எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 12, 2010

அந்த நாளும் வந்திடாதோ 3

மணிமேகலாதெய்வம் உதயகுமரனுக்கு அறிவுரை சொல்கிறாள்:

"கோன் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்-ஆள்-வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும்"

[சுருக்கமான பொருள்: மன்னன் தன் நிலையில் மாறுபட்டால் கோள்கள் ("கிரகங்கள்") தங்கள் நிலையில் மாறுபடும். கோள்கள் தங்கள் நிலையில் மாறுபட்டால் நாட்டில் மழையில்லாமல் வறட்சி உண்டாகும். வறட்சி உண்டானால் உலகத்தில் உயிர்கள் வாழமுடியாது. உலக உயிர்கள் எல்லாம் மன்னனின் உயிர் என்ற தகுதி இல்லாமல் போகும்.]//

மின் தமிழ்க் குழுமத்தில் ராஜம் அம்மா மணிமேகலை விளக்கவுரையில் இட்ட பகுதி இது. இந்தக் கால கட்டத்துக்கும் பொருந்தி வருவதை எண்ணி வியப்பாய் இருந்தது. இது பற்றிய தற்கால வேத விற்பன்னரும், விஞ்ஞானியுமான ஒருவரின் கருத்தும் கீழே!


இந்த இயற்கைப் பேரழிவுக்கும், அதைத் தொடர்ந்த கூட்டுச் சாவுகளுக்கும் காரணத்தை ஆராய்ந்தால், நாமே தான் காரணம் என்று தெரிந்து கொள்வோம். முதலில் வாயு கெட்டுப் போகிறது. வாயு கெட்டால் அதைத் தொடர்ந்த நீர், நிலம், தேசம், பயிர், பச்சைகள் என அனைத்துமே கெட்டுப் போய் இயற்கை மாறுபட்ட விதத்தில் பருவங்களைக் காட்டுகிறது. பருவங்கள் மாறிவிடுகின்றன. வாயுவில் கலக்கும் விஷப் பொருட்களே அனைத்துக்கும் காரணம். இந்த விஷப் பொருட்களை நம்மை அறியாமல் நாம் வாயுவில் கலந்து கொண்டிருக்கிறோம். இதையே சுற்றுச் சூழல் மாசு என்று சொல்லிக் கொள்கின்றோம். இதன் அடிப்படையிலேயே அனைத்தும் கெட்டுப் போய்விடுகிறது. அப்புறம் காலத்தில் வரவேண்டிய பருவங்கள் பொய்த்துப் போய் மாறுபட்ட பருவங்கள் வரும்போது இயற்கைப் பேரழிவு, விபத்துகள் போன்றவை நேரிட்டுக் கூட்டுச் சாவுகள் ஏற்படுகின்றன. மேலும் அந்தக் கூட்டுச் சாவில் இடம் பெற்றிருக்கிறவர்களில் யாராவது ஒருத்தர் இரண்டு பேருக்காவது அல்பாயுசாகவும் இருக்கலாம் என ஜோதிடம் கூறுகிறது. அல்பாயுசு உள்ளவனோடு சேர்ந்தால், நீரில் விழுந்தவன் தன்னைக் காக்க வருபவர்களையும் தன்னையும் அறியாமல் எவ்விதம் மூழ்க அடித்துவிடுகிறானோ அவ்விதம் அல்பாயுசுக் காரனோடு சேர்ந்தவர்களும் இறக்கின்றனர்.//

அவர் எப்போவோ தொலைக்காட்சியில் சொன்னதைக் குறிச்சு வைச்சேன், இப்போத் தேடி எடுத்துப் போடுகிறேன்,. ஏற்கெனவே எல்லாரும் க்ளோபல் வார்மிங் பத்தி எச்சரிக்கை கொடுக்கறாங்க இல்லையா?? இது ஒரு வேதங்களை நன்கு கற்றுணர்ந்த பெரியவர் ஒருவர் கூறியது. ஆங்கிலப் படிப்பும் உண்டு அவருக்கு! பெயர் நினைவில் இல்லை. :(
*************************************************************************************

வீடே ஆடுகிறது. அதுவும் நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலி மிகவே ஆடுகிறது. பூகம்பம், பூமி அதிர்ச்சி போல் தரையில் ஆட்டம்! எல்லாம் பக்கத்து வீட்டை இடிப்பதால் ஏற்பட்ட விளைவுகள். பதினைந்து நாட்களாய் இடிக்கிறார்கள், இடிக்க முடியாமல் இடிக்க்கிறார்கள். இயந்திரம் வந்து நாலைந்து நாட்களாய் உடைக்கிறது. என்னோட கர்த்தபக்குரலே நம்ம ரங்க்ஸுக்குக் கேட்கவில்லை. அவரோ கேட்கவே வேண்டாம், சும்மாவே மனசுக்குள்ளே நினைச்சுப்பார், பழக்க தோஷத்தில் நான் புரிஞ்சுப்பேன். இப்போ என்ன நினைக்கிறார்னே தெரியலை! :( இந்த அழகில் எல்லாரும் இப்போத் தான் தொலைபேசி அழைப்பு! மஹாபலி போல பாதாளத்தில் போய்த் தான் பேசணும்! :(

அடுத்த குறை நேத்திக்கு அணில் பிள்ளை செத்துப் போச்சு. எப்படினு புரியலை. பார்த்தால் தூங்கறாப்போல் இருந்தது. ஏதோ விளையாடுதுங்கனு நினைச்சேன். அப்புறம் தான் ரங்க்ஸ் சொன்னார். மாமியார் வந்திருந்தப்போ இறக்கிய கட்டிலை ஆளை விட்டு எடுத்துப் போய் மாடியில் கொண்டு வைக்கப் போனார். ஏற்கெனவே அங்கே பூனை குட்டிகள் போட்டு இருந்தது. சரி ரொம்ப நாட்கள் கழிச்சு வந்திருக்குனு நானும் பத்தியம் மட்டும் கொடுத்துட்டு கிட்டேவே போகலை. அவரும் போகலை. கட்டிலை வைக்கும்போது அங்கே குட்டிகளோட தூங்கிண்டு இருந்திருக்கு. அதை எழுப்பி, நகர்ந்துக்கோ, அப்புறமா வா னு சொல்லிட்டுத் தான் கட்டிலை வைச்சிருக்கார். அதுக்கு அப்படியும் கோபம். ஒண்ணொண்ணா குட்டிகளைத் தூக்கிண்டு இடம் மாற்றக் கிளம்பிடுச்சுனு சொன்னார். அட, குட்டிகளைப் பார்க்கக் கூட இல்லையேனு வருத்தமா இருந்தது. அப்போ இந்த அணில் குறுக்கும், நெடுக்குமா போயிண்டிருந்திருக்கு. கோபத்தில் அதன் மேல் பாய்ந்துவிட்டதாம்! மனசே சரியில்லை. ஏற்கெனவே பக்கத்து வீட்டு மரங்களில் இருந்ததெல்லாம் இடம் இல்லாமல் இங்கே ஒரே நெருக்கடி போல! ஒரே சத்தம்! இதுங்க ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டுக்காமல் இருக்கக் கூடாதோ??
*******************************************************************************

