எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 20, 2014

இந்த விமரிசனம் தான் 3 ஆம் பரிசைப் பெற்றுள்ளது!

பொதுவாகவே மூத்த குழந்தைகளுக்குப் பொறுப்பு அதிகம்.  அதிலும் நாலைந்து குழந்தைகளாக இருந்தால் மூத்த குழந்தை சம்பாதிக்க ஆரம்பித்தால் தான் மற்றக் குழந்தைகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். இது எழுதப்படாத விதி.  கதாநாயகியான சுமதியும்.  நான்கு தங்கைகளோடு சேர்ந்து பிறந்த மூத்த பெண். சுமதி நர்ஸ் வேலை பார்த்தாலும் அதில் மட்டும் தன் குடும்பம் கடைத்தேற முடியாது என்பதைத் தெரிந்து வைத்திருந்தாள். வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு தன் குடும்பத்தைக் கடைத்தேற்ற நினைப்பது சரிதான்.  ஆனால் அதற்காக எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவரைப் போய்த் திருமணம் செய்து கொள்வது கொஞ்சம் ஏற்க முடியவில்லை தான். சுமதி தானாக எடுத்த முடிவு.  தீர்க்கமாக யோசித்து அவள் மருத்துவத் துறையில் இருப்பதால் இந்த நோயைக் குறித்த தகவல்கள் அவளுக்குப் பூரணமாய்க் கிடைத்து விடும்; அவ்வப்போது ஏற்படும் மருத்துவ முன்னேற்றங்களால் பாதிப்பு அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும் என  அவளும் தெரிந்து வைத்திருந்தாள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதோடு இப்படி ஒருவருக்கு சேவை செய்வதைத் தன் வாழ்க்கையில் லக்ஷியமாகவும் கொண்டிருக்கலாம்.  இப்போது சுமதி செய்வது சரியா, தப்பா என்று நமக்குப் புரியாவிட்டாலும், அவள் தைரியமாக எதிர்கொள்வதைப் பார்த்து அவளோடு நாமும் கூடச் சென்று என்ன நடக்கிறதுனு பார்க்கலாமே!

எய்ட்ஸ் உள்ள மணமகனுக்குப் பொருத்தமான மணமகள் தேவை என்னும் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு நேரடிப் பேட்டிக்குச் சென்றவளுக்குத் தன்னை வரவேற்ற வாலிபன் தான் மணமகன் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியே வருகிறது. நமக்கும் மகிழ்ச்சியே!  ஆனால் அவன் தாய் தான் கொஞ்சம் கடுகடுவென இருக்கிறாள். தன் மகனுக்கு இப்படி ஒரு அழகான பெண் மனைவியாக வருவதில் உள்ளூர மகிழ்ச்சி என்றாலும் தான் எதிர்பார்க்கும் சீர்வரிசைகளைப் பெற முடியாது என்னும் வருத்தமும் அந்த வாலிபனின் தாய்க்கு இருந்தது.  தன் ஒரே மகன் சுந்தர் இத்தனை பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும், தான் எதிர்பார்த்தது போல் சீர்வரிசையுடன் பணக்கார மருமகளை அடைய முடியாத ஏமாற்றம் அந்தத் தாய்க்கு.  இவள் பணத்தைப் பார்த்துத் தன் மகனைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாளோ என அவளால் கூட நினைக்க முடியவில்லை.  ஏனெனில் சுந்தரின் வியாதி அப்படிப்பட்டது. ஆனாலும் சுமதியின் அழகும், அவள் பழகும் விதமும் அந்தச் சிடுமூஞ்சியைக் கூட ஈர்க்கிறது.

சுமதியோ தன் குடும்பம் சாதாரணம் என்பதையும் சொல்லி விடுகிறாள்.  அந்தத் தாய்க்கு ஆறுதலான ஒரே விஷயம் சுமதியும் அவள் பிறந்த ஊரான திருச்சிக்கு அருகிலுள்ள கிராமம் என்பதே. சுமதி சுந்தரின் தாயிடம் மணமகன் சுந்தர் உண்மையை மறைக்காமல் சொன்னது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளும் விரைவில் கண்டுபிடிக்கக் கூடும், கவலைப்பட ஏதுமில்லை என்றும் தன் வருங்கால மாமியாரிடம் சொல்லி அவளுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறாள். அவள் தன்னம்பிக்கையையும், எது வந்தாலும் நேரடியாக எதிர்கொள்ளலாம் என்னும் தைரியத்தையும் இங்கே பார்க்க முடிகிறது. .  வந்த இடத்திலும் தாங்கள் சிற்றுண்டி அருந்திய பாத்திரங்களைக் கழுவி வைத்ததன் மூலம் சுமதியின் வருங்கால மாமியார் மனதில் அவள் தன் கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றுவாள் என்னும் நம்பிக்கையை ஊட்டுகிறாள்.  ஆனால் தன் மகனையே ஒழுக்கம் கெட்டவனாக நினைத்துக் கொண்டும் ; அதனால் தான் எய்ட்ஸ் அவனுக்கு வந்திருக்கிறது எனவும் அந்தத் தாய் நினைத்து அதைப் பட்டவர்த்தனமாக சுமதியிடம் சொன்னாலும் அதை  சுமதி  இதெல்லாம் சகஜம் என்று சொல்கிறாள். இதைத் தான் ஏற்க முடியவில்லை.  என்ன இருந்தாலும் ஒழுக்கமில்லாமல் ஒழுக்கக் கேடால் வந்த எய்ட்ஸ் எனில் இனியும் அவன் ஒழுக்கத்துக்குத் தகுந்த உத்தரவாதம் உண்டா என அவள் யோசித்திருக்கலாமோ?

