எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 29, 2021

வசந்தம் திரும்புமா?

துளசி கோபால் தன்னுடைய வலைப்பக்கம் பதினெட்டாம் ஆண்டைத் தொட்டுவிட்டது எனவும் கடந்த ஒரு வருஷமாக தன் வலைப்பக்கம் கோமாநிலையில் இருப்பதாகவும் எழுதி இருக்கார்.  அவரும் சுறுசுறுப்பாகத் தினம் ஒரு பதிவு எனப் போட்டுக் கொண்டிருந்தவர் தான். என்ன காரணமோ சில காலங்களாகப் பதிவே இல்லை. அதைப் படித்ததில் இருந்து எனக்குள்ளும் சிந்தனை.  துளசி ஆரம்பித்த சமயத்தில் எல்லாம் நான் சும்மாக் கருத்துச் சொல்லிக் கொண்டு தான் இருந்தேன். அப்புறமாய்த் தான் திடீரென 2005 ஆம் ஆண்டில் நவம்பரில் வலைப்பக்கம் ஆங்கிலத்தில் தொடங்கலாம் என்று ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் எப்படிக் கணினியில் தமிழில் எழுதுவது என்பதே தெரியாத நிலை. ஆரம்பித்துச் சில காலங்களிலேயே ஆங்காங்கே உதவிக்கரங்கள் நீண்டன. ஒரு வழியாக 2006 ஆம் வருஷம் ஏப்ரலில் என்னுடைய வலைப்பக்கத்தைத் தமிழில் மாற்றினேன். ஆரம்பத்தில் ரொம்பவே கனமான விஷயங்களை எழுதவில்லை. என் பக்கம் எல்லோரையும் வர வைக்கணுமே! அதனால் அதிகமாய் மொக்கை தான்! பின்னரே என்னுடைய பயணங்கள், கோயில்கள் சென்றவை, வட மாநிலங்களில் வசித்த அனுபவங்கள் எனப் பகிர ஆரம்பித்தேன். இதில் ரயில் பயணங்கள் பற்றி அதிகம் எழுதி இருக்கேன். அதன் பின்னர் அந்த வருஷமே செப்டெம்பர் மாதத்தில் திடீரெனக் கயிலைப் பயணமும் வாய்க்க அதை நான் பயணக்கட்டுரையாக  எழுத வலை உலகில் ஓரளவுக்குப் பிரபலமும் ஆனேன். அதன் பின்னர் சில காலம் திரும்பியே பார்க்கவில்லை எனலாம். முழுக்க முழுக்க வலை உலகம் என்னை ஆட்கொண்டது. வீட்டில் அவ்வப்போது வேலைகளை விரைவாகவும் சரியாகவும் செய்து முடித்துவிட்டுக் கணினியில் ஆர்வமுடன் வந்து உட்கார்ந்து கொள்வேன். புதுப் பதிவுகள் எழுதுவது/வந்த கருத்துகளுக்குப் பதில் சொல்வது, மற்றப் பதிவுகளைப் போய்ப் படிப்பது/ எனச் சுறுசுறுப்பாக வேலைகள் நடக்கும். இதற்கு நடுவில் யாரானும் யாஹூ மெசஞ்சரின் மூலமோ/கூகிள் சாட்/ஸ்கைப் மூலமே அரட்டையும் அடிப்பாங்க. அப்போதிருந்த நண்பர்களில் பலர் இப்போது வலை உலகிலேயே இல்லை. 

