எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 17, 2022

ஆருரா! தியாகேசா! என்ன உன் நிலைமை! பகுதி 7

இங்கே கடைசிப் பதிவு  (இம்முறை எழுதிய பதிவின் சுட்டி)


மதிய நேரத்து வழிபாடு நடந்து கொண்டிருந்தது. முதலில் நாங்கள் வன்மீக நாதர் என்னும் புற்றிடங்கொண்ட நாயகரைத் தரிசிக்கச் சென்றோம். அபிஷேஹங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆகவே அங்கே திரை போட்டிருந்தது. கமலாம்பிகையைப் பார்ப்பதென்றால் அதுக்குத் தனியாகப் போகணும். கொஞ்சம் நேரம் ஆகும். ஆகவே கோயிலிலேயே குருக்கள் வீதிவிடங்கரையும் தியாகராஜரையும் முதலில் பார்க்குமாறு சொல்லவே அங்கே சென்றோம். பூவம்பலம் என்னும் பெயருக்கொப்பப் பூக்களால் மிக மிக அழகாய் அலங்கரிக்கப் பட்டிருந்தது. நடுவில் இருந்த குமாரன் பூக்களால் மறைக்கப் பட்டிருந்தான். வெளியே தெரியவில்லை. நாதமும், பிந்துவும் சேர்ந்து பிறந்த கலை வெளியே உடனே தெரியாதன்றோ? 

தியாகராஜரைப் பார்க்கப் பார்க்க மனம் பரவசம் அடைந்தது. இன்னதென்று புரியாத ஓர் உணர்வு. அவருக்குப் பின்னால் இருந்த ஒரு சிறு மேடையில் ஒரு வெள்ளிப் பெட்டி இருந்தது. அலங்காரங்கள் செய்து பூக்கள் சார்த்தி வைக்கப் பட்டிருந்த அந்தப் பெட்டியில் தான் வீதிவிடங்கர் இருப்பதாய்ச் சொன்னார்கள். வன்மீக நாதருக்கு அபிஷேஹம் முடிந்ததும், வீதி விடங்கருக்கு அபிஷேஹம் நடக்கும் என்றும் இருந்து பார்த்துவிட்டுப் போங்கள் என்றும் சொன்னார்கள். கூட்டமும் அதிகம் இல்லை. நானும் முன்னால் போய் நின்று கொண்டிருந்தேன். திரும்ப மனம் வரவில்லை. பத்துப் பதினைந்து பேர் உள்ளூர் மக்கள் இருந்தனர். ஒருத்தர் வீதி விடங்கர் பத்தின கதையைச் சொல்ல ஆரம்பிக்க, கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன். வன்மீக நாதருக்கு அபிஷேக ஆராதிகள் முடிந்து இங்கே ஆரம்பம் ஆயிற்று. 

தில்லையில் ரத்தின சபாபதிக்குச் செய்வது போல் விஸ்தாரமாய் இருக்கும் என நம்பிக்கொண்டிருந்தேன். அங்கே எல்லாவித அபிஷேஹங்களும் நடக்கும். ஆண்டவன் ஆடிக்கொண்டிருப்பதால் அதற்கு இடையூறு நேராவண்ணம் மனதிலேயே மந்திரங்கள் ஜபிப்பார்கள் தில்லையிலும். அது போல் இங்கேயும் அஜபா நடனம் ஆயிற்றே. மனதிலேயே மந்திரம் ஜபித்தாலும் அபிஷேஹம் நடைபெற்றது எனக்கு அவ்வளவாய் மனதுக்குத் திருப்தியைத் தரவில்லை. என்னமோ அவசரம், அவசரமாய்ப் பாலை ஊற்றிவிட்டுப் பின்னர் தண்ணீரையும் ஊற்றினார்கள். பின்னர் ஒரு அலங்காரம் இல்லை, எதுவும் இல்லை, வீதிவிடங்கரைத் துடைத்துப் பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டார்கள். தீபாராதனை எடுத்தார்களா? சரியாய்த் தெரியவில்லை. 

