எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 30, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்

உடனேயே இருவரும் குந்தியைச் சென்று கண்டு ஆறுதல் சொல்ல எண்ணினார்கள். குந்தியின் நிலைமையை வர்ணிக்க முடியவில்லை. மாத்ரியின் இரு பாலகர்களும் சின்னஞ்சிறுவர்கள். குந்தியின் புதல்வர்கள் மூவரும் சிறுவர்களே எனினும், இவர்கள் இருவரையும் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இந்தக் குழந்தைகளை வளர்க்கவேண்டி குந்தி உடன் கட்டை ஏறவில்லை என்றால் என்ன ஆச்சரியம்? மாத்ரி மட்டும் ஏன் தன் குழந்தைகளை விட்டு விட்டு உடன் கட்டை ஏறினாள்? குந்தி ஏன் உடன்கட்டை ஏறவில்லை? வசுதேவருக்கும், தேவகிக்கும் குழப்பம் மேலிட்டது. மெல்ல மெல்லக் குந்தி விளக்கினாள். முனிவர் ஒருவரின் சாபத்தினால் பாண்டுவிற்கு மனைவியைத் தொட முடியாது எனவும், அத்தகைய நிலையிலேயே அவர்கள் மூவரும் காட்டிற்கு வாழ வந்ததாகவும், இருவருக்கும் ஐந்து குழந்தைகள் பிறக்கும் வரை அனைத்தும் சரியாகவே இருந்ததாயும் சொன்னாள் குந்தி. இப்போது வசந்தம் வந்து எங்கேயும் பூத்துக் காய்த்துக் குலுங்கும் புஷ்பங்களையும், காட்டு மிருகங்களின் அந்யோந்யங்களையும் கண்ட மன்னன் பாண்டுவிற்கு ஒரு கணம் தன்னுடன் வந்த மாத்ரியிடம் ஆசை மூண்டு அவளைத் தொட நினைத்ததையும், அவன் எண்ணம் ஈடேறாமல் மாத்ரியின் கரங்களிலேயே அவன் மரணமடைந்ததையும் கூறினாள் குந்தி.

மன்னனுடன் இருவருமே உடன்கட்டை ஏறத் தயாராய் இருந்தார்கள். ஆனால் மாத்ரியோ குந்தியை உடன்கட்டை ஏறவிடவில்லை. தவறு தன்னால் ஏற்பட்டது என்பதால் குந்தி உடன்கட்டை ஏறவேண்டாம் எனவும், தான் மட்டும் மன்னனுடன் உடன்கட்டை ஏறுவதாயும், குந்தி தன் மூன்று குழந்தைகளுடன், மாத்ரியின் இரண்டு குழந்தைகளையும் சேர்த்து வளர்க்கவேண்டும் எனவும் உறுதிமொழி வாங்கிக் கொண்டு மாத்ரி உடன்கட்டையில் விழுந்துவிட்டாள். குழந்தைகளிடம் இயல்பாகவே அதிகம் பிரியம் வைத்திருக்கும் குந்தி இப்போது தன் மூன்று குழந்தைகளோடு மாத்ரியின் இரு குழந்தைகளும் சேர்ந்து ஐந்து பேருக்கும் தாயானாள். ஐவரையும் ஒரே வயிற்றில் பிறந்த தன் புதல்வர்களாகவே நினைக்கத் தலைப்பட்டாள். அங்கே இருக்கும் ரிஷி, முனிவர்கள் பாண்டு இறந்த செய்தியையும், மாத்ரி உடன்கட்டை ஏறின செய்தியையும் ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பிவிட்டு, குந்தியையும், ஐந்து குழந்தைகளையும் தங்களில் பொறுப்பானவர்கள் அழைத்து வந்து ஹஸ்தினாபுரம் சேர்க்கப் போவதாயும் பீஷ்ம பிதாமஹருக்குச் செய்தி அனுப்பி விட்டார்கள். ஆகவே குந்தி தன் ஐந்து குழந்தைகளுடன் ஹஸ்தினாபுரம் பிரயாணத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்தாள்.

செய்தி கேட்ட வசுதேவரும், தேவகியும் தாங்களும் மதுரா திரும்பப் போவதாயும், செல்லும் வழியில் குருக்ஷேத்திரத்தில் இருக்கும் குலகுருவான வேத வியாசரைச் சென்று தரிசித்துவிட்டே செல்லப் போவதாயும் சொன்னார்கள். குந்தியும் வியாசரைத் தரிசிக்க விரும்பினாள். அதிலும் ஹஸ்தினாபுரம் செல்லும் முன்னர் வியாசரைத் தரிசித்துவிட்டே செல்லவேண்டும் என்று எண்ணினாள். ஆகவே அவளும் வசுதேவருடன் குருக்ஷேத்திரம் வருவதாய்ச் சொன்னாள். தேவகி குந்தியைக் கட்டி அணைத்து ஆறுதல் சொன்னாள். தன் கணவனோடு சேர்ந்த அனைத்து உறவினர்களும் இவ்வாறு துன்புறுவதைக் கண்ட தேவகி மனம் உடைந்தாள். ஆனால் குந்தியோ, “மாத்ரி அதிர்ஷ்டம் செய்து விட்டாள்.நான் துர்ப்பாக்கியசாலி.” என்று அழுதாள். தேவகி அவளைச் சமாதானம் செய்தாள். ஆனால் குந்தியோ ஹஸ்தினாபுரத்தில் என்ன நடக்குமோ? காந்தாரி என்ன சொல்லப் போகின்றாளோ என அஞ்சினாள். பீஷ்மபிதாமஹர் நம் பக்கம் பேசுவாரா தெரியவில்லையே என ஏங்கினாள். ஆனால் தேவகியின் நிலையோ வேறுவிதமாய் இருந்தது. அவள் குந்தியைப் பார்த்துப் பொறாமை கொண்டாள்.

