எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 01, 2022

சும்மா ஒரு ஆ(மா)றுதலுக்கு!

 அப்போ எல்லாம் பள்ளியிலே படிக்கும்போது "A" வகுப்பு மட்டும் ரொம்பவே உசத்தின்னும், மற்ற வகுப்புக்கள் மட்டம்னும் ஒரு எண்ணம் "A" வகுப்புப் பசங்களுக்கு உண்டு. நான் முதலில் ஏ வகுப்பில் இருந்தாலும் 2 வது படிக்கும்போது வகுப்பு மாற்றிக் கொண்டதால் "பி" வகுப்புக்குப் போய் விட்டேன். நான் ஃபெயில் ஆகிவிட்டேன் என்று "பி"யில் மாற்றி விட்டார்கள் என என்னைச் சக நண்பிகள் கேலி செய்து என்னை அழ வைப்பார்கள் எனச் சொல்லுவார்கள். 2-ம் வகுப்பு "ஏ"பிரிவின் ஆசிரியை பேரு சமாதானம் டீச்சர், அவங்க, ரொம்பச் சின்னப் பொண்ணு, ஒண்ணும் விவரம் தெரியலை, அதுக்குள்ளே பள்ளிக்கு வந்துட்டாளேன்னு சொல்லுவாங்களாம். என்றாலும் எனக்கு என்னமோ அந்த டீச்சரைப் பிடிக்காது. மூணாம் வகுப்பிலே இருந்தவர் ஆசிரியர், பெயர் சுந்தர வாத்தியார். அவருக்கு என்னமோ என்னைப் பார்த்தாலே கோபம் வரும். அதுக்கு ஏற்றாப் போல் நானும் அநேகமாய்ப் பள்ளிக்குத் தாமதமாய் வந்து சேருவேன். அப்பாவும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். பட்டாசுப் பங்குகள் போடுவது போல் அப்பா அப்போது எழுதுவதற்கு உபயோகிக்கப் பட்ட சிலேட்டுக்குச்சியையும் பங்கு போட்டுத் தான் தருவார். முதல் வகுப்பில் படிக்கும்போது அவ்வளவாய் ஒண்ணும் புரியாததால் கொடுக்கிறதை வாங்கி வருவேன்.


அப்போதெல்லாம் சிலேட்டுக் குச்சிகளில், செங்கல் குச்சி, மாக்குச்சி, கலர்குச்சி, கறுப்புக்கல் குச்சி என்று தினுசு தினுசாய் இருக்கும். கொஞ்சம் வசதி படைத்த பெண்கள், பையன்கள் கலர்குச்சியை வைத்துக் கொண்டு கலர் கலராய் எழுத முயல, மற்ற சிலர் கெட்டியான செங்கல் குச்சியையும் மாக்குச்சியையும் வைத்துக் கொண்டு எழுத, நான் கறுப்புக் குச்சியால் எழுதுவேன். எழுத்து என்னமோ வந்தது என்றாலும், கூடவே அழுகையும். கலர், கலராய் எழுதாட்டாலும் குறைந்த பட்சம் செங்கல் குச்சியாலாவது எழுதணும்னு ஆசையா இருக்கும், ஆனால் அப்பாவிடம் அது நடக்காது. ஒரு குச்சியை மூன்று பாகம் ஆக்குவார் அப்பா. ஒரு பாகம் எனக்கு, ஒரு பாகம் அண்ணாவுக்கு, ஒரு பாகம் குழந்தையான என் தம்பிக்கு என. தம்பியின் பாகம் அவரிடம் போக, பெரிய வகுப்பு வந்திருந்த அண்ணாவுக்கோ குச்சியின் உபயோகம் அவ்வளவாய் இல்லாததால் கவலைப்படாமல் பென்சில் எடுத்துக் கொண்டு போக, நான் முழுக்குச்சிக்கு அழுவேன். கடைசியில் எதுவும் நடக்காமல், அதே குச்சியை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வேன் தாமதமாய். இந்தக் குச்சியைத் தான் எடுத்துண்டு போகணும்.  இல்லாவிட்டால் பள்ளி நாளையில் இருந்து கிடையாது என்பதே அப்பாவின் கடைசி ஆயுதம். அது என்னமோ கணக்கு என்னைப் பயமுறுத்தினாலும் பள்ளிக்குச் செல்வதை நான் விட மாட்டேன். வீட்டை விடப் பள்ளியே எனக்குச் சொர்க்கமாய் இருந்ததோ என்னமோ!!!