ஆனால் எய்ட்ஸ்  ஒழுக்கம் கெட்டதால் மட்டுமே  வருவதில்லை.  சுத்தமில்லா ஊசிகள் மூலம், ரத்ததானம் செய்கையில் பயன்படுத்தப்படும் சுத்தமில்லா சிரிஞ்சுகள் மூலம், பாதுகாப்பில்லா உடல் உறவுகள் எனப் பல வழிகளிலும் எய்ட்ஸ் பரவுகிறது. இதை மரகதம் தெரிந்து வைத்திருக்கிறாளா இல்லையா என்னும் சந்தேகம் வருகிறது.  சுமதியும் இதைக் குறித்து அதிகமாய்ச் சிந்தித்திருப்பதாய்த் தெரியவில்லை.  அது குறித்த விளக்கம் இங்கே இல்லை. அடுத்ததாக மரகதம் என்ன தடை சொல்லப் போகிறாளோ என்னும் எதிர்பார்ப்பு நம்மிடம் எழுகிறது.

அதற்கேற்றாற்போல் குழந்தை பிறந்தால் என்ன செய்வது என்ற கேள்வி மரகதத்திடமிருந்து பிறக்க அதையும் சமாளிக்கிறாள் சுமதி.  தகுந்த  பாதுகாப்பின் மூலம் பரவாமல் தடுக்கலாம் என்பதோடு எய்டிஸினால் இறப்பு என்பதும் உடனடி வரக்கூடியது அல்ல என்று சொல்லி இருக்கும் காலத்துக்குள்ளாக பிறருக்கு நன்மை செய்யலாமே என்றும் வாதிடுகிறாள்.  தன்னலமற்ற சேவை செய்வதில் அவளுக்கு உள்ள ஈடுபாடு இங்கே வெளிப்படுகிறது.  அதையும் இப்படி ஒரு நோயுள்ள கணவனோடு சேர்ந்து செய்யவும் அவளுக்கு ஆசை. என்னதான் பணம், காசு இருந்தாலும் இத்தகைய கொடிய நோய் இருக்கையில் யாரும் மணந்து கொள்ள முன்வரமாட்டார்கள். சுமதியோ துணிவுடன் இதில் இறங்க நினைக்கிறாள்.     சுந்தரின் தாயோ சுமதியின் மனப் பக்குவத்தால் மனம் மகிழ்ந்தாலும் தன் குடும்ப நிலைமைக்கு ஏற்ற சீர் வரிசைகள் கிடைக்காதே என யோசிக்கிறாள். தன் பிள்ளையின் நிலைமையை யோசித்தும், இப்படி ஒரு பல்கலை வித்தகியான பெண் கிடைக்காது என்பதாலும் தன்னைச் சமாளித்துக்கொண்டு  அவள் வீட்டிற்கு வந்து பெண் கேட்பதாகச் சொல்லுகிறாள்.    நாமும் இவ்வளவு எளிதாக முடிந்ததே என எண்ணுகிறோம். ஆனால் அடுத்துத் தான் அதிர்ச்சி காத்திருக்கிறது நமக்கும், சுமதிக்கும். ஆட்டோவில் ஏறும்போது சுந்தர் கொடுத்த கவரைப் பிரித்துப் படித்தால் மாபெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது சுமதிக்கு.


தன் தாயின் பேராசைக் குணத்தைப் பார்த்தே சுந்தர் தன் குடும்ப மருத்துவர் உதவியோடு தனக்கு எய்ட்ஸ் நோய் என்பதாகப் பொய் சொல்லி இருப்பதாக அந்தக் கடிதத்தில் கண்டிருந்தது.   அதனால் தான் தங்களை வழியில் பார்த்த மருத்துவர் வாழ்த்துத் தெரிவித்தாரா என சுமதி நினைத்தாள். கூடவே சென்று அனைத்தையும் பார்க்கும் நமக்கு இத்தனை திறமையும், அழகும், நேர்மையும், குடும்பத்தின் மேல் பற்றும் உள்ள சுமதிக்குக் குறைகள் இல்லாத பெரிய பணக்காரக் குடும்ப மாப்பிள்ளையே வருவதில் உள்ளூர மகிழ்ச்சி ஏற்படுகிறது.  ஆனால் நேர்மையே வடிவான சுமதிக்கு இப்படிப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து கொள்வதில் உள்ள ஆபத்து புரிய அதோடு சுந்தர் பெற்ற தாயிடமே பொய் சொல்லி இருப்பதால் அவனை ஏற்க மறுக்கிறாள்.  தன்னால் அவர்களிடம் இந்த உண்மையை மறைக்க இயலாது என்றும் சொல்லித் திட்டவட்டமாக மறுத்து விடுகிறாள்.  இது அவள் நேர்மையை மட்டும் எடுத்துக்காட்டவில்லை. பணம், காசு இருந்தாலும் எய்ட்ஸ் என்றதும் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தவள், இப்போது அதே பணம் , காசு இருந்தாலும் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து கொள்வது நன்மை தராது என்று உணர்ந்து விடுகிறாள்.  உலகில் பணம், காசை விட நேர்மையும் சத்தியமுமே பெரிது என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்.  அதோடு சுந்தரின் தாய் சீர்வரிசை எதிர்பார்ப்பதைத்  தவறானதல்ல என்பதையும் உணர்த்துகிறாள்.

//திருமணமாகி புதுப்பெண்ணாய் வருபவள் எல்லாச் செல்வங்களுடனும் வந்தால் தான், புகுந்த வீட்டில் அவளுக்கும் ஒரு கெளரவமாகவும், பெருமையாகவும், மரியாதையாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான்;

எனவே தங்கள் தாயாரின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் நியாயமானதே;

அவர்களிடம் உண்மையைச்சொல்லி விட்டு, பிறகு அவர்கள் விருப்பப்படியே, நீங்கள் வேறு யாரையாவது உங்கள் ஸ்டேட்டஸுக்குத் தகுதியானவளாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்; //