ஆம், குழந்தைகள் ஐவரும் மிக மிக உரிமையுடனும், சந்தோஷத்துடனும் தாய் மடியில் போட்டி போட்டுக் கொண்டு அமர்ந்து விளையாடினார்கள். ஒரு குழந்தை மடியில் அமர்ந்தால் மற்றது அதைத் தள்ளிவிட்டுத் தான் அமர்ந்தது. மற்ற மூவரும் தாயின் பின்னால் சுற்றி நின்று கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினார்கள். குந்தியின் முகத்தில் விவரிக்க ஒண்ணாத சந்தோஷமும், ஆனந்தமும், திருப்தியும் மேலோங்கியது. தேவகி பெற்றது ஏழு அல்ல எட்டுக் குழந்தைகள். ஒன்றையாவது அவளால் கொஞ்ச முடிந்ததா? ஆறு குழந்தைகள் இறந்தே விட்டன. ஏழாவது குழந்தையோ நிர்ணயிக்கப் படும் நாள் முன்னாகவே பிறக்கவைக்கப் பட்டுக் கண்காணாமல் கொண்டு போகப் பட்டான். எட்டாவது குழந்தையையோ பார்த்தது சில கணங்களே. அவன் நிறம் மட்டுமே நினைவில் உள்ளது. என் கண்ணா, கண்ணா, மகனே, யார் மகனாய் வளர்கின்றாய் அப்பா நீ இப்போது? என்ன பாவம் செய்தேனடா நான்? தேவகியின் மனம் பொங்கித் தளும்பியது, கண்ணிலிருந்து மழையாக வர்ஷிக்க ஆரம்பித்தது.

குந்தியோ எனில் அவள் எண்ணம் வேறு விதமாய் இருந்தது. தேவகி தன் கணவனுடன் சேர்ந்து வந்திருப்பதையும் தீர்த்த யாத்திரைக்குக் கணவனோடு சென்று வந்திருப்பதையும் கண்டு மனம் நொந்து புழுங்கினாள். தன் கணவனோடு இவ்விதம் சென்றுவரத் தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என எண்ணி ஏங்கினாள். தன் மகன்களைக் கண்டு தேவகி தன் இழந்த மகன்களின் நினைவினால் குமுறுவதையும் புரிந்து கொண்டாள். அவளுக்கு எவ்விதம் ஆறுதல் சொல்லுவது எனத் தெரியாமல் திகைத்தாள். இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். ஒருத்தர் அணைப்பில் மற்றவர் ஆறுதல் காணவும் முனைந்தனர். துர்பாக்கியசாலிகளான இரு பெண்மணிகளும் இவ்வாறு மனம் ஆறுதல் காண முனைந்தனர். யுதிஷ்டிரரைக் கண்ட தேவகி இவன் நம் பலராமனைவிடக் கூடப் பெரியவன் அல்லவோ. இதோ இருக்கின்றானே, பலசாலியான இரண்டாம் பிள்ளை, பீமசேனன். பலராமனும் இவனுக்கு ஈடாக இருப்பான் அல்லவோ. இதோ மூன்றாம்பிள்ளை வெண்மை நிறத்தவன் ஆன அர்ஜுனன். இவனைவிட நம் கண்ணன் சற்றே பெரியவன் அன்றோ? எனினும் இருவரும் நல்ல தோழர்களாய் இருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. மாத்ரியின் புதல்வர்கள் இருவருமே குழந்தைகள். தேவகி ஒவ்வொருத்தரையும் பார்த்துவிட்டுத் தன் மக்களை தூரத்தில் இருந்தாவது காண ஏங்கினாள்.

Wednesday, April 29, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்


இந்தக் கண்ணன் வந்தான் தொடர் பற்றி எழுதும்போது அதனுடன் தொடர்புள்ளவையாகச் சில நிகழ்வுகள் நடப்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஏற்கெனவே தொலைக்காட்சி ஒன்றில் மஹாபாரதத் தொடரில் ஸ்ரீகிருஷ்ணர் சரித்திரம் காட்டும்போது, முன்ஷி அவர்களின் இந்த கிருஷ்ணா தொடரை அடிப்படையாக வைத்தே எடுக்கப் பட்டிருக்கிறதை பரோடாவில் இருந்தபோது காண நேர்ந்தது. ராதையுடன் கண்ணன் சம்பந்தப் பட்ட இடங்களும், கோகுலத்தில் இருந்து பிருந்தாவனம் மாறுவது, அங்கிருந்து மதுரா செல்வது, கண்ணன் கம்சன் வதம் செய்யும் நிகழ்வுகளும், என அனைத்துமே முன்ஷிஜியின் இந்தக் கிருஷ்ணாவதாரம் புத்தகக் கதையின் அடிப்படையிலேயே எடுக்கப் பட்டிருந்தன. இப்போது தமிழ்த் தொலைக்காட்சியிலும் ஸ்ரீகிருஷ்ணா தொடர், இதுவும் ஹிந்தியில் இருந்து மொழிமாற்றம் செய்யப் பட்டதே என்றாலும் கொஞ்சம் விட்டலாசாரியாவின் பாணியில் ஆன அதிசய நிகழ்வுகளோடு காட்டப் படுகின்றது.

