எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 20, 2009

நவராத்திரியின் நவதுர்க்கைகள் - மஹா கெளரி - மூன்றாம் நாள்!

இன்றைய அலங்காரம் கல்யாணி!

மகாகெளரி: எட்டு வயதுச் சிறுமி இவள். அம்பிகையின் சிறுமி வடிவான இவளே, அசுரர்களை அழிக்கும் வல்லமை கொண்டு அவர்களை அழித்தாள். இதனால் ஏற்பட்ட உடல் சோர்வினால் அவள் உடலின் பொன் நிறம் மங்கி, அசுரர்களின் ரத்தமும், போர்க்களத்தின் புழுதியும் படிந்து மங்கிக் காணப்பட்டது. ஈசன் தன் சடாமுடியில் இருந்து கங்கை நீரை எடுத்து அவள் உடலைச் சுத்தம் செய்தார். கசடுகள் நீங்கி மீண்டும் பொன்போல் ஒளிர்ந்தாள் மகாகெளரி. மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். நவராத்திரியின் திங்கட்கிழமைக்கு உகந்த தேவதை இவளே. திங்கட்கிழமைகளில் இவளை வணங்கவேண்டும். தண்டகாரண்யத்தின் முனிவர்களின் அல்லல்கள் தீர, அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டமே சுத்தத் தாண்டவம் எனப்படும். ஈசனின் இந்தத் தாண்டவத்தில் தோன்றியவளே மஹாகெளரி ஆவாள்.

மூன்றாம் நாளான இன்று கோலம் பூக்களாகப் போடவேண்டும். மஹிஷனை வதம் செய்த அம்பிகையை சூலம் எந்தியவளாக, மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் அலங்கரித்து வழிபடவேண்டும். இந்தக் கோலத்தைக் கல்யாணி என்று சொல்வார்கள். இன்று நான்கு வயதுள்ள பெண் குழந்தையை கல்யாணியாகப் பாவித்து வழிபடவேண்டும். செம்பருத்தி, தாமரைப் பூக்களால் அர்ச்சிப்பது நல்லது. இன்றைய நைவேத்தியம் தயிர் சாதம். இது செய்வது பத்திச் சொல்லவேண்டாம். சுண்டல் வெள்ளைக்காராமணிச் சுண்டல்.

துர்கா அஷ்டகம் மூன்றாம் பாடல்

செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்று முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே




ஸ்ரீ லலிதையின் படம் மேலே. திரு விக்னேஷ் அவர்களின் வேண்டுகோளை ஒட்டி மூன்றாம் நாளுக்கான விபரங்கள் இன்றே அளிக்கப் படுகிறது.

லலிதா நவரத்தினமாலையின் இன்றைய ரத்தினம் முத்து!

முத்தே வரும் முத்தொழிலாற்றிஅடவே முன்நின்றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸிநியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறுத்திக் கிணை வாழ்வடையேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!


இந்தப் பதிவுக்குரிய வழிபாடுகள் திங்கட்கிழமைக்கானது.

நவராத்திரியில் நவதுர்க்கைகள் - சைல புத்ரி! 2

இன்றைய அலங்காரம் ஸ்ரீராஜராஜேஸ்வரி


சைலபுத்திரி: சைலம் என்றால் மலை. மலையரசன் மகளான அம்பிகையையே இது குறிக்கிறது. பார்வதி, பர்வதகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப் படும் இவளே, அனைவரிலும் தேவர், மூவர் என யாவரிலும் சக்தியாக நிறைந்து நிற்பவள். இவள் சக்தியின்றி எந்த இயக்கமும் இல்லை. நடைபெறாது. இவள் தமிழில் மலைமகள் என அழைக்கப் படுகின்றாள். மகாமேருவை வலம் வந்து கொண்டிருக்கும் ஆதித்தியன் ஆன சூரியன் இவளின் பக்தர்களுக்கு அருள் புரியும் வல்லமை கொண்டவன். நவராத்திரி நாட்களில் ஞாயிற்றுக் கிழமை அன்று இவளை வணங்கித் துதித்தால் ஆரோக்கியம் பெருகும். மனம் விசாலமடையும். பர்வத ராஜபுத்திரி வேண்டியது அருளுவாள். வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடிய ஆநந்த தாண்டவத்தின் ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவளே ஸ்ரீசைலபுத்ரி என்னும் இந்த தேவி ஆவாள்.

இன்று அன்னையை மஹிஷனை வதைக்கக் கிளம்பிய ராஜராஜேஸ்வரி ரூபத்தில் வணங்கவேண்டும். மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிமூர்த்தியாக பாவித்து வழிபடவேண்டும். இன்றும் மஞ்சள் நிறம் உகந்தது. சிவப்புக் கொன்றையும் விசேஷம். இன்றைய நைவேத்தியம் எள் சாதம். எள்ளைக் கல்லில்லாமல் களைந்து வடிகட்டி வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு அதோடு உப்பு, காய்ந்த மிளகாயும் வறுத்துக் கொண்டு பொடி செய்து வைத்து அந்தப் பொடியை நல்லெண்ணெய் கலந்த சாதத்தில் போட்டுக் கலந்து கொள்ளவேண்டும். சிலருக்குப் பெருங்காயம் உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்க்கும் வழக்கம் உண்டு. எள்ளுக்குப் பெருங்காயம் தேவை இல்லை. இது தவிர மூன்று வயதுக் குழந்தைக்குப் பிடித்த பலகாரங்கள் எதுவேண்டுமானாலும், வெங்காயம், பூண்டு, தவிர்த்துச் செய்து கொடுக்கலாம். இன்றைய சுண்டல் காய்ந்த மொச்சையை ஊற வைத்துச் செய்த மொச்சைச் சுண்டல். இன்னிக்கு ஓசிச் சுண்டல் இல்லை. அதனால் நோ படம்!

துர்கா அஷ்டகம் இரண்டாம் பாடல்:

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


லலிதா நவரத்னமாலையின் நீலம்!

மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

Saturday, September 19, 2009

நவராத்திரியில் நவதுர்கைகள் - கால ராத்ரி / சித்தாத்ரி! 1.!

இன்றைய அலங்காரம் துர்கை.

நவராத்திரிகளில் துர்க்கையை நவதுர்க்கா வடிவாக வழிபடுதல் மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு துர்க்கையாக நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபடவேண்டும். பக்தர்கள் துயர் தீர்க்கும் துர்க்கையை வழிபட்டால் நவகிரஹ தோஷங்களும் விலகும் என்றும் சொல்லுவார்கள். இந்த வருஷம் நவராத்திரி சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கின்றது. அன்று வழிபடவேண்டியவள் “காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.

