வாசலில் போட்ட கோலம். காலையில் வேலை மும்முரத்தில் படம் எடுக்க நினைவில் இல்லை. மாலை எடுத்தேன். அதைப் போடவும் மறந்துட்டேன்.
பச்சை மஞ்சள் தொக்கு
நாங்க முதல் முதல் அம்பேரிக்கா போயிருந்தப்போப் பையர் பச்சை மஞ்சள் ஊறுகாய் வாங்கி வைச்சிருந்தார், அங்கே கிடைத்த ஆலு (உ.கி.) பராத்தாவோட சாப்பிட நன்றாக இருந்தது. ஒரு மாதிரியா எப்படிப் போட்டிருப்பாங்கனு புரிஞ்சு இங்கே வந்ததும் அநேகமா ஒவ்வொரு வருஷமும் சங்கராந்திக்கு வாங்கும் மஞ்சள் கிழங்கில் போட்டுப் பார்ப்பேன். உடனடியாகச் செலவும் செய்துடுவேன். இப்போத் தான் சமீபத்தில் இந்த மஞ்சள் தொக்கு பற்றித் தெரிய வந்தது. இதுக்குத் தேவையான பொருட்கள்
பச்சை மஞ்சள் கால் கிலோ /தோல் சீவிக்கொண்டு துருவிக் கொள்ளவும்.
நல்லெண்ணெய் கால் கிலோ
மிளகாய்ப் பொடி ஒரு மேஜைக்கரண்டி
உப்பு தேவைக்கு
பெருங்காயப் பொடி ஒரு தேக்கரண்டி
கடுகு தாளிக்க இரண்டு தேக்கரண்டி
வறுத்துப் பொடிக்க
மி.வத்தல் சுமார் 25 (காரம் அதிகம் உள்ள மிளகாய் எனில் 10,15 போதும்.) நான் காரப்பொடி தான் உபயோகித்தேன்.
காரப்பொடி எனில் காரமாக இருந்தால் 5 தேக்கரண்டி. காரம் இல்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றலை வறுத்துப் பொடிக்கவில்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி வெந்தயத்தை வெறும் வாணையில் வறுத்துப் பொடிக்கவும்.
வறுத்துப் பொடித்த வெந்தயம், கடுகுப்பொடி. இது ஊறுகாய் விரைவில் வீணாகாமல் இருக்கப் போடுகிறோம். இதுக்கு மஞ்சள் பொடி தேவை இல்லை. கடைசியில் எலுமிச்சைச் சாறு சுமாராக 3,4 பழங்களின் சாறு தேவைப்படும். நல்ல சாறுள்ள பழம் எனில் 3 போதும். நான் 3 பழங்களின் சாறைத்தான் பிழிந்து சேர்த்தேன்.
எண்ணெய் சூடானதும் கடுகைப் போட்டுப் பொரிந்ததும் பெருங்காயப் பவுடரைச் சேர்க்கவும். துருவிய மஞ்சளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் மஞ்சள் வதங்க வேண்டும். பின்னர் அதில் தேவையான உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து மீண்டும் வதக்கவும். மிளகாய் வற்றலைக் கடுகு, வெந்தயத்தோடு சேர்த்து வறுத்துப் பொடித்து வைத்திருந்தால் அதைச் சேர்க்கலாம்.
நான் கடுகு, வெந்தயப் பொடி மட்டும் சேர்த்துத் தயார் செய்து வைத்ததால் மஞ்சள் துருவல் கொஞ்சம் வதங்கியதும் உப்பு, மிளகாய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறினேன். அது கொஞ்சம் வதங்கியதும் கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டுப் பின்னர் எலுமிச்சைச் சாறைச் சேர்த்தேன்.
பின்னர் எண்ணெய் பிரியும் வரை வதக்கிப் பின் ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கலாம். சிலர் வெல்லம் சேர்ப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கம், ருசியைப் பொறுத்தது. சின்னக் கட்டி வெல்லம் எலுமிச்சைச் சாறைச் சேர்க்கும்போது போடலாம். வெல்லம் நன்கு கரையும் வரை வதக்கிய பின்னர் ஆற வைத்து எடுத்து வைக்கவும். இதற்கு வினிகர் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் தேவை இல்லை. மஞ்சளைப் பொடியாக நறுக்கியும் ஊறுகாய் போடலாம்.அதை நாளை போட்டுப் பின்னர் பகிர்கிறேன்.