கொஞ்ச காலமாகவே எழுதுவதிலும்/படிப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது. இது நான் எதிர்பாராத ஒன்று. பல விஷயங்கள் எழுத நினைச்சு எழுதவே முடியலை. இதிலே சமீப கால உடல் நலம் காரணமாக ஓரிரு மாதங்கள் சுத்தமாய் முடியலை.  அதனால் ஒண்ணும் ஆயிடலை. என்றாலும் எனக்கு மன உறுத்தல். முன்னெல்லாம் ஆரம்ப காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் போட்டுப் பின்னர் தினம் ஒரு பதிவுனு போட்டு அதிலும் பக்திச் சுற்றுலா/ஆன்மிகம் பற்றியவற்றிற்குத் தனிப்பக்கம் ஆரம்பித்துப் பின்னர் பக்திக்கெனத் தனிப் பக்கம் ஆரம்பித்து, சமையலுக்கென ஆங்கிலத்தில் வலைப்பக்கம் ஆரம்பித்து அதன் பின்னர் வேறொரு மெயில் ஐடியில் இன்னும் இரு வலைப்பக்கங்கள் ஆரம்பித்து என ஒரே சமயம் பல வலைப்பக்கங்களை ஆரம்பித்து ஓரளவுக்கு எழுதியும் வந்தேன். அப்போவும் நாங்க இருவர் தான். இருந்தது அம்பத்தூரில் தனி வீட்டில். வீட்டு நிர்வாகங்கள் அதிகம். தினம் வீட்டைப் பெருக்குவதும்/சுத்தமாய் வைத்துக்கொள்வதுமே தனி வேலை. காலை/மாலை இருவேளையும் சேர்ந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆயிடும். என்றாலும் கணினியில் உட்காரும் நேரம் அதிகமாகவே இருந்தது.  காலை தினம் தினம் யோகாசனப் பயிற்சி வேறே ஒரு மணி நேரத்துக்கும் குறையாது. 2015 வரை யோகாசனப் பயிற்சி இருந்தது. பின்னர் தான் மெல்ல மெல்ல முடியாமல் போனது.  அப்போதெல்லாம் மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரமா இருந்தது? ஆச்சரியம் தான்!

அப்போதெல்லாம் காலை நேரத்தில் எல்லாம் கணினியில் உட்கார மாட்டேன். எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு சாப்பாடும் முடிந்து பனிரண்டரை ஒரு மணிக்கு உட்கார்ந்தால் மாலை நான்கு மணி வரை உட்கார்ந்திருப்பேன். அதன் பின்னர் எழுந்து மாலை வேலைகள்/ இரவு உணவு தயாரித்தல் முடிந்து உணவு உண்டு இரவு ஏழரை வாக்கில் உட்கார்ந்தால் ஒன்பதரை வரை உட்கார்ந்திருப்பேன். இப்போல்லாம் கண்களின் பிரச்னைகள் காரணமாக இரவில்/மாலை அதிகம் உட்காருவதில்லை. மாலையில் உட்கார்ந்தாலும் ஆறு/ஆறரைக்குள்ளாக மூடும்படி ஆயிடும். மனதைச் செலுத்தி எதுவும் செய்ய முடியறதில்லை. மனசு வீட்டு வேலைகளையே நினைக்கும். அப்போதிருந்த செயல் திறன் இப்போது குறைந்திருக்கிறது. இதுக்கு நடுவில் 2013 ஆம் ஆண்டில் இருந்து சில காலங்கள் லினக்ஸிற்காக மொழிபெயர்ப்பு வேலை திரு தி.வா. மூலமாகச் செய்து கொடுத்திருக்கேன். செல்வமுரளிக்காக அவரின் விஷுவல் கம்யூனிகேஷன் சார்பாக தினத்தந்திக்கு நூற்றாண்டு மலருக்கான வேலைகள் செய்திருக்கேன். திரு வைகோ நடத்திய போட்டிகளில் அவருடைய விடா முயற்சியின் பேரில் விமரிசனங்கள் எழுதிக் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கேன். அப்போதெல்லாம் குழுமங்களிலும் கலந்து கொள்வேன். அதிலும் மின் தமிழ்க்குழுமத்தின் மாடரேட்டர் ஆக இருந்ததால் அட்மின் வேலைகளையும் அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்படி இருக்கும்.  நிறைய மொழிபெயர்ப்பு வேலைகளும் வந்தன/ ஆனால் சிலவற்றின் ஒரு சார்பு காரணமாக அந்த வேலைகளை  ஏற்றுக்கொண்டதில்லை. 

இப்போ நினைச்சால் நானா அது எனத் தோன்றுகிறது. இப்போக் காலையில் எழுந்தாலும் கணினியில் உட்கார முடிவதில்லை. என்னிக்காவது உட்காருகிறேன்.  அதிகமாய் மத்தியானங்களில் தான் உட்கார்ந்து வேலை செய்யும்படி இருக்கிறது. அதுவும் அதிகம் போனால் ஒரு மணி நேரமே/ அதற்குள்ளாக எதைப் பார்ப்பது/எதை விடுவது/எதை எழுதுவது என்று இருக்கு! புதிதாய் ஒன்றும் எழுதவில்லை. பல வேலைகள் ஆரம்பித்தவை அப்படி அப்படியே நிற்கின்றன. உழைப்பு தேவை.ஆனால்  நம்மால் இப்போது உழைப்பைக் கொடுக்க இயலாத நிலை. உடல் நலம் விரைவில் இதை எல்லாம் ஈடு கட்டும்படியாகக் குணம் ஆகிக் கொஞ்சமானும் வேலைகளில் ஈடுபட இடம் கொடுக்க வேண்டும். அதற்கு இறைவன் தான் கருணை காட்ட வேண்டும். இறை அருளால் அனைத்தும் சரியாக வேண்டும் என்பதே பிரார்த்தனைகள்.  இதுவும் ஒரு காலம். இதுவும் கடந்து போகும் தான். ஆனால் பழைய நிலை வருமா? இதான் மில்லியன் டாலர் கேள்வி!