மனித மனத்தில் தோன்றும் இயல்புகளை நன்கு புரிந்து வைத்திருக்கிறாள் சுமதி என்பதும் மேற்கண்டவற்றை அவள் சொன்னதிலிருந்து ஊகிக்க முடிகிறது. இத்தனை நற்குணங்கள் அமைந்த பெண்ணை மணக்க முடியவில்லை என்பது சுந்தருக்கு வருத்தமாகி விட அவன் சுமதியை நினைத்து ஏங்குகிறான். தன் ஒரே மகன் படும்பாட்டைக் கண்ட அவன் தாய் ஆஸ்பத்திரிக்கே நேரில் போய் சுமதியை விசாரிக்க எண்ணுகிறாள்.  கதாசிரியர் ஆஸ்பத்திரி சூழ்நிலையை இங்கே அருமையாக வர்ணித்திருக்கிறார்.  நாமே நேரில் சென்று அனைத்தையும் பார்க்கிறாப்போல் இருக்கிறது வர்ணனைகள்.  மரகதத்திடம் உண்மையான காரணத்தைச் சொல்லாமல்  சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கும் சுமதியின் மேல் கோபத்துடன்  வீட்டுக்கு வந்தவளுக்கு சுந்தர் சொல்லி உண்மை புரிகிறது.  சுமதியின் பெருந்தன்மை மட்டுமின்றித் தன் குடும்பம் கஷ்டப்படும் நேரத்திலும் பணத்துக்கு ஆசைப்படாமல் நேர்மையாகவும், உறுதியாகவும் சுந்தரிடம் அவள் மறுத்திருப்பதைக் கண்ட மரகதத்துக்கு இவளைவிடச் சிறந்த மருமகள் தனக்குக் கிடைக்க மாட்டாள் என்பது புரிந்து போக, இத்தனை வருடங்களாக அவள் கண்களை மறைத்திருந்த பணமோகம் அகன்று விடுகிறது.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற..

என்னும் குறளின் பொருள் இப்போது தான் மரகதம் உணர்ந்தாள்.

மனிதரை மனிதருக்காக நேசிக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்கிறாள்.  அடுத்த ஒரே மாதத்தில் சுமதியைத் தன் மருமகளாக்கிக் கொள்கிறாள்.

நேர்மையான வழியில் செல்பவர்களுக்குத் தோல்வி என்பது இல்லை.  என்றேனும் ஒருநாள் அவர்களின் நேர்மைபுரிந்து கொள்ளப்பட்டுப் பாராட்டுப் பெறும்.  சுமதியின் விஷயத்தில் உடனடியாக நடந்து விடுவது அவள் அதிர்ஷ்டமா, சுந்தர் அதிர்ஷ்டமா?  இருவரையும் சேர்த்து வைத்துப் பார்த்து ஆனந்தம் அடையும் மரகதத்தின் அதிர்ஷ்டமா? சொல்வது கஷ்டம் தான்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

Friday, July 18, 2014

கண்ணே பாப்பா!




முந்தாநாள் மதியம் வெட்டிப் பொழுது போக்குகையில் தற்செயலாக இந்தப் படம்  வசந்த் தொலைக்காட்சியில் மத்தியானமாப் போட்டாங்க.  கறுப்பு வெள்ளைப்படம் தான். ஆரம்பம் கொஞ்சம் சொதப்பல் தான்.  கே.ஆர். விஜயா குற்றாலத்தில்  ஊர் சுற்றி (?) பார்க்க வரும் முத்துராமனின் பின்னணியே தெரியாமல் அவரிடம் தன்னை இழந்ததாகக் காட்டி இருப்பது அபத்தத்தின் உச்சகட்டம்.  என்ன இருந்தாலும் இளம் வயதுப் பெண் இப்படியா ஏமாறுவாங்க? ஆனால் இம்மாதிரிப் பெண்களை அந்தக் காலங்களில் (படம் அறுபதுகளில் வந்திருக்கணும்) "அபலை" என்ற பட்டம் சூட்டி இரக்கம் காட்டி மகிழ்வார்கள்.  அப்படியே இதிலும் நடக்கிறது.  பகவதிபுரம் தான் தன்னோட ஊர்னு கே.ஆர். விஜயாவை ஏமாத்திப் பாதியிலேயே விட்டுட்டுப் போறார்.  அந்த ஊரிலேயே ஸ்டேஷன் மாஸ்டர் வி.எஸ்.ராகவன் உதவியுடன் தங்கி இருந்த விஜயா  வர ஒவ்வொரு ரயிலிலும் முத்துராமனைத் தேடிக் கடைசியில் தனக்குக் குழந்தை பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தற்செயலாக ஒரு ரயிலில் காண்கிறார்.  ஆனால் முத்துராமன் அவரைத் தெரியாது எனச் சொல்லி விடுகிறார்.

தன் தந்தையிடம் குழந்தையைச் சேர்ப்பிக்கச் சொல்லி விஜயா கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செத்து விடுகிறார்.  உறவினர் அனைவரும் குழந்தையை ஏற்க மறுக்க அது எப்படியோ ரயிலில் ஏறிச் சென்னை வருகிறது பெற்றோரைத் தேடி.  வந்த குழந்தை எப்படியோ பிச்சை எடுத்துப் பிழைக்கும் கும்பலிடம் சேர்ந்து கொள்கிறது.  குழந்தையை ஆதரிக்கும் சந்திரபாபு அதன் பெயரில் வாங்கிய லாட்டரிச் சீட்டிற்கு லக்ஷ ரூபாய்ப் பரிசு விழ ஆரம்பம் ஆகிறது விறுவிறுப்பு.

குழந்தையாக நடித்திருப்பது பேபி ராணியாம்.  நல்லா இயல்பா நடிக்கிறது. அதை விட நல்லா "ஓ"னு அழுகிறது.  அழுகை வெகு இயல்பு.  அதிலும் லாட்டரிச் சீட்டைக் களவாட வருபவர்களைச் சரியாகக் கணித்து அவர்களிடமிருந்து தப்பிப்பது;  வழியில் சந்திக்கும் நடிகை மனோரமா, உபந்நியாசகர் வேடத்தில் இருப்பவர்  வி.கே.ராமசாமி, ரிக்க்ஷாக்காரர், குப்பத்துக்காரர்கள் இத்தனை பேரையும் சமாளிக்கும் விதம் நன்றாகவே படமாக்கப்பட்டுள்ளது. நம்பியாரை முதலில் நம்பி அவருடன் செல்ல நினைக்கும் குழந்தை பின்னர் தப்பி விடுகிறது. கடைசியில் ஒரு வழியாக போலீஸ் கமிஷனர் சுந்தரராஜனிடம் வந்து சேர்ந்து உண்மையைச் சொல்கிறது.



