கல்யாணத்திற்குச் சென்ற கலாட்டாவைப் பற்றி எழுதும்போது ஶ்ரீராம் கேட்டிருந்த இருவிஷயங்களை எழுத மறந்துட்டேன். அதில் ஒன்று ட்ராப் டாக்சியின் வாடகைக் கட்டணம். ஒரு வழிக்கு 4500 ரூபாய் ஆகிறது. விமானத்தை விட மலிவு. ரயில் முதல் வகுப்பை விடக் கொஞ்சம் அதிகம். சாதாரணமாக வாடகைக் கார் எடுத்துப் போனால் இரு வழிக்கட்டணமாக ஒன்பதாயிரம் ரூபாய் ஆகும். ஆகவே இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
இன்னொன்று நாங்க தங்கின சர்வீஸ் அபார்ட்மென்டின் வாடகை. இதுவும் மிகக் குறைவு தான். அதோடு அரசாங்கம் நடத்துவது. எப்போதும் நடுத்தரமக்களின் வரவு செலவுத் திட்டத்தில் அடங்கும்படியே இருக்கும். இந்த செர்வீஸ் அபார்ட்மென்ட் வாடகையும் ஒரு நாளைக்கு 200 ரூபாய் தான். ஆனால் 3 அறைகள் கொண்ட அதில் இன்னும் நான்கு பேராவது தாராளமாகத் தங்கலாம். இதே போல் தான் கொடைக்கானலில் தமிழ்நாடு ஓட்டலில் வசதிகள் அதிகம்/வாடகை குறைவு/பராமரிப்பு மோசம். உணவு பரவாயில்லை ரகம். எல்லா ஓட்டல்களையும் போல இங்கேயும் தங்குபவர்களுக்குக் காலை உணவு இலவசம். அறையிலேயே காஃபி, தேநீர், பூஸ்ட் போன்றவை போட்டுக்கும் வசதிகள் மற்ற ஓட்டல்களைப் போல் இங்கும் உண்டு. குளியலறையில் 24 மணி நேரமும் வெந்நீர் வந்தது. நாங்க போயிருந்தது முதல் முறை டிசம்பர் என்பதால் வெந்நீர் அப்போது மிகவும் தேவைப்பட்டது. சிவப்புக் கம்பளம் விரித்திருந்தாலும் அவை பராமரிப்பு மோசமாக இருந்தது. அறைக்கு ரூம் செர்வீஸ் உண்டு. ஆனால் உணவு ரூம் சர்வீஸில் தரமாக இல்லை. எங்களுக்கு முதல்நாள் இரவு உணவு எடுத்து வந்தவர் அதைப் பார்த்துட்டு எப்படிச் சாப்பிடப் போறீங்க? இவ்வளவு மோசமா இருக்கேனு கேட்டார். தோசை ஒரே கருகல். ஆனால் மறுநாள் காலை உணவில் தோசை, இட்லி, பூரி, பொங்கல், வடை எல்லாமே நன்றாக இருந்தது.
ஆனால் அதே கொடைக்கானலுக்கு மறுமுறை போனப்போ நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் நம்ம ரங்க்ஸ் தனியார் ஓட்டல் ஒன்றை யாரோ நண்பர் சொன்னார்னு தேடிக்கொண்டு போகச் சொன்னார் ஓட்டுநரை. அங்கே போனால் ஓட்டலுக்குப் போகவே மலை ஏறி இறங்க வேண்டி இருந்தது. நல்லவேளையாக அன்னிக்குப் பிள்ளையார் சதுர்த்தி என்பதால் இட்லி, கொழுக்கட்டை, வடை, அப்பம் எல்லாம் கையில் கொண்டு போய்விட்டேன். இல்லாட்டி அந்த மலையில் ஏறி இறங்கிச் சாப்பிட ஓட்டலைத் தேடிப் போகக் கஷ்டமாக இருந்திருக்கும். சற்றே தூரத்தில் தான் தமிழ்நாடு ஓட்டல். அங்கே போகலாம் என எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. நாங்க போனதுமே கொடைக்கானலில் அந்தப் பகுதியில் மின்சாரம் போய்விட்டது. தமிழ்நாடு ஓட்டலில் ஜெனரேட்டர் போட்டுவிட்டார்கள். ஆகவே அங்கு மட்டும் மின்சாரம் இருந்தது. இங்கே மறுநாள் காலை குளிக்க வெந்நீர் கிடைக்கவே இல்லை. சோலார் பவரில் ஓடும் கீசர் ஆகவே வெந்நீர் மெதுவாக வரும் என்று சொன்னார்கள். அந்த கீசர் குழாயைத் திறந்தால் வெந்நீராவது ஒண்ணாவது! அந்த நடுக்கும் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளித்தோம். பச்சைப் பொய்! வாடகையும் 2000 ரூபாயோ என்னமோ!