ஊறுகாய் தயார் நிலையில். கொஞ்சம் காரம். ஏனெனில் நான் வாங்கிய மிளகாய்த்தூள் கொஞ்சம் காரமானதாகவே இருக்கிறது. ஆகவே ருசி பார்த்த பின்னர் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கிளறி வைத்தேன். மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருந்தது. இதைச் சப்பாத்தி, தேப்லா, பராத்தா போன்றவற்றுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
பச்சை மஞ்சளோடு இஞ்சி, கிடைத்தால் மாங்காய் இஞ்சி, எலுமிச்சம்பழம், மாங்காய், காரட் விரும்பினால் கொஞ்சம் பட்டாணி, வேர்க்கடலை இவை சேர்த்து மிக்சட் வெஜிடபுள் ஊறுகாய் மாதிரிப் போடலாம். போட்டு வைச்சிருக்கேன். அது அடுத்து வரும். பச்சை மஞ்சளோடு நெல்லிக்காய், பாகற்காய், இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகியவை சேர்த்துப் பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்துச் சாறெடுத்து வடிகட்டிக் கொண்டு காலை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. அதுவும் செய்கிறோம்.
பயனுள்ள விடயம் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி. நான் எப்போவுமே சமையலில் மஞ்சள் அதிகம் பயன்படுத்துவேன்.
Deleteபச்சை மஞ்சளில் ஊறுகாய்/தொக்கு - நல்லது. வீட்டில் செய்வதுண்டு. உங்கள் குறிப்புகளுக்கு நன்றி.
ReplyDeleteஆமாம், போன வருஷம் ஆதியும் போட்டிருந்தார்.
Deleteநான் எப்போதோ கேட்டதற்கு (வாட்சப்பில்) இப்போது பதிவாக எழுதியிருக்கிறீர்கள். நான் பச்சை மஞ்சளைத் தொட்டியில் மண்ணில் போட்டுவைத்திருக்கிறேன். இதை வைத்து ஊறுகாய் (கொஞ்சமா) பண்ணச் சொல்கிறேன்.
ReplyDeleteஇந்தத் 'தேப்லா'வை எப்போதான் நீங்க விடப்போறீங்களோ
எப்போவோ ஒண்ணும் இல்லை. இப்போத்தான் நாலைந்து நாட்கள் முன்னர். பதிலிலேயே பதிவாகப் போடுவதாகத் தான் சொல்லி இருந்தேன். அப்புறமா உங்க சந்தோஷத்துக்கு இப்போல்லாம் தேப்லாவே பண்ணுவதில்லை. வெந்தயக்கீரை வாங்கியே 2 வருஷங்கள் ஆச்சு. சாதாரணத் தேப்லா கூடப் பண்ணுவதில்லை.
Deleteஇதெல்லாம் புதுசு..
ReplyDeleteநமக்குத் தெரிந்தது மஞ்சளைக் குடைந்து குழியிட்டு நெல்லளவு சுண்ணாம்பைப் போட்டு குழைத்து சிறு ஈர்க்கினால் எடுத்து நெற்றியில் நாமம் இட்டுக் கொள்வது தான்!..
இது புது விஷயம் எனக்கு. பிரசவம் ஆன பெண்களுக்குத் தோல் சீவிய பச்சை மஞ்சளை அரைத்து உருண்டையாகக் கொடுத்து அப்படியே விழுங்கச் சொல்லுவார்கள். கர்ப்பப் பைப் புண்கள் விரைவில் ஆறும் என்பது நம்பிக்கை.
Deleteகடுகு சேர்த்தால் ஒருவித வாசனை வருமே.. மாவடுவுக்கு மட்டும்தான் கடுகு சேர்ப்போம்.
ReplyDeleteஎந்த ஊறுகாயானாலும் கடுகு சேர்த்தால் தான் வாசனையே. அது தான் பதப்படுத்தும் வேலையையும் செய்யும். மாவடு மட்டுமில்லை, ஆவக்காய் ஊறுகாய், வெந்தய மாங்காய் தினசரிக்குப் பயனாகும் துண்டம் மாங்காய் எல்லாவற்றிற்குக் கடுகு சேர்ப்பேன். எலுமிச்சைக் கார ஊறுகாயிலும் கடுகு, வெந்தயம் உண்டு. இவை ஊறுகாய் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.
Deleteஎ.பழச்சாறு பிழிந்த பின் எண்ணெய் ஊற்றி எண்ணெய் பிரியும் வரை வதக்கலாமா? மற்ற காய்கள் சேர்த்தால் ஊறுகாய். இது தொக்கு.
