கர்மா இந்தச் சுட்டியில் வரும் தொடர்களைப் பாருங்கள். முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னர் இவை ராஜ் தொலைக்காட்சியில் "விஸ்வரூபம்" என்னும் பெயரில் வந்து கொண்டிருந்தன. ஆனால் பின்னால் நின்று விட்டது. ராஜ் தொலைக்காட்சிக்கு வந்த பிரச்னைகளால்னு நினைக்கிறேன். இப்போ நண்பர் ஒருத்தர் இதன் சுட்டியை அனுப்பிப் பார்க்கச் சொல்லி சந்த வசந்தம் குழுமத்தில் போட்டிருந்தார். நான் ஏற்கெனவே தொலைக்காட்சியில் வந்த வரை பார்த்திருந்தாலும் மறுபடி பார்க்கலாம்னு பார்த்துக் கொண்டிருக்கிறேன். திரு பாம்பே சாணக்யாவின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்தத் தொடரின் ஒரு பகுதியை முகநூலிலும் காணக்கிடைக்கும். ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டுமெனில் இங்கே வந்து தான் பார்க்கணும். நான் இதுவரை ஐந்து பகுதிகள் பார்த்திருக்கேன். தொடர்ந்து உட்கார முடியாததால் எல்லாவற்றையும் இன்னமும் பார்க்கவில்லை.
இது 1930களின் அக்ரஹார வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது. அக்ரஹார பிராமணர்களின் பழக்க வழக்கங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், நடைமுறைகள், அவர்களிடை இருந்த கட்டுப்பாடான பழக்கங்கள் எனக் காட்டும் இது ஒரு குடும்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி மெல்ல மெல்ல அப்போதைய நாகரிகமான வாழ்க்கைக்குப் பழகி அந்தச் சூழ்நிலைக்குள் போகிறார்கள் என்பதும் பிராமணர்களுக்கு அவர்களின் அன்றாட நியம நிஷ்டைகள் மாறிப்போய் இப்போது இருப்பதைப் போல் எப்படி மாறினார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுவதோடு மட்டுமில்லாமல் குறிப்பிட்ட குடும்பம் எப்படிச் சூழ்ச்சியால் பிரிக்கப் பட்டது என்பதும் அவர்கள் ஒன்று சேரக் காரணமாக இருக்கும் ஶ்ரீராமரின் படம் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வை அந்தக் கால கட்டத்திலேயே கதையில் முக்கிய நபராக வருபவர் மூலம் சுட்டிக்கட்டவும் பட்டிருக்கிறது. அந்தக் குடும்பம் பிரியும் எனவும் இந்த ஶ்ரீராமர் படத்தை வைத்தே நான்காம் தலைமுறையில் ஒன்று சேரும் எனவும் சொல்லப்பட்டிருக்கும். நடுவில் வரும் நிகழ்ச்சிகள், கோப, தாபங்கள், மர்மமான முறையில் ஆராய்ச்சி செய்யும் மாப்பிள்ளை. அவரின் கண்டுபிடிப்பான மருந்துகள், அதைச் சாப்பிட்டதால் பிறக்கும் குழந்தைகள் என வரும். இன்னும் முழுசாப்பார்க்காததால் எதுவரை வந்திருக்குனு சொல்ல முடியலை. ஆனால் மறுபடியும் இதன் தொடர்ச்சியை எடுக்க ஆரம்பித்திருப்பதாய்ச் சொல்கின்றனர்.
