எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 05, 2021

அப்பாடா! ஒரு வழியா முடிச்சுட்டேன்!

அப்பா, அப்பா எனக் கூவினாலும் அந்தக் கூட்ட இரைச்சலில் அவர் காதுகளில் விழவில்லை. அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார். அந்தத் திசையில் தான் நாங்கள் எங்கள் பயணச்சீட்டைக் கொடுத்துக் கையெழுத்து வாங்கச் சொன்ன நண்பர் நின்றிருந்தார். சரி,அப்பா அவரிடம் தான் போகிறார் என உறுதி ஆனது. இப்போது போர்ட்டர் எந்தப் பக்கம் போனார்? ஒரே கவலை. என்னோட பட்டுப்புடைவைகள், நகைகள், குழந்தைக்குச் செய்திருந்த நகைகள், கொஞ்சமாய்ப் பணத்தைக் கைப்பையில் வைத்துக் கொண்டு மிகுதிப் பணம்னு எல்லாமும் இருந்தது. ஒரே அடையாளம் கே.சாம்பசிவம் என ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் என்பதே! எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைக்கு அவசரத்துக்குக் கொடுக்க வேண்டும் வழியில் என வாங்கி வைத்திருந்த குழந்தை உணவான க்ளாக்சோ டப்பாவும் வெந்நீர் அடங்கிய ஃப்ளாஸ்க்கும், குழந்தையின் மாற்றுத் துணிகளும் ஒரு வயர் கூடையில் வைத்திருந்ததை அந்த சூட்கேஸ் மேல் தான் அவர் வைத்துக்கொண்டு சென்றார். மற்றச் சாமான்கள் போனாலும் குழந்தை உணவு கட்டாயம் தேவை. அப்போதெல்லாம் க்ளாக்சோ அவ்வளவு எளிதில் கிடைக்காது. கடைகளில் சொல்லி வைத்து வாங்கணும். இது அனுமதித்திருந்த விலையில். இல்லைனால் கூடுதல் விலையில் கடைக்காரர்கள் ஒளித்து வைத்திருக்கும் டப்பாவைக் கெஞ்சிக் கூத்தாடிப் பெற வேண்டும். ஒரே கவலை என்ன செய்வது என! சட்டென ஒருமுடிவுக்கு வந்தவளாய்ப் போர்ட்டரைத் தேடிச் செல்லலாம் என நினைத்தேன். 

உடனே அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அப்பா இருக்குமிடம் போகச் சொல்லிட்டு நான் போர்ட்டரைப் பார்க்கப் போவதாக அப்பாவிடம் சொல்லச் சொன்னேன். அதற்குள்ளாக ஒரு காவல் துறை நண்பர் என் பதட்டத்தைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரிக்க விஷயத்தைச் சொன்னேன். அவர் அங்கீகாரம் பெற்ற போர்ட்டர் தானா எனக் கேட்டார். ஆம் என்றேன். அதோடு விளையாட்டாக எண்களைக் குறித்து மனனம் செய்யும் வழக்கம் என்னிடம் எப்போதும் இருந்ததால் அவருடைய லைசென்ஸ் எண்ணையும் சொன்னேன். அதுக்குள்ளே சுரங்கப் பாதையில் யாரோ ஒருவர் தலையில் கறுப்பு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு இறங்குவதையும், சுற்றும் முற்றும் பார்ப்பதையும் பார்த்துவிட்டேன். காவல்துறை நண்பரிடம் அங்கே கையைக் காட்டினேன். எனக்குப் பதட்டத்தில் பேச்சும் வரவில்லை. ஒரே ஓட்டம் தான். அதற்குள்ளாக நான் சைகை காட்டியதைப் புரிந்து கொண்ட   காவல்துறை நண்பர் எனக்கு முன்னால் அந்தச் சுரங்கப்பாதைக்குப் போய்விட்டார். கீழே முற்றிலும் இறங்கி விட்டிருந்த போர்ட்டரையும் பிடித்து விட்டார்.