சித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி.

நவராத்திரியில் முதல்நாள் பொட்டுக் கோலம் போட்டு அம்பிகையை பாலை எனக் கூறி வழிபடவேண்டும். சிலர் குமாரி எனவும் வழிபடுவர். இரண்டு வயதுப் பெண் குழந்தையை பாலையாக வழிபடுதல் நல்லது. அந்தக் குழந்தைக்குப் பிடித்த ஆகாரங்களைச் செய்து கொடுக்கலாம். பிடித்த உடையை வாங்கிக் கொடுக்கலாம் என்றாலும் மஞ்சள் நிறம் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. மஞ்சள் சாமந்திப் பூ விசேஷம் வழிபாட்டுக்கு. செவ்வரளியும் பயன்படுத்தலாம். நைவேத்தியம் எலுமிச்சை சாதம். மாலை நைவேத்தியம் வெல்லம், தேங்காய், ஏலக்காய் போட்ட பச்சைப் பயறுச் சுண்டல். வழக்கம்போல் சுண்டல் இரவல் தான். கூகிளார் கொடுத்தது. எல்லாருக்கும் தெரிஞ்ச துர்காஷ்டகத்தை இங்கே ஒவ்வொரு நாள் ஒன்றாகக் கொடுக்கிறேன். கடைசி நாள் எல்லாத்தையும் சேர்த்துக்கொடுக்க முயல்கிறேன்.

துர்கா அஷ்டகம்:

1. வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!

துர்காஷ்டகம் தொடரும்.


திருமதி ஜெயஸ்ரீ நீலகண்டனின் விருப்பத்தின் படி லலிதா நவரத்தினமாலையின் முதல் பாடல் கீழே இடம் பெறுகிறது. முதலில் வைரம் போல் ஜொலிக்கும் ஸ்ரீலலிதை!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவர் பெருகும் பிழை என பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

Tuesday, September 15, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - வசுதேவரும் தேவகியும்!

தேவகியை நாம் பலநாட்கள் கழிச்சுப் பார்க்கிறோம். ரொம்ப இளைச்சுப்போய் முப்பது வயதிலேயே தலையும் நரைத்துப் போய் கண்களில் உயிரை வைத்துக் கொண்டு, தன்னுடைய மகன் எப்போ வருவான், தங்கள் அனைவருக்கும் மீட்சியைக் கொடுப்பான் என எதிர்பார்ப்புடன் இருக்கிறாள். அடுத்தடுத்துத் தான் பெற்ற ஆறு குழந்தைகளைக் கண்ணெதிரே கொல்லப்படுவதைக் கண்டவள். அவள் இதயம் என்ன இரும்பா? இல்லை கல்லா? எப்படித் தாங்கினாள்? கேட்கத் தோன்றுகிறது அல்லவா? எந்தத் தாய்க்கும் நேராத சோகம். அதோடு மட்டுமா? ஏழாவது குழந்தை பிறக்கும் முன்னரே வலுக்கட்டாயமாய் வெளியே எடுக்கப் பட்டு அவள் கணவனின் மற்றொரு மனைவியிடம் வளர்க்கக் கொடுக்கப் பட்டது. எட்டாவது குழந்தையோ பிறந்தே ஆகவேண்டும், அதை உடனே கொல்லவேண்டும் என்றே கம்சனின் திட்டம். அதற்காக அல்லும், பகலும் கண்காணிக்கப் பட்டாள். தூங்கும்போதும், விழித்திருக்கும்போதும் அவளுக்குத் தனியே இருக்கச் சுதந்திரம் இல்லை. இறை அருளாலேயே அன்றிரவு மழையும், இடியுமாக வந்து அவளைப் பூதனையின் கழுகுப் பார்வையிலிருந்து காத்துக் குழந்தையையும் கோகுலத்துக்கு அனுப்ப முடிந்தது. ஆனால் ஏன் இப்படி? ஒரு இளவரசியாக இருந்தும் ஏன் இப்படித் துன்புற்றாள்? அனைவரும் கேட்கும் கேள்வி இது!


இந்த தேவகி படும் துயரம் சகிக்க முடியாத ஒன்று. கண்களின் எதிரே அடுத்தடுத்துத் தான் பெற்றெடுத்த குழந்தைகள் கொல்லப் பட்டு சோகத்தை அனுபவித்து, எட்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டும் என்ற ஒரே லக்ஷியத்தோடு வாழ்ந்தாள். சிலர் கேட்கின்றனர். புத்திசாலித் தனமான கேள்வியாய்ப் பார்க்கும்போதும், கேட்கும்போதும் தெரியும். வசுதேவரையும், தேவகியையும் ஏன் கம்சன் சேர்த்தேச் சிறையில் அடைத்தான்?? தனித் தனியாய்ப் பிரித்து வைத்திருக்கலாமே என்று கேட்கின்றனர். ஆனால் இறைவனின் படைப்புக்கும் இம்மாதிரியான காரியங்களுக்கும் காரணம் இல்லாமல் போகாது. தேவகியும், வசுதேவரும் இம்மாதிரியான ஒரு துக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப் பட்ட ஒன்று. இதை அறிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் பின்னால் போய்ப் பார்க்கவேண்டும். காச்யபர் ஒரு ரிஷி. தக்ஷனின் மகள்களான திதி, அதிதி இருவரையும் காச்யபருக்குத் திருமணம் செய்து கொடுத்தான் தக்ஷன். அக்காள் தங்கைகள் தான் என்றாலும் இருவருமே ஒற்றுமை இன்றியே இருந்தனர். அதிதி என்பவள் இளையவள். அவளுக்கு வெகு விரைவில் குழந்தை பிறந்தது. அவனே தேவர்களுக்குத் தலைவனாய் இருப்பான் என்றும் இந்திர பதவி வகிப்பான் என்றும் தெரிய வந்தது.

