக்கும் என்பதால் ரொம்ப போடுவது இல்லை.
ReplyDeleteசிறு சிறு உடற்பயிற்சிகள் செய்கிறேன். உடல் நிலைக்கு ஏற்ப ஓய்வு எடுத்து வேலை செய்யுங்கள், பழைய மாதிரி வேலை செய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள்.
மின்சார தடை ஆரம்பித்து விட்டதா? கஷ்டம் தான்.இங்கும் அணில் கடித்து மின்சாரம் தடைபடுவது உண்டாம். சிறு குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது எதையவது கடிக்க தோன்றுவது போல அணிலுக்கு தன் நீண்ட பற்களை சரி செய்ய இப்படி ஒயர்களை கடித்து சேதப்படுத்துமாம்.
சையாடிகா என்னும் வலி இடுப்பில் எனக்கும் வரும். நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்கையில் வரும். இது கால்கள் முழுக்க வலி. அதிலும் முழங்கால் மூட்டு, கணுக்கால், விரல்கள், விரல்கள் சேருமிடம்னு வலி பின்னிப் பின்னி எடுக்கிறது. பெல்டெல்லாம் போட்டுக் கொண்டால் எங்கேனு போட்டுப்பேன்! என்னவோ போங்க! மின்சாரப் படுத்தல் வேறே! அணில்களுக்குப் பற்கள் இருப்பதே எதையானும் கடிக்கத் தானே! :))))
Deleteவிரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
ReplyDeleteமின்சாரம் எல்லா ஊரிலும் இப்படித்தான். காரணம் ஆட்சி மாற்றம் என்கிறார்கள்....
நன்றி கில்லர்ஜி. மின்சாரப் பிரச்னை விரைவில் சரியானால் நல்லது.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஉங்கள் பதிவு மனதை கஸ்டப்படுத்தியது. கால்வலி அதுவும் நடக்க இயலாமல் இருப்பது மிகவும் சிரமமாயிற்றே... ஆங்கில மருந்துகள் உடனே குணப்படுத்தும். ஆனாலும் தொடர்ந்து உபயோகிக்கவும் முடியாதே... கால்களை நீட்டி கட்டிலிலாவது அடிக்கடி அமர்ந்து கொள்ளுங்கள். நீலகிரி தைலம் (அது ஒரளவுக்கு நன்றாக வேலை செய்யும்) மாதிரி அடிக்கடி (ஒரு நாளைக்கு எவ்வளவு முறை வேண்டுமானலும் பூசலாம்) கால்களுக்கு பூசி நீவி விடுங்கள். நீங்கள் அத்தனைப் பயிற்சிகளும் செய்வீர்கள். ஆனாலும் என் மனதுக்கு உங்கள் வலிகளை உணர்ந்து சொல்கிறேன்.ஏனெனில் இந்த வலிகள் அனுபவம் என்னையும் தொந்தரவு படுத்தி வருகிறது.
நானும் இப்படி கால் வலிகள் நிறைய வந்து அவதிபட்டிருக்கிறேன். சுக்கு அரைத்து இடுப்புக்கு கீழே பாதம் வரை பூசினால் கொஞ்சம் குணமாகும். பழமொழிப்படி சுக்கும் சுப்பிரமணியனும், என் இஷ்ட தெய்வங்கள். இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக கால் பாதங்கள் இரண்டும் மரத்துப் போயிருக்கிறது. காலை தொங்கப் போட்டு கொண்டு சேரில் சிறிது நேரம் அமர்ந்தால் எழுந்து நடக்கவே இயலவில்லை. "உனக்கு சுகர் நிறைய உள்ளது" என உறவினர்கள் கூறுகிறார்கள். நான் இன்னமும் ஒரு தடவை கூட சுகர் டெஸ்ட் பண்ணிக்கவேயில்லை. அதைப்பார்த்தால் மனது வீணாக சஞ்சலப்படும்.
வேலைகளை முடிந்த அளவிற்கு செய்து கொள்ளுங்கள். (ஈசியாக சொல்லி விட்டேன்.... ஆனால் நாமெல்லாம் வேலைகளோடு ஒன்றாக உடன் பிறந்தவர்கள். ஆனாலும் வலி கருதி இப்போதைக்கு அந்த சகோதர பாசத்தை சற்று ஒதுக்கி வையுங்கள்.) உங்கள் கால்களின் வலிகள் விரைவில் நன்றாக நீங்கி நலம் பெற வேண்டுமென நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, நீங்கள் கடைசியில் சொல்லி இருப்பது போல் அவ்வளவு எளிதாக எல்லாம் வேலையைக் குறைக்க முடியலை. நீங்கள் சீக்கிரமாய்ச் சர்க்கரை இருக்கானு பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என் கால்வலி சர்க்கரைக் குறைபாட்டினால் அல்ல. ரத்த ஓட்டம் சரியில்லை. ஆங்காங்கே ரத்தம் சரிவரப் போவதில்லை என்கிறார்கள். மரத்தெல்லாம் போவதில்லை. மாறாக ஒரு சின்னக் கடுகு பட்டாலும் கால் பாதங்களில் பட்டால் வலி துடித்துவிடும். :(
Deleteகவனமாக இருங்கள். கால்வலியுடன் அவதிப்படுவது வேதனையான விஷயம் தான். விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.
ReplyDeleteமின்சாரத் தடை - ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்கள் பகுதியில் அதிகமாகத் தடை எனத் தோன்றுகிறது. எங்கள் வீடு இருக்கும் பகுதியில் அத்தனை பிரச்சனை இல்லை. நேற்று மட்டுமே மின் தடை.
