வண்டி மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தை அடைந்து நின்றது. அப்பா போய் விசாரித்து வந்ததில் வெண்ணாறு/வெட்டாறு கரை உடைந்துவிட்டதால் கடலூர் மெயின் லைனில் தண்டவாளமெல்லாம் நீர் நிரம்பி இருப்பதாலும் அங்கிருந்து வரும் லைன்களிலும் நீராக இருப்பதாகவும் விழுப்புரம் தாண்டிக் கொஞ்ச தூரம் வரை ஒரே தண்ணீர் மயம் என்றும் ரயில் மேலே போக முடியாது எனவும் சொன்னார்கள். அதற்குள்ளாகக் கூச்சல், குழப்பம், ஆங்காங்கே ஒரே களேபரம். என்ன செய்வதுனு புரியலை. அப்பாவுக்கும் குழப்பம். இப்படி ஒரு நிலைமையை யாருமே எதிர்பார்க்கவில்லை. அன்று சனிக்கிழமை நவம்பர் 25/26தேதினு நினைக்கிறேன். ஏனெனில் திங்களன்று நவம்பர் 28 தான் நான் வேலையில் சேரணும். நடுவில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு மறுநாள் வேலைக்குச் செல்வதாகத் திட்டம். அப்பா/அம்மா கொஞ்ச நாட்கள் இருப்பார்கள். அப்பா வேலையில் இருந்தார் என்பதால் ஒரு வாரம் பத்து நாட்களுக்குப் பின்னர் அப்பா மட்டும் கிளம்பிப் போவதாயும் அம்மா ஒரிரு மாதங்கள் இருந்த பின்னர் போகலாம் எனவும் திட்டம். குழந்தைக்கு அறுபது நாட்கள் முடியவில்லை. மாதம் கணக்கில் தான் 3 ஆம் மாதம். எல்லாத் திட்டங்களும் இப்போது மாறிவிடுமே! யோசனையில் இருந்தோம். ரயில் நின்று கொண்டிருந்தது. மாலை நாலு மணி வரை யாருக்கும் எந்த முடிவும் தெரியவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் எங்கள் வண்டி கிளம்பவும் திரும்பச் சென்னை தான் போகிறதோ என நினைத்தோம். ஆனால் இல்லை. திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருச்சிக்குத் திருப்பி விடப்பட்டதாகச் சொன்னார்கள். இது என்னடா கூத்து என நினைத்தோம். ஒண்ணுமே புரியலை. அப்போது சிலர் விழுப்புரத்தை விடத் திருச்சியிலிருந்து மாற்று ரயில்கள் விடுவார்கள் என்று நம்பிக்கை கொடுத்தனர். வழியெங்கும் மக்கள் வெள்ளம் எங்கள் ரயிலை வரவேற்றது. தண்டவாளத்தின் இரு பக்கங்களிலும் கூட்டமாக நின்ற வண்ணம் மேலே போகாதே! நடுவில் எல்லாம் தண்ணீர்! தண்டவாளத்தில் விரிசல்! நதிப்பாலத்தின் மேல் ரயில் போக முடியாது. திருச்சியில் கொள்ளிடம் பாலத்தைக் கடக்க முடியாது. காவிரியில் வெள்ளம் கொள்ளிடம் பாலத்தை மூழ்க அடித்துவிட்டது. ரயிலோடு பயணிகள் அனைவரும் அடித்துக் கொண்டு போகப்போகிறது. நாளைக்கு தினத்தந்தியில் வரப்போகிறது என்றெல்லாம் மக்கள் கோஷமிட்டார்கள். ஆனால் ரயில்வேக்காரர்கள் அசரவில்லை.
