
ஸ்ரீராம நவமி இன்னிக்கு. தினமும் ராமரை நினைச்சுண்டாலும் இன்னிக்கு ராமநவமி என்பதால் இரண்டு , மூன்று நாட்களாய் அவர் தான் நினைவில். கல்யாணம் ஆகிப்புக்ககத்தில் அழைத்த முதல் நாளில் முதல் நமஸ்காரம் இவருக்குத் தான் பண்ணினோம். இம்மாதிரியானத் தஞ்சாவூர் ஓவியப்படங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் ஏதோ ஒன்றிரண்டு ஏதேனும் தீபாவளி மலர் மூலமாகப் பார்த்திருப்பேன். அப்போ ரொம்பச் சின்ன வயசு தானே. அதனால் அதிகம் இதெல்லாம் தெரிஞ்சிருக்கலை. அவரைப் பார்த்ததுமே மனதில் ஓர் நம்பிக்கை. இஅவர் நம்மை வழி நடத்துவார்னு நினைச்சுண்டேன். அப்போல்லாம் இந்தப்படம் எங்களிடம் வரும்னு தெரியவும் தெரியாது. முதலில் கருவிலியில் இருந்தே கிளம்புவாங்களானு தெரியாத நேரம். ஆகவே பெரிசாய் எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. ஆனால் 1982 -- 83 ஆம் வருஷங்களில் கருவிலியில் எல்லாவற்றையும் விற்று மாமனார் செட்டில் செய்து நிரந்தரமாக எங்களுடன் வந்திருக்க முடிவு செய்து கருவிலி வீட்டைக் காலி செய்தப்போ ராமரும் எங்களுடன் கும்பகோணத்தில் இருந்து எங்களுடன் சென்னைக்குப் பயணம் ஆனார். அதன் பின்னர் எங்களுடனேயே இருந்தார். எங்க வீட்டு கிரஹப்ரவேசம் நடந்தப்போ 83 ஆம் ஆண்டில் இவருக்காகவே ஸ்வாமி அலமாரியில் அளவு எடுத்துப் படம் வைப்பதற்காக இடம் ஏற்படுத்திக் கட்டினோம். அப்போவும் இவர் எங்களுடன் இருப்பார்னு நினைக்கலை. ஏனெனில் மாமனாருக்குத் தன் இரண்டாவது பையருக்குத் தான் இதைக் கொடுக்கணும் எனத் தீர்மானமாக ஒரு கருத்து இருந்தது.. நாங்க வேறே ராஜஸ்தான், குஜராத்னு எல்லாம் போயிண்டு இருந்தோம். என்றாலும் வேறே சில தனிப்பட்ட காரணங்களுக்காக மைத்துனரிடம் தான் கொடுக்கணும்னு இருந்தார்.
ஆனால் அவரோ தன்னால் இதைப் பராமரிக்க முடியாதுனு சொல்லிட்டார். அவர் மனைவிக்கும் பெரிய அளவில் இது குறித்த ஆவல் எல்லாம் இல்லை என்பதால் இயல்பாக இது எங்களிடமே இருந்தது. கடைசி மைத்துனர் தனக்கு வேண்டாம் என முன்னரே சொல்லிட்டார். இப்படித் தான் இவர் எங்களுடன் வந்து இருக்க ஆரம்பித்தார். நாங்க 88 ஆம் ஆண்டில் மறுபடியும் ராஜஸ்தான், குஜராத் வந்தப்போ மாமனார் இருந்ததால் படம் வீட்டிலேயே ஸ்வாமி அலமாரியில் இருந்தது. பெரியவங்க காலத்தில் இவரை ஸ்வாமி அலமாரியின் மேல் தட்டிலும் கீழே உள்ள அலமாரியில் பஞ்சாயதன பூஜைக்கான விக்ரஹங்களும் சாளக்ராமமும் வைச்சுப்பூஜைகள் செய்திருக்காங்க. சொத்துப் பிரிவினையின் போது என் மாமனாருக்குப் படமும் அவர் அண்ணாவுக்கு விக்ரஹங்களும்னு கொடுத்திருக்காங்க. மாமனாரின் அண்ணாவுக்கு ஆண் வாரிசு இல்லை. பெண் வீட்டுக்கு விக்ரஹங்களைக் கொடுத்தப்போ பெண்ணின் மாமனார் மறுத்திருக்கார். அதே போல் அவங்களுக்கு ஏதோ பிரச்னை வர இந்த விக்ரஹங்கள் என் பெரிய மாமியாரிடமே இருந்தன.
