எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 12, 2010

அந்த நாளும் வந்திடாதோ 3

மணிமேகலாதெய்வம் உதயகுமரனுக்கு அறிவுரை சொல்கிறாள்:

"கோன் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்-ஆள்-வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும்"

[சுருக்கமான பொருள்: மன்னன் தன் நிலையில் மாறுபட்டால் கோள்கள் ("கிரகங்கள்") தங்கள் நிலையில் மாறுபடும். கோள்கள் தங்கள் நிலையில் மாறுபட்டால் நாட்டில் மழையில்லாமல் வறட்சி உண்டாகும். வறட்சி உண்டானால் உலகத்தில் உயிர்கள் வாழமுடியாது. உலக உயிர்கள் எல்லாம் மன்னனின் உயிர் என்ற தகுதி இல்லாமல் போகும்.]//

மின் தமிழ்க் குழுமத்தில் ராஜம் அம்மா மணிமேகலை விளக்கவுரையில் இட்ட பகுதி இது. இந்தக் கால கட்டத்துக்கும் பொருந்தி வருவதை எண்ணி வியப்பாய் இருந்தது. இது பற்றிய தற்கால வேத விற்பன்னரும், விஞ்ஞானியுமான ஒருவரின் கருத்தும் கீழே!


இந்த இயற்கைப் பேரழிவுக்கும், அதைத் தொடர்ந்த கூட்டுச் சாவுகளுக்கும் காரணத்தை ஆராய்ந்தால், நாமே தான் காரணம் என்று தெரிந்து கொள்வோம். முதலில் வாயு கெட்டுப் போகிறது. வாயு கெட்டால் அதைத் தொடர்ந்த நீர், நிலம், தேசம், பயிர், பச்சைகள் என அனைத்துமே கெட்டுப் போய் இயற்கை மாறுபட்ட விதத்தில் பருவங்களைக் காட்டுகிறது. பருவங்கள் மாறிவிடுகின்றன. வாயுவில் கலக்கும் விஷப் பொருட்களே அனைத்துக்கும் காரணம். இந்த விஷப் பொருட்களை நம்மை அறியாமல் நாம் வாயுவில் கலந்து கொண்டிருக்கிறோம். இதையே சுற்றுச் சூழல் மாசு என்று சொல்லிக் கொள்கின்றோம். இதன் அடிப்படையிலேயே அனைத்தும் கெட்டுப் போய்விடுகிறது. அப்புறம் காலத்தில் வரவேண்டிய பருவங்கள் பொய்த்துப் போய் மாறுபட்ட பருவங்கள் வரும்போது இயற்கைப் பேரழிவு, விபத்துகள் போன்றவை நேரிட்டுக் கூட்டுச் சாவுகள் ஏற்படுகின்றன. மேலும் அந்தக் கூட்டுச் சாவில் இடம் பெற்றிருக்கிறவர்களில் யாராவது ஒருத்தர் இரண்டு பேருக்காவது அல்பாயுசாகவும் இருக்கலாம் என ஜோதிடம் கூறுகிறது. அல்பாயுசு உள்ளவனோடு சேர்ந்தால், நீரில் விழுந்தவன் தன்னைக் காக்க வருபவர்களையும் தன்னையும் அறியாமல் எவ்விதம் மூழ்க அடித்துவிடுகிறானோ அவ்விதம் அல்பாயுசுக் காரனோடு சேர்ந்தவர்களும் இறக்கின்றனர்.//

அவர் எப்போவோ தொலைக்காட்சியில் சொன்னதைக் குறிச்சு வைச்சேன், இப்போத் தேடி எடுத்துப் போடுகிறேன்,. ஏற்கெனவே எல்லாரும் க்ளோபல் வார்மிங் பத்தி எச்சரிக்கை கொடுக்கறாங்க இல்லையா?? இது ஒரு வேதங்களை நன்கு கற்றுணர்ந்த பெரியவர் ஒருவர் கூறியது. ஆங்கிலப் படிப்பும் உண்டு அவருக்கு! பெயர் நினைவில் இல்லை. :(
*************************************************************************************

வீடே ஆடுகிறது. அதுவும் நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலி மிகவே ஆடுகிறது. பூகம்பம், பூமி அதிர்ச்சி போல் தரையில் ஆட்டம்! எல்லாம் பக்கத்து வீட்டை இடிப்பதால் ஏற்பட்ட விளைவுகள். பதினைந்து நாட்களாய் இடிக்கிறார்கள், இடிக்க முடியாமல் இடிக்க்கிறார்கள். இயந்திரம் வந்து நாலைந்து நாட்களாய் உடைக்கிறது. என்னோட கர்த்தபக்குரலே நம்ம ரங்க்ஸுக்குக் கேட்கவில்லை. அவரோ கேட்கவே வேண்டாம், சும்மாவே மனசுக்குள்ளே நினைச்சுப்பார், பழக்க தோஷத்தில் நான் புரிஞ்சுப்பேன். இப்போ என்ன நினைக்கிறார்னே தெரியலை! :( இந்த அழகில் எல்லாரும் இப்போத் தான் தொலைபேசி அழைப்பு! மஹாபலி போல பாதாளத்தில் போய்த் தான் பேசணும்! :(