கொஞ்சம் ஆறுதலான விஷயமாய் இன்று காலை. நெசப்பாக்கத்தில் நாத்தனார் பெண் வீட்டுக்குப் போகவேண்டி இருந்தது. வாடிக்கை ஆட்டோக்காரர் தான் வந்தார். காலை ஆறரைக்கே போக்குவரத்து நெரிசலில் திணறியது அம்பத்தூரில் இருந்து கோயம்பேடு வரைக்கும். ஒரு மாதிரி சமாளிச்சுப் போயிட்டோம். ஆறுதல் என்னவென்றால் ஆட்டோக்காரர் ஒரு காலத்தில் மளிகைக்கடை வைத்து வசதியாய் வாழ்ந்தவர். அவர் அண்ணனோட லாட்டரி சீட்டு மோகத்தினால் குடும்பத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டுவிட்டார்கள். அப்புறமாய் தனித்தனியாய்ப் போய் ஒரே வீட்டில் தனித்தனியாய் வாழ்கின்றனர். அண்ணன் பெண் இப்போ பொறியியல் படிக்கிறாளாம். அப்பாடானு இருந்தது. அதோட இல்லாமல் இவர் தன் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயாவில் படிக்க வைச்சிருக்கேன். பெரிய பையர் பத்தாம் வகுப்பு முடிச்சுட்டு +1 க்கு டி ஐ ஸ்கூலில் சேர்த்திருக்கேன், மாநில பாடத்திட்டம் இருந்தால் தான் மேற்படிப்புக்கு வசதினு என்று சொன்னார். மனம் சந்தோஷத்தில் மிதந்தது.

கேந்திரிய வித்யாலயாவின் வசதிகளைப் பற்றி நன்கு உணர்ந்திருந்தார் என்பது அவர் பேச்சிலேயே தெரிந்தது. மூன்று மாசத்துக்கு மாணவர்களுக்கு வெறும் ஐம்பதே ரூபாய் தான் ட்யூஷன் ஃபீஸ். இன்னமும் அவ்வளவு தான் வாங்கறாங்கனு சொன்னார். ஏனென்றால் இரண்டாவது பையர் எட்டாம் வகுப்பு அங்கே தான் படிக்கிறாராம். முதல் வகுப்பில் இருந்தே சேர்த்துவிட்டதால் பாடத்திட்டத்தைப் பின்பற்றப் பையர்களுக்குப் பிரச்னை இல்லை என்றும் கூறினார். இதே பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகள் அப்பா, அம்மா பட்டதாரிகள், வேலை பார்க்கிறவர்கள், கார் வச்சிருக்கணும்னு எல்லாம் நிபந்தனைகள் போடுவதால் எங்களால் அப்படி ஒரு பள்ளியையும் பாடத்திட்டம் அளிக்கும் வசதிகளையும் நினைச்சுப் பார்க்க முடியாத நிலையில் இது எங்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்றார்.

ஆட்டோக்காரர் படிச்சது எட்டாம் வகுப்புத் தான் தமிழ் மீடியத்தில். திருச்செந்தூர் பக்கம் கிராமம் சொந்த ஊர். இன்னொரு சந்தோஷமான விஷயம் கால்நடைகளைப் பராமரிப்பது பற்றி அந்த நாளும் வந்திடாதோ 1-ல் சொல்லி இருந்தேன். இவர் யாரோ சொன்னாங்க என்று எழுபதாயிரம் ரூபாய் சேர்த்து பசுமாடும், கன்றும் வாங்கிப் பராமரிக்கச் சொல்லிக் கொடுக்கப் போவதாயும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இதற்கென ஒரு யாகம் செய்து கொடுக்கப் போவதாயும் எல்லாருமே (எண்பது நபர்கள்னு சொன்னார்) இதற்கென ஒரு குறிப்பிட்ட தொகை அளிக்க ஒத்துக்கொண்டிருப்பதாயும் கூறினார்.

எங்கேயோ விட்டெறிந்த கல் எங்கேயோ போய் விழுந்து கனி கிடைப்பதில் அல்ப சந்தோஷம். காலம்பர நெசப்பாக்கத்திலிருந்து வந்ததும்,பார்த்தால் பூனை மாடியில் இருந்து எல்லாக் குட்டிகளோடு யதாஸ்தானமான கீழ்ப்பக்கம் இருக்கும் குளியலறைக்கு வந்திருக்கு. அந்தப் பக்கம் துணி உலர்த்த விடாமல் ஒரே கத்தல். அதோட குட்டிகளை நான் தூக்கிண்டு போயிடுவேன்னு பயம். ஒரு குட்டி நல்ல கறுப்பு. பள பளனு. படம் எடுக்கலாம்னா குட்டிகளை மறைச்சு வைச்சிருக்கு. பார்க்கணும். எடுக்க முடியுதானு!

Saturday, December 11, 2010

அக்னிக்குஞ்சின் பிறந்த நாள்

அக்னிக்குஞ்சொன்று கண்டேன், ஆங்கோர் காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ??
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

பாரதியின் மேற்கண்ட பாடல் பலருக்கும் பலவிதமான பொருளைக் கொடுக்கிறது. எனக்குத் தோன்றிய பொருள்:

சக்தி உபாசகன் ஆன பாரதி தன்னுள்ளே தோன்றிய ஒரு சிறு பொறியைக் கண்டு விடுகிறான். கண்டு ஆனந்திக்கிறான். அந்தச் சின்னஞ்சிறு பொறியே அவன் உள்ளத்து மாசுகளை அழித்து உள்ளமெனும் காட்டைச் சீர் செய்கிறது. அந்தப் பொறிதான் அவன் சக்தி என்று உணர்ந்து அவன் அமைதியும் அடைகிறான். தன்னுள்ளே தோன்றிய உள்ளொளியைக் கண்டு கொண்ட பாரதி அந்த ஆநந்தத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் எனக் குதித்துக்கொண்டு தன் உணர்வுகளை மேற்கண்ட பாடல் ஆக்குகிறான். இது என்னுடைய மூளையில் பல வருடங்களாய்த் தோன்றிய பொருள். தவறாயும் இருக்கலாம். அவரவர் கருத்தையும் சொல்லலாம்.

Thursday, December 09, 2010

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!


கேசரியைக் காணோம். கண்டு பிடிப்பவர்களுக்குக் கேசரியை நான் சாப்பிடும் காட்சியைக்கண்டு ரசிக்கும் பேறு கிடைக்கும். கேசரியைக் கடத்தி இருப்பவர் அம்மாஞ்சி என்ற அம்பி என்ற டாம் என்ற டாம்பி என்று ரகசியத் தகவல் கசிந்துள்ளது. பாத்திரத்தோடு எடுத்துட்டுப் போயிட்டாராமே! :P:P:P

Wednesday, December 08, 2010

அந்த நாளும் வந்திடாதோ 2

"ஒளி பொருந்திய கலை மற்றும் தத்துவத்தின் பிறப்பிடமான தொன்மையான இந்தியாவுக்கு நான் எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். இந்தியாவைக் கண்டு நான் வியப்படைகிறேன். இழிந்த, சீர்கேடுற்ற, நலிவடைந்த, நாடுகளை அடிமைப்படுத்திய, கடவுள்களை இழிவு செய்த,ஆன்மாக்களை நம்பாத மேற்கத்தியர்களாகிய நாங்கள் உன்னை வணங்குகிறோம். உன்னுடைய வியத்தகு கொள்கைகள் மற்றும் கருத்துகளுக்காக இன்னும் தலை குனிந்து வணங்குகிறோம்.