பின்னர் தெரிந்தது எங்களுக்கு முன்னால் பராமரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஒரு வண்டியில் ரயில்வே தொழில் நுட்ப ஊழியர்கள் அமர்ந்த வண்ணம் பாதையைப் பார்த்துக் கொண்டு ஆங்காங்கே சில இடங்களில் இறங்கியும் பார்த்துக் கொண்டு போவதாகவும், அவர்களை ஒரு திறந்த பெட்டியில் அமர வைத்து ஒரு இஞ்சின் இழுத்துச் செல்வதாகவும் அதன் பாதையிலேயே இந்த ரயில் செலுத்தப்படுவதாகவும் சொன்னார்கள். முன்னால் ஏதேனும் பிரச்னை இருந்தால் அவங்க பார்த்துட்டு இந்த ரயிலை நிறுத்திவிட்டுப் பின்னர் மேலே போகலாமா/வேண்டாமா என்பதை முடிவு செய்வார்கள். ஆகவே ரயில் மெதுவாகவே சென்றது. சுமார் மத்தியானம் 3 மணி/4 மணி அளவில் விழுப்புரத்தில் இருந்து கிளம்பிய வண்டி திருச்சியை மறுபடி வந்தடைய இரவு எட்டு மணி ஆகி விட்டது. எல்லோருக்கும் பசி. வழியில் ரயில் எங்கும் நிறுத்தப்படவில்லை. காஃபியோ, தேநீரோ எதுவும் குடிக்கவில்லை. கழிவறை கூடப் போகவில்லை.
ரயிலில் வந்த யாரோ ஒருவர் மேலதிகாரி வரை போய்க்கொடுத்த புகாரின் விளைவோ அல்லது ஒரு ரயில் கூட்டத்தையும் மேலே மேலே வந்து ஆங்காங்கே நின்று கொண்டிருந்த கூட்டத்தைச் சமாளிப்பது எப்படி என்பதனாலோ என்னமோ ரயில்வே அலுவலர்கள் மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்திருந்தனர். பயணச்சீட்டு மறுபடி வாங்க வேண்டாம் எனவும் அதே பயணச்சீட்டிலேயே பயணிக்கலாம் எனவும் சொன்னார்கள். ஆனால் முன் பதிவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. சாமர்த்தியம் உள்ளவர்கள் ரயிலில் அவங்க சொந்த சாமர்த்தியத்தில் ஏறிக்கணும். என்பதே அவர்கள் சொன்னது. என்ன ஏற்பாடு? எப்படிப் போகப் போகிறோம். இந்தப் பக்கம் "கார்ட் லைன்"எனச் சொல்லப்படும் நம் ரயில் செல்லும் பாதையும் போக முடியாது. அந்தப் பக்கம் கிழக்கே மெயின் லைன் எனச் சொல்லப்படும் பாதையும் உபயோகத்தில் இல்லை. நடைமேடையிலோ ஒரே கூட்டம். கிட்டத்தட்ட ஐந்தாறு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அன்று திருச்சி ரயில் நிலையத்தில்.
சற்று நேரத்தில் அறிவிப்புச் செய்யப்பட்டது. சென்னை/கொல்லம் விரைவு வண்டிப் பயணிகளுக்காக ஓர் ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஏன் அதே ரயிலிலேயே போகலாமே என நினைப்பவர்களுக்கு! அப்போது மெயின் லைன்'கார்ட் லைன் இரண்டுமே மீட்டர் கேஜ் தான். சின்ன ரயில் பெட்டிகளைக் கொண்ட ரயில். நாங்க மதுரையில் வந்தது மீட்டர் கேஜிலே. இப்போது விழுப்புரத்தில் இருந்து செல்ல வேண்டியது ப்ராட் கேஜிலே. மாற்றுப்பாதை எனில் முற்றிலும் மாற்றுப் பாதை. மேற்கே சென்று சேலம் வழியாகச் சென்னை செல்ல வேண்டும். ஆக மொத்தம் எங்க பெண் பிறந்த 3 மாதங்களிலேயே மீட்டர் கேஜில் சின்ன ரயிலில் எல்லாம் போக மாட்டேன்னு அடம் பிடித்து ப்ராட் கேஜ் ரயில் பாதைக்கு மாற்றிக் கொண்டாள். அதோடு இல்லாமல் காலை கிளம்பினால் மாலை போகும் தூரம் உள்ள சென்னைக்கு முதல்நாள் சனிக்கிழமை காலை கிளம்பி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை போகும்படி ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு போகும்படியும் ஆனது.
