இந்த வருஷம் நவராத்திரிப்பதிவுகள் போடுவதற்கான முன்னேற்பாடுகளோ/குறிப்புக்களோ எதுவுமே தயார் செய்துக்கலை. எங்கே கணினியில் உட்காரும் நேரமே குறைவு. முதலில் எதுவும் எழுத வேண்டாம்னு தான் இருந்தேன். இன்னும் வீட்டில் கொலு வைக்கவில்லை. இன்னிக்குத் தான் வைக்கணும். இனிமேல் தான் ஏற்பாடுகளே! ஆனாலும் நவராத்திரிக்கு அம்பிகை பற்றி ஏதேனும் எழுதணும்னு மனதில் தோன்றியது. முதலில் தேவி மஹாத்மியத்தில் வரும் "யாதேவி சர்வ பூதேஷூ" என ஆரம்பிக்கும் நமஸ்கார ஸ்லோகங்களை எழுதலாம்னு நினைச்சேன். ஆனால் அந்தப் பக்கங்கள் கிடைக்கவில்லை. ஆகவே சௌந்தர்ய லஹரி பற்றி எழுதியதையே மீள் பதிவாகப் போடலாம்னு நினைச்சுப் போடப் போகிறேன். மற்றபடி ஒவ்வொரு நாள் நவராத்திரி பற்றியும் அதன் அலங்காரங்கள், நிவேதனங்கள், பூஜை செய்யும் முறை பற்றியும் நிறைய எழுதிட்டதால் அதை இந்த வருஷம் தொடரவில்லை. மன்னிக்கவும்.
***********************************************************************************
முதலில் ஆசாரியர் காலம் கி.மு. என்று நாம் புரிந்து கொண்டால் தான் சரியாக இருக்கும். மேலும் ஆசாரியர் தமிழ் பேசும் பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் எடுத்துக் காட்டியுள்ளார். அனைவரும் நினைக்கும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியவர் அபிநவ சங்கரர். இவருக்கும் ஆதிசங்கரருக்கும் இருந்த நிறைய ஒற்றுமைகளால் ஏற்பட்ட குழப்பம் என்பதையும் அறிய முடியும் அனைவரும் நினைப்பது போல் சங்கரர் காலம் கி.பி. இல்லை, கி.மு. தான் இதை நம் பரமாசாரியாள் அவர்கள் தெளிவாக்கி இருக்கிறார். தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதியில் சங்கர சரிதம் என்னும் தலைப்பின் கீழ் வரும் அத்தியாயங்களில் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-ல் இருந்து கி.மு 477 வரையானது என்பதைத் தெள்ளத் தெளிவாய்க் கூறி உள்ளார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 38-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஅபிநவ சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெரும்பாலும் ஆதிசங்கரரை ஒத்திருந்ததால் அநேகமான ஆய்வாளர்கள் இவர் தான் ஆதிசங்கரர் எனத் தவறாகக் குறிப்பிடுகின்றனர். ஆகவே படிக்கும் நேயர்கள் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-கி.மு 477 என்பதை நினைவில் கொண்டு படிக்குமாறு வேண்டுகிறேன்.
இது குறித்து இங்கே சொல்லப் போவதில்லை; திராவிட சிசு எனத் தன்னைத் தானே ஆசாரியாள் கூறிக்கொண்டதை மட்டும் பார்க்கப் போகிறோம். ஜகத்குருவான சங்கராசாரியாரின் காலம் எப்போது என வரையறுக்கப் படாத காலத்திலே தோன்றினார் என்றே சொல்லப் படுகின்றது. அப்போது நம் தென் தமிழ்நாடு பூராவும் தமிழே பேசப் பட்டிருக்கின்றது. அதனாலேயே இவர் “தமிழ் சங்கரன்” எனப் பாடப் பட்டிருக்கின்றார். ஆசாரியாள் பேசியதும் அவருடைய தாய்மொழியும் தமிழே. சங்கரர் பிறந்த கதை அனைவரும் அறியலாம். சிவகுருநாதருக்கும் ஆர்யாம்பாளுக்கும் திருச்சூர் வடக்கு நாதர் அருளில் தோன்றிய சங்கரர் குழந்தையாக இருந்த போது ஒரு நாள் நடந்தது இது.
