கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் மாளாபுரத்தில் நிகழ்ந்தன. பந்து ஜனங்கள் பல ஊர்களிலிருந்து வந்து கூடினர். ரெயில் வண்டியின் வேகம், பஸ்ஸின் வேகம் முதலியவற்றைக் கண்டறியாத அந்நாட்களில் கல்யாண ஏற்பாடு விரைவில் நடைபெறாது; மெல்ல மெல்ல நடைபெறும். கல்யாணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வேண்டிய காரியங்கள் ஆரம்பமாகிவிடும். ஒரு மாதத்துக்கு மேல் குடும்பம் கல்யாண முயற்சியில் ஈடுபட்டிருக்கும்.
இன்றும் அன்றும்
இக்காலத்திலோ எல்லாம் வேகம், முதல்நாள் கல்யாணம் நிச்சயமாவதும் மறுநாள் கல்யாணம் நடைபெறுவதும் மூன்றாம் நாள் கல்யாணம் நடைபெற்ற அடையாளமே மறைவதும் இந்த நாட்காட்சிகள். முகூர்த்த பத்திரிகையில் சம்பிரதாயத்திற்குக்கூட நான்கு நாள் முன்னதாக வரவேண்டுமென்று எழுதுவதில்லை. கல்யாணமே ஒரு நாளில் நிறைவேறும்போது விருந்தினர்கள் நான்கு நாள் வந்து தங்கி என்ன செய்வது?
அக்காலத்தில் ஒரு குடும்பத்தில் கல்யாணம் நடப்பதாயிருந்தால் ஒரு மாதத்துக்கு முன்பே சில பந்துக்கள் வந்து விடுவார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு பலர் வருவார்கள். வந்தவர்கள் தாங்கள் உபசாரம் பெறுவதில் கருத்துடையவர்களாக இருக்கமாட்டார்கள். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வலிந்து செய்வார்கள். பந்தற்கால் நடுவது, பந்தல் போடுவது, பந்தலை அலங்கரிப்பது முதல் கல்யாணமான பிறகு பந்தல் பிரிக்கும் வரையில் நடக்கும் காரியங்களில் ஊரினரும் கல்யாணத்திற்காக வந்தவர்களும் கலந்து உதவி புரிவார்கள். கல்யாண வீட்டின் அகலத்திற்குத் தெருவையடைத்துப் பந்தல் போடுவார்கள். பெண்மணிகள் சமையல் செய்தல், பரிமாறுதல், ஒருவரையொருவர் அலங்கரித்தல் முதலிய உதவிகளைச் செய்வார்கள். ஆதலின் வேலைகளைச் செய்வதற்காக வேறு மனிதர்களைத் தேடி அலைய வேண்டிய சிரமம் இராது. எல்லோரும் சேர்ந்து ஈடுபடுவதனால் எவரும், “எனக்கு உபசாரம் செய்யவில்லை” என்று குறைகூற இடமிராது. ஆயினும் சம்பந்திகளுக்கிடையே மனஸ்தாபம் நேர்வது எங்கும் இருந்தது. கல்யாண மென்றால் சம்பந்திச் சண்டையும் ஒரு நிகழ்ச்சியாக ஏற்பட்டுவிட்டது.
கிராமத்தாருடைய ஒற்றுமையும் உபகார சிந்தையும் கல்யாணத்தைப் போன்ற விசேஷ காலங்களில் நன்றாக வெளிப்படும். பணச்செலவு இந்தக் காலத்திற்போல அவ்வளவு அதிகம் இராது. இக்காலத்திற் செலவுகளுக்குப் புதிய புதிய துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. உணவுவகைகளில் இப்போது நடைபெறும் செலவைக்கொண்டு அக்காலத்திலும் கல்யாணங்கள் பலவற்றை நடத்திவிடலாம். கிராமங்களில் விளையும் காய்கறிகளும் பழவகைகளும் விருந்துக்கு அக்காலத்தில் உபயோகப்பட்டன. இப்போதோ, இங்கிலீஷ் பெயரால் வழங்கும் காய்கறிகளும் ஹிந்துஸ்தானிப் பெயரால் வழங்கும் பக்ஷிய வகைகளும் மேல்நாட்டிலிருந்து தகரப்பெட்டிகளில் அடைத்துவரும் பழங்களும் கல்யாண விருந்துக்கு இன்றியமையாத பொருள்களாகி விட்டன. மற்ற விஷயங்களில் பல தேச ஒற்றுமை தெரியாவிட்டாலும் பணம் செலவிட்டு வாங்கும் பொருள்களில் பல நாடுகளும் சம்பந்தப்படுகின்றன.
