எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 09, 2011

ரஜினிகந்தா மலர்கள்


நேத்திக்கு ரொம்ப நாட்கள்/மாதங்கள்(???) கழிச்சு ரஜினிகந்தா படம் பார்த்தேன். வழக்கம்போலத் தான். படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டிருந்தது, என்றாலும் ஏற்கெனவே பார்த்த படம் தான் என்பதால் புரியக் கஷ்டமாய் இல்லை. சுவாரசியமும் குறையவில்லை. பாசு சட்டர்ஜி எடுத்த படம். அமோல் பலேகரின் முதல் படம்?? ஆமாம்னு நினைக்கிறேன். வித்யா சின்ஹா மனச் சஞ்சலத்தை அருமையாக வெளிப்படுத்தி நடித்து இருந்தார். தடுமாற்றம் அவருக்கு வந்தால் நமக்குக் கோபம் வருகிறது என்பதில் இருந்தே அவரின் நடிப்பைப் புரிந்து கொள்ளலாம். இயல்பான செட்டிங்குகள். ஆரவாரமும், கூச்சலும் இல்லாத இனிமையான இசை! சலீல் செளத்ரி?? நிச்சயமாய் பர்மன்கள் இல்லை. இனிமையான சங்கீதம்! பின்னணி இசைக்கும்போது பல படங்களிலும் வசனங்கள் புரியாமல் குழப்பமாய் இருக்கும். இதிலே உச்சரிப்புச் சுத்தம்! ஹிந்தியில் வந்த கதையோ? வங்காளக் கதையா? நினைவில் இல்லை.

கடைசியில் முடிவைப் பார்த்ததும் தான் அப்பாடானு இருந்தது. சம்பவங்கள் கோர்க்கப் பட்டிருந்த விதமும் இயற்கையாக இயல்பாக, பக்கத்து வீட்டில் நடப்பனவற்றைக் காண்பது போல் இருந்தது. படத்தின் முக்கிய நடிகர் ஆரம்பம் முதல் முடிவு வரையிலும் ரஜினிகந்தா மலர்கள் தான். நம்ம ஊர் சம்மங்கிப் பூ??? பாதிரிப்பூ?? மரமல்லி?? மரமல்லியும், பாதிரிப்பூவும் ஒண்ணுனு யாரோ சொன்னாங்களே???

????????????

ஒரு வழியாய் இணையப் பிரச்னை சரியாயிடுச்சோ?? தெரியலை, ஆனால் கமெண்ட் கொடுத்தால் போகிறது, பார்க்கலாம், இன்னைக்கு நோ பதிவு! சில தளங்கள் திறக்கலை. முக்கியமான தளத்துக்குப் போகவே முடியலை! :( பிஎஸ் என் எல்லில் சரியாயிடுச்சுனு கூப்பிட்டுச் சொல்றாங்களே! தேவுடா!

Sunday, May 08, 2011

சப்தபதி என்றால் என்ன? ஒரு விளக்கம்!

இப்போ சப்தபதின்னா என்னனு ராம்ஜி யாஹூ கேட்டதுக்கு ஒரு சின்ன விளக்கம். திவாவைக் கொடுக்கச் சொன்னேன். அவர் கண்டுக்கவே இல்லை. :P போகட்டும், சப்தபதி என்பது அக்னியை மணமகனும், மணமகளும் சுற்றி வருவது. வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் இருவரும் முதல்முதலாகச் சேர்ந்து நடப்பது என்றும் கூறலாம். ஒரு வித்தியாசம் என்னன்னா இங்கே மந்திரங்கள் சொல்லி மனைவியிடம் கணவன் அக்னி சாக்ஷியாகக் கொடுக்கும் உறுதி மொழிகள் என்றும் கூறலாம். எல்லா இந்துத் திருமணங்களிலும் பரதேசிக்கோலம் எனப்படும் சமாவர்த்தனமும், மாலைமாற்றலும், பாணி கிரஹணமும், சப்தபதியும் கட்டாயம் இருக்கும். இப்போ சப்தபதி என்றால் என்னனு பார்ப்போம். இப்போதெல்லாம் தாலி கட்டி முடிஞ்சதுமே ஒரு சின்ன அறிவிப்புக் கொடுப்பார் புரோகிதர்.

திருமணத்துக்கு வந்திருக்கும் மணமகன், மணமகள் ஆகியோரின் நண்பர் வட்டத்துக்கு முக்கியமாச் சொல்லப்படும். தாலி கட்டி முடிஞ்சது தயவு செய்து பரிசுகள் அளிப்பதையோ, கைகளைக் குலுக்குவதையோ வாழ்த்துகள் சொல்லுவதையோ தவிர்க்கவும். சப்தபதி முடிந்ததும், நாங்களே ஒரு அரைமணி நேரம் கொடுத்து மணமகன், மணமகள் இருவரையும் தனியாக அமர வைக்கிறோம். அப்போது உங்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்று கூறுவார்கள். இந்த மாதிரி அறிவிப்பெல்லாம் சமீபமாய்ப் பத்து வருஷங்களுக்குள்ளாகவே அதிகம் காண முடிகிறது. பாணி கிரஹணம் என்பது மணமகள் கையை மணமகன் பிடிப்பது. இதற்கும் மந்திரம் உண்டு. இதைப் போன்றதொரு முக்கியமான நிகழ்ச்சியே சப்தபதியும். தம்பதியருக்குள் மன ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிக் கிழக்கு ,மேற்காக இருவரையும் ஏழடி நடக்க வைப்பார்கள். முதலில் பெண் அடியெடுத்து வைக்க அவள் கணவன் கைலாகு கொடுத்து உதவுவதோடு அவளுக்கு உறுதிமொழியும் கொடுக்கிறான். முதல் முதல் பெண்ணோடு நேருக்கு நேர் பேச வேண்டிய நேரமும் இதுதான் என்றே சொல்லலாம். தம்பதியருக்குள்ளாக கூச்சம், சங்கோஜம் போன்றவற்றைப் போக்கவும் உதவும் எனலாம். முதல் அடி எடுத்து வைக்கும்போது கணவன் கூறுவது:

மணமகள் மணமகன் வீட்டிற்கு வந்து புத்திரபாக்கியங்களைப் பெற்று குலவிருத்தி செய்து, அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கவேண்டும் எனவும், அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவை குறையாமல் இருக்க நாம் இருவரும் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வோம்.