அவற்றை அவர் வைத்து பூஜிக்க முடியாமல் ஓர் பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் அவர் முதியோர் இல்லம் சென்றதால் இவற்றை எங்களிடம் கொடுத்துவிட்டார். இப்படியாகத் தானே அவை 2010 ஆம் ஆண்டில் எங்க வீட்டு ஸ்வாமி அலமாரியில் மேலே படமும், கீழே விக்ரஹங்களும் என வைத்து இருந்தோம். பின்னர் 2012 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் வந்தப்போ ராமரும் ரொம்ப குஷியாக ரங்கநாதர் என் குலதெய்வம் எனச் சொல்லிக் கொண்டு எங்களோடு பயணம் செய்து இங்கே வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் வரதுக்கு முன்னால் நாங்க என் நாத்தனாரின் மைத்துனர் வீட்டில் இருந்தோம். அங்கே உள்ள ஸ்வாமி அலமாரியில் இருந்த ராமரைத் தான் இங்கே பார்க்கிறீர்கள்.
. போன வருஷம் மாமா இருந்தார். ஸ்ரீராமநவமிக்குச் சாப்பாடு மட்டும் வெளியே வாங்கிக் கொண்டு பிரசாதங்கள் எல்லாம் வீட்டில் பண்ணினேன். மாமாவையே ராமருக்கு மாலை சாத்தச் சொன்னேன். முடியலை தான். ஆனாலும் நடமாடிக் கொண்டு இருந்ததால் ஆர்வமுடன் செய்தார். பூஜை எல்லாம் பண்ண முடியலை. சும்மாப் பிரசாதங்களை வைச்சு நிவேதனம் பண்ணினோம். கற்பூர ஆரத்தி காட்டினோம். இந்த வருஷம் அந்த நினைவுகளில் ஆழ்ந்திருக்கேன்.
இப்போவும் தோஹா கிளம்பும் முன்னால் மைத்துனரிடம் படத்தையும் விக்ரஹங்களையும் வைச்சுக்கறீங்களானு கேட்டதுக்குத் தன்னால் முடியாது. வீட்டில் ஸ்வாமி அலமாரி ரொம்பச் சின்னது. மேலும் இந்தப் படங்களையும் விக்ரஹங்களையும் வைத்துக் கொண்டு அவற்றுக்கான முறைகளில் ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதும் கஷ்டம் எனச் சொல்லிட்டார். தினசரி நிவேதனமே கஷ்டம் என்றா ர். ஆகவே ராமர் ஸ்ரீரங்கத்தில் தனியாகத் தான் இருக்கார். விக்ரஹங்கள் எல்லாம் உள்ளே பெட்டியில். :(
விக்ரஹங்கள் அனைத்தும் ராமருடனேயே இடம் பெற்றிருக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் எடுக்கும் படங்களில் ஒளியின் பிரதிபலிப்பால் படம் சரியாக வந்திருக்காது. நெல்லை கேலி செய்துண்டே இருப்பார்.
நானும் இன்று உங்களை நினைத்து கொண்டேன்.
ReplyDeleteநீங்களும் , சாரும் மதுரைக்கு எங்கள் வீட்டுக்கு வந்த போது ராமர் வந்தார் உங்களுடன்
வீட்டுக்குள் வந்தவுடன் என்னிடம் ராமர் பட்டாபிஷேக படம் என்று சொல்லி கொடுத்தீர்கள்.
https://mathysblog.blogspot.com/2016/06/blog-post_16.html
அன்பருடன் ராமர் வந்தார் என்று பதிவு போட்டேன்.
இன்று அந்த பதிவை பார்த்தேன். என் கணவர் , சார் இருக்கும் படத்தை பார்த்து கொண்டேன்.
உங்களை நினைத்து கொண்டேன் , உங்கள் ஸ்ரீரங்கம் ராமரையும் நினைத்து கொண்டேன்.