சொன்னது பியரே லோடி (1850-1923) என்னும் புகழ் பெற்ற ப்ரெஞ்ச் நாவலாசிரியர்.
*************************************************************************************



எப்படி இவ்வளவு சோம்பேறி ஆனார்கள் நம் மக்கள்?? அடுத்தடுத்து வரும் அரசுகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்களாலேயே என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத ஒன்று. மரங்களும், காடுகளும் தொடர்ந்து அழிக்கப் பட்டு வரும் நிலையில் நம் தமிழகத்தில் மழையின் அளவு குறைந்தே வருகிறது. இதற்கு முன்னால் மழை, வெள்ளம் வந்ததில்லையா? ஊருக்குள்ளேயோ, வீடுகளுக்குள்ளேயோ நீர் புகுந்ததில்லையா? அப்போதெல்லாம் மக்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே பார்த்துக்கொண்டனர். இப்போவோ, எல்லாத்துக்கும் அரசாங்கம் வரணும். சரி, அப்படியானும் அரசாங்கம் வந்து இதை எல்லாம் நல்ல முறையில் நிறைவேற்றுகிறதா? நிறைவேற்றப் பட்டு இருக்கிறதா? அரசும் என்ன ஆட்களே இல்லாமல் இறக்குமதியா பண்ணும்?? அந்த அந்தக் கிராமத்திலேயே ஆட்களைத் தேர்ந்தெடுக்கணும். அவங்களை விட்டே செய்யச் சொல்லணும். ஒரு சில கிராமங்களில் இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு செயல்படுத்தப் படுகிறதுனு சொல்றாங்க. போய்ப் பார்த்தால் செயல் படுத்தப் பட்டது ஆட்களின் பெயர்களைச் சேர்த்தலும், அவங்களுக்குக் கொடுத்த சம்பளமும், அரிசியும் தான். எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு வேலைக்கு வருவதில்லை. சிலர் இங்கே ஊரில் பெயரைக் கொடுத்துவிட்டுச் சம்பளமும், அரிசியும் வாங்கிக்கொண்டு வெளியே வேலைக்குச் செல்கின்றனர் அல்லது வேலைக்கே செல்லாமல் பேசிக்கொண்டு பொழுதைக் கழிக்கின்றனர். அந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவருக்கோ இதை எல்லாம் தட்டிக் கேட்க முடியாது. ஏனென்றால் அடுத்த தேர்தலில் அப்புறம் அவரைத் தேர்ந்தெடுக்க மாட்டாங்க. முன் காலத்தில் நம் தேர்தல் முறை இப்படியா இருந்தது?? எப்படி இருந்தது என ஒரு பார்வை பார்ப்போமா?

தேர்தல் முறை குடவோலையின் மூலம் நடந்திருக்கிறது. தலைவர் பதவிக்கு வர விரும்பும் நபர்களின் பெயர்கள் ஓலையில் எழுதப்பட்டு குடத்தில் இடப்பட்டு ஒரு குழந்தையை விட்டு எடுக்கச் சொல்வார்கள். தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்களுக்கும் கடுமையான நிபந்தனைகள் உண்டு. இந்தக் குடவோலை முறையில் தான் அந்தக் காலங்களில் பாடங்களின் தேர்வும் கூட நடந்திருக்கிறது. குடத்தில் ஓலைகளை இட்டு மாணவன் அதை எடுத்துப் பாடங்களின் சங்கேத எண்களைப் பார்த்து அதன் மூலம் ஆசிரியரிடம் பாடத்தைச் சொல்லுவதே தேர்வு முறையும் கூட. மேலும் வெறும் மனப்பாட முறையாக இல்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறான் மாணவன். வித்யாசாலைகள், கடிகைகள் என்ற பெயரில் இயங்கி வந்திருக்கின்றன. ரொம்ப முன் காலத்துக்குப் போகவே வேண்டாம். ஆங்கிலேயர் வந்த பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் உள்ள நிலைமையை திரு தரம்பால் அவர்கள் தன்னுடைய The Beautiful Tree என்னும் புத்தக முன்னுரையிலும், உள்ளடக்கத்திலும் கூறி இருப்பதைப் பாருங்கள்.

The Beautiful Tree
குடவோலை முறையில் தேர்தல் நடத்தி நிர்வாகத்திற்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமின்றிப் படிப்புக்கான தேர்வும் குடவோலை முறையிலேயே இருந்துள்ளது. குறிப்பாக ரிக்வேதத்தில் மட்டுமே பதினைந்தாயிரம் ஸ்லோகங்களுக்கும் மேல் உள்ளதால் குறிப்பிட்ட ஸ்லோகத்தைச் சொல்லு என மாணாக்கனைச் சொல்லுவது கடினம். ஆகவே ஒவ்வொரு வேதமும் பல பகுதிகளாய்ப்பிரிக்கப் பட்டிருக்கும். முக்கியமாய் ரிக்வேதம் மண்டலம், அநுவாஹம், சூக்தம் எனப்பிரிக்கப் பட்டிருக்கும். 2-4-5-3 என்று ஓலையில் எழுதிக் கடத்தில் போட்டுவிடுவார்கள். அதை எடுக்கும் மாணவன் இரண்டாவது மண்டலத்தில் நான்காம் அநுவாஹத்தில் ஐந்தாம் ஸூக்தத்தில் மூன்றாம் ஸ்லோகம் எனப் புரிந்து கொண்டு பாடத்தைச் சொல்லுவானாம். இம்முறையில் நடந்த வித்யாசாலைகளே கடிகைகள் என அழைக்கப்பட்டதாய் நம் பரமாசாரியாள் அவர்கள் கூறுகின்றார். மேலும் இத்தகைய கடிகைகள் பல இருந்திருக்கின்றன என்பதோடு இவற்றுக்காக நிவந்தம் விடும் மன்னர்களும், சேநாதிபதிகளும், மற்ற ஊர்ப் பெருந்தனக்காரர்களும், இங்கு கல்வி தவிர வேறு எதுவும் கற்பித்தல் கூடாது என்ற முக்கிய நிபந்தனை விதித்துவிட்டே கொடுத்திருக்கிறார்கள்.

இத்தகைய கல்வி நிலையங்கள் பெரும்பாலும் கோயில்களிலும், அல்லது கோயிலைச் சார்ந்துள்ள இடங்களிலுமே இருந்து வந்துள்ளது. ஆசிரியர்களிலும் பெரும்பாலோர் கோயிலைச் சுற்றியே வசித்திருக்கின்றனர். கோயில் கல்வி, கலாசாரம் பேணுவதில் முக்கியப் பங்கு வகித்து வந்திருக்கிறது. வெறும் சமயப் படிப்பு மட்டுமல்லாமல் ஆயுதப் பயிற்சி, நடனம், மருத்துவம், சங்கீதம், இலக்கியம், இலக்கணம், தர்க்க சாஸ்திரம், சிற்பங்கள் செதுக்குதல், ஓவியம் வரைதல் போன்ற கலைகளும் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் சொல்லிக் கொடுத்தவர்கள் பெரும்பாலும் பிராமணர்களே என்றாலும் பிராமணர்களிலும் வெறும் வேதக் கல்வி மட்டும் கற்பித்தவர்களை வைதீகர்கள் எனவும், ஆகமம் கற்பித்தவர்களை சிவயோகிகள், வைணவ யோகிகள் எனவும், மருத்துவம் கற்பித்தவர்கள், ஆயுதப் பயிற்சி அளித்தவர்கள் ஆகியோர் அமாத்தியப் பிராமணர்கள் எனவும் பிரிக்கப் பட்டிருக்கின்றனர். அத்தகைய பிரிவு இருந்ததும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. என்றாலும் இவை அனைத்தும் கற்பிப்பவர் எவரானாலும் அனைவருக்கும் வேதப் பயிற்சி முக்கியம் என்பதோடு குறைந்தது பனிரண்டு வருஷம் குருகுல வாசம் செய்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் இருந்திருக்கின்றன.