திதிக்குக் குழந்தை பிறக்கவில்லை. தன் தங்கை அதிதிக்குக் குழந்தையும் பிறந்து மஹா பராக்கிரமசாலியான இந்திரனாகவும் அது ஏற்பட்டதை அறிந்து சற்றுப் பொறாமையுடனேயே காச்யபரிடம் போய்ப் பிள்ளை வரம் கேட்டாள் திதி. இந்திரனைப் போன்ற சகல உலகங்களும் போற்றும் வண்ணம் ஒரு குழந்தையை வேண்டினாள். அவளை தேவிக்கு விரதம் இருக்கச் சொன்னார் காச்யபர். முறைப்படி விரதம் இருந்தாள் திதி. உரிய நாளில் கருவுற்றாள். அவள் கருவுற்றதைக் கேள்விப் பட்ட அதிதிக்குப் பொறாமை மேலோங்க, நெஞ்சில் வஞ்சம் ஏற்பட்டது. தன் உடன் பிறந்த அக்காவாகவே இருந்தாலும் அவள் மகன் தன் மகனை விட மேலோங்கி இருப்பதை அவளால் பொறுக்கமுடியாது போல் இருந்தது. ஆகவே தன் மகனான இந்திரனை அழைத்து, “உன் பெரியம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தை உனக்கு எதிரியாகி விடுவான். உன் இந்திர பதவிக்கும் ஆபத்து ஏற்படும். சகல உலகும் திதியின் குழந்தையைப் போற்றிப் புகழும்.” என்று கூறி வருந்தினாள். தாயின் துயர் கண்ட இந்திரன் பதவி ஆசையால் இயல்பாய்ப் பெரிய தாயாரிடம் ஏற்பட்ட பாசத்தைக் கூட மறந்து அவள் சிசுவைக் கர்ப்பத்திலேயே கொன்றால் என்ன என்று எண்ணினான். இதை எவ்விதம் முடிப்பது என யோசித்து திதியிடம் சென்றான். திதி மிகச் சிறந்த தேவி பக்தை. தேவிக்கு வழிபாடுகள் செய்யும் அவளுக்கு உதவிகள் செய்வது போல் நடித்துப் பணிவிடைகள் செய்தான் இந்திரன். திதியும் அதை உண்மையான அன்பு என எண்ணி இருந்தாள்.

ஒருநாள் வழிபாட்டின்போது விரதம் இருந்த அசதியாலும், கர்ப்பிணிகளுக்கே இயல்பான தளர்ச்சியாலும் திதி தன்னை மறந்து தூங்கினாள். தூங்கும்போது அவள் வாய் சிறிதே திறந்திருந்தது. இந்திரன் தன் சக்தியால் மிகச் சிறிய வடிவெடுத்து அவள் வாயின் வழியாக உள்ளே நுழைந்து கர்ப்பைப் பையை அடைந்து கர்ப்பத்தைச் சிறு சிறு துண்டுகளாக ஆக்கிக் கொன்றான். பின்னர் வெளியேறித் தன் தாயிடம் சென்று வெற்றி வீரனாய்த் தான் வந்திருப்பதைப் பெருமையுடனும் மகிழ்வுடனும் தெரிவித்தான். அவன் தாயும் மகனின் திறமையை எண்ணி மகிழ்ந்தாள். அப்போது கர்ப்பம் கலைந்ததால் கண் விழித்த திதி தன் தங்கையிடம் தன் துயரத்தைச் சொல்லி அழவேண்டும் என எண்ணிச் சென்றபோது தாயும், மகனும் பேசி மகிழ்ந்ததைக் கேட்டு மனம் மிகவும் நொந்து போனாள். தன் உடன் பிறந்த தங்கையே தன் குழந்தைக்கு எமனாய் வந்ததை எண்ணிக் கதறி அழுத வண்ணமே அவள் தன் தங்கையிடம், “என் குழந்தையைக் கர்ப்பத்திலேயே கொன்ற நீ, உன் குழந்தைகள் பிறந்ததுமே அடுத்தடுத்துக் கொல்லப் படுவதைக் கண் முன்னால் காண்பாய்! நீ பெற்ற குழந்தைகளை உன்னால் வளர்க்க முடியாமல், பாலூட்டிச் சீராட்டித் தாலாட்ட முடியாமல் குழந்தையை எண்ணி எண்ணிக் கலங்குவாய். எனக்கு இப்போது ஏற்பட்டிருப்பதை விட அதிக மடங்கு புத்திரசோகம் உனக்கு ஏற்படட்டும்.” என்று சாபம் கொடுத்தாள். அதிதி தன் கணவரான காச்யபரிடம் நடந்ததைச் சொல்லித் தன் அக்காவின் சாபத்தையும் சொல்லி மன்னிக்குமாறு கேட்க, அவரோ, “திதி தான் மன்னிக்கவேண்டும்.” என்று சொல்லி அவளிடம் அழைத்து வந்தார். இருவரையும் சேர்த்துப் பார்த்த திதி, காச்யபரும் இந்தச் செயலுக்கு உடந்தை என எண்ணிக் கொண்டு, “என் தங்கைக்கு நான் இட்ட சாபம் உங்களையும் சேர்த்தே!” என்று சொல்லிவிடுகிறாள். ஒருபாவமும் அறியாத காச்யபர் அவசரப் பட்டுவிட்டாயே திதி என எண்ணிக்கலங்கினார். என்றாலும் சாபம் விடவில்லை. இந்த அதிதிதான் தேவகியாகவும், காச்யபரே வசுதேவனாகவும் பிறந்து புத்திர சோகத்தில் துடிதுடித்தனர்.


அடுத்து ஜராசந்தனின் பூர்வீகம் வரும். இதுவும் இந்தத் தொடருக்குத் தேவையான ஒன்று.

Monday, September 14, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், - ப்ரத்யோதாவின் கலக்கம்!

ப்ரலம்பன் இறந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. கம்சன் இந்த மூன்று நாட்களும் தூங்கவே இல்லை. பகலும், இரவும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றாகவே இருந்தது. தன்னந்தனியாகத் தன் அறையில் அமர்ந்து யாருடனும் பேசாமல் யோசித்தவண்ணமே பொழுதைக் கழித்தான். யோசனை என்றால் சாமானியமான யோசனையா அது? வசுதேவனின் மகன் அதுவும் எட்டாவது மகன் உயிருடன் இருக்கின்றானா? அதுவும் அப்படியா? அவனைச் சும்மாவிடுவதா? விடுவதா?? ஹாஹ்ஹாஹா! வாசுதேவ கிருஷ்ணா, நீ எனக்கு எமனா? நான் உனக்கு எமனா? பார்த்துவிடுவோம். அவன் அழிந்தே ஆகவேண்டும். இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்றாராமே வேத வியாசமுனி?? யார் உய்விக்கப் போகின்றார்கள் பார்க்கலாம். உயிருடன் இருந்தால் தானே உலகை உய்விக்க முடியும்? என்னால் இறக்கப் போகின்றான், அவனை மட்டுமின்றி அவனுடன் சேர்த்து இந்த யாதவத் தலைவர்கள் அனைவரையும் கூட அழித்தால் நல்லதுதான். அனைவருக்கும் பனிரண்டு ஆண்டுகள் நான் இல்லாமல் துளிர்த்துவிட்டது. கம்சன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் செய்தி அனுப்பினான். செய்தியில் யாதவ சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவுத் தலைவர்களும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டிய கூட்டம் எனவும், இது கம்சனின் ஆணை எனவும் சொல்லி அனுப்பினான். கூட்டத்தின் கலந்துரையாடல் ரகசியமாக வைக்கப் படும். ஆகையால் இது ஓர் அவசியமான ரகசியக் கூட்டம் எனவும் அனைவருக்கும் தெரிவிக்கப் பட்டது. அதோடு பொதுமக்களுக்கு அன்றிலிருந்து பதினைந்தாம் நாள், கம்சன் அஸ்வமேத யாகத்துக்குச் சென்று வந்ததையும், வென்று வந்ததையும் கொண்டாடும் வகையில் ஒரு தனுர் யாகம் நடத்தப் போவதாயும், அந்த யாகத்துக்கு முந்திய ஒரு வாரமும் பலவிதமான கொண்டாட்டங்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப் பட்டது. கொண்டாட்டங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளைத் தவிரவும், வீரர்களின் மல்யுத்தப் போட்டிகள், ரதப் போட்டிகள், யானைகளின் சண்டைகள், வாள் வித்தை, வில் வித்தை போன்ற பல்வேறு விதமான போட்டிகளும் தேர்ச்சி பெற்ற சிறந்த வீரர்களால் நடத்தப் படும் எனவும் போட்டியில் வென்றவர்களுக்குப் பல்வேறுவிதமான பரிசுகள் காத்திருப்பதாயும் அறிவிக்கப் பட்டது.

