ஒரு நல்ல படம் பார்த்தேன். அதுவும் தமிழில். உண்மையாகவே நல்ல படம். எல்லா நடிக, நடிகையரும் புதுசு எனக்கு. யாரையுமே தெரியலை. படம் பார்த்த பின்னர் விக்கியில் தேடிக் கண்டு பிடிச்சு யார் யாருனு பார்த்துக் கொண்டேன். படம் பெயர் "மொத ராத்திரி". கதையும் அது பற்றித் தான். துபாயில் ஆறு வருஷங்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மருதநாயகத்துக்குத் திருமணம். ஆனால் அது அவனுக்குத் தெரியாது. அவனிடம் தங்கை பிள்ளைக்குக் காது குத்து என அழைத்திருக்காங்க. அந்தத் தங்கை பிள்ளைக்கு ஆறேழு வயதிருக்கும். ரொம்ப லேட்டாக் காது குத்தல்னு சொல்லிட்டாங்க போல. ஆனால் உண்மையில் அன்னிக்கு மருத நாயகத்துக்கு ஒரு தூரத்து உறவுக்காரப் பெண்ணுடன் கல்யாணம்.
ஆரம்பத்திலேயே படம் விறு விறு. கல்யாணம்னு ஏற்பாடுகள் ஆகிக் கொண்டிருக்கையிலேயே முதல்நாள் தான் விமானம் ஏறுகிறான் மருத நாயகம். அவன் கல்யாணத்துக்கு வந்து சேருவானா இல்லையானு பெண் வீட்டிலும் சரி, பிள்ளை வீட்டிலும் சரி எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். பிள்ளையின் அம்மாவுக்குக் கவலை, சந்தேகம், பிள்ளை வருவானா ஏமாற்றுவானா என்பதில். இதை வைத்து மருதநாயகத்தின் பெற்றோருடன் அவன் தங்கை சண்டை போடுகிறாள். மருதநாயகம் ஏதோ மன வருத்தத்தில் ஊரை விட்டுப் போயிருக்கிறான் என்ற அளவில் புரிந்து கொண்டாலும் பின்னால் தெரிய வருகிறது காதல் தோல்வி என. மருதநாயகத்தை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரும் அவன் தங்கையின் கணவர் அவனிடம் அவனுக்குக் கல்யாணம் என்பதைச் சொல்லாமல் ஊருக்கு அழைத்துவர நினைக்க மாமாவை அழைத்து வர அப்பாவுடன் சென்றிருக்கும் சிறுவன் போட்டு உடைத்துவிடுகிறான் மருதநாயகத்துக்கு முத்துச் செல்வி என்னும் பெண்ணுடன் கல்யாணம் என்பதை. அப்போது தான் காதல் தோல்வியில் மனம் உடைந்து ஊருக்கே வராமல் ஆறு வருஷங்களாக துபாயிலேயே இருந்த மருதநாயகத்தை இப்படிச் சொல்லி வரவழைத்திருக்கிறார்கள் என்பது. ஒரு மாதிரி சமாதானம் செய்து மாப்பிள்ளை தன் மனைவியின் சகோதரனை அழைத்து வருகிறார்.
ஆனால் அங்கே பெண்ணுக்கோ வேறு பிரச்னை! அவள் வேறொருவனைக் காதலிக்கிறாள். அவனுடன் ஓடிப் போகத் திட்டம் போட்டிருக்கிறாள். இதற்கு நடுவில் பிள்ளை வீட்டுக்காரர்கள் தான் கல்யாணத்தை எடுத்துச் செய்யும் முறை என்பதால் பெண் வீட்டுக்காரர்கள் பிள்ளை வீட்டுக்காரர்கள் தங்களைச் சரியாக கவனிக்கவில்லை, மரியாதை செய்யவில்லை எனச் சொல்ல இருவர் குடும்பத்திற்கும் கொஞ்சம் சச்சரவு ஏற்பட்டு அடங்குகிறது. பிள்ளையின் அம்மா தன் பிள்ளையின் பழைய விவகாரம் பெண் வீட்டுக்குத் தெரியாமல் காப்பாத்துவதற்காகத் தன் பெண்ணிடம் சொல்லிப் பெண் வீட்டினரை மனம் கோணாமல் கவனித்துக் கொள்ளச் சொல்லுகிறாள். ஆனால் பெண்ணோ ! தனி அறையில் இருக்கும் பெண்ணை அழைத்துவரச் சொல்லி புரோகிதர் கூப்பிடப் பெண்ணை அழைத்துக் கொண்டு மணமேடைக்குச் செல்ல வேண்டும் என்பதால் கதவைத் தட்டும் அவள் தங்கை முறைப் பெண் கல்யாணப்பெண் வர நேரமாவதை நினைத்துக் கூப்பிட அங்கே பெண்ணோ கழிவறையில் உட்கார்ந்து கொண்டு தன் காதலனுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கிறாள். அவளிடம் மொபைல் இருப்பது அவள் அம்மாவுக்குத் தெரியாது என்பதால் இடுப்பில் மறைச்சு வைத்துக்கொண்டு பேசிக் காதலனுடன் ஓடிப் போகத் திட்டமிடுகிறாள். அவள் காதலனும் ஒத்துக் கொண்டு கிளம்புகிறான்.