சிறிது நேரத்தில் பயணிகளுக்குப் பயணச் சீட்டில் பரிசோதகரின் கையெழுத்து வாங்கும்படியாக அறிவிக்கப்பட ஒரே கூட்டமாக ஆங்காங்கே மக்கள் பரிசோதகரிடம் பாய்ந்தார்கள். எங்கள் கூடவே மதுரையிலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவர் எங்களுக்கும் அவரே சென்று மாற்று ஏற்பாட்டுக்கானக் கையெழுத்தை வாங்கி வந்து கொடுத்தார். திருச்சியிலிருந்து கிளம்பும் அந்த ரயில் வேறு நடைமேடையில் வருவதால் சாமான்களைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். ஆகவே அப்பா ஒரு போர்ட்டரைப் பிடித்து அந்தக் குறிப்பிட்ட நடைமேடையில் ஏதேனும் ஒரு பெட்டியில் வைக்குமாறும் எங்கள் மூவருக்கும் இடம் போட்டு வைக்கும்படியும் சொன்னார். போர்ட்டர் கேட்ட தொகைக்கும் ஒத்துக்கொண்டார். அந்தப் போர்ட்டர் சுரங்கப்பாதையில் இறங்கிச் செல்லக் கூடவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு அப்பாவுடன் நானும், அம்மாவும் சென்றோம். படியெல்லாம் மக்கள் வெள்ளம். போர்ட்டர் தூக்கிச் சென்றது என்னோட சூட்கேஸ். அதில் நம்மவரின் பெயர் கே.சாம்பசிவம் எனப் பொறித்திருக்கும். ஆகவே நான் அதைக் குறி வைத்துக் கொண்டு நான் சென்றேன். என்னுடன் அம்மாவும் வந்தார். அப்பாவும் போர்ட்டரும் எங்கோ ஓர் இடத்தில் திரும்பி இருக்க எனக்கு அப்பா மட்டும் தெரிந்தார். போர்ட்டரைக் காணவில்லை.
மிகவும் கஷ்டமான பயணம் தான். அதுவும் சலிப்பு ஏற்படும் வகையில் அடுத்து என்ன நடக்கும் ஏற்பாடுகள் எப்படி சென்னை சென்றடையப் போகிறோம் என்ற பரபரப்பு மனதில் இருந்துகொண்டே இருந்திருக்கும். அதுவும் அப்போதெல்லாம் தொடர்பு கொள்ளவும் முடியாது போன் பேச ஏதேனும் பூத்தைத் தேட வேண்டியிருக்கும். இந்த மழையில் வெள்ளத்தில் லைன் தொடர்பற்று இருந்திருக்கும். பரபரப்பான தருணங்கள்.
ReplyDeleteகடைசியில் சஸ்பென்சா...போர்ட்டரைக் காணவில்லை!!!
போர்ட்டர் என்னானார் கண்டுபிடிக்க முடிந்ததா...தொடர்கிறேன்.
நானும் என் தண்ணீர் தொடர் அடுத்த பகுதி போட நினைத்தால் படங்கள், காணொளிகள் எல்லாம் சார்ட் அவுட் செய்ய வேண்டும்...அது செய்வதே நேரம் சென்றுவிடுகிறது. இன்றோ நாளையோ போட வேண்டும்...
கீதா
வாங்க தி/கீதா, கஷ்டமான பயணங்கள் பலவற்றைப் பார்த்தாச்சு. ஃபோன் பூத்திலிருந்து யாருக்குப் பண்ணுவது? அப்போல்லாம் யார் வீட்டிலும் ஏன் தெருவில் கூடத் தொலைபேசி கிடையாது. அவசரத்துக்கு எனில் என் அலுவலகம் மூலம் அவர் அலுவலக எண்ணைத் தொடர்பு கொண்டு பேசி இருக்கோம். அதுவும் அலுவலகத்தில் இருக்கையில் தான்.
Deleteசஸ்பென்ஸ் வைத்துத்தான் பதிவு எழுதணும்னு ஒரு விதி இருக்கிறதோ... பேசாமல் முற்றும் போடும் வரை காத்திருக்கவேண்டியதுதான் போலிருக்கு
ReplyDeleteநீங்க முதல்லே படிக்க ஆரம்பிங்க. இல்லைனா சஸ்பென்ஸ் வைத்துக்கொண்டே இருப்பேன்.