பூதனையின் கணவனும், கம்சனின் படைத் தளபதியும் ஆன ப்ரத்யோதா மனைவி இறந்ததில் இருந்தே மனத் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். தானோ, தன் மனைவியோ சரியான பாதையில் செல்லவில்லை என்பதும், அதன் காரணமாகவே இந்தத் துன்பம் என்பதும் அவனுக்கு நன்கு புரிந்தாலும், வெளிப்படையாகக் கம்சனின் ஆணையைச் சிரமேல் ஏற்று அதை நடத்த முனைந்தான். ஆனாலும் கம்சன் அவனை நம்பவில்லையோ? வெளிப்படையாக ப்ரத்யோதா தான் இந்த யாகத்துக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப் போகின்றான் என்று இருந்தாலும், கம்சன் ரகசியமாய்த் தன் அருமை மனைவியும் ஜராசந்தனின் மகளும் ஆன மகத இளவரசியின் உறவினன் ஆன வ்ருத்திர்க்ஞன் என்பவனையே அழைத்து அனைத்து ஆலோசனைகளையும் சொல்லி அவன் மூலம் நடத்திக் கொண்டான். அதோடு இல்லாமல் ப்ரத்யோதாவுக்கு இன்னும் அதிர்ச்சி அளிக்கும் விதமாய் கம்சனின் மெய்க்காப்பாளர்களாய் இருந்த ப்ரத்யோதாவின் வீரர்கள் திருப்பி அனுப்பப் பட்டு அந்த இடத்தில் இப்போது விர்த்திர்க்ஞனின் வீரர்கள் பொறுப்பை ஏற்றிருந்தனர். கம்சனுக்குத் தன்னிடம் சந்தேகம் என்பதும், அதை அவன் வெளிப்படையாகக் கேட்காததும் ப்ரத்யோதாவின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது. வாழ்நாள் பூராவும் இந்த அரக்கனுக்குப் பணிவிடை புரிந்து வந்தும், பல்வேறு கொடிய செயல்களை இவன் செய்யச் சொல்லிச் செய்தும், இவனுக்கு நம்மிடம் நம்பிக்கை வரவில்லையே! இந்த மூடனுக்காக நான் என் மனைவியையே இழந்து என் குழந்தைகளையும் இழந்தேனே! மனம் நொந்தான் ப்ரத்யோதா.

ப்ரலம்பனின் கடைசி நிமிடங்கள் அவனுக்கு மறக்கவே முடியாத ஓர் அனுபவமாக அமைந்தது. வெளியே காவல் காக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் அவன் காதுகள் உள்ளே நடப்பதையே கூர்மையாகக் கவனித்துக் கிரஹித்துக் கொண்டிருந்தது. கடைசியில் ப்ரலம்பன் சொன்னது, “இவன் அந்த மஹா வாசுதேவனே! சாட்சாத் அந்தப் பரம்பொருளே!” என்றல்லவோ சொன்னான். ஆஹா, இது உண்மையாகவே இருக்கவேண்டும். அதான் இந்தக் கிழவன் ப்ரலம்பன் அந்த நந்தனின் குமாரனை எவ்விதமான இடையூறும் கொடுக்காமல் வளரவிட்டானோ? நம்மையும் அணுகவிடவே இல்லை, தானும் எந்தத் தொந்திரவும் கொடுக்கவில்லை. அதோடு அவனுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த நந்தனின் குமாரனாய் வளர்பவன் வாசுதேவ கிருஷ்ணன் என்றும், தேவகியின் எட்டாம் குழந்தை, கம்சனின் யமன் என்பதும் தெரிந்தே வளரவிட்டிருக்கிறான். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்???? ஆனால் பூதனை தேவகிக்குப் பெண்குழந்தை பிறந்ததாக அன்றோ சொன்னாள்? அவள் ஏன் அப்படிச் சொல்லவேண்டும்? அந்தப் பெண் குழந்தையைக் கம்சன் தூக்கியபோது அது ஏன் ஒரு விசித்திரக் கூச்சலுடன் கையை விட்டு நழுவிச் சென்றது? பூதனை ஏன் கோகுலத்துக் குழந்தைகளுக்கு விஷப் பால் ஊட்டச் சென்றாள்? ஒருவேளை, ஒருவேளை இப்படியும் இருக்குமோ?? பூதனைக்குத் தெரிந்திருக்கும் இவன் தான் நம்மைக் காக்கவல்ல ரக்ஷகன் என்று. அவனைக் கம்சனிடமிருந்து காக்கவும், எல்லாத்துக்கும் மேலே நம்மையும், நம் குழந்தைகளையும் காக்கவும் இப்படிச் செய்திருக்கலாமோ?