அடுத்த குறை நேத்திக்கு அணில் பிள்ளை செத்துப் போச்சு. எப்படினு புரியலை. பார்த்தால் தூங்கறாப்போல் இருந்தது. ஏதோ விளையாடுதுங்கனு நினைச்சேன். அப்புறம் தான் ரங்க்ஸ் சொன்னார். மாமியார் வந்திருந்தப்போ இறக்கிய கட்டிலை ஆளை விட்டு எடுத்துப் போய் மாடியில் கொண்டு வைக்கப் போனார். ஏற்கெனவே அங்கே பூனை குட்டிகள் போட்டு இருந்தது. சரி ரொம்ப நாட்கள் கழிச்சு வந்திருக்குனு நானும் பத்தியம் மட்டும் கொடுத்துட்டு கிட்டேவே போகலை. அவரும் போகலை. கட்டிலை வைக்கும்போது அங்கே குட்டிகளோட தூங்கிண்டு இருந்திருக்கு. அதை எழுப்பி, நகர்ந்துக்கோ, அப்புறமா வா னு சொல்லிட்டுத் தான் கட்டிலை வைச்சிருக்கார். அதுக்கு அப்படியும் கோபம். ஒண்ணொண்ணா குட்டிகளைத் தூக்கிண்டு இடம் மாற்றக் கிளம்பிடுச்சுனு சொன்னார். அட, குட்டிகளைப் பார்க்கக் கூட இல்லையேனு வருத்தமா இருந்தது. அப்போ இந்த அணில் குறுக்கும், நெடுக்குமா போயிண்டிருந்திருக்கு. கோபத்தில் அதன் மேல் பாய்ந்துவிட்டதாம்! மனசே சரியில்லை. ஏற்கெனவே பக்கத்து வீட்டு மரங்களில் இருந்ததெல்லாம் இடம் இல்லாமல் இங்கே ஒரே நெருக்கடி போல! ஒரே சத்தம்! இதுங்க ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டுக்காமல் இருக்கக் கூடாதோ??
*******************************************************************************

கொஞ்சம் ஆறுதலான விஷயமாய் இன்று காலை. நெசப்பாக்கத்தில் நாத்தனார் பெண் வீட்டுக்குப் போகவேண்டி இருந்தது. வாடிக்கை ஆட்டோக்காரர் தான் வந்தார். காலை ஆறரைக்கே போக்குவரத்து நெரிசலில் திணறியது அம்பத்தூரில் இருந்து கோயம்பேடு வரைக்கும். ஒரு மாதிரி சமாளிச்சுப் போயிட்டோம். ஆறுதல் என்னவென்றால் ஆட்டோக்காரர் ஒரு காலத்தில் மளிகைக்கடை வைத்து வசதியாய் வாழ்ந்தவர். அவர் அண்ணனோட லாட்டரி சீட்டு மோகத்தினால் குடும்பத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டுவிட்டார்கள். அப்புறமாய் தனித்தனியாய்ப் போய் ஒரே வீட்டில் தனித்தனியாய் வாழ்கின்றனர். அண்ணன் பெண் இப்போ பொறியியல் படிக்கிறாளாம். அப்பாடானு இருந்தது. அதோட இல்லாமல் இவர் தன் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயாவில் படிக்க வைச்சிருக்கேன். பெரிய பையர் பத்தாம் வகுப்பு முடிச்சுட்டு +1 க்கு டி ஐ ஸ்கூலில் சேர்த்திருக்கேன், மாநில பாடத்திட்டம் இருந்தால் தான் மேற்படிப்புக்கு வசதினு என்று சொன்னார். மனம் சந்தோஷத்தில் மிதந்தது.

கேந்திரிய வித்யாலயாவின் வசதிகளைப் பற்றி நன்கு உணர்ந்திருந்தார் என்பது அவர் பேச்சிலேயே தெரிந்தது. மூன்று மாசத்துக்கு மாணவர்களுக்கு வெறும் ஐம்பதே ரூபாய் தான் ட்யூஷன் ஃபீஸ். இன்னமும் அவ்வளவு தான் வாங்கறாங்கனு சொன்னார். ஏனென்றால் இரண்டாவது பையர் எட்டாம் வகுப்பு அங்கே தான் படிக்கிறாராம். முதல் வகுப்பில் இருந்தே சேர்த்துவிட்டதால் பாடத்திட்டத்தைப் பின்பற்றப் பையர்களுக்குப் பிரச்னை இல்லை என்றும் கூறினார். இதே பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகள் அப்பா, அம்மா பட்டதாரிகள், வேலை பார்க்கிறவர்கள், கார் வச்சிருக்கணும்னு எல்லாம் நிபந்தனைகள் போடுவதால் எங்களால் அப்படி ஒரு பள்ளியையும் பாடத்திட்டம் அளிக்கும் வசதிகளையும் நினைச்சுப் பார்க்க முடியாத நிலையில் இது எங்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்றார்.