Deleteஎல்லாம் படிச்சேன். குடும்பத்தோடு இரயில் நிலையத்துக்குப் போனால், போர்ட்டரைத் தொடர்ந்து நான் ஓடணும். இதெல்லாம் நச்சு பிடித்த வேலை.
Deleteநாங்க எப்போவுமே ரயிலில் எங்கே ஏறிக்கணுமோ அந்த இடத்துக்குப் போர்ட்டரைச் சாமான்களைக் கொண்டு வைக்கச் சொல்லி உட்கார்ந்துப்போம். அவர் அங்கே இங்கே சுற்றினாலும் நானும், குழந்தைகளும் இடத்தை விட்டு நகர மாட்டோம். ரயில் வந்ததும் போர்ட்டர் வந்து சாமான்களை ஏற்றிவிட்டு உட்கார வைத்துவிட்டுப் போவார். ஆகவே போர்ட்டர் பின்னால் எல்லாம் ஓட வேண்டாம்.
Deleteமுடிவில் "திடுக்" போர்ட்டர் பொண்ணுசாமி என்ன ஆனார் ?
ReplyDeleteஅது பெரிய கதை கில்லர்ஜி. அதைத் தானே சொல்லப் போறேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஉண்மையிலேயே பயங்கள் நிறைந்த பயணங்கள்தாம்.நல்ல விபரமாக எழுதியுள்ளீர்கள். அந்த நேரத்தில் பயணிகள் ஒவ்வொரும் ஒரு யோசனை, கருத்து எனச் சொன்னாலும், ரயில் நகர வேண்டுமே... அதைப்பற்றி நிர்வாகத்திற்கு மட்டுந்தானே சிறப்பாக செயல்படத் தெரியும். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாம கட்டுப்படத்தான் வேண்டும்.
அப்படி திருப்பி விடப்பட்ட ரயிலில் இந்த மாதிரி அமர படுக்க சௌகரியங்கள் கிடைக்குமா? அது பயணத்திற்கு எவ்வளவு நேரங்கள் எடுத்துக் கொள்ளுமோ.. அது வரை சாப்பாடு பிரச்சனை என்ற பல சிந்தனைகள் வேறு அனைவரின் மனதிலும் ஓடியிருக்கும்.
அந்த போர்ட்டர் வேறு அப்போதுதான் பலம் வந்த மாதிரி நாம் பின்னாடியே வருவதை கவனிக்காமல் ஓடி விடுவார். (ஆனால் நாம் அவர் மேல் சுமத்தியிருக்கும் சுமைகள்தான் அவரை அவ்வாறு ஓட வைக்கும் என்பது நாம் அறியாததல்ல...இருப்பினும் அவர் மேல் ஒரு கண்ணாக நாம் பின்னாடியே ஓடுவது கடினம்.) தங்கள் தந்தையும் அவருடனே வேகமாக சென்றது ஓரு நல்லதுக்கே.. நீங்களும் தொடர்ந்து இருவரையும் பார்த்துக் கொண்டே சென்ற போதும், அந்த போர்ட்டர் கண்ணில் காணவில்லை என சஸ்பென்ஸ் கொடுத்து தொடரும் போட்டு விட்டீர்கள். தொடர்ந்து பரபரக்கும் மனதுடன் நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
ஆமாம் கமலா, ஆளாளுக்கு ஒரு யோசனை. ஒரு கருத்து. சிலரோட படுத்தலும் கூட. அதோடு இட நெருக்கடி. விழுப்புரத்திலிருந்து திருச்சிக்குத் திரும்பிச் சென்ற அந்த ரயிலில் விழுப்புரத்தில் ஒரு கூட்டமே ஏறியது.
Deleteபோர்ட்டர் கூட்டத்தில் கலந்து சென்று கொண்டிருந்திருப்பார். பிடித்திருப்பீர்கள். ஆனால் இந்த அலுப்பூட்டும் பயணம் சலிப்படைய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உணவுப் பிரச்னையும் தலை தூக்கி இருந்திருக்கும்.