ஆனால் அவனிடம் தேவையான பணம் இல்லை. அந்தப்பெண்ணுடன் ஓடிப் போக நினைக்கும் அவனிடம் அடுத்த வேளைக்கான தேவைக்குப் பணம் இல்லை. அதோடு தொடர்ந்து குடும்பம் நடத்தவும் மற்றச் செலவுகளுக்கும் தேவையான பணமும் அவனால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. நண்பர்களைக் கேட்க அவர்களுடன் இவனுக்குச் சண்டை வர, நண்பர்கள் கை விரிக்கின்றனர் என்பதோடு அவன் நிலைமையையும் எடுத்துச் சொல்லுகிறார்கள். இங்கே இந்தப் பெண்ணோ முதலிரவுக்கு ஏற்பாடு செய்யும் முன்னர் கிளம்பி விடத் துடிக்கிறாள். லங்கிணி மாதிரி இருக்கும் அம்மாவை ஏமாற்றி விட்டுக் கிளம்பணும். இதுக்குள்ளே கல்யாணம் ஆகித் தாலியும் கட்டிப் பெண்ணும், மாப்பிள்ளையும் பிள்ளை வீட்டிற்கு வந்து பெண் விளக்கேற்றியதும் அனைவரும் பெண்ணையும், மாப்பிள்ளையையும் முதலிரவுக்குத் தயார் செய்கின்றனர். முதலிரவு அறையில் இருவரையும் தனித்தும் விட்டுவிட்டுக் கதவை சார்த்திக் கொண்டு எல்லோரும் படுக்கிறார்கள். இரு வீட்டுக் கூட்டம், கூட்டம் அதிகம் என்பதால் நெருக்கமாகப் படுத்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு அந்தப் பெண் தப்பித்து ஓட வேண்டும். என்ன செய்யப் போகிறாள்?
வெள்ளித் திரை எல்லாம் இப்போ இல்லை என்பதால் அவங்க அவங்க கணினியிலோ லாப்டாப்பிலோ பாருங்க மிச்சத்தை. சேத்தன் பூசாரியாக நடிச்சிருக்கார். அவர் தேவையானு முதலில் யோசிச்சேன். ஆனால் முடிவுக்கு அவர் தான் காரணம் என்பதோடு இருவருக்கும் ஒரு வகையில் உதவுகிறார். கதாநாயகனாக நடிச்சிருப்பவர் யாரோ ரிஷி காந்தாம். நல்லா இயல்பா நடிச்சிருக்கார். படத்தில் எல்லோருமே அந்த அந்தக் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்லணும். கதை, வசனம், இயக்குநர் எல்லாமும் யாரோ ராஜா கருப்பசாமியாம். அவர் தான் இதில் பெண்ணின் காதலராகவும் வருகிறார். இவருக்கு அதிகமாக படத்தில் இடம் இல்லை. ஆனாலும் தான் கல்யாணம் செய்து கொண்டு காதலியைக் காப்பாற்ற முடியுமா? வாழ்க்கை நடத்த முடியுமா என்றெல்லாம் யதார்த்தத்தை யோசிக்கும் சமயம் நன்றாகவே நடிச்சிருக்கார். சேத்தனும் ஓகே தான். மற்றபடி மிச்சப்படத்தையும் முடிவையும் படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க.