இரண்டாவது அடி: மனைவியின் தேகவலிமைக்கு வேண்டிக்கொண்டும், அவள் ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கவும், அவை பூர்த்தியடையவேண்டியும், அதற்கான உடல், மன வலிமையை அவள் பெற மஹாவிஷ்ணு தரவேண்டும் எனவும், கேட்டுக்கொள்வான்.

மூன்றாம் அடி:இருவரும் சேர்ந்து வாழப் போகும் புத்தம்புதிய வாழ்க்கையில் இல்லறத்தை நல்லறமாகச் செய்ய வேண்டிய கடவுள் ஒத்துழைக்கவேண்டும் எனவும், எடுக்கும் முயற்சிகளிலும் இருவருக்கும் நம்பிக்கையும், தர்மத்தை மீறாமலும் இருக்கவேண்டியும் விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வான்.

நான்காம் அடி: கணவன் கேட்டுக்கொள்வது தானும், தன் மனைவியும் பூவுலக இன்பங்களை எல்லாம் குறைவின்றி அனுபவிக்க வேண்டும் என்றும் அது முழுமையாகக் கிடைக்க மஹாவிஷ்ணு அருள் செய்யவேண்டும் எனவும் பிரார்த்தனை செய்வான்.

ஐந்தாம் அடி: இல்லற சுகம் என்பது வெறும் உடல் சுகம் மட்டுமில்லாமல், மற்ற சுகங்களான வீடு, வாசல், மற்றச் செல்வங்களையும் நீ என் மனைவியாய் வந்து அடைய அந்த மஹா விஷ்ணு அருள் புரியவேண்டும்.

ஆறாம் அடி: பருவ காலங்களின் தாக்கங்கள் நம்மைப் பெரிய அளவில் தாக்காதவாறும் அதன் மூலம் நம் இல்வாழ்க்கையின் சுகமோ, சுவையோ குறையாமலும் நம் இருவர் மனங்களும் அதற்கேற்ற வல்லமையோடு இருக்க மஹாவிஷ்ணுவைப் பிரார்த்திக்கிறேன்.

ஏழாம் அடி: மேலே சொல்லப் பட்ட வெறும் சுகங்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதால், நாம் அந்த சுகங்களைப் பெற வேண்டி இயற்கை வஞ்சிக்காமல் பருவகாலங்களில் தக்க மழை, கோடையில் நல்ல வெயில், பனிக்காலங்களில் பனி என அந்த அந்தக் காலங்களில் எப்படித் தானாகப் பருவம் கண்ணுக்குத் தெரியாததொரு ஆற்றல் படைத்த சக்தியால் மாறுகிறதோ, அந்தக் கண்ணுக்குத் தெரியாத வல்லமை உடைய மஹாசக்திக்குச் செய்ய வேண்டிய கடமைகளான அறம் அத்தனையையும் நாம் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். அதற்கு அந்த மஹாவிஷ்ணு உதவட்டும். நான் செய்யப் போகும் வேள்விகள் அனைத்துக்கும் நீ உதவியாகவும் துணையாகவும் இருந்து என் மனதையும், உன் மனதையும் ஆன்மீகத்திலும் செலுத்த வேண்டியும் எல்லாக் கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றவும் வேண்டிய பலத்தை உனக்கு அந்த மஹாவிஷ்ணு கொடுக்கட்டும்.

இதன் பின்னர் இருவரும் எதிர் எதிரே அமர்ந்து, மணமகளுக்கு உறுதி மொழி கொடுப்பான். உன்னோடு சேர்ந்து நான் ஏழடி நடந்து, ஏழு வாசகங்கள் பேசி உன்னை என் நட்பாக்கிக்கொண்டு விட்டேன். இந்த நட்பு என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியது. நான் அந்த நட்பில் இருந்து வழுவ மாட்டேன். நீயும் வழுவக் கூடாது.

இதன் பின்னரே இருவரும் சட்டபூர்வமான கணவன், மனைவி ஆகின்றனர்.விவாஹம் குறிப்புகள் 2

சங்கர ஜெயந்தியும், அன்னையர் தினமும்!

ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ!

அம்மா என்பவள் இருந்தாலே போதும்,குழந்தை நிம்மதி அடைந்துவிடுகின்றது. வாயிலில் விளையாடப்போனாலும் சரி, படுத்துத் தூங்கும்போதும் சரி, பள்ளி சென்றாலும் சரி, அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்மதியையும் தருகின்றது. தரவேண்டும். ஏனெனில் இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் இன்றளவும் குழந்தையைப்பெறுவதற்குப் பெண் தான் தேவை. அம்மா என்பவள் ஆதார சுருதி! மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.

துறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை. துறவி ஆனாலும் அன்னைக்கு மகனே என்பதை நிரூபித்தார். அன்னையின் கடைசிக் கணத்தில் அவள் அருகே இருந்தார். அன்னையைப் பல துதிகளால் துதியும் செய்தார். அன்னையின் துயரங்களை விவரித்தார் அதிலே. தன்னை வயிற்றில் கர்ப்பம் தரித்ததில் இருந்து அன்னை பட்ட கஷ்டங்கள், தன்னை வயிற்றில் வளர்க்க வேண்டி எடுத்துக் கொண்ட ஆகாரங்கள், மருந்துவகைகள், பிறக்கும்போது ஏற்பட்ட வலி, வேதனைகள், பிறந்த குழந்தையை இரவும், பகலும் போற்றிப் பாதுகாத்து ஆகாரங்கள் கொடுத்து வளர்த்தது, நோய் வந்தால் காப்பாற்றியது என்று எத்தனையோ குறிப்பிடுகின்றார் தன் மாத்ரு பஞ்சகத்தில்:

"அம்மா, என்னைக் கருவில் ஏற்றபோது உனக்கு உடம்பு வேதனை ஏற்பட்டிருக்குமே?
அம்மா, என்னைக் கர்ப்பத்தில் தரித்ததும், மசக்கை ஏற்பட்டு வாந்தி எடுத்து அவதிப் பட்டீர்களே?
பின்னர் எனக்கு நன்மை பயக்கும் என விழுதியிலைக்கஷாயம் விளக்கெண்ணயோடு சேர்த்துச் சாப்பிட்டீர்களே?
அம்மா, என்னை வளர்க்க வேண்டி உங்களுக்குப் பிடிக்காத ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டீர்களே?
ஐந்து மாதங்கள் ஆனதும் உப்பு, காரங்களைக் குறைத்துக் கொண்டு ஆஹாரங்களையும் குறைத்துக் கொண்டீர்களே?
அம்மா, ஏழு மாதம் ஆகிக் குழந்தை அசைய ஆரம்பித்ததும், அதன் காரணமாய்ப் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, வயிற்றில் குழந்தை சுற்றி வரும்போது ஏற்படும் மயக்கம் தரும் வேதனையைப் பொறுத்துக்கொண்டீர்களே?
அம்மா, பிறந்தபோது ஏற்படும் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், என்னைக் காப்பாற்ற இரவு, பகலாய்க் கண்விழித்து எனக்கு உணவளித்து, ஜலமல துர்க்கந்தங்களைப்பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, எனக்குக் கணை, மாந்தம் போன்ற வியாதிகள் வந்து வாடும்போது தக்க மருந்துகளோடு இறைவனையும் பிரார்த்தித்து எனக்குப் பத்திய உணவிட்டுக் காத்தீர்களே?
அம்மா, நான் பிறந்தது முதல் துறவியாகும் வரை நீங்கள் எனக்குச் செய்ததுக்கு நான் திரும்பச் செய்வது இது ஒன்றே!"

ஊரிலே அனைவரும் விலகிவிட்ட போதிலும் அன்னைக்குத் தீ மூட்டி அந்திமக் காரியங்களைச் செய்தார் சங்கரர். அத்தகைய சக்தி படைத்த அன்னையைப் போற்றுவோம்.

"ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுதி ஸமயே துர்வர சூலவ்யதா
நைருச்யே தநுசோஷணம் மலமயீ சய்யா சஸாம் வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரன க்லேசஸ்ய யஸ்யாக்ஷம்
தாதும் நிஷ்க்ருதி முந்ந தோநி தநய: தஸ்யை ஜநந்யைநம:

குருகுலுமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்நே மாதரஸ்து ப்ரணாம"

சில இடங்களில் அர்த்தம் மாறி இருக்கலாம், பொதுவான அர்த்தங்களையே எழுதி இருக்கின்றேன். கடைசியில் கொஞ்சம் மாறும். குருகுலவாசத்தின் போதே ஆர்யாம்பாளூக்குச் சங்கரர் துறவியாகிவிடுவது போல் கனவு கண்டதாய்ச் சொல்கின்றார் இங்கே. மேலும் தாய்க்குத் தொடர்ந்து தன்னால் திதிகள் கொடுக்க முடியாதே எனவும் வருந்துகின்றார். தன்னைத் தாய் எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாள் என்பதையும் நினைவு கூர்ந்து வேதனைப் படுகின்றார். இத்தனையும் செய்யும் தாய்க்குத் தான் செய்யப் போவது இது ஒன்றே என்று தன் தாய்க்குத் தான் செய்யப் போகும் கடைசிச் சடங்குகளை நினைத்து வருந்துகின்றார். அனைத்தும் செய்யும் தாய் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றே. மாறாத பாசம் ஒன்றே. ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது.