ஆட்டோக்காரர் படிச்சது எட்டாம் வகுப்புத் தான் தமிழ் மீடியத்தில். திருச்செந்தூர் பக்கம் கிராமம் சொந்த ஊர். இன்னொரு சந்தோஷமான விஷயம் கால்நடைகளைப் பராமரிப்பது பற்றி அந்த நாளும் வந்திடாதோ 1-ல் சொல்லி இருந்தேன். இவர் யாரோ சொன்னாங்க என்று எழுபதாயிரம் ரூபாய் சேர்த்து பசுமாடும், கன்றும் வாங்கிப் பராமரிக்கச் சொல்லிக் கொடுக்கப் போவதாயும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இதற்கென ஒரு யாகம் செய்து கொடுக்கப் போவதாயும் எல்லாருமே (எண்பது நபர்கள்னு சொன்னார்) இதற்கென ஒரு குறிப்பிட்ட தொகை அளிக்க ஒத்துக்கொண்டிருப்பதாயும் கூறினார்.

எங்கேயோ விட்டெறிந்த கல் எங்கேயோ போய் விழுந்து கனி கிடைப்பதில் அல்ப சந்தோஷம். காலம்பர நெசப்பாக்கத்திலிருந்து வந்ததும்,பார்த்தால் பூனை மாடியில் இருந்து எல்லாக் குட்டிகளோடு யதாஸ்தானமான கீழ்ப்பக்கம் இருக்கும் குளியலறைக்கு வந்திருக்கு. அந்தப் பக்கம் துணி உலர்த்த விடாமல் ஒரே கத்தல். அதோட குட்டிகளை நான் தூக்கிண்டு போயிடுவேன்னு பயம். ஒரு குட்டி நல்ல கறுப்பு. பள பளனு. படம் எடுக்கலாம்னா குட்டிகளை மறைச்சு வைச்சிருக்கு. பார்க்கணும். எடுக்க முடியுதானு!

7 comments:

 1. //முதல் வகுப்பில் இருந்தே சேர்த்துவிட்டதால் பாடத்திட்டத்தைப் பின்பற்றப் பையர்களுக்குப் பிரச்னை இல்லை என்றும் கூறினார். இதே பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகள்..//

  ஒரு காலத்தில் கேந்திர வித்தியாலய பாடங்கள் (Subjects) அனைத்தும் ஹிந்தியிலேயே இருந்தன. ஆங்கிலம், தமிழ் (Languages) மட்டும் அந்தந்த மொழிகளில். தனியாக ஹிந்தி படிக்க வேண்டிய அவசியம் இல்லாது இருந்தது. நான் புதுவையில் இருந்த காலத்து அறிந்த ஜிப்மர் மருத்துவமனை சார்ந்த கேந்திர வித்தியாலத்து பாடத்திட்டம் இது.
  இப்பொழுதும் அப்படித்தானா என்று தெரியவில்லை. இதே பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதால் இந்த சந்தேகம்.

  ReplyDelete
 2. கேந்திரிய வித்யாலயா பாடத்திட்டம் வைத்திருக்கும் தனியார் பள்ளிகளில் தமிழ் தான் முதல் பயிற்று மொழி. ஹிந்தி ஆப்ஷனல். கேந்திரிய வித்யாலயாவில் எட்டு வகுப்பு வரையிலும், சோஷியல் ஸ்டடீஸ் ஹிந்தி, எட்டாம் வகுப்புக்குப் பின்னர் ஹிந்தியோ, ஆங்கிலமோ தேர்ந்தெடுக்கலாம். அதுவும் தென் பிராந்தியங்களில் சில இடங்களில் ஆறாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலத்தில் உண்டு. எங்க பையரும், பெண்ணும் +2 வரையும் கேந்திரிய வித்யாலயா தான்.

  ReplyDelete
 3. மன்னிக்கணும், தமிழ் பயிற்று மொழினு தப்பாச் சொல்லிட்டேன். தமிழ் தான் முதன்மை மொழியாகக் கற்கவேண்டும், ஆங்கிலம்,ஹிந்தி இரண்டாம் மூன்றாம் இடங்கள். என்றாலும் பாடங்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும். ஹிந்தி எல்லாப் பள்ளிகளிலும் கற்றுக்கொடுப்பதும் இல்லை. விவேகாநந்தா வித்யாலயா, பத்மா சேஷாத்ரி போன்ற சில பள்ளிகளில் மட்டுமே மூன்று மொழிகளும் இருக்கின்றன.

