எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 20, 2007

நான் எழுதலை, ஆனாலும் கவிதை தான்!

உன் இதயத்தில் இருந்து வரும் கீதத்தின் அற்புதத் தன்மையால்,
அதன் ராகத்தால், என் அந்தராத்மா விம்மிப் போய்த் திகைத்து விடுகிறதே!
அப்போது நான் உன் பக்கம் என் பார்வையைத் திருப்பினால்,
இது என்ன? ஏன் என் கண்கள் குளமாகின்றன!

அகங்காரமும், சுருதி இல்லாமலும் பாடிக் கொண்டிருந்த என் ஆன்மா,
இது என்ன? இப்போது லயத்துடன் பாடுகிறதே?
உன்னை நான் உபாசனை செய்ததாலோ இது?
என் ஆன்மா அகண்ட சமுத்திரத்தைக்
கடக்கும் பட்சியைப் போல் சிறகடித்துப் பறக்கத்
தொடங்கி விட்டதே!

நான் நன்கு அறிவேன்: நீ என் பாடல்களால் ஆனந்தம் அடைந்தாய்!
அந்தச் சமயம் நான் உன் காலடியில் வெறும் பாடகனாய் மட்டுமே!

உன்னுடைய காலடித் தடங்களில் நான் உணர்ந்தேன்
என் கீதத்தின் இனிய நாதம் ஒரு பறவைச் சிறகு போலே
உன் பாதங்களை வந்து மெல்லத் தொட்டது.

என் இதய நாதனே! நான் இந்தப் பாடலில் உன்மத்தம் பிடித்தேன்
எனக்குள் நானே ஆச்சரியம் அடைந்தேன்,
உன்னை உணர்ந்தேன், நீ தான் என் இனிய தோழன் என அறிந்தேன்.

Sunday, August 19, 2007

புதிய முயற்சி- ஆனால் சொந்தம் இல்லை.

"இறைவா, நீ என்னை சற்றும் இளைப்பாறாத ஒரு பயணியாகப் படைத்துள்ளாய்!
என்னுடைய இந்த அழியக் கூடிய உடலை நீ கோடிக் கோடி முறைகள் அழித்தாலும்,
திரும்பவும் கோடி கோடி முறைகள் படைத்தும் விடுகிறாயே?

நீ இந்த நர உடலை ஒரு புல்லாங்குழலாக மாற்றி மலைகளின் சிகரங்களிலேயும்,
கணவாய்களின், ஆழத்திலேயும் எடுத்துச் சென்று தினம் தினம் ஒரு புதிய உதய கீதம் இசைக்கிறாய்.

உன்னுடைய கரங்களின் தொடுகையால் நான் ஆனந்தம் அடைகிறேன்.
என்னுடைய இளம் இதயமும் அதனால் விம்மிப் பெருமிதம் அடைகிறது.
என் இருதயத்தில் இருந்து கவிதையாகிய ஊற்றுப் பெருக்கெடுக்கிறது.

என்னுடைய இந்த அல்பமான இதயமாகிய பையில் நீ அற்புதமான தன்னம்பிக்கை தரும் பரிசுகளால் நிரப்பி விடுகிறாய். நீ எத்தனை முறை இவ்வாறு செய்தாயோ?
ஆனால் யுகங்கள் கழிந்து போயும், இது முடிவடையவில்லை.
என்னுடைய இதயம் ஆகிற பையோ இன்னும் காலியாக உனக்காகக் காத்திருக்கிறது.

Saturday, August 18, 2007

சுபாஷ் சந்திர போஸ்ஸுக்கு அஞ்சலி!




படம் இப்போத் தான் அப்லோட் செய்ய முடிஞ்சது. அதனால் தாமதம். அவர் மறைந்ததாய்ச் சொல்லப் பட்ட தினம் இன்று. இன்னமும் தீராத சர்ச்சையில் இருக்கும் தலைவர். தன் வீரர்களை "டெல்லி சலோ" என்ற ஒரே நோக்கத்திலும், "ஜெய்ஹிந்த்" என்ற தாரக மந்திரத்திலும் நம்பிக்கை வைக்கச் செய்தவர். காந்தியை விடவும் மக்கள் சக்தி இவருக்கு அதிகம் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்த நாடு இவரை மறந்தாலும் நாம் நினைவு வைப்போம்.