Friday, May 06, 2011

போர்க்கொடிக்கு பதில் கல்யாணமாம், கல்யாணம்

இந்துத் திருமணங்களில் சப்தபதி தான் முக்கியம். அது முடிந்தாலே திருமணம் முடிவடைந்ததாக அர்த்தம். தாலி என்னும் மங்கல சூத்திரம் கட்டியதும் திருமணம் முடிந்துவிட்டதாய்க் கூறுவது முழுத் தவறு. இந்துத் திருமணச் சட்டம் சப்தபதி முடியாத திருமணத்தை அங்கீகாரம் செய்யாது. திருமணம் நடக்கவில்லை என்றே கருதப்படும். இப்போதெல்லாம் பதிவு முறை இருந்தாலும் சாஸ்திர ரீதியாகத் திருமணம் நடந்தால் பதிவு தேவையில்லை; தம்பதிகள் இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் பட்சத்தில், அதுவே போதுமானது. இப்போது தான் பதிவையும் கட்டாயமாக்கி இருக்கின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்வதால் பதிவு அவசியமான ஒன்றாகி விட்டது. ஆனால் முன்பெல்லாம் கிடையாது. ஆகவே ஒரு காலத்தில் (இப்போதும்) சப்தபதி முடியும் முன்னரே தாலி கட்டியும் கூட ஒரு சில திருமணங்கள் நின்றிருக்கின்றன. சில திருமணங்கள் மாலை மாற்றல், ஊஞ்சல் போன்றவற்றோடும் நின்றிருக்கின்றன. இதனால் அந்தப் பெண்ணிற்கும், பையருக்கும் ஏற்படும் மன உளைச்சல் அதிகமாய் இருக்கும். அதிலும் அருகருகே நின்று விட்டால் அதன் மூலம் ஏற்படும் ஈர்ப்பு இன்னமும் அதிகமாய் இருக்கும் அல்லவா? பொதுவாய்த் திருமணம் நடக்கும் முன்னர் பையரும், பெண்ணும் ஒருவரோடு ஒருவர் பேசக் கூடாது, பார்த்துக் கொள்ளக் கூடாது, கடிதம் எழுதிக் கொள்ளக் கூடாது என்று சொல்வதன் தாத்பரியமே இதுதான். ஒரு வேளை வேறு எந்தக் காரணத்தாலும் திருமணம் நிற்கலாம். விபத்துக்கள் நேரலாம். மனம் மாறலாம். மனித மனம் ஒரு குரங்கல்லவா? அல்லது பையரின் பெற்றோருக்கோ, பெண்ணின் பெற்றோருக்கோ இன்னும் சிறந்த மணமகனோ, மணமகளோ கிடைத்திருக்கலாம். அதனாலும் மனம் மாறலாம்.

அப்போது இம்மாதிரித் திருமணத்தில் பையரோடு சேர்ந்து நின்றது மனதைப் பாதிக்காமல் இருக்கவேண்டியே தடுக்கின்றனர். இது அந்தக் காலத்தில் சிறு வயது விவாகத்திலேயே தடுக்கப் பட்டது. இப்போதோ கேட்கவே வேண்டாம். குறைந்த பக்ஷமாக இருபத்தைந்து வயதாவது மணமகளுக்கு ஆகிவிடுகிறது அல்லவா? அப்போது திடீரெனத் திருமணம் நின்றால் மனதைக் கடுமையாகப் பாதிக்கும் அல்லவா? அதோடு அப்போதெல்லாம் இந்த ரிசப்ஷன் என்னும் சம்பிரதாயமே சுத்தமாய்க் கிடையாது. ரொம்ப அபூர்வமாகச் சில பணக்காரக் குடும்பங்களிலும், திரைப்பட நடிக, நடிகையர், தொழிலதிபர்கள் போன்றவர்கள் வீட்டுக் கல்யாணங்களிலேயே ரிசப்ஷனைப் பார்க்க முடியும். என்றாலும் என் கல்யாணத்தில் பெயருக்கு ரிசப்ஷன் இருந்தது. அப்பாவின் நண்பர்கள் கேட்டுக்கொண்டதாலும், மாமாவின் அலுவலக நண்பர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப் பட்டது. நலுங்கு முடிந்து ஐந்தரை மணியில் இருந்து ஆறரைக்குள்ளாக. அப்போது வரவங்க ரொம்பக் கொஞ்சம் பேர் தான் இருப்பாங்க. அதிகம் போனால் ஒரு ஐம்பது பேர். ரிசப்ஷனிலும் ஒரு ஸ்வீட், காரம், காபி, அல்லது ஜூஸ் ஏதேனும் தான் கொடுப்பாங்க. இப்போ மாதிரி விலாவரியாச் சாப்பாடெல்லாம் இருக்காது. அதோட அப்போ வைதீகச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் இருந்ததால் சரியாய் ஆறரைக்கெல்லாம் புரோகிதர் மணப்பெண்ணையும், பிள்ளையையும் சாஸ்திர ரீதியான சடங்குகளுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அவரை மீறி யாரும் எதுவும் சொல்லவோ, செய்யவோ மாட்டாங்க. அது ஒரு காலம். இன்றைய திருமணம் போல் காலையிலேயே அவசரம் அவசரமா முடிக்கிறதெல்லாம் இல்லை. இந்த ரிசப்ஷன், நிச்சயதார்த்தம் போன்றவற்றில் ஏன் முதல்நாளே பெண்ணும், பிள்ளையும் சேர்ந்து அமருவது தடை செய்யப் பட்டது முன் காலங்களில் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா?? மேலும் ஒரு சின்ன உதாரணம், சமீபத்தில் ஐந்து வருடங்கள் முன் நடந்தது,