  ReplyDelete
 4. மன்னிக்கணும். நானும் தவறாக எழுதி விட்டேன். பாடங்களைப் (Subjects) , பொருத்த வரை ஆங்கிலம் தான் பயிற்று மொழி. ஹிந்தி அல்ல. சம்பா பப்ளிகேஷன்ஸ் என்கிற மிகச்சிறந்த புத்தக நிறுவனத்தின் ஆங்கில வழி பாடப்புத்தகங்கள் இப்பொழுது தான் நினைவுக்கு வந்தன.

  ReplyDelete
 5. என் பையன்களுக்கு இந்த வருடத்தில் இருந்து சமச்சீர்கல்வி திட்டம் ;ஆசிரிய ஆசிரியைகளுக்கே சிலபஸ் பற்றியும் சொல்லி கொடுப்பது பற்றியும் குழப்பம் .,கல்வி துறை சரியாக ட்ரைனிங் கொடுக்காமல் அறிமுக படுத்தி விட்டார்கள் என்று தான் தோன்றுகிறது
  பாடதிட்டத்திலும் தமிழை எளிமை படுத்த வில்லை
  கல்வி கட்டணமும் அரசு அறிவித்ததை விட பல மடங்கு ;அரசு அறிவித்த தொகைக்கு மட்டும் ரசீது .,மீதி தொகைக்கு துண்டு சீட்டு மட்டும் தான் .,இந்த லட்சணத்தில் அடுத்த வருடத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும்(ஸ்டேட்,சென்ட்ரல்,மெட்ரிக் ,cbsc ) அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் அறிமுக படுத்த இருக்கிறார்கள்.,இனி வரும் வருடங்களிலாவது நிலைமை சீராக அரசு ஆவன செய்யும் என்று நம்புவோம் நிற்க
  பூனை குட்டி என்றதும் பாரதியின் பாட்டு நினைவுக்கு வருகிறது கீதாம்மா

  ReplyDelete
 6. ப்ரியா, நீங்க சொல்வது மாநில அரசின் பாடத் திட்டம், நான் சொல்லி இருப்பது மத்திய அரசின் பாடத் திட்டம். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை மேற்கொண்டிருக்கும் மாநிலப் பள்ளிகளில் வேண்டுமானால் அறிமுகம் செய்யலாம். ஆனால் கேந்திரிய வித்யாலயாவில் அறிமுகம் செய்ய முடியாது. கேந்திரிய வித்யாலயா சங்கதனும், என்சி ஈ ஆர்டியும் சேர்ந்து தான் முடிவு செய்யும். நவோதயாபள்ளிகளில் அத்தகைய பாடத்திட்டமே அறிமுகம் செய்கிறார்கள். தமிழ்நாட்டிலும் நவோதயா பள்ளிகளை வர விட்டால் அனைத்துத் தரப்பினருக்கும் உண்மையான சமச்சீர் கல்வியைத் தர இயலும். மத்திய அரசின் வீச்சு மிகப் பெரியது. ஆகவே ஹிந்தி கற்பிக்கப் படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக அரசியல்வாதிகள் நவோதயா பள்ளிகளை அநுமதிக்கவில்லை. மேலும் கிராமாந்தரங்களில் நவோதயா பள்ளிகளை அநுமதிப்பதன் மூலம் ஏழை விவசாயியின் மகனும் அதன் பலனைப் பூரணமாய் அநுபவிக்கலாம். இப்போது இருக்கும் மாநிலப் பள்ளிகளைப் போல் ஒன்றிருந்தால் இன்னொன்று இருக்காது என்பதில்லாமல் பள்ளி அனைத்திலும் தன்னிறைவு பெற்றிருக்கும். எங்கே?? :((((((((( கனவு காணலாம்.

  ReplyDelete
 7. நிறைய விசயங்களை இப்போ தான் முதல் முதலாக தெரிந்து கொண்டேன்!

  எப்பேர் பட்ட நல்ல கல்வி திட்டம் உள்ள நவோதயா பள்ளிகளை

  அனுமதிக்காமல் இருப்பது பற்றி கவலையாக தான் இருக்கிறது

  ஒரு குழந்தை ஐந்து வயதில் ஆறு மொழிகளை எளிதாக கற்க முடியும் என்று அறிக்கை சொல்கிறது

  ஹிந்தி கூட பிரான்ஸ் ,இத்தாலி போன்ற மொழிகளை கூட கற்க வகை செய்யலாம் என்பது என் கருத்து

  ReplyDelete