இது தவிர தொலைக்காட்சிகளில் வரும் ஆன்மீக நிகழ்வுகளிலும் கேட்க முடிகின்றது. எல்லாவற்றுக்கும் மேலே சென்ற வாரம் கல்கி பத்திரிகையில் வ்ரஜபாஷை பற்றியும், செளராஷ்டிரர் பற்றியும் ஆய்வு செய்த திரு கே.ஆர்.சேதுராமன் என்பவர் எழுதிய தமிழ்நாட்டில் செளராஷ்டிரர்: முழு வரலாறு என்னும் புத்தகத்தின் விமரிசனத்தில், அநேகம் வரலாற்றுக் குறிப்புகளும், கஜினி காலத்தில் சோம்நாத்திற்கு ஏற்பட்ட அழிவில் இருந்து செளராஷ்டிரர் இடம் பெயர நேரிட்டதையும், பல்வேறு இடங்களில் குடியேறியதையும், நெசவுத்திறனையும், போர்க்கலையின் வல்லமை பற்றியும், பக்தி பற்றியும், மன்னர்களால் செளராஷ்டிரர் இனமே போற்றிக் கெளரவிக்கப் ப்பட்டு வந்ததையும், இன்னும் அதிகமாய் அவர்கள் மொழி தான் வ்ரஜ பாஷை எனவும், ஸ்ரீகிருஷ்ணர் பேசியதும் இந்த வ்ரஜ பாஷை என்றும் சொல்லப் பட்டிருக்கிறது எனப் படித்தேன். செளராஷ்டிர மொழி தான் விரஜ பாஷை என்றும், ஸ்ரீகிருஷ்ணரும் அதே பேசினார் என்றும் அறிய நேரிட்டால் நம் கூடல் குமரனுக்கும், சிவமுருகனுக்கும் ரொம்பவே சந்தோஷமாய் இருக்கும். அல்லது அவங்களுக்கு ஏற்கெனவேயே இது தெரிந்திருக்கலாம். ஆனால் மதுரையில் செளராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் என்ற ஒன்று உண்டு. இப்போ என்னோட சந்தேகம், மதனகோபால ஸ்வாமி கோயிலும், இதுவும் ஒண்ணா, வேறே, வேறேயானு. ரொம்ப வருஷமாச்சா அந்தப் பக்கமே போய், சரியா நினைவில்லை. ஆதாரபூர்வமாய்ப் பல வரலாற்றுக் குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் நிரூபிக்கப் பட்டிருக்கிறதாய் விமரிசனம் சொல்லுகின்றது. ஏற்கெனவே இரு பதிப்புகள் விற்றுப் போய் மூன்றாம் பதிப்பு வந்திருக்கும்போது விமரிசனமும் வந்திருக்கு. நான் இப்போத் தான் பார்க்கிறேன். படிக்கணும், புத்தகம் கிடைச்சால்.
********************************************************************************************
கண்ணனைச் சற்று ராதையைப் பற்றி நினைக்கத் தனிமையில் விடுவோமா?? தீர்த்த யாத்திரைக்குச் சென்ற அவனைப் பெற்ற பெற்றோர்களின் நிலையைப் பற்றிக் கொஞ்சம் அறியலாமா? கிட்டத் தட்ட ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன வசுதேவரும், தேவகியும் தீர்த்த யாத்திரையை ஆரம்பித்து. இந்தக் கால கட்டத்தில் இவர்கள் இருவரும் மேற்கே செளராஷ்டிரத்தில் சூரியனின் நிரந்தர வாசஸ்தலமாய்க் கருதப் படும் பிரபாஸ க்ஷேத்திரத்தில் இருந்து, புனித கங்கையில் நீராடி வாரணாசி என்னும் காசி க்ஷேத்திரத்தில் தரிசனம் செய்து கொண்டு பலவேறு இடங்களிலும் கங்கைக்கரையில் சென்று தரிசித்துவிட்டுக் கடைசியாக மகா புண்ய க்ஷேத்திரம் எனப்படும் பதரிகாசிரமம் செல்லும் வழியில் நவரத்தினங்களும் கிடைக்கும், இமயமலைப் பகுதியையும் தரிசித்தனர். இரவில் கீதம் இசைக்கும் அலக்நந்தா நதிக்கரையிலும் தங்கிக் கொண்டு அங்கே, ஒரு ஆசிரமத்தில் தன் இரு மனைவியருடனும் இருந்த அஸ்தினாபுரத்து அரசன் ஆன பாண்டுவையும், அவன் மனைவியும், வசுதேவரின் சொந்த சகோதரியும் ஆன குந்தியையும், பாண்டுவின் மற்றொரு மனைவி ஆன மாத்ரியையும் சென்று பார்த்தார்கள்.