தூர தேசங்களில் இருந்தெல்லாம் இத்தகைய கடிகைகளில் மாணாக்கர்கள் பயின்று வந்திருக்கின்றனர். போக்குவரத்து சரியாக இல்லாத அந்தக் காலகட்டங்களிலேயே காஷ்மீரத்தில் இருந்தெல்லாம் காஞ்சிக்கு வந்து பயின்றிருக்கின்றனர். வெறும் கல்வி மட்டுமில்லாமல் ஆகமங்களும், ஆகம சாஸ்திரங்களும், இலக்கணங்களும் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. வைணவக் கோயில்களில் சைவ ஆகமமும், சைவக் கோயில்களில் வைணவ ஆகமம் ஆன பாஞ்சராத்திரம், வைகாநசம் போன்றவையும் கற்பிக்கப் பட்டிருக்கிறது. பேதங்கள் இல்லை. அதே போல் புத்த மடாலயங்கள், சமணப்பள்ளிகள் போன்றவையும் சிற்பம், சித்திரம், சங்கீதம், ஓவியம் போன்றவையோடு இலக்கியங்களும் கற்பித்து வந்திருக்கின்றன. இத்தகையதொரு அருமையான கல்வி முறை பதினேழாம் நூற்றாண்டு வரையில் நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது.

கோயில்கள் முக்கிய இடம் வகித்ததையும் கோயில்களின் பூசாரிகள், மற்றும் சிவாசாரியார்கள், ஆசாரியர்கள் போன்றவர்களுக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவமும், மாநிலம் போற்றும் மன்னனாய் இருந்தாலும் ஏழை ஆசாரியருக்குக் கொடுக்கும் மதிப்பையும், அவருடைய கல்வி அறிவையும், மன்னனுக்குச் செய்யும் சரியான ஆலோசனைகளையும் அவற்றால் மன்னனையே வழி நடத்துவதையும் கண்ட ஆங்கிலேயர் கொண்டு வந்த வேறுபாட்டுத் தத்துவமே ஆரிய, திராவிடக் கோட்பாடு. அதில் ஆரம்பித்தது வினை! முதலில் விவசாயத்தில் கை வைத்த ஆங்கிலேயர்கள் அடுத்து நம் கல்வி முறையில் கை வைத்தனர். வந்தது மெக்காலே கல்வி முறை. ஒழிந்தது இந்தியப் பாரம்பரியக் கல்வி முறை! அழிய ஆரம்பித்தது இந்தியக் கலாசாரம் மெல்ல மெல்ல மெல்ல! :((((((((

Tuesday, December 07, 2010

அந்த நாளும் வந்திடாதோ !! 1

மழைக்காலம் முடியப் போகிறது. மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. தென் மாவட்டங்கள் குறிப்பாய் விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் அதிக பாதிப்பு. வெள்ளம் வீடுகளில் புகுந்து ஏழை மக்கள் அவதி, சாதாரணமாய் இப்படித் தான் செய்திகள் வரும். ஆனால் இப்போல்லாம் வெள்ளம் ஏழை, பணக்காரர் என்ற பேதம் பார்க்கிறது இல்லை. எல்லார் வீடுகளுக்குள்ளேயும் நுழைந்து எல்லாரையும் ஒரு கை இல்லை எல்லாக் கையாலேயும் பார்த்துட்டுத் தான் போகிறது. போன வருஷம் வரைக்கும் எங்க வீட்டுக்குள்ளும் தண்ணீர். போன வருஷம் நிறைய வரலை என்றாலும் வாசல் வராந்தா வரை வந்துவிட்டது. இந்த வருஷம் நேற்றுக் கூட மயிரிழையில் உள்ளே வரட்டுமா வேண்டாமானு கேட்டுட்டு இருந்தது. மழை நின்னதோ பிழைச்சோம்.

இந்த நிலைமை எல்லா இடங்களிலும் காண்கிறோம். தொலைக்காட்சியில் ஆங்காங்கே விவசாயிகள் அழுகிய பயிர்களைக் காட்டி அழுகின்றனர். மழை என்ன திடீர்னு வந்ததா?? காலம் இல்லாத காலத்தில் வருகிறதா? இல்லாட்டி நம்ம தமிழ்நாட்டில் மழையே பெய்தது இல்லையா?? ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனப்போக்குவரத்து ஸ்தம்பித்ததுனு சொல்லும்போது நாமும் ஸ்தம்பிச்சுத் தான் போறோம். வீடுகளில் தண்ணீர் புகுந்தது, சுரங்கப் பாதைகளில் தண்ணீர் புகுந்ததுனு சொல்லும்போதும் எரிச்சலாய்த் தான் இருக்கு! வயல்களில் தேங்கிய நீரெல்லாம் பாசன வாய்க்கால்கள் வழியாக ஓடவேண்டாமா?? சரி, ஆறுகளில் இந்த மழைக்காலத்தில் எப்படி வெள்ளப் பெருக்கு வருது?? அவ்வளவு மழையா பெய்யுது? மழை பெய்யும் அளவைப் பார்த்தால் வருஷா வருஷம் குறைச்சலாத் தான் இருக்கு. ஆனாலும் ஆறுகளில் நீர் கரையை உடைத்துக்கொண்டு வருகிறது. ஏரிகளில் நீர் கரையை உடைக்கிறது, அல்லது கலங்கல்கள் உடைக்கப் படுகின்றன. சில ஊர்களில் ஏரிக்கரையையே வெட்டி விடுகிறார்கள். இப்படித் தான் 2008-ம் வருஷம் அம்பத்தூர் ஏரியை இரவுக்கிரவே உடைத்துவிட்டு எங்கள் பகுதியில் தண்ணீர் புகாத வீடே இல்லைனு ஆகிவிட்டது. இதற்கெல்லாம் யார் காரணம்?? என்ன காரணம்?? நாம் தானே காரணம்?? ஆங்காங்கே ஏரிகளை ஆக்கிரமித்து, ஏரிக்கரைகளைச் சரிவாக்கி, சமதளமாக்கி, விளைநிலங்களை வீடுகளாக்கி, ஏரிப்பாசன வாய்க்கால்கள், ஆற்றுப்பாசன வாய்க்கால்களைத் தூர்வாராமல், ஆகாயத் தாமரையும், பார்த்தினீயமும் முளைக்கவிட்டுக் கொண்டு நிம்மதியாய் வீட்டில் இலவச அரிசியை இலவச எரிவாயு அடுப்பில் சமைச்சுச் சாப்பிட்டுட்டு, இலவசத் தொலைக்காட்சியில் மானாடி, மயிலாடிக்கொண்டு, டீலா நோ டீலானு கேட்டுட்டு இருப்போம். இதெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டியதுனு சொல்லிட்டு, அரசாங்கம் எப்படிச் செய்யும்னு யோசிக்காமக் கையைக் கட்டிட்டு இருக்கலாம்.