31 comments:

 1. அன்பின் கீதாமா,
  நம் துளசி மாதிரி, உங்களை மாதிரி
  எழுதினவர்களே கிடையாது.
  இத்தனை சாதித்திருக்கிறீர்கள்.!!
  அம்மாடி!! என்றிருக்கிறது.

  ஆல் ரௌண்டர் நீங்கள். கை வைக்காத துறையே இல்லை.
  எனக்கு எல்லாம் இது மனதைப் பொறுத்து அமையும்.

  இந்தத் துறையில் நிறைய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
  அதை எண்ணங்களி வடிக்கும் திறமையும் வேண்டும்.

  உங்கள் சிறப்பு அளவிட முடியாதது.
  மனம் நிறை வணக்கங்களும் வாழ்த்துகளும். உடல் நலம் சீக்கிரம் சித்திக்கும். இன்னும் எழுத நிறைய இருக்கிறதே அம்மா. நலமுடன் இருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். உங்கள் போற்றுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் அனைவரின் ஊக்கம் தரும் வார்த்தைகளே எனக்கு பலம்.

   Delete
 2. கீதாக்கா கண்டிப்பாக வரும் நீங்களும் பழையபடி எழுதமுடியும். உலா வருவீங்க.

  ஆம் இதுவும் கடந்து போகும்

  பிரார்த்தனைகள்

  ReplyDelete
 3. நீங்கள் இத்தனை நிறைய எழுதியிருக்கீங்க, செய்திருக்கீங்க...இப்பத்தானே கொஞ்சம் இடைவெளி. சரியாகிவிடும் கண்டிப்பாக...

  எனக்கும் கொஞ்சம் மாதங்களாகச் சுணக்கமாகத்தான் இருக்கிறது. எவ்வளவோ சிந்தனைகள் மனதில் ஓடுவதால் எழுதுவதில் டக்கென்று புகமுடியவில்லை. எழுதுவதற்கு நிறைய இருந்தாலும்...கதைகள் , பதிவுகள் பயணப் படங்கள் (4 ஆண்டுகளுக்கு முன் ஹிஹிஹி) இருந்தாலும்..

  எழுத முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா! ஆமாம் ஒரு 2,3 வருஷங்களாகவே தொய்வு தான் என்றாலும் இப்போ இன்னமும் அதிகம். உடல்நிலை எப்படி இருந்தாலும் சமாளிப்பேன் முன்னெல்லாம். ஆனால் இப்போ முடியலை. அதுவேறே!

   Delete
  2. நீங்களும் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து பழையபடி சுறுசுறுப்பாக எழுத வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

   Delete
 4. நீங்கள் ஒரே நேரத்தில் பல வலைத்தளங்களை மேனேஜ் செய்து கொண்டிருந்ததெல்லாம் எனக்கு பிரமிப்பாக இருந்தது. இப்போது கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும் தொடர்ந்து எண்ணங்கள் தளத்திலாவது தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. பார்க்கலாம் ஶ்ரீராம். தொடர்ந்து எழுதப் பல விஷயங்கள் இருந்தாலும் உட்கார்ந்தால் மனம் பதியவில்லை. அதனாலேயே சுணக்கமும்!