ப்ரலம்பனுக்கு மட்டுமில்லாமல் பூதனையும் அறிந்திருக்கிறாள் அந்தக் குழந்தைதான் காக்கும் கடவுள் என்று. இப்போது கம்சன் ஏதோ திட்டம் தீட்டுகிறான், அனைத்து யாதவர்களையும் ஒருசேர அழிக்கவேண்டும் என்று நினைக்கிறான். அது நடக்குமா? இப்போது நான் என்ன செய்வது? என்னுடைய சொந்த யாதவகுலத்துத் தலைவர்கள் அனைவரும் அழியக் காரணமாய்க் கம்சனுக்கு நான் உதவி செய்யவேண்டுமா? நானும் ஒரு தலைவன் தானே. கம்சனின் ஒரு கருவியாக நான் செயல்படவேண்டுமா? கம்சனுக்கு நான் உதவுகிறேன் என்றால் மட்டுமே எனக்கு இங்கே மதிப்புக் கொடுப்பான் கம்சன். அனைத்துத் தலைவர்களையும் அழித்தாலும் என்னை மட்டும் விட்டு வைப்பானோ? சிந்தனை ஓட்டத்தைத் தடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ப்ரத்யோதாவுக்கு அப்போது வந்த செய்தியால் சிந்தனை அறுபட்டது. கம்சன் உடனே வந்து அவனைக் காணச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறான். சேச்சே! இப்போது இருக்கும் மனநிலையில் கம்சனைக் காணவே பிடிக்கவில்லையே! அதுவும் இப்போது நாம் நினைப்பதை எல்லாம் கம்சன் அறிந்துவிட்டானானால். அவனுக்கு என்னமோ மனதை ஊடுருவிப் பார்க்கும் திறன் இருக்கிறது. அதுவும் இப்போது கம்சன் அவனுடைய பயத்தையும், நடுக்கத்தையும் உதறிவிட்டவன் போல் இருக்கிறான். ஏதோ திட்டம் அவன் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அவனுடைய நிதானமும், அதீதப் பணிவும் அவன் ஏதோ துர்நோக்கத்துடன் கூடிய திட்டம் ஒன்றை நிறைவேற்றப் போகின்றான் என்றே அறிவிக்கிறது. வேறு வழியே இல்லை. ப்ரத்யோதா கம்சனிடம் சென்றான்.

அவனைக் கண்டதும் கம்சன் மகிழ்ந்தவன் போல, “ நண்பா, நீ உடனே சென்ரு அக்ரூரரை அழைத்து வா. அல்லது அவரிடம் சொல். அனைத்து யாதவத் தலைவர்களையும் ஒன்று சேர்த்து அழைத்து வரும்படிச் சொல்லு. அதுவும் நாளை மதியம் நான் அனைவரையும் காண விரும்புவதாய்ச் சொல்லு.”

“அனைவரையுமா”

“ஆம், அனைவரையும். அவர்கள் அனைவரிடமும் நான் பேசி சமாதானமாய்ப் போக விரும்புகிறேன். ஆகையால் அனைவரையும், வரச் சொல்லு. புரிகிறதா ப்ரத்யோதா? ஒருவரும் விடக் கூடாது. என் தந்தையும் கலந்து கொள்ளப் போகின்றார் இந்தக் கூட்டத்தில்.”

“உத்தரவு, அரசே!” ப்ரத்யோதா கேட்டான், “ நானுமா கலந்து கொள்ளவேண்டும்?”
“நிச்சயமாய்! நிச்சயமாய்! நீ இல்லாமல் கூட்டமா?”
கம்சனின் போலிப் பணிவு வெளிப்பட்டது அவன் குரலில். ப்ரத்யோதா இந்தப் பணிவைக் கண்டு வெறுத்தான், பயந்தான். “சரி, உத்தரவு அரசே! என்றால் கூட்டம் நடக்கும் வேளையில் என்னுடைய வீரர்களைக் காவலில் அமர்த்தலாமா? நானும் காவலில் தானே இருக்கவேண்டும்?”

“உன்னை நீயே கஷ்டப் படுத்திக் கொள்ளாதே நண்பனே! இளவரசன் வ்ருத்திர்க்ஞன் அனைத்தையும் பார்த்துக் கொள்ளுவான்.”

“உத்தரவு அரசே!”

”சரி, அக்ரூரர் என்ன சொல்லுகின்றார் என்பதை என்னிடம் வந்து சொல்லு.” கம்சன் ப்ரத்யோதாவைப் போகலாம் எனச் சைகை காட்டினான். ப்ரத்யோதாவிற்குத் தன் காதுகளை நம்பமுடியவில்லை. இரக்கமற்ற இந்த அரக்கன் இப்போது சமாதானமா பேசப் போகின்றான். தன்னுடைய சொந்த ஒற்றர்களைத் திரட்டி மாளிகையில் நடப்பது பற்றி ஓரளவு அறிந்து கொண்ட ப்ரத்யோதா அக்ரூரரைக் காணச் சென்றான். தலை நரைக்கத் தொடங்கி இருந்த அக்ரூரர் ப்ரத்யோதாவின் வரவினால் ஆச்சரியம் அடைந்தார். அவருடைய சாந்தமான கண்கள் மட்டுமின்றி, முகமும் ப்ரத்யோதாவை வரவேற்றது. கம்சனின் செய்தியை ப்ரத்யோதா சொன்னதுமே, அக்ரூரருக்கும் இது கொஞ்சம் விசித்திரமாகவே தெரிந்தது. “இது என்ன எதிர்பாராமல் இப்படி ஒரு கட்டளை?” என்று கேட்டார் அக்ரூரர், ப்ரத்யோதாவிடம். “தெரியவில்லை, எனக்கும் ஆச்சரியமாய்த் தான் இருந்தது. சற்றுமுன்னரே மன்னர் இதை என்னிடம் சொன்னார்.” என்றான் ப்ரத்யோதா.

“ம்ம்ம்ம்ம் நீ தான் தனுர்யாகம் பொறுப்பை ஏற்றிருக்கிறாயாமே? மாளிகைக் காவல் இப்போது உன்னிடம் இல்லையாமே? “ அக்ரூரர் கேட்டார். இந்த நல்ல மனிதனை ஏமாற்றி என்ன சாதிக்கப் போகிறான் கம்சன்? ப்ரத்யோதாவிற்கு அவரிடம் எதையும் மறைக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அக்ரூரர் மேலும் கேட்டார். “ எங்கள் அனைவரிடமும் கம்சன் கோபமாக இருப்பதாகவே அறிந்தேன். அப்புறம் எப்படி இப்படி ஒரு கட்டளை?”

“ஆம், ஐயா, ஆனால் இன்று கம்சனைப் பார்த்தால் மனம் சமாதானம் அடைந்தவனாய்த் தோன்றினான். மிகவும் சிநேகிதமாய்ப் பேசினான்.”

“ஏன் இந்த திடீர் மாற்றம்?”