அவர் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கையில் நானும் சென்று விட்டேன். அவர் நாங்க வெளியே தான் போகணும்னு சொன்னதாகப் பிடிவாதமாகச் சாதித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஆளும் கிடைத்துப் பெட்டியும் கிடைத்ததால் எனக்கு மேலே ஒன்றும் கேட்கவோ/பேசவோ தோன்றவில்லை. இதற்குள்ளாக அம்மா போய் விஷயத்தைச் சொல்லியதால் அங்கிருந்து அப்பாவும் ஓடோடி வந்து விட்டார். "கீதா! கீதா!" என அவர் என்னை அழைத்த குரலில் திருச்சி ஜங்க்‌ஷனே பிரமித்து நின்றிருக்கும்.  அந்தப் போர்ட்டர் சாமானைத் தூக்கிக் கொண்டு மறுபடி மேலே வர அங்கே வேறு பக்கம் என்னைத் தேடிக் கொண்டு போய்க் கொண்டிருந்த அப்பாவைக் கூப்பிட்டேன். பின்னர் காவல்துறை நண்பர் எங்களைப் பெட்டி வரை கொண்டு விட்டார். எங்களை வண்டியிலும் ஏற்றி விட்டார். சாமான்களையும் போர்ட்டர் கொண்டு கொடுத்துவிட்டார்.குழந்தையின் உணவும் கிடைத்து விட்டது. போர்ட்டருக்கும் காவல்துறை நண்பருக்கும் நன்றி சொன்னோம். சிறிது நேரம் ஆகிவிட்டது படபடப்பு அடங்கி நிதானத்துக்கு வர. ஒரே களைப்பு/பசி! ஆனால் அங்கே சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. கூட்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ரயில்வே கான்டீனில் பண்ணுவது எல்லாம் உடனுக்குடன் காலி ஆகிக் கொண்டிருந்ததாம். எங்கள் பயண நண்பர் எங்கோ போய்ப் பழங்கள் வாங்கி வந்தார். அதைச் சாப்பிட்டு விட்டுக் குழந்தையைப் பாதுகாப்பாகப் போட்டுப் படுக்க வைத்தோம். இத்தனை அமர்க்களத்திலும் அவள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். பாவம். பாதுகாப்பான கைகளில் இருக்கோம் என்னும் நிம்மதிதானே அதுக்கும் அப்போ தோன்றி இருக்கும்!

வண்டி சிறிது நேரத்தில் கிளம்பியது. மேற்கே சென்றது. நாங்கள் அசதியில் உட்கார்ந்தவாறே தூங்கி விட்டோம். நடுவில் ஒரு தரம் குழந்தை விழித்துக் கொண்டு அழுதப்போ ஈரோடோ என்னமோ ரயில் நிலையம். சரியாய் நினைவில் இல்லை. காலை விழித்ததும் சேலம் ஜங்க்‌ஷனில் வண்டி நின்று கொண்டிருந்தது. எல்லோருக்கும் காஃபி வாங்கி வந்தார் நண்பர். பின்னர் டிஃபனும் வாங்கிக் கொடுத்தார். நாங்களும் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் மன அமைதி பெற்றோம். என்றாலும் கழிவறை எல்லாம் பயன்படுத்த முடியாமல் ஒரே பிரச்னை. அப்போ ரொம்பச் சின்ன வயசு. 20 வயசுக்குள் தான் என்பதால் எப்படியோ சமாளித்தேன். அம்மாதான் பாவம் திண்டாடினார்கள். கால் வைக்க முடியாமல் கழிவறைகள். 