   Delete
 5. அந்த நாட்களில் உங்கள் தளங்களில் எல்லாம் பிரபல பதிவர்களின் கமெண்ட்ஸ் நிறைய இருக்கும்.  அவர்களில் பலர் எங்கள் பக்கமெல்லாம் வந்ததே இல்லை.  இப்போதைய உடல்நிலைதான் கொஞ்சம் சுணக்கமாக இருக்கிறதே தவிர, உங்கள் மனம் எப்போதும் உற்சாகமாகவே இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், மனதை உற்சாகப்படுத்திக்கொள்ள முயன்று வருகிறேன். அந்த நாட்களில் எழுதினவர்கள் யாரும் இப்போது எழுதுவது இல்லை. நான், ரேவதி, துளசி ஆகியோர் தவிர்த்து! இதில் பலரும் தொடர்பிலும் இல்லை. ரேவதி கொஞ்சம் பரவாயில்லை. நான் அவ்வப்போது எழுதுகிறேன். துளசி தாற்காலிகமாக நிறுத்தி இருக்கார். :(

   Delete
 6. ஆன்மிகம், சமையல், பழைய சம்பிரதாயங்கள் கோவில் சுற்று, என பலப்பல விஷயங்களை பற்றி நீங்கள் ழுதும்போது ஆச்ச்ர்யமாக இருக்கும்.  மீண்டும் அதே போல எழுதலாம்.  ஆனால் அதற்கான பயணங்கள் செய்ய முடிவதில்லை இப்போது.

  ReplyDelete
  Replies
  1. ஆன்மிகம் முழுதாக எழுதுவதே இல்லை. சொல்லப் போனால் தொடக்கூட இல்லை. சமையலும், சம்பிரதாயங்களும் பல பதிவுகளைக் கொடுக்கும். ஆனால் உட்கார்ந்து மனம் ஒன்றி எழுதணும். கோயில்கள் தான் இப்போ 2 வருஷங்களாகப் போகவே இல்லையே! :(

   Delete
 7. வணக்கம் சகோதரி

  நலமா? தங்கள் கால் வலி ஒரளவு குணமாகியிருக்குமென நம்புகிறேன். இத்தனை வலிகளுடன் தற்சமயம் நீங்கள் வீட்டையும் கவனித்துக் கொண்டு, வலையுலகத்திலும் வருகிறீர்கள். அதுவே பாராட்டுக்குரியது. உங்களது முந்தைய சாதனைகள் வியக்க வைக்கின்றன. ஒரளவு உங்கள் வலைத்தளங்களைப் பற்றியும், அதில் உங்கள் பங்காற்றாலை பற்றியும் அறிவேன். இப்போது இந்தப் பதிவில் நீங்கள் கூற கூற முழுமையாக அறிந்து கொண்டேன்.

  எனக்கும் வலைத்தளம் வந்த புதிதில் இருந்ததை விட இப்போது நேரங்கள் சுருங்கியது போல் தோன்றுகிறது. அப்போது நிறைய எழுத வேண்டுமென ஆசைகள் இருந்தது. அதில் கொஞ்சமும் பலித்தது. உங்களைப் போல் கணினியில் நிறைய அளவிற்கு நான் உழைத்ததில்லை. ஆனால் சில வருடமாக ஏதோ எழுதும் சில பதிவுகளும் எனக்கும் தடைபடுகின்றன.

  உங்களுக்கும் தலைப்பிலுள்ளது போல் வசந்தம் வரும். எப்போதும் வசந்தம் என்பது வருடத்திற்கு முறை தப்பாமல் வருவதுதானே ...! இந்த தடவை உங்களுக்கு உடல் நிலை பாதித்து மிகவும் கஸ்டப்பட்டு விட்டீர்கள். அதனால் மனச்சோர்வு உண்டாகி விட்டது. கண்டிப்பாக வரும் நாட்களில் நீங்கள் நினைத்ததை எழுத்தில் கொண்டு வந்து நிறைய பதிவுகள் எழுதி, எங்கள் அனைவருடனும், நீங்களும் வியந்து போகும் காலம் வரும். உங்கள் எழுத்தின் திறமை உங்களுடன்தான் நீடித்து இருக்கும். அதனால் கவலை வேண்டாம். இறைவன் அருளால் நீங்கள் விரைவில் பூரண குணமாகி எழுத்துலகில் முன்பு போல் நீடித்த புகழ் பெற நானும் அந்த இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா! ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. கால் வலி மெல்ல மெல்லத் தான் குறைந்து வருகிறது. என்றாலும் இப்போப் பிள்ளையார் சதுர்த்தியில் இருந்து நானே வீட்டில் சமைக்கிறேன். முடிந்ததைச் செய்து வருகிறேன். உண்மையில் இப்போ நேரமே இருப்பது இல்லை. அதோடு முன்னெல்லாம் நாலரைக்குள் எழுந்து வேலைகளை முடித்துக் கொண்டு யோகாசனமும் செய்து, நடைப்பயிற்சியும் செய்துனு எல்லாமும் இருக்கும். இப்போ எழுந்திருப்பதே ஐந்தரை/சில நாட்கள் ஆறு என ஆகிவிடுகிறது. எழுந்திருக்க முடிவதே இல்லை. இறை அருளால் விரைவில் பழைய சுறுசுறுப்பு இல்லாட்டியும் ஓரளவுக்கு உடல்நலம் சரியாகி மீண்டு வரவேண்டும் என்றே விரும்புகிறேன். உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி.

