எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 10, 2016

சூரியனார் கோயிலில்!




புரியில் தரிசனம் முடிந்து திரும்பினோம். அதே ஆட்டோக்காரர் எங்களுக்காகக் காத்திருந்தார். வரும்போது கேட்ட தொகையைவிட இப்போது அதிகம் கேட்டார். அங்கே வேறே ஆட்டோக்களும் இல்லை. ஆட்டோ வேறே பிடிக்க வேண்டுமெனில் அரை கிலோ மீட்டராவது நடக்க வேண்டும். ஏற்கெனவே கோயிலில் உள்ளே நுழைகையில் ஏறியது இறங்கியது, அந்தப் பெரிய பிரகாரத்தில் நடந்தது என அதீதக் களைப்பு! ஆகவே பேரம் பேசியும் படியாமல் அவர் சொன்ன தொகைக்கே அந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டோம். எங்களுக்கு மட்டும் தனியாக, "ரிஜர்வ்" என்றும் சொல்லி விட்டோம். எங்கள் கார் நிற்கும் இடத்திற்குக் கொண்டு விட்டார். மணி பனிரண்டு போல் ஆகி இருந்தபடியால் சாப்பிடவேண்டுமா என வண்டி ஓட்டுநர் கேட்க, வேண்டாம் நேரே கோனார்க் செல்லுங்கள்  என்று சொல்லிவிட்டோம். கடற்கரை ஓரமாகவே வண்டி சென்றது. புரியில் இருந்து மிக அருகே 35 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இது உள்ளது.



செல்லும் வழியில் சந்திபாகா என்னும் அழகான கடற்கரை வருகிறது. வண்டியை மெதுவாக ஓட்டச் சொல்லி வண்டியில் இருந்தே அதைப் பார்த்துக் கொண்டோம். பின்னர் கோனார்க் சென்று அடைந்தோம். இங்கேயும் மேலே படிகளில் ஏற வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருந்தோம். சொல்லலைனாலும் நான் ஏறுவதாக இல்லை. தூரத்திலிருந்தே படிகளைப் பார்த்த நம்ம ரங்க்ஸுக்கும் ஏறுவது கடினம் எனத் தோன்றி விட்டது. மேலும் அவ்வளவு பெரிய கோயிலைக் கீழே இருந்தே சுற்றிப் பார்ப்பதும் இயலாது எனத் தோன்றியது. அதற்கேற்றாற்போல் அங்கே சக்கர நாற்காலிகளும் கிடைத்தன. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் என்னைப் பார்த்த உடனே சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு வருவார்கள். வேண்டாம்னு சொல்லிட்டுப் போவேன். ஆனால் இன்று இன்னும் சில இடங்கள் பார்க்க வேண்டி இருக்கிறது. அலைச்சல் இருப்பதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திக்கலாம்னு முடிவெடுத்தேன். அவருக்கும் அதுவே சிறப்பு எனத் தோன்ற அவரும் சக்கர நாற்காலியைத் தேர்ந்தெடுத்தார்.

இருவருமே சக்கர நாற்காலியில் சென்றோம். என்னோட சக்கரநாற்காலியைத் தள்ளியவர் வெறுமனே தரதரவென இழுத்துக் கொண்டு போய் நிறுத்தியதோடு சரி. விளக்கங்கள் ஏதும் கொடுக்கவில்லை. ஆனால் ரங்க்ஸின் சக்கரநாற்காலியைத் தள்ளியவர் விளக்கங்கள் கொடுத்தார். ஆகவே எனக்கு ஓட்டியவரிடம் அவர் வந்ததும் சேர்ந்தே போகலாம் என்று சொல்லிவிட்டேன்.

இந்தக் கோயிலின் பெயர் கோனார்க் என்பது கோனா+அர்க் என்னும் இரு சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது.  கோனா என்றால் மூலை அல்லது கோணம் என்னும் பொருள். அர்க் என்பது சூரியனைக் குறிக்கும் வார்த்தை. அர்க்கா என்றால் சூரியன். இது சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் எனத் தெரிய வருகிறது. எப்போது எனச் சொல்ல முடியாக் காலத்திலிருந்து இருப்பதாய்ச் சொல்லப்பட்டாலும் இப்போதைய கோயிலைக் கட்டியவன் கீழைக் கங்க அரசன் நரசிம்ம தேவன் காலத்தில் கி.பி.1250 ஆம் ஆண்டில் என்று சொல்கின்றனர்.

சந்திரபாகா நதிக்கரையில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில் நாளடைவில் நதி பின் வாங்கியதால் காணப்படவில்லை என்கின்றனர். கோயிலும் பெரும்பாலும் சிதைந்தும், அழிந்தும், காற்றில் கரைந்தும் வருகிறது. சூரியனுக்காக உருவாக்கப்பட்ட மாபெரும் ரதமாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில் சௌர வழிபாடு செய்பவர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும். இதைக் கறுப்பு பகோடா என ஐரோப்பிய மாலுமியர் அழைக்கின்றனர். புரி கோயில் வெள்ளை பகோடா என அழைக்கப்படுகிறது.  12 ஜோடிக் கல்லால் ஆன சக்கரங்களைக் கொண்டும் (ஒவ்வொன்றும் மூன்று மீட்டர் என்கின்றனர்) ஏழு குதிரைகள் இழுப்பதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. வலப்பக்கம் நான்கு குதிரைகள், இடப்பக்கம் மூன்று குதிரைகள்.

கலிங்க நாட்டுச் சிற்ப முறைப்படி வடிக்கப்பட்ட இந்தச் சக்கரங்கள் 24 ம், ஒரு நாளின் 24 மணி நேரத்தைக் குறிப்பதாகவும் ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் சொல்கின்றனர். கொன்டாலைட் என்னும் மலைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்தக் கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்கே பார்த்து இருப்பதால், சூரியனின் முதல் கதிர்கள் நேரே கோயிலின் பிரதான மூலஸ்தானத்தில் விழும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மலைக்கற்கள் சிவப்பு மணற்பாறைகளாலும், கறுப்பு கிரானைட் கற்களாலும் ஆகியவை என்கின்றனர்.  நரசிம்ம தேவனின் பனிரண்டு ஆண்டு கால வருமானம் செலவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது.



தொடரும்.

கோயிலின் முழுத் தோற்றம், நன்றி விக்கி பீடியா

Thursday, January 07, 2016

ஒடிஷா(ஒரிஸா) சாலைப்பயணத்தின் சில காட்சிகள்!

கோனாரக்கின் கோபுரத்தை ஒரு தூரப்பார்வையில் எடுத்த படம்.


சாலைகள் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன. கிராமங்களில் கூடக் குப்பைகளைக் காண முடியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள காய்கறித் தோட்டங்களில் விளைந்த பச்சைப்பசேல் என்ற காய்களை அந்தக் கிராமத்தாரே நெடுஞ்சாலைப்பக்கம் கொண்டு வந்து கடை போட்டு விற்பனை செய்கின்றனர். இக்காய்களைப் போட்டி போட்டுக்கொண்டு அக்கம்பக்கம் நகரத்திலிருந்து பெரிய பணக்காரர்கள் கூட வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகள் விற்கும் விலை தான். நேரடியாக விற்கப்படுவதால் லாபமும் நேரடியாக விவசாயிகளுக்கே போய்ச் சேருகிறது. காலிஃப்ளவர் வெள்ளை வெளேர் எனக் காட்சி அளிக்கிறது. நாங்கள் அங்கிருந்து  ஶ்ரீரங்கம் திரும்பி இருந்தால் நம்ம ரங்க்ஸ் ஒரு மூட்டையே காய்கறிகளை வாங்கி இருப்பார். பழங்களும் அப்படித் தான். ஆப்பிள் பழம் சுவையோ சுவை. ஆரஞ்சும் நன்றாக இருக்கிறது. வாழைப்பழமும் இனிப்பு! கூடியவரை பசுந்தாள் உரமே போடுவதாகச் சொல்கின்றனர். ஏனெனில் பசுமாடுகளை அதிகம் காண முடிகிறது.