ஒருநாள் சிவகுருநாதன் அவர்களுக்கு அருகே இருக்கும் மாணிக்கமங்கலம் என்னும் ஊரில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தவேண்டிய வேலை இருந்தது. ஆர்யாம்பாள் அக்கால வழக்கப்படி வீட்டுக்குள் வரமுடியாத மாதாந்திரத் தொல்லையில் இருந்தாள். ஆகையால் அவள் இல்லத்தின் கொல்லைப் புறத்திலே இருந்தாள். குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்ட படியால் சிவகுருநாதர் ஒரு கிண்ணம் நிறையப் பாலைக் குழந்தைக்கு எனக் குழந்தையின் அருகேயே வைத்திருந்தார். குழந்தை தன் மழலையிலே பாலைப் பின்னர் அருந்துவதாய்ச் சொல்ல அவரும் கோயிலுக்குச் சென்றுவிட்டார். குழந்தை விளையாட்டு மும்முரத்தில் பாலை மறக்க தாய் மறப்பாளா? ஆர்யாம்பாள் கொல்லைப் புறத்தில் இருந்து, “சங்கரா, பாலைக்குடித்தாயா அப்பா?” என ஆதூரம் மிகக் கேட்டாள். குழந்தைக்கும் அப்போதுதான் பாலின் நினைவே வந்தது. கிண்ணத்தையே பார்த்தது குழந்தை. பால் தளும்பிற்று.
கிண்ணத்தைக் கையில் எடுத்தது. சாப்பிடப் போன குழந்தைக்குத் தன் தந்தை எது சாப்பிட்டாலும் உம்மாச்சிக்குக் காட்டுவாரே என நினைப்பு வந்தது. உடனேயே தத்தக்கா பித்தக்கா எனத் தளிர் நடை நடந்து பூஜை அறைக்குச் சென்றது குழந்தை. பால் கிண்ணத்தைக் கீழே வைத்தது. அதன் எதிரே அன்னபூரணியின் உருவப் படம் மாட்டப் பட்டிருந்தது. அன்னபூரணியையே ஒரு கணம் உற்றுப் பார்த்தது. யார் கண்டார்கள்? அன்றொரு நாள் தான் பிரம்ம கபாலத்தை ஏந்தி பிக்ஷை எடுத்து வந்த நாட்கள் ஒன்றிலே சாட்சாத் அன்னபூரணியின் கை அன்னத்தால் தன் பிக்ஷைப் பாத்திரம் நிரம்பிய நினைவு மனதில் மோதிற்றோ?? குழந்தை தன்னிரு கண்களையும் மூடிக்கொண்டது. தகப்பன் அப்படித் தான் செய்வார், பார்த்திருக்கிறது. ஏதோ முணுமுணுப்பாரே? ம்ம்ம்?? சரி, நாம் இப்படிச் சொல்வோமே. “அம்மா, அன்னபூரணி, இந்தப் பாலை எடுத்துக்கோயேன்.” குழந்தை வேண்டியது. அப்பா செய்யறாப்போலே குஞ்சுக்கைகளால் நிவேதனமும் செய்தது. அடுத்த கணம் கிண்ணத்தில் இருந்த பாலைக் காணோம். குழந்தை திகைத்துப் போனது. இது என்ன? அப்பா நிவேதனம் செய்வார். அப்புறம் நாம் தானே சாப்பிடுவோம்? ஆனால் இப்போ??