அன்னாருக்கு அஞ்சலி!

Friday, August 17, 2007

சுட்ட படம் வேணுமா/ சுடாத படம் வேணுமா?

இந்தியாவிலே தான் குப்பைன்னு எல்லாம் இல்லை. இங்கே ஹூஸ்டனும் ஒரே குப்பை மயமாத் தான் இருக்கு. அதுவும் நாங்க நடைப் பயிற்சி போகிற "வால்மார்ட்" என்னும் வணிக வளாகத்தை அடுத்த முக்கிய வீதியானது "ஃப்ரீவே" எனப்படும் தேசீய நெடுஞ்சாலையை இணைக்கும் வீதியாக இருந்தும் அங்கே உள்ள நடைபாதையில் வால்மார்ட்டின் கழிவுகள் தேங்கிக் கிடக்கிறது. அது தவிர, வாடிக்கையாளர் சேவைக்கு என வைத்திருக்கும் தள்ளுவண்டிகள் கன்னாபின்னாவெனக் கிடக்கிறது மட்டுமில்லாமல், பக்கத்திலேயே உணவுப் பொருட்களும் இறைந்து கிடக்கிறது. இங்கே குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த நடைபாதையும் மோசம் என்றால் அதைச் சுற்றி வெளியே தெருவில் உள்ள நடைபாதையும் புல் முளைத்துக் கால் வைத்தால் மேடு, பள்ளம் தெரியாமல் இருக்கிறது. ஹிஹி, கீழே விழுந்தாச்சு அதிலே! :D இருந்தும் விடாமல் நாங்கள் நடக்கப் போகொறோம். இங்கே நான் இருப்பது யு.எஸ். என்பதை நினைவு செய்வது இங்கே உள்ள மக்கள் தான், மற்றபடி சென்னை போல்தான் இங்கேயும் சீதோஷ்ணமோ, மக்கள் நெருக்கமோ அல்லது குப்பைகளோ, பிச்சைக் காரர்களோ இருக்கிறார்கள்.

கடந்த ஒருவாரமாக அதிகம் எழுத முடியலை. முக்கிய காரணம் இந்த மடிக்கணினியில் தான் படங்கள் போட்டுப் பார்க்க வேண்டி உள்ளது. எந்த டிவிடி ஆனாலும் அது சரியாக இல்லை. இந்த விஷயத்திலும் இந்தியாவைத் தோற்கடிக்கிறது. அப்படியும் இப்படியுமாக் கஷ்டப் பட்டுப் பார்த்த படங்கள் விவரம் வருமாறு:

தெனாலி- முதல் முறையாப் பார்த்து, இதைப் பார்க்காத பாவத்தைப் போக்கிக் கொண்டேன்.

2.காதலிக்க நேரமில்லை- எத்தனாவது முறை, தெரியாது.

3.பொம்மலாட்டம்-இதுவும் சிலமுறை பார்த்தாச்சு

4.தம்பிக்கு எந்த ஊரு: மாதவியின் மேக்-அப் இவ்வளவு மோசம்னு இப்போத் தான் புரிஞ்சது. உடைத் தேர்வு ரசனையே இல்லை.

5.ரங்க் தே பசந்தி: இந்த வலை உலகிற்கு வந்தப்போ எல்லாம் இதைப் பத்தித் தான் எழுதினாங்க. இப்போத் தான் முதலில் பார்த்தேன். படம் நல்லா இருந்தாலும் குறிப்பிட சில காட்சிகள் வேணும்னு தேர்வு செய்த மாதிரி இருக்கிறது. ஆமீர்கானின் ஒருதலைப் பட்சமான போக்கைக் காட்டியது.