இதுவும் கோனாரக் தான்.  இதைக் குறித்த விரிவான பதிவு விரைவில் வரும்.



காடுகள் அடர்ந்து காணப்படுவதோடு அவற்றில் துஷ்ட மிருகங்களும் இருப்பதாக ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகள் காண முடிகின்றன. அதோடு யானைகள் கூட்டம் கூட்டமாக வருமாம். நெடுஞ்சாலையிலேயே யானைகளைக் குறித்த அறிவிப்பைக் காண முடிகிறது. யானைகள் வரும்போது  ஒரு கிலோமீட்டர் முன்னாலேயே இருபக்கங்களிலும் போக்குவரத்தை நிறுத்தி விடுவார்களாம். யானைகள் சாலையைத் தாண்டிச் சென்ற பின்னரே மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படும். எங்கள் நெடுஞ்சாலைப் பயணம் மூன்று மணி நேரத்துக்கும் குறையாமல் இருந்தும் எங்களை ஆனையார் வந்து தொந்திரவு செய்யலை என்பதில் கொஞ்சம் வருத்தம் தான்! :)

மஹாநதிப்பாலத்தில் வண்டி செல்கையில். கைப்பிடிச் சுவரைத் தாண்டித் தெரிவது நதி தான். என்றாலும் இறங்கி எடுக்க ஓட்டுநர் அனுமதிக்கவில்லை. 

பாலத்திலிருந்து கீழே இறங்கும்போது வரும் இடத்தில் எடுத்த படம்.

Monday, January 04, 2016

புரியின் தேரோட்டம் குறித்த சில தகவல்கள்!

புரி ஜகந்நாதர் கோயிலின் தேரோட்டம் மிகவும் பிரபலமான ஒன்று. ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த ரத யாத்திரை ஒன்பது நாட்கள் நடைபெறும்.  ஒரு வருடம் பயன்படுத்திய தேரை அடுத்த வருடம் பயன்படுத்த மாட்டார்கள். ஒவ்வொரு வருடமும் தேர் புதிதாக நிர்மாணிக்கப்படுகிறது. தேர்த் திருவிழா ஆஷாட மாதம், நமக்கெல்லாம் ஆனி மாதம் என்றும் தெரியவருகிறது. ஆனால் விக்கிபீடியா ஆடி மாதம் எனக் குறிப்பிடுகிறது. ஆடி மாதம் பௌர்ணமி தினத்தன்று துவங்கும். 16 கலைகளைக் குறிக்கும் வண்ணம்  16 சக்கரங்களைக் கொண்ட  45 அடி உயரமான சிவப்பு. மஞ்சள் நிறத் தேரில் ஜகந்நாதரும், 14 மன்வந்திரங்களைக் குறிக்கும் வண்ணம் 14 சக்கரங்களைக் கொண்ட 44 அடி உயரமான  சிவப்பு, பச்சை நிறத் தேரில் பாலபத்திரரும், 12 மாதங்களையும் குறிக்கும் வண்ணம் 12 சக்கரங்களைக் கொண்ட  43 அடி உயரமான சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்திரா தேவியும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வீதி வலம் வருவார்கள்.  ஆண்டு தோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் செய்யப்படுகிறது.  தேரோடும் வீதிகள் "ரத்னவீதி" எனப்படுகின்றன. உண்மையிலேயே அகலமான வீதிகளாகவே இருக்கின்றன. இந்த வீதிகளைப் புரி ராஜா கஜபதி என்பவர் தங்கத் துடைப்பத்தால் தேரோட்டம் துவங்கும் முன்னர் பெருக்கிச் சுத்தம் செய்வாராம். முதலில் பாலபத்திரர் தேரும், பின்னர் சுபத்ரா தேவி தேரும், கடைசியாக ஜகந்நாதர் தேரும் கிளம்பும்.



நந்திகோஷ் ரதம், படம் உதவி விக்கிபீடியா

ரதயாத்திரையைப் பார்ப்பது வாழ்வின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. புரி கோயிலின் கருவறையில் இருக்கும் மூர்த்தங்கள் கோயிலின் சிங்கத்வார் எனப்படும் வாயில் வழியாக வெளியே கொண்டு வரப்படுகின்றன.  அதிக கனம் வாய்ந்த மர மூர்த்தங்கள் என்பதால் பலர் சேர்ந்து தூக்கி வருகிறார்கள்.  சுமார் எட்டடி உயரத்திற்கு ஜகந்நாதர் காணப்படுகிறார். அவரை நந்திகோஷா அல்லது கருடத்வஜாஎனப்படும் அவருடைய தேரிலும், பாலபத்திரரை தலத்வஜா எனப்படும் அவருடைய தேரிலும், சுபத்ராதேவியை த்வார்பதாலனா அல்லது பத்மத்வஜா எனப்படும் அவருடைய தேரிலும் அமர்த்தப்படுகின்றனர்.  சுபத்ரா தேவியின் தேரில் காணப்படும் கறுப்பு நிறம் சக்தி தேவியின் நிறத்தைக் குறிக்கிறது என்கின்றனர். சுபத்ரா தேவியை சக்தியின் அவதாரமாகக் கருதுகின்றனர்.  கறுப்பு நிறத்துடனும் பெரிய கண்களுடனும் காணப்படும் ஜகந்நாதரை சாம வேதத்தின் இறைவனாக விஷ்ணு சொரூபமாக வழிபடுகின்றனர்.  பலராமன் ரிக்வேதத்தைக் குறிக்கும் சிவ சொரூபமாகவும், சுபத்ரா தேவி மஞ்சள் நிறத்துடன் யஜுர் வேதத்தைக் குறிக்கும் சக்தி சொரூபமாகவும் வழிபடப்படுகிறாள்.  ஜகந்நாதரின் தேரோட்டியை தாருகா எனவும், (இவரும் மர வடிவமே) தேரை இழுக்க உதவும் வடத்திற்குச் சங்கசூடா என்றும் பெயர்.  பலராமரின் தேரோட்டிக்கு மாதவி என்றும் தேர் வடத்திற்கு வாசுகி என்றும் பெயர். சுபத்ராவின் தேரோட்டி அர்ச்சுனன், வடத்தின் பெயர் ஸ்வர்ணசூடா ஆகும்.