இவ்வாறு தாமதமாய் வந்த என்னை ஒருநாள் ஆசிரியர் மிகவும் மிரட்ட நான் பயந்து அலற, அவர் என்னைப் பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்குப் போகக் கூடாது எனச் சொல்லி, அங்கேயே வைத்துப் பூட்ட, பயந்த நான் அங்கேயே இயற்கை உபாதையைக் கழித்து விட்டு, மயக்கம் போட்டு விழ, பின் வந்த நாட்களில் மூன்று மாதம் பள்ளிக்குப் போக முடியாமல் ஜூரம் வந்து படுத்தேன். முக்கியப் பாடங்களை என் சிநேகிதியின் நோட்டை வாங்கி அம்மா எழுதி வைப்பார். மூன்று மாதம் கழித்துப் பள்ளிக்குப் போனபோது அந்த ஆசிரியர் பெரியப்பாவின் தலையீட்டால் வேறு வகுப்புக்கு மாற்றப் பட்டிருந்தார், என்றாலும் என்னைக் காணும்போதே அவர் கூப்பிட்டுத் திட்டி அனுப்புவார். இது ஆரம்பப் பள்ளி நாட்களில் ஆசிரியர் மூலம் நான் முதன் முதல் உணர்ந்த ஒரு கசப்பான அனுபவம். என்றாலும் அதே பள்ளியில் நான் தொடர்ந்து படித்தேன், பின்னர் வந்த நாட்களில் குறிப்பிடத் தக்க மதிப்பெண்களும் பெற்றேன். இதற்கு நடுவில் வீட்டில் இருந்த மூன்று மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புத்தகங்களும் படிக்க ஆரம்பித்திருந்தேன். அப்போது வீட்டில் ஆனந்தவிகடன் மட்டும் வாங்குவார்கள். என்றாலும் அப்பாவின் பள்ளி நூலகத்தில் இல்லாத புத்தகங்களே கிடையாது. அங்கிருந்து புத்தகம் எடுத்து வரும் அப்பாவைக் கேட்டு அந்தப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.


அதற்கு முன்னால் நான் படிச்சது, என்றால் ஆனந்தவிகடனில் சித்திரத் தொடராக வந்த "டாக்டர் கீதா" என்ற கதையும், துப்பறியும் சாம்புவும் தான். டாக்டர் கீதா தொடரில் சுபாஷ்சந்திரபோஸின், வீரச் செயல்களைப் பற்றியே அதிகம் இருக்கும்,இந்திய தேசிய ராணுவ வீரர்களைப் பற்றிய கதை அது. எங்க வீட்டிலும் தாயம் விளையாடினால் கூட சுபாஷின் "டெல்லி சலோ" என்ற வாக்கியத்தை வைத்து விளையாடிச் செங்கோட்டையைப் பிடிக்கும் விளையாட்டே அதிகம் விரும்பி விளையாடப் படும். தாத்தா வழியில் (அம்மாவின் சித்தப்பா, பலமுறை சுதந்திரத்துக்குச் சிறை சென்றார், கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளவில்லை) அப்பாவும் காந்தியின் பக்தர், ஆகவே வீட்டில் எப்போதும் ராட்டைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். நானும், அண்ணாவும் தக்ளியில் நூல் நூற்றுக் கொடுக்க, அப்பாவோ, அம்மாவோ கைராட்டையில் "சிட்டம்" போட்டு கதர் நூல் சிட்டம் தயாரித்து, கதர்க்கடையில் கொண்டு கொடுப்பார்கள். அந்தச் சிட்டத்தின் விலைக்கு ஏற்றாற் போல் கிடைக்கும் கதர் வேஷ்டி தான் அப்பா கட்டிக் கொள்ளுவார். அப்போது பிரபலமாய் இருந்த அரசியல் தலைவர்களில் அப்பாவுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களில் திரு வை.சங்கரனும், தோழர் பி.ராமமூர்த்தியும் ஆவார்கள். பார்த்தால் நின்று விசாரிக்கும் அளவுக்குத் தோழமை இருந்தது.