பத்தாததுக்கு இந்த வருஷம், தமிழக அரசு , வெள்ள நிவாரண நிதியாக 5,000/- ரூபாய் கொடுக்கப் போறாங்களாம். அதோட பொங்கலுக்கு அரிசி, பருப்பு, வெல்லம், ஏலக்காய், மு.ப.(நெய் விட்டுட்டாங்க, அதையும் கொடுக்கக் கூடாதோ? :P), புடைவை,வேஷ்டி எல்லாம் இலவசம். நாம பாட்டுக்கு ஜாலியா 5,000 ரூபாயை வாங்கிக்கொண்டு, இலவசப் புடைவை, வேஷ்டியை வாங்கிக்கொண்டு இலவச அரிசியில் பொங்கல் கொண்டாடுவோம். ஏரி உடைச்சால் என்ன? ஆற்று வெள்ளம் ஊருக்குள்ளே புகுந்தால் என்ன?? பயிர், பச்சை அழுகினால் என்ன?? ஆடுமாடுகள் செத்தால் என்ன?? அதெல்லாம் அரசாங்கம் பார்த்துக்கும்.

ஏரியைத் தூர் வாரணுமா? அரசாங்கம் செய்யணும். ஆற்றில் வளர்ந்திருக்கும் ஆகாயத் தாமரைக்கொடிகளை அகற்றி ஆற்றை ஆழப்படுத்திக் கரைகளை உயர்த்தணுமா?? அரசாங்கம் செய்யணும். சாலைகள் மோசமான நிலையில் இருக்கா?? இருந்தால் என்ன போச்சு?? அரசாங்கம் எப்போவோ போட்டால் போடட்டும், இல்லாட்டியும் இந்தச் சாலைகளில் நடப்போமே! இலவச அரிசியை வாங்கிச் சமைத்துச் சாப்பிட்டுட்டு, இலவச டிவியில் மானாடுவோம், மயிலாடுவோம், டீலா, நோடீலா விளையாடுவோம், இன்னும் பணம் வரும், அதோட தொலைக்காட்சியில் நம்ம முகம் தெரியும், நாம் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை க்ளோசப்பில் வேறே காட்டுவாங்க. இந்த ஜன்மம் எடுத்ததுக்கு இந்த பலன் கூட இல்லைனா என்ன?? வேலைக்கு உணவு திட்டத்திலே அரிசி நிச்சயம், பணம் நிச்சயம், வேலை செய்யறோமா, செய்யலையானு யாரு கண்டுக்கப் போறாங்க?? ஏற்கெனவே கட்டுமான வேலைகளுக்கு பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்திலிருந்து ஆட்கள் வர ஆரம்பிச்சாச்சு. இன்னும் கொஞ்ச நாட்களிலே நம்ம விவசாய வேலைகளுக்கும் அவங்க வருவாங்க. நாம ஜாலியா இருப்போம்.

மனசே கொதிக்கிறது. நம் வாழ்க்கை முறையை, நம் விவசாயத்தை, நம் நம்பிக்கைகளைக் கெடுக்கவேண்டி உள்ளே வந்த ஆங்கிலேயர் முதலில் கெடுத்துக்குட்டிச்சுவராக்கியது, நம் குருகுலமுறைப் படிப்பையும், அடுத்து நம் விவசாய முறையையும். நம் நாட்டு விவசாய முறையில் கால்நடைகளின் முக்கியத்துவமும், அவற்றை நாம் தெய்வமாக வழிபடுவதையும் கவனித்த ராபர்ட் க்ளைவ் இந்தியாவின் முதுகெலும்பை உடைக்கவேண்டுமானால் கால்நடைகளை, முக்கியமாய் தெய்வமாய் வழிபடும் பசுக்களை வாழ்க்கையிலிருந்து நீக்கவேண்டும் என்று எண்ணினார். ஆகவே 1760-ம் வருஷம் முதல் பசுவதைக்கான இல்லத்தை ஏற்படுத்தி ஒருநாளைக்கு 30,000 பசுக்களைக் கொல்லவேண்டும் என்று திட்டமிட்டார். வங்காளத்தில் மனிதர்களின் எண்ணிக்கையைவிடப் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாய் இருப்பதாய்த் தோன்றியது க்ளைவுக்கு. ஆகவே இந்தியாவை நிலைகுலைய வைக்கவேண்டுமென்றால், அதன் அழகான அருமையான பொருளாதாரத்தைச் சீரழிக்கவேண்டுமானால் பசுக்களைக் கொல்லவேண்டும் என்று அதை ஆரம்பித்து வைத்தார்.

ஆகவே இயற்கை உரங்களையே போட்டு பயிர் செய்த நம் மக்கள் செயற்கை ரசாயன உரங்களை நம்பி மண்ணில் போட்டு மண்ணின் வளத்தை இழந்துவிட்டார்கள். இப்போது என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும் விவசாயத்தில் லாபமே காண முடிவதில்லை. மேல்நாடுகளில் எல்லாம் இப்போது இயற்கை உரங்களுக்கு மாறிவிட்டார்கள். ஆனால் நாம்?? உலகுக்கே உதாரணமாக இருந்த நாம்?? 1740-ம் வருஷம் ஆர்காட் மாவட்டத்தில் ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து 54 க்விண்டால் அரிசி வெறும் மாட்டுச் சாணத்தையும் இயற்கை உரத்தையுமே நம்பி விளைவிக்கப் பட்டது. ஆனால் பசுவதையை இந்தியாவில் ஆரம்பித்ததுமே மாட்டுச் சாணம் கிடைக்காமல், இயற்கை உரங்கள் கிடைக்காமல் யூரியாவையும், பாஸ்பேட்டையும் கேட்டுக்கொண்டு இங்கிலாந்தின் கதவைத் தட்ட ஆரம்பித்துவிட்டோம். ஆக, நம் விவசாயம் படுத்தது இப்படி என்றால் ஆறு, குளங்களோ?

தூர் வார ஆட்கள் இல்லாமல், கிராமத்தில் ஜனங்கள் இதெல்லாம் அரசாங்கம் தான் செய்யணும்கிற நினைப்புக்கு வந்து பல வருஷங்கள் ஆகின்றன. முன்பெல்லாம் அதாவது அறுபது வருடங்கள் முன்னால் கூட என் கணவர் சொல்லுகிறார்:
கிராமங்களில் பட்டாமணியம், கிராமக் கணக்குப் பிள்ளைனு பரம்பரையா வரவங்களுக்கு எந்த இடங்களில் எந்தக் குளம் எப்போ தூர் வாரணும், யாரோட வயலில் தண்ணீர்ப் பாசன வாய்க்கால் அடைச்சிருக்கு, எந்தக் குளம் ஆடு, மாடுகள், வண்டிகள் கழுவப் பயன்படுத்தணும்,எந்தக் குளம் குடிநீர்க்குளம், கிணறுகள், மற்றும் வயல்கள் யார், யாரோடது எல்லைகள் எது? சாலைகளை எப்போப் போடணும், எப்படிப் போடணும், ஆட்களுக்கு என்ன செய்யறதுனு அந்த அந்த ஊர் ஆட்களை வைத்தே ஒரு வீட்டுக்கு ஓரு ஆள்னு பொது வேலைக்கு வந்து எந்தவிதமான தொந்திரவுகளும் இல்லாமல், கவலையே இல்லாமல் எல்லாம் செய்துட்டு இருந்திருக்காங்க.