இதைத் தவிரவும் இப்படி உட்கார்ந்திருக்க நேரம் கிடைத்ததில் எஸ்.ஏ.பியின் "எனக்கென்று ஓர் இதயம்" (ஶ்ரீராம் கொடுத்த சுட்டியில் இருந்து தரவிறக்கினேன். முதல்லே வரலை. பின்னர் வந்து விட்டது.) அநுத்தமாவின் "தவம்" இன்னும் சில நாவல்கள் படித்தேன். எஸ்விவியின் "உல்லாச வேளை" புத்தகத்தைத் தேடினால் கிடைக்கவே இல்லை. எனக்கென்று ஓர் இதயம் முன்னாடியே குமுதத்தில் வரச்சேயே படிச்சிருப்பேனோ, கதை தெரிந்த மாதிரித் தான் இருந்தது. அநுத்தமாவின் தவம் முற்றிலும் புதியதொரு சூழ்நிலையில் எழுதப்பட்டிருக்கும். எதிலேயாவது வந்ததானு தெரியலை. என்னிடம் இருப்பது மிகப் பழைய பதிப்பு ஒன்று. எழுபதுகளில் "அமுத நிலையம்" வெளியீடாகப் பத்து ரூபாயில் வந்திருக்கிறது. கதாநாயகியான காந்தாவின் கணவனுக்குத் திடீரென மாரடைப்பு வந்து மிக மோசமான நிலையில் இருக்கிறார். மருத்துவர்கள் அவருக்குக் கெடு வைத்து விட்டார்கள். இதை காந்தாவின் கணவரிடமும் சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் இரண்டு மாதத்துக்குள் சரி பண்ணி வைத்துவிட்டு மரணத்தை எதிர்நோக்க வேண்டும் எனத் தயார் செய்வதற்காகச் சொல்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது காந்தாவுக்குத் தெரியாது/அவளிடம் சொல்ல வேண்டாம் என அவள் கணவர் மருத்துவர்களிடம் கேட்டுக் கொள்கிறார்.
ஆனாலும் உடல்நிலை சரியில்லாத கணவனுக்கு ஓய்வு கொடுப்பதெனில் நகரச் சூழ்நிலையில் சரிவராது என நினைத்த காந்தா தன்னிரு குழந்தைகளையும் பள்ளியை மாற்றி (வருடக் கடைசியில்)த் தன் பெற்றோர்களுடன் அனுப்பிவிட்டு கூட வருகிறேன் என்று சொல்லும் மாமியார், மாமனாரையும் மறுத்துவிட்டு மருத்துவரான தன் தம்பி ஒருத்தன் துணையுடன் ஆறுமுகனூர் என்னும் மலைக்கிராமத்துக்கு வந்து தங்குகிறாள். அவள் பிரார்த்தனைகள் ஒரு பக்கம், கிராம மக்களின் அன்றாட வாழ்வு முறை ஒரு பக்கம், மலைக்கோயில் கிராமத்தின் மலைக்கடவுளான முருகனைத் தேடிக் கொண்டு வரும் பக்தர்கள் ஒரு பக்கம் என அந்தக் கிராமத்துச் சூழ்நிலை தன் கணவனுக்கு மன நிம்மதியையும், அமைதியையும் ஓய்வையும் தேடித்தரும் என்னும் நம்பிக்கையோடு வரும் காந்தாவுக்கு அவள் நினைத்தது நடந்ததா? கூட வந்த தம்பியும் அந்தக் கிராமம் பிடிக்காமல் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டுப் போய்விடுகிறான். அந்தக் கிராமத்தில் காந்தாவின் பொழுதுகள் எப்படிக் கழிந்தன? கணவனை அவள் கருத்தாகக் கவனித்துக் கொள்ள முடிந்ததா? ஊர் மக்களின் துணை கிடைத்ததா? தன்னுடைய பிரார்த்தனைகளை காந்தாவால் சரிவர நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததா?
எல்லாவற்றையும் இந்தப் புத்தகத்தில் காண முடியும். நாகரிகத்தின் சுவடே இல்லாத மலைக்கிராமத்துச் சூழ்நிலையில் மனம் ஒன்றிப் படிக்க எழுத்தாளரின் எழுத்துத் துணை செய்கிறது. அநுத்தமாவின் பல பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று. இன்னமும் சாண்டில்யனின் இரு நாவல்கள் (சரித்திரம் தான்) தரவிறக்கி வைத்தது படிக்கணும். ஶ்ரீவேணுகோபாலனின் "மோகவல்லி தூது" "கள்ளழகர் திருக்கோலம்", "மோகினி திருக்கோலம்" ஆகியவை கூகிள் டிரைவில் சேரக் காத்திருக்கின்றன. திரு கௌதமன் சார் பிவிஆரின் "அதிர்ஷ்ட தேவதை" மின் நிலா குழுமத்தின் மூலம் அனுப்பி வைத்திருந்தார். அதை இன்னமும் தரவிறக்கவில்லை. இப்படிப் பலப் புத்தகங்கள் படிக்கக் காத்திருக்கின்றன.