ஒரே ஏமாற்றமாய் இருந்தது. சரி அதுதான் போகட்டும் என்றால் இங்கே தேவாரமோ, திருவாசகமோ எதுவும் யாராலும் பாடப்படவில்லை. எத்தனை பதிகங்கள் இந்தக் கோயிலுக்கு என்றே? நாயன்மார்கள் அதிகப் பதிகங்கள் பாடியதே இந்தக் கோயிலின் மீது தான் என முதலிலேயே அதற்காகவே குறிப்பிட்டேன். ஆனால் யாருமே வாயைத் திறக்கவில்லை. எந்த ஓதுவாரும் கோயிலுக்கென இல்லையா எனக் கேட்க நினைத்தேன். நம்ம ம.பா. சரி, சரி, வா, போகலாம்னு கூப்பிட்டுக் கொண்டு, கமலாம்பிகை சந்நிதி மூடிடுவாங்களாம், அப்புறம் பார்க்க முடியாதுனு இழுத்துக்கொண்டு கிளம்பினார். அரை மனசாய் எந்த விபரமும் யாரிடமும் கேட்கமுடியலையேனு வருத்தத்தோடு கமலாம்பிகையைத் தரிசிக்கச் சென்றோம். வழியிலேயே ஒரு குருக்கள் நடை சார்த்தியாச்சு எனச் சொல்ல என்னடா இதுனு திகைத்தோம். ஆனாலும் கூட வந்த ஒரு சில உள்ளூர் மக்கள் அவங்களோடு வரச் சொல்லவே நாங்களும் பின்னால் நடந்தோம். மற்ற வர்ணனைகள், விளக்கங்கள் தொடரும்.

************************************************************************************

இது கடந்த 2010 ஆம் ஆண்டு போனப்போக் கிடைத்த தரிசனங்களைக் குறித்து எழுதின பதிவு. இந்த முறை கமலாம்பிகையைத் தரிசித்ததோடு சரி. பிரகாரமெலலம் சுத்தலை. அடுத்து அவை பற்றிய விபரமான பதிவு வரும்.காலை வேளை என்பதால் இம்முறை கமலாம்பிகை சந்நிதி மூடவில்லை. செல்லும் வழியிலேயே இருக்கும் இன்னொரு அம்பிகை சந்நிதிக்கு இம்முறை போகவே இல்லை. குருக்கள் நேரே கமலாம்பிகையைப் பார்க்க அழைத்துச் சென்று விட்டார். அங்கே உச்சிஷ்ட கணபதிக்கு அர்ச்சனை இருந்ததே!ஆ

13 comments:

  1. வன்மீக நாதர் புற்று வடிவம் என்பதால் குவளை சாத்தி அபிஷேகம் என்பார்கள்.. இங்கே தியாகராஜர் சந்நிதி அங்கே கமலாம்பிகை சந்நிதிகளில் குருக்கள் இருந்து கொண்டு ஏககாலத்தில் அபிஷேகங்கள் செய்து நடை சாத்தி விடுவார்கள்.. இங்கிருந்து அங்கே ஓடுவதற்கு எல்லாராலும் ஆகாது..

    பெரும்பாலான பெரிய கோயில்களில் ஓதுவார்களின் எண்ணிக்கையே குறைந்து போயிற்று.. வெளிப் பிரகாரத்தில் நாமே பாடிக் கொண்டால்தான் உண்டு..
    நிவேத்ய காலத்தில் மங்கல இன்னிசை கூட கிடையாது..

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு கால பூஜையிலும் நாட்டியாஞ்சலி நிகழ்ந்திருக்கின்றது..

    இன்று?..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வன்மீகநாதருக்கு நீங்க சொன்னாப்போல் தான். தியாகராஜருக்கும் கமலாம்பிகைக்கும் சேர்த்தே நடைபெறும் என்பது தெரிந்திருந்தாலும் இரண்டையும் ஒரு சேரப் பார்க்க முடியாதபடிக்கு தொலைவில் கமலாம்பிகை குடி கொண்டிருக்கிறாள். இங்கேயும் மங்கல இசை இசைக்கலை. தஞ்சைப் பெரிய கோயிலுக்கு என நாட்டியம் ஆடுவதற்குப் பெண்கள் தனியாக இருந்தனர். கோயிலைச் சுற்றிய வீதிகளிலேயே குடி இருந்தனர் என்பதும் படிச்சிருக்கேன்.

      Delete
  2. தேவாரம், திருவாசகம் சேவிக்காத்து மனதுக்கு வருத்தமே... ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு தமிழ் மறைகளைச் சேவிப்பது ஊக்குவிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹூம்! அப்போவே 12 வருடங்கள் முன்னரே ஓதுவார்கள் இல்லை என்றால் இப்போ மட்டும் இருந்திருக்கவா போறாங்க? நானும் ரங்க்ஸிடம் கேட்டுக்கலை. உடம்புப் படுத்தலில் அதெல்லாம் மறந்தே போச்சு. இப்போ நினைச்சுக்கறேன். இருந்தாங்களா இல்லையா என.