இங்கே அம்பத்தூரில் சனிக்கிழமை மாலையே என் அண்ணாவோடு எழும்பூருக்கு வந்திருக்கார் நம்ம ரங்க்ஸ். அண்ணா அப்போது எங்களுடன் தான் இருந்தார். ஆழ்வார்ப்பேட்டையில் அலுவலகம். அம்பத்தூரில் இருந்து போய் வந்து கொண்டிருந்தார்.  இருவரும் எழும்பூர் வந்ததுமே சுமார் 3 மணி அளவில் ரயில் நிறுத்தப்பட்ட விபரமும் திரும்பத் திருச்சி போகிறது என்னும் தகவலையும் ரயில்வேக்காரர்கள் ஒலிபரப்பு/நோட்டிஸ் போர்டில் எழுதிப் போட்டு அறிவித்திருக்கிறார்கள். என்ன தான் விசாரித்தாலும் அந்த ரயிலில் வந்தவர்கள் எவருக்கும் எதுவும் ஆகவில்லை என்பதற்கு மேல் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சுமார் ஐந்தரை வரை காத்திருந்துவிட்டுத் திரும்ப அம்பத்தூர் போயிருக்கிறார்கள். மாற்று ரயில் விடப்பட்டிருக்கிறது என்பதை இரவு ரயில் நிலையத்துக்குத் தொலைபேசிக் கேட்டதில் சொல்லி இருக்காங்க. ஆனால் அதில் நாங்க வரோமா/திரும்பி மதுரையே போயிட்டோமா எனத் தெரியவில்லை. ஒரே குழப்பம். மறுபடி காலையில் விசாரித்தபோது திருச்சியில் இருந்து மாற்று ரயில் சேலம் வழியாகச் சென்னை சென்ட்ரலுக்கு மதியம் இரண்டு மணி அளவில் வந்து சேரும் எனச் சொல்லி இருக்காங்க.

ஆகவே சாப்பிட்டோம் எனப் பெயர் பண்ணிவிட்டு இருவருமாகக் கிளம்பி சென்னை சென்ட்ரல் வந்து விட்டார்கள். அங்கே அம்பத்தூரில் அக்கம்பக்கத்தினர் எல்லோரும் போய் என்ன ஆகப் போகிறது? அவங்க வராங்களா என்பது நிச்சயம் இல்லை. கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி எல்லாம் அவதிப்பட்டு வர மாட்டாங்க. திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பேருந்து அல்லது ரயிலில் மதுரை போய்ச் சேர்ந்திருப்பாங்க என்று சொன்னார்களாம். ஆனாலும் வந்து பார்க்கலாம் என வந்திருக்காங்க. ஒரு கோடியில் அண்ணாவும், இன்னொரு கோடியில் நம்ம ரங்க்ஸும் நின்றிருக்கிறார்கள். நான் எட்டிப் பார்த்துக் கொண்டே வந்தப்போ அண்ணா மட்டும் கண்ணில் பட்டார். சரிதான், அவருக்கு என்ன ஆச்சு எனக் கவலையுடன் பார்த்தால் கொஞ்சம் தள்ளி அவரும் நின்று கொண்டிருந்தார். உடனே கையை ஆட்டினேன். நல்லவேளையாக அவரும் கவனித்துவிட்டார். பின்னர் ரயில் நின்றதும் எல்லோரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டதும் அப்பாடா என இருந்தது. கூடவே வந்த நண்பர் எங்களைப் பாதுகாப்பான கரங்களில் ஒப்படைத்த நிம்மதியோடு எங்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிச் சென்றார்.  இப்படியாக என் பெண் பிடிவாதமாகச் சென்னை சென்ட்ரலில் தான் கால் வைப்பேன் என்று சொல்லி நேரடியாக அங்கே வந்து இறங்கினாள். அங்கிருந்து ஒரு டாக்சி வைத்துக் கொண்டு (அப்போல்லாம் ரொம்பச் சீப்) எல்லோரும் அம்பத்தூர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

கதையும் முடிந்தது/கத்திரிக்காயும் காய்ச்சது. கத்திரிக்காயைப் பார்த்தே பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன! ஹிஹிஹி!

26 comments:

  1. பயணம் அப்போ ரொம்பவே சிரமமாக இருந்திருக்கும். எப்படியோ கடவுள் அருளால் சென்னை வந்து சேர்ந்துட்டீங்க.