வழியில் பூக்களின் சொர்க்கமாய்த் திகழும் இமயப் பகுதியையும் கண்டு பூக்களின் ஆனந்தத்தையும், நறுமணத்தையும் ஒருசேர அனுபவித்து எந்தக் கவிஞனாலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு செளந்தரியத்துடன் விளங்கும் அந்தப் பகுதியைக் கண்டு ரசித்தனர். மெதுவாய் பதரிகாசிரமம் அடைந்த வசுதேவரும், தேவகியும் அங்கே ஆசிரமங்களில் தங்கி இருந்த ரிஷி, முனிவர்களின் ஒழுக்கத்தையும், கட்டுப்பாடான தவ வாழ்க்கையையும் கண்டு வியந்த வண்ணம் வியாசர் வசித்த குகைக்குச் சென்று அவரைத் தரிசிக்க எண்ணினார்கள். ஆனால் க்ருஷ்ண த்வைபாயனார் என அழைக்கப் படும் வியாசரோ அப்போது அங்கில்லை. குருக்ஷேத்திரம் சென்றிருந்தார். என்ன காரணமோ தெரியவில்லை. கொஞ்சம் ஏமாற்றமடைந்த இருவரும் அங்கேயே தப்த குண்டத்தில் புனித நீராடிவிட்டு பத்ரிநாதரைத் தரிசனம் செய்தனர். அங்கே நர, நாராயண ரூபங்களாய் இருந்த இரு மலை வடிவங்களையும் தரிசனம் செய்து கொண்டனர். அப்போது திடீரென அவர்களுக்கு ஒரு துக்கச் செய்தி கிடைத்தது. வசுதேவரின் சகோதரியான குந்தியின் கணவர் ஆன மஹாராஜா பாண்டு இறந்துவிட்டதாயும், மாத்ரி அவனுடன் உடன் கட்டை ஏறிவிட்டதாயும், குந்தி ஐந்து குழந்தைகளையும் தனியே வைத்துக் கொண்டு துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாயும் செய்தி வந்து சேர்ந்தது.

Tuesday, April 28, 2009

தமிழ்த் தாத்தாவின் அஞ்சலி, மீள் பதிவு!


தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள் பிப்ரவரி 19-ம் தேதி.

இன்று மகா வித்துவான் உ.வே.சுவாமிநாத ஐயரவர்களின் பிறந்தநாள். பல சுவடிகளையும், ஏடுகளையும் தேடிக் கண்டு பிடித்து நமக்கெல்லாம் இவர் அளிக்கவில்லை எனில், பல நூல்கள் பற்றியும் நாம் அறிய முடியாமலே போயிருக்கும். வாழ்நாள் முழுதும் தமிழுக்காகவே வாழ்ந்தவர் தமிழ்த் தாத்தா அவர்கள். திருவாடுதுறை ஆதினத்தின் மகா வித்துவான் ஆன ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்டவர். அந்தக் கால கட்டத்தில் ஆங்கில மோகமே அதிகமாய் இருந்து வந்தாலும் இவர் தமிழின்பால் மிக்க ஆசையுடனும், அன்புடனும், ஆர்வத்துடனும் பாடம் கேட்டவர். பின்னர் கும்பகோணம் கல்லூரியிலும், சென்னைக் கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். திருவாடுதுறை ஆதீனத்தின் மடத்தில் தமிழ் மற்றும் வடமொழி பயின்று வந்த பலரும் இருந்தனர்.அவர்களில் சில தம்பிரான்களும் இருந்திருக்கின்றனர். அவர்களிடையே பதவிகளில் மட்டுமில்லாமல் உணவு பரிமாறுவதிலும் தார, தம்மியம் இருந்து வந்திருக்கிறது. மாணாக்கர்கள் உணவுச்சுவையிலே கருத்தை ஊன்ற ஆரம்பித்தால் பாடம் கேட்பதிலே கருத்துக் குறைந்துவிடும் என்ற எண்ணமே காரணம். எது கிடைத்தாலும் அருந்தித் தேர்ச்சி பெற்றவர்கள் பின்னாட்களில் நல்ல நிலைமையை அடைவார்கள் என்ற எண்ணமும் காரணமாய் இருக்கலாம். என்றாலும் அப்படி ஒன்றும் அப்போது நல்ல உணவு என்பது அனைவருக்கும் கிடைக்கவில்லை.

ஒரு முறை மிக்க பசியோடு ஆசிரியர் ஆன மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும், சுவாமிநாத ஐயரவர்களும் மகா ஆதீனத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புங்காலையில், ஆதீனம் அவர்கள், இருவரிடமும், தன்னுடனேயே சேர்ந்து உணவருந்திவிட்டுச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கவே இருவரும் மகா ஆதீனத்துடனேயே உணவு அருந்தினார்களாம். அப்போது உணவில் நெய்யும், தயிரும் பரிமாறப் படவே, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், சுவாமிநாத ஐயரவர்களிடம், சுவாமிநாதா, நமக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாள், நெய்யும், தயிரும் கிடைக்கிறது எனச் சொன்னாராம்.

இப்படி உணவில் கூட நெய்யையும், தயிரையும் எப்போதாவது மட்டுமே பார்த்து தமிழ் மொழியை மட்டுமே நினைத்துக் கொண்டு, இவர்கள் இருவரும் உண்மையாகவே உடல் வருந்தித் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ் மொழியை வளர்க்கப் பாடுபடுவோம்.