நேரடியாகச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், படிப்பை சுதந்திரப் போராட்டம் காரணமாய் விட்ட அப்பா, பல காங்கிரஸ் மகாநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். சுதந்திரம் கிடைத்தபின்னர்தான் திருமணம் என்றும் இருந்து, அதன் பின்னரே திருமணமும் செய்து கொண்டார். காந்தி இறந்த தினம் முழுதும் ஒன்றும் சாப்பிடாமல் விரதம் இருப்பார். ஒவ்வொரு வெள்ளி அன்றும் காந்திக்காக ஒரு முறை மட்டுமே உணவு கொண்டு விரதம் இருந்திருக்கிறார். அவருக்கு வயிற்றில் ஆபரேஷன் ஆகும் வரை இது தொடர்ந்தது. எனக்குத் தெரிந்து என்னோட பதினைந்து வயசு மட்டும் வீட்டில் கைராட்டை சுழன்றிருக்கிறது. என் அம்மாவுக்கு முடியாமல் போய் கைராட்டையில் உட்கார்ந்து நூற்க முடியாத காரணத்தாலும், (நிஜலிங்கப்பா பீரியட்?) காங்கிரஸும் முதல் முறையாக உடைந்ததும், அப்பாவும் கதரை விட்டார். அந்தக் கைராட்டையை விற்கும்போது என்னுடைய அம்மா அழுதது இன்னும் என் நினைவில் மங்காத சித்திரமாய் இருக்கிறது.

37 comments:

  1. என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
    என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
    என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
    என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
    அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
    ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
    வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
    மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ?
    பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
    பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
    தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ?
    தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
    அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ?
    ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
    வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ!
    வீர சிகாமணி! ஆரியர் கோனே!

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நல்ல நினைவலைகள். படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. சிலேட்டில் எழுதும் குச்சிகளின் வகைகளை நினைவு கூறியது அருமை. நாங்களும் கல் குச்சியால் சிலேட்டில் வீட்டுப்பாடம் எழுதி அதை அழியாமல் பள்ளிக்கு கொண்டு போவது நினைவுக்கு வந்தது. வேறு ஏதாவது நோட்,புக் பட்டு அழிந்து விட்டால் வருத்தமாக இருக்கும். மீண்டும் அந்த நேரத்திற்குள் எழுத வேண்டுமே..! மாக்குச்சிகளும், கலர் குச்சிகளும் வைத்து எழுதியிருக்கிறேன்.அப்போது ஐந்து வகுப்பு வரை சிலேட்டுதான். அதன் பின்தான் நோட்டில் பென்சில் வைத்து வீட்டுப் பாடங்கள் எழுதச் சொன்னார்கள். இப்போது பாலர் பள்ளியிலேயே நோட்,பென்சில் என்று வந்தாகி விட்டது.

    அப்போதே நமக்கு பிடிக்காத/நம்மை பிடிக்காத வாத்தியார் என்று இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் நம் கைப்பட்டால் குற்றம்,கால்பட்டால் குற்றம் எனும் மாமியார்களை அவர்கள் நினைவுபடுத்துவார்கள். 2ம் வகுப்பிலேயே ஆனந்த விகடன் படிக்க ஆரம்பித்து விட்டீர்களா? நான் இரண்டாவது வகுப்பு படிக்கும் போது எங்கள் வீட்டில் வார மாத இதழ் வாங்கிய நினைவே இல்லை. அப்படியே வாங்கியிருந்தாலும், நான் படித்த நினைவுமில்லை.

    தங்கள் வீட்டில் காந்தியை பற்றி மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றி கூறியது அருமை. நமக்கு பிரியமானதை இழக்கும் போது வருத்தந்தான் நிறைய வரும்.