ஊர்வலம் நடத்துவதில் எத்தனை செலவு! மோட்டார் வாகனத்தையே புஷ்பவாகனமாக மாற்றிவிடுகின்றனர்! சில மணிநேரம் புறத்தோற்றத்தை மாத்திரம் தரும் அந்த வாகனத்திற்கு எவ்வளவு அலங்காரங்கள்! எவ்வளவு பேருடைய உழைப்பு! கோவில்களில் உத்ஸவ மூர்த்திகளுக்குச் செய்யும் புஷ்பாலங்காரம் கல்யாணத்திற் செய்யப்படுகின்றது! அதற்கு மேலும் செய்கிறார்கள்.
இவ்வளவு செலவு செய்து நடைபெறும் கல்யாணத்தில் விருந்தினர்கள் வருவதும் போவதும் வெறும் சம்பிரதாயமாகிவிட்டன. கல்யாணம் எல்லாம் நிறைவேறிய பிறகு கணக்குப் பார்க்கும்போது தான் வயிறு பகீரென்கிறது. சந்தோஷத்தை மேலும் மேலும் உண்டாக்க வேண்டிய கல்யாணமானது சில இடங்களில் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் பணச்செலவு காரணமாகக் கடனையும் அதனால் துன்பங்களையும் விளைவிக்கின்றது. கல்யாணத்தாற் கஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொண்ட குடும்பங்கள் இத்தமிழ் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.
அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல்நாள் நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும் மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, பூரி, தக்ஷணை, மேளம் முதலிய செலவுகளில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதக்ஷணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது.
தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாளை மறவாமல், அவருக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
ReplyDeleteஅக்காலச் சூழ்நிலையில், சிலரின் தூற்றுதலுக்கு[பிராமணர் என்பதால்] உள்ளானபோதும் அதைப் பொருட்படுத்தாமல், ஊரூராகத் தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்த தமிழ்ப் பித்தர் அவர். சமஸ்கிருதம் கற்பதில்கூட நாட்டம் கொள்ளாதவர்.
இந்தத் தமிழ் வளர்த்த பெருமகனாரை அவரின் பிறந்த நாளில், உங்களுடன் இணைந்து வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
நன்றி சகோதரி.
வாங்க பரமசிவம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பல பிராமணர்களும் தமிழுக்காகப் பாடுபட்டிருக்கிறார்கள். மௌனமாகப் பாடுபட்டிருக்காங்க.
Deleteதங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள்.
ReplyDeleteஎனக்கும் இவ்வகை திருமணங்கள் பிடிக்கவில்லை என்ன செய்வது ? காலமாற்றம் அவ்வளவுதான் சொல்ல இயலும்.
அதிலும் மணப்பெண் ஒப்பனைக்கு ஐம்பதியிரம் வரையில் வந்து விட்டார்கள்.
சரி தாத்தாவுக்கு பிறந்தநாள் என்று சொல்லி விட்டு வண்டி வேற வழியில் வந்து விட்டதே...
வாங்க கில்லர்ஜி. இப்போதைய திருமணங்களைப் பார்த்தால் மனது நொந்து போகிறது.காலமாற்றம் கொடுமையானதாக இருக்கே! தாத்தாவின் பிறந்த நாள் வாழ்த்துப் பதிவு தான் என்றாலும் தாத்தா காலத்திலேயே திருமணம் செலவைக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு என்றிருக்கிறாரே. அப்போ இப்போதைய திருமணங்களைப் பார்த்தால் என்ன சொலுவார்?
Deleteதமிழ்த்தாத்தாவை நினைவு கூர்வோம். நீங்கள் மறக்காமல் செய்கிறீர்கள்.