      Delete
  3. கமலாம்பிகை தரிசனம் கிடைத்ததா ?

    ReplyDelete
  4. திருவாரூர் மரகத லிங்கம்(வீதிவிடங்க லிங்கம்)தரிசனம் கிடைத்து இருக்கிறது அருமை.
    வெள்ளிகுவளை சாற்றி வெள்ளிபெட்டியில் பத்திரபடுத்துவார்கள். இரவு 7 மணிக்கு அதன் பூஜை பார்த்து இருக்கிறேன்.

    திருவெண்காடில் ஸ்படிக லிங்கம் அபிஷேகம் பார்த்து இருக்கிறேன். அங்கு பால், மற்றும் அன்ன அபிசேகம் நடக்கும் சந்தனம் சாற்றி பூஜை முடிந்தவுடன் வெள்ளிபெட்டியில் வைத்து விடுவார்கள். முதல் நாள் சாற்றின சந்தனம் நிற்பவர்களுக்கு கொடுப்பார்கள்.
    சிதம்பரத்தில் நிறைய தடவை பார்த்து இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நாங்க பார்த்தது மத்தியானத்தில். இரவில் ஊருக்குத் திரும்பிட்டோம். திருவெண்காட்டில் பார்த்தது இல்லை. ஆனால் கோயிலுக்கு 2,3 முறைகள் போயிருக்கோம். சிதம்பரத்தில் நிறையப் பார்த்தாச்சு. அங்கே ஒவ்வொரு வழிபாடு முடிஞ்சதும் ஆதீனத்தால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் அன்றைய தேவாரம்/திருவாசகம் ஓதுவார்கள். பின்னர் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து புராணங்களும் ஓதப்படும் தீக்ஷிதர்களும் கூடவே சொல்லுவார்கள். அதிலும் மார்கழி மாதம் திருவாதிரைக்கு முன்னர் மாணிக்கவாசகரை வைத்து நடத்தப்படும் சிறப்புத் தீபாராதனையில் அமர்க்களமாக இருக்கும். அன்று தான் பிக்ஷாண்டவர் வீதி வலம் வந்திருப்பார். மறுநாள் தேருக்குக் கிளம்பும் முன்னர் நடராஜருக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறும். சுமார் 2,3 மணி நேரங்கள் ஆகிவிடும் முடிவதற்கு.

      Delete
  5. நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை - 2010 ல்.  இப்போது இன்னமும் மோசமாக இருக்கிறதா?  சரியாகி விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. இப்போது தான் அபிஷேஹப் பொருட்களோ, பூக்களோ, மாலைகளோ கொடுக்கலை என்றேனே! ஶ்ரீராம்! மெல்ல மெல்ல மக்கள் கோயிலுக்கு வருவதை எப்படியாவது தடுக்கணும்னு பார்க்கறாங்களோனு தோணுது! :( எல்லாம் அந்தத் தியாகராஜன் தான் அருள் புரியணும்.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    நல்ல பதிவு. நாங்கள் இன்னமும் இந்த கோவிலுக்கு ஒரு முறை கூட செல்லாததினால் , எங்கே ஸ்வாமி, எங்கே அம்பாள் எனத் தெரியவில்லை. (போயிருந்தால் மட்டும் உங்கள் அளவு நினைவிருக்கும் என ம. சா இடிக்கிறது.) நீங்கள் சொல்வதை வைத்து அனைத்தையும் கற்பனையில் கண்டு களிக்கிறேன். அம்பாள் கமலாம்பிகை தரிசனம் நன்றாக கிடைத்திருக்கமென நினைக்கிறேன். எப்படியோ உடல் நல பாதிப்புகள் நடுவிலும், மனோ தைரியத்தோடு சென்று வந்து விட்டீர்கள். அனைத்தும் ஆண்டவன் செயல். விபரமான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. போன முறையும் 2010இல் கிடைத்தது. இம்முறை நான் காலையில் போனது தானே! கமலாம்பிகைக்கு அர்ச்சனை முடிஞ்சதும் உடனே ஓட்டலுக்குத் திரும்பிட்டோம்.

      Delete
  7. அவனருளை வேண்டுவோம்.
    புகழ் பெற்ற தலங்கள் இப்படியாக இருப்பது கவலை தருகிறது.

    ReplyDelete