ReplyDeleteபயணம் சலிப்புத் தான். உணவுப் பிரச்னை தலை தூக்கினாலும் நான் அதிகமாய் ஏதும் சாப்பிடாமல் இருந்துட்டேன்.
Deleteஒரே ஒரு பரிசோதகர் அத்தனை பயணிகளுக்கும் சீட்டில் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டுமென்றால் அவரும் பாவம், பயணிகளும் பாவம்.முத்திரை வைக்கத் தேவை இல்லையென்றால் எத்தனைபேர் தங்கள் பயணசீட்டில் அவர்களே அந்தக் கையெழுத்தைப் போட்டுக்கொண்டார்களோ...
ReplyDeleteஒருத்தர் மட்டும் மொத்த ரயிலுக்கும் இல்லை. 3, 4 நபர்கள் இருந்தார்கள். என்றாலும் அந்த நேரத்தில் மக்களுக்குத் தாங்கள் முதலிடம் பிடிச்சுடணும்னு தோன்றுவது இயல்பு தானே!
Deleteகைக் குழந்தையையும் வைத்துக் கொண்டு நிரம்பவே சிரமப்பட்டுள்ளீர்கள்.
ReplyDeleteஆமாம், மாதேவி, அதுக்கப்புறமாவும் ஆறு மாதம்/எட்டு மாதம்னு குழந்தைக்கு ஆக, ஆகப் பத்துப் பேருக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டு அரைத்துக் கரைத்துக் கொண்டு இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு கல்லுரலில் அரைப்பேன்.
Deleteபயங்கர அனுபவங்கள்... கடந்த காலத்தில் என்றாலும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றது..
ReplyDeleteமர்மக் கதை மாதிரி கடைசியில் போட்டீர்களே ஒரு பூட்டு!.. அருமை அக்கா..
ஹாஹாஹா, துரை! நமக்குக் கதை என்னமோ எழுத வராது. கற்பனை வளம் இல்லை. நிஜத்தில் நடந்தவற்றையாவது திகிலூட்டும் விதம் சொல்லிக்கலாமே! :)))))
Deleteபடிக்கவே கலக்கமாக இருக்கிறதே அம்மா.
ReplyDeleteஅதிவும் கைக்குழந்தை. அதற்கு பால் ,,
லக்கேஜ்.
மிகவும் தளர்வு தந்திருக்கும் பயணம்.
உங்கள் எல்லோருடைய பொறுமையையும்
நினைத்தாலே சிரமமாக இருக்கிறது.
வாங்க வல்லி, அந்தச் சமயம் கத்திக் கொண்டிருந்தால் வேலை ஆகாது. ஆனால் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளாமலேயே பயணத்தைத் தொடர்வோம் என முடிவெடுத்திருந்தோம். யாருமே மேலே பயணம் செய்ய ஆக்ஷேபிக்கவில்லை.
Deleteகை குழந்தையோடு என்னவொரு அவஸ்தை. சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கள், சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை.
ReplyDeleteபோட்டாச்சு பானுமதி. என்னதான் கடைசியில் எல்லாம் சுபம்னு தெரிஞ்சாலும் அது எப்படினு தெரிஞ்சுக்க ஆவலாய்த் தானே இருக்கும். போய்ப் பாருங்க. :)
Deleteகை குழந்தையோடு மிகவும் கஷ்டபட்டு விட்டீர்கள். பச்சை உடம்பு வேறு!
ReplyDeleteஅப்பா, அம்மா உடன் இருந்தது ஆறுதல்.
நாங்கள் போர்டரிடம் எப்போதும் சொல்வது ஓடாதீர்கள்! நிதானமாக போங்கள் என்று. அவர்கள் ஓட்டத்திற்கு நம்மால் ஓட முடியாது. அவரை கண்ணுக்கு எட்டியவரை காணவில்லை என்றால் பதட்டம் வந்து விடும்.
இவர் பெட்டியை எடுத்துக் கொண்டு ஓட பார்த்து இருக்கிறார் போலவே!
அப்படித்தான் தெரிந்தது. ஆனால் நாங்க பார்த்துவிட்டதாலும் கூடவே காவல்துறை நண்பர் இருந்ததாலும் வந்துவிட்டார்.
Delete