குழம்பவேண்டாம். சகாதேவன் தமிழ்த் தாத்தான்னா இன்றைய த்லைமுறைக்குத் தெரியாதேனு சொல்லி இருந்த பின்னூட்டத்தைப் பார்த்ததும், போன வருஷம் அவரோட பிறந்த நாளைக்குப் போட்ட இந்தப் பதிவை மீள் பதிவு செய்கின்றேன். இந்த வருஷம் பெப்ரவரி மாதம் நான் ஊரிலேயே இல்லாததால் இந்த வருஷம் பிறந்த நாள் பதிவு போட முடியலை. முன்கூட்டி அப்லோட் பண்ணி இருக்கணும். அதுவும் பண்ண முடியலை. ஆகையால் அதுக்கும் சேர்த்துப் போட்டதாய் இருக்கட்டும்.

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி!

இன்று தமிழ்த்தாத்தா அவர்களின் நினைவு நாள். தாத்தா இல்லை எனில் இன்றைக்குப் பல தமிழறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் தமிழுக்குச் சேவை செய்திருக்க முடியாது. ஐயரவர்கள் வாழ்நாளில் பல வகையிலும் கஷ்டப் பட்டு தமிழுக்கு உண்மையான, மறக்க முடியாத தொண்டாற்றினார். ஆங்கில மோகம் அதிகமாய் இருந்த அந்தக் கால கட்டத்தில் தமிழ் மொழியின் பல பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகளைத் தேடிக் கிராமம் கிராமமாய்ச் சென்று அவற்றைக் கண்டு பிடித்து அவை எந்த வகையினால் ஆனது, எதைக் குறித்தது எனக் கண்டு பிடித்து அவற்றை வகைப்படுத்திய பெருமையும் இவர் ஒருவரையேசாரும்.

இவர் காலத்திலும் தமிழையும், தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்களையும் இழிவாய்ப் பேசும் நபர்கள் இருந்திருக்கின்றனர் என்றும், ஆங்கில மோகத்தில் அனைவரும் மயங்கிப் போய் இருப்பதைப் பற்றி இவர் வேடிக்கையாய்க் குறிப்பிடுவதில் இருந்து அறிய முடிகின்றது. இப்போதும் தமிழ் பேசுவதும் படிப்பதும் அதே போலத் தான் இருக்கின்றது என எண்ணும்போது கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருக்கிறது. எனினும் காலம் மாறும், காத்திருப்போம். தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி.

Sunday, April 26, 2009

பேசாத பெண்ணொன்று கண்டேன்!


இன்னிக்கு கவிநயாஇங்கே வந்தாங்க. கீழே உள்ளது அவங்க வலைப்பக்கத்தில் எழுதி இருப்பது அவங்களைப் பத்தி. எழுதுவேன் அப்பப்ப.....:) அப்படினு கொடுத்திருக்கிறதுக்குப் பதிலா பேசுவேன், எப்போவாவதுனு கொடுத்திருக்கலாமோ? :)))))))))))))))))
தமிழ் பிடிக்கும்! படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)

பேசாமல் இருப்பது என்பது அவ்வளவு சுலபமாக வராது. இவங்களுக்குக் கை வந்திருக்கிறது. வாழ்த்துகள். பேசிட்டு இருந்தது நாங்க மட்டும் தான். அவங்க வாயே திறக்கலை, சாப்பிடக் கூட! எங்க வீட்டுப் பறவைகள் கூட சத்தம் போட்டுத் தான் பேசும். எப்போப் பார்த்தாலும் சத்தமாவே இருக்கும். வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. மறக்க முடியாத மாலை. இனிமையான மறக்க முடியாத பொழுது.

Friday, April 24, 2009

அக்னி நட்சத்திரம்னா என்ன?

நல்ல கடுங்கோடைக் காலம் ஆரம்பிச்சாச்சு. எல்லாருமே வெயிலில் வெந்து கொண்டிருக்கோம். இன்னும் வெயில் அதிகமாய்த் தெரியும் அக்னி நக்ஷத்திரம் என்னும் நாட்கள் வேறே வரப் போகின்றது. சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாட்கள் தான் அவை என அறிவியல் கூறுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் எதையும் மெய்ஞானத்தோடு சேர்த்தே பார்க்கிறவர்கள் ஆகையால் அவங்க சொல்லும் காரணத்தை இங்கே பார்ப்போமா? இந்தக் கதை தெரிஞ்சவங்க நான் திரும்பச் சொல்றதுக்கு மன்னிச்சுக்குங்க.