    எங்கள் வீட்டிலும், நானும் அண்ணாவும் இந்த தக்களியில் வீட்டின் தேவைக்காக நூல் நூற்றியிருக்கிறோம். வீட்டின் பெரியவர்கள் என்ன சொன்னாலும் கேட்டு வளர்ந்திருக்கிறோம். தங்கள் பதிவு பழைய காலத்திற்கே அழைத்துச் சென்றது. மாறுதலான பதிவு எனும் தலைப்பும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. சுவாரசியமாக இருந்தது எனச் சொன்னதுக்கு நன்றி. இப்போல்லாம் குச்சிகள் இல்லை, க்ரேயானும், வாட்டர் கலரும் தான். குஞ்சுலு தினமும் பெயின்ட் டப்பாவில் தண்ணீரை விட்டுத் தரை, பேப்பர், வாஷ் பேசின் எல்லாவற்றையும் வண்ணமயமாக்கிக் கொண்டிருந்தது. இப்போ அந்தத் தாத்தா வீட்டில் பண்ணுகிறதோ என்னமோ. எனக்கும் ஐந்தாம் வகுப்பு வரை சிலேட் தான். என்னைப் பொறுத்தவரை பள்ளி நாட்களில் ஏதேனும் ஒரு வகுப்புக்குப் பாடம் எடுக்கும் ஓர் ஆசிரியைக்கு என்னைக் கண்டால் பிடிக்காது. ஆறு, ஏழு, எட்டு வகுப்புக்களிலும் அப்படி ஒரு ஆசிரியை அமைந்தார். ஒன்பதாம் வகுப்பில் கணக்கு ஆசிரியை. பிரச்னை என்னவெனில் பதினோராம் வகுப்பு வரை அவர் வேறே செக்‌ஷனுக்கு மாறாமல் எங்கள் செக்‌ஷனுக்கே பிடிவாதமாய் வந்தார். மூணு வருஷமும் கஷ்டம் தான். தக்ளியில் நாங்களும் நூல் நூற்றிருக்கோம். அப்போல்லாம் அது ஒரு சிறந்த பொழுது போக்கு.

      Delete
  3. அன்பின் கீதாமா,
    என்றும் வளமுடன் இருக்க வேண்டும்.

    அப்பாடி மடை வெள்ளம் திறந்த மாதிரி
    அனுபவங்களை ஒரே மூச்சில் எழுதி விட்டீர்களே.

    உங்களைப் படுத்திய அந்த டீச்சருக்கு மனோ வியாதி இருந்திருக்கும்.

    மிக மோசம்.:(

    அப்பா, அம்மா, ராட்டை பற்றிய குறிப்புகளில்
    சில எனக்கும் பொருந்தும்.
    அப்பாவும் மிகத் தீவிர காந்தி, தேச பக்தர்.
    1942 இல் நடந்த போராட்டத்தில்
    பங்கு கொண்டு அடியும் வாங்கி இருப்பதாகச் சித்தப்பா சொல்லித் தான் தெரியும்.

    அந்த நாட்களில் பெருமை கொடுத்த தேய்யம் நடுவில் மறைந்தாலும் இனியும்
    துளிர்க்க வேண்டும்.
    அருமையான பதிவுக்கு வாழ்த்துகள்.
    நீங்கள் சொன்ன டாக்டர் கீதா தொடர் பற்றி எனக்குத் தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, தெரியலை. மனோ வியாதியோ என்னமோ! என்னைக் கண்டாலே பிடிக்காது. அதுவே முன்னால் படிச்ச அண்ணாவிடமும் எனக்கப்புறம் படிச்ச தம்பியிடமும் காட்டியதில்லை. அப்பா நேரடியாகப் போராட்டங்களில் கலந்துக்கலை. ஆனால் கல்லூரிப் படிப்பை விட்டு விட்டார் என்பார்கள். டாக்டர் கீதா புத்தகம் அப்புறம் நான் பலரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. சித்திரத் தொடராக வந்தது. கீதாவும் டாக்டர். அவர் காதலிக்கும் சுந்தரமும் டாக்டர்.

      Delete
  4. எங்களை பொறுத்தவரை A பிரிவு என்பது ஆங்கில மீடியம். மற்றவை தமிழ் மீடியம்.

    ReplyDelete
    Replies
    1. பின்னாட்களில் அப்படி வந்திருக்கலாம் ஶ்ரீராம்.