தலத்வஜா ரதம், படம் உதவி விக்கிபீடியா

சிங்கத்வார் வழியாகக் கிளம்பும் தேர் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள குண்டிச்சா தேவி ஆலயம் வரை இழுத்துச் செல்லப்படுகிறது. வழியில் பல கோயில்களின் தேர்களும் இந்த ஊர்வலத்தில் சேர்ந்து கொள்கின்றன. மேள, தாளங்கள், வேத மந்திரங்கள், பக்திப்பாடல்களுடன் தேர் மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறது. ஒன்பது நாட்கள் குண்டிச்சா தேவி கோயிலில் தங்கி இருக்கும் ஜகந்நாதருக்கும், பாலபத்திரர் சுபத்ரா தேவிக்கும் அங்கே சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பத்தாம் நாள் தேர் அங்கிருந்து திரும்புகிறது.  நண்பகல் நேரம் புரியின் கோயில் சிம்மத்வார் வரும் தேர்கள் அங்கேயே நிறுத்தப்படுகின்றன. ஜகந்நாதருக்கும் அவருடன் கூட இருக்கும் மற்ற இருவருக்கும் ராஜாங்கக் கோலத்தில் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஜகந்நாதருக்குத் தங்கத்தாலான கைகள் பொருத்தப்பட்டு தங்கச் சங்குச் சக்கரமும் வைக்கப்படுகின்றன. அன்றைய தினம் ஏகாதசி நாளாக இருக்கும்.  இந்த ஏகாதசி தினத் திருக்காட்சி கனாவேஷா என அழைக்கப்படுகிறது. மறுநாள் துவாதசி அன்று ஆலயத்தினுள் எடுத்துச் சென்று  நான்கடி உயரம், 13 அடி அகலம், 16 அடி நீளம் கொண்ட ரத்தினச் சிம்மாதனத்தில் அமர்த்துவார்கள். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்படும். வலம் வந்து வணங்குவார்கள். இத்துடன் புரி ரத யாத்திரை நிறைவு பெறும்.



த்வார்பதாலனா அல்லது பத்மத்வஜா

படம் உதவி விக்கி பீடியா

Wednesday, December 30, 2015

சாக்ஷி கோபாலனை மறந்தது எப்படி? :(

இப்போக் கொஞ்சம் ஜக்குவைப் பத்தி நிறுத்திக் கொண்டு சாக்ஷி கோபாலனைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கோயில் புவனேஸ்வரிலிருந்து புரி செல்லும் நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ளது. கலிங்க நாட்டு முறைப்படி கட்டப்பட்டது இந்தக் கோயில். இங்கே உள்ளே படம் எடுக்க அனுமதிக்கவில்லை. வெளியே எடுத்த படம் மட்டும் பகிர்ந்துள்ளேன்.  முதலில் இங்கே தான் சென்றோம்.

இதற்குக் கர்ணபரம்பரைக் கதை ஒன்று இருக்கிறது. பின்னால்  சாக்ஷி கோபாலன் என்னும் பெயரிடப்பட உள்ள  ஓர் இளைஞன் அந்தக் கிராமத்தின் தலைவனின் மகளைக் காதலிக்கிறான். எல்லாப் பெற்றோரையும் போல இங்கேயும் இந்தக் காதல் ஏற்கப்படவில்லை. கிராமத் தலைவனுக்குத் தன்னை விட வசதியிலும், அந்தஸ்திலும் குறைந்தவனுக்குத் தன் மகளை மணமுடிக்கும் எண்ணம் இல்லை.  ஆனாலும் அனைவருமாகச் சேர்ந்து அங்கிருந்து காசி நகருக்குப் புனிதப் பயணம் செய்கின்றனர். செல்லும் வழியில் கிராமத் தலைவன் கடுமையாக நோய்வாய்ப்பட கிராமத்து மக்கள் அவனைத் தனியே தவிக்க விட்டு முன்னேறுகின்றனர் ஆனால் சாக்ஷி கோபாலன் அந்த கிராமத் தலைவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறான். அப்போதைய சூழ்நிலையில் கிராமத் தலைவன் மனம் இளகித் தன் மகளை அவனுக்கே மணம் முடிப்பதாக வாக்குக் கொடுக்கிறான்.

பின்னர் அனைவரும் மீண்டும் தங்கள் கிராமத்துக்குத் திரும்புகின்றனர். இளைஞன் கிராமத் தலைவனிடம் சென்று அவன் வாக்குறுதியை நினைவூட்டுகிறான். ஆனால் இப்போது கிராமத் தலைவனோ தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும், சொன்னதற்கு சாக்ஷி ஏதேனும் இருந்தால் கூட்டி வரும்படியும் இளைஞனிடம் சொல்கிறான். இளைஞன் தான் அனுதினமும் வணங்கும் கோபாலனிடம் சென்று முறையிட இறைவனும் இளைஞனின் உள்ளார்ந்த பக்தியில் மனம் உருகி அவனுக்கு சாக்ஷி சொல்ல வருவதாகக் கூறுகிறான். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறான். இளைஞன் முன்னே செல்ல வேண்டும். கோபாலன் பின் தொடர்வான். இளைஞன் திரும்பியே பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் கோபாலன் அங்கேயே நின்றுவிடுவான். இதுதான் நிபந்தனை. இருவரும் ஒத்துக்கொள்ள இளைஞன் முன்னே நடக்கிறான். பின்னால் காலடிச் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 

அங்கிருந்த ஒரு மணற்குன்றைத் தாண்டிச் செல்கின்றனர் இருவரும். அப்போது திடீரெனக் காலடிச் சப்தம் கேட்காமல் போகவே இளைஞனுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. ஆகவே திரும்பிப் பார்த்துவிடுகிறான். அக்கணமே கோபாலன் சாக்ஷி சொல்ல வந்த சாக்ஷி கோபாலன் ஒரு மணல் சிற்பமாக மாறி அங்கேயே நிலை கொண்டு விடுகிறான். (பின்னாட்களில் இந்தப் பெயர் தான் இளைஞனுக்கும் வர நேரிட்டது.) இறைவனை சாக்ஷிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் மனம் வருந்திய இளைஞனுக்கு கிராமத்தார் ஆறுதல் கூறுகின்றனர். இத்தனை நாட்கள் இங்கே எவ்வித விக்ரஹங்களும் இல்லா நிலைமையில் இவ்வளவு தூரம் வந்து இங்கே அர்ச்சாரூபத்தில் அருள் பாலிக்கும் சாக்ஷி கோபாலனை விடப் பெரிய சாக்ஷி தேவையா என்று கிராமத் தலைவனிடம் வாதிடவே அவனால் பேச முடியவில்லை. தன் மகளை இளைஞனுக்கே திருமணம் செய்து கொடுத்து சாக்ஷி கோபாலனைச் சுற்றிக் கோயில் எழுப்பி அந்தக் கோயிலின் முதல் பூசாரிகளாகத் தன் மருமகனையும் நியமிக்கிறான். 

இதைத் தவிரவும் புராண ரீதியான ஒரு தகவலும் சொல்லப்படுகிறது. கிருஷ்ணனின் பேரன் ஆன வஜ்ரன் என்பவனால் ப்ரஜா எனப்படும் ஒரு சிறப்பான அழிக்க முடியாததொரு வகைக் கல்லால் கிருஷ்ணனின் 16 வடிவங்கள் செதுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அந்த வடிவங்கள் மதுரா நகருக்குள்ளும் அதைச் சுற்றியும் கோயில்கள் கட்டிப்பிரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது.  அவற்றில் முதல் மூன்று ப்ரஜமண்டலச் சிற்பங்கள் ஆன ஶ்ரீஹரிதேவர் என்பவர் கோவர்தனத்திலும், கேஷவ தேவர் மதுராவிலும் ஶ்ரீபலதேவர் பலதேவோவிலும், ஶ்ரீகோவிந்தா விருந்தாவனத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.  இவற்றைத் தவிர இரு நாதர்கள் எனப் பெயரிடப்பட்ட ஶ்ரீநாத் ஜி முதலில் கோவர்தனத்தில் இருந்தவர் பின்னர் ராஜஸ்தானின் நாதத்வாருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் செய்யப்பட்ட ஶ்ரீகோபிநாத் ஜெயப்பூரில் கோயில் கொண்டிருக்கிறார்.  இரண்டு கோபால மூர்த்தங்களில் ஒன்று ராஜஸ்தானின் கரோலியிலும், மற்றொன்று சாக்ஷி கோபாலனாக ஒரிசாவின் புரி மாவட்டத்திற்கும் கொண்டு சென்று வழிபடப்பட்டு வருகின்றது. 