**********************************************************************************
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைப் பயிற்றுமொழி ஆக்கணும்னு வழக்குத் தொடர்ந்திருந்தாங்க. அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்பட்டதன் காரணமே மத்திய அரசில் பணி புரியும் அடிக்கடி மாற்றல் ஆகும் நபர்களின் குழந்தைகள் இந்தியாவில் எங்கே சென்றாலும் எந்த மாதம் சென்றாலும் பள்ளியில் உடனே சேர்ந்து படிக்க முடிய வேண்டும் என்பதற்காகவே. எங்கள் குழந்தைகளை நாங்கள் எங்களுக்கு மாற்றல் வந்த செப்டெம்பர், ஜனவரி, போன்ற மாதங்களில் கூடச் சேர்த்திருக்கோம். இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம், ஒரே மாதிரியான பள்ளி திறப்பு, பள்ளி விடுமுறைகள் என்பதாலும் பள்ளிப் பாடங்கள் நடத்துவதும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றுவதாலும் ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு மாறும்போது குழந்தைகளுக்குப் பாடம் விட்டுப் போய்விடும் என்னும் அச்சம் இருக்காது. ஒரு வாரம் கழித்து வந்தாலும் வந்து உடனடியாகப் பாடங்களைப் புரிந்து கொண்டு விடலாம். பரிக்ஷைகள் நடப்பதும் அப்படியே!
முன்னெல்லாம் விடுமுறைகள் அறிவிப்பும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் சொல்லும்/அறிவிக்கும் நாட்கள் தான். உள்ளூர் விடுமுறை அன்று கேந்திரிய வித்யாலயா செயல்படும். மாணவ, மாணவியர் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அது வேண்டுமானால் இப்போது மாறி இருக்குமோ என்னமோ! மாதத்தின் கடைசி நாள் அது என்ன கிழமையாக இருந்தாலும் அரைநாள் பள்ளி. அது திங்களோ, செவ்வாயோ, அல்லது வேறு எந்தக்கிழமையானாலும்! இப்படிப் பட்ட பள்ளிகளில் நமக்குத் தமிழ்ப் பற்று இருப்பதைக் காட்டத் தமிழ் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும் என்றால் எப்படி? ஏற்கெனவே தமிழகத்தில் இருக்கும் சிபிஎஸ் ஈ பள்ளிகளில் தமிழ் எட்டாவது வகுப்பு வரை சொல்லிக் கொடுக்கப்படுகிறதே! அதிலேயே பல மாணவர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை. தமிழ்வழிப் பள்ளிகளோ/அல்லது அரசு சொல்லிக் கொடுக்கும் தமிழ்ப் பாடங்களோ தரமானதாகவே இல்லை. அவங்களுக்குச் சங்கப்பாடல்களோ, பக்தி இலக்கியங்களோ கற்பிக்கப் படுவதில்லை. மதச் சார்பு எனச் சொல்லிக் கொண்டு கம்பராமாயணம்/வில்லி பாரதம் போன்றவை கூடப் பாடத்திட்டத்தில் இல்லை. நீதிபோதனைகள், நாலடியார், திரிகடுகம், ஏலாதி, ஆத்திச்சூடி, போன்றவற்றின் பெயர்களைக் கூடக் கேட்டிருப்பாங்களோ என்னமோ! உண்மையான தமிழறிஞர்கள் பலரையும் இந்தத் தமிழ்ப் புத்தகங்கள் கற்பிப்பதில்லை. ஆகவே இப்போதுள்ளவர்களுக்குத் தமிழ் பேசவோ/எழுதவோ வருவதில்லை.
தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள்/ செய்திகளில் கீழே ஓடிக்கொண்டிருக்கும்ஃப்ளாஷ் நியூஸ் எனப்படும் அவசரச் செய்திகள் ஆகியவற்றில் தமிழில் எழுத்துப் பிழையையும், பொருட்பிழையையுமே அதிகம் பார்க்கலாம். செய்திகள் வாசிப்பவர்கள் கேட்கவே வேண்டாம். முக்கியமான செய்திக்களங்களில் சென்று செய்தி சேகரித்து அதைத் தொலைக்காட்சிக்குச் சொல்ல வேண்டிய நபர்கள் பேசுவது காதால் கேட்கக் கர்ண கடூரமாக உள்ளது. "இப்போ வந்து" பார்த்தீங்கன்னா" என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கின்றனர். முதலமைச்சர் திரு ஸ்டாலின் என்று சொல்லலாம். அல்லது முதலமைச்சராக இருக்கும் திரு ஸ்டாலின் எனலாம். ஆனால் இவர்கள் சொல்வது, "முதலமைச்சராக இருக்கக் கூடிய" திரு ஸ்டாலின் என்கின்றனர். இது என்ன தமிழ்? ஒருவேளை அவர் இருக்கலாமோ என்னும் சந்தேகத்தை அல்லவோ இது காட்டுகிறது. "நீடூழி வாழ்க" என்றே நாம் கேள்விப் பட்டிருக்கோம். ஆனால் இவங்களுக்கு "நீடுடி வாழ்க" வாம். மக்கள் எல்லோருமே ஆண்டவனைப் போற்றி வாழ்த்திப் பாடுகிறோம். அனைவருக்கும் தெரியும். ஆனால் இவங்க மனிதர்களுக்கு/அதாவது அவங்க தலைவர்களான மனிதர்களை வாழ்த்த மாட்டாங்களாம். வயதில்லையாம். வணங்கிப்பாங்களாம். எல்லாம் வல்ல இறைவனையே வாழ்த்தி வணங்கும்போது மனிதனை வாழ்த்தி வணங்குவதில் என்ன தப்பு?
இன்னும் இருக்கு. எழுதிண்டே போகலாம் போல. ஆனால் இதுவே கொஞ்சம் பெரிசாப் போயிடுத்தோனு தோணுவதாலே இன்னிக்கு இது போதும்.
குன்னூரில் விமான விபத்தில் இறந்த முப்படைத் தளபதிக்கும் அவருடன் கூடப்பயணம் செய்த ராணுவ வீரர்களுக்கும் முப்படைத் தளபதியின் மனைவிக்கும் நம் அஞ்சலிகள். அன்னாரின் குடும்பங்களுக்கு நம் ஆறுதல்களும்/தேறுதல்களும். நம்மையும் நம் நாட்டையும் இரவு, பகல் தூக்கமின்றிப் பாதுகாத்துவரும் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி, வணக்கம்.'
ஜெய்ஹிந்த்!
Drop Taxi Rate அதிகமில்லை. நினைத்த இடத்தில் இறங்கிக்கொள்ளலாம், வீட்டுவரை வந்துவிடும்.
ReplyDeleteஇப்போது தமிழாசிரியர்களின் தரம் அதலபாதாளத்துக்குப் போய்விட்டதா இல்லை மாணவர்களுக்கு இதிலெல்லாம் ஆர்வம் இல்லையா?
வாங்க நெல்லை. நாம் இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்பதிவு செய்துவிட்டால் வீட்டுக்கு வந்தே அழைத்துச் செல்கின்றனர். மற்ற ட்ராவல்ஸ் வண்டிகள் போலத் தான். தமிழாசிரியர்களின் தரமே கேள்விக்குரியது தான். ஏனெனில் இப்போது இருப்பவர்களில் பெரும்பாலோர் கடந்த ஐம்பது வருஷங்களில் படித்துத் தேர்ந்தவர்கள் தாமே!