ஒரு கல்யாணத்தின் போது இயல்பாகக் குடும்ப உறவுகளிடையே ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கினால் ஏற்படும் கலவரங்களை வெகு இயல்பாகக் காட்டி இருக்கார் இயக்குநர். சம்பந்தப்பட்டவங்க இருவரும் எங்கேயோ இருக்க இங்கே உறவினர்கள் குடுமிபிடிச் சண்டை. படம் பார்ப்பது போல் இல்லாமல் நானே நேரில் கலந்து கொண்டாற்போல் இருந்தது. நல்ல படம்.
பார்த்தேன் பார்த்தேங்கறீங்க... சரி.. எந்த OTT? நான்லாம் விமர்சனம் போடும்போது அதெல்லாம் சொல்றேன்ல... நீங்க சொல்லலைன்னா எப்படி!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், எனக்கு அது போடத் தோணலை. ஏற்கெனவே ஒரு வாரமாக முகநூலில் இந்தப் பட விமரிசனம் படிச்சுட்டு வருவதால் நீங்கல்லாம் பார்த்திருப்பீங்கனு ஒரு எண்ணம். :)))
Deleteபொதுவாகவே புது முகங்கள் என்றால் பார்க்கத் தயக்கம் வரும். அதுவும் குடும்பப் படங்கள் யோசித்துதான் பார்ப்பேன். நான் பார்ப்பதெல்லாம் க்ரைம், த்ரில்லர், சஸ்பென்ஸ், ஹாரர், கோர்ட் ஸீன் வருபவை.
ReplyDeleteநான் நேத்திக்கு லாப்டாப்பில் நெட் ஃப்ளிக்ஸ் திறக்கும்போதே இந்தப்படத்துக்கான ட்ரெயிலருடன் வந்தது. அதைப் பார்த்தால் சுவாரசியமாக இருக்கவே முழுப்படமும் பார்த்தேன். காமெடினு வேறே போட்டிருந்தாங்க. அப்படி ஒண்ணும் காமெடி இல்லை. ஆனாலும் கதைக்கரு நன்றாக இருந்தது. படம் எடுத்திருப்பதும் நல்லாவே எடுத்திருக்காங்க. ஒரு அபத்தமான காட்சியோ அதிகமான மேக்கப்போ, குத்துப்பாட்டோ, டூயட்டோ எதுவும் இல்லை. வசனங்களை நடிச்சவங்க எல்லோரும் உணர்ந்து பேசி இருக்காங்க. மற்றபடி எனக்கும் சஸ்பென்ஸ் படங்கள், பேய்ப்படங்கள், நகைச்சுவைப் படங்கள், கோர்ட் காட்சிகள் அதிகம் உள்ள படங்கள்னு தான் பிடிக்கும். அரிதாகவே வருகின்றன அத்தகைய படங்கள்.
Deleteஅப்பாடி.. உங்கள் டைப்பிங்கிலும் ஒரு தவறு கண்டுபிடித்துவிட்டேன்.. ஹையா ஜாலி!
ReplyDelete??????????????????????????????????
Deleteஎங்கே எழுத்துப் பிழை இருக்குன்னு கண்டுபிடிங்க!!
Deleteஎழுத்துப் பிழைகளைச் சரி பார்த்துட்டு விடுபட்டுப் போன வாக்கியங்களையும் சேர்த்திருக்கேன். சில இடங்களில் வார்த்தைகள்.
Deleteநல்ல படம் எடுத்தா கூட மக்களைக் கவர் அவங்க இப்படிதான் தலைப்பு வைக்க வேண்டியிருக்கு.. ஆனால் அதில்தான் கிளைமேக்ஸும் என்றால் வைக்கதானே செய்வார்கள்!!!
ReplyDeleteபடக்கதையே அந்த இரவைப் பற்றித் தான். அதை நோக்கியே செல்லும் படம் பின்னர் அந்த இரவில் நிலை கொண்டு காலை வரை வந்து முடிகிறது.
Deleteபடம் நெட்பிலிக்ஸில் வெளியாகி இருப்பதாக இப்போதுதான் செய்தி பார்த்தேன்.
ReplyDeleteyessu.
Deleteநேற்று படம் பார்க்கலாம் என்று பார்க்க ஆரம்பித்தேன். என்னவோ மனம் அதில் ஓடவில்லை. ஆனால் கவர்னர் க்ளிப்பிங்ஸ் பார்த்து அந்தப் படம் பார்க்கும் ஆவல் வந்திருக்கிறது.
