அது என்னமோ தெரியலை. மாமா இருந்தவரைக்கும் நான் அதிகமா மருத்துவப் பரிசோதனை எல்லாம் செய்துக்கலை. மருத்துவர் கொடுத்த வழக்கமான மருந்துகளை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இப்போப்பையரும் பெண்ணும் மாமாவின் காரியங்கள் முடிந்ததும் கூட்டிச் சென்றார்கள் கத்தார் வருவதற்கு மருத்துவப் பரிசோதனை ரிப்போர்ட்டும் மருத்துவரின் மருந்துச் சீட்டும் இல்லாமல் போக முடியாது என்பதால் போனோம். அதிலிருந்து ஒரே பரிசோதனைகள் தான். நான் ஜூன் மாசம் வரைக்கும் ரத்தத்தில் சர்க்கரை பார்ப்பது தவிர்த்து எதுவும் செய்து கொண்டதில்லை. இப்போ எக்கச்சக்கப் பரிசோதனைகள். அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எக்ஸ்ரேக்கள் என. அதிலும் பிஎஸ் என் எல் போனப்போப் பையர் படிகளில் இறங்க முடியாத என்னைத் தூக்கி இறக்கி விடும்போது ஏதோ பிரச்னையாகி வயிற்றில் மார்புக்கூட்டுக்கு அருகே இருந்து மேல் வயிறு முழுவதும் எக்கச்சக்க வலி ஏற்பட்டுப் பல மருந்துகள் சாப்பிட்டும் தீராமல் இங்கே தோஹா வருவதற்கு நாலைந்து நாட்கள் முன்னர் (டிக்கெட் எல்லாம் வாங்கினப்புறமா) வலி மிக மிக அதிகமாகி உட்காரவோ, படுக்கவோ முடியாமல் போனதில் ஸ்ரீரங்கத்திலேயே ஒரு சர்ஜனிடம்அவர் சொன்னபடி எல்லாவிதமான ஸ்கேன்களும் எடுக்கப்பட்டு உள்ளே மசில் ஸ்பாசம் ஆக இருக்குனு சொல்லி மாத்திரைகள் கொடுத்தார் ஐந்தே நாட்களுக்கு. கிளம்பும் முன்னர் சரியாகவும் போச்சு. இங்கே வந்து கொஞ்ச நாட்கள் இடப்பக்கம் படுக்க முடியாமல் இருந்தாலும் பின்னர் சரியாகி விட்டது.
இ த்தனை நாட்கள் கழிச்சு இ ப்போத் திடீரென புதன்கிழமை அன்று மதியத்திலிருந்து அந்த வலி. முதல்நாள் கொஞ்சம் பொறுக்கும்படி இருந்தாலும் மேல்வயிற்றைத் தொட முடியலை. படுக்க முடியலை. அன்னிக்குப் பையர் அலுவலக வேலையாக ஆஃப் ஷோர் போயிருந்தார். ஆகவே வீட்டுக்கு வரலை. மறுநாள் தான் வந்தார். அன்னிக்குச் சாயங்காலம் மறுபடி திடீரென வலி வரவே கொஞ்சம் பயந்த நான் பையரிடம் சொல்லக் கிட்டத்தட்ட ஆறரை மணி அளவில் மருத்துவமனை சென்றோம். வழக்கமாகப் பார்க்கும் மருத்துவர் அந்த வாரம் முழுவதும் விடுமுறையில் இருந்ததால் இன்னொரு மலையாள மருத்துவரிடம் போனோம். அவர் பல விதங்களிலும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு மறுபடியும் சர்ஜனிடம் தான் போகணும்னு சொல்லிட்டார். சொல்லிட்டு அந்த மருத்துவமனையின் சர்ஜனைத் தொடர்பு கொண்டால் அவர் அன்னிக்கு வரலை. ஆகவே கத்தாரின் தோஹாவில் உள்ள அரசு மருத்துவமனை சர்ஜனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். உடனே அங்கே போய் எமர்ஜென்சியில் பார்க்கச் சொல்லி வற்புறுத்தி விட்டார்.