அனைவருக்கும் நினைவிருக்கலாம். சென்னை மேற்கு மாம்பலம் பாணிக்ரஹா என்னும் திருமண மண்டபத்தில் ஸ்ரீவித்யா என்னும் பெண்ணின் திருமணம் அந்தப் பெண்ணாலேயே திடீரென நிறுத்தப் பட்டது என்பது மறந்திருக்காது. இத்தனைக்கும் அந்தப் பெண் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பையரோடு பேசிப் பழகி இருக்கிறார். இருவருமே வேலைக்குச் செல்லும் நபர்கள். பையரின் அம்மா, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை, அப்பா மத்திய அரசு ஊழியர்/??? ஆனால் ஏதோ பொறுப்பான பதவி என்ற வரையில் நினைவில் உள்ளது. பெண்ணின் அப்பாவும் நல்லதொரு வேலையில் இருந்தவரே. இந்தப் பெண்ணிற்கு அப்புறமும் அவருக்கு ஒன்றோ, இரண்டோ பெண்கள் இருந்தனர் என்று நினைவு. இப்போதைய வழக்கப்படி கல்யாணத்துக்கு முதல்நாள் மாலையே ரிசப்ஷன். மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. தன் நண்பர்கள் எல்லாருக்கும் அறிமுகம் எல்லாம் செய்து வைத்திருக்கிறார் அந்தப் பெண். அதே போல் பையரும் தன் நண்பர்களை அறிமுகம் செய்து வைக்கப் பரஸ்பர அறிமுகமும் நடந்திருக்கிறது. அதுக்கும் அப்புறம் தான் நடு இரவில் திடீரென எதிரே இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வரதக்ஷணை கேட்பதாய்ச் சொல்லிப் போலீஸை அழைத்து வந்து திருமணத்தை நிறுத்தி இருக்கிறார். கடைசியில் பார்த்தால் விஷயம் அவ்வளவு கடுமையாக எதுவுமே இல்லை. பையரோட வீட்டில் வரலக்ஷ்மி நோம்புக்கு அம்மனை அலங்கரித்துக் கூஜாவில் அம்மனைப் பிரதிஷ்டை செய்து வைக்கும் வழக்கம் இல்லையாம். சொம்பில் தான் வைப்பாங்களாம். பிள்ளை வீட்டார் பார்த்தப்போ இந்தப் பெண்ணிற்கு அவங்க வீட்டில் கூஜா வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆகவே, பெண்ணின் பெற்றோரிடம், பையரின் பெற்றோர் முடிஞ்சா மாத்திக் கொடுங்க இல்லைனா வெண்கலச் சொம்பில் வைச்சுக்கலாம்னு சொல்லி இருக்காங்க. இது தான் நடந்தது எனப் பெண்ணின் அப்பாவும், பையரின் வீட்டிலும் சொல்றாங்க. ஆனால் உண்மைக்காரணம் எதுவெனத் திருமணத்தை நிறுத்திய அந்தப் பெண்ணிற்குத் தான் தெரியும். தன் தோழிகளோடு எதிரே இருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துத் திருமணத்தை நிறுத்திட்டாங்க. பெண்ணின் பெற்றோரும் காரணம் புரியாமல் வருந்தி இருக்காங்க. பையரின் அலுவலகத்தில் சஸ்பென்ட் பண்ணி வைச்சு இருக்காங்க. அந்த அம்மாவும் பள்ளிக்குப் போக முடியாமல் லீவு போட்டுவிட்டு வீட்டில் இருக்கும்படியா ஆகிவிட்டது. எல்லாப் பத்திரிகைகளிலுமே காரணமே புரியவில்லை. ரிசப்ஷனில் பெண் சந்தோஷமாகத் தான் இருந்தாள் என்றே சொன்னார்கள். இப்படி ஏதேனும் நடக்கலாம், என்பதாலேயே முன்னாலெல்லாம் சேர்த்து நிறுத்தி வைப்பதையோ, அமர வைப்பதையோ கட்டாயமாய்த் தவிர்த்தனர். நெருப்பென்றால் வாய் ஒண்ணும் வெந்து போகப் போவதில்லை. கல்யாணம் முடியறவரையிலும், எதுவும் நிச்சயம் இல்லை. அதன் பின்னரும் சண்டைகள் வந்து பிரியறது தனி. அதைக் குறித்த பேச்சு இங்கே இல்லை.

Thursday, May 05, 2011

கல்யாணமாம், கல்யாணத்தில் கோல கலாட்டா!


கோலம் போடுதல் கல்யாணத்திற்கு என்பது தனிக்கலை. பெண்ணும், மாப்பிள்ளையும் கிழக்குப் பார்த்தே அமர வைக்கப் படுவார்கள். ஆகவே போடும் கோலமும் அதற்கேற்றாற்போல் இருக்க வேண்டும். மதுரைப் பக்கத்தில் இரட்டைக் கோலம் தான் போடுவார்கள். அதை மணைக்கோலம் என்றும் சொல்வார்கள். இரண்டு பெரிய சதுரங்களைப் போட்டு இரண்டையும் முக்கோணங்களால் இணைத்திருப்பார்கள். கணினியிலே முடிஞ்ச வரைக்கும் அந்த மாதிரியான மணைக்கோலம் போட்டுப் பார்த்தேன், சரியாக வரவில்லை. கூகிளாரைத் தான் கேட்டு வாங்கி இருக்கேன். இப்போ நாம ரெண்டு பக்கத்துக்கோலத்திலும் தூள் கிளப்பிட்டு இருக்கோமுல்ல? . தஞ்சைப் பக்கமோ இதோ இருக்கும் இந்தக் கோலம் மாதிரி ஒரே கோலம். ஒரே கோலத்தை எவ்வளவு பெரிதாகவோ, சின்னதாகவோ போட்டுக்கலாம். கல்யாணங்களில் பெரிய கோலமே போடுவார்கள். அநேகமாய் ஒரே கோலமே பலவிதமான அலங்கார வேலைப்பாடுகளுடனும், கிளி, அன்னம் போன்ற வரைவுகளுடனும் மேடையை நிறைத்திருக்கும். இங்கே அதெல்லாம் காண முடியாது. இரண்டு பெரிய கோலங்களை ஒன்றாய் இணைத்திருப்பார்கள். அருகருகே இரண்டு கோலங்கள் போடுவார்கள். அலங்காரங்கள் அதிகம் இருக்காது. ஆகவே விரதம் நடக்கும் இடத்திலும் அப்படித் தான் போடப் பட்டிருந்தது. கோலத்தைப் பார்த்ததுமே என் மாமியாருக்கு அப்செட். இதென்ன சின்னக் கோலமாய் இருக்கு? அதோட ரெண்டு கோலம் வேறே போட்டிருக்கீங்க? இதெல்லாம் வழக்கமே இல்லையே? னு கேட்க, கல்யாணத்துக்கு ரெண்டு கோலம் தான் அப்படினு எங்க வீட்டுப் பெரியவங்க சொல்ல, என் மாமனாரோ இதுக்குத் தான் தெரியாத இடத்தில் சம்பந்தம் வேண்டாம்னு சொன்னேன்னு சொல்ல, ஒரு சின்னக் களேபரம்.