மேலும் ஒரிசா ராதாகிருஷ்ண பக்திக்கும் பிரேமையைக் கொண்டாடுவதிலும் பெயர் போனது. இந்தக் கோயிலிலும் அப்படியே உற்சவங்கள் ராதையை முன்னிறுத்தியே கொண்டாடப்படுகின்றன. இந்தக் கோயிலில் ஆரம்பத்தில் ராதையின் சிற்பம் இல்லை என்றும் பின்னர் நாளாவட்டத்தில் அந்த ஊரில் பிறந்த லக்மி என்னும் பெண்ணை ராதையின் மறு அவதாரம் என அந்த ஊர்க்காரர்கள் போற்றிக் கொண்டாடி வந்ததாகவும் சொல்கின்றனர்.  ராதை இல்லாமல் கிருஷ்ணனைப் பிரித்துப் பார்க்க விரும்பாத பக்தர்களால் வட இந்தியாவிலிருந்து ராதையின் சிற்பம் வரவழைக்கப்பட்டு இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது.  வட இந்திய முறைப்படி காக்ராவும், சோளியும் அணிந்திருந்த ராதையின் விக்ரஹத்திற்கு ஒரிச முறைப்படியான சேலை அணிவிக்கப்பட்டது. அப்போது அதுவரை தெரியாதிருந்த ராதையின் பாத தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கவே அதை நல்லதொரு சகுனமாக எடுத்துக் கொண்டு ஆராதித்து வருகின்றனர்.  இது ஒரு நவமி தினத்தில் நடைபெற்றதால் இந்த நாளை "அம்லா நவமி" எனக் கொண்டாடுவதோடு அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்கையில் ராதையின் பாதங்களைத் தொட்டு வணங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். 

Tuesday, December 29, 2015

ஜக்குவைப் பற்றிய சில செய்திகள்!

புரி, ஜகந்நாதர் கோயில் க்கான பட முடிவு

பின்னால் கூடி நின்ற கூட்டம் அவ்வப்போது, "ஹோ" :ஹோ" என உற்சாகக் கூச்சல் எழுப்பி ஜக்குவை அழைத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூச்சல் ஒலி தூக்கிவாரிப் போட வைத்தது.  ஜக்கு தூங்கிக் கொண்டிருந்தால் கூட எழுந்து வந்து தான் ஆகணும். அப்படி ஒரு கூச்சல்! துவாரகையில் "ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!" என்றே கூறுவார்கள். மென்மையாக இருக்கும். கூட்டம் இருந்தாலும் நெரிசல் இருக்காது. வெளியே இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை!  ஆனால் இங்கே சாமானிய மக்களும் அதிகம் காணப்பட்டனர். அனைவரும் ஜக்குவைக் காண வேண்டிக் காத்திருந்தனர்.

சற்று நேரத்தில் கதவு திறக்கப் போகும் அறிகுறிகள் தெரிய கூட்டம் பித்துப் பிடித்தது போல் ஆகிவிட்டது. தள்ளு முள்ளு ஆரம்பிக்கும் போல் இருந்தது. எங்கள் வழிகாட்டி இளைஞர் என் அருகேயே எனக்குப் பாதுகாப்பாக நின்று கொண்டார். சட்டெனக் கதவு திறக்கப்பட என்னைப் பிடித்து முன்னால் தள்ளி நன்கு தரிசனம் செய்ய உதவினார் வழிகாட்டி இளைஞர்!. பலபத்திரர், சுபத்ரா, ஜகந்நாதர் ஆகியோரை அடையாளம் காட்டித் தரிசிக்க உதவினார். மரத்தால் ஆன இந்தச் சிற்பங்கள் பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன. இப்போது சமீபத்தில் தான் புதுப்பித்திருப்பதால் தரிசனம் செய்வதை மிக விசேஷமாகச் சிறப்பித்துக் கூறுகின்றனர். தரிசனம் முடிந்ததும், எங்கள் பின்னால் இருந்த கதவும் திறக்கப்பட்டுப் பொது தரிசனத்திற்காகக் காத்திருந்த மக்கள் திபு திபுவென உள்ளே புகுந்தனர். நல்லவேளையாகக் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொள்ள இருந்த என்னை வழிகாட்டி இளைஞர் தரதரவெனத் தோள்களைப் பற்றி இழுத்து வெளியே கொண்டு வந்தார்.

ரங்க்ஸ் சமாளித்துக் கொண்டு முன்னே சென்றார். என்னை இழுத்துக் கொண்டு வழிகாட்டி வெளியே வந்தார். ஜக்குவைப் பார்த்துச் சொல்ல நினைத்தது எல்லாம் மறந்து போக ஜக்குவைப் பார்த்தது மட்டுமே நினைவில் இருக்க நானும் வெளியேறினேன். நன்றாகப் பார்த்தேன் தான்! ஆனால் அந்த நேரம் ஏன் ஒன்றுமே கேட்கத் தோன்றுவதில்லை? புரியலை!  இப்போது இந்தக் கோயிலின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போமா?

பனிரண்டாம் நூற்றாண்டில் கீழைக்கங்க குல அரசன் ஆனந்த வர்மனால் கட்டப்பட்டதாக் கூறப்படும் இந்தக் கோயிலின் கட்டுமானம் கொஞ்சம் பௌத்த முறைப்படியும் கொஞ்சம்  கலிங்க தேசக் கட்டுமானத்திலும் கட்டப்பட்டது. பழமையான இதன் வரலாறு வருமாறு:

புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் என்னும் மன்னன் சிறந்த பக்தன். மஹாவிஷ்ணுவைத் தியானித்து வந்தவன் கனவில் விஷ்ணு தோன்றி தனக்கு ஒரு கோயில் கட்டித் தரும்படி கேட்டார்.  சிற்பத்தை எதனால் செதுக்குவது என யோசித்த மன்னனிடம், கடற்கரையில் கோயில் அமைந்திருப்பதால் கடலில் மிதந்து வரும் பொருளைக் கொண்டு செய்யும்படி மன்னனிடம் ஆக்ஞையிட்டார் மஹாவிஷ்ணு. கடல் பகுதியில் மன்னன் தன் காவலர்களை நிறுத்தி வைத்திருந்தான். கடலில் ஒரு பெரிய மரக்கட்டை மிதந்து வரக் காவலர்கள் அதை எடுத்துச் சென்று மன்னனிடம் ஒப்படைத்தனர். மன்னன் அந்த மரக்கட்டைக்குச் சிறப்பான வழிபாடுகளை நடத்திச் சிறந்த தச்சர்களை வரவழைத்தான்.  தச்சர்களின் தலைவர் தன் உளியை எடுத்து அந்த மரத்தில் வைக்க உளி உடைந்து விட்டது. மன்னன் சகுனம் சரியில்லை என மனம் வருந்த அங்கே ஆண்டவனே முதிய தச்சன் வடிவில் தோன்றினான்.