நேற்றுத் தான் காலுக்கான வலி நிவாரணி மாத்திரைகள் வந்து சேர்ந்தன. தம்பி அதை வியாழனன்று அனுப்பி வெள்ளிக்கிழமை காலை எட்டரை மணிக்கே திருச்சி தலைமைத் தபால் அலுவலகம் வந்து சேர்ந்துவிட்டதாக எனக்குச் செய்தி வந்தது. ஆனால் அன்று மதியம் மூன்று மணி வரை மாத்திரைகள் கிடைக்கவே இல்லை. ஶ்ரீரங்கம் தபால் அலுவலகத்தில் விசாரித்தால் திருச்சியிலிருந்து இன்னமும் எங்களுக்கு வந்து சேரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். சரினு திருச்சி தபால் அலுவலகத்துக்குக் கேட்டால் அது sorting office இல் இருந்தே சென்றிருக்காது, எங்களுக்கு வராது, நேரே ஶ்ரீரங்கம் போயிடும் என்றார்கள். கடைசியில் நேற்றுக் காலை வந்த செய்தியில் மாத்திரைகள் டெலிவரிக்காகச் சென்று விட்டது என்று ஒரு செய்தியும் எங்கள் பீட் நம்பர் 36 ஆம் எண்ணின் தபால் அலுவலர் மூலம் விலாசத்தைச் சென்றடையும் என்று ஒரு செய்தியும் வந்தது. மத்தியானமாக் கிடைத்தன மாத்திரைகள். மாத்திரைகளைக் கொடுத்தாச்சு என்னும் செய்தியும் மூன்றரை மணிக்கு வந்தது. இதை எலலாம் நினைச்சுச் சந்தோஷமாக இருந்தாலும் ஏன் அவற்றை வந்த அன்னிக்கே கொடுக்கவில்லை என்பது தான் புரியாத புதிர். எங்கும் நிற்காமல் வந்த மாத்திரைகள் திருச்சித் தபால் அலுவலகத்தில் ஒரு நாள் தங்கிவிட்டு மறுநாள் ஶ்ரீரங்கம் வந்ததன் காரணம் என்ன? இதை யாரிடம் கேட்கணும் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கேன். விடை கிடைத்தால் பகிர்கிறேன். சொல்ல மறந்துட்டேனே! நேற்று 2 மாத்திரைகள் சாப்பிட்டாச்சு. பலன் நேற்றிரவு தூங்கினேன். காலம்பர ஐந்தே முக்காலுக்குத் தான் எழுந்து கொண்டேன்.
நல்லவேளை... மாத்திரைகள் கிடைத்திருக்கின்றன... விரைவில் நலம் பெறுவதற்கு வேண்டிக் கொள்கிறேன்...
ReplyDeleteவாங்க துரை, முதல் வரவுக்கும் கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.
Deleteமாத்திரைகள் வந்து சேர்ந்ததுபற்றி சந்தோஷம். வெகு விரைவில் நலம் பெறுவீர்கள்.
ReplyDeleteஅதுக்காக தரவிறக்கிய நாவல்கள் படிப்பதை நிறுத்திடாதீங்க.