அதற்குள்ளாக என் சித்தி, (அசோகமித்திரன் மனைவி) வந்து மதுரைப் பக்கம் ரெண்டு கோலம் தான் அதனால் என்ன?? சாயந்திரம் நிச்சயதார்த்தத்திலேயும், நாளைக் கல்யாணத்திலேயும் நீங்க சொல்றாப்போல் போட்டுடலாம்னு சமாதானம் செய்ய அப்போதைக்குப் பிரச்னை முடிந்தது. அதுக்கப்புறம் விரதம் முடிந்து நாங்கல்லாம் சாப்பிடும்போது ரெண்டு மணியோ என்னமோ, சரியாய் நினைவில் இல்லை. அப்பாவுக்குப் பசி ஜாஸ்தியாய் இருந்தது மட்டும் நினைப்பு இருக்கு. சாயந்திரம் நிச்சய தார்த்ததில் பெண்ணையும், பையரையும் சேர்த்து உட்கார வைக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொன்னார்கள். ஜானவாசத்துக்குக் காரா? இல்லைனா சாரட் வண்டியானு கேட்க, கார் தான் ஏற்பாடு பண்ணி இருப்பதாய் அப்பா சொல்லி இருக்கார். அதற்குள்ளாக எங்க ஆஸ்தான ஜோசியர் மாமா வர அவர் அறிமுகம் நடந்திருக்கிறது. அப்போத் தான் என் கணவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கார். தற்சமயம் புனாவில் இருப்பதால் அங்கே வீடு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது என்றும், பகடி நிறையக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் தான் புனேக்கு அருகிலுள்ள, தேசீய ராணுவ அகாடமிக்கு மாற்றல் கேட்டிருப்பதால், அங்கே மாற்றல் கிடைத்ததும், ராணுவக் குடியிருப்புக் கிடைக்கும் என்றும் சொல்லிட்டு, அதனால் தற்சமயம் என்னைப் புனேக்கு அழைத்துச் செல்லப் போவதில்லை என்றும் விட்டு விட்டுத் தான் போகப் போகிறேன் என்றும் சொல்லி இருக்கார்.

இது கொஞ்சம் என் அப்பா, அம்மாவுக்கு அப்செட் தான். மாற்றல் கிடைக்க எத்தனை மாசம் ஆகிறதோ? அது வரைக்கும் இங்கே மாமியார் வீட்டிலேயும், கொஞ்ச நாட்கள் எங்க வீட்டிலேயுமா இருக்கட்டும் என்றும் தீர்ப்பாகி இருக்கிறது. அதுக்குள்ளே எங்க மாமியார் கல்யாணம் ஆகி முதல் முதல் வரச்சே ரெண்டு பேரும் சேர்ந்து தான் வரணும், இப்போ லீவுக்குள்ளே எங்க பிள்ளைக்கு மறுவீடு வர முடியுமா தெரியலைனு சொல்லி இருக்காங்க. அப்போத் தான் நம்ம ஆஸ்தானம் போய்ச் சேர்ந்திருக்கார். அவர் பங்குக்கு அவரும் ஒரு குண்டைத் தூக்கிப் போட யாருமே நம்பவில்லையாம். என் கணவர் உட்பட கேலியாகச் சிரிச்சிருக்காங்க. அவர் சொன்னதும், மற்ற விபரங்களும் தொடரும். அதுக்குள்ளே போர்க்கொடி போர்க்கொடி தூக்கினாங்க இல்லை? ஏன் ரெண்டு பேரையும் சேர்த்து உட்கார வைக்கக் கூடாது என்று உரிமைப் போராட்டம் தொடங்கினாங்க இல்லை? அதைக் கவனிப்போமா?


நாந்தி ச்ராத்தம் பற்றி திவா விளக்கம் எழுதி உள்ளார். திரு நடராஜ தீக்‌ஷிதரும் எழுதி அனுப்பி இருந்திருக்கிறார். ஆனால் அது நீளம் அதிகம் என்பதால் பின்னூட்டத்தில் வரவில்லை. மீண்டும் அனுப்பச் சொல்லி உள்ளேன். திவாவின் பதிவுக்குச் சுட்டி கொடுக்கிறேன்.இங்கே

Sunday, May 01, 2011

கல்யாணமாம் கல்யாணம், தொடர்ச்சி!