    உங்களுக்கு இந்த விஷயத்திலெல்லாம் லக் இருக்கு (மும்பையில் ஒரு முறை உறவினரை சட் என அடையாளம் கண்டு கூப்பிட்டேன் என்று எழுதியிருந்தீங்க)

    ReplyDelete
    Replies
    1. அது அதிர்ஷ்டம் எல்லாம் இல்லை. இறை அருள். இவளைச் சோதித்தது போதும். என முடிவு செய்து கொண்டு கடவுள் தன் அருளால் நல்ல வழியைக் காட்டினார்.

      Delete
  2. அந்த நண்பர் தெய்வம் அனுப்பியவராய் இருந்திருப்பார்.  எவ்வளவு நல்லவராய் இருந்திருக்கிறார்?  போர்ட்டரின் செயலை ஜீரணிக்கவே முடியவில்லை.  அதிகாரபூர்வ போர்ட்டராய் இருந்தும் இப்படி முயற்சித்திருக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஶ்ரீராம். இப்படிப் பல அதிசயங்கள், இனி என்ன என்னும் கடைசி நிமிடங்களில் எனக்கு/எங்களுக்கு நடந்திருக்கின்றன. இறைவன் தன் இருப்பை ஒவ்வொரு நொடியும் புரிய வைத்த தருணங்கள் அவை.

      Delete
  3. பயணம் உங்களுக்கு கடினமாய் இருந்திருக்கும் என்றால், சஸ்பென்சோடு காத்திருந்த மாமாவுக்கும், அண்ணாவுக்கும் டென்ஷன் எகிறி இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதுவும் அப்போ என் அண்ணாவுக்கே 23 வயதுக்குள் தான். அழுதுட்டாராம். :)))))

      Delete
  4. வணக்கம் சகோதரி

    அப்பாடா..! எவ்வளவு கஸ்டமான பயணம்.. அந்த போர்ட்டர் வேறு ஏமாத்தலாம் என்ற எண்ணம் கொண்டு வேகமாக வேறு வழியில் போயிருப்பாரோ..? என்னவோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். எப்படியோ சாமான்கள் பத்திரமாக மீட்கப்பட்டதுடன் நீங்களும் ரயிலேறி நல்லபடியாக சென்னை வந்து அடைந்தீர்கள்.

    ஒரு வழியாக சென்னை சென்று சேர்ந்ததும், உங்களுக்கு ரொம்ப மகிழ்வாக இருந்திருக்கும்.அந்தப் பயணத்தில் உதவியாக இருந்த நண்பர் நன்றாக இருக்க வேண்டும்.சில பேர் இப்படி கேட்காமலே வந்து உதவி செய்வார்கள். உங்களைப் பார்த்ததும், உங்கள் கணவருக்கும், அண்ணாவுக்கும் மன நிம்மதி கிடைத்திருக்கும். எனக்கே போர்ட்டர் காணவில்லையென்றதும், அதில் விலையுயர்ந்த பொருட்கள் உள்ளதென நீங்கள் சொன்னதும் படிக்க படிக்க டென்ஷனாக இருந்தது. உங்களுக்கு அந்த சமயத்தில் எப்படி இருந்திருக்கும் என ஊகிக்க முடிந்தது. நல்ல வேளை கடவுள் உடனிருந்து காப்பாற்றினார். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா! உண்மையில் அந்தப் போர்ட்டர் ஏமாற்றத் தான் நினைத்திருப்பார் போல. எப்படியோ கவனிச்சுட்டோம். கஷ்ட காலத்திலும் ஒரு நல்ல காலம். இது போலப் பெட்டி காணாமல் போனது அடுத்து என் சீமந்தத்தின் போது. ஆனால் அப்போ அது அவருக்கு நடந்தது. இங்கேயும்/இந்தச் சமயமும் பெட்டி பத்திரமாய் எல்லாப் பொருட்களுடனும் கிடைத்து விட்டது. அதன் பின்னரும் ஓரிரு முறை இப்படி நடந்துள்ளது.