Deleteகொடைக்கானல் பழனி மலைத் தொடரில் ஒரு நகரம். அதை பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.
ReplyDeleteநன்றி சதீஷ் முத்து கோபால். நான் மதுரைக்காரி. ஓரளவுக்கு இந்த விபரங்கள் அறிவேன். எனினும் நீங்கள் எழுதி இருப்பதையும் வந்து பார்த்துப் படிக்கிறேன். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteசென்று வந்த செலவு தினம் என்றெல்லாம் சொல்ல முடியாது. வசதிதான் முக்கியம். நடந்து, பஸ் பிடித்து, நடந்து, ட்ரெயின் பிடித்து, நடந்து அறை புக் செய்து.. அது ஒரு காலம். எவ்வளவோ வீண் செலவு செய்கிறோம். நம் வசதிக்கு செலவு செய்து கொள்வதில் தவறில்லை.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், முக்கியமாய் இப்போதுள்ள உடல்நிலையில் எனக்கு ரயிலில் ஏறி இறங்குவது என்பது பெரும் பிரயத்தனம். அதன் பின்னரும் மாம்பலத்தில் இறங்கினால் படிகள் ஏறி, இறங்கி மறுபக்கம் போய் ஆட்டோ பிடிக்கணும். :) எல்லாமே இப்போது மலைப்பாக ஆகிவிட்டன.
Deleteதங்குமிட வசதிகளும் அப்படியே. ஆனால் தங்குமிடம் தருபவர்கள் நமக்கான வசதியில் குறை வைப்பவர்களாக இருக்கக் கூடாது. இதே சோலார் வாட்டர் ஹீட்டர் பிரச்னை எங்களுக்கும் வந்தது. அடுத்த பகுதியில் வரும்!
ReplyDeleteஆமாம், சோலார் பவர் பற்றிப் பலரும் நன்றாகவே சொன்னாலும் குளிக்க வெந்நீர் என வரும்போது ஏமாற்றமே வருகிறது. கொடைக்கானலில் நாங்க தங்கி இருந்த ஓட்டலில் காஃபி வசதி கூடக் கிடையாது. ஓட்டுநர் ஃப்ளாஸ்க் வாங்கிப் போய் ஏதோத் தேநீர்க்கடையில் அவரும் குடித்துவிட்டு எங்களுக்கும் வாங்கி வந்தார்.
Deleteகேந்திரியா வித்யாலயாவில் அதிகாரம் செலுத்த விரும்பும் தமிழ் பெரிஐவர்கள்! என்ன சொல்ல? இவர்கள் நடத்தும் பள்ளியிலேயே என்ன லட்சணத்தில் வைத்துள்ளனர் என்பது நமக்கும் தெரியும்.
ReplyDeleteகுன்னூர் விபத்தில் நமக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.
ஆமாம், தமிழ்நாட்டில் இருப்பதால் கேந்திரிய வித்யாலயாக்கள்/அதன் நடைமுறைகள் தங்களுக்கு அடங்கி இருக்கணும் என எதிர்பார்க்கின்றனர். என்னத்தைச் சொல்லுவது!
Deleteகுன்னூர் விபத்து மாபெரும் இழப்பு.
ட்ராப் டாக்சி ரேட் பரவாயில்லையே.
ReplyDeleteதங்குமிட வசதிகள் தான் பார்த்து செய்ய வேண்டும். சோலார் வாட்டட் ஹீட்டர் பல இடங்களிலும் படுத்தல்தான் பராமரிப்பு சரியில்லாததால். இன்ஸ்டால் செய்துவிட்டு ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்ப்பதில்லை பல இடங்களில்.
கீதா
இன்னமும் சோலார் பவர் பற்றிய பொது அறிவு நமக்கெல்லாம் குறைவோ எனத் தோன்றுகிறது. நாங்க சோலார் பவர் இணைப்புக் கொடுக்காததால் அது குறித்து முழுமையாகவும் தெரியவில்லை. எங்கள் வளாகத்தில் ஒரு சில குடியிருப்பில் சோலார் பவரும் இணைத்திருக்கின்றனர்.