நாங்கள் போன ஆஸ்டெர் மருத்துவமனையிலிருந்து சுமார் அரை மணி நேரப் பயணத்தில் அரசு மருத்துவமனை இருந்தது. அங்கே போனோம். போகும்போதே ஏழரைக்கு மேல் ஆகி விட்டது. அங்கே போய் எமர்ஜென்சியைத் தேடிக்கொண்டு போனோம். இங்கே எல்லாம் பெண்களுக்குத் தனி/ ஆண்களுக்குத் தனி என்றிருப்பதோடு பெண்கள் பக்கம் ஆண்கள் வரக்கூடாது/வர முடியாது. ஆகவே மருமகளுக்குத் தொலைபேசி எப்போ வேண்டுமானாலும் அழைப்பேன் எனப் பையர் சொல்லி வைத்திருந்தார். மருத்துவமனையில் எமர்ஜென்சிக்குள் போகும் இடம் வரைப் பையர் வந்து விட்டார். அங்கே போய்ப் பெயரை ஐடிகார்டுடனும் ஹெல்த் கார்டுடனும் கொடுத்துப் பதிந்து கொண்ட பின்னர் (வழக்கம்போல் வீல் சேர்தான்) அந்தச் செவிலியர் ஒரு பரிசோதனை அறைக்கு முன்னர் என்னை உட்கார்த்தி வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். காரைப் பார்க் செய்யச் சென்ற பையர் முக்கிய நுழைவாயில் வழியாக வந்து நான் அமர்ந்திருக்கும் பெரிய கூடத்தின் வாயில் வரை வந்து அங்கிருந்த செக்யூரிடியிடம் என்னைக் காட்டி விபரங்கள் சொன்னார். அவர் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டார். ஆனால் பையரை உள்ளே விடவில்லை.
காத்திருந்த இடத்தில் எனக்கு முன்னரே நாலைந்து பேர்கள் இருந்ததால் அங்கிருந்த செவிலியர் ஒவ்வொருவராய்க் கூப்பிட்டு உள்ளே அழைத்துச் சென்று பரிசோதனைகளை முடித்தார். கீழே ரத்தப்பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றச் சின்னச் சின்னப்பரிசோதனைகள். அவை முடிந்ததும் என்னை அங்கிருந்த ஒரு உதவிப் பெண்மணி மேலே எமர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இது வேறே வாயில் என்பதால் வெளியே நின்ற பையருக்கு நான் மேலே போயிருப்பதே தெரியாது. உள்ளே போனது தான் தெரியும். பின்னர் எப்படியோ விசாரித்துக் கொண்டு வர முயன்றால் எத்தனையோ ஆண்கள் தத்தம் மனைவியரோடு வந்திருக்கையில் பையரை மட்டும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஆகவே அவர் கீழே சென்று விட்டார். நான் மத்தியானம் சாப்பிட்டது தான். கீழே இருக்கையிலேயே பையர் அங்கே இருந்த செக்யூரிடியிடம் கேட்டுவிட்டு அங்கிருந்த காஃபி ஷாப்பில் கேக் போன்றதொரு வஸ்துவை வாங்கிக் கொடுத்துவிட்டார். தாங்கணுமே, எத்தனை நேரம் ஆகுமோ என்பதால் அதைக் கொஞ்சம் சாப்பிட்டுக்கொண்டேன். தண்ணீர் குடிச்சால் நம்பர் ஒன் போக வேண்டி இருக்கும். துணை இல்லாமல் வீல் சேரிலோ, நடந்தோ போக முடியாது. ஆகவே தண்ணீரே குடிக்கவில்லை. மேல சில மணி நேரக் காத்திருப்பில் எப்போப் பரிசோதனைகள் ஆரம்பிக்கும் எனக் கேட்டதில் சரியாகப் பதில் கிடைக்கவில்லை.
நான் கையில் என்னுடைய அலைபேசியை எடுத்துச் செல்லாததால் மணி என்னனு தெரியலை. அங்கிருந்த ஓரிரு மலையாளச் செவிலியர்கள் பிடிவாதமாக மலையாளத்திலும்/ ஆங்கிலத்திலும்/ அரபியிலும் பேசினார்கள். மறந்து கூட இந்தியிலோ/தமிழிலோ பேசவில்லை. ஆனால் சற்று நேரத்துக்கெல்லாம் என்னைப் பார்க்க மருமகள் வந்து விட்டாள். அவளிடம் கேட்டதில் விபரங்கள் ஒன்றுமே தெரியாத காரணத்தால் அந்த அகாலத்தில் பையர் மருமகளைக் குழந்தையை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார் எனவும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கீழே பையரிடம் விட்டுவிட்டுத் தான் மட்டும் மேலே வந்திருப்பதையும் மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டதாகவும் பதினோரு மணிக்குப் பரிசோதனை ஆரம்பிக்கும் எனச் சொன்னதாகவும் தகவல்கள் கொடுத்தார். பின்னர் அவர் உதவியோடு நான் கழிவறை சென்று வந்தேன். பையரிடம் விபரம் தெரிவிக்க மருமகள் கீழே போய் விட்டார். சற்று நேரத்தில் எனக்குக் கையில் நரம்பு மூலம் மருந்து ஏற்றுவதற்கான ஊசியைச் சொருகி அதில் சில/பல மருந்துகளை ஏற்றி அடுத்தடுத்துச் செய்யப் போகும் பரிசோதனைகளுக்குத் தயார் செய்தனர்.
No comments:
Post a Comment