ReplyDeleteஸ்ரீராம் எலுமிச்சை சாறு எப்போதுமே கடைசியாகத்தான் பிழிய வேண்டும் அது பிழிந்து வதக்கினால் கசக்கும். எலுமிச்சை ரசத்துக்குக் கூட ரசம் செய்து ஒரு 10 நிமிடம் கழித்துத்தான் எலுமிச்சை பிழிய வேண்டும். இது என் மாமியாரிடம் நான் கற்றது.
Deleteகீதா
எண்ணெய் பிரிந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சைச் சாறைச் சேர்க்கலாம். நாம் தான் அடுப்பில் இருக்கையில் எலுமிச்சைச் சாறைச் சேர்க்கக் கூடாது/கசக்கும் என்றெல்லாம் சொல்கிறோம். வடக்கே எலுமிச்சைச்சாறு பிழிந்து சூடு பண்ணுவது உண்டு. அதுவும் ஆலு போஹா எனில் அடுப்பில் இருக்கும்போதே எலுமிச்சைச் சாறைச் சேர்ப்பார்கள். அதே போல் "தம்" கட்டிச் செய்யும் பிரியாணிக்கும் சூட்டோடு சூடாக எலுமிச்சைச் சாறு சேர்ப்பதுண்டு.
Deleteக்ரூப்பில் இதை எபி திங்கக்கிழமைக்கு அனுப்புவதாய்ச் சொல்லி இருந்தீர்கள் என்று நினைவு!
ReplyDeleteஅப்படீங்கறீங்க? நினைவில் இல்லை. ஆனால் எபி "திங்க"வுக்குத் தான் பச்சை மஞ்சள் துண்டங்களோடு இஞ்சி, எலுமிச்சை, மாங்காய் சேர்த்த மிக்சட் வெஜிடபுள் ஊறுகாய்னு வைச்சிருக்கேன். :))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபொங்கலுக்கு போட்ட கோலம் அழகாக உள்ளது. பச்சை மஞ்சள் தொக்கு செய்முறைகளும் விபரமாக சொல்லியுள்ளீர்கள். நான் இதுவரை செய்ததில்லை. குறித்துக் கொண்டேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அப்பாடா! கோலத்தை நீங்களாவது பாராட்டினீங்களே! பச்சை மஞ்சள் தொக்கு போன வருஷம் செய்தது எங்க வீட்டில் இப்போத் தான் தீர்ந்தது. ஊற ஊற நல்ல காரமும் எலுமிச்சைப் புளிப்பும் சேர்ந்து அருமையாக இருந்தது.
Deleteவணக்கம் சகோதரி
Deleteஇதுவரை இந்த மஞ்சளை வைத்து ஊறுகாய்கள் இதுவரையில் செய்ததில்லை. என் முதல் பிரசவத்தின் போது எங்கள் பாட்டி விரலி மஞ்சளை நல்ல மிருதுவாக அம்மியில் அரைத்து, பிரசவம் ஆனவுடன் மூன்று உருண்டைகள் கொடுத்து விழுங்கப் சொன்னார்கள். அதன்படி செய்துள்ளேன். அவ்வளவுதான்..! மஞ்சள் வயிற்றுப் புண்ணுக்கு நல்லதில்லையா? இந்த பச்சை மஞ்சள் வாசனை தூக்குமே...! ஊறுகாய்க்கு எப்படி இருக்குமோ என நினைத்தேன். உங்கள் செய்முறைகள், படங்கள் கண்டு எனக்கும் இந்த ஊறுகாய் செய்து சாப்பிட ஆசை வருகிறது. வீட்டில் அனைவருக்கும் பிடிக்குமா எனத் தெரியவில்லை. பார்க்கலாம். இந்த தடவை பச்சை மஞ்சளை எப்போதும் போல் பொடியாக அரிந்து காயவைத்து பொடியாக்கி,பூசு மஞ்சள் பயன்பாட்டிற்கு வைத்துள்ளேன்.இனி இந்த மாதிரி ஊறுகாய் போட்டு பார்க்க வேண்டும். அருமையான பகிர்வுக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கொஞ்சமாய் ஒரு கைப்பிடி மஞ்சள் போதும் கமலா ஊறுகாய் போட்டுப் பாருங்கள். நன்றாகவே இருக்கும்.