தயங்கிக் கொண்டே, “தெரியாதே!” என்றான் ப்ரத்யோதா. இந்த நல்ல மனிதனிடம் பொய் சொல்லவேண்டி உள்ளதே, நான் சொல்வது பொய் என்பதை இவர் கண்டு கொள்வாரா? இவரைக் காணவே வெட்கமாயும் உள்ளது. “ம்ம்ம்ம்ம்ம் ப்ரத்யோதா, நீ மன்னனுக்கு மிகவும் நெருக்கமானவன். இந்த மாற்றம் உண்மையா? அல்லது அனைவரையும் வரவழைத்து ஒரே இடத்தில் அனைவரையும் கொல்ல ஏதாவது திட்டமா? அப்படி ஒன்றும் நேர்மையானவனாய்த் தெரியவில்லையே இந்த இளவரசன் கம்சன்.” அனைவரும் கம்சனை மன்னன் எனவே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கட்டளை இருந்தாலும் உக்ரசேனர் உயிருடன் இருப்பதால் அக்ரூரரால் அவனை மன்னனாக ஏற்கமுடியவில்லை. ப்ரத்யோதாவோ தவித்தான். ரிஷியைப் போன்ற புனிதமான இந்த மனிதரிடம் அதுவும், நம் உறவினர்களுள் தலைமை ஸ்தானம் வகிப்பவர், அனைவராலும் வணங்கப் படுபவர் இவரிடம் போய்ப் பொய் சொல்லும்படி செய்துவிட்டானே இந்தக் கம்சன். அவரை நிமிர்ந்தே பார்க்கமுடியவில்லை ப்ரத்யோதாவிற்கு. “இளவரசருக்கு ஏதானும் திட்டம் இருக்கலாம். அவர் ஒரு வித்தியாசமான மனிதர்.” என்று பொதுவாய்ச் சொன்னான். “ம்ம்ம்ம்ம்ம் “ அக்ரூரரும் யோசித்தவண்ணமே கேட்டார், “ஏதேனும் துர்நோக்கம் வைத்திருப்பானோ?” “இருக்கலாம்” என்று சொல்லும் வண்ணம் தலையை ஆட்டினான் ப்ரத்யோதா. அப்போது அங்கே ஒரு இனிமையான குரல் கேட்டது. “வணங்கத் தக்கவரே, வருகிறீர்களா?? கர்காசாரியார்……………

ப்ரத்யோதாவிற்குத் தூக்கிவாரிப் போட்டது. ஒரு முப்பது வயது மதிக்கத் தக்க பெண் ஒருத்தி சிறு கூடு போன்ற உடலோடு நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு வயது முப்பதுக்கு மேல் இருக்காது, ஆனால் அவள் தலையோ நரைத்துப் போய், முகத்தில் சோகத்தின் எல்லை மீறிப் போய், வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சோக உணர்வு நிரந்தரமாக முத்திரை இட்டுப்போயிருந்தது. யார் இவள்? உள்ளே வந்த அவள், தன் பேச்சை நிறுத்திக் கொண்டு பயத்தோடு ப்ரத்யோதாவைப் பார்த்தாள். அவள் பயம் அவள் கண்களில் தெரிந்தது. அக்ரூரர், “வா, தேவகி” என அவளை வரவேற்றார். என்ன????? இவளா தேவகி? உலகத்துச் சோகமெல்லாம் ஒன்று சேர்ந்து ஓருரு எடுத்து வந்தாற்போல் இருக்கிறாளே? அக்ரூரர், “இதோ இவன் யார் தெரிகிறதா?ப்ரத்யோதா, நம் யாதவ குலத்தின் அந்தகப் பிரிவைச் சேர்ந்த தலைவன் இவன், தெரியுமா?” என்று தேவகியைக் கேட்டார். தேவகிக்கு அவன் யாரென முதலில் புரியவில்லை. புரிந்ததும் அவள் உடலே நடுங்கியது. முகம் வெளுத்துக் கைகள், கால்கள் நடுங்க ஆரம்பித்தன. கீழே விழுந்துவிடுவாள் போல் இருக்கவே பக்கத்தில் உள்ள கதவைப் பிடித்துக் கொண்டாள். எந்த நிமிஷமும் மயங்கிவிழுந்துவிடுவாளோ என நினைக்கும்படியாகத் தோற்றமளித்தாள். வாயைத் திறக்காமலேயே தலையை மட்டும் ஆட்டி “தெரியும்” என்பதைச் சொன்னாள்.

Friday, September 11, 2009

இறவாத் தமிழன்!


"என்றுமிருக்கவுளங்கொண்டாய்
இன்பத் தமிழுக்கிலக்கியமாய்
இன்றுமிருத்தல் செய்கின்றாய்
இறவாய் தமிழோடிருப்பாய் நீ!"


கவிதையும் பாரதியுடைய கவிதையே. இறவாமை என்ற தலைப்பில் தாயுமானவரை வாழ்த்தி எழுதிய கவிதையின் முதல் நான்கு வரிகள். அம்பியோட பின்னூட்டத்தைப் பார்த்ததுமே இதைக் குறிப்பிடாததால் எல்லாரும் எழுதினது நான் தான்னு நினைச்சுக்கப் போறாங்களேனு பயம்! :)))))) கவிதை எல்லாம் எழுதி யாரையும் பயமுறுத்தறதா இல்லை. பாரதிக்கு அஞ்சலி!

Tuesday, September 08, 2009

கண்ணன் வருவான், கதை சொல்வான் - கம்சனின் கலக்கம்!


கண்ணை மூடினால் கண்ணன் வந்து தன்னைக் கொல்லுவதாய்த் தோன்றியது கம்சனுக்கு. அந்தப்பிள்ளையை அவன் பார்த்ததே இல்லை. என்றாலும் ஒருவேளை தேவகியின் மகனாய் இருக்கக் கூடும் என்ற சாத்தியமே போதுமானதாய் இருந்தது. கனவிலும், நனவிலும், , வந்து தொந்திரவு கொடுத்தான் அந்தச் சிறுவன். எக்காளமிட்டுச் சிரித்தான். கம்சனுக்கு அன்றிரவு தூக்கமே இல்லை. தூங்க முற்படும்போதெல்லாம் கெட்ட கனவு கண்டு விழித்து எழுந்தான். சுற்றும், முற்றும் பார்த்துக் கொண்டு தன் அரண்மனையில் தன் பிரத்யேகப் படுக்கை அறையில் காவலாளிகள் காவல் காக்கத் தூங்குவதை நிச்சயம் செய்து கொண்டான். இரவுப் பொழுது கழிந்து மறுநாள் காலை புலர்ந்தது. கம்சன் மரணப்படுக்கையில் இருக்கும் தன் முதல் மந்திரியான ப்ரலம்பாவை அன்று எப்படியேனும் சென்று பார்த்துவிடுவது என நிச்சயம் செய்து கொண்டான். காலைக்கடன்களை முடித்துக் கொண்டு நடக்கவோ, நிற்கவோ முடியாமல் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில் இருக்கும் முதன்மந்திரியைக் காணத் தன் ரதத்தில் சென்றான். தன்னுடன் ப்ரத்யோதாவை மட்டும் அழைத்துச் சென்றான்.அங்கே படுத்துக்கிடக்கும் ப்ரலம்பாவைக் கண்ட கம்சனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அரை நினைவோடு இருந்த மந்திரியைக் கண்டு கூட கம்சன் தன் காரியத்தையே குறியாக நினைத்தான்.