மன்னனிடம் 21 நாட்களில் வேலையை முடித்துத் தருவதாகக் கூறினான் இறைவன். தனக்கு ஒரு அறையை ஒதுக்கித் தரும்படியும் தான் வேலையை முடிக்கும்வரை தான் இருக்கும் அறைக்கதவைத் திறக்கக் கூடாது என்றும் கூறினான். அரசன் ஒப்புக்கொள்ள ஓர் அறைக்குள் புகுந்த தச்சன் மும்முரமாக வேலையைத் தொடங்கினான். தொடர்ந்து பதினைந்து நாட்கள் உளிச்சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அடுத்து மூன்று நாட்கள் எவ்விதமான சப்தமும் இல்லாமல் போகவே தச்சன் தூங்கிவிட்டான் போலும் என நினைத்த அரசன் கதவைத் திறந்து விட்டான். உள்ளே இருந்த ஈசனுக்குக் கோபம் வந்தது. தன் சுய உருவைக் காட்டினார். மன்னன் பொறுமையில்லாமல் கதவை அவசரப்பட்டுத் திறந்துவிட்டதால் இந்தக் கோயிலில் ஸ்தாபிக்கப்படும் சிலைகள் அனைத்தும் அரைகுறையாகவே இருக்கும் என்றும் அப்படியே பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்யுமாறும், இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் இதன் காரணத்தை அறிந்து கொண்டு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் செல்வார்கள் என்றும் கூறினார். அந்த அறையில் அரைகுறையாகச் செதுக்கப்பட்ட பலராமன், சுபத்ரா, ஜகந்நாதர் சிலைகள் காணப்பட்டன.

மன்னனால் அவை பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவன் காலத்திற்குப் பிறகுக் கோயில் பாழடைந்து போக அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. எல்லாவற்றையும் கடல் மூழ்கடிக்க, பின்னர் கி.பி. பனிரண்டாம் ஆண்டில் அப்போதைய அரசன் அனந்தவர்மன் வாளி என்பவனால் கட்டப்பட்டுப்பின்னர் அவன் பேரன் அனங்காபி மாதேவ் என்பவனால் இப்போது இருக்கும் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலைக்கட்ட கங்கையிலிருந்து கோதாவரி வரையுள்ள கலிங்க சாம்ராஜ்ய மக்களின் பனிரண்டு வருட வரிப்பணம் செலவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  இந்தக் கோயில் பஞ்சரத முறையில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். கடற்கரையிலேயே துவாரகை அமைந்திருப்பது போல் இந்தக் கோயிலும் கடற்கரையிலேயே அமைந்துள்ளது  இங்குள்ள கடலில் நீராடி இறைவனை வழிபடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.  பார்கவி, சர்வதீர்த்த ம்ஹி என்னும் நதிகளால் இந்தக் கோயில் சூழப்பட்டு ஒரு வலம்புரிச் சங்கைப் போல் தோற்றம் அளிப்பதாகவும் சொல்கின்றனர்.

இந்தக் கோயிலின் கொடிமரத்தை பதிதபாவன பாவன என அழைக்கின்றனர். ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் இது அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலின் மேற்கே எட்டு உலோகக்கலவையால் செய்யப்பட்ட நீலச் சக்கரம் ஒன்று உள்ளது. இந்தக் கொடிமரத்தையும், சக்கரத்தையும் வணங்கினாலே ஜகந்நாதரைத் தரிசித்ததற்குச் சமம் என்கின்றனர். ராமாயணத்தில் ராமனும், மஹாபாரதத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து பிரார்த்தனைகள் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

புரி, ஜகந்நாதர் கோயில் க்கான பட முடிவு


படங்களுக்கு நன்றி கூகிளார்

Monday, December 28, 2015

ஜக்குவைப் பார்க்கச் சென்றோம்!

கொஞ்சதூரம் போக வேண்டி இருந்தது. தேநீர்க்கடை மாதிரியே தெரியாத ஒரு கடை அப்போது தான் திறந்து வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். ஒடிஷாவில் தமிழ்நாட்டுக் கலாசாரங்கள் கலந்திருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.  அங்கே போய்த் தேநீர் எங்கே கிடைக்கும் என்று கேட்டோம். கடைக்காரர் அங்கிருந்த பெஞ்சைக் காட்டி உட்காரச் சொன்னார். பத்து நிமிடத்தில் தயார் செய்து தருவதாகச் சொன்னார். உடனே தேநீர் வேண்டாம், காஃபி இருந்தால் நல்லது என்றோம். சரி என ஒத்துக் கொண்டார். எதிரேயே வீடு. அங்கிருந்து அவரின் இரு பையர்களும் வந்து உதவ விரைவில் அடுப்பை மூட்டிக் காஃபி போட்டுக் கொடுத்தார். சர்க்கரை சேர்த்த காஃபியை முதலில் கொஞ்சமாக ஒரு சின்னத் தம்பளரில் ஊற்றி எங்களை ருசி பார்க்கச் சொல்லிச் சரியாக இருக்குனு சொன்னதுமே ஃப்ளாஸ்கில் ஊற்றினார்.

அதே போல் இங்கேயும் சித்திரகூடத்தில் இருந்தாப்போல் ஆட்டோக்கள் அனைத்துமே பெரிய பெரிய ஷேர் ஆட்டோக்கள். அவற்றை நமக்கு மட்டும் தேவை என்றால் சித்திரகூடத்தில் செய்தாப்போலயே, இங்கேயும், "ரிஜர்வ்" செய்துக்கணும். :) முதல்நாள் சாப்பிட்டுவிட்டு வரும்போது இதைக் குறித்து அறிந்தேன். காஃபியை வாங்கிக் கொண்டாச்சு. மறுபடி விடுதிக்குச் சென்றோம். கீழே உள்ள இருபது படிகளை ஏறி மேலே முதல் தளத்துக்கு வந்து அங்கிருந்து ஐந்தாம் தளம் ஏற வேண்டும். எப்போவுமே இறங்குவதை விட ஏறுவது சிரமம். வழியில் ஒருத்தருக்கு எங்களைப் பார்த்ததுமே கவலை வந்து விட்டது! முடியுமா எனத் திருப்பித் திருப்பிக் கேட்டார். வேறே வழியே இல்லையே! ஏறித் தானே ஆகணும்னு ஏறினோம். மேலே போய்க் காஃபியைக் குடித்துவிட்டு வெந்நீர் வருகிறதா என்று பார்த்தால் நாங்கள் தங்கி இருந்த அறையின் குளியலறையில் கீசர் வேலை செய்யவே இல்லை. தண்ணீரே வரலை. ஆகவே இரண்டாம் எண் அறைக்குப் போய் அங்கே குளித்து வெளியே செல்லத் தயார் ஆனோம் இருவரும்.