      Delete
    2. என் 8ம் வகுப்பு வரைல (இல்லை 10ம் வகுப்பிலும்), A பிரிவில் கொஞ்சம் இண்டெலிஜெண்ட் மாணவ/மாணவிகளைதான் நிரப்புவார்கள். பிறகு ஆங்கிலமீடியம் வந்தது

      Delete
  5. இத்தனை குச்சி வகைகள் தெரியாது.  எனக்குத் தெரிந்தது சாதா குச்சி, பால் குச்சி!  பால் குச்சி வழுவழு என சிலேட்டைக் கிழிக்காமல் கீறல் போடாமல் எழுதும்.

    ReplyDelete
    Replies
    1. நிறையக் குச்சி வகைகள், இதில் செங்கல் குச்சி மட்டும் முனை கூர்ப்பாகப் பென்சில் போல் இருக்கும்.

      Delete
  6. பி ராமமூர்த்தி வேறு, தஞ்சை ராமமூர்த்தி வேறு இல்லையா? தஞ்சை ராமமூர்த்தி என் அப்பாவின் நண்பர்.

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்லும் பி.ராமமூர்த்தி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர். மதுரைக்காரர் தான் என நினைக்கிறேன். கால் சரியில்லாமல் இருந்தது.

      Delete
  7. என் தாத்தா பாட்டி வீட்டில் கைராட்டை இருந்ததோ என்னவோ, எங்கள் வீட்டிலெல்லாம் இல்லை. பார்த்ததும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் 1966 வரை இருந்தது. நானுமே கைராட்டையில் நூற்றிருக்கேன்.

      Delete
  8. இது என்ன... மலரும் நினைவுகளா இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. என்ன வேலை மும்முரமோ? பார்க்கவே முடிவதில்லை. கருத்தும் சுருக்!

      Delete
  9. பள்ளி நாட்கள் இனிமை என்றாலும் அப்போதிருந்த ஒரு சில ஆசிரியர்களால் நெருஞ்சிக் காடான நாட்கள்..

    இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனை (நான் தான்) எதற்கு அடிப்பது?.. பீட்டர் என்ற கொலை வெறி பிடித்த வாத்தியானிடம் அடிபட்டவன் நான்..

    அந்தப் பீட்டனிடம் ஏற்பட்ட அச்சத்தால் பள்ளிக்குப் போவதாகச் சொல்லி விட்டுப் போகாமல் தப்பித்ததைக் கண்டு பிடித்த பின்னர் தஞ்சையில் இருந்து திருவீழிமிழலைக்கே சென்று விட்டார் என் தந்தை..

    அத்தோடு கிரித்தவப் பள்ளியில் பீட்டனின் மூஞ்சியில் முழிப்பதற்கு முற்றுப் புள்ளி விழுந்தது..

    PUC வரை அரசு பள்ளி/ கல்லூரி தான்..

    ReplyDelete
    Replies
    1. அது என்னமோ தெரியலை. சில ஆசிரியர்களுக்குச் சில மாணவ, மாணவியர் தான் மிக அருமை. மற்றவர்களைச் சீந்தக்கூட மாட்டார்கள். இந்தப் பாரபட்சம் அநேகமாக எல்லாப் பள்ளிகளிலும் இருந்தது.

      Delete
  10. மறக்க முடியாத நினைவுகள் இல்லையா? நாங்களும் உங்கள் நினைவுகளை படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வெங்கட். நன்றி.

      Delete
  11. சிறுவயது நினைவுகள் சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  12. கீதாக்கா உங்கள் அனுபவங்கள் செம சுவாரசியம்.

    குச்சிகளில் ஷார்ப்பா இருக்குமே கடல் குச்சி, அப்புறம் மழு மழுன்னு இருக்கும் குச்சி கறுப்பு கலர் சாம்பல் கலர்லன்னு..