(6.மொழி: ரொம்ப நல்ல படம் என்பதோடு யதார்த்தமான வசனம், நடிப்பு, இசை,கதை அம்சம், டைரக்ஷன், எல்லாமே.

7.பருத்தி வீரன்: இன்னும் முடிவு பார்க்கலை. .

8.இக்பால்: அருமையான படம், நல்ல இயல்பான நடிப்பு. இக்பாலின் தங்கையாக நடிக்கும் பெண் ஒரு பிறவி நடிகை.) இது மூன்றும் மெம்பிஸில் பார்த்தேன்.

9.லகான்: எத்தனாவது முறை? தெரியலை. :D

10.ஹாட்-ட்ரிக்: நானா படேகரின் நடிப்பும், டானியின் நடிப்பும் நல்லா இருக்கு. முழுசும் சரியாப் பார்க்கலை.

11.ஏகலவ்யா: தலை சுத்தல், பாதி கூடப் பார்க்கலை.

12.லகே ரஹோ முன்னா பாய்: யதார்த்தமான படம். நடக்க முடியாத கனவுகளைக் கொண்ட "சிவாஜி"யை விட இது கொஞ்சம் ஏற்புடையதாய் இருக்கிறது. கொஞ்சம் முயன்றால் இதில் கண்டது நடக்கும் நாள் சாத்தியமே. ஆனால் தலைமை சரியாக இருக்க வேண்டும்.

ஆனால் முன்னாபாய் எம்.பி.பிஎஸ். பார்க்கலை. அதுக்குப் பதிலாய் வசூல்ராஜா பார்த்தேன், அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. இன்னிக்கு "ப்ளாக்" பார்க்கலாம்னு நினைச்சேன். மறுபாதி ஒத்துக்கலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர். அதான் கடமை ஆற்ற வந்துட்டேன். இது தவிர, இங்கே ஹூஸ்டன் வந்ததிலே இருந்து தினம் ஒரு சூடு வேறே போட்டுக்கறேனா? 4 நாள் முன்னாலே இடது உள்ளங்கையில் விரல்களில் எப்படினு தெரியலை சூடு பட்டு தட்டச்சு செய்ய முடியாமல் ஒரு கையால் தட்டச்சிக் கடமை ஆற்றினேன். இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை.ஹிஹிஹி, ஸ்வாதி, அ.வ.சி. கோவிக்காதீங்க! :P அ.வ.சி. சினிமா பார்த்ததுக்கு. சூடு போட்டுக்கிட்டதுக்கு இல்லை. அது வழக்கம்தானேன்னு இங்கே முறைக்கிறார். :P

அதோட இல்லை, மெம்பிஸில் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு மிரட்டும் செக்யூரிட்டி வார்னிங்க் இல்லையா, படங்களும் நல்லாச் சுட முடியுது. கணினியைத் திறந்ததுமே வரும் Trend MC PC Cillin Security Warning, you are not allowed to see this website. The website filter configuration does not allow. அப்படின்னு ஒட்டிட்டே கூட வரும். சில சமயம் என்னோட பதிவையே பார்க்க விடாது. மிரட்டல் அதிகமா இருக்கும்.இங்கே அந்தத் தொந்திரவு இல்லையா இந்தச்சாக்கில் எத்தனை வலைப்பூக்கள், எத்தனை விதமான பதிவுகள்னு பார்த்தேன் கணக்கே இல்லை.. வைகானசம், பாஞ்சராத்திரம் விவரம் தேடும்போது தேசிகன்,நா. கண்ணன், சடகோபன் இவங்களோட வலைப்பூக்களைத் திரும்பத் திரும்பப் படிச்சேன். தேசிகனுடையதும், கண்ணனுடையதும் சிலது முன்பே படிச்சிருக்கேன் என்றாலும் மற்றவைகளும் படிக்க முடிஞ்சது. கண்ணனுடைய சைவம் பற்றிய கருத்துக்களோடு ஒத்துப் போகமுடியவில்லை என்றாலும், படிக்கச் சுவையாகவே இருந்தது. சடகோபனின் பதிவுகளில் இருந்து எங்கே எல்லாமோ போய்ப் பார்க்க முடிந்தது. அப்படிக் கிடைத்தது தான் ஸ்ரீபீடியா. பின்னர் வல்லிசிம்ஹனும், "வி" என்பவரும் லிங்க் கொடுத்ததோடு அல்லாமல் திவாகரும் அனுப்பி உள்ளார்.