வாங்க நெல்லை. தரவிறக்கிய நாவல்கள் படிக்கணும். அதுக்கு முன்னே கரிசல் காட்டுக் கடுதாசியை முடிக்கணும்னு நினைக்கிறேன். சித்தப்பா கொடுத்த புத்தகம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல தகவல்களுடன் பதிவு அருமை. தங்கள் கால்வலி தற்போது எப்படி உள்ளது? எப்படியோ நல்லபடியாக மாத்திரைகள் வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி. நேற்று உடனே மாத்திரை எடுத்துக் கொண்டது, வலியின்றி உறக்கம் வந்து நலம் தந்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
நீங்கள் இருக்குமிடத்திலேயே (ஸ்ரீ ரங்கம்) நீங்கள் எப்போதும் மருந்துகள் வாங்கும் வழக்கமான பார்மஸியில் அந்த மாத்திரைகளை தொலைபேசி மூலம் பேசி வாங்க முடியாதா? வீட்டுக்கு கொண்டு வந்து தர மாட்டார்களோ?
நீங்கள் சொல்லிய கதை (தொடர்கதை) சுவாரஸ்யமாக உள்ளது. கதை விபரங்கள் பார்க்கத் தூண்டுகிறது. அந்த சுட்டிக்கு சென்று பார்க்கிறேன். இதை ராஜ் டிவியில் பார்த்த நினைவில்லை. மேலும் டி.வி தொடர்களும் அதிகமாக நான் பார்த்ததில்லை. கதைகள் தொடர்ந்து வாசியுங்கள். நீங்கள் படித்த கதைகளும் சுவாரஸ்யமாக உள்ளது. அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, வலக்கால் கொஞ்சம் பரவாயில்லைனாலும் இடக்கால் தொந்திரவு இருக்கத்தான் செய்கிறது. கொலுசு போட்டாப்போல் காலைச் சுற்றிக் கணுவில் இருந்து வலி! வீக்கம். வீக்கம் வடிகிறது. திரும்பவும் வருகிறது. உட்கார்ந்து எழுந்தாலோ, படுத்து எழுந்தாலோ இடது முழங்காலில் பிடிச்சுக் கொண்டு வெகுநேரம் விடுவதில்லை. நடந்து கொண்டே இருக்கவும் முடியலை. என்னென்னவோ விசித்திரமாகவெல்லம் உனக்கு வருதுனு நம்ம ரங்க்ஸ் சொல்லுகிறார். என்ன செய்வது? இருவருமே சிரித்துக் கொண்டே கடக்கிறோம். ஒரே ஆறுதல் ஒரு தெரிந்த மாமி சமைத்துக் கொடுக்கிறார். ஆனால் போய் வாங்கி வரணும். மற்றபடி சாப்பாடு பரவாயில்லை. மிதமான காரம். இப்போச் சில நாட்களாக இரவுக்கும் சேர்த்து அவங்களிடமே வாங்கிக்கறோம். இன்னும் அரை மணி நேரம் தொடர்ந்து நிற்கும்படியான வலு காலில் இல்லை. ஆகவே கொஞ்ச நாட்கள் கழிச்சுத் தான் சமைக்க ஆரம்பிக்கணும்.
Deleteபெரும்பாலோர் சன் தொலைக்காட்சியோ விஜய் தொலைக்காட்சியோ தான் பார்க்கிறார்கள். ராஜ் தொலைக்காட்சி தான் நாங்க ஆரம்பத்தில் கேபிள் வந்த புதிசிலே எல்லாம் பார்ப்போம். முக்கியமாய்ச் செய்திகள். தரமான நிகழ்ச்சிகளாகவே இருந்தன. பின்னர் தான் வழக்கெல்லாம் வந்து சில மாதங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுப் பின்னர் கஷ்டப்பட்டு மறுபடி வர ஆரம்பித்தது. ஆனால் நிறையவே அனுசரித்துக் கொண்டு போக ஆரம்பித்துவிட்டதால் தரம் போய் விட்டது.