குழந்தையை நம்பியாரிடம் போய் இருக்கச் சொல்லும் சுந்தரராஜனிடம் மாட்டேன்னு சொல்லுகிறது.  பின்னர் நம்பியார் நல்லவர் தான் எனத் தெரிந்து கொண்டு அவரிடம் போகிறது.  அவர் மனைவியாக வரும் விஜயகுமாரிக்குக் குழந்தை இல்லாததால் இந்தக் குழந்தையிடம் பாசமழை பொழிகிறார். முத்துராமன் பெண்களை ஏமாற்றிப் பிழைக்கும் கும்பலில் வேலை செய்கிறார்.  (அந்தக் காலத்திலேயே ஆன்டி ஹீரோவாக நடிச்சிருக்கார் முத்துராமன். )மனோகர் தான் தலைவர்.  குழந்தைக்குப் பரிசு கிடைத்திருப்பதும், அதன் பெற்றோர் படமும் தினசரிகளில் வரக் குழந்தையிடமிருந்து பணத்தைப் பிடுங்கத் தயாராகின்றனர் வில்லன் மனோகர்  குழுவினர்.  அதற்காக டி.கே.பகவதியின் மகளான கல்பனா (இதுவும் கே.ஆர்.விஜயா)வை குழந்தைக்குத் தாயாக நடிக்கச் சொல்ல பின்னர் நடப்பது தான் க்ளைமாக்ஸ். பி.மாதவன் இயக்கம்.  கதை கோர்வையாகச் சொல்லப்பட்டிருப்பதோடு சம்பவங்களும் முன்னுக்குப் பின் முரண் இல்லாமல் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  அந்தக் காலத்தில் இந்தப்படம் நல்லா ஓடி இருக்கணும்.  கண்ணே பாப்பா, என் கனிமுத்துப்பாப்பா பாட்டு தான் ஹிட்  சாங்.  அடிக்கடி கேட்டிருக்கலாம்.  ஹிஹிஹி, அறுபதுகளில் வந்த படத்துக்கு இப்போ விமரிசனம் செய்தாச்சு.  நல்லா இருக்கா?

ரொம்ப நாள் ஆசை பாச மலர் படமும், பாலும் பழமும் படமும் பார்த்துட்டு விமரிசிக்கணும்னு இருக்கு.  அது என்னமோ தொலைக்காட்சியில் வரவே மாட்டேங்குதே! :)

Tuesday, July 15, 2014

அம்மாமண்டபத்தில் ஓர் காலைப் பொழுது!

நேத்து ஒரு வேலையா பாரத ஸ்டேட் வங்கிக்குப் போக வேண்டி இருந்தது.  குறிப்பிட்ட வேலை சம்பந்தமாக நாங்க பார்த்த பெண்மணி, "உட்காருங்க, பத்து நிமிஷத்திலே எல்லாம் ரெடி பண்ணிட்டுக் கூப்பிடறேன்!" னு சொன்னாங்க. ரங்க்ஸ், "எப்போவுமே இப்படித் தான் சொல்லுவாங்க.  லேசில் கூப்பிடமாட்டாங்க!" னு முணுமுணுத்தார்.  இருவருமாய்ப்போய் உட்கார்ந்து ஐந்தே நிமிஷத்தில் கூப்பிட்டுட்டாங்க.  தேவையான கையெழுத்துக்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கொஞ்ச நேரம் பொறுத்திருக்குமாறு வேண்டிக் கொண்டார்.  குரலிலேயே தாமதம் ஆவதற்கான மன்னிப்புக் கேட்கும் தொனி புரிந்தது.

பின்னர் மீண்டும் ஐந்து நிமிஷத்தில் அழைத்து வேலையை முடித்துக் கொடுத்துவிட்டார். பனிரண்டரைக்கு வீட்டை விட்டுக் கிளம்பினோம்.  பிரயாண நேரத்தையும் சேர்த்து 40 நிமிஷத்தில் வேலை முடிந்துவிட்டது.  ஆச்சரியம் இல்லையா? இப்படி எல்லாவற்றிலும் மாற்றங்களை எதிர்பார்ப்போம். 

இன்னிக்கு அம்மாமண்டபம் படித்துறைக்குப் போயிருந்தோம்.  அங்கே இருக்கிற கோவில்லே ஒரு வேலை. அது பத்திக் கேட்டுட்டு, சிராத்தம் செய்வதற்காக ஆற்று மணல் எடுத்து வந்தார் ரங்க்ஸ்.  காவிரிக்கரை ஓரங்களை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.  அதிலும் அம்மாமண்டபத்தில் குளிக்க வரும்பொது ஜனங்கள் செய்யும் அட்டூழியம் சொல்லி முடியாது.  எங்கே பார்த்தாலும் ப்ளாஸ்டிக் பைகள், கேன்கள், துணிகள் எனக் கரையோரமாகக் கால் வைக்க முடியாதபடி இருக்கும். கரையோரங்களில் அவற்றை எல்லாம் தோண்டி எடுத்துக் குவித்துக் கொண்டிருந்தது புல்டோசர்.  இன்னும் கொஞ்சம் மணலின் மேடு பள்ளங்களையும் செப்பனிட்டுச் சமன் செய்தால் தண்ணீர் வந்தால் ஓட வசதியாக இருக்கும்.