அக்னி பகவானுக்கு ஒரே பசி. எத்தனையோ ஆஹுதிகள், எத்தனையோ உணவுகள், விதவிதமான உணவுகள் கிடைக்கிறது. ஆனாலும் பசி அடங்கலை. தவியாய்த் தவிச்சான். என்ன கிடைச்சாலும் உடனே சாப்பிட்டுப் பார்த்தாலும் பசி அடங்கவே இல்லை அவனுக்கு. இந்தப் பசி அவனுக்கு எப்படி ஏற்பட்டதுன்னா அதிகம் சாப்பிட்டதாலே தான். என்ன? ஆச்சரியமா இருக்கா? சுவேதகி என்ற மன்னன் ஒருவன் தொடர்ந்து பனிரண்டு வருஷங்கள் யாகம் செய்தான். யாகத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. யாகத்தில் விடப் பட்ட நெய்யை அக்னி தொடர்ந்து ஏற்றுக் கொண்டான். அதைத் தொடர்ந்து சாப்பிட்டதிலே அவனுக்கு வயிற்றில் நோய் ஏற்பட அதன் காரணமாய் எதைச் சாப்பிட்டாலும் பசி போகலை என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. பிரம்மாவைச் சரணடைந்தான். அவனோட கோரப் பசிக்கு உணவு காண்டவ வனம் தான் என்று பிரம்மா சொல்கின்றார்.

காண்டவ வனம் எங்கே இருக்கு? அக்னி தேடுகின்றான். ஆஹா, அதோ காண்டவ வனம், யமுனைக்கரையிலே! ஆவலுடன் சென்றான் அக்னி, அந்த வனத்தைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தான். ஆனால் என்ன இது? இந்திரனுக்குப் பொறாமையா? அல்லது தெரியாமல் செய்கின்றானா? அக்னி வனத்தை விழுங்க முயல, இந்திரன் மழையாக வர்ஷிக்க, அக்னி முடிவில் தோற்றே போனான். காட்டை அக்னி நெருங்கினாலே மழை கொட்டியது. என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தான் அக்னி. அப்போது, ஆற்றங்கரைக்கு அர்ஜுனனோடு பேசிக் கொண்டே வந்த ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டான் அக்னி. ஸ்ரீகிருஷ்ணர் தான் நம்மைக் காக்க வல்லவர் என்ற எண்ணம் அவன் மனதில் உண்டாகியது. உடனே ஒரு வயோதிகர் உருவெடுத்துக் கொண்டு, தள்ளாடித் தள்ளாடி நடந்து அவர்கள் இருவர் முன்னும் சென்று நின்றான் அக்னி.

ஸ்ரீகிருஷ்ணர் வந்திருப்பது அக்னியே என்பதைப் புரிந்து கொள்கின்றார். எனினும் என்ன வேண்டும் எனக் கேட்க, மிகுந்த பசியோடு இருப்பதாயும் உணவு வேண்டும் எனவும் அக்னி சொல்ல, “அக்னியே, உன்னைப் புரிந்து கொண்டேன், உன் பசி அடங்க உணவு கிடைக்கும்” என உறுதி அளிக்கின்றார் ஸ்ரீகிருஷ்ணர். இந்திரன் வந்து தான் காண்டவ வனத்தை நெருங்க விடாமல் செய்வதை அக்னி சொல்கின்றான். ஸ்ரீகிருஷ்ணர் அக்னியிடம், “உனக்கு 21 நாட்கள் கெடு கொடுக்கின்றேன். அதற்குள்ளாக நீ வனத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும். இந்திரன் பெரு மழையாகக்கொட்டினாலும் உன்னை நெருங்க மாட்டான். நீ அதற்குள்ளாக உன் வேலையை முடித்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லிவிட்டுப் பார்த்தனைப் பார்க்கின்றார். காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு? இதோ தக்க சமயத்தில் அக்னி உதவிக்கு வந்துவிட்டானே.

அர்ஜுனனை ஸ்ரீகிருஷ்ணர் பார்த்ததுக்கு வேறே அர்த்தமும் உண்டு. அர்ஜுனன் அம்பு மழை பெய்து கூடாரங்கள் போட்டு இந்திரனால் பொழியப் படும் பெரும் மழையைத் தடுத்துவிடுவான் அல்லவா? அதே போல அர்ஜுனன் அஸ்திரங்களை எய்து வானத்தை நோக்கிச் செலுத்தினான். ஆயிரமாயிரம் அம்புகள் அர்ஜுனனால் ஏவப் பட்டன. அனைத்தும் ஆகாயத்தில் இணைந்து ஒரு சரக் கூடமாக நின்று காண்டவ வனத்தை மழையில் இருந்து காத்தது. அக்னியும் உள்ளே நுழைந்தான். அங்கே உள்ள அனைத்தையும் அள்ளி விழுங்க ஆரம்பித்தான். இந்திரனோ அதைத் தடுக்க ரொம்ப ரொம்ப பலமா மழையைப் பொழிய வைக்க முயல, ஒரு துளி கூட அங்கே விழாதபடிக்கு சரக்கூடம் தடுத்து நின்றது.

முதல் எழு நாட்கள் அக்னி மெல்ல மெல்ல உணவை விழுங்க ஆரம்பித்தான். அப்போது வெப்பம் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்தது. அடுத்த ஏழு நாட்கள் கொஞ்சம் அதிகமாயும், வேகமாயும் காட்டை விழுங்க ஆரம்பிக்க வெப்பம் கடுமையானது. கடைசி எழு நாட்கள், படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது காடும், அக்னியின் வேகமும். வெப்பம் மெல்ல மெல்லக் குறைந்தது.
இந்த இருபத்தி ஒரு நாட்களையே அக்னி நட்சத்திரம் என்ற பெயரில் சொல்லுகின்றோம். சென்னை மக்களால் கத்திரி வெயில் என்றழைக்கப் படும் இவற்றின் முதல் ஏழு நாட்கள் வெப்பம் படிப்படியாக அதிகரித்து நடு ஏழு நாட்கள் வெப்பம் உச்ச கட்டத்தை அடைந்து கடைசி ஏழு நாட்களில் வெப்பம் படிப்படியாகக் குறைவதையும் உணரலாம்.