சிதம்பர ரகசியம் பதிவில் போடப் படங்கள் தேடும்போதும் இப்படி எதிர்பாராமல் கிடைத்த புதிய பதிவுகள் பல இருந்தாலும் முக்கியமாய்ச் சொல்லவேண்டியது இந்தப் பதிவு தான். natarajar.blogspot.com & navarathri.blogspot.com இரண்டுமே இவரோட வலைப்பூக்கள் தான். இதைத் தவிரவும் வலைப்பூக்கள் திருப்பாவை, திருவெம்பாவை, மயிலையில், காரைக்காலம்மையார், கைலாஷ் யாத்திரா என்ற பெயர்களில் இருக்கின்றன.எல்லாமே நல்லா அனுபவித்து மிக ஆழமான அர்த்தங்களோடும், உள்ளார்ந்த பக்தியோடும் எழுதி உள்ளார். அதிலேயும் நவராத்திரி வலைப்பூவில் உள்ள அம்மன் அலங்காரங்களோடு உள்ள படங்கள் மனதை நிறைக்கிறது. "கைலாஷி" என்ற பெயரில் எழுதி இருக்கும் இவரோட ஒரு வலைப்பூவில் இருந்து படங்கள் எடுத்துக் கொண்டதோடு அல்லாமல் இவரின் மானசரோவர் யாத்திரைக் கட்டுரையையும் வாசிக்க நேர்ந்தது. இந்திய வழியில் போயிருக்கிறார். மிகக் கடினமான பயணம், கொடுத்து வைத்திருக்கிறார். அற்புதமான இடங்களைப் பார்த்ததோடு அல்லாமல் பகிர்ந்தும் கொண்டிருக்கிரார். நவராத்திரி பற்றி எழுதி இருக்கும் பதிவுகள் அருமைனு ஒரே வார்த்தையில் சொன்னால் அது தப்பு. ஆகவே அதைப் புகழ வார்த்தைகளே கிடையாது. நீங்களே போய்ப் பார்த்துக்குங்க.

Wednesday, August 15, 2007

பெரியாழ்வாரின் குலக்கொடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!




இன்று ஆடிப்பூரம். அம்மன் கோவில்களிலே திருவிழாப் போல் கூட்டம் நெரியும். சகலவிதமான அம்மன்களுக்கும் வளைகாப்புப் போல் வளையாலேயே அலங்காரம் செய்து, மகிழுவார்கள். அம்மன் அழகா, வளை, அழகா, அதைக் காண வரும் பெண்கள் அழகா எனப் போட்டி போட்டு அனைவரும் அம்மன் அருளை நாடிப் போகும் நாள். இந்த நாள் இனிய நாளாக சுதந்திரத் திருநாளாகவும் அமைந்து விட்டது. மேலும் ஆடிப் பூரம் ஆண்டாளின் திருநட்சத்திரம். ஆண்டாளுக்கு, அண்ணனாக இருந்து அவள் எப்போவோ வேண்டிக் கொண்ட வேண்டுதலை நிறைவேற்றித் தந்ததைப் பற்றி, நம் கண்ணபிரான் ஒரு அருமையான கவிதை எழுதி இருக்கிறார். அவர் அளவுக்கு எனக்கு எழுத வராது.