பதிவு போட்டு அவரை தரிசனம் செய்ய வைத்து விட்டீர்கள்.
நெகிழ்வான நினைவுகள் கோமதி அக்கா.
Deleteஆமாம் ஸ்ரீராம் . ராமநவமி தினம் அவர்கள் இரண்டு பேரையும் நினைத்து கொள்வேன். சாரிடம் "உங்கள் இருவரையும் எடுத்த படத்தை போடலாமா பதிவில்: என்று கேட்ட போது
Delete"அதனால் என்ன போட்டு கொள்ளுங்கள்" என்று சாம்பசிவம் சார் பர்மிஷன் கொடுத்தார்.
இன்னொரு முறை வருகிறேன் உங்கள் வீட்டுக்கு என்றார்கள்.
வாங்க கோமதி அரசு. முதல் நபராக வந்து கருத்துச் சொன்னதுக்கும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுக்கும் நன்றி. நானும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் உங்களை நினைத்துக் கொள்வேன். அதோடு இப்போவெல்லாம் மதுரைனாலே உங்க நினைவு தான் வருது.
Deleteஅன்பருடன் ராமர் வந்தார் பதிவை படித்து பின்னூட்டம் போட்டவர்கள் குறைவு ஆனால் படித்தவர்கள் 7742 பேர் வந்து படித்து இருந்தார்கள்.
ReplyDeleteராமர் வந்தார் என்றவுடன் இராமரை பார்க்க அவ்வளவு பேர் வந்து இருக்கிறார்கள்.
ராமர் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
ராமருக்கு எப்போவுமே ரசிகர்கள் அதிகம் தானே. அதிலும் இது ஸ்ரீராமநவமி தினம் வேறே.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. பச்சைக்கலர் ஸ்ரீ ராமரின் படமும், பிரசாதங்கள் படமும் நன்றாக உள்ளது. ஸ்ரீ ராமரை பக்தியுடன் வணங்கி கொண்டேன்.
மனதின் நினைவுகளை அப்படியே விளக்கமாக சொல்லியுள்ளீர்கள். நினைவுகள் என்றுமே உறங்காதது அல்லவா..!
ஸ்ரீ ராமர் தங்களுடேயே வந்த காரணங்களை தெரிந்து கொண்டேன். அதற்கே நீங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எல்லாமே நல்லபடியாக நடக்க அவனருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும்.
இத்தனை வருடங்களாக உங்களது அன்பிற்கு கட்டுப்பட்டு உடனிருந்த ஸ்ரீ ராமர் இப்போது தனியாக இருந்தாலும், என்றுமே உங்கள் உள்ளத்தில் தங்கியிருந்து அருள் புரிவார். இறைவனின் நினைவுகளை நம்மிடமிருந்து எந்த சக்தியாலும் பிரிக்க இயலாது. ஸ்ரீராமா ஜெயராமா என்றாலே அவர் எங்கிருந்தாலும் மனம் பூரித்துப் போவார். 🙏. ராம நாமந்தான் எத்தனை பெரிய பேரின்பம். ராமா, ராமா🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மைதான் கமலா. இறைவனின் நினைவுகளே போதுமே. ஆனால் இந்த மனம் குரங்கு என்பதை நிருபிக்கும் வண்ணம் தேவையில்லாத நினைவுகள் எல்லாமும் வருமே! அதைத் தான் நிறுத்தணும்.
Deleteராமர் தான் யாருடன் இருக்கவேண்டும் என்று முன்னரே முடிவு செய்து விட்டார் போல.. ஒவ்வொன்றும் தானாய் நிகழ்ந்திருக்கிறது. மனிதன் நினைக்கலாம். முடிப்பது அவன்தானே..