அம்மாமண்டபத்தில் நின்றிருக்கையில் விதவிதமான ஜனங்கள் மூத்தோர் கடன் செய்வதைப் பார்த்தேன்.  பெரிய சதுரமாக வாயில்கள் வைத்துக் கோலம் போட்டு நடுவில் ஒரு மண்டபம் மாதிரி வாயில்களோடு வைத்து அதிலே சுற்றியும் சின்னச் சின்ன மண் குடுவைகளை வைத்து நூல் போட்டுக் கட்டி ஏதோ பரிகாரம்(?) செய்திருந்தனர்.  இம்மாதிரிச் செய்வதை இன்று தான் புதிசாய்ப் பார்க்கிறேன்.  போகும் எண்ணம் இல்லாததால் கிளம்புகையில் காமிராவோ, செல்பேசியோ எடுத்துச் செல்லவில்லை.  இல்லைனா ஃபோட்டோ எடுத்திருக்கலாம். :(

அதைத் தவிர ஆங்காங்கே இலையில் அரிசி, வாழைக்காய், காய்கள், வெல்லம், துணிமணி, தேங்காய் எனக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  சிலர் பித்ரு கடன் செய்து கொண்டிருந்தனர்.  அவங்களைச் சுற்றிக் குடும்ப உறுப்பினர் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.  ஓர் இடத்தில் இன்னும் திருமணம் ஆகாத முதிர் கன்னர் ஒருத்தர் எல்லா தோஷமும்  நீங்க வேண்டிப் பரிகாரம் செய்து கொண்டிருந்தார்.  பின்னர் ஒரு வாழைக்கன்றை அலங்கரித்து ஒரு மண் தொட்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.  அந்த வாழைக்கன்றுக்குத் திருமாங்கல்யதாரணம் செய்தார்.  அதன் பின்னர் ஏதேதோ மந்திரங்கள் சொல்லி விட்டு, வாழைக்கன்றைத் திருமாங்கல்யம் கட்டியதற்குக் கொஞ்சம் கீழே அரிவாளால் சீவி விட்டார். இதெல்லாம் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.  பார்த்ததில்லை.  இன்று பார்க்கவும் சந்தர்ப்பம் வாய்த்தது.  படம் எடுத்தால் என்ன சொல்வாங்களோ!  சிலருக்குப் பிடிக்காது.  எப்படியாயினும் கையில் ஒண்ணும் இல்லை.  கையை வீசிக் கொண்டு போயிருந்தேன்.

அந்த முதிர்கன்னருக்கு இப்போவே 40 வயசுக்குக் குறையாது! :( சீக்கிரம் கல்யாணம் ஆகப் பிரார்த்தித்துக் கொண்டேன். 


அம்மாமண்டபம் நான் எடுத்த படம் கிடைக்கவில்லை.  படத்துக்கு நன்றி கேஆர் எஸ்! :)

இப்போது தான் இரு நிமிடங்கள் முன்னர் ஒரு பெண்மணி, சென்னை, ராகவேந்திரா ஜ்வல்லர்ஸிலே இருந்து கூப்பிடறதாயும், என்னோட அலைபேசி எண்ணுக்கு ஒரு பவுனுக்கு அமெரிக்கன் டயமன்ட் பதித்த மோதிரம் விழுந்திருக்கிறதாயும், அதை வாங்க வேண்டியும், குறிப்பிட்ட விழாவுக்காகவும் 5,000/- ரூ அனுப்பும்படியும் தொலைபேசி அழைப்பு. கடுமையாகத் திட்டிட்டு வைச்சேன். இது மாதிரி அழைப்புக்கள் நிறையவே வருகின்றன.  பிஎஸ் என் எல்லில் புகாரும் கொடுத்தாச்சு!  ஆனாலும் நிற்கவே இல்லை. 

Sunday, July 13, 2014

பேய், பிசாசுகளை எல்லாம் பார்த்தேனே!

Darr @ The Mall படம் மத்தியானமாய்ப் பார்த்தேன்.  படம் நல்லாவே இருந்தாலும் முதலில் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.  மும்பை --புனே வழியில் ஒரு இடிந்த கட்டிடம் முன்னால் பிரபலமான ஹோட்டலாக இருந்ததாகவும், அது பின்னர் ஏதோ சில அறியாத காரணங்களால் மூடப்பட்டுப் பாழடைந்து போய்விட்டதாகவும், அந்த ஹோட்டலில் இறந்த பெண்ணின் ஆவி அங்கே உலாவுவதாகவும் சில வருடங்கள் முன்னர் தொலைக்காட்சியில் செய்தி ஒன்றில் பார்க்க நேர்ந்தது.  அந்த இடத்தை ஒரு தொழிலதிபர் வாங்கி மீண்டும் ஹோட்டல் திறக்கப் போவதாயும் சொல்லிக் கொண்டு இருந்தனர்.

அது என்ன ஆச்சுனு அப்புறமாத் தெரியாது.  ஆனால் கிட்டத்தட்ட அந்தக் கரு தான் இங்கேயும். ஆசியாவின் மிகப் பெரிய மால்  திறக்கப் படப் போகிறது. அதைக் கட்டும்போதே பல்வேறு பேச்சுக்கள்.  அந்த இடமே ஆவிகள் உலாவும் இடம் என்றும் வெள்ளைப் புடைவை கட்டிக்கொண்டு வெண்மையான தலைமயிருடன் ஒரு பெண்ணின் ஆவியைப் பார்த்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தனர்.  ஆனால் கட்டடம் கட்டுபவர்கள் யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை என்றாலும் அமாநுஷ்யமான சம்பவங்களால் இது உண்மையாக இருக்குமோ என்னும் எண்ணம் அனைவருக்கும்.  அதைத் திறக்கப் போவதற்கு முதல்நாள் மாலையில் அதன் சொந்தக்காரர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தானும், தன்னுடைய குழு நண்பர்களும் அங்கே இரவைக் கழிக்கப் போவதாய்ச் சொல்கிறார்.

ஆனால் அவர் மட்டும் அங்கே தங்கவில்லை.  சொந்தக்காரரின் பெண் அஹானாவும், அவளுடைய சில பணக்கார நண்பர்களும் கூட உள்ளே நுழைகின்றனர். இன்னொரு பக்கம் மாலின் காவலுக்கு அமர்த்தப்பட்டிருக்கும் காவலாளிகளின் தலைவன் ஆன விஷ்ணுவும் உள்ளே தான் இருக்கிறான். அஹானாவின் சிநேகிதி ஐஸ் ஸ்கேட்டிங்கில் திடீரெனக் கொல்லப்படுவது திகிலூட்டும் சம்பவம்னா, அடுத்து அவர்களின் ஒரு சிநேகிதனும் கொல்லப்பட்டுக் கை மட்டும் தனியே வெளியே தொங்கும்.