ப்ரத்யோதாவை வெளியே காவலுக்கு நிறுத்திவிட்டு ப்ரலம்பாவின் வீட்டு மனிதர்களையும், மற்றவர்களையும் அறைக்கு வெளியே அனுப்பினான். அவனுக்கு இருந்த ஆத்திரத்திலும், அவசரத்திலும் என்ன செய்கின்றோம் என்றே அறியாமல் அரை நினனவில் இருந்த அந்த மனிதனைப் போட்டு உலுக்கிச் சுயநினைவுக்குக் கொணர முனைந்தான் கம்சன். ஆனால் அவனோ, கண்ணைத் திறப்பதும், மீண்டும் மயங்குவதுமாகவே இருந்தான். கடும் பிரயத்தனத்தின் பேரில் ப்ரலம்பன் தன் கண்களைத் திறந்து பார்த்து கம்சனைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தன் கைகளைக் கூப்பி வணங்க முற்பட்டான். கம்சன் விடவில்லை. இவனிடம் எப்படியாவது உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டுமே?

“ப்ரலம்பா, நான் யார் தெரிகிறதா? பேசுவது காதில் விழுகிறதா?”
மேலும் இருமுறை கேட்டதும், ஒரு சிறிய கண்ணசைவினாலும், மெல்லிய குரலினாலும் ப்ரலம்பன் பதில் கொடுத்தான்

“ப்ரலம்பா, நன்றாய்க் கேள், யாரோ கிருஷ்ணனாமே? நந்தனின் மகனாமே? உனக்கு அவனைப் பற்றி ஏதாவது தெரியுமா? அப்புறம் ரோஹிணிக்கும் ஒரு மகன் பிறந்திருக்கிறானாமே? பலராமன் என்று பெயராமே? கேள்விப் பட்டாயா?”

“ம்ம்ம்ம்” மெல்லிய முனகல் ப்ரலம்பனிடமிருந்து. “ஆஹா, அதுவும் அப்படியா, ப்ரலம்பா, இந்தக் கிருஷ்ணன் தானே பூதனையையும் திரிணாவிரதனையும் கொன்றது?” மீண்டும் மெல்லிய குரலில், “ம்ம்ம்ம்ம்ம்” என்றே பதில் வந்தது.

“அந்தக் கிருஷ்ணன் இப்போது பலசாலியாகவும், மிகவும் அழகாயும், அனைவரையும்கவரும் வண்ணமும் வளர்ந்திருக்கிறானாமே? அதுவும் அறிவாயா?”

“ம்ம்ம்ம்ம்ம்” மீண்டும் அதே குரல் ப்ரலம்பனிடமிருந்து. கம்சன் பல்லைக் கடித்தான். கடித்த பற்களினூடே கேட்டான்.” கிருஷ்ணனிடம் எல்லா கோபர்களும், கோபிகளும் உயிரையே வைத்திருக்கின்றார்களாமே? “
“ம்ம்ம்ம்ம்ம்ம், ஆம்”
“காலியன் என்ற கொடிய விஷநாகத்தைக் கூடக் கட்டி அடக்கிவிட்டானாமே?”
“ஆம் ஐயா” மிக மிக மெல்லிய குரலில் ப்ரலம்பன் சொல்கின்றான்.
அவ்வளவு தான், பாய்ந்தான் கம்சன். “முட்டாளே, அடி முட்டாளே, என்ன செய்து கொண்டிருந்தாய் இவ்வளவு வருஷங்களாய்? அவனை இவ்வளவு ஆகிருதியுடன் பலவானாக, இளைஞனாக வளரும்வரையில் நீ என்ன செய்தாய்? எப்படி அனுமதித்தாய்?” கம்சனின் கோபம் எல்லை மீறியது. ஆஹா, இவன் மரணப்படுக்கையில் இருந்தால்தான் என்ன? இவனைக் கொன்று விடலாமா? கம்சனின் கைகள் பரபரத்தன ப்ரலம்பனைக் கொல்வதற்கு.

அவனுடைய மந்திரியோ ஓரளவு தூக்க முடிந்த இடக்கையைத் தூக்கிக் கையை விரித்து, “நான் என்ன செய்திருக்க முடியும்?” என்று கேட்டுவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். இரக்கமற்ற கம்சனோ அவனைப் போட்டு உலுக்கு உலுக்கு என உலுக்கினனன். மீண்டும் பிரயத்தனத்துடன் கண்களைத் திறந்து பார்த்தவனைக் கம்சன், “இவனைப் பற்றிய தகவல்கள் உனக்கு வந்தனவா இல்லையா?” என்று கேட்டான். “ஆம் , வந்தன” என்றான் ப்ரலம்பன். “ அப்படியா? அப்படி என்றால் இந்தப் பையன் விருந்தாவனத்து கோபர்களையும் மற்ற மக்களையும் இந்திரவிழாவுக்குப் பதிலாக தன்னைத் தானே கடவுள் ஆக்கிக் கொண்டு தனக்குத் தானே விழா எடுத்துக் கொண்டான். அப்படித் தானே?”

அவ்வளவு உடல் பலஹீனத்திலும் கடுமையாக மறுத்தான் ப்ரலம்பன். “இல்லை, ஐயா, இல்லை” என்றான்.

“சரி, அப்படியே இருக்கட்டுமே, ஆனால் அவன் பசுக்களையும், மரங்கள், மலைகளையும், முக்கியமாய் கோவர்தனத்தையும் வழிபட்டு விழாவை மாற்றினான் இல்லையா? அது அவன் வேலை தானே?”

“ஆம்”
“ஏன் என்னிடம் சொல்லவே இல்லை?”
பேசமுடியாத ப்ரலம்பன் ப்ரத்யோதாவை நோக்கிக் கை காட்ட, கம்சன், “ஓ ப்ரத்யோதாவுக்குத் தெரியும் என்கின்றாய், அப்படித் தானே?” என்று கேட்க, ப்ரலம்பன், “ஆம்” என்று பதில் சொன்னான். “ம்ம்ம்ம்ம்ம்ம் அப்போ, கிருஷ்ணனும் சேர்ந்து வழிபடப் பட்டிருக்கிறான் அந்த விழாவில், அதுவும் உண்மை, அப்படித் தானே?” கம்சன் அதட்டினான். ஆனால் ப்ரலம்பன் வாயைத் திறக்கவே இல்லை. “”””’ம்ம்ம்ம்ம்., இந்தக் கிருஷ்ணன் தான், முரட்டுத் தனம் நிறைந்தது என்றும் பைத்தியமோ எனவும் சொல்லப் பட்ட காளை அரிஷ்டனையும், முரட்டுக் குதிரை கேசியையும் கொன்றதும் இவன் தானோ? ப்ரத்யோதாதான் அதை ஏற்பாடு செய்திருந்தான் அல்லவா?” ப்ரலம்பன் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது எனச் சைகை மூலம் தெரிவித்தான். கம்சனுக்கு மீண்டும் எல்லை மீறிய கோபம் கொந்தளித்தது.