      Delete
  5. அன்பின் கீதாமா,

    என் ஆயுளில் இதைப் போலத் திகில் சம்பவங்கள் நிறைந்த
    பயணத்தைக் கண்டதில்லை.

    .67,68 ,69 களில் க்ளாக்ஸோ கிடைக்கவில்லைதான்.
    பிறகுதான் அமுல்ஸ்ப்ரேக்குப்
    பழகிக் கொண்டோம்.

    ஹார்லிக்ஸ் கூட சில மாதங்கள் கிடைக்காமல்
    இருந்தது.

    உங்கள் கூட வந்த நண்பர் தான் எவ்வளவு நல்லவராக
    இருந்திருக்கிறார்.
    சில விஷயங்களில் தெய்வம் மனித உருவத்தில் வருகிறது
    என்று சொல்வார்கள். அது இதுதான்.
    உங்கள் கணவரும் ,அண்ணாவும் எத்தனை சிரமப் பட்டார்களோ.
    பாவம் .அறியாமல் காத்திருப்பது எத்தனை
    கஷ்டம்.
    சௌக்கியமாக வந்து சேர்ந்தீர்களே. அதைச் சொல்லுங்கள்.
    அந்தப் போர்ட்டரை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.
    அதுவும் திருச்சி ஜங்க்ஷன் ஏறி இறங்குவது மிகச் சிரமம்.

    ReplyDelete
    Replies
    1. அதன் பின்னர் 70/75 வரை க்ளாக்ஸோவிற்கு டிமான்ட் தான் வல்லி. பின்னர் எங்க பையர் பிறந்தப்போ அவனுக்கு இருந்த வயிற்றுக்கோளாறால் லாக்டோ ஜென்/லாக்டோ டெக்ஸ் ஆகியவை தான் பரிந்துரைத்தார்கள். ஆனால் அவனுக்குப் பசும்பால் ஒண்ணு மட்டுமே ஒத்துக்கொள்ளும். மதியம் பனிரண்டில் இருந்து வரும் இடைப்பட்ட நேரம் தான் சமாளிக்கக் கஷ்டமாக இருக்கும். என்னதான் லாக்டோஜென் கொடுத்தாலும் அவனுக்குப் பிடிக்காது.
      ஆமாம், என் கணவருக்கும் என் அண்ணாவுக்கும் இரவு முழுவதும் தூக்கமே வரவில்லையாம். எந்த ஒரு தகவலும் கிடைக்கலையே! நரக வேதனை தான்.

      Delete
  6. இறைவன் அனுப்பியது போல நல்ல காவல்துறை நண்பர் கிடைத்தார்.
    போர்டரை பிடித்து பொருட்கள் மீண்டது மகிழ்ச்சி., குழந்தைக்கு பால பவுடர் அதில் இருக்கே!

    நல்லபடியாக அம்பத்தூர் வந்து சேர்ந்தீர்கள்.
    கூடவே பந்த நண்பரை பாராட்டி வாழ்த்த வேண்டும். காப்பி, டிபன் எல்லாம் வாங்கி கொடுத்து நல்லபடியாக் உதவியாக இருந்து பார்த்து கொண்டாரே!

    சாரும், அவர் அண்ணாவுக்கும் நிம்மதி பெருமூச்சு வந்து இருக்கும் உங்களை எல்லாம் நல்லபடியாக பார்த்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, நல்லபடியாக அம்பத்தூர் போய்ச் சேர்ந்தோம். என் அண்ணா தான் எங்களுடன் இருந்தார். அவருக்கு அண்ணா இல்லை. அவர் தான் எல்லோரிலும் மூத்தவர். கூட வந்த நண்பரின் உதவியைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. அதே போல் அந்தக் காவல்துறை நண்பரும்.