திருவாழிபுரத்து ஜெகத்து உதித்தாளை, திருப்பாவை முப்பதும் செப்பினாளை, பெரியாழ்வார் பெற்றெடுத்த குலக்கொடியைப் போற்றிப் பாடுவோம். ஆண்டாளின் தமிழ் அழகுத் தமிழ், கொஞ்சு தமிழ், எளிமைத் தமிழ். அந்தக் காலத்திலேயே மழையின் விஞ்ஞான தத்துவத்தைப் பாடல் மூலம் காட்டியவள். அவள் தமிழை மட்டும் ஆளவில்லை. நம் மனங்களையும் ஆள்கிறாள். அவள் பாடல்களிலே இறைவனின் பத்து அவதாரங்களையும், அதன் சிறப்புக்களையும் குறிக்கிறாள். கூடவே அவள் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள். உக்கம்= விசிறி, தட்டொளி=கண்ணாடி. கண்ணாடியைத் தமிழில் "தகளி" எனவும் சொல்வார்கள். இந்த அருமையான வார்த்தைகள் எல்லாம் இன்று எப்படி மறைந்து ஒழிந்து போயிற்று என நினைத்தால் ஆச்சரியமாய் உள்ளது.

அது போலே எதிர்மறைப் பொருளைக் குறிக்கும் சொல்லையும் ஆண்டாள் கையாண்ட பாணி வியக்கத் தக்கது. செய்வோம்=செய்யோம், முடிப்போம்=முடியோம், உண்போம்=உண்ணோம், ஓதுவோம்=ஓதோம், இந்த வார்த்தைகளும் வழக்கொழிந்து போய் விட்டது. தட்டொளி எப்போதில் இருந்து கண்ணாடி ஆயிற்று? புரியலை! செய்ய மாட்டோம்னு எப்போதில் இருந்து கூற ஆரம்பித்தோம்? புரியலை! ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை, அனைவரின் மனங்களையும் தான்.

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! ஜெய ஜெய வந்தே மாதரம்!





"பாரத பூமி பழம்பெரும் பூமி:
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்!
பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர்:இந்நினைவகற்றாதீர்
பாரத நாடு பார்க்கெல்லாம் தெய்வமாம்
நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்!

"மாணுயிர் பாரத தேவியின் மந்திரம்
வந்தே மாதரமே!
மாணுயிர் பாரத தேவி விரும்பிடும்
வந்தேமாதரமே!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! ஜெய ஜெய ஜெய வந்தே மாதரம்!

Sunday, August 12, 2007

தனிக்குடித்தனம் எங்கே நடத்தறது?





ஹூஸ்டனில் இருந்த பழைய அபார்ட்மென்டின் ஒரு பகுதியை இங்கே போட்டிருக்கேன். மிச்சத்தில் எல்லாம் அடியேனுடைய திருமுகம் இருப்பதால் யாரும் பயந்துக்க வேணாம்னு ஒரு நல்ல எண்ணத்தில் போடவில்லை.

-புது அபார்மென்ட் படம் இன்னும் எடுக்கலை. எடுத்தால் போடறேன். படம் தான் போட வந்துடுச்சே! :D இது லிவிங் ரூம் என்று சொல்லப் படும் வரவேற்பு அறையின் பகுதி. இந்தப் பெரிய அறையைத் தான் தடுத்து ஒரு பக்கம் நுழைந்த உடனேயே சமையல் அறை, சாப்பிடும் இடம் எனப் பிரித்து இருப்பார்கள். அந்த 8க்கு 8 சமையல் அறையில் ஒரு பக்கம் அடுப்பும், அதைச் சார்ந்த சமைக்கும் இடமும் 2 அடிக்கு மேல் ஆக்கிரமித்து விடும். இன்னொரு பக்கம் பாத்திரம் கழுவும் தொட்டி முற்றம் எனப்படும் இடம் இரு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்டு இருக்கும். இது எல்லாத்துக்கும் மேலே தான் நான் குறிப்பிட்ட அலமாரிகள் இருக்கும். அதில் முதல் தட்டில் எனக்கு அடிக்கடி வேண்டிய மளிகைப் பொருட்களை நான் எடுக்கிறாப்பல வைத்துக் கொள்வேன்.