தன் கோபத்தை அடக்கவே முடியாமல் அவன் அந்த இறந்து கொண்டிருக்கும் மனிதனிடம் சொல்கின்றான்:” இதோ பார் ப்ரலம்பா, நீ மட்டும் எனக்கு முப்பத்தைந்து வருஷங்களுக்கு மேல் சேவை செய்திருக்காவிட்டால் இந்நேரம் நான் உன்னைக் கொன்றிருப்பேன். அதுவும் இதோ இந்த நிமிஷமே, என் வெறும் கைகளாலே உன்னைக் கொல்ல வேண்டும்போல் உள்ளது. உன்னை நம்பி என் அரசுப் பொறுப்பையும், அரசு நிர்வாகத்தையும் ஒப்படைத்ததற்கு நீ என்னை நன்றாக ஏமாற்றிவிட்டாய். உன்னுடைய பலஹீனத்தினால் என்னுடைய யாதவத் தலைவர்கள் இன்று ஒன்று கூடி என்னை எதிர்க்கும் வல்லமை பெற்றிருக்கின்றனர். இவர்களை நான் இங்கு இருக்கும்போது நசுக்கிக் கொண்டிருந்தேன். இன்று துளிர்த்துவிட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக நீ இந்தக் கிருஷ்ணனை இடைச்சிறுவனை இவ்வளவு தூரம் வளரும்படிச் செய்துவிட்டாய். அவனுடைய வல்லமையைப் பார்த்தால் இந்த மதுராபுரி மக்கள் அவன் தான் தங்களைக் காக்க வந்த கடவுள் என்று எண்ண ஆரம்பித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. ப்ரலம்பா, நீ என்னை ஏமாற்றிவிட்டாய்.”

ப்ரலம்பன் மிகுந்த கஷ்டத்துடன் தன் இருகைகளையும் கூப்பிக் கம்சனை வணங்க முற்பட்டான். பல்லைக் கடித்த கம்சன், “போலி வேஷதாரியே, நிறுத்து உன் வேஷத்தையும், நாடகத்தையும். உனக்கு என்னிடம் விசுவாசம் என்பதே கிடையாது. இரு, இரு, உனக்குக் கொஞ்சமாவது விசுவாசம் இருந்தால் இந்த ஒரு விஷயத்தை மட்டுமாவது சொல்லு. இதுவே உன்னிடம் நான் கேட்கும் கடைசி உதவி.” என்றான். ப்ரலம்பன் என்ன என்பது போலப் பார்த்தான். கம்சன் குனிந்து மிக மிக மெதுவாக ரகசியக்குரலில் கிசுகிசுப்பாகக் கேட்டான், “ இவன், இவன் , இந்த நந்தனின் மகன் என்கின்றார்களே, இவன் தான் தேவகி பெற்ற எட்டாவது பிள்ளையா?? “ அவன் கேட்டது என்னமோ மெதுவாய்த் தான். ஆனால் ப்ரலம்பனுக்கு அது ஒரு மிரட்டலாகவே தொனித்தது. அவன் வாயே திறக்கவில்லை.

“ஆஹா, பேசு, ப்ரலம்பா, பேசு, ஒரு பிராமணன் ஆன உன்னைக் கொல்லவேண்டும் என்ற என் ஆவலைக் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கிறேன். இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை என்றால், நீ ஒரு பிராமணன் என்றும் பார்க்காமல் கொன்றே விடுவேன். சொல், அவன் தேவகியின் எட்டாவது பிள்ளையா?”
மிகுந்த கஷ்டத்துடன், சிரமத்துடன், தன் தலையையும் ஆட்டி, வாயினாலும், “ஆம்” என்று சொல்வதற்குள் ப்ரலம்பன் பட்ட கஷ்டம் அவனுக்கு மட்டுமே புரியும். “துரோகி, பச்சைத் துரோகி, என் உப்பைத் தின்றுவிட்டு எனக்கே துரோகமா செய்தாய்? நன்றி கெட்டவனே, ஏன் என்னிடமிருந்து மறைத்தாய் இந்த விஷயத்தை, சொல், இப்போதே சொல்.” உலுக்கினான் கம்சன் ப்ரலம்பனை. ப்ரலம்பனுக்கு உடல் ஆட்டம் கண்டு விட்டது. ஏற்கெனவே நோயின் கடுமையால் ஆட்டம் கண்டிருந்த உடல் இப்போது கம்சனால் மிகவும் தளர்ந்துவிட்டது. அவனால் கண்களையும் திறக்கமுடியவில்லை, பேசவும் முடியவில்லை. ஆனால் கம்சனும் விடவில்லை. மீண்டும், மீண்டும் உலுக்கிக் கேட்டான். ஏன், ஏன் ஏன்” இதுதான் கம்சனின் கேள்வி, மிகுந்த ப்ரயத்தனத்துடன் இது தான் தன்னுடைய கடைசி வார்த்தை என்பது போல் கஷ்டத்துடனேயே ப்ரலம்பன் சொன்னான். “ ஏன் என்றால், என்றால் மரியாதைக்குகந்த, முக்காலமும் தெரிந்த வியாசர் சொன்னார், இவன் அந்த வாசுதேவனே, சாட்சாத் மஹாவாசுதேவன்!" வாசுதேவன் என்ற உச்சரிப்பைச் சொன்ன மாத்திரத்தில் ப்ரலம்பனின் தலை சாய்ந்தது. தொண்டையில் இருந்து “க்ளக்” என்னும் ஒரு சப்தம் மாத்திரமே வந்தது. அப்புறம் அவனிடம் அசைவே இல்லை. கம்சன் அவனை பார்த்து மிரண்டான். ப்ரலம்பன் இறந்துவிட்டான். மரணம் ப்ரலம்பனுக்கு ஏற்பட்டதை நேரில் பார்த்ததினால் ஏற்பட்ட பயம் இன்னும் அதிகரித்து அதிலிருந்து விடுபட முடியாமல் இப்போதே தன்னையும் மரணம் துரத்துகின்றதோ என்ற பய உணர்வோடேயே அங்கிருந்து வேகமாய்ச் சென்றான் கம்சன்.