Deleteவணக்கம் சகோதரி
Deleteநீங்கள் வலிகளையும், கணுக்கால் வீக்கங்களையும் பற்றி சொல்லும் போதே மனசுக்கு மிகவும் கஸ்டமாக உணர்கிறேன். கூடிய விரைவில் அனைத்தும் நன்றாக குணமாக வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
பொதுவாகவே கால்வலி இடது காலைத்தான் மிகவும் பாதிப்படையச் செய்கிறது. நான் தண்ணீர் கஸ்டத்தில்,(சென்னை to திருமங்கலம் வரை) இருபது படிகள் ஏறி இறங்கி (குடியிருக்கும் வீடுகளில் நிறைய சமயங்களில் ஒரு சொட்டு தண்ணீர் வராது) தண்ணீர் குடங்களை சுமந்து கஸ்டப்படுள்ளேன். இங்கு (பெங்களூர்) வந்த பின்தான் அந்த சிரமம் ஏற்படவில்லை. இருப்பினும், அப்போது துவங்கிய இடது கால் வலி எனக்கு இப்போது நிரந்தரமாகி விட்டது. எனக்கும் பஸ், காரில், ரயிலில் காலை தொங்கப் போட்டுக் கொண்டு எங்காவது பயணித்தால் கால்கள் வீங்கி விடும். நீலகிரி தைலம்தான் கையோடு வைத்துள்ளேன். அதனால் உங்கள் வலியின் நோவை நானும் உணர்கிறேன்.மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது. மாத்திரை வலியை குறைக்குமானால் வீக்கம் குணமாகிற வரை எடுத்துக் கொள்ளுங்கள். வலி குறைந்தால் வீக்கம் தானாக வற்றி விடும்.
ராஜ் டிவியில் செய்திகளும் நிகழ்ச்சிகளும் பார்த்துள்ளோம் முன்பெல்லாம் தொடர்களும் பார்த்துள்ளோம் ..ஜன்னல் என்ற தொடர் அதில்தான் என நினைக்கிறேன். எஸ்.பி.பியும், நடிகை லட்சுமியும் நன்றாக நடித்திருப்பார்கள். இப்போதும் எல்லாவற்றிலும் தொடர்கள் இடம் பெறுகின்றன. தொடர்ந்து பார்க்கத்தான் பொறுமையில்லை. முந்தியெல்லாம் இவ்வளவு எபிசோடு என்றுதான் தொடர்கள் இருந்தன. இப்போது தொடர்கள் முடியும் முன் நம் ஆயுளே முடிந்து விடும் போலிருக்கிறது... :) நீங்கள் படிக்கும் கதைகள் விபரத்திற்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, மீள் வரவுக்கும் விபரமான கருத்துக்கும் நன்றி. கால்கள் பிரச்னை அநேகமாய் எல்லோருக்குமே இருக்கு போல! கணுக்காலில் வீக்கம் இரவில் குறையும், பகலில் அதிகம் ஆகும். நிரந்தரமாகச் சரியாகுமா என்பது கனவோ என்னமோ! நீங்கள் சொன்னாப்போல் எல்லாம் நான் தண்ணீர் தூக்கினதே இல்லை. பகவான் புண்ணியத்தில் பால்/தண்ணீர் இரண்டுக்கும் எனக்குக் குறைவே இல்லை. எங்கே போனாலும் நல்ல தண்ணீர், பெரிய வீடு, சுற்றித் தோட்டம், நல்ல கறந்த பால் எனக் கிடைத்துக் கொண்டிருந்தது. இங்கே வீடு பெரிது என்றாலும் குடியிருப்பு வளாகம், தனி வீடு இல்லை. மற்ற சௌகரியங்களுக்குக் குறைவில்லை. நானாகக் கீழே போனால் தான்.
Deleteதொலைக்காட்சித் தொடர்கள் அலுப்பைத் தான் தருகின்றன. ஆனால் மாலை ஆறரையிலிருந்து ஒன்பது வரை உட்கார்ந்திருக்கும் நேரம் சிலவற்றின் காட்சிகள்/வசனங்கள் எனக் காதில் விழும். ஜன்னல் ராஜ் தொலைக்காட்சியில் வந்ததா என்ன என்பது தெரியாது. ஆனால் நன்றாகவே இருக்கும். ஏஞ்சல் கூட ஜன்னல் தொடர்களை எனக்கு அனுப்பி இருந்தார்கள்.
மாத்திரைகள் வந்து சேர்ந்ததில் சந்தோஷம்.