Deleteசெய்தி வாசித்தபோது மனம் மிகவும் வருந்தியது. என்னதான் அவர்கள் ராணுவத்தில் பல ஆபத்துகளைச் சந்தித்திருந்தாலும். குன்னூரில் விமான விபத்தில் இறந்த முப்படைத் தளபதிக்கும் அவருடன் பயணித்த மற்ற ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலிகள். நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் நன்றியையும் வணக்கங்களையும் தெரிவிப்போம்.
ReplyDeleteகீதா
நம் நாட்டை இரவும், பகலும் கண் விழித்துக் காப்பாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு நம் நன்றியும் வணக்கமும்.
Delete@கீதாக்கா
ReplyDeleteதிருச்சியில் ECHS இருக்கிறதா? மருத்துவ செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
Jayakumar
மிக்க நன்றி. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துக்கடைகளில் விலை மிகவும் குறைவு. அதோடு சில மருந்துக்கடைகளில் 50% கழிவும் கொடுக்கின்றனர்.
Deleteஅடுத்தடுத்த தலைமுறைகள் தமிழில் பேசுவதை நிறுத்தி விடுவார்கள் என்பது நிச்சயம்.
ReplyDeleteஇராணுவ வீரர்களுக்கு எமது அஞ்சலிகள்.
ஆமாம், கில்லர்ஜி, இப்போவே தமிழ் பேசுவது குறைந்து கொண்டு வருகிறது.பேசினாலும் தப்புத் தப்பாகத் தமிழ்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? தங்களுக்கு மறுபடி உடம்பு சரியில்லை என்பதை இப்போதுதான் எ.பி கருத்துரைகளில் படித்து அறிந்து கொண்டேன். இரண்டு நாட்களுக்கு முன்பு நின்று கொண்டே வேலைகளை செய்ய வேண்டியதாக போச்சு... அதனால் இடுப்பு வலி என ஒரு கருத்துரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனால் கால் வலிகள் மறுபடி வந்து விட்டனவா? அப்படி நீண்ட நேரம் நின்று கொண்டே வேலைகளை செய்யாதீர்கள். இப்போதுதான் எவ்வளவு கஸடப்பட்டு எழுந்து வந்திருக்கிறீர்கள். உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
பதிவு அருமையாக உள்ளது. சென்னை பயணத்திற்கு வரப்போக டாக்ஸி பயணச் செலவு. தங்குமிடம் பற்றிய வசதிகள் என அறிந்து கொண்டேன்.
தமிழில் பேச ஒருவருக்கும் பிடிக்கவில்லை. எல்லோருமே வெளிநாட்டிலிந்து வந்தவர்கள் போல காட்டிக் கொள்ளத்தான் பிரியபடுகிறார்கள். அதனால்தான் மாணவர்களுக்கு கற்க பிடிக்கவில்லை போலும்.சொல்லித்தரும் ஆசிரியர்களும் ஆர்வம் காட்டவில்லையெனில், மாணவர்களையும் குறை சொல்ல முடியாது. சேனல்களில் பிழையுடன் கூடிய தமிழை நானும் பார்த்துள்ளேன்.
குன்னூர் செய்தி மிகவும் வருத்தத்தை தரக்கூடியது. நானும் செய்திகளில் பார்த்தேன். விபத்துக்கள் எதிர்பாராது நடக்கும் போது மனம் கலங்கி விடுகிறது. விபத்தில் உயிர் நீத்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. இப்போப் பரவாயில்லை. சில சமயங்களில் நின்று கொண்டே செய்வது தவிர்க்க முடியவில்லை. தோசை எல்லாம் வார்த்தால் உட்கார்ந்து விடுவேன். சப்பாத்தி பண்ணினால் அப்படி உட்கார முடியாது என்பதால் அதிகம் சப்பாத்தி பண்ணுவதில்லை. என்றாலும் சில வேலைகளை நின்ற வண்ணம் தான் செய்ய வேண்டி இருக்கு.