ReplyDeleteஹிஹிஹி. கூடியவரை ஒரு வாரம் முன்னதாக ஷெட்யூல் பண்ணிடுவேன். இந்தத் தரம் காலம்பர எட்டு மணியைச்சாயந்திரம்னு கொடுத்துட்டேன் போல. அதையும் கவனிக்கவே இல்லை. திடீர்னு நினைவு வந்து பார்த்தால் அப்போத்தான் வந்திருந்தது. :))))
Deleteஇந்தப் பதிவில் உள்ள விஷயங்கள் ஏற்கெனவே படித்திருக்கிறேனோ...
ReplyDeleteஆமாம், பல முறை போட்டிருக்கலாம். உண்மையில் அவருடைய நினைவு மஞ்சரியில் இருந்து தான் கொடுப்பதாக இருந்தேன். முடியலை. "மின் தமிழ்"க்குழுமத்தின் "மரபு விக்கி" திறப்பதே இல்லை சில ஆண்டுகளாக. அது பிரச்னையால் நினைவு மஞ்சரியில் இருந்து போட முடியலை. :(
Deleteஅன்பின் கீதாமா,
ReplyDeleteஎன்றும் நலமுடன் இருங்கள்.
தமிழ்த் தாத்தாவைத் தவறாமல் நினைவு கொண்டு
எங்களையும் மகிழ்விக்கிறீர்கள்.
தாத்தா என்றும் நம் நினைவில் இருக்க வேண்டும்.
நானும் என் சரித்திரம் தொடர்ந்து
படித்து வருகிறேன்.
ஸ்ரீ உ வே ஸ்வாமினாத ஐயரின் எழுத்து நடை
என்றும் சரளமாக செல்கிறது.
நன்றி மா.
வாங்க வல்லி, நான் விகடன் பைன்டிங்கில் சித்தப்பா வீட்டில் அறுபதுகளில் படிச்சிருக்கேன். அவருடைய தமிழ் நடைக்குக் கேட்பானேன். இப்போவும் பல சமயங்கள் பொழுது போகலைனா நினைவு மஞ்சரியை எடுத்துப் படிப்பேன்.
Deleteதமிழ்த் தாத்தா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்..
ReplyDeleteஅவரை என்றும் நினைவுகூரும் தங்களுக்கு நன்றியக்கா..
நன்றி தம்பி.
Deleteகீதாக்கா தமிழ்த்தாத்தாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் நாங்களும்.! நினைவு கூர்வோம்.
ReplyDeleteகீதா
நன்றி தி/கீதா.
Deleteஇணையத்தில் அவரைப் பற்றி வாசித்து வருகிறேன் கீதாக்கா
ReplyDeleteகீதா
ஆமாம் கொட்டிக்கிடக்கிறதே!
Deleteதமிழ்த்தாத்தாவை நினைவு கூர்வோம்
ReplyDeleteஎங்கல் கேரளத்திருமணங்களிலும் இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன. செலவும்
துளசிதரன்
கேள்விப் பட்டேன் துளசிதரன். திருமணங்களில் மாற்றம் என்பது ஏற்கக் கூடியதாக இருந்தால் நல்லதே!
Deleteநேற்று (பிப்ரவரி19) தமிழ் தாத்தா பிறந்தநாளாசாசே? கீதா அக்கா தாத்தா பற்றி பதிவு போட்டிருப்பாரே? என்று நினைத்தேன். அழகான பதிவு
ReplyDeleteதமிழ்த்தாத்தாவை நினைவு கூரும் சாக்கில் என்னையும் நினைவு கூர்ந்ததுக்கு நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteதமிழ் தாத்தாவை வணங்குவோம். அந்தக்கால திருமணங்கள் உறவுகள் ஒன்றுசேர்ந்து வேலையையும் அன்பையும் பகிர்ந்து கொண்டார்கள் செலவும் குறைவு இப்போது சொல்லவே வேண்டாம். உறவுகளில் ஒட்டுறவு எங்கே ஹால் வரைதான்.