   Delete
 8. துளசி அவர்கள் இந்தியா வரும் போது போய் வந்த இடங்களை பற்றி பதிவு போடுவார். இந்த ஆண்டு வர வில்லை அதனால் அப்படி சொல்லி இருக்கிறார். முகநூலில் அதிகம் போடுகிறார். படங்கள், செய்திகள்.

  எல்லோருக்கும் பழைய உற்சாகம் குறைந்து இருப்பது உண்மைதான்.
  உற்சாகத்தை வலுவில் வரவழைத்து கொண்டு முடிந்த போது எழுதுங்கள்.
  அப்புறம் வழக்கமாகி விடும்.

  நிறைய எழுதிகொண்டு இருந்தீர்கள், நீங்களே நானா அப்படி எழுதி கொண்டு இருந்தேன் என்று வியக்க தோன்றுகிறது இல்லையா?

  சோர்ந்து போகாதீர்கள், ஆரம்பித்த வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடித்து பதிவு செய்யுங்கள்.
  இறைஅருளும் கை கொடுக்கும்.

  வாழ்த்துக்கள்.
  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி! ஆமாம், அனைவருக்குமே உற்சாகக்குறைவு ஏற்பட்டுள்ளது. வலுவில் தான் நானும் வரவழைத்துக் கொள்கிறேன். சோர்வு என்றால் மனச்சோர்வு உடல் சோர்வை விட அதிகமாக உள்ளது. அதை வெல்ல வேண்டும். பார்க்கலாம். உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

   Delete
 9. நல்லதே நடக்கும்... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு தனபாலன்.

   Delete
 10. கண்டிப்பாக உறுதியாக நீங்கள் மீண்டும் நலம் பெற்று எழுதுவீர்கள் சகோதரி! எங்கள் பிரார்த்தனைகளும் உடன் உண்டு.

  உங்கள் படைப்புகள் வேலைகள் எல்லாம் பிரமிப்பை வரவழைக்கிறது.

  நீங்கள் சொல்லியிருப்பது போல் நாங்களும் முதன் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதத் தொடங்கினோம் எங்கள் அறிமுகம் கூட ஆங்கிலத்தில் இருக்கும், எனது ஓரிரு படைப்புகளும் ஆங்கிலத்தில். தமிழில்தான் எழுத ஆசை ஆனால் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியாமல் விழித்து அதன் பின் எப்படி என்பதைத் தெரிந்து கொண்டு தமிழில் ஆங்கிலப் படைப்புகளையும் மொழி பெயர்த்து, ஏற்கனவே நான் ஆங்கில வலைத்தளம் ஒன்றை என் மாணவ மாணவிகளுக்காகத் தொடங்கியிருந்ததால் அதில் ஆங்கிலப் பதிவுகளை போட்டுவிட்டுத் தற்போது அந்த வலைப்பூ என் மாணவமாணவிகளுக்கு ஆங்கில இலக்கிய நோட்ஸ் கொடுப்பதற்குப் பயன்படுத்திவருகிறோம்.

  நீங்கள் சொல்லியிருப்பது போல இதுவும் கடந்து போகும். விரைவில் நலம் பெறுவீர்கள். பிரார்த்தனைகள்

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன். உங்கள் ஆங்கிலப் பதிவுகளைப் பார்த்ததே இல்லை. சுட்டி கொடுத்தால் சென்று பார்க்கிறேன். பாராட்டுகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. பிரமிக்க வைக்கும் அளவுக்கெல்லாம் எதுவும் செய்யலை.