மாப்பிள்ளை வீட்டில் எல்லாரும் காலையிலே வருவாங்க. குறைஞ்ச பக்ஷமாய் 200 பேர் வருவோம்னு சொல்லி இருக்காங்க. அதனால் வண்டி வேண்டும் என அப்பா, சம்பந்திகளுக்கும் அவங்க குடும்பத்துக்கும் இரண்டு காரும், மத்தவங்களுக்கு இரண்டு வானும் ஏற்பாடு பண்ணி இருந்தார். என்னோட சொந்த அண்ணாவும், பெரியப்பா வழி அண்ணாவும், பெரியம்மாவோடு போய் அழைத்துவரணும்னு ஏற்பாடு. ஆனால் அவங்க எல்லாம் டவுனிலே இருக்காங்க. அதுக்குள்ளே இங்கே இவங்க வந்தாச்சு. காலையிலே வரேன்னு சொன்னவங்க திடீர்னு இப்போ வரப் போறது யாருக்குத் தெரியும்?? மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்திக் கொட்டி உள்ளே அழைக்கணும். அதோட ஏற்பாடு பண்ணி இருக்கிற வீட்டிலே இருக்கிறவங்களை வேறே எழுப்பித் தொந்திரவு செய்யணும். வீட்டைக் காலையிலே தான் ஒழிச்சுக் கொடுக்கிறேன்னு சொல்லி இருந்தாங்க. என்னோட பாட்டி மாமிகளை எழுப்பி அவங்களை வரவேற்கச் சொல்லிட்டு, பக்கத்து வீட்டிலேயும் ஆளை அனுப்பி எழுப்பச் சொன்னாங்க. மாமிகள்போய் ஆரத்தி எடுத்து வரவேற்றுப் பக்கத்து வீட்டிலே கொண்டு விட்டுட்டு, சாப்பாடு பத்தி விசாரிச்சாங்க. எல்லாரும் சாப்பிட்டு வந்தோம்னு சொல்லவே, அவங்க படுக்க ஏற்பாடு பண்ணிக் கொடுத்துட்டு வந்தாங்க. இந்த அமர்க்களத்தோட சமையல்காரங்க குழுவும் வந்து சேரவே அவங்களுக்கு வேண்டிய சாமான் எடுத்துக்கொடுத்துட்டு மாமி, பாட்டி எல்லாம் அதிலே பிசி ஆனாங்க. மறுநாள் தயாராக வந்த வண்டிகளை அவங்க வீட்டுக்கு வந்ததுக்கு மட்டும் ஆன தொகையைக் கொடுத்துத் திருப்பி அனுப்பவேண்டி வந்தது.

எல்லாரும் என்னைக் கேலி செய்தாங்க. மாப்பிள்ளைக்கு அவசரம் பாரு, உன்னைப் பார்க்கறதுக்குனு ஒரு நாள் முன்னாடி வந்துட்டாரேனு. காலம்பர விடிஞ்சது. அப்பாவுக்குச் செய்தி சொல்ல மாமா ஒருத்தர் சைகிளில் கிளம்பிப்போனார். யார் வீட்டிலேயும் தொலைபேசி கிடையாது அப்போ. மாமா அந்தப் பக்கம் போயிருப்பார், இந்தப்பக்கம் அப்பா வந்துட்டார். அப்பா முகமே சரியாய் இல்லை. என்னமோ ஏதோனு நினைச்சா, மாப்பிள்ளை வீட்டிலே இருந்து யாருமே வரலைனு சோகத்தோட சொன்னார். அதுக்குள்ளே அம்மாவும், மற்ற உறவினர்களும் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிக்க, மாப்பிள்ளையும் அவங்க அம்மா, அப்பாவும் முதல் நாளே வந்துவிட்ட செய்தி அப்பாவுக்குச் சொல்லப் படவே அப்பாவும், அம்மாவும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவங்க வீட்டின் மிச்ச உறவினர்களும் வர எங்க பக்கத்து உறவினர்களும் சேர்ந்து கொள்ள வீட்டில் இடம் போதவில்லை. அதுக்குள்ளே என்னோட பெரிய நாத்தனார் என்னைப் பார்க்கணும்னுஅங்கே வர அவங்க என்னைப் பார்த்துட்டு ஏதோ ஸ்கூல் போற பொண்ணு போலனு நினைச்சிருப்பாங்க போல. அப்புறமா நான் தான் கல்யாணப்பொண்ணுனு எல்லாரும் சத்தியமே செய்து கொடுத்ததோடு, அவங்க தம்பியையும் கேட்டுக்கச் சொன்னாங்க.