இந்த மூன்று குழுவுக்கும் ஏற்படும் அனுபவங்கள் தான் கதையே. திகிலூட்டும் சம்பவங்கள். காரணம் தெரியாத இறப்புகள். திடீர்னு எதிரே வந்து நிற்கும் ஆவிகள்னு கதை சுவாரசியமாப் போச்சு. முடிவில் தான் உண்மை தெரிகிறது.  வழக்கமான பழிவாங்கல் கதை தான்.  ஆவிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டமாக வந்து பழிவாங்குகின்றன.விஷ்ணுவுக்கு அந்த ஆவிகளுடனான தொடர்பும் புரிகிறது.  ஏனெனில் அந்த ஆவிகள் விஷ்ணுவை ஒண்ணும் செய்யலை.  விஷ்ணு கேட்டுக் கொண்டதன் பேரில் அஹானாவையும் ஆவிகள் விடுவிக்கின்றன. :))))

முடிவில் செக்யூரிடி விஷ்ணுவும், அஹானாவும் ஒன்று சேர்கின்றனர்.  இதான் கொஞ்சம் இடிக்குது.  கதாநாயகன் என்றாலே பணக்காரப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கணுமோ? பிரியலையே! 

Saturday, July 12, 2014

திக், திக், திக், நிமிடங்கள்!

50 வருஷமாச் சமைக்கிறேன்.  இப்படி எண்ணெய் மட்டுமில்லை, வெந்நீரைக் கூடக் கொட்டிக் கொண்டதில்லை. :(  எப்போதேனும் தோசைக்கல், குக்கர், இரும்புச் சட்டி போன்றவற்றை இறக்குகையில் கையில் சூடு லேசாகப் படும். அதுக்கே ரங்க்ஸ் சூட்டோடு இதை எல்லாம் இறக்க வேண்டாம்.  ஆறினதும் இறக்கிக்கலாம் னு 14 4 தடை உத்தரவு போட்டிருக்கார்.  இப்போது தான் முதல் முறையாக இவ்வளவு கஷ்டமான அனுபவம்.  அதனால் தானோ என்னமோ தெரியலை.  ஊருக்குப் போகையில் கொஞ்சம் அலுப்பாகவும், ஒரு மாதிரி வெறுமையாகவும் இருந்தது.  என்னால் எதையும் தூக்க முடியாதுங்கறதாலே சாப்பாடுப் பையை மட்டும் என்னிடம் ரங்க்ஸ் கொடுத்து வைச்சிருந்தார்.  ரயிலில் போகும்போது அதை மேலே மாட்டி இருந்தோம்.  மாம்பலம் ஸ்டேஷனில் இறங்க கிண்டி வரும்போதே தயார் ஆவோம் என்பதால் சாமான்களைத் தூக்கிக் கொண்டு இருவரும் இறங்கும் வாயில் அருகே போய் விட்டோம்.  சாப்பாடுப் பை என் பொறுப்பில் இருந்ததால் அவருக்கு நினைவிலேயே இல்லை.  நானோ அதைத் தூக்கிக் கொண்டு போய்ப் பழக்கம் இல்லாததால் கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு போயாச்சு.  வண்டியும் மாம்பலத்தில்  நின்று நாங்களும் இறங்கிக் கொஞ்ச தூரம் போனதும் திடீர்னு ஏதோ குறைஞ்சாப்போல் எனக்குத் தோன்ற, அவரிடம் சாப்பாடுப் பை எங்கேனு கேட்டேன்.

அப்போத் தான் அதை வண்டியிலேயே விட்டுட்டோம் னு புரிஞ்சது.  நல்லவேளையாக நாங்க இறங்கின பெட்டி அருகே தான் போயிட்டிருந்தோம். அதுக்குள்ளே ஒரு வாயிலை உள் தாழ்ப்பாள் போட்டிருந்தாங்க. ரங்க்ஸ் இன்னொரு வாயிலுக்கு ஓடி உள்ளே இருந்தவங்களிடம் சொல்லிப் பையை வாங்கிட்டார் ரங்க்ஸ்.  வண்டி கிளம்பறதுக்கு ஊதியாச்சு.  அவருக்கும் பதட்டம்.  அவசரத்தில் கதவைத் திறப்பதற்கு பதிலாக மூடி இருக்கார்.  அப்புறமா ஒருத்தர் சொல்லிக் கதவைத் திறந்து வாயிலருகே வரார்.  வண்டி கிளம்பியாச்சு.  அவரை இறங்க வேண்டாம்.  எழும்பூர் போயிடுங்கனு சொல்ல நான் வேகமாய்ப் போகும்போது ஒரு காலைப் படியில் வைத்து மற்றொரு காலை நிதானமாகத் தரையில் வைத்து இறங்கி விட்டார்.  உயரமாய் இருந்ததால் சாத்தியமாயிற்று என்றாலும் அந்த விநாடி மனம் பரபரப்பும், திகிலும் சொல்ல முடியாதவையாக இருந்தது.   ஒரு நிமிஷம் இந்தப் பை போனால் போகிறதுனு விட்டிருக்கலாமேனு நினைப்பு வந்தது.  முக்கியமான சில பொருட்கள் அதில் இருந்தன.  எப்படியோ முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலன் எங்களுக்குக் கிடைத்தது.  நல்லபடியாக இறங்கிட்டார். இதுக்காகவே திரும்பி வரும்போது சாப்பாடுப் பையைச் சாப்பிட்டு முடிச்சதுமே சாமான்களைப் பிரித்துப் பெரிய பையில் போட்டு மூடி விட்டோம்.