குளங்களுக்குக் காவலுக்கு ஆட்கள் போட்டிருப்பாங்களாம். பொது மேய்ச்சல் நிலங்களில் ஆள் உயரத்துக்குப் புற்கள் வளர்க்கப் படுமாம். குடிநீர்க்குளத்தில் மறந்து கூட யாரும் கை,கால் கழுவுவதோ, குளிப்பதோ இல்லாமல் பார்த்துப்பாங்களாம். அப்படி யாரானும் தவறிச் செய்துட்டால் உடனேயே காவலாளியின் கடுமையான கண்டிப்புக் கிடைக்குமாம். இதை எல்லாம் நினைச்சுக் கூடப்பார்க்க முடியலை இப்போ. யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எந்தக் குளத்தில் வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் செய்துக்கலாம்னு ஆயிட்டது. ஆனால் அதைக் கண்டிக்க முடியாது. கண்டிச்சால் போச்சு! கண்டிப்பவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். இதைப் பத்தி எழுதப் போனால் இன்னும் கடுமையா வார்த்தைகள் வருமோனு தோணுது. கொஞ்சம் கொஞ்சமாச் சொல்றேன்.

தொடரும்!

Sunday, December 05, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 26


கொஞ்ச நாட்களாய் எனக்குத் தான் எழுத முடியலைனா, வாசகர்களும் வரதில்லை. அவங்க அவங்களுக்குனு சில வேலைகள், பிரச்னைகள் இருக்குமே. அனைவரும் எல்லா நலனும் பெற்று அம்பிகையின் அருளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்திக்கொண்டு இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.

அநாஹதத்திற்கு அடுத்து ஸ்வாதிஷ்டானம். அக்னியின் இருப்பிடம் ஆகும் இது. வாயோர் அக்னி என்பார்கள். வாயுவில் இருந்து அக்னி உண்டாகிறது. இங்கு ஆறு தள கமலத்தில் அம்பிகை காமேசுவரியாகப்பிரகாசிக்கிறாள். “காகினீ” என்ற பெயரிலும் வழங்கப் படுவாள்.

“ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா
சூலாத்யாயுத-ஸம்பந்தா பீத வர்ணா திகர்விதா
மேதோ-நிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா
த்த்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ!!

அக்னி தத்துவமாய்க் காட்சி அளிப்பது திருவண்ணாமலையாகும். இங்குள்ளது தேஜோமயமான லிங்கம். மேலும் இங்கு தான் அம்பிகையும், ஈசனும் சமமாகவும் ஆனதாய்ச் சொல்லப் படுகிறது. அம்பிகை ஈசனின் உடலில் சரிபாதியை எடுத்துக்கொண்ட அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தை இங்கே ஒவ்வொரு கார்த்திகைப் பெளர்ணமி தீபத்தின் போதும் காணமுடியும். ஈசன் இங்கே ஸமவர்த்தகேஸ்வரராகவும், அம்பிகையை ஸமயா என்றும் வணங்குவார்கள் சாக்த உபாசகர்கள். நெற்றிக்கண்ணால் அகில உலகத்தையும் அழித்து சம்ஹரிக்கும் ருத்ரனை ஸமயா என்னும் அம்பிகை தன் குளிர்ந்த பார்வையால் குளிர்ச்சி அடைய வைத்து அதே சமயம் எரிந்த இவ்வுலகையும் மீண்டும் உயிர்ப்பிக்கிறாள். காமனை எழுப்பிய சஞ்சீவனியான அம்பிகை இங்கு நம் அனைவரையும் உயிர்ப்பிக்கும் சர்வ சஞ்சீவியாகவும் விளங்குகிறாள். மேலும் அம்பிகையை வழிபடுபவர்களுக்கு வேறு சமயங்களும் இல்லை. அவளை விடவும் உயர்ந்த தாய் வேறொருத்தியும் உண்டோ? இதையே அபிராமி பட்டர்,

“உமையும் உமையொருபாகனும் ஏக உருவில் வந்திங்
கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே!”

என்கிறார். ஏக உருவென்று அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தைக் கூறும் பட்டர், பக்குவமே இல்லாத நம் போன்ற பக்தர்களையும் அம்பிகையின் திருக்கடைக்கண் பார்வையானது ஆட்கொண்டு தனக்கு அன்பு செய்ய வைக்கும் என்கிறார். இதை விடவும் வேறு உயர்ந்த்தொரு சமயம் வேறு உண்டா என்று கேட்கும் பட்டர் பெருமான், அம்பிகை மேல் வைத்த பக்தியால் நமக்கு இனி மற்றொரு பிறவி எடுத்துத் துன்பப் படும் பிணி இல்லை. நம்மை ஈன்றெடுக்க மனித உருவில் இனி ஒரு தாய் இல்லை. அம்பிகையே நமக்குத் தாயாக ஆனாள். மேலும் பெண்ணாசையையும் ஒழிக்க வல்லது அர்த்த நாரீசுரத் தியானம் என்பதைச் சுட்டும் விதமாய்க் கடைசியில், “ அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே” என்கிறார். மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய பெண்கள் மேல் வைத்த ஆசையும் ஒழிந்து போகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

பொதுவாகச் சக்கர வரிசையில், விசுத்தி, அநாஹதம், மணிபூரகம் என்றே வரும். ஆனால் இவ்வுலகப் பஞ்சபூதத் தத்துவங்களின்படி, ஆகாயத்தின் பின் வாயுவும், வாயுவிற்குப் பின்னர் அக்னியும் தத்துவமானதால் ஸ்வாதிஷ்டானத்தைப் பார்த்தோம். அடுத்து மணிபூரகத்தைப் பார்ப்போமா? மணிபூரகம் நீரின் இருப்பிடமாய்க் கூறப்படும். நம் தமிழ்நாட்டில் திருவானைக்காவல் ஜலதத்துவமாய்ச் சொல்லப் படுகிறது. இங்கே அம்பிகை
பத்துத் தளக் கமலத்தில், ஈசனோடு அம்ருதேஸ்வரியாய்க் கூடிக் காட்சி அளிக்கிறாள். லாகினீ என்ற பெயரிலும் அழைப்பார்கள்.

மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா
வஜ்ராதிகாயுதோபேதா டாமர்யாதிபி-ராவ்ருதா
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ப்ரீத-மானஸா
ஸமஸ்த-பக்த ஸுகதா லாகின்யம்பா-ஸ்வரூபிணீ!!

பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் மாபெரும் தெப்பமாய் இங்கே அம்ருதேஸ்வரரும், அம்ருதேஸ்வரியும், எப்படி பக்தர்களின் கண்களில் காட்சி அளிக்கின்றார்கள் எனில் நீருண்ட மேகம் போன்ற ஈசனிடம் அந்த மேகத்தில் தோன்றும் மின்னல் கொடியைப் போல் காட்சி அளிக்கிறாள். ஆசையானது மனிதர் மனதில் சூரிய வெப்பத்தைப் போல் உண்டாகிறது. அதனாலேயே இவ்வுலகத்தின் மேல் இடைவிடாத பற்றும் ஏற்படுகிறது. நம் ஆசையாகிய சூரிய கிரணம் அநாஹதத்தில் இருந்து கீழிறங்கி, ஸ்வாதிஷ்டானத்தின் அக்னியோடு சேர்ந்து கொண்டு, மணிபூரகத்தில் புகுந்து குளிர்ந்த மேகத்தை உண்டாக்கி அம்பிகையின் கருணை மழை பொழிந்து நம் மனதை மட்டுமில்லாமல் இவ்வுலகையும் குளிர்விக்கிறது.
இந்த அப்புவிலிருந்து தோன்றுவது ப்ருத்வி த்த்துவம். இதன் இருப்பிடம் மூலாதாரச் சக்கரம். முக்கோணத்தின் நடுவே நாலு தளத் தாமரையில் வீற்றிருக்கும் அம்பிகையை ஸாகினீ என்ற பெயரிலும் அழைப்பார்கள்.