    எங்கள் வீட்டில் நான் கல்லூரி போகும் வரை கைராட்டை அப்புறம் மெஷின் ராட்டை இருந்தது. யூனிஃபார்ம் நூல் நூற்றுக் கொண்டு கொடுத்து அதில் வாங்கும் துணிதான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, நான் கதர்ப்பட்டில் பாவாடை கட்டி இருக்கேன். அஹிம்சாப் பட்டு என்பார்கள். எங்க வீட்டில் நூற்கும் நூலைப் போட்டு அப்பா வேஷ்டி வாங்கிப்பார்.

      Delete
  13. சிலேட்டு உடைத்ததற்காக அம்மாவிடம் அடி வாங்கியது மறக்க முடியாத வடு

    வஸ்வநாதன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க விஸ்வா! ஆமாம், எனக்கும் சிலேட்டு உடைந்து இரண்டு பாகமாக ஆகிவிடக் கொஞ்ச நாட்கள் உடைந்த சிலேட்டையே பயன்படுத்தினேன்.

      Delete
  14. மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது ஆறுதலுக்கு என்பது உண்மை.
    சிலவற்றை பகிர்ந்து கொண்டால் மனம் ஆறுதல் அடைந்து லேசாகி விடும்.

    சிலேட்டு குச்சிகள் பற்றி அழகாய் சொன்னீர்கள். அப்பாவின் கண்டிப்பு ஆச்ச்சிரையமாக இருக்கிறது, பெண் குழந்தைகளுக்கு அப்பாவை பிடிக்கும் அப்பாவிற்கும் பெண் குழந்தைகளை பிடிக்கும் என்பார்கள்.

    ஆசிரியருக்கு உங்களை பிடிக்காமல் போனது வருத்தம் தான். குழந்தை பருவத்தில் இப்படி பயந்து அலறும் படி செய்வார்களா ! அதுவும் பெண் குழந்தைகளை?

    துர்கா சென்னை தாத்தாவீட்டிலா? தினம் பார்த்து பேசுவீர்கள் தானே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. சில நாட்களாக உங்களை மீண்டும் காணோமே என நினைச்சேன். பிள்ளை, மருமகள், பேரன் ஆகியோர் அரிசோனா திரும்பியாச்சா? தனிமையில் இருக்கீங்களா? நினைக்கவே கவலை/பயம் வருது. :( துர்கா சென்னைத் தாத்தா வீட்டில் இருக்காள். அவ்வப்போது பார்ப்பேன். எங்க அப்பா பற்றி உங்களுக்குத் தெரியலை போல! அவருக்குப் பெண் குழந்தைகள் என்றாலே அதிகப்படி என்னும் நினைப்பு உண்டு. இத்தனைக்கும் அப்பா குடும்பத்தில் அனைவருக்கும் ஒரே பெண் தான் அல்லது பெண்ணே பிறந்திருக்காது. ஆனாலும் அவருக்கு என்னவோ இப்படி ஓர் எண்ணம். பெண் குழந்தை என்றால் செலவு என்று புலம்பிக் கொண்டே இருப்பார். :( கடைசி காலத்தில் ஆறு மாதங்களுக்கும் மேல் என்னிடம் இருக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது. :)))))) என்னை விட்டுப் போக மாட்டேன், இங்கே இருக்கேன் என்றார் அழைத்துச் செல்ல வந்த பிள்ளையிடம். :)

      Delete
    2. மகன் , மருமகள் பேரன் போய் விட்டார்கள் ஊருக்கு . மகள், பேத்தி, பேரன் இருக்கிறார்கள். 19ம் தேதி பேத்தி, பேரன் வந்தார்கள். மகள் நேற்று வந்தாள். இந்த மாதம் இருப்பார்கள். பேரனுக்கு 21ம் தேதி தேர்வு , அப்போது ஊருக்கு போவார்கள்.

      உங்கள் அப்பாவைபற்றியும், அவர் குணநலன்கள் பற்றியும் அடிக்கடி சொல்லி இருக்கிறீர்கள். அதுதான் ஆச்சிரியமாக இருக்கிறது என்றேன். எங்கள் வீட்டில் நிறைய பெண் குழந்தைகள், ஆண்கள் மூன்று. அப்பா கவலையே படவில்லை. எப்போதும் மகிழ்ச்சியாக எங்களை வைத்து கொண்டார்கள். எங்களுக்கு தான் கொடுத்து வைக்கவில்லை, 51 வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

      கடைசி காலத்தில் பெண் குழந்தையின் பெருமையை உணர்ந்து கொண்டு இருப்பார். ஒவ்வொருவர் தேவையை உணரும் காலத்தை இறைவன் கொடுப்பார்.