ஆனால் என்னோட மறுபாதி இருக்காரே, க்ர்ர்ர்ர்ர்., அவர் ஒழித்துச் சுத்தம் செய்கிறேன், பேர்வழின்னு எல்லாத்தையும் எடுத்து அவர் கைக்கு எட்டறாப்பல வச்சுடுவார். இது தெரியாத அப்பாவியான நான் நேத்து வச்ச பொருள் இன்னிக்குக் காணோமேன்னு, பேந்தப் பேந்த முழிச்சுட்டு, அப்புறம் அவரைக் கூப்பிட்டு எங்கேன்னு தெரியுமான்னு கேட்டால், மனுஷன் பதிலே பேசாமல் வந்து எடுத்துக் கொடுப்பார். அத்தோட விட்டதா? அவர் மளிகைப் பொருட்கள் எடுக்கும் இடத்தின் கீழே உள்ள கவுன்டரில் ரைஸ் குக்கர் வச்சிருப்பேன். சாதம் ஆகி இருக்கும். அது ப்ளகைப் பிடுங்கலைனால் சாதம் அடியிலே போய்ப் பிடிக்கும். மிக்சியில் ஏதாவது அரைச்சுட்டு இருந்திருப்பேன். அது பாதியில் நிற்கும்.

இந்தப் பக்கம் மின் அடுப்பில் ஏதாவது இருக்கும். அந்தக் குறுகிய இடத்தில் அதைக் கிளறி விடறேன் பேர்வழின்னு சுட்டுக் கொண்டு அலறுவேன். ஆனால் அவருக்கு இது
மாதிரி நான் சுட்டுக்கிறது, கத்தறது எல்லாம் பழக்கம் ஆயிடுச்சுங்கிறதாலே மும்முரமா மறுபடி ஒரு முறை சாமான்களை வரிசைப் படுத்தி வைக்கிறதாய் நினைச்சுக் கலைத்துக் கொண்டிருப்பார்.


குறைந்த பட்சம் அரை மணி நேரம் அங்கேயே மும்முரமாய் வேலை செய்து கொண்டிருப்பார். நான் காலை 9 மணிக்கு சமைக்க வரதுக்கு முன்னாலே இது எல்லாம் முடிச்சுக்குங்கனு எத்தனை முறை சொல்லிட்டேன். கேட்கிறதே இல்லை! :P உடனேயே ஒரு பாரத யுத்தம் ஆரம்பிக்கும். நல்லவேளையா ஆடியன்ஸ் யாரும் கிடையாது இங்கே! :D சரி, இதான் போச்சு, காயாவது நறுக்கிக் கொடுக்கிறேன், தனியாக் கஷ்டப் படவேண்டாம்னு சொல்றாரேன்னு நினைச்சு சரினு சொல்லுவேன். அப்போ மறுபடியும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும்.

நான் அவியலுக்கு மட்டும் மெல்லிதாய் நீளமாய்க் காய்கள் நறுக்குவேன். இவர் எல்லாத்தையும் அப்படியே நறுக்குவார். வதக்கல், பொரியல் என்றால் மெல்லிதாய் வட்டமாய் நறுக்கச் சொன்னால் கனம் கனமாய் நறுக்கி வைப்பார். அது வதங்கவும் செய்யாது, பொரிக்கவும் முடியாது. இந்த லட்சணத்தில் சொல்லிக்கிறார்: நான் யு.எஸ். வந்து ஒரு கல்யாணத்துக்குக் காய் நறுக்கிற அளவு தேர்ந்து விட்டேனாக்கும்னு ஒரே பெருமை! அதை விடப் பெருமை, சாமான்கள் எல்லாம் அடுக்கி அலமாரியைச் சுத்தம் செய்வது என்று எல்லாவிதத்திலும் எனக்குக் கை கொடுக்கிறாராம். என்னத்தைச் சொல்றது. இப்படியாக நான் தனி ராஜ்யம் நடத்தி வந்த சமையல் அறையில் என்னோட அதிகாரத்தை மெல்ல மெல்லப் பிடுங்கி விட்டார். எல்லாம் ஹெட் லெட்டர். :P