ரயில்வேயில் மாற்றங்கள் வந்திருப்பதைப் பார்த்தால் தான் ஒத்துக்க முடியும். அடிக்கடிப் பயணம் செய்பவர்களுக்குக் கட்டாயமாக மாற்றங்கள் தெரியும். அதோடு இல்லாமல் மற்றத் துறைகளிலும் மௌனமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.  தமிழ்நாடு கல்வித் துறை அதிகாரிகள் மானியங்களுக்காகவும், மற்ற சில தேவைகளுக்காகவும் மத்திய அரசின்  HRD Ministry யின் அதிகாரிகளோடு  சில நாட்கள் முன்னர் சந்திப்பு நடத்தி இருக்காங்க.  தமிழ்நாட்டு அதிகாரிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதோடு அந்த ஒரே நாள் சந்திப்பில் எல்லாவற்றுக்கும் பதில் அளித்து இவங்க தேவைகளை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் பதிலளித்து உத்தரவாதமும் கிடைத்திருக்கிறது.

தமிழக அதிகாரிகள் இதை எதிர்பார்க்கவே இல்லையாம்.  வருஷா வருஷம் அவங்களோடான சந்திப்புக்கே 3,4 நாட்கள் காத்திருக்க வேண்டி வருமாம்.  அதுக்குப் பின்னரும் நீங்க திரும்பிப் போங்க, நினைவூட்டல் கடிதம் அனுப்புங்கனு சொல்லிடுவாங்களாம்.  குறைந்த பக்ஷமாக 3 மாதமாவது ஆகுமாம்.  இப்போது வேலை முடிந்தது குறித்து அவங்க மயக்கம் போட்டு விழாத குறைதான்.  உள் கட்டமைப்பு வேலை வெளியே தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. அதன் தாக்கம் பொதுமக்களுக்குப் புரிய நாட்கள், மாதங்கள் ஆகலாம்.

நேற்றைய பட்ஜெட்டில்  பொதுவான சிறப்பம்சங்கள் இருந்தாலும் சேமிப்பு வரம்பை  3  லக்ஷத்திலிருந்து 5 லக்ஷமாக உயர்த்தி இருக்கலாம்.  இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். பொதுமக்களுக்கும் பயன்பாடு இருக்கும்.  சேமிப்பை 1.5 லக்ஷத்தோடு நிறுத்தியது சரியில்லை.  இதையே திரு இன்னம்புரார் அவர்களும் கூறியுள்ளார்.  பொதுவாக பட்ஜெட் திருப்திகரம் எனத் தோன்றினாலும் விளைவுகளை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.  திட்டங்கள் அறிவிப்புக்களோடு நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். போக வேண்டிய தூரம் மிக அதிகம்.

Friday, July 11, 2014

ஜானே பி தோ யாரோ

சென்ற ஞாயிறன்று   வேலை ஒண்ணும் செய்ய முடியாமல் மத்தியானம் குரங்கு வருதானு  வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தப்போ ஒரு ஹிந்திப் படம் பார்த்தேன்.  ஜானே பி தோ யாரோ என்னும்  படம்.  Jaane be do Yaaro/ NFDC யால் எடுக்கப்பட்டது.  குந்தன் ஷா இயக்கம்.  நஸ்ருதீன் ஷா, சதீஷ் ஷா, ஓம் புரி, பங்கஜ் கபூர்,  ரவி பாஸ்வானி, நீனா குப்தா போன்ற நாடகக் கலைஞர்களால் (theatre artists) நடிக்கப்பட்டது.  இயல்பான நடிப்பு.  நஸ்ருதீன் ஷாவும், ரவி பாஸ்வானியும் ஃபோட்டோகிராஃபர்கள்.  தற்செயலாக ஒரு போட்டிக்குப் படம் எடுக்கையில் கொலை ஒன்றையும் படம் எடுத்து விடுகின்றனர்.  அதை யார் என்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி.

அதற்கு மேல் அதிர்ச்சியாக சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் எல்லாமே நகைச்சுவையோடு பின்னிப் பிணைந்து இயல்பாக வருகிறது.  இறந்து போன சதீஷ் ஷாவின் பிணத்தை வைத்துக்கொண்டு இவங்க அடிக்கிற கூத்து, முக்கியமா ஓம்புரி பண்ணும் வேடிக்கை! பின்னர் க்ளைமாக்ஸில் திரௌபதி வஸ்திர அபஹரணம் சீனில் சதீஷ் ஷாவை திரௌபதி வேஷம் போட்டு நிற்க வைத்து அடிக்கும் கூத்து! அமர்க்களம்.  முடிவு எதிர்பாராதது.  ஆனால் அன்றும், இன்றும், என்றும் நடைபெறும் யதார்த்தம்.

பிணத்தை வைத்து இவங்க அடிக்கும் இந்தக் கூத்து படத்தில் வந்தது 83 ஆம் வருஷமோ, 84 ஆம் வருஷமோ.  ஆனால் இதை தான் நம்ம உலக நாயகர் மகளிர் மட்டும் படத்தில் நாகேஷை வைத்துக் காமெடி ஆக்கி இருக்கார். கிட்டத்தட்டப் பனிரண்டு வருடங்கள் கழித்து.  மனுஷன் கிட்டே ஒண்ணு கூட ஒரிஜினலா இருக்காது போல! :(

ஹம் ஹோங்கே காம்யாப்
ஹம் ஹோங்கே காம்யாப்

ஏக் தின்

பூரா ஹை விஷ்வாஸ்
மன் மேஹை விஷ்வாஸ்

ஹம் ஹோங்கே காம்யாப்

ஏக் தின்.

இப்போதைய நிலைக்கும் இது பொருத்தமாய்த் தான் இருக்கு.

Thursday, July 10, 2014

கிழக்கே போன ரயிலில் நானும்!

மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்னை சென்றிருந்தோம்.  இங்கேயே நேர்முகத் தேர்வில் ஃபெயில்.  இதோடு இரண்டு தரம் ஃபெயில் ஆகிட்டதாலே மருத்துவர் எனக்கும் மாத்திரை கொடுக்க ஆரம்பிச்சுட்டார்.  ஆகவே நானும் குழுமத்தில் சேர்ந்தாச்சு வருத்தத்துடன்.  ஆனால் ரொம்பவே வீரியமான மாத்திரைகள் அல்ல என்பதோடு காலை, இரவு இரண்டே வேளைக்குத் தான் மாத்திரைகள். பத்து நாளில் மறு தேர்வு இங்கேயே செய்துட்டு அதன் முடிவை மருத்துவரிடம் தொலைபேசியில் சொல்லணும்.  வீட்டுப்பாடம் எல்லாம் கொடுத்துட்டார்.