ReplyDeleteசாப்பிட்டு ,தூங்கவும் முடிந்தது நிம்மதி.
கொஞ்ச காலத்துக்கு சமையல் பக்கமே போக வேண்டாம்.
ஓய்வு மிக முக்கியம் கீதா மா.
பேசும்போது தபால் துறை நல்ல வேலை செய்வதாகச் சொன்னீர்கள்.
வாங்க வல்லி. கொஞ்ச நாட்கள் நானே நினைச்சாலும் சமைக்க முடியாது என்றே தோன்றுகிறது. தபால் துறையின் சேவை நன்றாகத் தான் இருக்கிறது. இம்முறை தான் என்னவோ மாத்திரைகள் உரிய நேரத்தில் வந்து சேரவே இல்லை. :(
Deleteநம் அவசரம் தெரியாமல்
ReplyDeleteஅவஸ்தை கொடுக்கும் மனிதர்களை என்ன சொல்வது:(
புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தது
நல்லது. எனக்கும் கௌதமன் ஜி யின் புத்தகங்கள்
வந்தன படித்துக் கொண்டிருக்கிறேன்.
நலமாக இருங்கள்.
புத்தகங்கள் தான் இப்போது மனதுக்கு ஆறுதலைத் தந்து கொண்டிருக்கின்றன. படிப்பில் ஆழ்ந்து போவதும் மனதுக்கு உற்சாகத்தைத் தருகிறது.
Deleteமாத்திரை வந்து சாப்பிட்டு இரவு தூங்கியது அறிந்து மகிழ்ச்சி.
ReplyDeleteவிரைவில் உடல் நலம்பெற பிரார்த்தனைகள்.
மாமி சமையல் செய்து தருவது அறிந்து மகிழ்ச்சி.
நானும் சிறு கதைகள் தொடர்கதைகள் படித்துக் கொண்டு இருக்கிறேன். கர்மா பார்க்க வேண்டும்.
நன்றி கோமதி. மாமி சமையல் நன்றாகவே இருக்கு. ஆனால் தோசை தான் சரியா வரலை! :))))) இஃகி,இஃகி,இஃகி!
Deleteகால்வலி சீக்கிரம் குணமாக அந்த ரங்கநாதர் அருள் புரியட்டும். எஸ்.ஏ.பியின் நாவல்களைத் தரவிறக்கம் செய்யும் தளத்திற்கான இணைய முகவரியை முடிந்தால் பகிர்ந்து கொள்ளவும். நன்றி.
ReplyDeleteவாங்க சூர்யா, ரங்கனைப் பார்த்தே ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. :( எஸ்.ஏ.பியின் நாவல்கள் சுட்டி எனக்கு ஶ்ரீராம் அனுப்பியது தான். சுட்டியைத் தேடித் தருகிறேன். ஆனால் அதில் "எனக்கென்று ஓர் இதயம்" மட்டுமே இருக்குனு நினைக்கிறேன்.
Deleteஅப்படி என்ன மாத்திரைகள் அவை? திருச்சியிலோ, ஸ்ரீரங்கத்திலோ கிடைக்காதா? எப்படியோ மாத்திரைகள் கைக்கக் கிடைத்தது நிமமதி. சீக்கிரம் பூரணநலம் பெற வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், இங்கெல்லாம் கிடைக்கலை. மாம்பலத்திலேயே ஒரே ஒரு கடையில் தான் இருப்பதாகத் தம்பி சொன்னார். மற்ற மாத்திரைகள் எல்லாம் தொலைபேசியில் சொல்லி வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துவிடுவார்கள். நான் கடந்த இரண்டு வருஷங்களுக்கும் மேலாக இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தும்படி நேரவில்லை. இம்முறை தான் இவ்வளவு மோசமான வலியும், வீக்கமும். TRIOFLAM tablets. ஐந்து நாட்களுக்கு மட்டுமே போட்டுக்கச் சொல்லி மருத்துவர் உத்தரவு. கூகிளிலும் தேடிப் படித்திருக்கேன்.
