
ஸ்ரீராம நவமி இன்னிக்கு. தினமும் ராமரை நினைச்சுண்டாலும் இன்னிக்கு ராமநவமி என்பதால் இரண்டு , மூன்று நாட்களாய் அவர் தான் நினைவில். கல்யாணம் ஆகிப்புக்ககத்தில் அழைத்த முதல் நாளில் முதல் நமஸ்காரம் இவருக்குத் தான் பண்ணினோம். இம்மாதிரியானத் தஞ்சாவூர் ஓவியப்படங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் ஏதோ ஒன்றிரண்டு ஏதேனும் தீபாவளி மலர் மூலமாகப் பார்த்திருப்பேன். அப்போ ரொம்பச் சின்ன வயசு தானே. அதனால் அதிகம் இதெல்லாம் தெரிஞ்சிருக்கலை. அவரைப் பார்த்ததுமே மனதில் ஓர் நம்பிக்கை. இஅவர் நம்மை வழி நடத்துவார்னு நினைச்சுண்டேன். அப்போல்லாம் இந்தப்படம் எங்களிடம் வரும்னு தெரியவும் தெரியாது. முதலில் கருவிலியில் இருந்தே கிளம்புவாங்களானு தெரியாத நேரம். ஆகவே பெரிசாய் எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. ஆனால் 1982 -- 83 ஆம் வருஷங்களில் கருவிலியில் எல்லாவற்றையும் விற்று மாமனார் செட்டில் செய்து நிரந்தரமாக எங்களுடன் வந்திருக்க முடிவு செய்து கருவிலி வீட்டைக் காலி செய்தப்போ ராமரும் எங்களுடன் கும்பகோணத்தில் இருந்து எங்களுடன் சென்னைக்குப் பயணம் ஆனார். அதன் பின்னர் எங்களுடனேயே இருந்தார். எங்க வீட்டு கிரஹப்ரவேசம் நடந்தப்போ 83 ஆம் ஆண்டில் இவருக்காகவே ஸ்வாமி அலமாரியில் அளவு எடுத்துப் படம் வைப்பதற்காக இடம் ஏற்படுத்திக் கட்டினோம். அப்போவும் இவர் எங்களுடன் இருப்பார்னு நினைக்கலை. ஏனெனில் மாமனாருக்குத் தன் இரண்டாவது பையருக்குத் தான் இதைக் கொடுக்கணும் எனத் தீர்மானமாக ஒரு கருத்து இருந்தது.. நாங்க வேறே ராஜஸ்தான், குஜராத்னு எல்லாம் போயிண்டு இருந்தோம். என்றாலும் வேறே சில தனிப்பட்ட காரணங்களுக்காக மைத்துனரிடம் தான் கொடுக்கணும்னு இருந்தார்.
ஆனால் அவரோ தன்னால் இதைப் பராமரிக்க முடியாதுனு சொல்லிட்டார். அவர் மனைவிக்கும் பெரிய அளவில் இது குறித்த ஆவல் எல்லாம் இல்லை என்பதால் இயல்பாக இது எங்களிடமே இருந்தது. கடைசி மைத்துனர் தனக்கு வேண்டாம் என முன்னரே சொல்லிட்டார். இப்படித் தான் இவர் எங்களுடன் வந்து இருக்க ஆரம்பித்தார். நாங்க 88 ஆம் ஆண்டில் மறுபடியும் ராஜஸ்தான், குஜராத் வந்தப்போ மாமனார் இருந்ததால் படம் வீட்டிலேயே ஸ்வாமி அலமாரியில் இருந்தது. பெரியவங்க காலத்தில் இவரை ஸ்வாமி அலமாரியின் மேல் தட்டிலும் கீழே உள்ள அலமாரியில் பஞ்சாயதன பூஜைக்கான விக்ரஹங்களும் சாளக்ராமமும் வைச்சுப்பூஜைகள் செய்திருக்காங்க. சொத்துப் பிரிவினையின் போது என் மாமனாருக்குப் படமும் அவர் அண்ணாவுக்கு விக்ரஹங்களும்னு கொடுத்திருக்காங்க. மாமனாரின் அண்ணாவுக்கு ஆண் வாரிசு இல்லை. பெண் வீட்டுக்கு விக்ரஹங்களைக் கொடுத்தப்போ பெண்ணின் மாமனார் மறுத்திருக்கார். அதே போல் அவங்களுக்கு ஏதோ பிரச்னை வர இந்த விக்ரஹங்கள் என் பெரிய மாமியாரிடமே இருந்தன.
அவற்றை அவர் வைத்து பூஜிக்க முடியாமல் ஓர் பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் அவர் முதியோர் இல்லம் சென்றதால் இவற்றை எங்களிடம் கொடுத்துவிட்டார். இப்படியாகத் தானே அவை 2010 ஆம் ஆண்டில் எங்க வீட்டு ஸ்வாமி அலமாரியில் மேலே படமும், கீழே விக்ரஹங்களும் என வைத்து இருந்தோம். பின்னர் 2012 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் வந்தப்போ ராமரும் ரொம்ப குஷியாக ரங்கநாதர் என் குலதெய்வம் எனச் சொல்லிக் கொண்டு எங்களோடு பயணம் செய்து இங்கே வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் வரதுக்கு முன்னால் நாங்க என் நாத்தனாரின் மைத்துனர் வீட்டில் இருந்தோம். அங்கே உள்ள ஸ்வாமி அலமாரியில் இருந்த ராமரைத் தான் இங்கே பார்க்கிறீர்கள்.
. போன வருஷம் மாமா இருந்தார். ஸ்ரீராமநவமிக்குச் சாப்பாடு மட்டும் வெளியே வாங்கிக் கொண்டு பிரசாதங்கள் எல்லாம் வீட்டில் பண்ணினேன். மாமாவையே ராமருக்கு மாலை சாத்தச் சொன்னேன். முடியலை தான். ஆனாலும் நடமாடிக் கொண்டு இருந்ததால் ஆர்வமுடன் செய்தார். பூஜை எல்லாம் பண்ண முடியலை. சும்மாப் பிரசாதங்களை வைச்சு நிவேதனம் பண்ணினோம். கற்பூர ஆரத்தி காட்டினோம். இந்த வருஷம் அந்த நினைவுகளில் ஆழ்ந்திருக்கேன்.
இப்போவும் தோஹா கிளம்பும் முன்னால் மைத்துனரிடம் படத்தையும் விக்ரஹங்களையும் வைச்சுக்கறீங்களானு கேட்டதுக்குத் தன்னால் முடியாது. வீட்டில் ஸ்வாமி அலமாரி ரொம்பச் சின்னது. மேலும் இந்தப் படங்களையும் விக்ரஹங்களையும் வைத்துக் கொண்டு அவற்றுக்கான முறைகளில் ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதும் கஷ்டம் எனச் சொல்லிட்டார். தினசரி நிவேதனமே கஷ்டம் என்றா ர். ஆகவே ராமர் ஸ்ரீரங்கத்தில் தனியாகத் தான் இருக்கார். விக்ரஹங்கள் எல்லாம் உள்ளே பெட்டியில். :(
விக்ரஹங்கள் அனைத்தும் ராமருடனேயே இடம் பெற்றிருக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் எடுக்கும் படங்களில் ஒளியின் பிரதிபலிப்பால் படம் சரியாக வந்திருக்காது. நெல்லை கேலி செய்துண்டே இருப்பார்.
No comments:
Post a Comment