   Delete
 11. உண்மை தான் மாமி, எனக்கும் இது அடிக்கடி தோணும்.அப்ப நான் கனடாவில் அலுவலக வேலை, வீட்டு வேலைகள் எல்லாம் போகவும் அவ்ளோ எழுதுவேன். இப்ப வீட்ல இருக்கேன் தான் பேரு, பழைய ஊக்கம் இல்லை என்பது தான் நிதர்சனம்

  முக்கியமா அப்ப இருந்த circle அப்படி, போட்டி போட்டுகிட்டு எழுதுவோம், ரகளையா இருக்கும்.இப்ப அந்த உந்துதலில்லை

  விரைவில் இந்த சுணக்கம் மறைந்து பழைய நிலை திரும்பும் என நம்புவோம். Take care மாமி

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏடிஎம், நீங்க சொல்வது உண்மைதான். அப்போ இருந்த சுறுசுறுப்பும், ரசனையும், எழுதுவதில் இருந்த போட்டாபோட்டியும் இப்போது இல்லை தான்! ஏனென்று தான் புரியலை. விரைவில் சுணக்கம் மறையட்டும். உங்களுக்கும் விரைவில் சுறுசுறுப்பு ஏற்பட்டுப் பழைய மாதிரிச் செயல்படப் பிரார்த்திக்கிறேன்.

   Delete
 12. இது எல்லோருக்கும் எல்லா துறைகளிலும் நேரும். உங்கள் உடல் நிலை சுணக்கத்திற்கு பெரும் காரணமாக இருக்கும். இதுவும் கடந்து போகும். 

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி. உடல்நிலையும் ஒரு காரணம் தான். விரைவில் இந்த நிலையைக் கடந்து வரவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.

   Delete
 13. நீங்களும் திவாஜியும் மொழிபெயர்த்த லினக்சை தமிழில் பயன்படுத்தும் பயனர்களில் நானும் ஒருவன்.
  உங்கள் பங்களிப்புகளுக்கு பல்லாயிரம் நன்றிகள்.

  உங்கள் எழுத்துகளும் பணிகளும் எனக்கு பெரிதும் ஊக்கம் தருபவை.

  மீண்டும் அரும்பணிகளைத் தொடர வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சீனிவாசன், இன்னும் சிலரும் அந்த மொழிபெயர்ப்புப் பணியில் இருந்தனர். என்னையும் குறித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. பின்னால் என்னால் அதைத் தொடரமுடியாமல் அவங்க கொடுக்கும் நேரத்துக்குள் முடித்துக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நானாகவே விட்டு விட்டேன். என்றாலும் தொடர்ந்து செய்யமுடியவில்லையே என்னும் வருத்தம் இப்போதும் உண்டு. வேறு வேலைகள் இருந்தாலும் செய்து கொடுக்கலாம். மனதுக்கு மாற்றமாக இருக்கும் என முயற்சி செய்து பார்த்தேன். ஒன்றும் அமையவில்லை. உங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

   Delete
 14. நீங்க நிறையவே எழுதியிருக்கீங்க. ரொம்பவே நேரம் எடுத்துக்கொண்டு பல உபயோகமான பதிவுகளையும் போட்டிருக்கீங்க.

  விரைவில் பழைய உற்சாகமும் ஆரோக்கியமும் வரப் ப்ரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத் தமிழரே, மஹாலயம் எல்லாம் முடிஞ்சு ஓய்வாக இருப்பீங்கனு நினைக்கிறேன். உங்கள் சுருக்கமான கருத்துக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

   Delete
 15. நீங்கள் எழுதாத பதிவுகளா? நாங்கள் எவ்வளவு படித்து மகிழ்ந்திருக்கிறோம்.

  நலமாகி தொடர்ந்தும் உங்கள் பதிவுகள் சிறக்கும் மகிழ்சியாக இருங்கள்.

  ReplyDelete
 16. வயது ஏறுவதுடன் அதன் தொடர்பாக பல விதமான உடல்நலக்குறைவுகளும் உடலையும் மனதையும் பாதிக்கும்போது மனதில் சுணக்கம் ஏற்படத்தான் செய்கிறது! உற்சாகத்தை குறையச் செய்கிறது. எல்லாவற்றுக்கும் மனம் தானே காரணம்? இந்த மன நிலையை, உடல் நிலையை நிறைய பேர் அனுபவித்துக்கொண்டு தானிருக்கிறோம். உடல் நிலையை மீறி முதலில் மனதை எழுந்து உற்சாகமாக செயல்பட வைக்க வேண்டும். கவலைப்படாதீர்கள்! விரைவில் அனைத்து வலிக‌ளும் பிரச்சினைகளும் தீர்வுக்கு வந்து வசந்தம் நிச்சயமாகத் திரும்பும்! நிச்சயம் பழையபடி நிறைய எழுதுவீர்கள்!

  ReplyDelete