      Delete
  7. இப்படிப்பட்ட எதிர்பாராத சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கையில் அதற்கென்றே அவதாரம் எடுத்த மாதிரி மனித ரூபத்தில் தெய்வம் உதவுவது போல சில எதிர்பாராத, மறக்க முடியாத உதவிகளும் கிடைக்கும். உதவிய நண்பர் கூட நம்மை மறந்து போயிருப்பார். நமக்கோ, பல வருடங்கள் மறைந்து சென்றாலும் அவரை நினைவு வைத்திருப்போம். இன்னமும் நெஞ்சம் அவருக்கு நன்றி கூறிக்கொண்டிருக்கும்! நீங்களும் எத்தனையோ வருடங்கள் ஆனாலும் இன்னமும் அவருக்கு நன்றி கூறிக்கொண்டிருக்கிறீர்கள்!
    நானும் இது போல இன்னமும் சிலருக்கு மனதில் நன்றி சொல்லி கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ! உண்மையில் அவங்க எல்லோருமே மனித உருவில் வந்த தெய்வங்களே! அவங்கல்லாம் நினைவில் வைச்சிருப்பதும் கஷ்டம் தான்! என் வாழ்வில் இது போல் சில மனிதர்களின் உதவி என்றென்றும் மறக்க முடியாதது.

      Delete
  8. பழைய சம்பவங்களை நேற்று நிகழ்ந்தது போல் சொல்வதுதான் தங்களது சிறப்பு.

    இன்று உதவுவார்கள் யாரும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அப்படிச் சொல்ல முடியலை கில்லர்ஜி. சமீபத்திய சென்னைப் பயணத்தில் ட்ராப் டாக்சியின் டிரைவரில் இருந்து ஆட்டோ ஓட்டுநரில் இருந்து தங்கின ஓட்டலின் கார் ஓட்டுநர், அங்குள்ள ஊழியர்கள் என அனைவருமே மிகவும் உதவினார்கள். கல்யாணச் சத்திரத்தில் கேட்கவே வேண்டாம்.நான் படிகள் சிரமப்பட்டு ஏறிவருவதைப் பார்த்து விட்டுப் பலரும் சொல்லி வைத்தாற்போல் ஓடோடியும் உதவிக்கு வந்தனர்.

      Delete
  9. ஆஹா... அட்வென்ச்சர் ட்ரிப் தான் போலவே மாமி. ஒருவழியாய் எல்லாம் சுபம் என்றதில் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏடிஎம். இப்போல்லாம் என்னை மறந்துட்டீங்க போலனு நினைச்சேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரையில் சமீபத்திய பத்து வருடங்களைத் தவிர்த்தால் அதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் சாகசங்கள் நிறைந்தவையே!

      Delete
  10. அம்மா! பயங்கர திகில். உங்களுக்கு அந்த போர்டின் எண் நினைவில் இருந்ததும், சரியான நேரத்தில் காவலர் உதவிக்கு வந்ததும் இறையருள் தான். அதே இறையருள் தான் உதவியாக ஒரு நண்பரையும் அனுப்பியிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி. திகிலின் சுவாரசியம் உங்களைச் சீக்கிரமே இங்கே இழுத்து வந்துவிட்டது. எல்லாமே இறை அருள் தான். அவனின்றி நாம் இல்லை.

      Delete
  11. நண்பரின் உதவியால் தப்பித்தீர்கள். இறைவன் காத்தருளினார்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் உருவில் வந்த கடவுள் மாதேவி!

      Delete
  12. ஓ கீதாக்கா மீ ரொம்ப லேட்!! எப்படியொ மிஸ் ஆகிவிட்டது பதிவு.

    ரொம்பவே சிரமப்பட்டிருக்கீங்க குறிப்பாகப் போர்ட்டர். என்னம்மாக டபாய்க்கப் பார்த்திருக்கிறார்! ஆனால் அந்த் நேரத்தில் நல்லகாலம் காவலர் நண்பர் உதவியிருப்பது தெய்வாதீனம்தான். அதே போன்று பயணத்தில் நல்ல உள்ளம் கொண்ட நண்பர். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் அந்த நேரத்தில் உதவி கிடைத்திட இறையருள் உதவியிருக்கிறது!