பாலையே காணோமே? வெறும் கிண்ணமல்லவா இருக்கு?? கிண்ணத்தையும் பார்த்துவிட்டு அன்னபூரணியையும் பார்த்தது குழந்தை. பசி வேறு ஜாஸ்தியாகிவிட்டது. என்ன செய்யறதுனு புரியாமல் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, “அம்மாஆஆஆஆஆ, பால்” என்று அழ ஆரம்பித்தது. தன் பதியின் அவதாரமான இந்த ஞானக்குழந்தையோடு சற்று விளையாடுவோம் என எண்ணின அன்னபூரணி இப்போது பதறினாள். ஆஹா, குழந்தை அழுகிறானே? பசி பொறுக்க மாட்டானே? உடனே கிண்ணத்தில் பால் நிரம்பியது. குழந்தை சிரித்தது. (இதைப் பின்னர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடப் போகிறார் சங்கரர். அதைப் பின்னால் பார்ப்போம்.) உமை அளித்த அந்த ஞானப்பாலைக் குழந்தை குடித்தது. பின்னால் வரப் போகும் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகளே இவை எல்லாமே. அம்பாளைக் குறித்த கேசாதிபாத வர்ணனையில் சங்கரர் அம்பாளின் ஸ்தனங்களைக் குறித்தும் பாடி இருக்கிறார். அம்பாளின் மார்பகத்தில் ஊறும் ஞானப்பாலைக் குடித்தே தேவர்கள் நித்ய யெளவனமாய் இருக்கின்றனர் எனவும் அவர்கள் குமாரர்களையோ நித்ய இளைஞர்களாக என்றும் இளையோயாய் மாற்றிவிட்டது எனவும் கூறுகிறார்.
இதன் உள்ளார்ந்த கருத்து அம்பாளின் ஞானப்பாலை உண்டதால் காமமே என்னவெனத் தெரியாத ஞானமூர்த்திகளாக இருக்கின்றனர் என்று கூறுகிறார். இங்கே ஞானம் என்பதை பரப்ரும்மத்தை அறிவது என்ற கருத்தில் ஆசாரியார் கூறி இருக்கலாம். அம்பாளின் ஸ்தனங்களிலிருந்து ஞானம், கருணை, ஸெளந்தரியம், போன்ற அனைத்தும் அவள் இருதயத்திலிருந்து ஊறிப் பாலாகப் பெருகித் தன்னையும் அவளின் குழந்தையாக ஆக்கியது என்கிறார். இதை உண்டதாலேயே ஸாக்ஷாத் சரஸ்வதியின் சாரம் தமக்குள்ளே ஊறிக் கவிதை மழை பொழிய முடிந்தது எனவும் கூறுகிறார். இது சங்கரரே எழுதியதாய்ச் சொல்லப்படும் ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களில் ஒன்று. முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி எனப்படும். அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் ஸெளந்தர்ய லஹரி எனப்படும். இவை அனைத்தும் சேர்ந்தே ஸெளந்தர்ய லஹரி என்று அழைக்கப்படுகிறது. அதன் எழுபத்தி ஐந்தாம் ஸ்லோகத்தில் இந்தக் குறிப்பிட த்ரவிட சிசு என்னும் வார்த்தை காணப்படும்.
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத: பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ: தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத் கவீனாம் ப்ரெளடானா-மஜனீ கமனீய: கவயிதா
இங்கே ஞானசம்பந்தரை ஆதிசங்கரர் குறிப்பிடக் காரணம் ஏதும் இருப்பதாய்த் தோன்றவில்லை. மேலும் மலையாள மொழியின் வரலாறு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே. அதன் முன்னர் சேர, சோழ, பாண்டியர் காலங்களில் சேர நாட்டிலும் தமிழே மொழியாக இருந்தது என்பதையும் அறிவோம். ஆதிசங்கரரும் அப்படியான தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவரே என்பதால் தம்மைத் தானே இங்கே மூன்றாம் மனிதர் போல் பாவித்துக் குறிப்பிட்டிருக்கிறார். அம்பாளின் ஞானப்பாலைக் குடித்து சரஸ்வதியின் அருட்கடாக்ஷத்தைப் பெற்றதால் தம் வாக்வன்மை அதிகரித்துக் கவிஞர்களுக்கெல்லாம் கவியாகத் தம்மை ஆக்கிவிட்டது. இதுவும் அவள் அனுகிரஹமே என்கிறார் ஆசாரியார்.
சௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் இன்னும் வரும்.
பயனுள்ள தகவல்கள் நன்றி.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி. நன்றி.
Deleteநவராத்திரியின் ஆரம்பமே சுபிக்ஷம்.
ReplyDeleteஅம்பிகையின் ஆராதனை தொடரட்டும்.