வாங்க வெங்கட், வீட்டுக்குள் நடமாடுவதே சிரமமாகி விட்டது. அதான் புலம்பிட்டேன். உங்க பகுதியில் மின்சாரம் போவதில்லை என்பது ஆச்சரியமா இருக்கு. ஶ்ரீரங்கமா? தில்லியா?
Deleteதிருவரங்கத்தில் தான் மா. நேற்று காலை சில மணி நேரம் இல்லை - அவ்வளவு தான். தொடரந்து போவதில்லை.
Deleteதில்லியில் பெரும்பாலும் மின் தடை இல்லை!
தில்லியில் மின் தடை இல்லை என்பது நல்லது தான். இங்கே நேத்திக்குப் போகும்னு சொன்னாங்க. ஆனால் அரை மணி நேரத்தில் வந்துவிட்டது.
Deleteஉடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்...
ReplyDeleteநன்றி திரு தனபாலன்.
Deleteஅன்புள்ள கீதாம்மா, உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். விரைவாக வலிநிவாரணி கிடைத்து பூரண குணம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஇப்பொழுதெல்லாம் சிறுவர்கள் பள்ளிக்கு செல்ல சாக்கு சொல்வது போல, அமைச்சர்கள் சாக்கு சொல்கின்றனர். ஒன்று முன்னாள் அரசு சரியில்லை. இல்லைன்னா மோடி அரசு சரியில்லை. இவர்கள் குறை கூறியே 5 வருடங்கள் சென்றுவிடும் போல. ஒருவர் அணில் மேல் பழி போடுகிறார். இன்னொருவர் வாக்குறுதியில் தேதி சொல்லவில்லை என்கிறார். வடிவேலு சொல்வது போல சின்னபுள்ளத்தனமா இருக்கு...
வாங்க வானம்பாடி, அட, ஆமா இல்லை! என்னோட கால்வலிக்கும் மோதி அரசுதான் காரணமா இருக்குமோ என்னமோ! என்னவோ போங்க! வலிநிவாரணி கிடைச்சுட்டால் போதும் என்னும் மனோநிலையில் தான் இப்போ இருக்கேன். நாளைக்குக் கிடைக்கும்.
Deleteஇப்போது கால்வலி எப்படி இருக்கிறது. கவனித்துக் கொள்ளவும். அன்புடன்
ReplyDeleteவாங்க அம்மா. இன்னிக்கு வரை வலி பொறுக்க முடியாமல் தான் இருக்கு. இன்னிக்குத் தான் மாத்திரைகள் வந்து போட்டுக்க ஆரம்பிச்சிருக்கேன்.
DeleteIs your leg pain related to arthritis?
ReplyDeleteTake care
Rajan
தெரியலை ராஜன். ஆனால் எனக்கு சகலவிதமான வியாதிகளும் உண்டு. சின்ன வயசில் இருந்தே கால் வலி வரும்/போகும். இப்போவும்/எப்போவும் கால்வலி ஓர் பிரச்னை தான். எப்படியோ சமாளிச்சுக்கறேன்.
Deleteமுன்பு எக்ஸ்ப்ரஸ்.. இப்போ கூட்ஸ் வண்டி.
ReplyDeleteஎன் நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியுது. விரைவில் சரியாகப் ப்ரார்த்தனைகள்.
என்ன ஆச்சு நெல்லை உங்களுக்கு? ஏன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமா இருக்கா? :(((((( பிரார்த்திக்கிறோம் நாங்களும்.
Deleteஅன்பின் அக்கா..
ReplyDeleteதங்களது கால் வலி அறிந்து மிகவும் வருத்தம் அடைகின்றேன்..
ஸ்ரீ சர்வாங்க நாயகி உடனாகிய ஸ்ரீ சற்குண நாதர் என்றென்றும் துணையிருக்க வேண்டிக் கொள்கிறேன்...
நன்றி தம்பி துரை. மெல்ல மெல்லக் குறையும் என எதிர்பார்க்கிறேன்.
Deleteஉங்கள் கால் வலி பற்றி படிக்கும் பொழுது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. விரைவில் குணமடைய பிரார்தனைகள்.
ReplyDeleteசிறு வயதில் மிகவும் வேகமாக வேலை செய்ததாக கூறியிருக்கிறீர்கள். நான் நீண்ட நாட்களுக்கு இல்லை வருடங்களுக்கு முன்பு ஒரு மருதுவ கட்டுரை படித்தேன். அதில் சிறு வயதில் மிகவும் பரபரப்பாக வேலை செய்கிறவர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு, நடப்பதே கஷ்டமாக போகும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இப்போது கூட காலையில் எழுந்த உடனேயே வேலை சேய்ய ஆரம்பித்து விடாதீர்கள் எங்கிறார்களே.
வாங்க பானுமதி. நீங்கள் சொல்வது தான் என்னோட மருத்துவரும் சொல்கிறார். அதிகம் உழைத்திருக்கிறீர்கள். இனி வேண்டாம். என்பது அவர் சொல்லிக் கொண்டே இருப்பது. ஆனால் என்ன செய்வது! ஏதேனும் கொஞ்சமானும் கைகால்களை அசைக்கும்படி நேரிடுகிறதே! காலை எழுந்தவுடனே வாசல் தெளிப்பது தவிர்த்து இப்போதெல்லாம் முன்மாதிரி வேலைகள் இல்லை. காஃபி, கஞ்சி போடுவது போன்றவை தான்.
Delete