Deleteஇப்போதுள்ள தமிழ் சானல்களில் பேசுபவை தமிழே அல்ல.
ராணுவ வீரர்களுக்கு நம் அஞ்சலியும் வணக்கமும்.
இந்த வலி குறைக்கும் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகள் வயிற்றைத் தொந்திரவு செய்கின்றன. ரொம்ப வலிக்கும்போது எடுத்துக்காமல் முடிவதில்லை. ஆனால் பின்னால் நான்கைந்து நாட்கள் வயிறு தொந்திரவால் பாதிப்பு ஏற்படுகிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் இதற்கென இருக்கும் ஆயுர்வேத மருந்தையே தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன்.
Deleteஅன்பின் கீதாமா,
ReplyDeleteநலமுடன் இருங்கள்.
உங்களுக்கு சையாட்டிகா என்று எபியில் ஸ்ரீராம்
சொல்லி இருந்தார்.
சீக்கிரம் குணமாக வேண்டும். ஒன்று மாற்றி ஒன்று
உடம்பு படுத்திக் கொண்டு இருக்கிறது.
திருச்சியிலிருந்து சென்னை செல்ல
கொடுத்திருக்கும் பணம் சரியாகத்தான் இருக்கிறது.
நேரே போய் சேர்ந்து விடலாம்.
நமக்கு வேண்டும் போது நிறுத்திக் கொண்டு
கழிப்பறை வசதிகளை உபயோகித்துக்
கொள்ளலாம்.
வாங்க வல்லி. ஏதோ ஒரு வலி உடம்பில்! இந்த மட்டும் நடக்க முடிகிறதே என சந்தோஷப்பட்டுக்கணும். வேறு வழியில்லை.
Deleteஆமாம். சென்னை/திருச்சி நெடுஞ்சாலைப் போக்குவரத்து இப்போதெல்லாம் கடினமாக இல்லை. அதிலும் டோல்கேட்டுகளில் நல்ல கழிவறை வசதி இருக்கிறது. ஆனால் படிகள் ஏறணும்! :( ஆகவே நான் ஏதேனும் பெட்ரோல் பங்க் பார்த்து நிறுத்தச் சொல்லுவேன். இந்தியன் ஆயில், ஷெல் ஃப்ரான்சைஸ் பெட்ரோல் பங்குகளில் சுத்தமாகப் பராமரிப்பார்கள். சாப்பாடு எப்போவும் போல் கையில் எடுத்துப் போயிடுவோம் காஃபி உட்பட! ஆகவே அநாவசியமாக நிறுத்துவதில்லை. ஓட்டுநருக்குப் பணம் கொடுத்துடுவோம்.
அங்கே சமையல் செய்ய உதவி கிடைக்கவில்லை.
ReplyDeleteசாப்பாடு கொடுப்பவர்களாவது நல்ல உணவு கொடுத்தால்
நன்மை. நிலைமை சரியாகட்டும்.
வல்லி, சமையல் செய்ய உதவி கிடைத்தாலும் அவங்க எல்லாம் காலை ஒரு வேளையிலேயே இரவு உணவும் சேர்த்துத் தயார் பண்ணிட்டுப் போயிடுவோம் என்கிறார்கள். சம்பளமும் எட்டாயிரம், பத்தாயிரம் ஆகிறது. அவங்க சமைச்சுட்டுப் போனதும் சமையலறையைச் சுத்தம் செய்வதற்குள்ளாகப் போதும்/போதும்னு ஆகி விடும். காடரர்கள் எல்லாம் காரம் அதிகம் போட்டுவிடுகின்றனர். எங்க பழைய காடரர் மறுபடி இப்போத் தான் கொடுக்க ஆரம்பித்திருக்கார். அவசரத்துக்கு அவரிடம் வாங்கிக்கறோம்.
Deleteதமிழ் பிழைகள்தான் அதிகம்.வரும் தலைமுறைகள் ??
Deleteநலமாக இருங்கள்.
தமிழே பேசத் தெரியாத தலைமுறைனு சொல்லலாம் மாதேவி. நன்றி.
Delete