விடுதிக் காப்பாளர் வரலையேனு தொலைபேசி விசாரித்ததில் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். எட்டேகால் மணிக்கெல்லாம் வந்தும் விட்டார். அவரிடம் நாங்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லிப் புலம்பி விட்டு வண்டி எப்போது வரும்னு கேட்டோம்.  அன்றைய தினம் திங்கட்கிழமை. முந்தைய இரு தினங்கள் சனி, ஞாயிறாக இருந்ததால் அந்த வளாகத்தில் உள்ள அனைவரும் தண்ணீரை முழுக்கப் பயன்படுத்தி இருப்பதால் இந்தப் பிரச்னை என்று சொன்னார். அப்படியே இருந்தாலும் முதல் நாளே மோட்டார் போட்டிருக்க வேண்டும். என்னிக்கோ வந்து தங்கும் நமக்கே இவ்வளவு கஷ்டமா இருந்ததே, மத்தவங்களுக்கு இதனால் பாதிப்பு இல்லையானு மண்டை காய்ந்தது. சற்று நேரத்தில் வண்டி கீழே காத்திருப்பதாகத் தகவல் வந்தது. ஓட்டுநரை மேலே வரச் சொன்னார் காப்பாளர். மறுபடி ஐந்து மாடி இறங்க வேண்டுமே! அலுப்பாக இருந்தது. லிஃப்ட் சரியாகப் பத்து மணி ஆகும் எனவும் மாலை நாங்கள் வருவதற்குள்ளாகச் சரியாகிடும் என்றும் சொன்னார் காப்பாளர்.

ஓட்டுநர் அதற்குள்ளாக மேலே வர அவரிடம் எங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை ஒப்படைத்த காப்பாளர் முதலில் தென்னிந்திய உணவு விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று காலை உணவை நாங்கள் சாப்பிட ஏற்பாடு செய்யும்படியும் கூறினார். ஓட்டுநர் வேகமாகக் கீழே இறங்க நாங்கள் ஒவ்வொரு படியாக இறங்கிச் சென்றோம். முதலில் ஜக்குவை ( புரி ஜகந்நாதரை) பார்த்துடலாம்னு சொன்னோம். போகும் வழியிலேயே தென்னிந்திய உணவு விடுதி வரும் என்றும் அங்கே காலை உணவைச்சாப்பிடலாம்னும் சொன்னார் ஓட்டுநர்.  இளைஞர்! பொறுப்பாகவும், பணிவாகவும் இருந்தார்.  வழியில் தென்னிந்திய உணவு விடுதி கண்ணிலேயே படவில்லை. கொஞ்சம் ஏமாற்றம் தந்தது. ஓட்டுநர் உணவு விடுதி பூட்டி இருப்பதாகவும் திறக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டிவிட்டு வழியில் இருக்கும் வேறொரு ஓட்டலுக்குக் கூட்டிச் சென்றார்.

அந்த ஓட்டலில் பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் உணவு தயாரிப்பதாகக் கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தது. ஆங்கிலம், ஒரியா, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் போட்டிருந்தார்கள். அநேகமாக ஆங்கிலமும், ஹிந்தியும் தெரிந்தாலே போதுமானது. ஒரியா தெரிய வேண்டும் என்பதில்லை. ஆகவே எங்களுக்குச் சிரமம் தெரியவில்லை. அங்கே சென்று பூரி, பட்டாணி சப்ஜியோடு சாப்பிட்டுவிட்டுத் தேநீர் குடித்தோம். ஒரியர்களும் காலை உணவோடு வடை சாப்பிடுகின்றனர். நம்ம ஊரில் செய்யறாப்போல் அரைத்த மாவில் வடைகள் சூடாகத் தட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சூடாக விற்பனையும் ஆகின்றன. பின்னர் பூரியை நோக்கிப் பயணித்தோம். புவனேஸ்வரிலிருந்து கிட்டத்தட்ட 60 கி.மீ தூரத்தில் உள்ளது புரி ஜகந்நாதர் ஆலயம்.




இந்தக் கோயிலில் கண்ணனுக்கும், பலராமன் மற்றும் சுபத்ராவுக்கும் தான் முக்கியத்துவம். இங்கேயும் எல்லா வட இந்தியக் கோயில்களைப் போலவே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நடை சார்த்திப் பின் ஆரத்தியோடு திறக்கின்றனர்.  நாங்கள் சென்றபோது காலை பதினோரு மணி இருக்கும். அதற்குள்ளாக எனக்கு ஒரிசாவில் இருக்கும் என் நாத்தனார் பையர், மகள் ஆகியோரிடமிருந்து எஸ் எம் எஸ் செய்திகள் வந்தன. புரி கோயிலில் களவு அதிகம் போகும் என்றும் கைப்பை, பர்ஸ், பணம் ஆகியன கூட்டத்தில் பிடுங்கப்படும் எனவும், நகைகள் அணிய வேண்டாம் எனவும் செய்திகள் வந்தன. அதோடு கோயிலின் பாண்டாக்கள் அதிகம் பணம் பிடுங்குவார்கள் எனவும் கூறினார்கள்.  என் மைத்துனரும் அதைக் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் கூடியவரை பாதுகாப்பாகவே இருந்தோம்.  ஆகவே இதைக் குறித்து அதிகம் கவலைப்படவில்லைமேலும் அலைபேசிகள், தோல் பொருட்கள் போன்றவையும் அனுமதி இல்லை.

பூரியில் வண்டியிலிருந்து இறங்கும்போதே ஒரு பண்டா எங்களை அணுகினார். இளவயதுக்காரர் தான். தான் எங்களைக் கூட்டத்தில் இடிபடாமல் அருகே அழைத்துச் சென்று தரிசனம் பண்ணி வைப்பதாகவும், ஒரு ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தால் போதும் எனவும் கூறினார். எங்கள் ஓட்டுநரிடம் பேசிவிட்டு அவர் சரி என்று சொல்லவும் அந்த இளைஞரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டோம்.  அங்கிருந்து கோயில் இருக்கும் இடம் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் என்பதால் அவரே ஒரு ஆட்டோவை எங்களுக்குத் தனியாக "ரிஜர்வ்" செய்து கொடுத்தார். எங்கள் அலைபேசி போன்ற பொருட்களை வண்டி ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் அந்த ஆட்டோவில் சென்று கோயில் வாசலில் இறங்கினோம். அந்த வாசலில் அதிகக் கூட்டமில்லை. பிரதான வாயிலில் தான் கூட்டம் அதிகம் இருக்கும் என்றனர். மேலும் இந்த வாயிலில் இருந்து கருவறை அருகே இருப்பதாகவும் தெரியவந்தது.

பாதுகாப்புச் சோதனைகள் முடிந்தன. நாங்கள் கோயிலின் பிரகாரத்தினுள் நுழைந்தோம்.  அதற்கும் சில, பல படிகள் ஏறணும். பிரகாரம் சென்றதும் அங்கிருந்து கருவறை செல்லும் முன்னர் ஏதேனும் பிரசாதம் வாங்கிக்கணும் என நிர்ப்பந்திக்கப்பட்டோம். சரினு ரூ. 200/- கொடுத்து ஒரு பிரசாதம் வாங்கிக் கொண்டோம். பிரசாதம் இருந்தால் உள்ளே செல்வதும் விரைவில் நடக்கும் என்பதும் காரணம். வழிகாட்டி இளைஞர் எங்களைக் கருவறைக்குச் செல்லும் வழியில் கூட்டிச் சென்றார். அங்கே மேலும் இருபது படிகள், ஒவ்வொன்றும் ஒன்றரை அடி உயரத்தில் அமைந்திருந்தன. ஏறினதும் கருவறைக்குச் செல்லலாம் எனத் தெரிந்தது. அந்தப் படிகளையும் ஏறினோம். கருவறைக்கு மிக அருகே உள்ள இடத்திற்குச் சென்று விட்டோம். கிட்டத்தட்ட அது அர்த்தமண்டபம் போல! ஆனால் முதலில் எங்களைக் காவல்காரர்கள் உள்ளே விடவில்லை. அப்புறம் நம்ம வழிகாட்டி வந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