Sunday, April 19, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

ராதை எப்படியாவது கண்ணனைக் கட்டிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ய நினைத்தாள். ராதையின் சிரிப்பு ஒரு அழகான பெரிய பூவொன்று கண்ணுக்கு நேரே மலர்வதைப் போல் இருந்தது கண்ணனுக்கு. அவள் சிரிப்பும், அதன் ஒலியும் இசையைப் பழிக்கும் வண்ணம் தோன்றியது. அம்மாவின் தாலாட்டை விட இனிமையாகத் தோன்றியது. பளீரென ஒளிவிட்ட வரிசையான முத்துப் போன்ற பற்களும், சிவந்த அதரங்களும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தான் கண்ணன். ராதை, கண்ணனிடம் சொல்கின்றாள்: “ ஓ, நான் பக்கத்து ஊர் தான். பர்சானாவைச் சேர்ந்தவள், என்னுடைய சகோதரன் இங்கே கோயில் கொண்டிருக்கும், கோபா மஹாதேவரிடம் எனக்கான ஒரு பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டி இங்கே அழைத்து வந்தான். நாங்கள் இங்கிருந்து விருந்தாவனம் செல்கின்றோம். செல்லும் வழியில் இங்கே வந்தோம். என் பெற்றோர் தற்சமயம் விருந்தாவனத்திலேஇருக்கின்றனர் . ஆஹா, இது என்ன, கானா?? உன் உடலில் இத்தனை காயங்கள்? புழுதி படிந்து வேறே உள்ளதே? இரு, இரு, நான் உன்னைச் சுத்தம் செய்து விடுகின்றேன்.” என்றாள் ராதை. கண்ணனுக்கு இந்தக் காயங்கள் ஒன்றும் பெரிதாய்த் தெரியவில்லை என்றாலும் ராதையின் கரங்களால் தனக்கு உதவி கிடைப்பதை எண்ணி ஆனந்தம் அடைந்தான். ராதை அவன் உடலில் இருந்த புழுதியைத் துடைத்து விடுகின்றாள். “கானா, அம்மா என் உன்னை உரலோடு சேர்த்துக் கட்டினாள்?” ராதை கண்ணனைக் கேட்டாள்.

“ம்ம்ம்ம்?? நான் வெண்ணையைப் பானையோடு உடைத்துவிட்டு நானும் தின்று, குரங்குகளுக்கும், மற்ற மிருகங்களுக்கும் கொடுத்தேன்.”

“ஓஹோ, அதான் உன்னை வெண்ணை திருடி என்கின்றார்களா அனைவரும்?” ராதை கலகலவெனச் சிரித்தாள். ‘உன்னைப் பார்த்து கோகுலத்துப் பெண்கள் அனைவரும் பயப்படுகின்றார்களாமே?”

“இல்லை, இல்லை, அதெல்லாம், இல்லை, ராதே, நீ இங்கேயே தங்குகிறாயா? நீ இங்கேயே தங்கினால் நான் உன்னைத் தொந்திரவு ஒன்றும் செய்ய மாட்டேன்.”
ராதை தன்னைத் தொட்டுப் புழுதியைத் தட்டிச் சுத்தம் செய்த போது இனம் புரியாத சந்தோஷம் தன் மனதில் வந்ததைக் கண்ணன் உணர்ந்தான். அவன் அதை இழக்க விரும்பவில்லை. ராதை சொல்கின்றாள்: “ ம்ம்ம் அப்படியா? ஆனால் நான் தங்கினால் நிச்சயமாய் உன்னை எந்தத் தவறும் செய்ய விடமாட்டேன்.” ராதை சொல்கின்றாள். “மாட்டேன், மாட்டேன், ராதை, நான் எந்தத் தவறும் செய்ய மாட்டேன், வெண்ணைப் பானையை உடைக்க மாட்டேன். “ திடீரெனக் குறும்பாய் ஒரு எண்ணம் கண்ணன் மனதில். மெதுவாய்ச் சொன்னான் ராதையிடம், “உன்னுடைய வெண்ணைப் பானையைத் தவிர” என்று சொல்லிக் கொண்டே தன்னை அடக்க முடியாமல் அவளைக் கிள்ளப் போனான். “ம்ம்ம்ம்ம், ஒழுங்காய் நடந்துக்கோ கானா, இல்லை எனில்……” என்று ராதை கூறிக் கொண்டே கண்ணனை அடிப்பது போல் கையை ஓங்கினாள். கண்ணனோ எதுக்கும் தயார் என்பது போல் நின்றான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்து விட்டனர். அப்போது சற்றுத் தூரத்தில் சில பெண்கள் வரும் சப்தம் கேட்டது. ராதை உடனே அவர்களிடம் சென்று கண்ணனின் நிலைமையைச் சொல்லி அவன் உரலோடு அவன் தாயால் சேர்த்துக் கட்டப் பட்டிருப்பதையும் காட்டினாள். அந்தப் பெண்களோ அவனைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்ததோடு அல்லாமல், இரு மரங்கள் வேறே கீழே வீழ்ந்திருப்பதையும் கண்டனர். அந்த வழியே சென்ற ஒருவனைக் கூப்பிட்டு, கண்ணனின் நிலைமையைச் சொல்லச் சொன்னார்கள். கண்ணன் அம்மா வந்தால் ஒழிய உரலில் இருந்து விடுபட மாட்டேன் எனப் பிடிவாதமாய் இருப்பதையும் சொல்லி, யசோதையை உடனே அழைத்து வரும்படியும் சொன்னார்கள். அந்தப் பெண்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்து யசோதை இப்படியா கல் மனசோடு கண்ணனைக் கட்டுவாள் என ஒருவருக்கொருவர் விவாதிக்கத் தொடங்கினார்கள். யாருக்குமே கண்ணன் தங்கள் வீடுகளில் செய்த லூட்டி எதுவும் அப்போது நினைவில் இல்லை. யசோதையே கொடுமைக்காரியாகத் தெரிந்தாள்.