Deleteகர்மா.. அதைக் க்ளிக்கியதும் இங்கே பக்கம் மாறி அங்கு சென்று விட்டது. அப்புறம் சுட்டியின் முகவரியைக் குறித்துக்கொண்டு மறுபடி இங்கு திரும்பினேன். பின்னர் பார்க்கவேண்டும்.
ReplyDeleteபாருங்கள் ஶ்ரீராம். உங்களுக்குப் பிடிக்கும் என்றே நம்புகிறேன்.
Deleteஅநுத்தமா கதையில் நாயகநாயகியாருக்கு என்ன நேர்ந்திருக்கும் என்கிற கவலையும் இப்போது சேர்ந்துகொள்கிறது. ஒரு மனுஷன் எவ்வ்ளவுதா, எதெதற்குதான் கவலைபபட முடியும்? சொல்லுங்கள்...
ReplyDeleteஹாஹாஹாஹா! ஆமாம், எனக்கும் சில சமயங்களில் இரவுகளில் கூடப் படித்துப் பாதியில் விட்ட நாவல்களில் அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற கவலை பிச்சுப் பிடுங்கும். :)))) முன்னெல்லாம் அதாவது சின்ன வயசில் சின்னச் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் எடுத்த புத்தகத்தை இரவு எத்தனை நேரம் ஆனாலும் படித்து முடித்துவிட்டுத் தான் தூங்குவேன். திட்டுவார்கள். அப்பாவுக்குச் சிம்னி விளக்கு எங்கேயாவது தலையணையில் விழுந்து எரிய ஆரம்பிச்சுடுமோனு கவலையா இருக்கும். அரைமணிக்கொரு தரம் எழுந்து வந்து பார்ப்பார். :))))
Deleteகர்மா... சோவின் எங்கே பிராமணன் டைப் கதையோ?
ReplyDeleteஇல்லை ஶ்ரீராம், தற்செயலாக நடந்த ஒரு சின்னத் தவறு அந்தக்காலத்தில் எப்படி மோசமாகப் பார்க்கப்பட்டது என்பதோடு அதனால் ஓர் நல்ல மனிதனை ஊரை விட்டுத் தள்ளி வைக்கும்படியும் ஆகிவிட, அவருடைய ஒரே பெண் எப்படித் தன் அப்பாவுக்கு தண்டனை கொடுத்த மனிதரையும் அவர் குடும்பத்தையும் பழி வாங்குகிறாள் என்பதே கதை! ஆனால் பின்னால் வருந்துவாள் என நினைக்கிறேன். அந்தப் பெண்ணின் வயதான கோலத்தில் ஒரு ஆண் தான் நார்மடி கட்டிக் கொண்ட பாட்டியாக நடித்திருப்பார். நான் ஏழு வரை தான் பார்த்தேன். நம்ம ரங்க்ஸ் வேறே யூ ட்யூபில் ஏதோ பார்த்துண்டிருந்தாரா? எனக்கு வசனங்களே காதில் விழலை. மறுபடி இன்னிக்குப் பார்க்கணும். :))))) சோவின் கதைக்கும் இதுக்கும் ஸ்நானப் பிராப்தி கூட இல்லை.
Deleteமாத்திரைகள் வந்து சேர்ந்தது என்பது அறிந்து மகிழ்ச்சி. விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.
ReplyDeleteபடிக்க வேண்டிய நூல்கள் அதிகம் இருக்கிறது. தரவிறக்கம் செய்து வைத்தவை கிடப்பில்!
வாங்க வெங்கட், தில்லி போய்ச் சேர்ந்தாச்சு போல! உங்களுக்குக் கிண்டில் மூலம் என்பதால் நிறையச் சேர்ந்திருக்கும் தான்! நமக்குத் தான் கிண்டிலில் உப்புமாக் கிண்டக் கூட வரதில்லையே! :))))) நீங்க, எதிர்வீட்டுப் பையருக்கு அப்புறமாவும் நான் முயன்று பார்த்துட்டேன். அசைந்து கொடுக்கலை கிண்டில். :(
Delete