அந்த இடம் மட்டும் தனியாகச் சுற்றிலும் கம்பிக்கிராதிகள் போட்டுக் கதவுகளோடு இருந்தது. சந்நிதியின் வாயில் அப்போது மூடி இருந்தது. கிட்டத்தட்ட 20, 25 அடி உயரம் கொண்ட கதவுகள். கருவறைக்கு நேரே நாங்கள் நின்று கொண்டோம். எங்களுக்குப் பின்னர் இதே போன்ற வழிகாட்டிகளின் உதவியோடு வந்த சிலரும் நின்று கொண்டனர்.  இதன் பின்னால் பொது தரிசனத்திற்கு ஆயிரக்கணக்காக மக்கள் கூடி நின்று கொண்டிருந்தனர். சந்நிதி திறந்த சிறிது நேரத்தில் அந்த வாயிலும் திறந்துவிடப்படும் எனவும் அப்போது கூட்டம் தாங்காது என்றும் நெரிசலில் மாட்டிக்காமல் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டோம். ஏகாக்கிர சிந்தையோடு சந்நிதி திறக்கப்போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இந்தக் கோயிலின் ஒரு பிராகாரத்தில் ஶ்ரீமத் ராமானுஜர் நடந்திருப்பதாக மின் தமிழில் நா.கண்ணன் கூறி இருந்தார். அது பற்றி விசாரித்தால் யாருக்கும் புரியலை!  நா.கண்ணன் ஜக்குவை விசாரித்ததை மட்டும் அவரிடம் தெரிவிக்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

Sunday, December 27, 2015

ஐந்து மாடிகள் ஏறி இறங்கினோம்!

புவனேஸ்வர் க்கான பட முடிவு

புவனேஸ்வரை/புபனேஸ்வர் முதல் முதல் பார்க்கையில் நன்கு இருட்டி விட்டது. சொல்லவே மறந்துட்டேனே! தமிழ்நாட்டை விட்டு வடகிழக்கில் செல்லச் செல்ல சீக்கிரம் இருட்டி விடுகிறது. மூன்று மணிக்கே தன் கதிர் வீச்சைக் குறைத்துக் கொள்கிறான் சூரியன். நாலு, நாலரை மணிக்கெல்லாம் கையெழுத்து மறைந்து ஐந்து மணிக்கு நன்கு இருட்டி விடுகிறது! ஆறு மணிக்கெல்லாம் நம்ம ஊர் எட்டு மணி மாதிரி இருட்டு கப்பி விடுகிறது. நாங்கள் போய்ச் சேர்ந்த அன்றிரவு ஏழு மணிக்கெல்லாம் சாலையில் விடுதியை நோக்கிப் பயணம் செய்கையில் ஒன்பது, பத்து மணி ஆகிவிட்ட மாதிரி ஒரு நினைப்பு! சாலைகள் சுத்தமாக இருந்தன! எங்கும் ஒளி வெள்ளம்! சுத்தமான நடைமேடைகள். அதில் எந்தவிதமான ஆக்கிரமிப்புகளும் இல்லை. நடைமேடையைத் தாண்டி தெருக்களில் இடம் பெற்றிருந்த கட்டிடங்கள்! எல்லாம் ஒரு ஒழுங்காக இருந்தன.

புவனேஸ்வர் நகரமே திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நகரம் என்பார்கள். சுதந்திரம் அடைந்து ஒரு வருடம் வரை அதாவது 1948 ஆம் ஆண்டு வரை ஒரிசா/ஒடிஷா வின் தலைநகரமாகக் கட்டாக் தான் இருந்தது. அதன் பின்னரே புவனேஸ்வர் ஒடிஷாவின் தலைநகரமாக மாறியது. இதை நிர்மாணித்தவர்  Otto Königsberger என்னும் ஜெர்மானியர்.  ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகருக்கு அடுத்தபடி இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட புதுமையான நகரமாக புவனேஸ்வர் விளங்குகிறது. அதற்காக இது ஒண்ணும் மிகப் புதுமையான நகரமும் இல்லை. கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டு பழமையான வரலாறு கொண்டது இது. அவ்வளவு ஏன்? மஹாபாரதத்தில் வரும் சேதி/செடி வம்சத்தினரின் தலைநகராக விளங்கி இருக்கிறது. 2BCE ஆண்டிலேயே  இதன் அருகிலேயே இருக்கும் சிசுபால்கர் என்னும் நகரம் அப்போது தலைநகராக இருந்ததாகத் தெரியவருகிறது.

இந்த நகரம் திருபுவனேஸ்வரம் என்னும் பெயரில் இருந்து வந்ததாகவும் பின்னர் புவனேஸ்வர் என மாறியதாகவும் சொல்கின்றனர். மூன்று புவனங்களையும் கட்டி ஆளும் அந்த ஈசனின் நகரம் என்னும் பெயரில் இது வழங்கப்படுகிறது. இதைக் கோயில்களின் நகரம் என்றும் சொல்கின்றனர். பழமையான பல கோயில்கள் இங்கு உள்ளன. எல்லாக் கோயில்களுக்கும் போவதெனில் குறைந்தது ஒரு வாரமாவது அங்கே தங்க வேண்டும்.  இந்த நகரின் வேறு பெயர்கள் தோஷாலி, கலிங்க நகரி,  நகர் கலிங்கா, சக்ர க்ஷேத்திரா, ஏகாம்ர கானன் (இங்கேயும் ஒரு மாமரம்) ஏகாம்ர க்ஷேத்திரா, மந்திர மாலினி நகரி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இந்த ஊரில் அமையப் பெற்ற லிங்கராஜா கோயிலில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவுக்கு தூர தூரங்களில் இருந்தெல்லாம் சிவ பக்தர்கள் தோள்களில் காவடி சுமந்து கொண்டு , "போல் பம்" எனக் கூவிய வண்ணம் கால்நடையாக வருகின்றனர். இப்படிச் செல்வதைப் பல முறை கண்டிருக்கிறேன். ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தெல்லாம் பக்தர்கள் கால்நடையாகச் செல்வதுண்டு. கட்டாக்கின் இடத்தை இது பிடித்தாலும் இதையும் கட்டாக்கையும் இரட்டை நகரங்கள் என அழைக்கின்றனர். மிக நீண்ட வரலாறுடைய இந்த நகரத்தின் வரலாற்றை நாளை காண்போம். இப்போது விடுதியில் நடந்த சம்பவங்கள்! :)
*********************************************************************************

அறையில் படுத்ததும் நல்ல தூக்கம். வியர்வையே இல்லை என்பதால் தூக்கம் கலையவே இல்லை. ஆகவே காலை நாலு மணிக்குத் தான் விழிப்பு வந்தது. எப்போவுமே நல்லாத் தூங்கிட்டேன்னா காலை நாலு மணிக்குத் தானாக விழிப்பு வந்துடும்.  இரவு முழுவதும் எழுந்திருக்காததால் இயற்கை உபாதையைக் கழிக்கக் கழிவறை சென்றேன். மேல்நாட்டு முறைக் கம்மோட்! அதில் உட்காரும் முன்னர் அமரும் இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டி அருகில் இருந்த குழாயை எடுத்து நீருக்காக அமுக்கினேன். நீரே வரவில்லை. சரினு பக்கத்தில் குளிப்பதற்கென இருந்த குழாய்களில் ஒன்றின் கீழ் வாளியை வைத்து நீரைத் திறந்தேன்! புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! காற்றுத் தான் வந்தது. சிறிது நேரம் குழாய்களை மூடி மூடித் திறந்தேன். ஒரு வேளை குழாயை வெகு நேரம் திறக்காமல் வைத்திருந்தால் காற்றுப் போய் அடைத்துக் கொண்டு நீர் வராமல் தடுக்கும் என்பதால். கிட்டத்தட்ட இருபது நிமிடம் போராடி விட்டு வேறு வழியில்லாமல் நன்கு தூங்கும் ரங்க்ஸை எழுப்பினேன்.