ஆதி சங்கரரின் அருள்மொழிகள் நம் வாழ்வை
அதன் ஆதாரமான அன்னையை
நம் அருகில் கொண்டு வருகின்றன. என்றும்
நம்மைக் காக்கும்.
அன்பு வாழ்த்துகள் கீதாமா. உடல் நலம் செழிக்கட்டும்.
நன்றி ரேவதி! அனைவருக்கும் அம்பிகையின் அருள் கிட்டட்டும்.
Deleteரொம்ப உபயோகமான பதிவு. ஆதிசங்கரரைப் பற்றிப் படிக்கும்போது வியப்பே ஏற்படுகிறது. இதெல்லாம் பூர்வஜென்ம புண்ணியம் என்பதால்தான் அம்பாளே தன் கருணைப் பாலைக் குழந்தைக்கு ஊட்டினாள். ம்ம்ம் நமக்கெலலாம் எத்தனை லட்சம் ஜென்மம் பாக்கியிருக்கோ...
ReplyDeleteநன்றி நெல்லைத் தமிழரே! நீங்க ஆதி சங்கரரைப் பற்றிச் சொல்லுவது இன்னமும் விசேஷம்!
Deleteமீள்பதிவா? அமேசானில் அல்லது வேறெங்காவது மின்புத்தகமாக போட்டிருக்கிறீர்களோ?
ReplyDeleteஇல்லை. அநேகமா சங்கர சரிதம் ஃப்ரீதமிழில் படிச்சிருப்பீங்க! அல்லது இந்தப் பதிவுகளையே முன்னர் வெளியிட்டபோது 2011 ஆம் ஆண்டில் படிச்சிருக்கலாம். மின் புத்தகங்கள் அமேசான் மூலம் இரண்டே இரண்டு தான் வந்திருக்கு.
Deleteசங்கர சரிதம் ,மிக அருமையான வரலாறு .
ReplyDeleteசெளந்தர்ய லஹரி ஸ்லோகங்களை தொடர்கிறேன்.
நவராத்திரி வாழ்த்துக்கள்.
நன்றி கோமதி!
Deleteகீதாக்கா, சௌந்தர்யலஹரி கேட்டிருக்கிறேன். ஆதிசங்கரரின் அங்கம்ஹரே ஹே டக்கென்று மனதில் மனப்பாடமாய் ஏறியது போல் (எம் எஸ் எஸ்ஸின் நான் ஏகலைவி!! அவரது உதவியால் கற்றது. ஆனால் எனக்கு எனது உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்று தெரியாது...) இது ஏறவில்லை. சங்கரரின் மொழி செம...எனக்குப் புரியாவிட்டாலும் அதன் ஒலிவடிவம் கேட்க நன்றாக இருக்கும்.
ReplyDeleteஆம் அவர் கிமு என்பதும் அறிந்திருக்கிறேன். திருச்சூர் வடக்குநாதர் கோயில் அருமையா இருக்கும் போயிருக்கிறேன் துளசியின் உபயத்தால்.
கீதா
வாங்க கீதா! சௌந்தர்ய லஹரி ஶ்ரீவித்யா உபாசனையைச் சேர்ந்தது. முற்றிலும் யோக மார்க்கம். ஆகவே புரிஞ்சுக்கறதும் கொஞ்சம் கஷ்டமாவே இருக்கு. நாங்க என்னமோ திருச்சூர் போகாமலே வந்துட்டோம்! :(
Deleteகருத்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன் கீதாக்கா
ReplyDeleteகீதா
வந்திருக்கு.
Deleteபார்த்துவிட்டேன் அக்கா.
Deleteகீதா
ஆதிசங்கரர் பற்றிய வரலாறு அருமையாக உள்ளது. அறியாத தகவல்கள் பல தெரிந்து கொண்டேன்
ReplyDeleteஒவ்வொரு முறையும் திருச்சூர் செல்லும் போதோ அல்லது கடந்து செல்லும் போதும் எனக்கு மிகவும் பிடித்த வடக்குநாதர் கோயிலுக்குச் செல்லாமல் போனதில்லை.
தொடர்கிறேன்
துளசிதரன்