மூலாதாரம்புஜாரூடா பஞ்ச வக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா
அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா
முத்கெளதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா ஸ்வரூபிணீ”

இங்கு நடராஜரோடு கூடி சிறந்த தாண்டவம் செய்யும் அம்பிகையானவள், பிரளயகாலத்தில் அழிந்த உலகின் சிருஷ்டியை ஈசனைப் பார்ப்பதின் மூலமே உற்பத்தி செய்கிறாள்.

“மஹேஸ்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ-ஸாக்ஷிணீ
மஹாகாமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரி

ஸதாசிவன் தாண்டவநர்த்தனம் (வெறும் தாண்டவம் மட்டுமே) செய்யும்போது ப்ரக்ருதி ரூபமான அம்பாளோ லாஸ்ய நர்த்தனம் (இசையுடன் கூடிய நடனம்) செய்துகொண்டு ஒருவரை ஒருவர் பார்க்கவே இவ்வுலகம் தோன்றுகிறது. மூலாதார க்ஷேத்திரங்களாய்க் காஞ்சியும், திருவாரூரும் சொல்லப் படுகிறது. இனி தேவியைப் பூஜிக்கும் முக்கியமான காலங்கள்.

அன்பாய் நவராத்திரி பெளர்ணமி சுக்கிரவாரம்
அம்மன் சோபனந்தன்னைச் சொன்னபேர்க்குத்
துன்பங்கள் உண்டாகமாட்டாது ஒருக்காலும்
தென் திசையை யடையார் தினஞ்சொன்னவாள்
ரொம்பச் சொல்லுவானேன் தேவி தாஸாளுக்குத்
திரிலோகமும் அவர்கட்கு ஜயம்
நம்பினபேர்களைக் காத்திடத் தேவியல்லால்
நாட்டிலே வேறுண்டோ-சோபனம் சோபனம்

அத்திரி மஹரிஷி ஆசிரமத்தில் அநசூயை
கேட்ட இக்ஞான ரஹஸ்யத்தை
நல்துறையில் வாழும் லக்ஷ்மி கடாக்ஷத்தால்
நாராயணனுரைத்த தேவி மஹிமை
ராஜேச்வரியாள் மஹிமை யகஸ்தியரும்
ஆதரவாய்ச் சொல்லச் சொன்னதற்கு
நாடு செழிக்க அவதரித்து வந்த
மாதவர் அறிவித்தார்-சோபனம் சோபனம்

அறிந்தறியாமல் இந்தச் சோபனத்தில்
அர்த்த அக்ஷரப்பிழை இருந்தாலும்
மஹாப்பிரபு மனுஷப்பிரபு விஷ்ணு என்பது போலும்
மராமரா என்றதொர் நாமம் போலும்
வரதசிவனார் சிவசங்கர நாமம் போலும்
வார்த்தைப் பிழைகள் தன்னைப் பொறுத்து
எதுவிதத்திலும் (பர)தேவியைத் தியானித்தால்
ஏழைக்கிரங்குவள்-சோபனம் சோபனம்

மங்கள வாழ்த்து
ஜயமங்களம் லலிதா தேவிக்கும்
ஜயமங்களம் காமேச்வரருக்கும்
ஜயமங்களம் மந்திரிணி தண்ட நாதைக்கும்
ஜயமங்களம் ஸர்வ சக்திகட்கும்
ஜயமங்களம் ஹயக்ரீவருக்கும்
ஜயமங்களம் அகஸ்தியமா முனிக்கும்
ஜயமங்களம் ஸர்வ ஜனங்கட்கும் நமக்கும்
ஜயமங்களம் நித்ய சுப மங்களம்

லலிதாம்பாள் சோபனம் முற்றுப் பெற்றது.
ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து.


உதவிப் புத்தகங்கள்:

அபிராமி அந்தாதி- உரை திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள், 4-ம்பதிப்பு ஜூலை 1968

செளந்தர்ய லஹரி பாஷ்யத்துடன்: "அண்ணா" அவர்களால் எழுதப்பட்டது. ராமகிருஷ்ணா மடம் வெளியீடு

ஸ்ரீலலிதாம்பாள் சோபனம்: கிரி ட்ரேடர்ஸ் வெளியீடு. சகோதரி சுப்புலக்ஷ்மி அவர்களால் தொகுக்கப் பட்டது.பதினைந்துக்கும் மேல் பதிப்புகள் கண்டது.

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ஸ்லோகங்கள் மட்டும்

ஸ்ரீதேவி மஹாத்மியம் "அண்ணா" அவர்கள் உரையுடன் ராமகிருஷ்ணா மடம் வெளியீடு.

Monday, November 29, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 25

இப்போ தேவி ஆறுசக்கரங்களிலும் விளங்குவது எப்படி என்று ஒரு எளிமையான சின்ன விளக்கம். நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலிலேயே பஞ்சபூதங்களும் அடங்கி உள்ளன என்பதைக் குறிக்கவே மூலாதாரம், ஸ்வாதிஷ்டாநம் , மணி பூரகம், அநாஹதம், விசுத்தி, போன்ற சக்கரங்களும் பஞ்சபூத தத்துவங்களைக் குறிப்பிடுகின்றன. கடைசியான ஆக்ஞா சக்கரம் நம் புருவ மத்தியைக் குறிக்கும் இடம். ஜீவாத்மாவிடம் ஈசனின் ஆக்ஞாயானது அங்கே பிரகாசிக்கின்றது. அதனாலேயே ஆக்ஞாசக்கரம் என்பார்கள். லலிதாசமேத காமேசுவர மகாலிங்கமானது அங்கே நிர்குண, ஸகுண சக்தியால் அலங்கரிக்கப்படும். இங்கே நிர்குண, ஸகுண சக்தியாக அம்பிகையே குறிக்கப் படுகிறாள். இப்படி குறிக்கப்படும் அம்பிகை ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகங்களோடு பிரகாசிக்கும் வெண்ணிறத்தோடு ஹாகினி என்னும் பெயரோடு எழுந்தருளி இருக்கிறாள்.

ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!!”

“ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ-ரூப-தாரிணீ”

என்று ஸ்ரீலலிதையின் சஹஸ்ரநாமம் இவளைப் போற்றும்.

அடுத்து நம் நாட்டில் இப்படி ஆக்ஞா சக்கரஸ்தானமாய்க் கருதப்படும் இடம் காசி க்ஷேத்திரம் ஆகும். அம்பிகை இங்கே துர்க்கையாகவும் காசி விசாலாக்ஷியாகவும் இருவிதப் பிரதான சக்திகளாய்த் தோன்றுகிறாள். இந்த ஆக்ஞா சக்கரம் ஆத்மத்வம் என்றும் கூறுவார்கள். இங்கே ஸ்வயம்பிரகாசமான சக்தியைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்குமே தவிர அதற்காக சுயமான ஒளி இல்லை. சூரிய, சந்திரரும், மின்னல்களும், அக்னியுமே அந்தப் பிரகாசத்தில் தெரியாதெனில் மற்றவை எம்மட்டு?? இதைக் கடந்தே ஸஹஸ்ராரத்தில் பிரவேசிக்கவேண்டும். இப்படி ஆத்மாவை எதுவும் ஒட்டாது என்பதை இங்கே பார்த்தோம் அல்லவா??? (இனிமே ஆத்மா சாந்தி அடையட்டும்னு பிரார்த்திக்கும் முன்னே கொஞ்சம் யோசிங்க)

நாம தான் கீழே தானே போவோம்?? ஆகவே கீழேயே போய்ப் பார்ப்போமே! ஆத்மாவிலிருந்து கீழே வந்தால் மனசு தோன்றுகிறது. அதே போல் நம் புருவ மத்தியிலிருந்து கீழிறங்கினோமானால் நெஞ்சுக்குழி வருகிறது. இதுவே விசுத்தி சக்கரம். ஆகாயதத்துவம்.