தூக்கக் கலக்கத்தில் எழுந்தவருக்குக் கோபம். ஏனெனில் அன்றைய தினம் வெளியே செல்ல வண்டிக்கு ஒன்பது மணிக்குத் தான் வரச் சொல்லி இருந்தோம். முதல்நாளே விடுதிக்காப்பாளர் மூலம் எல்லாம் பேசி முடிவு செய்திருந்தது. ஆகவே காலை மெதுவாக எழுந்திருக்கலாம் என்று முடிவு. இப்போது அர்த்த (?) ராத்திரியில் நான் எழுப்பவே கோபம் வந்தது. என்னனு கேட்கத் தண்ணீர் வரலை என்று சொன்னேன். குழாயைச் சரியாகத் திறக்கத் தெரியலை என என்னைத் திட்டிட்டுப் போய்க் குழாயை மீண்டும் திறந்து மூடி, திறந்து மூடி, திறந்தார். ஹிஹிஹி! எனக்காவது ஒரு சொட்டு நீர் வந்தது. இப்போ சுத்தம்! பத்து நிமிடங்கள் போல் பார்த்துவிட்டுப் பின்னர் செக்யூரிடியிடம் சொல்லலாம் என லிஃப்டுக்குக் கிளம்பினார். நானும் கூடவே சென்றேன். அங்கே போனால் லிஃப்ட் அமுக்க அமுக்க மேலே வரவேஇல்லை. சில குடியிருப்பு வளாகங்களில் இரவு பத்து மணி முதல் காலை ஆறு வரை லிஃப்ட் இயக்கம் தடை செய்திருப்பார்கள். அப்படித் தான் இருக்கும்னு நினைத்துக் கீழே போகும் எண்ணத்தைக் கைவிட்டோம்.

மீண்டும் அறைக்கு வந்து விடுதிக்காப்பாளரின் எண்ணுக்குத் தொலைபேசினோம். இதற்குள்ளாக எனக்கு இயற்கை உபாதைனு ஒண்ணு இருந்ததே மறந்தே போய் விட்டது. நல்ல வேளைதான் என நினைத்துக் கொண்டேன். காப்பாளர் தொலைபேசியை எடுத்துப் பேசியவர் இரண்டாம் எண் அறைக்குப் போய்ப் பயன்படுத்திக்கச் சொன்னார். சரினு அங்கே போய்க் குழாய்களைச் சோதித்து விட்டு என்னை அங்கே பயன்படுத்தச் சொன்னார் ரங்க்ஸ். நானும் சரினு முயலவே ஒரு டம்பளர் தண்ணீர் தான் வந்தது. அங்கேயும் நின்று விட்டது. மறுபடியும் காப்பாளருக்குத் தொலைபேசி! அங்கேயும் வரவில்லைனு சொல்லவே அவர் செக்யூரிடிக்குத் தான் தொலைபேசித் தகவல் தெரிவிப்பதாகச் சொன்னார். நாங்களும் லிஃப்ட் இயங்கவில்லை என்பதால் அப்படியே செய்யும்படி சொன்னோம்.

யுகங்களாகக் கழிந்த அரை மணி நேரத்திற்குப் பின்னர் நீர் சொட்டுச் சொட்டாக வர ஆரம்பித்தது. அப்படியும் நல்ல வேகத்தில் வரவில்லை. ஆகவே இரண்டாம் எண் அறைக்குப் போய்ப் பார்த்தோம். அங்கே நீர் கொஞ்சம் வேகமாக வந்தது. அங்கிருந்த கீசரும் நன்றாக வேலை செய்தது. ஆகவே என்னை அங்கே காலைக்கடன்களை முடித்துக் கொண்டு குளித்துவிட்டு வரும்படி ரங்க்ஸ் சொல்ல நானும் சென்றேன். அவர் தான் மட்டும் கீழே இறங்கிப் போய்க் காஃபி வாங்கி வருவதாகச் சொல்ல (இதுக்குள்ளே காலை ஆறு மணி ஆகி இருந்தது) நான் குளிக்கும் திட்டத்தை ஒத்திப் போட்டுவிட்டு நானும் கிளம்பினேன். இருவருக்கும் பலத்த வாத, விவாதம். நீ வரவேண்டாம்னு அவர் சொல்ல, அப்போ எனக்குக் காஃபியே வேண்டாம்னு நான் சொல்ல வேறு வழியில்லாமல் அரை மனதாக அவர் சம்மதிக்க இருவரும் கீழே இறங்கினோம். அன்று ஊர் சுற்றி வேறு பார்க்க வேண்டும். அங்கே எத்தனை இடத்தில் ஏறி இறங்கணுமோ தெரியலை!

யப்பாடி ஒரு மாடிக்கு எத்தனை படிக்கட்டுகள்! இப்படி ஐந்து மாடி இறங்கணுமே! அப்புறமாக் காஃபி வாங்கிட்டு மறுபடி மேலே ஏறணும்! அந்தக் காப்பாளர் இருந்திருந்தா காஃபியோ, டீயோ ஏதோ ஒண்ணு போட்டுக் கொடுத்திருப்பாரே! நம்ம நேரம்! மெல்ல மெல்லக் கீழே இறங்கினோம். இரண்டு மாடி இறங்கிய பின்னர் ஒரு பெண்மணி அங்கே நடைப்பயிற்சி செய்ய அவரிடம் லிஃப்ட் ஏன் இயங்கவில்லை எனக் கேட்டோம். அது இப்படித் தான் அடிக்கடி தகராறு செய்யும் என அவர் சொன்னார். வேலைக்குச் செல்பவர்கள் பலரும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.  மூச்சு வாங்க ஐந்து மாடியும் இறங்கினோம். அது மட்டுமா? இந்தக் குடியிருப்பு வளாகத்தின் முதல் தளமே வீதியிலிருந்து கிட்டத்தட்ட இருபது அடி உயரத்தில் அமைந்திருந்தது. அதற்கு இறங்க இருபது படிகள்! அவற்றையும் இறங்கியாக வேண்டும்.  அங்கே இருந்த செக்யூரிடியிடம் லிஃப்ட் இயங்காதது குறித்தும் நீர் வராதது குறித்தும் கேட்டோம். தண்ணீர் வருவதற்கு மோட்டார் போட இன்னொருத்தர் இருப்பதாகவும் அவர் தான் வரவேண்டும் என்றும் சொன்னதோடு லிஃப்டை சரி செய்ய ஏற்பாடு செய்வதற்கும் இன்னொருத்தர் இருப்பதாகவும் அவர் வந்தப்புறம் தான் தொலைபேசித் தெரிவித்துக் கம்பெனியில் இருந்து ஆள் வர வேண்டும் எனவும் அதற்குக் குறைந்தது பத்து மணி ஆகும் எனவும் தெரிவித்தார். பின்னர் செக்யூரிடியிடம் காஃபி எங்கே கிடைக்கும் எனக் கேட்டுக் கொண்டு இருவரும் மெல்ல இறங்கிச் சென்றோம்.