ReplyDeleteஎன்னோட திருமணம் வரை உறவுகள் ஒன்று சேர்ந்தே எல்லாம் செய்து கொடுத்தார்கள். பின்னாட்களில் தான் மாறி இருக்கு.
Deleteடமில்.. டமில் - என்று Fbல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும் பலரும் தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாளில் வெளியூருக்குப் போய் விட்டார்கள்..
ReplyDeleteஆமாம், உண்மை. தமிழ்த்தாத்தா பற்றிப் பலரும் நினைக்கவில்லை. சந்தவசந்தம் குழுவினரைத் தவிர்த்து.
Deleteதமிழ்த் தாத்தாவின் பிறந்த நாளன்று ஒரு பதிவினைப் போட முடியவில்லையே என்று எனது மனசாட்சி உறுத்துகின்றது...
ReplyDeleteஆமாம், அதனாலேயே நான் பிப்ரவரி/ஏப்ரல் மாதங்களில் பதிவை முன் கூட்டியே போட்டு ஷெட்யூல் பண்ணி வைச்சுடுவேன். பல சமயங்களிலும் நேரம் தவறாகப் போய்விடும். இம்முறையும் அப்படியே!
Deleteசில டகர டப்பாக்களில் இருந்து சத்தம் - பிராமணர் அல்லாதவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு இருந்தது என்று..
ReplyDeleteஅப்படியானால்
தமிழ் தாத்தா எனப்பட்ட உ.வே. சாமிநாத ஐயருக்கு (1855 - 1942) மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815 - 1876) அவர்கள் ஆசிரியராக இருந்து பயிற்றுவித்தது எப்படி?..
எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!..
இது குறித்துத் திரு தரம்பால் அவர்கள் எழுதிய புத்தகம் "அழகிய மரம்" ஆங்கிலத்தில் "The Beautiful Tree" ஆதாரங்களுடன் தெள்ளத் தெளிவாக உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. பலரையும் படிக்கச் சொல்லி இருக்கேன். பிராமணர்களை விட பிராமணரல்லாதோர் பலரும் வடமொழி விற்பன்னர்களாக இருந்திருக்கின்றனர்.
Deleteவருடா வருடம் தவறாமல் தமிழ் தாத்தாவை நினைவுகூர்ந்து ஒரு பதிவு இடுவது சிறப்பு. திருமணங்கள் குறித்தும் அதற்கான ஆடம்பர செலவுகள் குறித்தும் ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த வாரம் கூட அப்படி ஒரு திருமணத்திற்கு சென்று வந்தேன். பார்க்கும் இடமெல்லாம் ஆடம்பரம் தான்.
ReplyDeleteவாங்க வெங்கட். இப்போதைய திருமணச் செலவுகளைப் பார்த்துவிட்டுப் பெற்றோரையும் நினைத்தால் அடி வயிறு கலங்குகிறது.
Deleteகாலண்டரில் தமிழ் தாத்தா பிறந்த நாளை பார்த்தவுடன் நீங்கள் பதிவு போடுவீர்கள் என்று நினைத்து கொண்டேன்.
ReplyDeleteதிருமணங்கள் இப்போது ஆடம்பரமாக போய் விட்டது உண்மை. உறவினர்களும் முன்பே வந்து உதவினார்கள். வசதி குறைவாக இருந்தாலும் வீட்டிலே தங்கி உதவினார்கள். இப்போது உறவினர்களுக்கு நிறைய வசதிகளுடன் ஓட்டலில் அறை எடுத்து கொடுக்க வேண்டி இருக்கிறது. அவர்களை அழைத்து வர வாகன வசதி செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது. இப்படி வேறு கல்யாண செலவு அதிகமாகி கொண்டு இருக்கிறது.
உறவினர்கள் கல கல பேச்சு, சிறு சிறு சண்டை எல்லாம் போட்டு கொண்டு ஆளுக்கு ஒரு வேலை செய்த காலங்கள் குறைந்து வருகிறது.
என் கல்யாணத்தில் வீட்டிலேயே எல்லா பக்ஷணங்களும் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் தான் மெல்ல மெல்லக் குறைந்து விட்டது.
Delete