ReplyDeleteஅப்படித் தான் நினைக்கிறேன் ஸ்ரீராம், எனெனில் என் மாமனார் என்னிடம் சொல்லிண்டே இருப்பார். ராமர் படத்தை உனக்குக் கொடுப்பேன்னு நினைக்காதே! என்பார். அதோடு அவருக்கு நான் அவங்க வழியிலே சொந்தம் இல்லை என்பதும் முற்றிலும் வேறு ஊர், வேறே ரத்தம் என்பது கடைசி வரை ஒரு பெரிய குறையாகவே இருந்தது. வேறே ரத்தத்தைச் சேர்ந்தவளுக்கு இதன் அருமை எப்படிப் புரியும் என்பார். கடவுள் போட்ட முடிச்சு! ஆனால் அதை அவர் புரிஞ்சுக்கலைனே சொல்லணும்.
Deleteஒளிச்சிதறலுடன் போட்டோ முன்னரே பார்த்திருக்கிறேன். கடவுளின் அருளாசி ஒளியாய் அது கண்ணுக்குத் தெரியும்.
ReplyDeleteநிறையவே இருக்கு ஸ்ரீராம் கூகிள் ஃபோட்டோஸில். அதை எடுத்துப் போடலை. நெல்லை பழைய படங்களில் சிலவற்றை அனுப்பி இருந்தார். :) பதிவைப் பார்த்துட்டுனு நினைக்கிறேன்.
Deleteஅக்கா மானசீகமாக நீங்கள் ராமரோடு ஒன்றி இருப்பதே அவருக்கு பூஜை நிவேதனம் எல்லாம் ஆனாப்லதான். அவரும் அதை அறிவாரே! அப்புறம் என்ன!! கலக்கம் பயம்.
ReplyDeleteஎங்கு சென்றாலும் எல்லாவற்றையும் நம்மோடு கொண்டு செல்ல முடியாத நிலை எற்படலாம் என்பதால் கடஉள் என்று இருந்துவிட்டால் எங்கும் மனம் ஆனந்தலையில் இருந்துவிடும். ஆனால் அது எவ்வளவு கடினமான வழி என்பதும் இருக்குதான்.
கீதா
இப்படி எல்லாம் யோசிக்கலை தி/கீதா. ரொம்பவே தத்துவார்த்தமாக இல்லாமல் யதார்த்தமாகவே இருப்போம்னு எண்ணம். ஆனால் எங்க பையர் ஸ்ரீராமரை வைச்சுப்பார்னு தான் எதிர்பார்த்தோம். எதிர்பார்க்கிறேன். போகப் போகத் தெரியும்.அதோடு இல்லாமல் இங்கெல்லாம் கொண்டு வர அனுமதி வாங்கணும். அம்பேரிக்காவுக்குப் போனாலும் கொடுக்கணும். படம் பழைய படம் குடும்பச் சொத்து என்பதை எல்லாம் நிரூபிக்கணும். விக்ரஹங்கள் வீட்டில் இருந்தவை, எந்தக் கோயிலில் இருந்தும் திருடலை. பூர்விகம் என்பதை எல்லாம் சான்றுகளுடன் நிரூபிக்கணும். இத்தனையும் இருக்கு. ஷிப்பிங் செய்யும்போதும் கவனமாகப்படம் உடையாமலோ விக்ரஹங்கள் பழுதாகாமலோ செய்யணும். எத்தனையோ பாடு இருக்கு இதிலே. நிதானமாக யோசிச்சுத் தான் செய்யணும்.
Deleteஸ்ரீராம நவமி - உங்கள் நினைவும், ராமர் படத்தின் நினைவும் வந்தது.
ReplyDeleteஎல்லோரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி வெங்கட், இந்த வருஷம் தேரின் படங்களை நீங்க பகிரலையோ? தேடினேன் முகநூலில். கிடைக்கலை. இப்போ பிரம்மோற்சவத்துக்குப் பின்னரும் தேர் உண்டு இல்லையா? உங்கள் பதிவுகளை வலைப்பக்கம் வந்து படிச்சே பல மாதங்கள் ஆகின்றன.
Deleteதஞ்சாவூர் படங்கள் இப்போதும் கிடைக்கின்றன, ஆனால் அந்தக்கால படங்களின் அழகு அலாதி. மேலும் பரம்பரையாக பூஜிக்கப்பட்டது, உங்கள் மகனிடம் இருப்பதே சிறப்பு. பார்க்கலாம், ஸ்ரீராமனின் சித்தம் எப்படி இருக்கிறதோ?
ReplyDelete