அதுக்குள்ளே எல்லாருக்கும் காபி வரவே, அங்கே இருந்தவங்களுக்கு ஒருத்தரும் மாப்பிள்ளை வீட்டிற்கு இன்னும் இரண்டு பேரும் காபியை எடுத்துச் செல்லக் கூடவே என் பெரியம்மாவும், பெரியப்பாவும் போனாங்க. அப்போல்லாம் மாப்பிள்ளை வீட்டில் வரும் நபர்கள், கல்யாண மாப்பிள்ளை உட்படக் கல்யாணம் நடக்கும் இடத்துக்கே வந்து சாப்பிடறது, காபி, டிபன் சாப்பிடறது எல்லாம் கிடையாது. அநேகமான திருமணங்கள் வீடுகளிலேயே நடைபெறும். வீடுகளும் திருமண விருந்தினர்களைத் தாங்கும் அளவிலேயே கட்டப் பட்டிருக்கும். அப்படி இல்லை என்றாலும் மதுரையில் ஒரு வசதி என்னவென்றால் அந்தக் காலகட்டங்களில் தெருவும், சரி, ப்ளாட்பார்ம் என்னும் நடைமேடையும் சரி சுத்தமாகவே இருந்தது. தினமும் சுகாதாரப் பணியாளர்கள் வந்து தெருவைச் சுத்தம் செய்வார்கள். வீட்டின் முன்னர் இருந்த நடைமேடைகளும் அந்த அந்த வீட்டுக்காரர்களால் சுத்தமாய்ப் பெருக்கப் பட்டுக் கோலங்களோடு காட்சி அளிக்கும். ஆகவே நடைமேடையில் அக்கம்பக்கத்து வீடுகளையும் சேர்த்துப் பந்தல் போட்டு, மணல் நிரவி, கொட்டகை அலங்காரம் செய்து கல்யாண மேடை கட்டித் திருமணங்கள் நடக்கும். இதற்கென அப்போதைய முனிசிபாலிட்டியின் அநுமதி ஒன்றுதான் தேவை. அதுவும் எந்தவிதமான இடையூறுகளும் இன்றிக்கிடைத்தன. அது ஒரு காலம்! ((( என் கல்யாணமும் மாமா வீட்டு வாசலில் அக்கம்பக்கம் மூன்று வீடுகளையும் சேர்த்துப் பந்தல் போட்டுத் தான் நடந்தது. :D எங்கேயோ போயிட்டேனே. மாப்பிள்ளை வீட்டில் சாப்பிட வரமாட்டாங்கனு சொன்னேன் இல்லையா?? அதனால் அவங்க தங்கும் இடத்திற்கே எல்லாமும் போகும். ஒருவேளை சத்திரங்களில் திருமணம் நடந்தாலும் அவங்களுக்கென ஒதுக்கி இருக்கும் அறைகளில் சாப்பாட்டுக் கூடமும் ஒன்று கட்டாயம் இருக்கும். அங்கே எல்லாவற்றையும் எடுத்துப் போய்ப் பரிமாறுவார்கள். தனிப்பட்ட சிறப்பான கவனிப்பு இருக்கும். சாப்பாடும், பரிமாறும் ஆட்களும் மட்டும் போனால் போதாது. கூடவே பெண் வீட்டில் பெரியவங்க யாரானும் இரண்டு பேரோ, நான்கு பேரோ போகவேண்டும். ஆகவே என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் காபி, டிபனோடு போனாங்க. அப்படியே கல்யாணத்துக்கு முதல் நாள் நடக்கும் விரதம்/நாந்தி போன்றவற்றிற்கு அவங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கவேண்டும். இப்போ இந்த விரதம்/நாந்தி பற்றிய ஒரு சின்ன அறிமுகம் பார்த்துட்டு மேலே தொடரலாமா??



இந்த நாந்தி என்பது குடும்பத்தின் முன்னோர்களுக்கான ஒரு சடங்கு. இதைக் கல்யாணங்களில் செய்வது நல்லது. முன்னோரின் ஆசிகளும், வாழ்த்துகளும் கிடைக்கும் என்பதோடு அவங்க அநுமதியையும் பெற்றுக்கொள்வதற்காக எனச் சொல்வது உண்டு. ஆனால் இதையும் திருநெல்வேலிக் காரங்க செய்யறதில்லை. அவங்களுக்குக் கல்யாணத்தில் நாந்தி செய்வது அச்சானியம் என்று சொல்வதுண்டு. தஞ்சை, மதுரை மாவட்டங்களில் இது கட்டாயமாய் இடம் பெறும். குடும்ப வழக்கத்தைப் பொறுத்து புரோகிதர்கள் வருவாங்க. ஒன்பது பேர் கட்டாயம்னு சில குடும்பங்களில் உண்டு. அன்னிக்குக் கல்யாணத்துக்கு வந்திருக்கும் விருந்தினர் அனைவருமே டிபன், காபி சாப்பிட பெண் வீட்டில் பெண்ணின் அம்மா, அப்பா, கல்யாணப் பெண், பிள்ளை வீட்டில் பிள்ளையின் அப்பா, அம்மா, கல்யாணப் பிள்ளை மட்டும் எதுவுமே சாப்பிடாமல் இவற்றை முடித்த பின்னரே சாப்பிட வேண்டும். அதுவும் ஒரு சிலர் வீடுகளில் இதற்கெனத் தனிச் சமையலும் உண்டு.

எங்க அப்பா, அம்மா, இங்கே மாமா வீட்டின் வாசல் பந்தலில் என்னையும் வைத்துக்கொண்டு விரதம் ஆரம்பிக்க மாப்பிள்ளை வீட்டில் அவங்க தங்கி இருக்கும் இடத்திலேயே விரதம், நாந்தி போன்றவற்றைச் செய்து கொள்வதாய்ச் சொல்லிட்டாங்க. தாலி கட்டும் முன்னர் பிள்ளையும் பெண்ணும், மணவறையில் ஒரே இடத்தில் அமரக் கூடாது என்பது அவங்க சொன்ன காரணம். இங்கே பந்தலுக்கு வந்தால் மணமேடையிலேயே அவங்க ஒரு பக்கமும், நாங்க இன்னொரு பக்கமும் உட்காரணும். அதைத் தவிர்க்க வேண்டி அப்படிச் சொன்னாங்க. அதோடு அன்று மாலை நடக்க இருக்கும் நிச்சயதார்த்ததிற்கும் பெண்ணுக்குத் தனியாகவும், மாப்பிள்ளைக்குத் தனியாகவுமே நடத்தவேண்டும் என்பதையும் வற்புறுத்திச் சொன்னார்கள். தஞ்சைப் பக்கங்களில் பெண்ணையும், பிள்ளையையும் ஒன்றாய் உட்கார்த்தி வைத்து நிச்சய தார்த்தம் செய்ய மாட்டாங்களாம். எங்களுக்கு அது வழக்கமில்லை என்றார்கள். சரினு அவங்க அங்கேயே விரதம் பண்ண ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. முதல் பிரச்னை கோலத்தில் ஆரம்பம். :))))))))))