ReplyDeleteகவர்னரும் பார்க்க வேண்டியது தான். ஆனால் அதில் கவர்னரின் மனைவியாக வரும் மதுபாலா தேவை இல்லாத காரக்டர். அது இல்லாமலேயே படம் எடுத்திருக்கலாம். இப்போ இருமுடி பார்க்கக் கூப்பிட்டுட்டு இருக்கு நெட்ஃப்ளிக்ஸ். விமரிசனம் அவ்வளவு சுகமாக இல்லை என்பதால் யோசிக்கிறேன். :)
Deleteஎனக்கு இருமுடி பார்க்கும் தைரியம் இல்லை! பொறுமையும் இல்லை!
Deleteநான் இன்றுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். எனக்கும் பிடித்திருந்தது. கதாநாயகனாக நடித்திருந்தவர் வேறு சில படங்களிலும் நடித்திருக்கிறார். கதாநாயகி சற்று குள்ளம், ஆனால் சிறப்பாக செய்திருந்தார். கதாநாயகியின் காதலனாக நடித்திருப்பவர்தான் படத்தின் இயக்குனராம், சின்னப் பையனாக இல்லை?
ReplyDeleteஇந்தப் படத்தை பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட சின்ன நெருடல் நம் மக்கள் இன்னும் இப்படித்தான் இருக்கிறார்களா? என்பதுதான்.
வாங்க பானுமதி. நான் படம் பார்த்தே பல மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டன. இப்போத் தான் இங்கே வந்தப்புறமாச் சில படங்கள் பார்த்தேன். அதிலும் தமிழ் ரொம்பக் குறைவு. இந்தப் படம் மாதிரிப் பக்கத்து வீட்டு நிகழ்வுகளைப் படமாக்கினால் நிச்சயம் பார்க்கலாம். ஒவ்வொருத்தரும் வசனங்கள் பேசும்போது இயல்பாகப் பேசுகின்றனர். கொஞ்சம் கூட செயற்கைத் தனம் இல்லை. இயக்குநர் பார்க்கச் சின்னப் பையராக இருந்தாலும் வயது, அனுபவம் இருந்திருக்கும். இல்லைனா இப்படி ஒரு முதிர்ச்சியான படம் எடுக்க முடியாதே! அதுவும் காதலில் ஏமாற்றம் பற்றியும் பெற்றோர்கள் எதிர்ப்புப் பற்றியும்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. பட விமர்சனம் பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள். பார்க்க வேண்டும். படத்தின் டைட்டில் பெயர் ஒரு மாதிரி உள்ளதேயென நினைத்தேன். ஆனால், கதையின் கருவும் அதையொட்டி உள்ளதால், டைட்டில் சரியானதுதான் போலும். நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உங்களிடமிருந்து விரிவான விமரிசனம் எதிர்பார்த்தேன். என்றாலும் பரவாயில்லை. இந்தப் படம் தைரியமாகப் பார்க்கலாம். எனக்கு ஒரே ஒரு நெருடல் என்னவெனில் கதாநாயகியின் காதலனாக நடிக்கும் காரக்டர் நிதிஷ் பாத்திரத்தில் நடிப்பவர் தான் கதை, வசனம், டைரக்ஷன். அவருக்கும் கதாநாயகிக்கும் உள்ள காதலைப் படத்தில் வரும் ஒரு மாமா காரக்டர் ஆதரிப்பதோடு (அவருக்கு இந்தக் காதல் விவகாரம் தெரியாது. நிதிஷ் அவருக்கு உறவு என்பதால் பெண்ணை அவனுக்கு எடுக்க வேண்டும் என்னும் எண்ணம்) அந்தப் பையரைப் பற்றி முழு விபரம் தெரிந்தும் ஏன் பெண்ணின் அம்மாவிடம் முன்கூட்டியே சொல்லவில்லை? எல்லோருமே ஒருவருக்கொருவர் உறவு தான் என்னும் பட்சத்தில் இந்தக் காதலுக்கு அம்மா எதிர்ப்புத் தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டி இருப்பாங்களே? அதான் புரியாத விஷயம் இந்தப் படத்தில். கதாநாயகனுக்காவது அவன் காதலித்த பெண் வேறே ஜாதி என்றார்கள். இங்கே அப்படி இல்லையே?