    உங்கள் எல்லோரையும் விட மாமாவும் உங்கள் அண்ணாவும் ரொம்பத் தவித்திருப்பார்கள். என்ன ஏது என்று அறிந்திட முடியாமல். எப்படியோ ஒருவழியாகச் சென்னை வந்து சேர்ந்துவிட்டீர்கள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்ன? இப்போதெல்லாம் எனக்குக் கணினியில் உட்காரும் நேரம் மிகக் குறைந்து வருகிறது. ஆகவே நானும் பதில்களைத் தாமதமாகவே கொடுக்க நேர்கிறது. மனது என்னவோ அடிச்சுக்கும்/பதிவு பார்க்கணும்/எழுதணும்/ எழுதினவற்றில் மின் புத்தகம் போடத் தேவையானதைத் தொகுக்கணும்/இப்படிப் படுக்கக் கூடாது என்றெல்லாம் ஒரு மனது அதட்டுகிறது. ஆனால் சோம்பேறி மனமே ஜெயிக்கிறது. அதிலும் படுத்தால் எழுந்திருக்காதே எனச் சொல்கிறது. அவ்வளவு களைப்பாகவும் இருக்கு!

      Delete
  13. உங்களின் அந்தக் காலப் பயண அனுபவங்களைப் பார்க்கும் போது இப்போதெல்லாம் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் கை விரல் நுனியில் எல்லாத் தகவல்களும், பல வகை வசதிகளும் கூடவே ரொம்பவே லக்சூரியஸ் பயணம் என்றே சொல்லலாம்.

    காவலர், பயணத்தில் சகபயணி நல்ல நண்பர் வடிவில் இறைவன் உங்களுடன் அப்படியான இக்கட்டான தருணங்களில் இருந்திருப்பது மகிழ்வான விஷயம். பாதுகாப்பாக சென்று சேர்ந்திருக்கிறீர்கள்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், இப்போல்லாம் எல்லாத் தகவல்கள், வசதிகள்னு இருந்தாலும் அதிலும் எங்களுக்குப் பிரச்னை வருமே! ஹாஹாஹா! கனெக்டிங் ஃப்ளைட் இல்லாமல் கஷ்டப்படுவோம். இரண்டு/மூன்று டெர்மினல்கள் மாறிப் போய் கனெக்டிங் ஃப்ளைட்டைப் பிடிக்கும்படி இருக்கும். அதிலும் ஃப்ராங்பர்ட்டில் எனில் ஆங்கிலமே பேச மாட்டாங்க. அதிலும் இப்போப் போன வருஷம் 2020 ஃபெப்ரவரியில் அம்பேரிக்காவில் இருந்து திரும்புகையில் செக்யூரிடி செக்கிங்கில் மாட்டிக்கொண்டு நான் பட்ட அவஸ்தை! வெளியில் தைரியமாய்க் காட்டிக் கொண்டாலும் உள்ளூரக் கவலை! நம்மை எங்கே கொண்டு போவாங்களோ, நம்மைக் கொண்டு போயிட்டால் கணவர், மருமகள்/குழந்தை ஆகியோர் ஊருக்குப் போக முடியுமா? மாப்பிள்ளையும், பையரும் வெளியில் காத்திருந்தாங்களே! அவங்களுக்கு இதெல்லாம் தெரியுமா என்றெல்லாம் தோன்றிக் கொண்டிருந்தது. அவங்க சோதனைக்கு நான் முழு அளவில் ஒத்துக்கொண்டு ஒத்துழைப்புக் கொடுத்ததாலும் கடைசியில் சோதித்த பெண் அதிகாரிக்கு என் மேல் அளவு கடந்த நம்பிக்கை ஏற்பட்டதாலும் வெளியே வந்தேன். இத்தனைக்கும் காரணம் நான் கட்டி இருந்த உலோக ஜரிகைப் புடைவை. எனக்கு அப்போதே அது புரிந்தாலும் அதைப் பற்றி அவங்களிடம் சொல்ல முடியவில்லை. பதிலுக்குப் பதில் பேசக் கூடாது என உள்ளுணர்வு எச்சரிக்கை.

      Delete