Deleteநான் செய்வதுண்டு. பச்சை மஞ்சள் கிடைக்கும் போதெல்லாம். தொக்கு இதே ரெசிப்பிதான். அது போல துண்டாக நறுக்கி வழக்கமாகப் போடும் ஊறுகாய் போல (மாங்கா போடுவோமே அது போல எண்ணை மாங்காய்) பச்சை மஞ்சள் குழம்பும் - வெந்தயக்குழம்பு போல...எல்லாம் ஒரே பதிவாக வேரியேஷன்ஸ் என்று படங்கள் எடுத்து எபி திங்கவுக்கு அனுப்ப வைச்சிருந்தேன் இப்போ எல்லாமே ரிப்பேர் ஆன ஹார்ட் டிஸ்கில். நான் தான் எழுத டைம் எடுத்துக் கொள்வேனே அப்படி ஆறப்போட்டதில் இப்போ எல்லாம் அந்த டிஸ்கில் போயே போச். வழக்கமாக எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்கில் வைத்துக் கொண்டு விடுவேன் இது மிஸ் ஆகிவிட்டது . மகனுக்கு அனுப்பியிருந்தால் கூட மெயிலில் இருந்து எடுத்துவிடலாம் ஆனால் அதுவும் அவனுக்கு அனுப்பாமல்...ஹிஹிஹி...
ReplyDeleteஇந்த வருடம் பச்சை மஞ்சள் வாங்காமல் போயிட..படமும் எடுக்க முடியவில்லை. டேஸ்ட் நன்றாக இருக்கும்
மா இஞ்சி செய்வது போலவும் எலுமிச்சை பிழிந்து பச்சைமிளகாய் போட்டுச் செய்வதுண்டு...செய்ததுண்டு...
கீதா
ஹாஹாஹா, பச்சை மஞ்சள் இப்போப் பருவம் என்பதால் நிறையப் பயன்படுத்துகிறோம். தினசரி நெல்லிக்காய்ச் சாறில் பச்சை மஞ்சள் தான் சேர்க்கிறேன்.
Deleteஆமாம் அக்கா சப்பாத்தி, தேப்லா, பராட்டா வுகு ரொம்ப நலலருக்கும் கூடவே சின்ன கப்பில் தயிர் பஞ்சாபிஸ் சாப்பிடுவது போல!!! மோர் சாதமுக்கும் செமையா இருக்கும்...
ReplyDeleteகீதா
நாங்க சில/பல சமயங்களிலும் ஊறுகாயே தொட்டுக்கொண்டு சப்பாத்தி சாப்பிட்டு விடுவோம். ஆலு பராந்தா, மூலி பராந்தா என்றால் கேட்கவே வேண்டாம். ஊறுகாயும், காலா நமக், கொஞ்சம் போல் உப்புத்தூள், பெருங்காயம் சேர்த்த தயிரும் தான் துணை. வேணுமானால் கொஞ்சம் பச்சைக் கொத்துமல்லிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.
Deleteநல்ல குறிப்பு. விரிவாக தந்துள்ளீர்கள்.
ReplyDeleteஎங்களுக்கு பச்சை மஞ்சள் பிடிப்பதில்லை. மாங்காய், நெல்லிக்காய், எலுமிச்சை ஊறுகாய்,மரக்கறி அச்சாறு போடுவேன்.
வாங்க மாதேவி. பச்சை மஞ்சள் வயிற்றுப் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது நான் எப்போவுமே சமையலில் மஞ்சள் பொடி/மஞ்சள் அதிகம் பயன்படுத்துவேன்.
Deleteமஞ்சளில் ஊறுகாய் விபரங்கள் மிகவும் சுவாரஸ்யம்! அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!
ReplyDeleteவாசல் கோலம் அழகு! பெரிதாய் போட்டிருக்கிறீர்கள்! ஆனால் புகைப்படம் எடுத்த விதம் செம்மண் நிறம் சிகப்பாகத் தெரியவில்லை. இன்னும் க்ளோசப்பில் எடுத்திருக்கலாமோ?
நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்ததுக்கு நன்றி மனோ! படம் ராத்திரி படுக்கும்போது வெளிக்கதவைப் பூட்டும்போது எடுத்தது! :) ஆகவே தாழ்வாரத்தில் அங்குமிங்கும் நடந்தவர்களால் கோலமும் கொஞ்சம் சுமாராகத் தான் தெரியும். க்ளோசப்பில் எடுத்திருக்கலாமோ என எனக்குத் தோன்றவில்லை. அடுத்த முறை கோலம் படம் எடுத்தால் முயன்று பார்க்கிறேன். சென்னை/அம்பத்தூர் தனி வீட்டில் கோலங்கள் இன்னமும் பெரிதாகப் போடலாம். இங்கே தாழ்வாரத்தில் பாதியைக் கோலங்கள் அடைத்துக்கொள்வதால் போக வர வழி வேண்டுமே. :(
Delete