“விசுத்தி –சக்ர- நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா
கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா

அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா டாகினீச்வரீ”

சிவந்த ரத்த நிறத்துடனும், மூன்று முகங்களுடனும் காட்சி அளிக்கும் அம்பிகை இங்கு பதினாறு தள கமலத்தில் டாகினீ என்னும் பெயரில் விளங்குகிறாள். இங்கு அம்பிகையும், ஈசனும், சூரியனையும், சந்திரனையும் போல் தண்மையும், வெம்மையும் கலந்து பூவோடு சேர்ந்த மணம் போலவும், கரும்பில் கலந்திருக்கும் இனிமை போலவும், தீபத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒளி போலவும் காட்சி அளிக்கின்றனர். சகல ஜீவர்களுக்கும் ஜீவாதாரமாய்ப் பிரகாசிப்பதே இவர்கள் இருவரின் ஆநந்தமயமான ஜோதிப் பிரகாசமே. நம் புண்ணிய பாரதத்தில் இப்படி ஆகாய க்ஷேத்திரமாய் விளங்கிப் பிரகாசிப்பது சிதம்பரம் க்ஷேத்திரமே. இங்கு ஆகாய தத்துவ உபாசனை. தஹராகாசம் செய்யப் படுகிறது. “தஹராகாச-ரூபிணீ” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும். இங்கு அம்பிகையும், ஈசனும் வ்யோமேஸ்வரனும், வ்யோமேஸ்வரியாகவுமோ அல்லது அர்த்தநாரீஸ்வரராகவோ வழிபடப் படுகின்றனர். பட்டர் இதை,

பரிபுறச் சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துரமேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்திருந்தவளே!” என்கிறார்.

அடுத்து ஆகாய தத்துவத்திலிருந்து இன்னும் கீழே வரணும். ஆகாயத்திலிருந்து தோன்றியது வாயு.
“அநாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா
தம்ஷ்ட்ரோஜ்வலாக்ஷமாலாதி-தரா ருதிர –ஸம்ஸ்திதா

காலராத்ர்யாதி-ச்க்த்யெளக-வ்ருதா ஸ்நிக்தெளதன-ப்ரியா
மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா-ஸ்வரூபிணீ”

இங்கு பனிரண்டு தளக் கமலத்தில் வீற்றிருக்கும் அம்பிகை ச்யாமளையாக ராகினீ என்னும் பெயருடன் வீற்றிருக்கிறாள். இவளே கல்விக்கு அதிபதி. இவள் நம் இதயத்தில் ஞானத் தாமரையை மலர வைக்கும் ஹம்ஸங்களாக ஈசனோடு உலவுகிறாள். நம் மனத் தடாகத்தில், இதுவே மானசரோவர் எனப்படும். இந்த மானசரோவரில் பக்தர்களின் ஞாநத்தையே அநுபவித்து அதைப் பற்றியே தங்களுக்குள் இனிமையாகப் பேசிக்கொள்ளும் ஹம்சங்களான ஈசனும், அம்பிகையும் ஹம்சேஸ்வரனாகவும், ஹம்சேஸ்வரியாகவும் இருக்கின்றனர். இவர்களின் அருளாலேயே நமக்கு சகல வித்தைகளும் கிடைக்கப் பெறுகிறோம். இந்த ஹம்ஸங்களின் சம்பாஷணையே அனைத்து வித்தைகளும். உள்முகத் தியானத்தாலேயே இது கைகூடும். இதற்காக ஜபிக்கப் படும் மந்திரமும் அஜபா மந்திரமாகவே சொல்லப் படும். தக்க குரு மூலம் தீக்ஷை பெற்று மந்திர ஜபம் உபாசிக்க வழிமுறைகளை ஏற்று முறையாக ஜபிப்பவர்களுக்கு பிரத்யக்ஷமாகத் தரிசனம் கிட்டும். ச்யாமளையின் அருளும் கிடைக்கும்.

“கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியல்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே!”

என்று இவளை வியந்து கூறுகிறார் பட்டர் பெருமான். கடம்பவனத்தில் பண்களால் களிக்கும் குரலோடு இசைந்த அழகான வீணையும் ஏந்திய வண்ணம் பச்சை நிறப் பேரழகியாகக் காட்சி அளிக்கிறாளாம் அம்பிகை. நம் நாட்டில் அநாஹதத்தில் உள்ள ஹம்ஸ்த்வந்த்வ உபாசனை முறைக்கு ஏற்பட்ட தலம் ஆவுடையார் கோவில் ஆகும். இனி ஸ்ரீலலிதையின் சோபனப் பாடல்களில் ஸ்ரீவித்தை ஜபத்தின் மஹிமை கூறுதல்.

மந்திரங்களுக்கெல்லாம் பெரிதான ஸ்ரீவித்தை
மஹாகுருவினிடத்தில் வேண்டிக்கொண்டு
மந்திரத்திற்குச் சொன்ன ஜபஹோமங்கள் செய்து
மஹிமை தேவாளுக்குப் போஜனமளித்த்துப்
பின்னர் தேவியை பரமாத்மாவாய்த் தியானித்து
பிறகு நிஷ்காம்ய ஜபம் செய்தபேர்க்கு
எண்ணின காரியம் கைகூடும் ஜகத்திலே
இவர்கள் எங்கும் பூஜ்யர்-சோபனம் சோபனம்

அசுத்தத்துடன் சோபனத்தைச் சொன்னபேர்க்கும்
அசங்கித்த பேர்க்கும் பிணிகளுண்டு
அசுத்தமில்லாமலும் அசங்கையில்லாமலும்
அம்மன் சோபனமென்றும் பக்தியுடன்
விச்வாஸமாய்ச் சொன்னபேர்க்கும் கேட்டவர்க்கும்
வியாதியில்லை சத்ரு பாதையில்லை
நிஜமாய் ஜ்வரம் வியாதி ரோகாதிகளில்லை
நித்ய ஸம்பத்துண்டு- சோபனம் சோபனம்

இந்தச் சோபனம் பாடும் வாழ்வரசிகள் எல்லாம்
தேவிகளென்று மனதிலெண்ணி
சந்தனத் தாம்பூலம் குங்குமம் பழம் புஷ்பம்
ஸந்தோஷமாய் எல்லார்க்குங் கொடுத்து
எந்தெந்தக் கிருஹங்களில் சொல்ல வைத்துக் கேட்பாரோ
அந்தந்தக் கிருஹங்களில் அரிஷ்டம் நீங்கும்
ஸுந்தரி கிருபையாலே ஸந்ததி விருத்திக்கும்
தீர்க்காயுஸுமுண்டு –சோபனம் சோபனம்

இனி அம்பிகையை வழிபடவேண்டிய முக்கியமான காலங்கள் நாளை பார்ப்போம். அதோடு மங்களம் பாடி முடியும். அதன் பின்னர் சகோதரி சுப்புலக்ஷ்மி பற்றிய குறிப்புகள்.