இம்முறை ரயில் பயணத்தில் சென்ற முறை கடைசியாக விசா ரினிவலுக்குப் போனப்போ இருந்ததை விடவும் பயணம் சுகமாக இருந்தது.  ஏ.சி.யின் குளிர் சீராக இருந்ததோடு ரயில் பெட்டி சுத்தமாக இருந்தது.  வேகம் இருந்தாலும் தூக்கித் தூக்கிப் போட்டு நிற்கவே முடியாமல் வண்டி குதிக்கவில்லை. கழிவறை சென்றால் நிற்க முடியாமல் வண்டி ஆட்டத்தில் பலமுறை கீழே தள்ளும், முக்கியமா அது இல்லை. குறிப்பிட்ட பெட்டிகளின்  உதவியாளர்கள் பெட்டிக்கு வெளியேயே உட்கார்ந்திருந்தார்கள் என்பதோடு அவரைத் தேடிக் கொண்டு அலைய வேண்டி இருக்கவில்லை.   வெளியிலிருந்து விற்பனை செய்பவர்களை அனுமதிக்கவில்லை.  எல்லோருமே சுத்தமான உடையுடன் அவங்க அடையாளம் உள்ள பெயர்ச்சீட்டைக் கழுத்தில் கட்டாயமாக மாட்டி இருந்தனர்.  இம்முறை வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு போக முடியாததால் ரயிலிலேயே பயத்தோடு வாங்கினோம். என்ன ஆச்சரியம்! பொங்கல் சூடுன்னா அப்படி ஒரு சூடு.  சுவையும் நன்றாகவே இருந்தது. காஃபி, டீ வாங்கினவங்களுக்கு எல்லாம் அந்தக் கப்பில் முக்கால் கப் வரை காஃபி, டீ கொடுத்தாங்க.  ஆங்காங்கே ஒரு சிலர் முன்னை மாதிரி அரைக் கப் கொடுக்கிறாங்க தான்.  என்றாலும் அவங்களும் விரைவில் மாறுவாங்கனு எதிர்பார்ப்போம்,  குறிப்பாக ரயில் சேவையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்து விட்டது.  மெல்ல மெல்லத் தான் சூடு பிடிக்கணும்.  டிக்கெட் இதுவரை விலையேற்றியதை நியாயப் படுத்தலாம்.  ஆனால் தொடர்ந்து அடிக்கடி ஏறும் என்பதை ஏற்கத் தான் முடியவில்லை.


ஆம்னிப் பேருந்துக்கோ, தனியார் சிறப்புப் பேருந்துகளிலோ, தனியார் வோல்வோ பேருந்துகளிலோ பயணம் செய்ய 500 ரூபாய்க்கும் மேல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கிறது.  அதைக் கொடுத்துப் பயணம் செய்கின்றனர் தானே.  அதில் கால் வாசி கூட ரயில்வேயில் விலை ஏற்றம் இல்லை.  மேலும் நமக்கு வசதிகளும் வேண்டும், ரயில் டிக்கெட்டும் விலை ஏறக்கூடாதுன்னா அரசாங்கம் எங்கிருந்து வசதி செய்து தர முடியும்? முக்கியமாய் டிக்கெட் பரிசோதகர்களை நிறைய நியமனம் செய்ய வேண்டி இருக்கிறது.  ஒரே டிக்கெட் பரிசோதகர் 4,5 பெட்டிகளில் டிக்கெட் பரிசோதனை செய்ய வேண்டி இருக்கிறது.  இதிலே இப்போது பெண் டிக்கெட் பரிசோதகர்களும் வருவதால் அவங்களாலே நிச்சயமா முடியறதில்லை. இதை ஒரு குற்றமாய்ச் சொல்லவில்லை.  குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக 2 பெட்டியின் 150 பயணிகளின் டிக்கெட்டை மட்டும் தான் பரிசோதிக்க இயலும். ஆகவே புதிதாக நியமனம் செய்தால் அவங்களுக்குச் சம்பளம் கொடுத்தாகணும்.  இந்தியா முழுமைக்கும் இப்படி எத்தனையோ நியமனங்கள் செய்யப் பட வேண்டும்.

பராமரிப்புச் செலவு போன்ற முக்கியமான செலவுகளுக்கும் பணம் தேவை. இன்னும் எத்தனையோ வழித்தடங்கள் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. அவை எல்லாம் முடிக்கணும்.  எல்லாவற்றிலேயும் சலுகையைக் கொடுத்தால் அப்புறமா ரயில்வேக்கு வருமானம் எங்கிருந்து வரும்?  நமக்கு வசதி வேண்டும்னா இம்மாதிரியான சின்னச் சின்ன விலை ஏற்றங்களை ஏற்கத் தான் வேண்டும்.  இப்போதெல்லாம் அரசாங்கம் எல்லாத்தையும் இலவசமாக் கொடுக்கணும்;  அதுவும் தரமாக இருக்கணும் என்னும் மனப்பானமை பெருகி விட்டது.  வருமானத்துக்கு வழியில்லாத அரசால் எதைச் சாதிக்க முடியும்?

சென்னை போன அன்னிக்கு மாம்பலத்தில் இறங்குகையில் ஒரு சிறு நிகழ்வு. கொஞ்சம் அசட்டுத்தனம்,,கொஞ்சம் மறதி எல்லாம் கலந்த அந்த நிகழ்வு குறித்துப் பின்னால் பார்ப்போமா? :)

கை இன்னும் சரியாகவில்லை. :( வலக்கைப் பயன்பாட்டுக்கு வர இன்னும் ஒரு வாரமாவது ஆகும் போல் இருக்கு! வீக்கம், வலி குறைந்துள்ளது.