      துர்காவும் ஊருக்கு போகும் நாள் வந்து விட்டது. அவர்கள் இருப்பது ஒரு தெம்பை கொடுக்கிறது.

      ஊருக்கு போய் விட்டால் தெம்பு குறைந்து விடும்.

      எனக்கும் பேரன், பேத்திகள் இருப்பதால் முன்பு மகன் , மருன்மகள் இருந்ததால் தெம்பாக நடமாடினேன். மனதை திடபடுத்தி கொண்டு வாழ பழக வேண்டும் நான். மீண்டும் வந்து அழைத்து போவதாய் சொல்கிறான் மகன்.

      Delete
    3. வாங்க கோமதி. விரிவான கருத்துக்கு நன்றி. எங்க அம்மா வீட்டிலும் ஐந்து பெண்கள். ஐந்து பெண்களையும் அருமையாகவே வளர்த்தார்கள். நான்கு பிள்ளைகள். அப்பா வீட்டில் ஏழு பிள்ளைகள் அப்பாவையும் சேர்த்து. ஒரே ஒரு அத்தை. அவரே அப்பாவை விட வயது வித்தியாசம் அதிகம் உள்ளவர். அத்தையின் மூத்த பிள்ளை அப்பாவை விடவும் பெரியவர். :)))) அம்மா அப்பாவுக்குப் பனிரண்டு வயதில் இறந்துவிட்டதால் அப்பா மனம் அப்படி ஆகிவிட்டதோ என்னமோ! என்னவோ அவரும் தம் காலத்தைக் கழித்தார் அதே பெரியப்பாவுக்குப் பெண் குழந்தைகள்/ஆண் குழந்தைகள் என்னும் பாகுபாடு இல்லை. அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் 22 வயது வித்தியாசம். :))))))

      Delete
    4. தைரியமாக இருங்கள். சொல்லலாமே தவிர அது எத்தனை கஷ்டம் என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள். சொந்தத்தில்/நெருங்கிய சொந்தத்தில் கூட இருந்து துணையாக இருப்பவர்கள் யாரேனும் இருந்தால் கூட வைத்துக்கொள்ளுங்கள். பேச்சுத்துணையாகவேனும் இருக்கும். மகன் அழைத்தால் க்ரீன் கார்ட் வாங்கிக் கொண்டு மகனுடனேயே இருக்கலாம். ஆனால் உங்கள் உடலும், மனமும் பழக வேண்டும்.

      Delete
  15. Wow What a memory you have Maami. I know, some teachers were like that. I'm always interested in reading old memories, yours is even more special because of your narration style. Thanks for sharing

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏடிஎம். பாராட்டுகளுக்கு நன்றி வருகைக்கும் நன்றி.

      Delete

  16. ஸ்லேட்டில் அதில் பரீட்சை எழுதி மார்க் அழியாமல் ஜாக்கிரதையாக பிடித்துக் கொண்டு வருவோம். டில்லி குச்சி என்று குண்டாக இருக்கும், வழுவழுவென்று எழுதும் குச்சி ஒன்று உண்டு. அது ஒரு குச்சி ஐந்து பைசா என்று நினைவு. நல்ல நினைவுகள்.

    ReplyDelete
    Replies
    1. டில்லி குச்சி கேள்விப் பட்டதில்லை. நானும் ஐந்தாம் வகுப்பு வரை ஸ்லேட்டில் தான் பரிட்சை எழுதி இருக்கேன். :) பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி.

      Delete
  17. சிறு வயதில் கசப்பான நினைவலைகள் .

    எனக்கு கிடைத்தது இனிய நாட்கள் கடவுளுக்கு நன்றி.ஆரம்பபாடசாலைக்கு தலைமை ஆசிரியையுடன் அவரின் காரில் கூடச் சென்றும் வருவதுண்டு . சிலேட் இரண்டாம் வகுப்புவரை .

    ReplyDelete