அதோ, யசோதை ஓட்டம் ஓட்டமாய் வருகின்றாளே, அவள் பின்னோடு யார்? வேறு யார் நந்தனே தான். யசோதை ஓட்டம் ஓட்டமாய் வந்தவள் கண்ணனை உரலில் இருந்து விடுவித்து, அவனக் கொஞ்சிக் கொண்டே பல்வேறு அர்த்தமற்ற கொஞ்சல்களைக் கூறிக் கொண்டே தன் கைகளில் எடுத்து அப்படியே நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். மாயக் கண்ணனோ யசோதையை விட ஒரு படி மேலே. அம்மாவைச் சேர்த்து இறுகக் கட்டிக் கொண்டான். இந்த உலகமே அவன் கைகளில் வந்துவிட்டது என உணர்ந்தான். அவனுக்கு நன்றாய்த் தெரியும், யசோதையின் கண்ணின் கருமணி தான் தான் என. ஆகவே அவனுக்கும் அம்மாவை விடப் பெரியதாய் ஏதும் இல்லை தான். அனைவரையும் விட அம்மாவே நல்லவள், மிக மிக நல்லவள். அம்மா, என் அம்மா, யசோதை அம்மா, எனக் கட்டிக் கொண்டான் கண்ணன்.

நந்தனோ அந்த விழுந்த மரங்களைத் திரும்பத் திரும்பச் சென்று பார்த்தான். பின் ஆகாயத்தைப் பார்த்தான். பின் கண்ணனைப் பார்த்தான். அவன் மனதில் கண்ணன் ஒரு தெய்வம் என்ற எண்ணமே எல்லாவற்றையும் காட்டிலும் மேலெழுந்தது. ராதை நடந்தது என்னவெனத் தன் இனிமையான குரலில் விவரித்தாள். அன்றிரவு கண்ணன் தூங்கவே இல்லை. ராதையையே நினைத்துக் கொண்டிருந்தான். காலை பொழுது புலர்ந்ததும், புலராததுமாகக் கண்ணன் எழுந்தான். மெல்ல மெல்ல வீட்டுக்கு வெளியே வந்தான் கண்ணன். ராதை தங்கி இருக்கும் வீட்டிற்குச் சென்றான். அங்கே ஒரு மாட்டு வண்டி பிரயாணத்திற்கான ஏற்பாடுகளுடன் தயாராக இருந்தது. ராதையின் சகோதரன் பிரயாண மூட்டையுடன் வெளியே வந்தான். ராதையும் வந்தாள். கண்ணனைக் கண்டதும், தன் சகோதரனுக்கு அறிமுகம் செய்தாள் ராதை. கண்ணனைக் கைகளில் தூக்கிக் கொண்டு அவனைத் தட்டிக் கொடுத்துக் கீழே இறக்கினான் அந்த சகோதரன். கண்ணனுக்கு என்னமோ அவனைக் கண்டால் பிடிக்கலை தான். ஆனால் வேறே வழி? என்ன இருந்தாலும் ராதைக்கு அண்ணனாச்சே? பொறுத்துக்கணும்.

இருவரும் வண்டியில் ஏறியதும் கண்ணனும் ஏறிக் கொண்டான். சற்றுத் தூரம் வரை தானும் வருவதாய்ச் சொன்னான். ராதையுடன் செய்த அந்தச் சிறு பிரயாணம் மிக இனிமையாக இருந்தது கண்ணனுக்கு. ஊர் எல்லை வந்தது. அரை மனதுடன் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். “என்ன வயசு உனக்கு?” என்று ராதை கேட்டாள் கண்ணனிடம். ‘ஏழு” கண்ணன் மறுமொழி கொடுத்தான். “உனக்கு?” திரும்பக் கேட்டான் கண்ணன். “பனிரண்டு” என்று ராதை சொல்லிவிட்டு, ‘விருந்தாவனத்து வா” என அழைப்பும் கொடுத்தாள். “ ஆம் , நிச்சயமாய் வருவேன்.” என்றான் கண்ணன். எவ்வளவு நல்ல சிநேகிதி?என்று கண்ணன் எண்ணினான். வண்டி சென்றது. கண்ணன் மனம் ஒரு கணம் சூன்யம் ஆனது போல் இருந்தது.