Deleteவணக்கம் சகோதரி
Deleteநீங்கள் சொல்வதை படிக்கும் போது படம் பார்க்கும் எண்ணம் வருகிறது. நீங்கள் படத்தை ஊன்றி கவனித்து அதிலிருக்கும் பிழைகளை சுட்டிக் காண்பித்து விமர்சிக்கிறீர்கள். நானும் படம் முழுவதும் பார்த்து விட்டாலும், உங்களை போல் இல்லாவிட்டாலும், சிறிதளவாவது எனக்கு மனதில் பட்டதை விமர்சிப்பேன் என நினைக்கிறேன். .
நான் பெரும்பாலும், இந்த மாதிரி சேனல்களில் வரும் படங்களை தனியாக அமர்ந்து பார்த்ததில்லை. (காது சரியாக கேட்காத பிரச்சனை வேறு.) குழந்தைகள் சனி, ஞாயிறு ஆபீஸ் வேலையில்லாத அந்த நாட்களில் இரவு பத்து மணிக்கே படங்கள் பார்க்க அமர்ந்து விடுவார்கள். நான் அவர்களுடன் அமர்ந்து கொள்வேன். ஆனால் பதினொன்றுக்கு எனக்கு தூக்கம் வந்து விடும். சில படங்கள் முடியும் வரை அதிசயமாக பார்ப்பேன். ஆனால், சில படங்கள் எடுத்தவுடன் கொலை, கொள்ளை என பல வன்முறைகளுடன் ஆரம்பிக்கும். பிறகுதான் அதற்கான காரணங்கள் தெரிய வரும்.
நீங்கள் இப்போது சொல்வது குடும்ப படமாக இருப்பதால் பார்க்கலாம். அவர்களுக்குப் பிடிக்கிறதோ என்னவோ? நான் மட்டுந்தான் பார்க்க வேண்டும். பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முடிஞ்சப்போப் பாருங்க கமலா. நல்ல படம்.
Deleteஉங்கள் தளத்தில் இந்த மாதிரி தலைப்புகள் இருக்காதே...... என்ற யோசனையுடன் பதிவுக்கு வந்தேன்.
ReplyDeleteவாங்க நெல்லை. நானும் முதலில் இந்தத் தலைப்புக்கு யோசித்தேன். பின்னர் பார்த்தால் முகநூலில் என்னைவிடப் பெரிய ஆன்மிகவாதிகள் எல்லாம் இந்தத் தலைப்புக்கு விமரிசனங்கள் எழுதி இருப்பதைப் படிச்ச உடன் மனசு மாறி இந்தத் தலைப்பே தேர்ந்தெடுத்தேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கலாம். மிகவும் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆபாசம், வன்முறை, இர்ட்டை அர்த்த வசனங்கள் என்பதெல்லாம் இல்லை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநேற்று மாலை சற்று ஓய்வு கிடைத்த நேரத்தில் நீங்கள் விமர்சித்த இந்தப்படத்தை (மொத ராத்திரி) முழுவதுமாக பார்த்து விட்டேன். நீங்கள் சொல்லியபடி படம் நன்றாக உள்ளது. புது முகங்களாக இருந்தாலும், அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள்.
எனக்கும் படத்தில் உங்களின் சந்தேகங்கள் வந்தன. ஒருவருக்கொருவர் உறவுகளாயினும், வருமான பற்றாக்குறைதான் பெரிதாக இருந்திருக்கின்றன.. துபாய் மாப்பிள்ளை என்றதும் பெண்ணின் அம்மா தன் பெண்ணைத்தர சம்மதித்திருக்கிறார். தூத்துக்குடி நெல்லை பாஷை பழக்கமானதுதான் என்றாலும், இப்போது இங்கெல்லாம் வந்த பின் அது சற்று வித்தியாசப்படுகிறது. மேலும் பிண்ணனி இசை வேறு ஒரே கொட்டு முழக்கமாக இருந்ததால், அவசரமாக அவர்கள் பேசும் பேச்சுகளை முழுதாக கேட்க முடியவில்லை. மற்றபடி நல்ல கரு. அதை கொண்டு போன விதமும் நன்றாக இருக்கிறது. படத்தில் அனைவருமே பாராட்டப்படக் கூடியவர்கள். உங்கள் தயவில் நானும் ஒரு புதுப்படம் பார்த்து விட்டேன். சகோதரர் ஸ்ரீராம் சொல்லித்தான் "சின்ன சின்ன ஆசை" யும் பார்த்தேன். அதுவும் ஒரு நாளில் வரும் மாற்றங்களை குறித்தப் படந்தான். நீங்களும் அதைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.